🌞 மதி 44🌛

தாது மணலில் அடங்கியுள்ள முக்கிய கனிமம் மோனசைட். இது தோரியத்தை உள்ளடக்கியுள்ளது. தோரியம் அணு உலைகளில் எரிபொருளாகப் பயன்படுகிறது. கடந்த 2016ஆம் ஆண்டு தனியார் மணல் சுரங்கச் சட்டத்திருத்ததின் படி மோனசைட் 0.75%க்கும் அதிகமாக உள்ள மணலை எடுக்க தனியாருக்குத் தடை விதிக்கப்பட்டது.

சஞ்சீவினி பவனம்….

காலையில் கேட்கும் இஷானியின் கானம் அன்றைக்கு யாருடைய செவியிலும் விழவில்லை. ராஜகோபாலனும் அலமேலுவும் கண்ணாம்மாவின் காபி நறுமணத்தில் விழித்தவர்கள் இஷானி ஏன் இன்னும் எழுந்திரிக்கவில்லை என்ற கேள்வி மனதில் எழ,  அஸ்மிதா அங்கில்லை என்ற எண்ணம் அதற்கு பிற்பாடு தான் உறைத்தது. ஒரு திருமணத்தால் இப்படிப்பட்ட விளைவுகள் எழுமா என்று நொந்து கொண்டபடி காபியை விழுங்கிவைத்தனர் இருவரும்.

சஞ்சீவினி நேற்றைய நிகழ்வுகள் ஏற்படுத்திய அலைக்கழிப்பால் இரவு உறக்கமில்லை. எனவே தாமதமாகத் தான் விழித்தார். விழித்தப் பின்னரும் அடுத்து என்ன என்று நிகழ்காலம் மிகப்பெரிய கேள்வியை அவர் முன் வைத்தது. அதற்கு என்ன பதில் என்று புரியாதவராய் குளித்து உடைமாற்றியவருக்கு மகளின் நினைவில் மனம் வருத்தமடைய ஹாலுக்கு வந்தவர் பெற்றோரிடம் சென்று அமர்ந்தார்.

அச்சமயம் வீட்டுவாயிலில் நிழலாடுவதைக் கண்டு திரும்பிப் பார்க்க அங்கே அஸ்மிதாவுடன் சாந்தினியும் சங்கரராமனும் நிற்பதைக் கண்டதும் பல வருடங்களுக்குப் பின்னர் அவர்களைப் பார்த்ததில் இனம்புரியா உணர்வில் திக்குமுக்காடிய சஞ்சீவினியின் கண்கள் கலங்க ஆரம்பித்தது.

அதற்குள் சாந்தினி “என்ன சஞ்சு சம்பந்தியம்மாவுக்கு மரியாதை குடுக்காம அசமந்தம் மாதிரி நிக்கிற?” என்று செல்லமாக அதட்டவும், சஞ்சீவினி உணர்வு வந்தவராய் “அண்ணி” என்று அழைத்தபடி நிற்கவே சாந்தினி அதற்கு மேலும் அமைதியாய் இருக்க முடியாதவராய் வீட்டினுள் அடியெடுத்துவைத்தார்.

உள்ளே நுழைந்தவர் சஞ்சீவினி மற்றும் அவரது பெற்றோரை ஒரு முறை ஆழ்ந்து நோக்கவும் மூவருக்கும் வருத்தத்தில் முகம் சுருங்கியது.

சந்திரசேகரிடமிருந்து சஞ்சீவினி பிரிந்து வந்த தினத்திலிருந்து சந்திரசேகர் சம்பந்தப்பட்ட யாரிடமும் அவர் பேச்சுவார்த்தை வைத்துக் கொள்ளவில்லை. அதில் ருத்ராவும் அடக்கமே. அவனையே சமீபகாலத்தில் தான் அவர் ஏற்றுக்கொண்டார் என்ற நிலையில் சந்திரசேகரின் உயிர்த்தோழரான விஸ்வநாதனின் நிலையைப் பற்றி சொல்லவே வேண்டாம்.

