🌞 மதி 43🌛

தாது மணலில் இருந்து பிரித்தெடுக்கும் போது கிடைக்கும் போது கிடைக்கும் மோனோசைட்டைத் தனியார் வைத்திருப்பது சட்டவிரோதமானது. அதை அரசிடம் ஒப்படைக்க வேண்டும். இது போன்ற கதிர்வீச்சுக்கனிமங்களைப் பிரித்தெடுக்க அரசிடம் ஒப்புதல் வாங்குவது கட்டாயம்  ஆகும்இந்திய அணுசக்தி சட்டம் 1984.

தினமும் இஷானியின் கானத்தில் கண் விழித்துப் பழகிப் போயிருந்த அஸ்மிதா அன்றைக்கு வழக்கத்துக்கு மாறாகச் சீக்கிரமே விழித்துக் கொண்டாள். கண் விழித்ததும் அது தனது அறை அல்ல என்ற நிதர்சனம் அவள் முகத்தில் அறைந்தது. மெதுவாக நிதானத்துக்கு வந்தவள் அடுத்த வேலையைக் கவனிப்போம் என்று எழுந்தாள். சிறிது நேரத்தில் குளித்து உடைமாற்றிவிட்டு அவர்களின் அறையை (?) விட்டு வெளியேறி ஹாலை எட்டிப் பார்த்தாள்.

அங்கே சங்கரராமன் மட்டும் அமர்ந்து செய்தித்தாளை ஆராய்ந்து கொண்டிருந்தார். அவரைக் கண்டதும் எப்படி அவரிடம் பேசுவது என்று புரியாது விழித்துக் கொண்டிருக்கும் போது சங்கர்ராமனின் விழிகள் செய்தித்தாளிலிருந்து உயர்ந்து அஸ்மிதாவை நோக்கியது. செய்தித்தாளை மடித்துவைத்தவர் “அட! அஸ்மி வாடாம்மா!” என்று அழைக்கவும் அவள் மெதுவாக அவர் அருகில் வந்து நின்றாள்.

“குட் மார்னிங் தாத்தா” என்றவளுக்கு மேற்கொண்டு என்ன பேசுவது என்று புரியவில்லை. சங்கரராமன் அதைப் புரிந்து கொண்டவராய் ஆதரவாய் புன்னகைத்துவிட்டு “கண்ணைக் கட்டி காட்டுல விட்ட மாதிரி இருக்குதா? ஆனா எங்களையும் உன் குடும்பத்து ஆளுங்களை மாதிரியே நினைச்சுக்கோடா” என்று சொல்லவும் அவள் சிரித்துவைத்தாள்.

வேறு என்ன செய்வது? இந்த மனிதரும் இங்கு நடந்த அனர்த்தங்களுக்கு ஒரு காரணமல்லவா? ஆனால் அவரிடம் அவளால் கோபப்பட இயலாது. அவர் வயது அப்படி. அவரிடம் அடுத்து என்ன பேசுவது என்று புரியாமல் நின்றவள் சாந்தினியின் குரலால் கவனம் கலைந்தாள்.

“அஸ்மி இப்போ தான் எழுந்தியா? காபி குடிக்கிறியா?” என்று வினவியபடி வந்தவர் பணியாளிடம் காபி கொண்டு வரும்படி பணித்துவிட்டு மருமகளிடம் பேச ஆரம்பித்தவர் “தேவ் எழுந்திருச்சிட்டானா அஸ்மி?” என்று கேட்டுவைக்க அஸ்மிதா அதற்கும் பதில் சொல்லாது விழித்தாள்.

