🌞 மதி 39🌛

15 முதல் 45 வயதான பெண்களுள் மூன்றில் ஒரு பங்கினர் ஏதாவது ஒரு வகையான வன்முறைக்கு ஆளாகின்றனர். ஒட்டுமொத்தப் பெண்களில் 35% பேர் உடல் ரீதியான மற்றும் பாலியல் ரீதியான வன்முறைகளால் பாதிக்கப்படுகின்றனர். திருமணமான பெண்களில் 46% பேர் வேறு வகையான வன்முறைகளால் பாதிக்கப்பட்டு பாதுகாப்பற்ற சூழலில் வாழ்வைத் தொடருகின்றனர்விகாஸ்பீடியா (பெண்கள் பாதுகாப்புச் சட்டம் பகுதி)

சந்திரசேகரால் ருத்ராவும் தேவ்விற்கு உடந்தை என்ற செய்தியை ஜீரணிக்க முடியவில்லை. கண்ணில் தீப்பொறி பறக்க அவனருகில் வந்தவர் அவனை எதுவும் கேட்காமல் ஏறிட ருத்ரா தலை நிமிர்ந்து தான் ஒன்றும் அவ்வளவு பெரிய தவறு செய்யவில்லை என்பது போல நின்று கொண்டான்.

மந்தாகினியும் வினாயகமூர்த்தியும் அவனது செய்கையால் வாய் திறக்க இயலாது அமைதியாய் நின்றிருக்க, சஞ்சீவினிக்கு அவன் தேவ்வுடன் சேர்ந்து பங்குமாற்றத்துக்கு உதவியதோடு நின்றிருக்கலாமே! ஏன் இப்படிப்பட்ட ஒருவன் அஸ்மிதாவின் கணவன் ஆகும் வரை கையைக் கட்டிக்கொண்டு வேடிக்கை பார்த்தான் என்ற ஆதங்கம். அதே ஆதங்கம் இஷானிக்குள்ளும் எழுந்தது.

இவனுக்கு ஜெய்/தேவ் பற்றி முன்னரே தெரிந்திருந்தால் ஏன் அஸ்மிதாவிடம் அவனைப் பற்றி கூறியிருக்க கூடாது என்று கோபமுற்றவள் அவனது முகத்தைப் பார்க்கும் விருப்பமற்று நின்றிருந்தாள். அவளது சகோதரியின் வாழ்க்கை இப்போது கேள்விக்குறியானதில் ருத்ராவின் பங்கு அதிகம் என்ற எண்ணம் கழுத்தில் தாலியேறிய சில நிமிடங்களிலேயே அவன் மீது அளவற்ற வெறுப்பை ஏற்படுத்தியது.

ஆனால் ருத்ராவும் சரி, தேவ்வும் சரி இதெல்லாம் நடக்குமென்று முன்னரே யோசித்திருந்ததால் இங்கிருக்கும் அனைவரின் வெறுப்பையும் தைரியமாகவே ஏற்றுக்கொண்டனர். ருத்ரா தனது தரப்பை விளக்க வாயெடுத்தவன் அங்கே சிலையாய் நின்றிருந்த அஸ்மிதாவை நோக்கியபடி

“எனக்கு ஜெயதேவ் பத்தி தெரிஞ்சும் நான் அவனுக்கு ஹெல்ப் பண்ணுனதுக்கு ரெண்டு காரணம் இருக்கு… ஒன்னு ஜெயதேவ் அப்பாவுக்கு அநியாயம் பண்ணுனது என் கூடப் பிறந்த அண்ணன்… அவன் அஸ்மியை மேரேஜ் பண்ணுற டிசிசன் எடுத்ததுக்கு நான் எதுவும் சொல்லலை, ஏன்னா அவ அந்தளவுக்கு ஜெய்யை ஐ மீன் ஜெயதேவை லவ் பண்ணுறா… சப்போஸ் ஷேர் டிரான்ஸ்பர் முடிஞ்சதும் அவன் கையை உதறிட்டுப் போயிருந்தான்னா அவன் சுயநலவாதியா ஆகிருப்பான்… அவன் போயிட்டானேனு அஸ்மிதா மனசொடஞ்சு போயிருப்பா… அப்பிடி ஒரு நிலமை வந்துட கூடாதேனு தான் நான் இந்த மேரேஜ் விசயத்துல ஒன்னுமே சொல்லலை” என்று இறுக்கமான குரலில் கூறி முடித்தான்.

