🌞 மதி 38 🌛

தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி கடற்கரைப்பகுதிகளிலுள்ள கனிமவளம் நிறைந்த மணல் பெரும் தொழில் நிறுவனங்களால் சட்டத்துக்குப் புறம்பாக அள்ளப்பட்டு அதிலிருந்து கனிமங்கள் பிரித்தெடுக்கப்படுகின்றன. இதில் முக்கியமானவை இல்மனைட், ரூட்டைல், ஜிர்கான் மற்றும் கார்னெட். இவற்றில் இல்மனைட்டும் ரூட்டைலும் தான் டைட்டானியம் டை ஆக்சைட் தயாரிக்கத் தேவையான மூலப்பொருட்கள். இத்தொழில் நிறுவனங்களால் கடற்கரைகளின் இயற்கைச்சமனிலை கெடுவதோடு கடலரிப்பும் (SEA EROSION) ஏற்படுமென மீனவர்கள் வருந்துகின்றனர்.

அஸ்மிதா கொடுத்த அதிர்ச்சி வைத்தியத்துக்குப் பின்னர் இஷானி மிகவும் கவனமாக இன்முகத்துடன் நடந்து கொண்டாள் என்றே சொல்ல வேண்டும். மற்றவரின் பார்வைக்கு அது எப்படி தெரிந்ததோ ருத்ரா ஒரு முறை அவளைத் தனியாக அழைத்து அவள் ஒன்றும் பொய்யாக இத்திருமணத்தில் ஆர்வம் கேட்டத் தேவையில்லை என்று தண்மையாகவே அறிவுறுத்தினான். ஆனால் இஷானி தான் வழக்கம் போல அவனிடம் பொங்கிவிட்டாள்.

“வாட்? நான் மத்தவங்களுக்குக்காக நடிக்கிறேனா? எப்பிடி மாமா உங்களால என்னைப் பார்த்து இந்த வார்த்தையைச் சொல்ல முடிஞ்சுது? நான் ஒத்துக்கிறேன், எனக்கு இந்தக் கல்யாணத்துல தயக்கம் இருந்துச்சு தான்… ஆனா விருப்பமும் இருந்துச்சு… பட் என்னோட விருப்பத்தை தயக்கம் ஜெயிச்சதால கொஞ்சம் குழப்பமா சுத்துனேனே தவிர எனக்கு உங்களை ரொம்ப பிடிக்கும்…

அது லவ்வானு எனக்குத் தெரியாது… அதுக்கு நான் இப்போ வரைக்கும் நேம் வைக்கல.. உங்களை மாதிரி வார்த்தைக்கு வார்த்தை ஐ லவ் யூ சொன்னா தான் பிரியம் இருக்குனு அர்த்தமா? அப்பிடி பார்த்தா பாட்டியும் தாத்தாவும் என்ன ஐ லவ் யூ சொல்லி உருகவா செய்யுறாங்க? காதல்ங்கிறது வார்த்தையில வெளிப்படாது மாமா.. அதை உணரத் தான் செய்யணும்… உங்களால என் மனசுல உள்ள நேசத்தைப் புரிஞ்சுக்க முடியலைனா அதுக்கு நான் ஒன்னும் செய்ய முடியாது”

ஆதங்கமாக ஆரம்பித்து அமர்த்தலாக முடிந்த அவளது நீண்ட விளக்கவுரையில் ருத்ரா வாயடைத்துப் போனான். இதற்கு மேலும் நீ என்னிடம் விளக்கம் கேட்பாயா என்ற பாவனையுடன் முறைத்தவளிடம் கைக்கூப்பி மன்னிப்பு கேட்டவன் மனதில் வருங்காலம் பற்றிய வண்ணக்கனவுகள் வானவில்லாய் வரையப்பட அதன் அதன் பிரதிபலிப்பு இஷானியிடமும் இருந்தது.

அதே நேரம் அஸ்மிதா கண்ணில் காதல் கனவுகள் மின்ன வலம் வர ஜெய் அவளுக்கு என்னவெல்லாம் பிடிக்கும், எப்போதெல்லாம் கோபப்படுவாள், என்ன செய்தால் அவளது கோபத்தைத் தணிக்க முடியும் என்றவாறு இருபத்திநான்கு மணிநேரமும் அஸ்மிதாவைப் பற்றிய சிந்தனையிலேயே கழித்தான். இது வரை அவனும் வாய் வார்த்தையாய் அஸ்மிதாவிடம் அவளைக் காதலிப்பதாய் சொல்லவில்லை. ஆனால் அஸ்மிதா அதை எதிர்பார்க்கவில்லை.