நல்லவேளையாக பணியாள் அதற்குள் காபியுடன் திரும்பியதால் அஸ்மிதாவைக் காபியை அருந்தவும் சாந்தினிக்கு விசயம் புரிந்தது. சோபாவில் அவளருகில் அமர்ந்தவர் சிகையை வாஞ்சையுடன் வருடி கொடுத்துவிட்டு

“எனக்கும் புரியுதும்மா! உன் மனநிலை இன்னும் சரியாகலை.. அவ்ளோ சீக்கிரம் சரியாகாதுனு எனக்கும் தெரியும்… ஆனா ஒரு அம்மாவா என் மகனோட இந்தக் கல்யாணமாவது வாழ்க்கை முழுக்க நிலைக்கணும்னு கடவுள் கிட்ட வேண்டிக்க மட்டும் தான் என்னால முடியும்… உங்களோட கருத்துவேறுபாட்டுக்குள்ள நானோ இந்தக் குடும்பத்தைச் சேர்ந்தவங்களோ மூக்கை நுழைக்க விரும்பல… ஏன்னா நிறைய குடும்பங்கள்ல கணவன் மனைவி பிரச்சனையில மாமனார், மாமியார் தலையிட்டு அந்தப் பிரச்சனை பெரிய பிரிவுகளை உண்டாக்கினதை நானே கண்கூடா பார்த்துருக்கேன்… இது உங்களோட வாழ்க்கை… இதுல உள்ள ப்ராப்ளம்ஸை நீங்களே பேசி சார்ட் அவுட் பண்ணிக்கோங்க” என்று சொல்லவும் அஸ்மிதாவுக்கு ஆறுதலாக இருந்தது.

என் மகனை நீ பொறுத்து போ என்று சராசரி மாமியாராக அவர் கட்டளையிட்டிருந்தால் அஸ்மிதா நிச்சயம் அடுத்த நிமிடமே இந்த வீட்டை விட்டுக் கிளம்பியிருப்பாள். ஆனால் சாந்தினி கணவன் மனைவியாகிய நீங்களே உங்கள் பிரச்சனைகளைத் தீர்த்துக் கொள்ளுங்கள் என்று கூறவே அவளுக்கு அவரை மிகவும் பிடித்துப் போனது. எப்பேர்ப்பட்ட முரட்டுக்குழந்தையையும் அடக்கும் அங்குசம் அன்பு மட்டுமே என்பது சத்தியமான வார்த்தையே!

ஆனால் சாந்தினி அதைத் தொடர்ந்து “அஸ்மி! தேவ்வுக்கு காபி கொண்டு போய் குடுத்துடுறியாம்மா?” என்று கேட்கும் சமயத்தில் நடைப்பயிற்சியை முடித்துக் கொண்டு வீட்டுக்குள் நுழைந்தார் விஸ்வநாதன்.

“எப்போவும் அவனே கீழே வந்து தானே குடிப்பான்? இன்னைக்கு என்ன புதுசா அஸ்மியை கொண்டு போகச் சொல்லுற சாந்தி?”

சாந்தினி மெதுவாக மாமனாரிடம் திரும்பியவர் “என்ன மாமா இது?” என்று விஸ்வநாதனைச் சுட்டிக்காட்டிச் சைகையால் பேச அஸ்மிதா அதைக் கவனித்தவள் நமட்டுச்சிரிப்புடன்

“இட்ஸ் ஓகே அங்கிள்! காபி கொண்டு போய் குடுக்கிறதுல என்ன இருக்கு? ஆன்ட்டி எதுக்கு மாடிக்கு ஏறி ஏறி இறங்கணும்?” என்று சொன்னவள் பணியாள் காபியுடன் திரும்பவும் அவரிடமிருந்து கப்பை வாங்கிக் கொண்டபடி படிகளில் ஏறத் தொடங்கினாள்.

சாந்தினி அஸ்மிதாவைப் பார்த்தவர் “நான் கூட சின்னவயசுல இருந்த மாதிரி இப்போவும் அடம்பிடிப்பானு நினைச்சேன்! சஞ்சு பொண்ணை கெட்டிக்காரியா வளர்த்திருக்கா! எனக்கு நம்பிக்கை இருக்குங்க… அஸ்மியும் தேவ்வும் கூடிய சீக்கிரமே அவங்க பிரச்சனையைப் பேசி தீர்த்துப்பாங்க” என்று நிம்மதி பெருமூச்சு விட்டார்.

விஸ்வநாதனோ இப்போது சந்திரசேகரின் மனநிலை எப்படி இருக்குமோ என்று அச்சூழ்நிலையிலும் நண்பரைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்தார். அதே நேரம் அவரது மகன் தேவ் அலுவலக அறையில் மாட்டப்பட்டிருந்த மானசாதேவியின் புகைப்படத்திடம் வழக்கம் போல வருத்தமானக்குரலில் பேசிக் கொண்டிருந்தான்.