சந்திரசேகர் ருத்ராவை வெறுப்புடன் நோக்கியவர் “வேலிக்கு ஓணான் சாட்சி… அவன் வாழ்க்கைப்பிச்சை போட்டா தான் என் பொண்ணு வாழ்வானு நீ எப்பிடி நினைக்கலாம் ருத்ரா? அஸ்மி தானே அவனைக் காதலிச்சா., அவன் இல்லையே! நீ சொல்லுற மாதிரி அவன் ஷேருக்காக கல்யாணம் பண்ணல… என்னைப் பழி வாங்குறதுக்காக என் பொண்ணை மேரேஜ் பண்ணிருக்கான் இந்த ராஸ்கல்… காதல் இல்லாம கடமைக்குனு இவன் பண்ணிக்கிட்ட கல்யாணத்தோட ஆயுள் ரொம்ப கம்மி” என்று வார்த்தைகளைக் கடித்துத் துப்ப

“இஸிண்ட்? நீங்க கூட தான் மந்தாக்காவை காதலிக்கவே இல்ல… நீங்களும் கடமைக்கு தான் அவளைக் கல்யாணம் பண்ணிக்கிட்டிங்க… நீங்க ரெண்டு பேரும் பிரிஞ்சா போயிட்டிங்க? உங்களுக்கு உங்களைக் காதலிக்கிற மனைவி கிடைச்ச நிம்மதி, அதே மாதிரி மந்தாக்காவுக்கு அவ காதலிச்சவரை மேரேஜ் பண்ணிக்கிட்ட சந்தோசம்… இது ரெண்டும் சேர்ந்து தான் உங்க வாழ்க்கையை இன்னும் தாங்கிட்டிருக்கு மாமா..

என்னைப் பொறுத்தவரைக்கும் தேவ் கடமைக்குக் கல்யாணம் பண்ணுனாலும் இல்ல காதலிச்சு கல்யாணம் பண்ணுனாலும் அதோட ரிசல்ட் ஒன்னே ஒன்னு தான்! அஸ்மி காதலிச்சவன் அவளுக்கு ஹஸ்பெண்டா ஆகிட்டான்… அதே போல எனக்கு தான் ஷேர்ஸ் கிடைச்சிருச்சே, இனிமே நீ எனக்குத் தேவையில்லனு அவன் அஸ்மியை நட்டாத்துல விட்டுட்டு போயிருந்தா நீங்க சொல்லுறபடி பழிவாங்குறானு வச்சுக்கலாம் மாமா… ஆனா அவன் கடவுள் சாட்சியா அவளைத் தன்னோட மனைவியா ஏத்துக்கிட்டானே! இதுக்கு அப்புறமும் அவன் பழிவாங்குறான்னு சொன்னிங்கனா பிரச்சனை உங்க கிட்ட தான்”

ருத்ரா இவ்வாறு தீர்மானமாய் பேசியது அனைவருக்கும் திகைப்பைக் கொடுத்தாலும் அஸ்மிதாவுக்கு தான் காதலித்தது ஜெய் எனும் மாயையை, ஆனால் திருமணம் செய்திருப்பதோ தேவ் என்ற மூன்றாவது மனிதனை என்பது புத்தியில் உறைத்தது. மனம் முழுவதும் நிறைந்திருந்த காதல் மெதுமெதுவாய் வடியத் துவங்கி, அந்த வெற்றிடத்தில் கோபம் எனும் உணர்வு நிரம்பியது.

