🌞 மதி 35 🌛

டைட்டானியம் டை ஆக்சைட் பாதுகாப்பானதா பாதுகாப்பற்றதா என்பது அதன் பயன்பாட்டைப் பொறுத்ததே. அது சுவாசிக்கும் போது உள்ளிழுக்கப்பட்டால் நுரையீரல் புற்றுநோயை உண்டாக்கும் காரணியாக (Carcinogenic) மாறும் என்பது ஒரு ஆய்வின் முடிவு. இதன் படி முகப்பூச்சுக்கள், சன்ஸ்க்ரீன்களில் கலந்துள்ள டைட்டானியம் டை ஆக்சைட் சுவாசிக்கும் போது உள்ளிழுக்கப்படக் கூடிய அபாயம் உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது – (International Agency for Research on Cancer).

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி…

மாணவ மாணவிகள் வண்ணத்துப்பூச்சிக்களாக வலம் வரும் கல்லூரி எனும் தோட்டத்தில் அடியெடுத்து வைத்த இஷானிக்கு ஆறு மாதங்களுக்கு முந்தைய அவளது கல்லூரி நினைவுகள் மனதில் வந்து சென்றது. ருத்ரா காரை பார்க் செய்தவன் அவளுடன் சேர்ந்து கல்லூரி முதல்வர் அறையை நோக்கி நடை போட்டான்.

அங்கே சென்றதும் சஞ்சீவினியின் மகள் என்பதால் பலத்த வரவேற்பு கிடைத்தது இஷானிக்கு. ருத்ராவுக்கு அப்போது “சோஷியல் சர்வீஸ் பண்ணுறேனு சொல்லி குடும்பத்தைக் கவனிக்காதவளுக்கு எதுக்கு கல்யாணம், குழந்தை எல்லாம்?” என்று வெகுகாலத்துக்கு முன்னர் யாரோ கத்தும் குரல் காதில் ஒலித்தது. இப்போது அவர்களை அழைத்து இக்காட்சியைக் காட்டவேண்டும் என்று அவன் மனம் பரபரத்தது.

அதற்குள் விழா ஆரம்பிப்பதற்கான நேரம் வந்துவிட முதல்வர் இஷானியை அவருடன் அழைத்துச் செல்ல ருத்ரா பார்வையாளனாக அந்நிகழ்வுகளைப் பார்வையிட ஆரம்பித்தான். அவர்கள் அந்த பரந்து விரிந்த அரங்கில் நுழைந்ததுமே மாணவ மாணவிகளின் சளசளப்பு அடங்கியது.

இஷானி மேடைக்குச் சென்றதும் ருத்ரா பார்வையாளர் வரிசையில் அமர்ந்துகொண்டான். அவனுக்கு மேடையில் அமர்ந்திருந்தவளின் தெளிவான முகத்தைக் கண்டதும் ஓரளவுக்கு நிம்மதியாக இருந்தது. எங்கே அவள் இத்தனை நபர்களுக்கு மத்தியில் சங்கடமாக உணர்வாளோ என்ற தயக்கம் அவனுக்குள் எழுந்து கொண்டே இருந்தது.

ஆனால் இஷானியின் முகமும் அகமும் இன்றைக்குத் தெளிவாகவே இருந்தது. இறைவணக்கம், தமிழ்த்தாய் வாழ்த்துடன் மீட்டிங் இனிதே ஆரம்பித்தது. முதலில் கல்லூரி முதல்வர் வரவேற்புரை நிகழ்த்தினார். அதன் பின் கல்லூரியின் அருமை பெருமைகளை விளக்கும் விதமாய் ஒரு பேராசிரியர் உரைக்குப் பிறகு இஷானியைத் தலைமையுரை இயற்ற வருமாறு அழைத்தார் நிகழ்ச்சி அறிவிப்பாளர்.

இஷானி மைக்கின் முன் சென்று நின்றவள் ஒருமுறை கூட்டத்தை நோக்கிவிட்டு மனதில் தைரியத்தை ஏற்றிக்கொண்டு உரையை ஆரம்பித்தாள். எடுத்த உடன் பிரச்சனைக்குள் நுழையாமல் ஒரு செல் உயிரினங்களில் இரு பாலுறுப்புகள் சேர்ந்திருப்பதிலிருந்து ஆரம்பித்தாள்.