“நான் மோசமானவனா மனு? எல்லாருமே அப்பிடி தான் சொல்லுறாங்க… நான் வேணும்னே அஸ்மியை லவ் பண்ணுற மாதிரி நடிக்கல… அவ என்னை லவ் பண்ணுவானு நான் யோசிச்சது கூட இல்ல… என்னோட கனவே உன்னோட ஆசையை நிறைவேத்துறது தான்… சீக்கிரமா ஆர்.எஸ். மினரல்ஸ்ல நடக்கிற முறைகேட்டை வெளிக்கொண்டு வர்றது தான்… அதுக்கு நான் முதல்ல ஆர்.எஸ். கெமிக்கல்ஸ்ல எம்.டியா ஆகணும்… ரெண்டு கம்பெனிக்கும் இருக்கிற கனெக்சனை உடைச்சா சந்திரசேகர் தானா வழிக்கு வருவாரு… அந்த வினாயகமூர்த்தி….” என்றவனின் குரல் இறுகியது அந்தப் பெயரை உச்சரிக்கும் போது.

“அந்த வினாயகமூர்த்தியை ஒழிச்சுக் கட்ட எனக்குக் கிடைச்ச கோல்டன் எக் தான் அஸ்மிதாவோட ஷேர்ஸ்… அதே நேரம் அந்த ஆளால அவளுக்கு எதுவும் ஆகிடுமோனு எனக்குப் பயமா இருக்கு மனு… ஆனா ஐ பிராமிஸ், நான் அவளை அந்த வினாயகமூர்த்தி கிட்ட இருந்து சேஃபா பார்த்துப்பேன்… உன்னோட கனவை அவளோட ஷேர்ஸை வச்சு தான் நிறைவேத்த போறேன் மனு… அப்போ உன் அளவுக்கு எனக்கு அவளும் முக்கியம் தான்… நான் அவளை எந்தக் கஷ்டமும் அனுபவிக்க விடமாட்டேன்” என்று சொல்லிக் கொண்டிருந்தான்.

தேவ் அவனது கடந்த காலமானவளோடு பேசிக் கொண்டிருக்க அவனது நிகழ்காலத்துணைவி தங்கள் இருவரின் வருங்காலம் எப்படி அமையுமோ என்ற கவலையுடன் கதவருகில் உறைந்து போய் நின்றிருந்தாள்.

தேவ் பேச்சை நிறுத்திவிட்டுத் திரும்ப அஸ்மிதா அவசரமாக அதிர்ச்சியான பாவத்தை முகத்திலிருந்து துடைத்தெறிந்தவள் காபி கப்புடன் வந்தாள். அவனிடம் காபி கப்பை நீட்டியவளின் பார்வை சுவரில் மாட்டப்பட்டிருந்த மானசாவின் புகைப்படத்தில் பதிந்திருந்தது. தேவ் அதைக் கவனித்தபடி காபி கப்பை உதட்டுக்குக் கொடுத்தவன் ஒரு மிடறு அருந்திவிட்டு “ஷீ இஸ் மனு… மை ஒய்ப்” என்று சொல்லவும் அஸ்மிதா அவனை வெட்டுவது போல முறைத்தாள்.

அவளுக்கு தேவ் செய்த காரியத்தில் அவனைக் கொல்லும் அளவுக்கு உள்ளுக்குள் கோபம் இருந்தாலும் தன்னைக் கடவுள் சன்னிதானத்தில் கரம் பற்றியவன் இன்னொருத்தியை, அவள் அவனது முதல் மனைவியாகவே இருந்தாலும் எப்படி தனது ஸ்தானத்தை அவளுக்குக் கொடுப்பான் என்ற ஆதங்கம்.

“இஸிண்ட்? அப்போ நான் யாரு?” என்று சுள்ளென்ற கோபத்துடன் அவள் வாயிலிருந்து வார்த்தைகள் வெளியே வந்து சிதறின.