தேவ் என்பவன் எதற்காக வேண்டுமானாலும் அவளை மணமுடித்திருக்கலாம். ஆனால் அவளுக்குத் தேவை இவனது நன்றிக்கடன் அல்ல என்பதை அவனது புத்தியில் உறைக்குமாறு சொல்லவேண்டும் என்ற ஆவேசம் அவளது ஒவ்வொரு அணுவுக்குள்ளும் துடித்தெழுந்தது. இவ்வளவு நேரம் இருந்த அதிர்ச்சிப்பாவம் மாறி அவளது இயல்பான குணமான கோபம் முகத்தை ஆக்கிரமித்திருந்தது.

ஜெயதேவ் மற்ற யாருக்கும் பதிலளிக்க முயலவில்லை. அஸ்மிதாவிடம் வந்து நின்றவன்

“இங்க என்னைத் திட்டுறதுக்கு உரிமையுள்ள ஒரே ஆள் நீ மட்டும் தான்.. உனக்கு தாலி கட்டுனதால வந்த உரிமையை வச்சு சொல்லல.. உன் கிட்ட வேற ஒருத்தனா நடிச்சு, நல்லா இருந்த உன் மனசைக் குழப்பி.. ப்ச்… பட் பிலீவ் மீ! ஹானஸ்ட்லி உன்னோட எமோசன்ஸோட விளையாடணும்னு நான் நினைச்சதே இல்ல… நீ என்னை லவ் பண்ணுறதா சொன்னப்போ எனக்கு அது ஷாக் தான் அஸ்மி! உன் கிட்ட இருந்து ஷேரை வாங்கணும்கிறது தான் என்னோட நோக்கம்… ஆனா அதுக்காக உன்னைக் காதலிச்சு ஏமாத்த விரும்பல… உன் கிட்ட இருந்து நான் விலகியே இருந்ததுக்கும், இது வரைக்கும் உன்னைக் காதலிக்கிறேனு சொல்லாததுக்கும் அது தான் காரணம்… ஆனா எனக்காக நீ படிச்சுக் கூட பார்க்காம அந்த ஸ்டாம்ப் பேப்பர்ஸ்ல சைன் பண்ணுன நிமிசம் எனக்கு அதிர்ச்சியா இருந்துச்சு..

எந்தளவுக்கு என் மேல நம்பிக்கை, காதல் இருந்திருந்தா நீ படிச்சுக்கூட பார்க்காம அதுல சைன் பண்ணிருப்பனு யோசிச்சப்போ தான் என் தாத்தா சொன்ன விசயம் நினைவுக்கு வந்துச்சு… எப்பிடி பொன்முட்டை இடுற வாத்துக்கு அந்தப் பொன் முட்டை இல்லைனா அதோட உயிருக்கு உத்திரவாதம் இல்லையோ அதே போல தான் உன்னோட ஷேர்ஸ் இல்லைனா உன் உயிருக்கும் உத்திரவாதம் இல்லைனு அடிக்கடி என் தாத்தா சொல்லுவாரு… எனக்காக யோசிக்காம கையெழுத்து போட்ட உன்னைப் பாதுக்காக்கிறதுக்கு நானும் யோசிக்காம உன் கழுத்துல மூனு முடிச்சு போட்டுட்டேன்… இதுக்கு மேல எனக்கு நீ பனிஷ்மெண்ட் குடுக்கணும்னு நினைச்சா கண்டிப்பா குடு… ஆனா தேவ்வோட மனைவியா குடு” என்று நீண்டதொரு விளக்கத்தைக் கூறி முடித்தாலும் அஸ்மிதாவின் உள்ளத்தில் எரிந்த கோபாக்கினியை அணைக்கும் சக்தி அவனது விளக்கவுரைக்கு இல்லையே!