எப்போது அவன் “நீங்க என் கூட இருக்கிங்கல்ல அஸ்மி… நீங்க என்னைப் பார்த்துக்க மாட்டிங்களா? இன்னைக்கு அந்த ரவுடிப்பசங்க கிட்ட இருந்து காப்பாத்துன மாதிரி வாழ்க்கையில எனக்கு வரப்போற எல்லா பிரச்சனைகளை நீங்க பார்த்துக்க மாட்டிங்களா?” என்று கேட்டுவிட்டு எதிர்பார்ப்புடன் அவள் முன் நின்றானோ அக்கணமே அவன் தான் தனது வாழ்க்கை என்பதை அவள் முடிவு செய்துவிட்டாள். என்ன தான் புத்திசாலித்தனம், கருணை, இரக்கம் எல்லாம் இருந்தாலும் அவனைப் போன்ற வெகுளியை இவ்வுலகம் எளிதில் ஏமாற்றிவிடும். எனவே தன்னைப் போல ஒரு சாமர்த்தியசாலி அவனுடன் இருப்பதே அவனது எதிர்காலத்துக்கு நல்லது என்று வேறு அவன் மனதில் பதியவைத்து விட்டாள்.

இவ்வாறு இளையவர்கள் திருமணக்கனவுகளில் திளைக்க, பெரியவர்கள் தர்மச்சங்கடத்தில் உழன்றனர். அதற்கு முக்கியமானக் காரணம் இரண்டு. முதலில் ருத்ராவின் உடன்பிறந்தவர்களும், சந்திரசேகரும் வெளிநாட்டில் இருக்கும் இத்தருணத்தில் அவர்களுக்குக் கூட தெரிவிக்காது திருமணத்தை நடத்தியே ஆக வேண்டுமா தயக்கம் அவர்களுக்கு. அதிலும் மந்தாகினியைப் பற்றி கேட்கவே வேண்டாம்.

சும்மாவே சஞ்சீவினி என்னவோ தனது கணவர், இளைய சகோதரன் மற்றும் புதல்வனை தன்னிடமிருந்து பிரிக்க முயல்வதாகவே இத்துணை ஆண்டுகள் கற்பனையில் எண்ணி எண்ணி பயந்து கொண்டிருப்பவர் இப்போது சஞ்சீவினியின் மகளே தம்பி மனைவியாக வரப்போகிறாள், அதுவும் அவருக்குத் தெரிவிக்காமலே திருமணம் என்று கேள்விப்பட்டால் அவ்வளவு தான். கட்டாயம் எரிமலைச்சீற்றம், பூகம்பம் போல மந்தாகினியின் கோபமும் எதாவது சேதாரத்தை விளைவிக்கும்.

ஆனால் ருத்ராவின் தீர்மானமான பேச்சு பெரியவர்களின் தயக்கத்தை துடைத்துப் போட்டுவிட்டது.

“சஞ்சுக்கா! நீ அவ கிட்ட சம்மதம் கேட்டாலும் மந்தாக்கா ஒத்துக்க மாட்டா” என்றவனை இடைமறித்த இஷானி

“ஏன்? என்னோட பிராப்ளம் தெரிஞ்சு ஒத்துக்க மாட்டாங்கனு பயப்படுறிங்களா மாமா?” என்று கேட்க அவன் அவளது முந்திரிக்கொட்டைத் தனத்தில் எரிச்சலுறவனாய் கடுப்பாய் ஏதோ சொல்ல வருவதற்குள் சஞ்சீவினி அவர்களைப் பார்ப்பதைக் கவனித்துவிட்டு இருவருக்கும் பொதுவாகப் பதிலளித்தான்.

“மந்தாக்காவுக்கு நீ பொண்ணா, பையனாங்கிறதுலாம் பிரச்சனை இல்ல… நீ சஞ்சுக்காவோட பொண்ணு… அது ஒன்னு போதும்… அவ கண்டிப்பா ஆடித் தீர்த்துடுவா… எனக்கு என்னோட கல்யாணச்சந்தோசம் அவ பண்ணப் போற அர்த்தமில்லாத கலாட்டாவால ஸ்பாயில் ஆகுறதுல இஷ்டமில்ல… அதனால அவங்க யாருக்கும் இன்பார்ம் பண்ண வேண்டிய அவசியம் இல்ல… அதான் அவங்களுக்குப் பதிலா அவங்களோட வாரிசு அர்ஜூன் இருக்கானே! அது போதும்கா… நீ அரேஞ்ச்மெண்டை கவனி”