அந்த வார்த்தையில் தேவ் தலையுயர்த்திப் பார்த்தவன் “நீ யாருனு உன்னையே நீ கேட்டுக்கோ… என்னைப் பொறுத்தவரைக்கும் நேத்து நைட் என்னோட ரூம்ல என்னைத் தூங்க விடாம துரத்துன லேடி ரௌடி… அதுக்கு மேல என்ன சொல்லுறது?” என்று யோசித்தவன்

“ப்ச்! வேற சொல்லிக்கிற மாதிரி உன் கிட்ட எந்த டேலண்டும் இல்ல… அழகு, அறிவு, அன்புனு எதாவது ஒன்னு, ஒன்னே ஒன்னு உன் கிட்ட இருந்தா நான் உன்னை பாராட்டியிருப்பேன்” என்று அமர்த்தலாக மொழிய

அஸ்மிதா கடுப்புடன் அவனை முறைத்தவள் “என்ன பண்ணுறது? புருசன் பொண்டாட்டில யாராவது ஒருத்தவங்க தான் புத்திசாலியா இருக்கணும்னு ரூல்… உன் அளவுக்கு எனக்கு டேலண்ட் இல்லடா.. நீயெல்லாம் யாரு, எப்படிப்பட்ட ஆளு! நீ ஒரு மகாநடிகன்! நடிகர் திலகம், உலகநாயகன்லாம் உன் கிட்ட டியூசனுக்கு வரணும்” என்று சொல்லிவிட்டு உதட்டைச் சுழித்தவள் அவன் கையிலுள்ள காபி கப்பை வெடுக்கென்று பிடுங்கினாள்.

“ஏய் நான் இன்னும் காபி குடிச்சு முடிக்கல” – தேவ்

“தெரியும்டா! நீ குடிக்கணும்னு ஒரு கட்டாயமும் இல்ல… என்னைய கலாய்ச்சிட்டு என் கையால கொண்டு வந்த காபியை நீ குடிச்சிருவியா?” – அஸ்மிதா

“வாட்? நீ போட்ட காபியா? ஏன் முதல்லயே சொல்லல?” – தேவ்

“ஹலோ ஹலோ! நான் கொண்டு வந்த காபினு தான் சொன்னேன்… நான் போட்ட காபினு சொல்லவே இல்லையே” என்று அவள் தோளைக் குலுக்கியதும் இயல்பாய் மூச்சுவிட்டான் தேவ்.

அவன் மூச்சுவிடும் போதே அஸ்மிதாவின் பார்வை மீண்டும் மானசாவின் புகைப்படத்தில் பட்டு மீண்டது. அவளது ஜாடையில் யாரையோ எங்கோ பார்த்த நினைவு அவளுக்கு. சில நொடிகள் யோசித்தவள் பின்னர் நினைவுக்கு வந்ததும்

“இவங்களை மாதிரியே ஒரு லேடி உன்னோட ஃப்ளாட்ல உள்ள போட்டோல இருந்தாங்க தானே!” என்று கேட்டவளை நிதானமாகப் பார்த்தபடி நெற்றியைக் கீறியவன்

“யெஸ்! அவங்க மனுவோட அம்மாவும் அப்பாவும் தான்… மனுவோட அப்பா ஜீவானந்தம் என்னோட புரபசர்… ஆக்சுவலி அது என் ஃப்ளாட் இல்ல.. அது ரிஷியோட ஃப்ளாட்… அங்கே எதுக்கு மனுவோட பேரண்ட்ஸ் போட்டோ இருக்குனு உனக்கு கேள்வி வரலாம்… ரிஷி மனுவோட பெரியம்மா மகன்… மனு போனதுக்கு அப்புறம் அவனை நான் என்னோடவே இருக்கச் சொல்லிட்டேன்… என்னை விட நான் அதிகமா நம்புறது அவனை தான்” என்று சொல்ல அஸ்மிதாவுக்கு எவ்வளவு அழகாகத் திட்டம் போட்டு தன்னை நம்ப வைத்திருக்கிறான் என்ற ஆச்சரியம்.