அஸ்மிதாவின் குடும்பத்தினர் அவளது பதிலுக்காகக் காத்திருக்க இஷானி “அஸ்மி! நீ இவரை நம்பாத! ஆல்ரெடி எமோசனலா கதை சொல்லி நம்மளை ஏமாத்துனது போதாதா? ப்ளீஸ் அஸ்மி! நீ அவசரப்பட்டு யோசிக்காத… இந்த தேவ் உனக்கு வேண்டாம் அஸ்மி… நம்ம வீட்டுக்குப் போயிடலாம்” என்று அவளது கரத்தைப் பற்றிக் கொள்ள ருத்ராவுக்கு இஷானியின் செய்கை சிறுபிள்ளைத்தனமாக மனதில் பட்டது.

அதை வாய் விட்டும் அவன் சொல்லிவிட இஷானி அதற்கு பதிலாக அவனை எடுத்தெறிந்து பேச சஞ்சீவினி பொறுக்க முடியாது “ரெண்டு பேரும் சும்மா இருக்கிங்களா? இன்னைக்கு நடந்தது ஒன்னும் பொம்மை கல்யாணம் இல்ல… எவ்ளோ நியாயம் சொன்னாலும் நடந்த விசயம் தப்பு தான்… அஸ்மி என்ன முடிவு எடுக்கிறாளோ அது தான் ஃபைனல்” என்றவர் வேதனையுடன் மகளிடம் வந்தவர்

“அஸ்மி! எது நடந்தாலும் எல்லாத்தையும் மறந்துட்டு புருசன் வீட்டுக்குப் போனு சொல்லுற சராசரி அம்மா நான் கிடையாது… என்னோட அம்மா எனக்கு குடுத்த சுதந்திரத்தை விட உனக்கு நான் அதிகமாவே சுதந்திரம் குடுத்து வளத்திருக்கேன்… நீயும் உனக்குப் பிடிச்சதை படிச்ச, பிடிச்ச மாதிரி ட்ரஸ் பண்ணுன, எதுலயும் நான் தலையிட்டது இல்ல… அதே போல ஜெய்யை பிடிச்சிருக்குனு சொன்னே… அதுலயும் நான் தலையிடல… இப்போ இருக்கிற நிலமைய யோசிச்சு நீ என்ன முடிவு எடுத்தாலும் அதுலயும் நான் தலையிட மாட்டேன்… ஆனா என் பொண்ணு கல்யாணம் இப்பிடி ஒரு நாடகமா போகும்னு நான் யோசிக்கவே இல்லடி” என்று முடித்தவரின் கண்கள் கலங்கியிருக்க குரலும் அழுகைக்குத் தாவியிருந்தது.

அலமேலுவுக்கு எது நடந்தாலும் கலங்காத மகள் இன்று பேத்தியின் நிலையை எண்ணி கண்ணீர் வடிப்பது மனதை வருத்த அவர் முயன்றும் அவரால் அழுகையைக் கட்டுப்படுத்த முடியவில்லை.

அஸ்மிதா அனைவரையும் ஒருமுறை விழியுயர்த்திப் பார்த்தவள் உறுதியான குரலில் “இதுல யோசிக்கிறதுக்கு எதுவும் இல்லம்மா… இந்த வாழ்க்கை நான் ஆசைப்பட்டு தேர்ந்தெடுத்தது… இதுல உள்ள கஷ்டநஷ்டங்கள், சுகதுக்கங்களை நான் தானே ஃபேஸ் பண்ணனும்! அதுல எனக்கு எந்த சிரமமும் இல்லம்மா” என்றவள் ஜெயதேவிடம் திரும்பி

“நான் காதலிச்சது ஜெய்யை தான்… ஆனா கல்யாணம் பண்ணிக்கிட்ட நீ எனக்கு எந்த விதத்துலயும் சம்பந்தமில்லாதவன்… கடவுள் சன்னிதானத்துல என் கழுத்துல ஏறுன மாங்கல்யத்துக்கு நான் சாகுற வரைக்கும் மரியாதை குடுப்பேன்… உனக்கு வீடுனு ஒன்னு இருக்கும்னு நினைக்கிறேன்.. கிளம்பலாம்” என்று நறுக்கு தெறித்தாற்போல பேசி அங்கிருந்த அனைவரையும் அதிரவைத்தாள், அவளுக்குத் தாலி கட்டியவனையும் சேர்த்து தான்.