பின்னர் படிப்படியாக பேச்சை மனித இனத்தை நோக்கி திருப்பவும் குண்டூசி விழுந்தால் கூட சத்தம் கேட்குமளவுக்கு அங்கே அவ்வளவு அமைதி. அந்த அமைதியைக் கிழித்துக் கொண்டு அவள் குரல் அழுத்தத்துடன் அந்த அரங்கில் ஒலித்தது. தனது வாழ்வின் நிகழ்வுகளை ஒளிவுமறைவின்றி அந்த மேடையில் உரைத்தவள் பாலினத்தேர்வு அறுவைச்சிகிச்சை எந்தளவுக்கு ஒரு இடையிலிங்கவத்தரின் மனதைப் பாதிக்கும் என்பதை பொறுமையுடன் விளக்கினாள்.

அவள் பேசிய விதத்தில் மாணவர்கள் மட்டுமன்றி அங்கே வந்திருந்த மற்றவர்களும் அவளது பேச்சில் கட்டுண்டு கேட்டுக்கொண்டிருந்தனர். ருத்ராவும் அதற்கு விதிவிலக்கில்லை.

முடிவில் “யாருமே ஆணா பிறக்கணும், பொண்ணா பிறக்கணும்னு ஆசைப்பட்டு பிறக்கிறதில்ல… எல்லாமே XX, XY குரோமோசோம்களோட முடிவு தான்… அதே போல தான் இண்டர்செக்ஸ் பீபிளும்… அவங்க தன்னை ஆணாவோ பெண்ணாவோ தான் அடையாளப்படுத்திக்கணும்னு எந்த அவசியமும் கட்டாயமும் இல்லை… இது அவங்க உடல் மீதான அவங்களோட தார்மீக உரிமை.. அதுக்காக ஏற்படுத்தப்படுத்தப்பட்டது தான் பால் புதுமையர், செக்ஸ் க்வியர்ங்கிற வார்த்தை… அவங்களையும் சகமனிதர்களா ஏற்று நடத்துற மனப்பான்மை இந்த சமூகத்துக்கு வரணும்.. வரும்ங்கிற நம்பிக்கையில என்னோட பேச்சை முடிச்சுக்கிறேன்… நன்றி” என்று சொல்லிவிட்டு அமர்ந்தவளின் கையில் ஒரு மைக் கொடுக்கப்பட மாணவர்களின் சந்தேகங்களுக்கு விடையளிக்க ஆரம்பித்தாள் அவள்.

முக்கியமாக இண்டர் செக்ஸ் பிரிவினருக்கும், திருநங்கை மற்றும் திருநம்பிகளுக்குமான வேறுபாடு தான் அனைவரின் கேள்வியும். 

“இண்டர் செக்ஸ்ங்கிற நிலமை பிறக்கும் போதே அவங்களோட குழப்பமான ஜெனிட்டல் அப்புறம் உடலியல் கூறு மாறுபடுறதால உண்டாகுறது… ஆனா திருனர்கள் பிறக்கும் போது ஆணாகவோ பெண்ணாகவோ தான் பிறப்பாங்க… அவங்க அதுக்கு அப்புறம் சர்ஜெரி மூலமா தன்னை எதிர்பாலினமா அடையாளப்படுத்திக்கிட்டாலும் திருநங்கை உடல்கூறுபடி ஆணாவும் மற்றும் திருநம்பிகள் உடல்கூறுபடி பெண்ணாவும் தான் இருப்பாங்க…

ஆனா இண்டர்செக்ஸ் பிரிவினரை ஆண், பெண் அப்பிடிங்கிற வரையறைக்குள்ளேயே நீங்க கொண்டு வர முடியாது… இது தான் வித்தியாசம்”

அவர்களின் கேள்விகள், சந்தேகங்கள் அனைத்துக்கும் அவள் விடையளித்து முடிக்கையில் இஷானிக்கு ஏதோ பெரிதாக ஒன்றை சாதித்துவிட்ட எண்ணம் உள்ளுக்குள் நிறைந்தது. மீட்டிங் முடிந்ததும் ருத்ராவுடன் வெளியேறியவளின் முகத்தில் இத்தனை நாட்கள் இருந்த மிரட்சி அகன்று ஒரு நம்பிக்கைச்சுடர் விட்டு ஒளிர்ந்தது. அது அவனது இத்தனை நாள் மனவிருப்பத்தை அவளிடம் உரைக்க இது தான் சரியான தருணம் என்ற நம்பிக்கையை அவனுக்குள் விதைத்தது..

இருவரும் காரில் அமர கார் கல்லூரி வளாகத்தை விட்டு வெளியேறி சாலையில் வேகமெடுத்தது. இஷானி சாலையை வேடிக்கை பார்த்துக் கொண்டே வந்தாலும் தான் இவ்வளவு பெரிய உரை நிகழ்த்தியிருக்கிறோம், இவனது வாயிலிருந்து அதைப் பற்றி ஒரு முத்து கூட உதிரவில்லையே என்ற யோசனை அவளுக்குள் ஓடிக் கொண்டிருந்தது. அப்போது ருத்ராவின் “இஷி” என்ற அழைப்பு அவளைத் திரும்பி பார்க்க வைத்தது.