ருத்ரா தனது தரப்பு விளக்கத்தைக் கொடுத்ததும் அலமேலுவும் ராஜகோபாலமுன் இன்னொரு சங்கடமான விசயத்தை தயங்கி தயங்கி வெளியிட்டனர். ராஜகோபாலன் கண்ணாடியைத் துடைப்பது போன்ற பாவனையுடன்

“எல்லாம் சரி தான்! ஆனா கல்யாணத்தை கிராண்டா நடத்துறதுல ஒரு பிரச்சனை இருக்கே! நம்ம சைடில இருந்து சொந்தக்காரங்களைக் கூப்பிட்டா ஜெய்கு தனக்கு மட்டும் யாரும் இல்லையேனு தோணிடாதாடா?” என்று வாய் விட்டுக் கேட்டுவிட

“ஏன் கிராண்டா பண்ணனும்? சிம்பிளா கோவில்ல வச்சுக் கூட பண்ணிக்கலாமே! கிராண்டா பண்ணுறதுக்கு ஆகுற பணத்தை நம்ம ஹோம்ல இருக்கிற பொண்ணுங்களோட எஜூகேசனுக்குச் செலவளிச்சா கூட புண்ணியம் சஞ்சுக்கா… அதுவுமில்லாம ஜெய் நம்ம வீட்டுக்கு வரப்போற மாப்பிள்ளை… அவரோட மனசு கோணிடக்கூடாது… என்னோட சைடில இருந்து வரப் போறது ரெண்டே ரெண்டு பேரு தான்… அர்ஜூன் அண்ட் வெங்கட்… மத்த எல்லாருக்கும் மேரேஜ் முடிஞ்சதுக்கு அப்புறம் சொல்லிக்கலாம்னு விட்டுட்டேன்… பிகாஸ் வினாயகம் அண்ணாவுக்கு அங்கங்க ஒற்றர்படை இருக்கு” என்று ருத்ரா இரண்டாவது சங்கடத்தையும் தீர்த்துவைத்துவிட்டான்.

தங்களுக்கு இருந்த இருபெரும் சங்கடங்கள் அகல பெரியவர்களுக்கு இனிமேல் கல்யாணத்தை எளிமையாக அதே சமயத்தில் குறைவின்றி நடத்துவது எப்படி என்பதில் கவனம் செலுத்த ஆரம்பித்தனர். ருத்ரா எளிதாகச் சொல்லிவிட்டான் மந்தாகினிக்கும் சந்திரசேகருக்கும் தெரிவிக்கத் தேவையில்லை என்று. ஆனால் சஞ்சீவினிக்கு இன்னுமே மனம் ஒப்பவில்லை.

சகோதரிக்குத் தெரியாமல் அவள் உடன்பிறந்தவனுக்கு மணம் முடித்துவைப்பது எவ்வகையிலும் நியாயமாக அவருக்குத் தோணவில்லை. இருப்பினும் ருத்ராவின் பேச்சுக்கு மாறாக எதையும் செய்துவைத்து அவனது திருமணநாளில் அவன் முகம் வாடுவதை சஞ்சீவினி விரும்பாததால் ருத்ரா மற்றும் இஷானியின் திருமணச்செய்தி வெளிநாட்டில் இருந்த மந்தாகினி மற்றும் இன்னும் இருவரின் செவியை அடையவே இல்லை.

மணமகனில் ஒருவன் இப்படி என்றால் மற்றொருவனோ திருமணநாளை மிகுந்த பதற்றத்துடன் எதிர்நோக்கியிருந்தான். அவனுக்கு அஸ்மிதாவின் அளவுக்கடந்த காதல் எவ்வளவு நம்பிக்கையைக் கொடுத்ததோ அவ்வளவு பதற்றத்தையும் கொடுத்தது. கண்மூடித்தனமான அவளது காதலுக்கு எல்லையே இல்லை என்பது புரிந்தாலும் அவள் எதிர்பார்க்குமளவுக்குத் தன்னால் அவளை மகிழ்ச்சியாக வைத்திருக்க இயலுமா என்ற சந்தேகம் அவனுக்கு நீண்டநாட்களாக மண்டைக்குடைச்சலை ஏற்படுத்திவிட்டது. ஒருவேளை தன்னால் முடியாது போய்விட்டால் அந்த ஏமாற்றத்தை அவளால் தாங்கிக்கொள்ள இயலுமா என்று யோசிக்கும் போது தான் இந்தச் சிந்தனை செய்யும் கட்டத்தையெல்லாம் தான் தாண்டிவிட்டது அவன் புத்தியில் உறைத்தது.

