🌞 மதி 40🌛

1910ஆம் ஆண்டில் ஜெர்மன் நிறுவனம் ஒன்று தாது மணல் பிரிக்கும் ஆலையை குமரி மாவட்டம் மணவாளக்குறிச்சியில் தொடங்கியது. தாதுமணலில் இருந்து தாதுக்களை மட்டும் பிரித்து எடுத்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்தது. 1947ஆம் ஆண்டிற்குப் பின் இந்திய அரசே இப்பகுதியில் ஒரு தாதுமணல் ஆலையை நடத்தி வருகிறது. 1980களுக்குப் பின் புதிய பொருளாதாரக் கொள்கையினைப் பயன்படுத்தி தனியார் நிறுவனங்களுக்கும் தாது மணல் அள்ளும் உரிமையை வழங்கியது. அன்றிலிருந்து தமிழகத்தின் இந்த அரிய தாது வளங்களை வரைமுறையின்றி தோண்டி எடுக்கும் பணி தொடர்கிறது. இந்தத் தனியார் நிறுவனங்களின் விதிமீறல்களும், முறைகேடுகளும் மிக மிக அதிகம்இளந்தமிழகம்.காம் (28.10.2013)

சஞ்சீவினி பவனம்…

அங்கே வீசும் காற்றில் கூட எப்போதும் கலகலப்பும் மகிழ்ச்சியும் மட்டுமே இருக்கும். ஆனால் இன்றைய நிகழ்வால் அனைவரும் கலங்கிப் போயிருந்தனர். அஸ்மிதாவை எண்ணி வருந்தும் சஞ்சீவினிக்கு ஆறுதலாக இஷானி இருந்தாலும் அவளது வாழ்க்கை அல்லவா இப்போது கேள்விக்குறியாக உள்ளது. அவள் ருத்ராவைப் புரிந்துகொள்வாளா என்ற கேள்வி தான் இப்போது அங்கிருந்த அனைவரின் மனதிலும் ஓடியது. ஏற்கெனவே சஞ்சீவினியின் காரணமாக சந்திரசேகர் மற்றும் மந்தாகினியின் மீது உண்டான வெறுப்பை அவள் இன்றும் மனதில் சுமந்து கொண்டிருக்கிறாள்.

இச்சமயத்தில் அஸ்மிதாவின் விவாகத்தை ருத்ரா நினைத்திருந்தால் தடுத்திருக்கலாம் என்ற எண்ணம் அவள் ஆழ்மனதில் பதிந்து விடவே ஒருவேளை சந்திரசேகர் மந்தாகினியின் நிலை தான் ருத்ராவுக்குமா? என்ற கேள்வி சஞ்சீவினியின் மனதில் பூதாகரமாக எழுவதை அவரால் தடுக்க இயலவில்லை. கூடவே இருக்கும் இவளது வாழ்வை எண்ணி வருந்துவதா அல்லது இவ்வளவு நடந்தும் அசராமல் கட்டியவன் பின்னே சென்றவளை எண்ணி கலங்குவதா என்பது புரியாமல் அயர்ந்து போனவரின் செவியில் மேரி ஹோட்டல்காரரிடம் போனில் பேசுவது காதில் விழுந்தது.

“இல்ல சார்! நீங்க நேரா ஹோமுக்குக் கொண்டு போயிடுங்க… உங்க ஸ்டாப்ஸை வச்சே குழந்தைங்களுக்கு சர்வ் பண்ணச் சொல்லிடுங்க..

சஞ்சீவினி வராண்டாவுக்கு வந்தவர் மேரியிடம் போனைத் தருமாறு சைகை காட்டியவர் அவர் நீட்டவும் “மனோகரன் சார் நீங்க ஹோமுக்குக் கொண்டு போய் வச்சிடுங்க… நாங்களே சர்வ் பண்ணிக்கிறோம்… ரொம்ப நன்றி சார்” என்று இயல்பாகப் பேசிவிட்டுப் போனை மேரியிடம் நீட்டினார்.

“அக்கா! இந்தச் சூழ்நிலையில நீங்க போய் பரிமாறணுமா?” – மேரி.