இத்தனைக்கும் விஸ்வநாதனுக்காகத் தான் அவர் சந்திரசேகரிடம் சண்டை போட்டதே. ஆனால் அவருக்குக் கொடுத்த வாக்கை காப்பாற்ற இயலாத கையாலாகாத்தன்மையினாலும் சந்திரசேகர் செய்த துரோகத்தினாலும் சஞ்சீவினியால் சந்திரசேகரின் நண்பர்கள், உறவினர் என்று யாரையும் ஏற்றுக்கொள்ள இயலவில்லை.

இதன் காரணமாக விஸ்வநாதன் மற்றும் அவரது குடும்பத்தினரை அவர் சந்திக்க விரும்பவில்லை. இதனால் தான் தேவ்வின் முகஜாடை எழுப்பிய சந்தேகத்தைக் கூட அவர் புறம் தள்ளினார். அதைக் கண்டுகொள்ளாததன் பயன் இப்போதல்லவா தெரிகிறது!

சாந்தினி சஞ்சீவினியை நேருக்கு நேர் பார்த்தவர் “இன்னும் பழசை யோசிக்கிறியா சஞ்சு? காலம் கடந்து போச்சு… இனிமே நம்ம பசங்களை பத்தி மட்டுமே யோசிப்போம்” என்றார் நிதானமாக.

சஞ்சீவினி சரியென்று தலையாட்டியவர் இன்னும் வாசலிலேயே நின்று கொண்டிருக்கும் சங்கரராமனையும், அஸ்மிதாவையும் நோக்கியவர் “உள்ளே வாங்க பெரியப்பா” என்று பொதுவாய் அழைக்க இருவரும் உள்ளே நுழைந்தனர்.

அஸ்மிதாவின் முகத்தில் இன்னும் மலர்ச்சி வரவில்லை என்பதைக் கண்டுகொண்டவர் சங்கரராமனிடம் நலம் விசாரிக்க, ராஜகோபாலனும் அலமேலுவும் கூட அந்த நலம்விசாரிப்பைத் தொடர்ந்தனர்.

அஸ்மிதா சிலை போல நிற்க அலமேலு “புகுந்தவீடு எப்பிடி இருக்குடா?” என்று கேட்கும் போதே அவர் குரல் உடைந்துவிட அஸ்மிதா பாட்டியை அணைத்துக் கொண்டாள். ராஜகோபாலன் மனைவியின் தோளைத் தட்டிக்கொடுத்தவர்

“கல்யாணமாகி முதமுதல்ல வீட்டுக்கு வந்திருக்க பொண்ணு முன்னாடி அழுமூஞ்சியா நிப்பியா அலமேலு? அஸ்மி எல்லாத்தையும் மேனேஜ் பண்ணிப்பா… அதுவுமில்லாம சாந்தி நம்ம பேத்தியை பெத்தப்பொண்ணு மாதிரி பார்த்துப்பாடி” என்று சொல்ல அலமேலு மெதுவாக இயல்புக்குத் திரும்பினார்.

அனைவரும் அமர்ந்து சங்கடமான விசயங்கள் ஏற்படுத்திய அமைதியைக் கலைந்து பேச முயன்றனர். அஸ்மிதா தன்னாலோ தனக்கு நேர்ந்த திருமணத்தாலோ யாரும் சங்கடப்பட வேண்டாமென்ற எண்ணத்துடன் பேச ஆரம்பிக்கும் போதே சாந்தினி தேவ் செய்துவைத்தக் காரியத்துக்கு மனதாற மன்னிப்பு கேட்டார்.