ஆனால் இறங்கிய பின்னர் யோசிப்பது புத்திசாலித்தனத்தில் சேர்த்தி இல்லையென புரிந்துகொண்டவன் இனி என்ன நடந்தாலும் சமாளித்து ஆக வேண்டிய கட்டாயத்துக்குத் தன்னை தயார் படுத்திக் கொண்டான்.

ருத்ராவும் ஜெய்யும் இவ்விதமான மனநிலையுடன் இருக்க அஸ்மிதாவும் இஷானியும் உணர்வுகளின் இருதுருவங்களில் இருந்தனர் என்றே சொல்லலாம். முந்தையவள் காதல் கனிந்து மணமுடிக்க போகிற சந்தோசத்தின் உச்சியில் இருக்க, பிந்தையவள் தன்னை உயிராக எண்ணும் மணவாளன் கிடைத்த நிலையிலும் தான் அவனுக்குத் தகுதியானவள் தானா எனும் குழப்பத்தில் உழன்றாள்.

ஆனால் ருத்ரா சஞ்சீவினி பவனத்தில் இருப்பதால் இப்படிப்பட்ட குழப்பங்கள் வந்த சுவடின்றி மறைந்தாலும் அவ்வபோது எதிர்பாராவிதமாய் எழத் தான் செய்கிறது அவள் மனதில்.

ஆனால் இஷானிக்கு இத்திருமணம் மூலம் கிடைத்த மிகப்பெரிய மகிழ்ச்சியே ருத்ரா அர்ஜூனைத் தங்களது மகனைப் போல பார்த்துக்கொள்ள வேண்டும் என்று சொன்னது தான். ஏனெனில் சிறிது நாட்களுக்கு முன்னர் வரை மந்தாகினி, சந்திரசேகர் மீதிருந்த வருத்தத்தின் காரணமாக அர்ஜூனை எங்கே சந்திக்க நேர்ந்தாலும் இஷானியும் சரி அஸ்மிதாவும் சரி அர்ஜூனிடம் முகம் கொடுத்துப் பேசுவதைத் தவிர்ப்பர்.

இப்போது அவனுடன் கழித்த பொழுதுகளில் தான் அச்சிறுவன் அன்னையின் அன்புக்கு எவ்வளவு ஏங்கிப் போயிருக்கிறான் என்பது இஷானிக்குப் புரிந்தது. எனவே அவன் குறித்த கவலை எதுவும் இனி ருத்ராவுக்குத் தேவையில்லை என்று உறுதியளித்திருந்தாள் இஷானி. என்ன தான் மருத்துவச்சிகிச்சையில் அவளால் பெண்களைப் போல இயல்பாக இருக்க முடிந்திருந்தாலும் மழலைச்செல்வம் என்ற ஒன்று தனது வாழ்வில் வருவது நிச்சயமற்ற ஒன்றே என்பது அவளுக்குத் தெரியும். அதனால் அந்தக் குறையை அர்ஜூன் போக்குவான் என்ற நம்பிக்கை அவளுக்கு. அவனும் குழந்தை தானே! என்ன பன்னிரண்டு வயதான வளர்ந்த குழந்தை! அவ்வளவே!

நால்வரும் நான்கு விதமான எதிர்பார்ப்புகளுடன் எதிர்நோக்கியிருந்த திருமணநாளின் பொழுது இனிமையாகப் புலர்ந்தது. இரு பெண்களுக்கும் தேவையானவற்றை அலமேலுவும் சஞ்சீவினியுமே பார்த்துக் கொண்டனர். போதாக்குறைக்கு துளி நிறுவனத்திலிருந்து மேரியும் உதவிக்கு வந்திருக்க அழகுநிலையப்பெண்களின் கைவண்ணத்தில் இஷானியும் அஸ்மிதாவும் மணப்பெண் அலங்காரத்தில் நிகரற்ற அழகுடன் மிளிர்ந்தனர்.

இரு பெண்களுக்கும் முகூர்த்தப்பட்டு அடர்சிவப்பு நிறத்தில் ஒரே மாதிரி ஜரிகை வேலைபாடுகளுடன் இருக்கும்படி தான் எடுத்திருந்தார் சஞ்சீவினி. ஆபரணங்களும் கூட அவ்வாறே. இத்தனை நாட்கள் நவநாகரிக உடைகளில் வலம் வந்தவர்கள் இன்றைக்கு தழைய தழைய பட்டுப்புடவை கட்டி, தலை நிறைந்த மல்லிகை மலர் அலங்காரத்துடன், அளவான பொன்னாபரணங்கள் மின்ன நின்ற காட்சி சஞ்சீவினி பவனத்தையே ஜொலிக்க வைத்தது.