“இப்போ தான் நான் கண்டிப்பா அங்கே போகணும் மேரி… அந்தக் குழந்தைங்க முகத்தைப் பார்த்தா தான் என் மனபாரம் இறங்கும்… நம்ம கஷ்டம் நம்மளோட இருக்கட்டும்… இஷானி, அஸ்மியோட கல்யாணத்துக்கு அவங்க எல்லாருக்கும் நானே என் கையால பரிமாறணும்ங்கிறது என்னோட ஆசை… இன்னைக்கு நடந்த சம்பவத்தால மனநிம்மதி பறிபோயிடுச்சு… அடுத்து என்னனு புரியாம என் பொண்ணுங்க மாதிரி நானும் திகைச்சுப் போய் நிக்கிறேன்.. இப்போ எனக்கு இருக்கிற ஒரே ஆறுதல் அந்தக் குழந்தைங்க மட்டும் தான்” – சஞ்சீவினி.

மேரியும் நடந்த நிகழ்வுகள் அனைத்தையும் பார்த்துக் கொண்டு தானே இருந்தார்! அவராலேயே ஜெய் என்பவன் முற்றிலும் வேறு மனிதன் எனும் உண்மையை இன்னும் ஜீரணிக்க முடியவில்லை. எனில் சம்பந்தப்பட்ட சஞ்சீவினிக்கு எப்படி இருக்கும்? இது எல்லாவற்றையும் விட அஸ்மிதாவை எண்ணினால் தான் மேரிக்கு மனம் வலித்தது.

துறுதுறுவென்று சிட்டுக்குருவியைப் போல ஒரு இடத்தில் நில்லாது வாய் ஓயாது பேசுபவள் இன்று காதல் கணவனாக எண்ணியிருந்தவனின் உண்மை ரூபம் கண்டு சிலையாய் சமைந்தது பார்ப்போர் அனைவரின் கண்ணிலும் கண்ணீரை வரவழைக்கத் தான் செய்தது. அஸ்மிதாவின் சித்தி கூட அவளது எதிர்காலம் என்னவோ என்று கலங்கி போய் தானே நின்றிருந்தார்!

மற்றவர்களுக்கே அப்படி என்றால் பெற்றவளுக்குப் பிள்ளையின் எதிர்காலம் என்னாகுமோ என்ற கவலை இருக்காதா? ஆனால் அந்தச் சூழ்நிலையிலும் அழுது அரற்றாமல் கண்ணீரில் கரையாமல் அஸ்மிதா உறுதியாகப் பேசியது தான் மேரிக்கு ஆச்சரியம். அவளது கோபம் அந்த வட்டாரத்தில் மிகவும் பிரசித்தி பெற்றது. இன்று நடந்த சம்பவத்துக்கு அவள் பழைய அஸ்மிதாவாக இருந்தால் ஜெயதேவ் அவளது கோபாக்கினியில் பொசுங்கியிருப்பான். ஆனால் இன்று மாலையும் கழுத்துமாக நின்றவள் மனமெங்கும் அவன் காதலனாக வியாபித்திருக்கின்ற நிலையில் அவளால் அவனைப் பிரிய இயலவில்லை என்று எண்ணிக் கொண்டார் மேரி. இனி மனதுக்குப் பிடித்தவனோடு அவள் வாழ்க்கை நன்றாகவே செல்லும் என்று நம்பிக்கை கொண்டிருந்தது மேரியின் மனது.

ஆனால் இஷானியின் முடிவு அவர்கள் அனைவருக்கும் எதிர்பாரா அதிர்ச்சி தான். யாரையும் வார்த்தையளவில் கூட காயப்படுத்தாத அவள் இன்று ருத்ராவை இப்படி பேசுவாள் என்று யாருமே யோசிக்கவில்லை. அஸ்மிதாவுக்கு நேர்ந்த சோகத்தினால் அவள் அழுவாள் என்றளவில் தான் அவளைப் பற்றி மேரியும் அனுமாணித்திருந்தார். ஆனால் அவள் சிறிதும் யோசிக்காமல் சகோதரியின் வாழ்க்கை கேள்விக்குறியானதற்கு ருத்ராவும் மறைமுகக் காரணம் என்று அவனைத் தனது வாழ்க்கையை விட்டு விலக்கி வைப்பாள் என்று நினைத்துக் கூடப்பார்க்கவில்லை.