“தேவ் செஞ்சது சரினு நான் சொல்ல மாட்டேன்… அவனுக்கு இது ரெண்டாவது கல்யாணம் தான்… ஆனா அவனும் என் மருமகளும் கல்யாணம் பண்ணி வாழ ஆரம்பிக்கவே இல்ல… நாங்க குடும்பத்தோட டெல்லியில இருக்கிற என் அக்கா மகளோட கல்யாணத்துக்குப் போயிட்டு திரும்புனோம்… அப்போ எங்க காதுல விழுந்த செய்தி ‘இயற்கை மற்றும் சமூக ஆர்வலரான மானசாதேவி மரணம்’… தேவ்வும் மனுவும் காதலிச்சது எங்களுக்கு தெரியும்… அதனால அவன் என்ன மாதிரி நிலமையில இருக்கானோனு பதறிப் போய் பார்த்தா என் மகன் இருந்த நிலமை…” என்று நிறுத்தியவரின் கண்கள் கலங்கியிருந்தது.

“அவளை தேவ் அவசரமா கல்யாணம் பண்ணுனது கூட எங்களுக்கு லேட்டா தான் தெரிய வந்துச்சு… மானசாவோட சேர்த்து அவளோட அப்பாவையும் கொன்னுட்டாங்க… ஒரே நேரத்துல தன்னோட வாழ்க்கையில முக்கியமான ரெண்டு நபர்களை இழந்து வாழ்க்கையே வெறுத்துப் போய் இருந்தான் தேவ். அப்போ தான் ரிஷி மூலமா மானசா, ஜீவாண்ணாவோட சாவுக்கு யாரு காரணம்னு அவனுக்குத் தெரிய வந்துச்சு… அவளோட சாவுக்காக அவன் பழிவாங்க இதைலாம் செய்றானு நினைச்சுடாத சஞ்சு… மானசாவோட கனவுகளை நிறைவேத்த தான் இத்தனை வருசம் ஓடிக்கிட்டே இருக்கான்… அதுக்காக அவன் செஞ்சதை நான் நியாயப்படுத்தல… முடிஞ்சா அவனை மன்னிச்சிடு சஞ்சு” என்று கரம் கூப்பும் போது கண்ணிலிருந்து கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது.

இதை ஹாலில் இருந்தவர்களோடு சேர்ந்து மாடிப்படியில் நின்றிருந்த இஷானியும் கேட்டுக் கொண்டிருந்தாள். கேட்டவளுக்கு ஜெயதேவ்வின் நிலை குறித்து பரிதாபம் எழுந்தது என்னவோ உண்மை. மணமாகி எட்டு மணிநேரத்தில் காதலித்தவளை இழந்தவனின் நிலை உண்மையில் கொடுமை தான். ஆனால் அவளது கனவை நிறைவேற்ற அஸ்மிதாவை ஏன் அவன் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்ற கேள்வி தான் அவளுக்குள்.

அவள் சாந்தினிக்குப் பதிலளிக்க மாடிப்படியிலிருந்து வேகமாக இறங்கும் போதே ருத்ராவும் மந்தாகினியும் வீட்டுக்குள் காலடி எடுத்துவைத்தனர். அவர்களைக் கண்டதும் இஷானிக்குள் எரிச்சல் மூள விறுவிறுவென்று ஹாலுக்குச் சென்றவள் “நீங்க எதுக்கு இங்கே வந்திருக்கிங்க?” என்று கோபாவேசத்துடன் வினவ

மந்தாகினி “உன்னை எங்க வீட்டுக்குக் கூட்டிட்டுப் போக” என்றார் சாதாரணமாக.

மந்தாகினியைக் கண்டதும் அஸ்மிதாவின் முகத்தில் சிறு தடுமாற்றம் கூடவே இரக்கமும். அவளுக்கு என்றுமே மந்தாகினியைப் பிடிக்காது. அதில் இப்போதும் மாற்றம் இல்லை. ஆனால் தந்தையின் இரண்டாவது மனைவி என்ற முறையில் இன்னுமே தன் அன்னையின் நினைவை மனதில் தாங்கி வாழும் தந்தையின் செய்கைகள் மந்தாகினியின் மனதை வருத்தியிருக்கும் தானே என்று முதல் முறையாக யோசிக்க ஆரம்பித்தாள் அவள். ஏனென்றால் அவளும் இப்போது முதல் மனைவியின் நினைவில் வாழும் ஒருவனின் இரண்டாவது மனைவி அல்லவா!