சந்திரசேகர் மகளுக்குப் பைத்தியமா என்ற ரீதியில் பார்த்து வைக்க மந்தாகினிக்குமே அஸ்மிதாவின் நிலையை எண்ணி தவிப்பு தான். அவருக்கு தேவ்விற்கும் சந்திரசேகருக்குமான மோதல்கள் தெரிந்த விசயம் என்பதால் இனி அவன் அஸ்மிதாவின் வாழ்வில் ஏதேனும் ஊறுவிழைவிப்பானோ என்ற அச்சம் ஒரு சிற்றன்னையாக இல்லாமல் சகோதரியின் மகளின் மீது அக்கறை உள்ள தங்கையாக அவரது உள்ளத்தில் எழுந்தது. அதே நேரம் இரண்டாவது மனைவி என்ற வார்த்தை எவ்வளவு கசப்பானது என்பதை அவரும் அனுபவப்பூர்வமாக உணர்ந்துள்ளாரே!

ஆனால் அலமேலுவிலிருந்து ருத்ரா வரைக்கும் அஸ்மிதாவின் முடிவே முதிர்ச்சியானது என்ற முடிவுக்கு வந்திருந்தனர். நடந்த விசயங்களைக் கேட்டு அழுது ஆர்ப்பாட்டம் செய்யாமல் அவள் புரிந்துகொண்டதே அவர்களுக்கு அந்த வேதனையிலும் உண்டான சிறு நிம்மதி. ஆனால் ருத்ராவின் மனைவியோ சந்திரசேகரின் குடும்பத்தினரைப் போலவே சிந்தித்தாள்.

ஜெயதேவ் என்பவனுடன் அஸ்மிதா சென்றுவிட்டால் அவன் அவளை ஏதேனும் செய்துவிடுவானோ என்று எண்ணி அஞ்சியவள் கண்கள் கலங்க சஞ்சீவினியிடம் அஸ்மிதாவைத் தடுக்குமாறு இறைஞ்ச அவரோ கன்னத்தில் வழிந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டவர் அவளது கரங்களைப் பற்றி அழுத்தினார்.

அஸ்மிதா தனது முடிவைத் தெரிவித்துவிட ஜெயதேவ் அவளது கரத்தைப் பற்றியவன் “லெட்ஸ் கோ” என்று மட்டும் உரைத்துவிட்டுப் பார்வையால் அங்கிருந்தவர்களிடமிருந்து விடைப்பெற்றுக் கொண்டான். அவர்கள் சந்திரசேகரைக் கடக்கும் போது அவரது முகத்தில் ஒரு கணமேனும் உண்டான வலி தேவ்வின் இடுங்கிய கண்களுக்குத் தப்பவில்லை.

இருவரும் சன்னதியைத் தாண்டி கோயிலுக்கு வெளியே வரவும் கருப்பு நிற பென்ஸ் கார் ஒன்று அவர்கள் அருகில் வந்து நிற்கவும் சரியாக இருந்தது.

அதிலிருந்து இறங்கிய மூன்று ஆடவர்களில் ஒருவனைக் கண்டதும் அஸ்மிதா திடுக்கிட்டாள். ஏனெனில் அவன் தான் அன்றைக்கு பழைய தொழிற்சாலையில் ஜெய்யை அடித்து உதைத்துக் கட்டிப் போட்டிருந்தவன். அவன் ஜெயதேவை அஸ்மிதாவுடன் கண்டதும் முகம் விகசிக்க

“இனியாச்சும் உங்க லைஃப்ல நல்லது நடக்கட்டும் சார்… பாஸ் நேத்து நைட் எனக்குத் தகவல் சொன்னாரு.. அதான் அடிச்சுப்பிடிச்சு ட்ரெயின்ல அவசரமா வந்தேன்… இவரு ஏர்ப்போர்ட்டுக்குப் போயிட்டாரு” என்று ரிஷியைக் கை காட்ட

அவனோ “நான் என்ன பண்ணுறது? ஜெய்யை ரிசீவ் பண்ண நான் ஏர்போர்ட் போகவேண்டிய கட்டாயம்… திடீர்னு ஜி.எம் சார் கால் பண்ணிச் சொன்னதும் அங்கே போயிட்டேன்” என்று அவனருகில் நின்ற இன்னொரு வாலிபனைக் காட்டியதும் அஸ்மிதாவுக்குத் தலையைச் சுற்றிக் கொண்டு வந்தது.