இதோ எல்லாம் முடிந்து வீடே புயலடித்து ஓய்ந்தது போன்ற அமைதியுடன் இருக்கிறது. சஞ்சீவினி மனதிடம் உள்ளவர். சீக்கிரத்தில் இந்தத் துன்பத்திலிருந்து வெளியேறி நடைமுறை வாழ்வுக்குப் பழகிக் கொள்வார் என்பது மேரிக்குப் புரிந்தாலும் உடனடியாக துளி இல்லத்துக்குச் செல்லக்கூடிய மனநிலை அவருக்கு இருக்கிறதோ இல்லையோ என்ற சந்தேகத்துடன் தான் ஹோட்டலில் ஏற்பாடு செய்திருந்த உணவை அதன் பணியாளர்களை வைத்தே குழந்தைகளுக்குப் பரிமாறுமாறு கூறினார் மேரி.

ஆனால் சஞ்சீவினி தானே பரிமாறுவதாகக் கூற இருவரும் துளி நிறுவனத்துக்குச் செல்ல வராண்டாவிலிருந்து காலடி எடுத்துவைத்த போது “கொஞ்சம் இருங்கம்மா… நானும் உங்களோட வர்றேன்” என்றபடி வெளியே வந்தாள் இஷானி.

அவளைத் தலையிலிருந்து கால் வரை பார்த்தனர் இருவரும். முகூர்த்தப்புடவையிலிருந்து ஒரு சுடிதாருக்கு மாறியிருந்தவளின் நெற்றி வகிட்டில் மின்னிய குங்குமமும், கழுத்தில் ஜொலித்த மஞ்சள் சரடும், கைகளில் சிவந்திருந்த மருதாணியும் மங்கலச்சின்னமாக மின்ன அவளைக் காணும் போது சஞ்சீவினிக்கு தொண்டையை அடைத்தது.

இருந்தாலும் சமாளித்தபடியே “நீ தாத்தா பாட்டி கூட இரேன்டா இஷி” என்றவரிடம் புன்னகைத்தவள்

“தாத்தாவும் பாட்டியும் சாப்பிட்டாச்சும்மா… மாத்திரை போட்டுட்டு தூங்குறாங்க… நான் இங்கே தனியா இருந்து என்ன பண்ணப் போறேன்மா? நானும் வந்து உங்களோட சேர்ந்து பரிமாறுறேன்” என்றவளின் முகம் சிரிப்பைத் தொலைத்திருந்ததை கண்டுகொண்டனர் சஞ்சீவினியும் மேரியும்.

இப்படியே இவளை விட்டுவிட்டுச் சென்றால் இன்றைய சம்பவங்களின் நினைவில் மீண்டும் இஷானி பரிதவிக்கக் கூடும் என்பதால் அவளையும் கையோடு அழைத்துச் சென்றனர்.

அங்கே அவர்கள் சென்று சிறிது நேரத்தில் சாப்பாடு வந்துவிட துளி இல்லத்தின் பணியாளர்களோடு சேர்ந்து இஷானியும் சஞ்சீவினியும் குழந்தைகளுக்குப் பரிமாறத் தொடங்கினர். வயிறு நீரம்பியதும் குழந்தைகளின் முகத்தில் தெரிந்த மலர்ச்சியில் மற்ற கவலைகள் அனைத்தும் அகல அவர்களின் மதியவுணவும் அன்று அக்குழந்தைகளுடனே முடிந்தது.

*********

மிகவும் அசவுகரியமாக உணர்ந்தாள் அஸ்மிதா. ஏன் என்று யோசித்தவளுக்கு அவள் அணிந்திருந்த பட்டுப்புடவை உடலை உறுத்தியது. கூடவே கழுத்திலிருந்த மஞ்சள் கயிறும் சேர்ந்து கொண்டு அவளை வேறு ஒரு ஜீவனாக மாற்ற முயன்றிருந்தது. பழக்கமற்ற உடை, பழக்கமற்ற அணிகலனுடன் அவள் தற்போது இருந்த வீடும் அவளுக்குப் பழக்கமற்று இருந்ததால் எழுந்த அசவுகரியம் தான் அது.

இங்கு வந்து மூன்றுமணி நேரங்கள் ஆகிவிட்டது. அப்போதிலிருந்து அவள் இதே சோபாவில் தான் அமர்ந்திருக்கிறாள். அங்கே இருந்து பார்த்தால் நெடிய மரங்களும், மலர் சொரியும் செடிகளும், குத்துப்புதர்களுமாய் அழகாய் மிளிரும் தோட்டம் பச்சை பட்டாடையை அவளிடம் காட்டி பெருமைப்பட்டுக் கொண்டது. அதன் பசுமை நிறம் அஸ்மிதாவுக்குச் சஞ்சீவினிபவனத்தின் பெரிய தோட்டத்தை நினைவூட்டியது.