முதலில் அலமேலுவிடமும் ராஜகோபாலனிடமும் ஆசிர்வாதம் வாங்கிக் கொண்டவர்களுக்கு ராஜகோபாலன் விபூதியை நெற்றில் கீற்றாகப் பூசி ஆசிர்வதித்தார். இருவரும் அடுத்துச் சென்று நின்ற இடம் நாட்டியாலயா. அங்கே உறைந்திருக்கும் நடராஜப்பெருமானின் தரிசனம் கிடைக்காத நாள் அவர்களுக்கு வெறுமையே! அவர் முன் சென்று கைகூப்பி தொழுதவர்கள் தங்கள் வாழ்வின் அடுத்தக் கட்டத்துக்குச் செல்ல அவரது அருள் வேண்டி வணங்கினர். ஆனால் இனி வரும் சம்பவங்களால் நிகழப்போகிற அனர்த்தங்களைத் தாங்கிக் கொள்ள இருவருக்கும் அவர் மன உறுதியை மட்டும் தான் வழங்கினார் என்பதை அவர்களால் காண முடியவில்லை.

இருவரும் நாட்டியாலயாவிலிருந்து இறங்கும் போது அஸ்மிதாவின் கால் தோட்டத்தில் கிடந்த கல்லில் இடித்துக் கொள்ள அவள் வலியில் முகம் சுளித்ததைக் கண்ட இஷானி “என்னாச்சு அஸ்மி?” என்று பதற ஆரம்பிக்க, இவளிடம் விசயத்தைச் சொன்னால் அபசகுனம் என்று எண்ணி இன்னும் பயப்படுவாள் என்று நினைத்தபடி “ஒன்னுமில்ல இஷி! ஐ அம் ஆல்ரைட்” என்று புன்னகைத்தாள் அஸ்மிதா. ஆனால் அவளுக்குள் திடீரென்று இனம்புரியாத பதற்றம் தோன்றியது என்னவோ உண்மை.

அதைப் பற்றியெல்லாம் யோசிக்க இயலாது அவர்கள் திருமணம் நடக்கவிருக்கிற முருகன் கோயிலில் மணப்பெண்களுக்காக காத்திருந்த ருத்ராவும் ஜெய்யும் சஞ்சீவினிக்கு அழைக்க அவர் இரு பெண்களையும் காரிலேற சொன்னார். அர்ஜூன் ராஜகோபாலனுடன் அமர்ந்து கொள்ள, அலமேலுவும், சஞ்சீவினியும் மேரியுடன் பின்னே அமர்ந்து கொண்டனர். அஸ்மிதாவும் இஷானியும் செழியன் அனுப்பியிருந்த அவரது காரில் ஏறிக்கொண்டனர்.

சஞ்சீவினி பவனத்திலிருந்து கிளம்பிய கார்கள் அங்கிருந்து சற்று தொலைவிலிருக்கும் முருகன் கோயிலில் சென்று நின்றதும் அனைவரும் இறங்கி கோயிலுக்குள் செல்ல அங்கே ஜெய்யும் ருத்ராவும் பட்டுவேஷ்டி சட்டையில் அக்மார்க் மாப்பிள்ளைகளாகக் காத்திருந்தனர்.

நால்வரின் விழிகளும் அவரவர் இணையை ரசித்துவிட்டு மீள இந்த பார்வைமொழி பேசும் நாடகத்தை பெரியவர்கள் கண்டும் காணாதது போல இருந்தாலும் உள்ளுக்குள் அதை எண்ணி நமட்டுச்சிரிப்பு சிரித்துக் கொண்டனர். அர்ஜூன் அலமேலுவுடன் நின்றிருந்தவன் மாமாவைப் பார்த்துச் சிரிக்க ருத்ரா மருமகனது உடை அருமை என்று சைகையில் சொல்லிக் காட்டினான்.

ருத்ரா சொன்னபடி அவன் தரப்பிலிருந்து வெங்கட் மட்டுமே வந்திருக்க, சஞ்சீவினி குடும்பத்தினர் போக செழியனையும் மேரியையும் மட்டுமே திருமணத்துக்கு அழைத்திருந்தார். தங்களது செய்கையால் ஜெய் எதையும் எண்ணி வருந்திவிடக் கூடாதே என்ற கவனம் தான் அதற்கு காரணம். ஏனெனில் அஸ்மிதா தான் வார்த்தைக்கு வார்த்தை அவன் ஒரு அப்பாவி, பூஞ்சை மனம் படைத்தவன், வெகுளி என்று சொல்லி சொல்லி அவர்கள் மனதில் ஜெய் என்பவனின் பிம்பத்தை உருவாக்கிவிட்டாளே!