இவன் தானா ஜி.எம் ஜெய்? இவனது கதாபாத்திரத்தைத் தான் தேவ் ஏற்று நடித்தானா? இந்த பாலா என்ற தடி தாண்டவராயனும் இதில் இவனுக்குக் கூட்டா? என்றெல்லாம் யோசிக்கும் போதே அன்றைக்கு ஜெய்யாக இருந்தவன் இதே பாலா கையால் பட்ட அடிக்களுக்காகத் தான் அழுது கலங்கியதை எண்ணி தன்னைத் தானே திட்டித் தீர்க்க ஆரம்பித்தாள் மனதிற்குள்.

“இவன் ஒவ்வொரு விசயத்தையும் தெளிவா பிளான் பண்ணி காய் நகர்த்திருக்கான்… வெறும் ஷேர்சுக்காக அடிவாங்கி, அப்பாவினு என்னை நம்ப வச்சு…ப்ச்… நினைச்சாலே ஆத்திரமா வருது… இதுக்குலாம் நீ அனுபவிப்படா” என்று மனதிற்குள்ளே வெகுண்டவள் எதுவும் பேசாமல் முகத்தைக் கற்சிலை போல வைத்துக் கொள்ள அதை கண்டும் காணாதவன் போல காரில் சென்று அவளை அமரச் சொன்னான் ஜெயதேவ். மற்ற மூவரும் பின்னிருக்கையில் அமர அஸ்மிதா அவனுடன் முன்னிருக்கையில் அமர்ந்ததும் கார் அவனது இல்லத்தை நோக்கி விரைந்தது.

அதே நேரம் முருகன் சன்னதியில் மந்தாகினி வேதனையுடன் தம்பியைப் பார்த்தவள் சஞ்சீவினியின் நிலமையை உணர்ந்தவராய் ருத்ராவின் திடீர் திருமணத்தைப் பற்றியோ, தங்களை அழைக்காததை பற்றியோ குறை கூற இது நேரமில்லை என்பதால் சந்திரசேகரிடம் ருத்ராவைத் தங்கள் இல்லத்துக்கு அழைத்துச் செல்லலாம் என்று கூற அவர் மகளின் வாழ்க்கை வீணானதே என்ற துக்கத்தில் இருந்ததால் ஏதும் கூறும் நிலையில்லை.

ஆனால் இதற்கு எதிர்ப்பு ருத்ராவின் மனைவியான இஷானியிடம் இருந்து வந்தது.

“தாராளமா உங்க தம்பியைக் கூட்டிட்டுப் போங்க… ஆனா நான் எங்கேயும் வர மாட்டேன்”

அவளது இந்த முடிவில் அனைவரும் திடுக்கிட வினாயகமூர்த்தி மனதிற்குள் “க்கும்! சஞ்சீவினி வளர்ப்பு இப்பிடி பேசாம இருந்தா தான் ஆச்சரியம்! இந்தச் சின்னவன் கேப்பார் பேச்சைக் கேட்டு அவன் தலையில அவனே மண்ணள்ளிப் போட்டுக்கிட்டான்… கூடவே சேர்த்து ஆர்.எஸ்.கெமிக்கல்ல எனக்கு இருந்த இத்தனை வருசக் கட்டுப்பாட்டையும் உடைச்சுத் தள்ளிட்டான்… இனிமே தேவ்வை எப்பிடி தடுக்கிறதுனு யோசிக்கிறதிலயே நேரம் போயிடும்… எல்லாம் என் தலையெழுத்து” என்று ருத்ராவை வறுத்தெடுத்த ஆரம்பித்தார்.