கண்கள் தோட்டத்தில் நிலைத்திருக்க செவிகளோ வீட்டில் நடந்து கொண்டிருந்த வாக்குவாதத்தைக் கேட்டுக் கொண்டிருந்தது. வீட்டுக்குள் வரும் போதே ஆரம்பித்தது. இன்னும் தொடர அஸ்மிதா எனக்கென்ன வந்தது என்பது போல அப்போது இங்கே வந்து அமர்ந்தவள் தான்.

உள்ளே ஜெயதேவ் அவனது அப்பா விஸ்வநாதனைச் சமாதானம் செய்ய போராடுவது கூட அவள் செவிக்கு இன்பமாகவே இருந்தது. அவனது அன்னையும் தாத்தாவும் எவ்வளவோ சொல்லியும் விஸ்வநாதனின் கோபம் தணிவதாக தெரியவில்லை.

ஜெயதேவுடன் வீட்டிற்குள் காலடி எடுத்து வைத்த போதே விஸ்வநாதனின் ஆங்கார ரூபம் தான் அவர்கள் இருவரையும் வரவேற்றது..

“என்ன காரியம் பண்ணிருக்க தேவ்?” என்று ஆரம்பித்தவரிடம் அவன் பொறுமையாகப் பேசியிருந்தால் அவர் கொஞ்சம் அமைதியடைந்திருப்பார் என்பது அஸ்மிதாவின் எண்ணம். ஆனால் அவனோ எடுத்ததும் கேலியாகப் பேசவும் விஸ்வநாதனுக்கு வந்த கோபத்துக்கு அளவே இல்லை.

போயும் போயும் ஒரு நிறுமப்பங்குக்காக நீ இப்படி ஒரு காரியத்தை செய்வாயா என்று ஆரம்பித்தவரது விழிகள் அஸ்மிதாவைக் கண்டதும் வலியில் சுருங்கியது. இளம் வயதில் தன்னை அள்ளி அணைத்துக் கொஞ்சிய அவரையும் அவரது மனைவியையும் நினைவுப்படுத்திப் பார்த்தவள் அவர்கள் இருவரையும் தர்மச்சங்கடப்படுத்த விரும்பாததோடு அவன் குடும்பவிவகாரம் தனக்கு எதற்கு என்பது போல அங்கிருந்து வெளியேறி சோபாவில் அமர்ந்து தோட்டத்தை வெறிக்க ஆரம்பித்தாள்.  

“நீ என்ன சொன்னாலும் என்னால நீ பண்ணுன தப்பை ஏத்துக்க முடியாது தேவ்”

“டாட்! சும்மா தப்பு பண்ணுனேன் தப்பு பண்ணுனேனு சொல்லாதிங்க.. நான் என்ன அந்தப் பொண்ணை அம்போனு விட்டுட்டேனா? நான் அவளை மேரேஜ் பண்ணிருக்கேன் டாட்.. ஷீ இஸ் மை ஒய்ப் நவ்… நீங்களும் அந்த சந்திரசேகர் மாதிரி ஷேருக்காக ஏமாத்திட்டேனு சொல்லாதிங்க… ஐ அம் நாட் அ சீட்டர்… சப்போஸ் உங்களோட பாயிண்ட் ஆஃப் வியூல நான் சீட்டர்னு தோணுச்சுனா ஐ டோன் கேர் அபவுட் தட் டாட்… பிகாஸ் என்னோட மனுவுக்கு நான் பிராமிஸ் பண்ணிக் குடுத்திருக்கேன், அவளோட உழைப்புக்கான பலனை என்னைக்காச்சும் ஒரு நாள் நான் வெளியே கொண்டு வருவேனு…

அதுக்காக நான் போட்ட டிராமா தான் இது… பட் அந்தப்பொண்ணு என்னை லவ் பண்ணுவானு நான் யோசிக்கல டாட்… அவ என் கிட்ட பிரபோஸ் பண்ணுனப்போ என்ன பண்ணனும்னு புரியாம முழிச்சேன்… ஆனா ஷேர் சம்பந்தப்பட்ட பேப்பர்ஸ்ல படிக்காம கையெழுத்து போட்டப்போ தான் அவ லவ்வோட தீவிரம் புரிஞ்சுது… தாத்தா கிட்ட ஷேர் என் கைக்கு வந்ததை சொன்னப்போ தான் வினாயகமூர்த்தி இனிமே அஸ்மிதாவை உயிரோட விடமாட்டாருனு தாத்தா சொன்னாரு…. எனக்காக அவ செஞ்ச தியாகம் பெருசு டாட்… அதுக்குக் கைமாறா அவளை வினாயகமூர்த்தி கிட்ட இருந்து பாதுகாக்க வேண்டியது என்னோட கடமை… அதான் இந்தக் கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டேன்… அம்மா வேற பொண்ணு பார்க்கேனு சொன்னப்போ கூட அஸ்மியை மனசுல வச்சு தான் நான் வேண்டானு சொன்னேன் டாட்… பிலீவ் மீ! நான் பழிவாங்க கல்யாணம் பண்ணல”