ஆனால் இம்முறை அவன் மீது கோபம் வரவில்லை. காரணம் ஒவ்வொரு முறை ‘மனு’ என்ற பெயரை அவன் உச்சரிக்கும் போதும் அதிலுள்ள அழுத்தமும், உரிமையுணர்வும் அவளுக்குப் புரிந்தது. அதே நேரம் இத்தனை நாட்கள் தன்னிடம் அவன் காட்டிய உணர்வுக்கு என்ன பெயர் என்று புரியாது மனம் வெதும்பினாள். 

“எனி ஹவ் நான் என்னோட ரூமுக்குப் போறேன்… உடனே என்னைத் துரத்தணும்னு ஃபாலோ பண்ணிட்டு அங்கேயும் வந்துடாத… அப்புறம் வெக்கமே இல்ல, வீணாப்போனவனு தேவையில்லாம திட்ட வேண்டியிருக்கும்” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து வெளியேறினான் தேவ்.

அவனது பேச்சைக் கேட்டதும் “ஆமா எனக்கு வேற வேலையே இல்ல பாரு! நீ இப்போ அங்கே போய்க்கோ! பட் நைட் ஸ்டே உனக்கு இந்த ரூம்ல தான் மகனே” என்று மனதிற்குள் கறுவிக்கொண்டபடி நகர்ந்தவளின் பார்வை வட்டத்தில் மீண்டும் மானசாதேவியின் புகைப்படம் விழுந்தது. அதன் அருகில் சென்றவள் புகைப்படத்தில் இருந்தவளைக் கூர்ந்து நோக்க ஆரம்பித்தாள்.

அழகின் இலக்கணமாக நின்றவளின் கண்களில் தீட்சண்யம் நிரம்பி வழிந்தது. தொண்ணூற்று ஒன்பது சதவீதம் கம்பீரத்துடன் ஒரு சதவீதம் குறும்புத்தனம் கலந்த முகம். இவளை யாருக்கும் பிடிக்காமல் போனால் தான் ஆச்சரியம் என்று எண்ணியவள்

“நீங்க உயிரோட இருந்திருந்தா இவ்ளோ அனர்த்தம் நடந்திருக்காது… தாலி ஏறி எட்டுமணிநேரத்துல உங்க உயிரை விட்டுட்டிங்கனு ஆன்ட்டி சொல்லுறாங்க… புதுசா கல்யாணம் ஆனப் பொண்ணைக் கொல்லுற அளவுக்கு யாருக்கு உங்க மேல அவ்ளோ கோவம்? எதுவுமே புரியல” என்று வாய் விட்டுச் சொன்னவள் இதற்கு மேல் அங்கிருக்க பிடிக்காது காபிகப்புடன் வெளியேறிவிட்டாள்.

அதன் பின்னே கீழே வந்தவளை சாந்தினி பிடித்துக் கொண்டார். இன்று கட்டாயம் அவளும் தேவ்வும் மறுவீட்டுக்காக சஞ்சீவினிபவனம் சென்றாக வேண்டும் என்று கட்டளையிட, அலுவலகம் செல்லத் தயாராகி வந்த தேவ் தனக்கு வேலை இருப்பதாகச் சொல்லி அங்கே செல்ல மறுத்துவிட்டான்.

அஸ்மிதா அவனது மறுப்பில் கடுப்படைந்தவள் “ஆன்ட்டி! யாரும் என் கூட வரத் தேவையில்ல… நீங்க வாங்க… நம்ம ரெண்டு பேரும் போயிட்டு வந்துடுவோம்” என்று வெடுக்கென்று சொல்லவும் தேவ் அவளை ஒரு கணம் ஏறிட்டவன் பின்னர் யோசனையுடன்

“சரிம்மா! நீங்களும் இவளோட கிளம்புங்க… நான் அங்கே வந்து உங்களோட ஜாயின் பண்ணிக்கிறேன்… ஹானஸ்ட்லி எனக்கு ஆபிஸ்ல நிறைய ஒர்க் இருக்கு” என்று சொல்லவும் தான் அவள் மலையிறங்கினாள்.