மணமக்களை சுவாமி சன்னதிக்கு முன்னே அழைத்துச் சென்ற அர்ச்சகர் மாலையைக் கொடுத்து மாற்றிக்கொள்ளும்படி சொல்ல இரு ஜோடிகளும் மாலை மாற்றிக் கொண்டனர். ருத்ராவுக்கு மாலையிடும் போது இஷானியின் கைகள் நடுங்க, அதே போல அஸ்மிதாவின் கழுத்தில் மாலையைப் போடச் சென்ற ஜெய்யின் கரங்களும் நடுங்கி அடங்கியதை அவளால் உணர முடிந்தது.. ஆனால் அதற்கு தப்பர்த்தம் எடுத்துக்கொள்ள அவள் விரும்பவில்லை.

அர்ச்சகர் மந்திரம் ஓத வேலவனின் ஆசியுடன் கொண்டுவரப்பட்ட மாங்கல்யம் இருவரிடமும் நீட்டப்பட ருத்ரா அதை வாங்கியவன் மனதிற்குள்ளே “கடவுள! அம்மாவோட பாசத்தை தான் நீ என் கிட்ட இருந்து சீக்கிரமா பறிச்சிக்கிட்ட… இஷானியோட அன்பும், அக்கறையுமாச்சும் காலம் முழுக்க எனக்கு கிடைக்கணும்னு ஆசிர்வாதம் பண்ணுங்க… வாழ்க்கையில எனக்கு வேற எதுவுமே தேவையில்லை” என்று வேண்டியபடி இஷானியின் கழுத்தில் மூன்று முடிச்சிட்டான்.

அதே நேரம் ஜெய் தன் கரங்களிலிருக்கும் மாங்கல்யத்தைப் பார்த்தவன் “கடவுளே! நான் செஞ்ச எந்தக் காரியமும் என் சுயநலத்துக்காகப் பண்ணல.. என்னைக் காதலிக்கிறேனு சொன்ன இந்தப்பொண்ணு கிட்ட உண்மையைச் சொல்லாம மறைச்சதை தவிர… இதுக்கு நீங்க என்ன பனிஷ்மெண்ட் வேணும்னாலும் குடுங்க… ஆனா என் நோக்கம் நிறைவேறணும்” என்று வேண்டியபடி அவள் அஸ்மிதாவின் கழுத்தில் மங்கலநாணைப் பூட்ட அஸ்மிதா மனம் நிறைந்த காதலுடன் அதை ஏற்றுக்கொண்டாள்.

தம்பதி சமேதராய் மீண்டும் ஒரு முறை முருகனிடம் வேண்டிக்கொண்டவர்கள் பெரியவர்கள் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிவிட்டு நிமிரும் போது தான் அது நிகழ்ந்தது. ருத்ராவும் ஜெய்யும் குனிந்து ஆசிர்வாதம் வாங்கும் போது முருகன் சன்னதியை நோக்கி வந்த மூன்று ஜோடிக்கால்கள் அவர்களிடம் வந்ததும் நின்று விட்டதைக் கவனித்தபடியே யோசனையுடன் நிமிர, அந்தக் கால்களுக்குச் சொந்தக்காரர்களாய் அங்கே அதிர்ச்சியுடன் நின்றிருந்தவர்கள் சந்திரசேகர், மந்தாகினி மற்றும் வினாயகமூர்த்தி எனும் மூவரே!

ருத்ரா அவர்களை அங்கே எதிர்பாராதவனாய் திகைக்க ஜெய்யின் முகத்தில் உணர்ச்சிகள் எதுவுமில்லை. சஞ்சீவினியும் அவரது பெற்றோரும் மந்தாகினியைச் சங்கடத்துடன் பார்க்க, அவரோ கண்கள் கலங்க மணக்கோலத்தில் நின்ற தம்பியைக் கண்டு விக்கித்துப் போய் நின்றார். வினாயகமூர்த்தியின் முகமெங்கும் வெறுப்பு மண்டிக் கிடக்க சந்திரசேகர் அஸ்மிதாவின் அருகில் கழுத்தில் மாலையுடன் நின்றிருந்த ஜெய்யை வெறித்து நோக்கினார்.

மெதுவாக அடியெடுத்து சஞ்சீவினி மற்றும் குடும்பத்தினரைத் தாண்டி மகளின் அருகில் வந்தவர் ஆவேசத்துடன் ஜெய்யின் சட்டையைப் பிடித்து உலுக்க ஆரம்பித்தார்.