அவனது வார்த்தைகள் அட்சரம் பிசகாமல் அஸ்மிதாவின் செவியில் விழுந்தது. ஆனாலும் அவளால் அவனது பக்க நியாயத்தை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவனை முதல் முறை சந்தித்ததிலிருந்து அவன் போட்ட அப்பாவி வேடம், ஆசிரமம் பற்றி சொன்ன கதை, ரிஷியின் ஃப்ளாட்டை அவனுடையது என்று சொல்லி ஏமாற்றியது, பாலாவிடம் தன்னை அடித்துக் காயப்படுத்தும் படி சொல்லி தனது காதலை வைத்து பங்குகளை அடைந்தது, இது எல்லாவற்றுக்கும் மேலாகத் தான் திருமணமானவன் என்பதை மறைத்தது என அனைத்தும் ஒவ்வொன்றாய் நினைவடுக்கிலிருந்து கிளம்ப ஆரம்பிக்கவும் அவளுக்குள் கோபாக்கினி கொழுந்துவிட்டு எரிய ஆரம்பித்தது.

அவனது முதல் மனைவி என்ன ஆனாள் என்ற கேள்வியுடன் இப்படிப்பட்டவனை சும்மா விட்டால் அது தன் இதயத்தில் எழுந்த தூய காதலுக்கு இழுக்கு என்று எண்ணிக்கொண்டவள் இதற்காக அவனுக்குப் பாடம் புகட்டியே ஆக வேண்டும் என்ற முடிவுடன் தான் திருமதி ஜெயதேவ்வாக இந்த இல்லத்துக்குள் பிரவேசித்திருந்தாள். உள்ளே ஒருவழியாக விஸ்வநாதனின் குரல் தணிந்ததை போல இருந்தது. அவள் பின்னே காலடிகளின் சத்தம் கேட்க திரும்பி பார்த்தவள் விஸ்வநாதனைக் கண்டதும் மரியாதை நிமித்தம் எழ அவரோ

“உன் கிட்ட எப்பிடி மன்னிப்பு கேக்கணும்னு தெரியலம்மா… நான் பார்த்து வளர்ந்த பொண்ணு நீ! சஞ்சீவினியும் சந்துருவும் பிரியாம இருந்திருந்தா நம்ம ரெண்டு குடும்பமும் இப்போ இந்த நிலமையில இருந்திருக்காதுடா… முடிஞ்சா என்னை மன்னிச்சிடுடா” என்று கரம் கூப்ப அஸ்மிதா வேகமாக அவரது கூப்பியக் கரங்களைத் தணித்தவள்

“வேண்டாம் அங்கிள்! இதுல உங்க தப்பு எதுவுமில்ல… உங்களை மன்னிக்கிற அளவுக்கு நான் பெரியவ இல்ல.. ப்ளீஸ்! இப்பிடிலாம் மன்னிப்பு கேக்காதிங்க” என்று அமைதியுடன் கூறிவிட்டு அவர் பின்னே நின்றிருந்த சாந்தினியை நோக்க அவரது முகமும் சங்கடத்துடன் தான் இருந்தது. அதே நேரம் சங்கரராமன் பேரனுக்கு ஆதரவாக இப்போதும் பேச அஸ்மிதாவுக்கு அவரைப் பார்த்ததும் தான் எந்தத் தவறு செய்தாலும் தனக்கு ஆதரவாகப் பேசும் ராஜகோபாலனின் நினைவு வந்தது. அவர் மீதோ தேவ்வின் பெற்றோர் மீதோ இப்போது கூட அஸ்மிதாவுக்குத் துளியும் வருத்தமில்லை.