இஷானி பேசியதோடு நில்லாமல் மாலையைக் கழற்றி வீசவும் மந்தாகினிக்கு இவ்வளவு நேரம் இருந்த பொறுமை அகன்றது.

“யாரைக் கேட்டு நீ மாலையை இப்பிடி கழட்டி வீசுன இஷானி?”

“மாலையோட விட்டேனேனு சந்தோசப்படுங்க… இன்னும் கொஞ்சநேரம் இங்கேயே இருந்து உங்க குடும்பத்தாளுங்களைப் பார்த்துட்டே இருந்தா அடுத்து என்னோட கை தாலியைக் கழட்டக் கூட யோசிக்காது”

ருத்ரா அவள் பேச்சைக் கேட்டு வருந்தியவன் இப்போது இருக்கும் நிலமையில் அவள் சஞ்சீவினிபவனத்தில் வசிப்பதே சிறந்தது என்று நினைத்துக் கொண்டான். ஆனால் என்றாவது ஒரு நாள் தான் ஏன் தேவ்விற்கு உதவி செய்தோம் என்பதை அவள் புரிந்துகொள்வாள் என்று நம்பியவன் இங்கே நடந்த கலவரத்தில் என்ன செய்வதென்று புரியாது விழித்தபடி நின்ற அர்ஜூனை தன்னுடன் அழைத்துக் கொண்டவன் ராஜகோபாலன், அலமேலு, சஞ்சீவினியிடம்

“நீங்க எல்லாரும் என் மேல கோவமா இருப்பிங்கனு எனக்குத் தெரியும்… ஆனா நான் ஏன் இப்பிடி செஞ்சேனு உங்களுக்கு ஒரு நாள் புரியும்… அது வரைக்கும் இஷி உங்க கூட இருக்கட்டும்” என்றவன் அவனது முகம் கூடப் பார்க்க விரும்பாது இருந்த இஷானியிடம்

“உனக்கு அஸ்மியோட லைஃப் ஸ்பாயிலான மாதிரி இப்போ தோணுதே அது ஒரு இல்யூசன்… சீக்கிரமே அது சரியாகும்… அது வரைக்கும் உன்னை டெம்பரரியா தான் அக்கா வீட்டுல இருக்கச் சொல்லிருக்கேன்… என்னைக்கு இருந்தாலும் நான் உன்னோட ஹஸ்பெண்ட்ங்கிறதை யாராலயும் மாத்த முடியாது இஷி” என்று அழுத்தமாக உரைத்தவன் அர்ஜூனை அழைத்துக் கொண்டு அங்கிருந்து வெளியேறிவிட்டான்.

அவன் செல்வதை வெறித்த இஷானி கடினக்குரலில் “மா! பாட்டி, தாத்தா வாங்க வீட்டுக்குப் போகலாம்… மேரிக்கா நீங்களும் வாங்க” என்று உரைத்துவிட்டு இன்னும் அங்கே நின்றிருந்த வினாயகமூர்த்தி, மந்தாகினி மற்றும் சந்திரசேகரை ஒரு நொடி உறுத்துப் பார்த்தவள் பின்னர் விறுவிறுவென்று அங்கிருந்து அகல, அவளது குடும்பத்தினரும் அவளைப் பின் தொடர்ந்தனர்.

சந்திரசேகர் மகளின் வாழ்வு இப்படி எதிரியின் கையிலுள்ளதே என்று வருந்துவதா? இல்லை தனது நிறுமத்தின் தலைமைப்பதவி தன் கையை விட்டுப் போக போவதை எண்ணி பயமுறுவதா என அறியாது வேதனையுடன் கருவறைக்குள் இருக்கும் முருகப்பெருமானை நோக்கினார்.

என்ன தான் மனிதர்கள் மோசமானவர்களாக இருந்தாலும் தனது இரத்தத்துக்கு ஒன்று என்றால் கலங்கிப் போய் நிற்பது இயற்கை தானே!

தண்மதி ஒளிர்வாள்🌛🌛🌛