“எவ்வளவு தைரியம் இருந்தா என் பொண்ணு கழுத்துல தாலி கட்டிருப்ப? உன்னை நான் உயிரோட விடமாட்டேன்டா”

அஸ்மிதாவுக்கும் மற்றவர்களுக்கும் அவரது இச்செய்கையைக் கண்டு அதிர்ச்சியுடன் கோபமும் கொப்புளிக்க அஸ்மிதா “மரியாதையா ஜெய் மேல இருந்து கையை எடுங்க மிஸ்டர் சந்திரசேகர்” என்று அழுத்தமாக உரைக்க சந்திரசேகரின் கோபம் அதிகரித்ததே தவிர குறைவதாக இல்லை.

“என்ன தகுதி இருக்குனு என் பொண்ணை நீ கல்யாணம் பண்ணிக்கிட்டடா? அவ இந்தச் சந்திரசேகரோட பொண்ணு… உன்னை மாதிரி ஒருத்தனுக்கு அவளோட நிழல் கூடப் பழகக்கூட தகுதி கிடையாதுடா” என்றவரின் பேச்சில் ஜெய்யின் முகம் கேலியாக மாறியது.

ஏதோ பெரிய ஜோக்கை கேட்டுவிட்டது போல சத்தமாக நகைக்கத் துவங்கியவனின் இந்த முகபாவம் அஸ்மிதாவுக்கு மட்டுமல்ல அவளது மொத்தக் குடும்பத்துக்குமே அதிர்ச்சியோடு கேள்விகளையும் மனதில் உண்டாக்கியது.

ஜெய் சந்திரசேகரின் கரத்தைப் பட்டென்று தட்டிவிட்டவன் “சந்திரசேகருக்கு மருமகனா இருக்கிறதுக்கான எல்லா தகுதியும் எனக்கு இருக்கு… அவரைப் போலவே நானும் ஒரு பிசினஸ்மேன், அண்ட் அவரைப் போலவே நானும் ரெண்டாவது கல்யாணம் வேற பண்ணிருக்கேன்… இந்த தகுதி போதுமா மிஸ்டர் சந்திரசேகர்?” என்று அழுத்தமானக்குரலில் கேலி விரவிப் பேசி இத்தனை நாட்கள் போட்டிருந்த அப்பாவி வேடத்தைக் கலைத்தான்.

அவனது இரண்டாவது கல்யாணம் என்ற வார்த்தை அங்குள்ளவர்களின் மனதில் பூகம்பத்தை உண்டுபண்ணியது என்றால் அஸ்மிதாவுக்கு அவனது அவ்வார்த்தை இதயத்துக்குள் கத்தியைச் செருகுவது போல இருந்தது.

இருந்தாலும் காதலன் மீதிருந்த நம்பிக்கையை இழக்காதவளாய் “ஜெய்… நீ என்ன சொல்லுற? என்ன ரெண்டாவது கல்யாணம்? பதில் சொல்லு ஜெய்” என்று அவனிடம் கேட்டவளை நிதானமாகப் பார்த்தவன் மறுப்பாய் தலையசைத்தான்.

பின்னர் அழுத்தமான குரலில் “நான் ஜெய் இல்ல… தேவ்…. ஜெயதேவ்… உன் அப்பா சந்திரசேகர் நம்பிக்கை துரோகம் பண்ணுன விஸ்வநாதனோட பையன் ஜெயதேவ் விஸ்வநாதன்” என்று தெளிவாய் உச்சரிக்க அஸ்மிதாவால் இதை சிறிதும் நம்ப முடியவில்லை.

இரண்டாவது திருமணமா? ஏற்கெனவே மணமானவன் ஏன் தன்னைக் காதலிப்பதாகச் சொல்ல வேண்டும்? இவ்வாறு சிந்தனைகள் ஓடும் போதே அவன் இன்று வரை தன்னைக் காதலிப்பதாகச் சொன்னதில்லை என்று அஸ்மிதாவின் மனசாட்சி அவளை இடித்துரைத்தது.

அவள் முகம் அதிர்ச்சியில் கலங்கி போயிருக்க அவளிடம் ஜெய்யாகவும், வர்த்தக உலகில் தேவ்வாகவும் அறியப்பட்ட ஜெயதேவ் தன் முன் முகம் கொள்ளா சினத்துடன் நின்றிருந்த சந்திரசேகரிடம்