அவளது ஒட்டுமொத்த வருத்தமும் கோபமும் ஜெயதேவ் என்ற ஒருவன் மீதே! ஆனால் அதை வாய்விட்டு அவர்களிடம் கூறி அவர்கள் மனதை வருந்தச் செய்யுமளவுக்கு அவள் ஒன்றும் பக்குவமற்றவள் அல்லவே! எனவே அவர்களிடம் முயன்று புன்னகைத்தாள் அவள்.  தவறியும் ஜெயதேவ் என்பவனின் முகத்தில் விழிக்க விரும்பவில்லை அவள்.

ஆனால் எவ்வளவு நேரம் தான் ஹாலிலேயே அசையாது மரம் போலிருக்க முடியும் அவளால்! ஹாலின் சோபாவே கதியென்று இன்னும் புடவை கூட மாற்றாது இருந்தவளை சாந்தினி வாஞ்சையுடன் அழைத்தவர் அவளைப் பூஜையறைக்கு அழைத்துச் சென்றார்.

அங்கே விளக்கேற்றுமாறு அன்புக்கட்டளை இட்டவரின் பேச்சை அவளால் மீற முடியாது போக அஸ்மிதா விளக்கேற்றி இரு நொடி ஏதோ முணுமுணுத்தவள் சாந்தினியின் முகம் தெளிவுற்றதைப் பார்த்துவிட்டு அவருடன் மீண்டும் ஹாலை அடைந்தாள். அதற்குள் வீட்டுப்பணியாள் ஒருவர் மூலமாக அவளது உடைகள் அனைத்தையும் சஞ்சீவினி பவனத்திலிருந்து வாங்கி வருமாறு சொல்லியிருந்தார் சாந்தினி. கூடவே இனி அஸ்மிதாவை நினைத்து அவர்கள் யாரும் கவலைப்பட தேவையில்லை என்றும் தான் அவளைத் தனது மகளைப் போல பார்த்துக்கொள்வதாகவும் சொல்லியனுப்பி இருந்தார் அவர்.

அவளது உடைமைகள் வந்ததும் அஸ்மிதாவை ஜெயதேவின் அறைக்கு அழைத்துச் சென்றார் சாந்தினி. அங்கே வார்ட்ரோபில் அவளது உடைகளை அடுக்க உதவியவர்

“எல்லாம் நல்ல படியா நடந்திருந்தா இந்நேரம் நம்ம குடும்பம் ரெண்டும் இப்பிடி ஒருத்தரை ஒருத்தர் முறைச்சிட்டிருக்க வேண்டியிருக்குமா?” என்று அங்கலாய்த்தவரிடம் தயங்கித் தயங்கி தான் அஸ்மிதா அந்தக் கேள்வியைக் கேட்டாள்.

“ஆன்ட்டி! அது…. வந்து… உங்களோட மருமகள்… ஐ மீன் ஜெ.. தேவ்வோட முதல் மனைவி என்ன ஆனாங்க?”

கேட்டு முடிப்பதற்குள் ஆயிரத்தெட்டு திக்கல் திணறல்கள்.

அவள் கேட்டதும் சாந்தினியின் முகத்தில் ஒரு வலி பரவி ஆக்கிரமித்தது. அதைச் சமாளித்தவாறு

“மானசா அது தான் என் மருமகள், அவ இறந்து நாலு வருசம் ஆச்சு… அவளுக்கும் தேவ்வுக்கும் மேரேஜ் ஆகி எட்டுமணி நேரத்துல அவ இறந்து போன தகவல் மட்டும் தான் எங்களுக்குக் கிடைச்சது” என்றவரின் கண்ணில் கண்ணீர் துளிர்த்தது. அதை அஸ்மிதா அறியாதவாறு துடைத்துக் கொண்டவர் கீழே சென்றுவிட அஸ்மிதாவுக்கு வெறும் எட்டுமணி நேரத்தில் புதுமனைவியைத் தொலைத்துவிட்டானா என்று ஜெயதேவ்வின் மீது கரிசனம் தோன்றியது.

ஆனால் தன்னிடம் அவன் அவிழ்த்துவிட்ட பொய் மூட்டைகள் நினைவில் வரவும் அஸ்மிதாவின் முகம் இறுக ஆரம்பித்தது. கோயிலில் பெரியவர்கள், வீட்டிலோ புகுந்த வீட்டார் என மற்றவர் முன்னிலையில் தனது கோபத்தை அவனிடம் காட்ட விரும்பாதவள் அவனைத் தனிமையில் சந்திக்கும் தருணத்துக்காகக் காத்திருக்க ஆரம்பித்தாள்.

தண்மதி ஒளிர்வாள்🌛🌛🌛