அதே நேரம் மந்தாகினியின் பதில் இஷானியைத் தவிர மற்ற அனைவருக்கும் உவப்பாகவே இருந்தது எனலாம். ஏனெனில் சஞ்சீவினியின் மகளை மந்தாகினி தம்பி மனைவியாக முறைப்படி வீட்டுக்கு அழைத்துச் செல்வார் என்றெல்லாம் யாரும் கற்பனை கூட செய்து பார்க்கவில்லை. இத்திருமணத்தில் துளியும் விருப்பமற்று கத்துவார், சண்டை போடுவார் என்று அவர்கள் எண்ணியிருக்க அதற்கு மாறாய் அவர் இஷானியைத் தங்களுடன் அழைத்துச் செல்ல வந்திருப்பதாய் கூறியது அனைவருக்கும் ஆச்சரியம்.

சாந்தினியைக் கண்டதும் சினேகமாய் முறுவலித்தவர் பழகியவரைப் போல நலம் விசாரித்துவிட்டு சங்கரராமனிடமும் இரண்டு வார்த்தைகள் மரியாதைக்காய் பேசி வைத்தார். சாந்தினி கூறியதைத் தான் மந்தாகினியும் சொன்னார்.

“நமக்குள்ள ஆயிரம் பிரச்சனைகள் இருக்கலாம்… ஆனா இப்போ சின்னவங்க வாழ்க்கையை மட்டும் யோசிப்போம்… கடந்தகாலத் தவறுகளை மனசுல வச்சுட்டு நிகழ்காலத்தை நரகம் ஆக்கிக்க வேண்டாமே”

சஞ்சீவினிக்கு மந்தாகினியின் இந்தப் பக்குவமான பேச்சு பிடித்திருந்தது. பேச்சு மட்டும் தான். ராஜகோபாலனும் அலமேலுவும் கூட ருத்ரா மற்றும் இஷானியின் வாழ்க்கையை எண்ணியவர்களாய் மந்தாகினியின் வீட்டுக்கு(?) இஷானியை ருத்ராவுடன் வழியனுப்பி வைக்கத் தயாராயினர்.

இஷானி இன்னும் சமாதானமடையாமல் தெளிவின்றி நிற்பதைக் கண்ட ருத்ரா பொதுவில் அனைவரிடமும் மன்னிப்பு கேட்டுக்கொண்டான்.

“நான் அஸ்மியோட நல்லதுக்காக தான் தேவ்வுக்கு ஹெல்ப் பண்ணுனேன்… என்னைக்குமே அவ நல்லா இருக்கணும்னு மட்டும் தான் நான் நினைப்பேன்… தேவ்வோட முதல் மனைவிக்கு நடந்த விசயங்கள் எதுவுமே அஸ்மிக்கு நடந்துடக் கூடாதுனு தான் நாங்க அவசரமா கல்யாணத்துக்குச் சரினு சொன்னோம்… அஸ்மியோட பாதுகாப்பு ஒரு காரணம்னா அஸ்மி தேவ்வை கண்மூடித்தனமா காதலிச்சது இன்னொரு காரணம்”

அவனது பேச்சில் உள்ள நியாயத்தை உணர்ந்த அஸ்மிதா ருத்ராவைப் பார்த்தவள் மனதிற்குள் “இது தான் காரணம்னா நான் காதல் தோல்வியோடவே இருந்திருப்பேனே மாமா” என்று விரக்தியாய் எண்ணிக்கொண்டாள்.