இருந்தாலும் “பிளான் பண்ணுவானாம், ஆக்ட் பண்ணுவானாம், கல்யாணம் கூட பண்ணுவானாம்… ஆனா மறுவீட்டுக்கு மட்டும் வர மாட்டானாம்! சை! ஒரே எரிச்சலா இருக்கு… இப்பிடியே போச்சுனா ஒன்னு எனக்கே என் மேல கழிவிரக்கம் வர ஆரம்பிச்சிடும்… இல்லனா நான் பைத்தியம் ஆயிடுவேன்.. ரெண்டுல ஒன்னு நடக்கிறதுக்குள்ள இவனை ஒரு வழி பண்ணிடனும் அஸ்மி” என்று எரிச்சலுடன் சூளுரைத்துக் கொண்டாள்.

காலையுணவு சமயத்தில் சாந்தினியுடன் சென்று அமர்ந்து கொண்டவளின் முகத்தில் இன்னும் எரிச்சல் அடங்காததை தேவ்வும் கவனித்தபடியே தான் சாப்பாட்டை உள்ளே தள்ளிக் கொண்டிருந்தான். ஆனால் எதுவும் பேசவோ அவளைச் சமாதானம் செய்யவோ முயலவில்லை.

விஸ்வநாதனும் அவர்களுடன் கலந்துகொள்ள எரிச்சல் சற்று மட்டுப்பட்ட அஸ்மிதா அவன் ஒருவன் இங்கே இருப்பதைக் கண்டுகொள்ளாதவளாய் சங்கரராமன், விஸ்வநாதன் மற்றும் சாந்தினியிடம் வளவளக்க ஆரம்பித்தாள். வீட்டின் வாழ்க்கையோட்டத்தில் கலப்பதற்கான முதலடியாக அந்தக் காலையுணவு நேரம் அமைந்தது அவளுக்கு.

அதன் பின்னர் விஸ்வநாதனும் ஜெயதேவ்வும் அலுவலகம் சென்றுவிட அஸ்மிதா சாந்தினியையும் சங்கர்ராமனையும் அழைத்துக் கொண்டு மறுவீட்டுக்காகச்(?) சஞ்சீவினிபவனத்துக்குச் செல்ல ஆயத்தமானாள்.

கிளம்பத் தயாராகும் போதே “நான் தேர்ந்தெடுத்த வாழ்க்கை, நானே பார்த்துக்கிறேனு ஜம்பமா சொல்லிட்டேன்.. பட் ஐ ஃபீல் வெரி வெரி பேட் மா! என்னால முடியல… கண்ணு முன்னாடி என் கழுத்துல தாலி கட்டுனவன் வேற ஒரு பொண்ணோட பேரைச் சொல்லி புலம்புறதைப் பார்க்கிறப்போ அவ்ளோ கஷ்டமா இருக்கு.. என்ன பண்ணனும்னு புரியல.. எதுக்கெடுத்தாலும் என்னோட பாதுகாப்புனு ஒரு வார்த்தையை சொல்லிடுறான்… ஆனா இப்பிடிப்பட்ட இக்கட்டான நிலமையில பாதுகாப்பா இருக்கிறதுக்குப் பதிலா நான் செத்தே போயிருக்கலாம் போல” என்று மனதிற்குள் நொந்து கொண்டபடி தான் தயாரானாள் அவள்.

என்ன தான் சாந்தினி, சங்கரராமன், விஸ்வநாதன் என அந்த வீட்டினர் அவள் மீது பாசத்தைக் கொட்டினாலும் ஜெயதேவ் என்ற ஒருவனின் ஒதுக்கமும், புதிய முகமும் அவளுக்கு விரக்தியைத் தான் கொடுத்தது. வாழ்க்கை இலக்கின்றி செல்வது போல உணர்ந்தவள் இதற்கு ஒரு முற்றுப்புள்ளி எப்போதடா வரும் என்று எண்ணியவளாய் கீழே சென்று மாமியாருக்காகவும் தாத்தாவுக்காகவும் காத்திருக்க ஆரம்பித்தாள். அவர்கள் தயாராகி வந்ததும் மூவரும் சேர்ந்தே சஞ்சீவினி பவனத்துக்குச் செல்ல காரில் ஏறினர்.

தண்மதி ஒளிர்வாள்🌛🌛🌛