“லிசன் மிஸ்டர் சந்திரசேகர்! ஆர்.எஸ்.கெமிக்கல் கம்பெனியோட மேக்சிமம்  ஷேர்சை வச்சிருக்கேங்கிற உரிமையை வச்சு ஏ.ஜி.எம்ல உங்க கம்பெனியோட எம்.டியா உக்காருவேனு சொன்னேன்ல… சொன்னதை செஞ்சுட்டேன்… ஏ.ஜி.எம் மட்டும் தான் பாக்கி… அது மட்டும் முடியட்டும், அப்புறம் உங்களை, உங்களோட நிழல்னு சொல்லிட்டு நிழலுகக் காரியத்தைப் பண்ணிட்டிருக்கிற இந்த வினாயகமூர்த்தியை ஒன்னும் இல்லாம ஆக்கி மூலையில உக்கார வைக்கல, என் பேரு தேவ்.. ப்ச்… பழக்கதோசம்… ஜெயதேவ் இல்ல” என்று சொல்லிவிட்டுப் போனில் யாருக்கோ அழைத்தான்.

“ஹலோ ரிஷி! சொன்ன வேலையைப் பக்காவா செஞ்சிருக்கடா… யெஸ்! எல்லாரும் ப்ரசண்ட் தான்… அவர் பொண்ணோட கல்யாணத்துக்கு அவர் வராம இருந்தா தான் ஆச்சரியம்” என்று பேசிக்கொண்டே செல்ல அஸ்மிதாவுக்குத் தான் கட்டிய கனவுக்கோட்டையின் ஒவ்வொரு செங்கலும் நொறுங்கி விழுவது போலத் தோன்றியது.

சஞ்சீவினி, அலமேலு, ராஜகோபாலன் மூவரும் இவனா விஸ்வநாதனின் மகன் ஜெயதேவ் என்ற அதிர்ச்சியில் திகைத்தவர்கள் அவனைக் காணும் போதெல்லாம் எங்கேயோ பார்த்தது போன்ற உணர்வு வந்தது ஏன் என்று இப்போது புரிந்து கொண்டனர். அவனது வார்த்தைகள் எதுவுமே புரியாத நிலையில் அஸ்மிதாவைப் பார்க்க அவளோ சிலை போல் சமைந்திருந்தாள்.

இவ்வளவு அமளிதுமளியிலும் ருத்ரா அமைதி காத்தது ஏன் என்று யாருக்குமே புரிபடவில்லை.

சந்திரசேகர் மகளின் நிலையைக் கண்டு மனம் வருந்தினாலும் நிறுமத்தின் பங்கு குறித்த தகவலால் உச்சக்கட்ட அதிர்ச்சிக்கு உள்ளானார். ஆனால் உடனே சுதாரித்தவராய்

“யார் கிட்ட உன் வித்தையைக் காட்டுற தேவ்? என் கம்பெனி ஷேரை நீ யாரு கிட்ட இருந்து வாங்குனாலும் உன்னால மூனாவது, நாலாவது இடத்துல தான் இருக்க முடியும்… அதோட என் கம்பெனி ஷேரை நீ வாங்க போர்ட் ஆப் டைரக்டர்ஸ் ஒத்துக்கணும்டா” என்று உறுதியானக்குரலில் மறுக்க, ருத்ரா தொண்டையைச் செறுமிக் கொண்டான்.

“நீங்க என்னை ஆல்டர்னேட் டைரக்டரா அப்பாயிண்ட் பண்ணுனதை மறந்துட்டிங்க போல”

இந்த வார்த்தையைக் கேட்டதும் மந்தாகினி, சந்திரசேகர் இருவரும் திடுக்கிட வினாயகமூர்த்தி உடன் பிறந்தவனை கொலை செய்யும் வெறியுடன் முறைத்தார்.

அவனது பேச்சைக் கேட்டு மற்றவர்கள் எப்படி உணர்ந்தார்களோ, ஜெய்யின் உண்மை ரூபம் தெரிந்து கலங்கி போயிருந்த அஸ்மிதாவின் கரம் பற்றியிருந்த இஷானி ருத்ராவும் தேவ் போல தானா என்று நினைத்து உறைந்து போனாள். அவன் பேசிய இந்த ஒரு வார்த்தை அங்கிருந்த அனைவரின் மனதிலும் உண்டாக்கிய எண்ணம் ஒன்றே ஒன்று தான்.

தேவ் ஆர்.எஸ் கெமிக்கலின் பங்குகளுக்காக ஜெய்யாக நாடகமாடி இருக்கிறான், அதற்கு நிர்வாகரீதியான உதவிகளை ருத்ரா செய்திருக்கிறான் என்பதே அந்த எண்ணம். அவர்களின் எண்ணம் சரி தான் என்பது போல நின்றிருந்தனர் ருத்ரா மற்றும் ஜெயதேவ் இருவரும்.

தண்மதி ஒளிர்வாள்🌛🌛🌛