அவனது பேச்சில் பெரியவர்கள் சமாதானமடைந்தனர். அஸ்மிதா கூட அவன் பக்க நியாயத்தைப் புரிந்துகொண்டாள் எனலாம். ஆனால் இஷானியால் திருமணநாளன்று அஸ்மிதாவின் கலங்கிய முகத்தை இன்னுமே மறக்க இயலவில்லை.

ஆனால் பெரியவர்கள் தான் ‘குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை” என்ற வார்த்தையை அழுத்திக் கூறி அவளை ருத்ராவுடன் மந்தாகினியின் வீட்டுக்குச் செல்லுமாறு புத்தி கூற ஆரம்பித்தனர். இஷானி ஏதோ செல்ல வாயெடுத்தவள் அஸ்மிதா அவளது கையை அழுத்தமாகப் பற்றி அழைக்கவும் அமைதியாகி அவளுடன் சேர்ந்து மாடிப்படி ஏறினாள்.

ருத்ரா அஸ்மிதாவுடன் சென்ற இஷானியைக் கண்டவன் அவள் தன்னுடன் வரச் சம்மதிப்பாளா என்ற கேள்விக்கு விடை தெரியாது விழித்தான். அதே நேரம் சங்கரராமன் அங்கே குடியிருந்த சங்கடமான அமைதியை விரட்ட எண்ணியவராய் பேச்சை அஸ்மிதாவைப் பற்றியதாய் ஆரம்பித்தார்.

“சஞ்சு! நான் கூட அஸ்மி சின்னப்பொண்ணாய் இருக்கிறப்போ பொடுபொடுனு பேசுவாளே அப்பிடி தான் இப்போவும் இருப்பானு நினைச்சேன்… ஆனா சும்மா சொல்லக்கூடாதும்மா! இடம், பொருள், ஏவல் தெரிஞ்சு நாசூக்கா நடந்துக்கிறா… என் ராமமூர்த்தியோட பேத்தியாச்சே”

அவர் இவ்வாறு சிலாகிக்கவும் ராஜகோபாலன் “அவ எனக்கும் பேத்தி தான்னு மறந்துடாதிங்க சங்கர்” என்று பேத்தியின் ஜீனில் தன் குணாதிசயமும் இருக்கும் என்பதை பதிவு செய்ய அலமேலு, சஞ்சீவினி, மந்தாகினி மற்றும் சாந்தினிக்கு பழைய நாட்களில் ராமமூர்த்தி, ராஜகோபாலனுடன் ஏட்டிக்குப் போட்டியாக வாதம் செய்யும் சங்கரராமனின் பேச்சு தான் நினைவுக்கு வந்தது.

அது அவர்கள் வாழ்வின் பொன்னான காலகட்டம். மூன்று பெரியவர்களும் ஒன்றாய் சேர்ந்து கலகலப்பாக உரையாடுவதும் அதற்கு இளையவர்கள் கேலி செய்வதுமாய் நாட்கள் அருமையாய் போன சமயத்தில் யார் கண் பட்டதோ அவர்கள் ஆளுக்கொரு திக்காய் பிரிந்துவிட்டனர். இப்போது இளையவர்களின் திருமணத்தால் மற்ற கசப்பான சம்பவங்களை ஒத்திவைத்துவிட்டு வருங்காலச்சந்ததியின் வாழ்க்கையை மட்டும் கருத்தில் கொண்டு சுமூகமாய் உரையாடிக் கொண்டிருந்தனர்.

மந்தாகினியின் இந்த முதிர்ச்சியான அணுகுமுறை சஞ்சீவினிக்கும் அவரது பெற்றோருக்கும் மனநிம்மதியைக் கொடுத்தது. அவளால் இஷானியின் வாழ்வில் எந்தப் பிரச்சனையும் வராது என்பதே அவர்களின் அப்போதைய நிம்மதிக்குக் காரணம். ருத்ராவின் மீது அவர்களுக்கு இருந்த வருத்தமும் அவன் சொன்ன காரணத்தால் மட்டுப்பட்டிருந்தது.

சஞ்சீவினிக்குச் சாந்தினியைக் கண்டதும் அஸ்மிதாவின் வாழ்க்கையைப் பற்றிய கலக்கம் பாதியளவு குறைந்தது. அவர் தன் மகளுக்கு ஆதரவாய் இருப்பார் என்பதால் உண்டான நிம்மதி. விஸ்வநாதனைப் பற்றி கேட்கவே வேண்டாம். அவரது உயிர்நண்பரின் மகளது வாழ்வில் அவருக்குக் கட்டாயம் அக்கறை இருக்கும். ஆனால் இது எல்லாவற்றிற்கும் மேலான ஒன்று தேவ்வின் மனதில் அஸ்மிதாவுக்கான இடம் என்ன என்பது தான்.

என்ன தான் மற்றவர்களின் ஆதரவு இருந்தாலும் அவள் காதலித்து மணந்தவனின் மனதில் அவளுக்காக சிறிதளவேனும் அன்பு இருக்க வேண்டுமே என்பது தான் ராஜகோபாலனுக்கும் அலமேலுவுக்கும் இருக்கும் முக்கியக்கவலையே! அவனுக்கும் சந்திரசேகருக்கும் ஏழாம்பொருத்தம் என்பது திருமணநாளன்று கண்கூடாகவே கண்ட நிலையில் அவர் மீதான கோபத்தை ஜெயதேவ் அஸ்மிதாவின் மீது காட்டிவிடக் கூடாதே என்ற கவலையும் ஒரு சேர எழுந்தது.

அவர்களின் கவலைகளுக்குக் காரணமானவன் “நான் உள்ளே வரலாமா?” என்று கேட்டபடி வாயிலில் நிற்கவும் அனைவராலும் திகைக்க மட்டுமே முடிந்தது. ஜெயதேவ் வாயிலில் நின்றிருந்தவன் ருத்ராவைக் கண்டதும் முகம் மலர ருத்ரா புன்னகையுடன் எழுந்து சென்று அவனைத் தோளோடு அணைத்தவன் வீட்டினுள் அழைத்து வந்தான்.

தேவ் மந்தாகினியைக் கண்டதும் புருவம் உயர்த்திவிட்டு சாந்தினியிடம் “வேர் இஸ் யுவர் டாட்டர் இன் லா? நான் வரலைனா முகத்தைத் தூக்கி வச்சிப்பாளேனு ஆபிஸ்ல மீட்டிங்கை பாதியில விட்டுட்டு ஓடி வந்திருக்கேன்… இங்க வந்து பார்த்தா அவளைக் காணும்… எங்கம்மா போயிட்டா?” என்று கேட்க சஞ்சீவினி அவள் இஷானியைத் தயார் செய்யப் போயிருக்கிறாள் என்று சொல்லவும் சரியென்று தலையசைத்தவன் அவரது முகத்தையும் பெரியவர்களின் முகத்தையும் பார்த்துவிட்டு இன்னும் ஒரு முறை தான் விளக்கம் கொடுக்கவேண்டும் போலுள்ளதே என்று எண்ணியபடி பேச்சை ஆரம்பித்தான்.

“உங்களோட கவலை எனக்கு புரியுது… இரண்டாவது கல்யாணம் பண்ணிக்கிட்டவன் நம்ம வீட்டுப்பொண்ணை எப்பிடி பார்த்துப்பானோனு யோசிக்கிறிங்க… கூடவே சந்திரசேகரோட மகள்ங்கிற யோசனை வேற என்னை டிஸ்டர்ப் பண்ணுமேனு கூட நினைப்பிங்க… ஆனா ஒரு விசயத்தை புரிஞ்சுக்கோங்க… தாத்தா என் கிட்ட கேட்டுக்கிட்டது நான் பண்ணுற காரியத்தால அவர் ஃப்ரெண்டோட பேத்தி உயிருக்கு ஆபத்து எதுவும் வரக்கூடாதுங்கிறது தான்… இந்தக் கல்யாணம் நடந்ததுக்கு அது முக்கியமான காரணம்… கூடவே பிடிக்காத ஒரு பெண்ணைக் கல்யாணம் பண்ணிக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்ல…

எனக்கு அஸ்மிதாவை ரொம்பவே பிடிக்கும்… ஆனா அந்த பிடித்தம் காதலானு இப்போ வரைக்கும் தெரியல… இப்போதைக்கு என் கவனமெல்லாம் மனுவோட ஆசையை எப்பிடி நிறைவேத்துறது, அஸ்மியை மோசமானவங்க கிட்ட இருந்து எப்பிடி பாதுகாக்கிறதுங்கிறதுல மட்டும் தான் இருக்கு… இந்த நிலமையில இயல்பான தம்பதிகளா எங்களால வாழ்க்கையை அணுக முடியாது… ஆனா எல்லா பிரச்சனையும் முடிஞ்சதும் நாங்களும் எங்களுக்கான வாழ்க்கைய நல்லபடியா ஆரம்பிப்போம்… மேட் ஃபார் ஈச் அதர்னு சொல்லுற அளவுக்கு வாழலைனாலும் எங்களை நினைச்சு நீங்க யாரும் வருத்தப்படாத மாதிரி ஒரு இயல்பான வாழ்க்கையை வாழுவோம்… இப்போதைக்கு இது மட்டும் தான் என்னால சொல்ல முடியும் ஆன்ட்டி” என்று முத்தாய்ப்பாய் சொல்லிவிட இன்றில்லா விட்டாலும் என்றாவது அவர்கள் வாழ்க்கை நன்முறையில் அமையும் என்ற நம்பிக்கை சஞ்சீவினி மற்றும் அவரது பெற்றோர் முகத்தில் சுடர் விட ஆரம்பித்தது.

ருத்ராவுக்கு இந்த நம்பிக்கை முன்னரே இருந்ததால் தான் அவன் அஸ்மிதாவின் காதலுக்கும் இத்திருமணத்துக்கும் மறுப்பு சொல்லவில்லை.

நேற்றிலிருந்து இருந்த குழப்பமும் பதபதைப்பும் கலந்த மனநிலை சற்று மாறியது. சற்று நேரத்தில் அஸ்மிதா கையில் சூட்கேசை வைத்திருந்தவள் இஷானியுடன் திரும்ப, இஷானியின் முகத்தில் சற்று தெளிவு பிறந்திருந்தது. அவளது இயல்பான சாந்தகுணம் திரும்பியிருந்தது. ருத்ரா அதைக் கண்டு நிம்மதியுற்றான். அதன் பின்னர் ருத்ராவும் மந்தாகினியும் அவளை அழைத்துக்கொண்டு சஞ்சீவினி பவனத்திலிருந்து விடை பெற்றனர். அவர்கள் சென்றதும் சாந்தினியையும் சங்கரராமனையும் அஸ்மிதாவுடன் வீட்டுக்குச் செல்ல சொன்ன தேவ் தானும் பெரியவர்களிடம் விடைபெற்றுக் கொண்டான். வாழ்வில் சில இக்கட்டான தருணங்களில் என்ன முடிவெடுப்பது என்றே புரியாத நிலையில் வாழ்க்கையை அதன் போக்கில் விட்டுவிடவேண்டும். நடந்ததை எண்ணி வாழ்க்கையை வீணடிப்பதும், அதற்காக மற்றவர்களைக் குறை சொல்வதும் முதிர்ச்சியான மனிதர்கள் செய்யும் காரியமல்ல.

தண்மதி ஒளிர்வாள்🌛🌛🌛