காரில் ஸ்டீயரிங் வீலில் கரம் பதிந்திருக்க விழிகள் சாலையை நோட்டமிட இதழ்களோ மனதின் எண்ணத்தை மறைக்காமல் அவளிடம் தெரிவித்துவிடும் அவசரத்துடன் வார்த்தைகளை உதிர்க்க ஆரம்பித்தது.

“இஷி! நம்ம லைப் பத்தி நீ என்ன முடிவு பண்ணிருக்க?”

எடுத்தவுடனே நமது வாழ்க்கை என்று அழுத்திக் கேட்டவனை விழியகல நோக்கியவள் என்ன பதில் சொல்வது என்று புரியாது சில நொடிகளைக் கழித்தாள். பின்னர் தான் அவன் சொன்ன வார்த்தையின் அர்த்தம் முழுவதுமாக விளங்க அவனது எண்ணத்தை இப்படியே வளர விட்டால் சரியில்லை என்பதை அவனிடம் கூறிவிடும் முடிவுக்கு வந்தாள்.

“நம்ம லைப்னு எதுவும் இங்க இல்ல மாமா… என் லைப் வேற, உங்க லைப் வேற.. ரெண்டும் என்னைக்குமே ஒன்னு சேராது”

“இஸிண்ட்? இவ்ளோ அற்புதமான வார்த்தைகளை தான் இத்தனை நாள் யோசிச்சியா இஷி?”

அவள் பதிலேதும் கூறாமல் அமைதி காக்கவே “ஐ வாண்ட் வேலிட் ரீசன்… நீ சொல்லுற சால்ஜாப்பு எதுவும் எனக்கு வேண்டாம்.. உண்மையான காரணம் என்னனு எனக்குத் தெரிஞ்சாகணும்” என்றான் ஆணையிடும் குரலில்.

இஷானி எரிச்சலுடன் “ப்ச்! என்ன காரணம்னு உங்களுக்குத் தெரியாதா மாமா? தெரிஞ்சே கேக்கிறிங்க… நீங்க ஒரு நல்லா பொண்ணா பார்த்துக் கல்யாணம் பண்ணிக்கோங்க.. நான் உங்களுக்குத் தகுதியானவ இல்ல” என்று கூற

“ஓ! அப்போ இவ்ளோ நேரம் மேடையில பண்ணுன பிரசங்கம் பொய்யா? உபதேசம்லா ஊருக்கு மட்டும் தானா?” ன்று வெகுண்டான் ருத்ரா.

“நான் பைத்தியக்காரனாட்டம் உன்னைச் சுத்தி வர்றேனு என்னோட ஒவ்வொரு பார்வையிலயும் கண்டுபிடிச்சிட்டு இப்போ இந்த மாதிரி ஒரு உப்பு பெறாத காரணத்தைச் சொல்லுற?”

“உப்பு பெறாத காரணமா? உங்களுக்கு என் மனநிலை புரியாது மாமா… எனக்குள்ள இருக்கிற குழப்பம், விரக்தி இது எல்லாமே என்னை நார்மலா ஃபீல் பண்ண விடமாட்டேங்குது… ஒரு ஆணா உங்களோட காதலை சொன்னதுக்கு பாசிட்டிவாவோ நெகடிவாவோ ரியாக்ட் பண்ண நான் ஒரு பொண்ணா இருக்கணும்… ஆனா நான் பொண்ணு இல்ல மாமா.. இது உங்களுக்குத் தெரிஞ்சும் இப்பிடி என்னை சங்கடப்படுத்தாதிங்க… நான் மேடையில சொன்னது என்னை மாதிரி ஆட்களையும் மனுசங்களா நடத்துங்கனு தான் சொன்னேன்”

“அப்போ நீயும் மனுஷி தானே! மனுசியா இருக்கிறவ ஏன் கல்யாணம் பன்ணிக்கிட்டு இயல்பா வாழ டிரை பண்ணக் கூடாது இஷி?…..”

“ப்ளீஸ் மாமா! ஒரு உறுப்பை அறுத்தெறிஞ்சதால நான் பொண்ணா ஆகிட மாட்டேன்… ஸ்கூல்ல டாய்லட் போறப்போ கூட மனசுக்குள்ள ஒருவித தயக்கமும் பயமும் வரும் மாமா… நான் எத்தனை நாள் இப்பிடி யோசிச்சு பயந்துருக்கேன் தெரியுமா? என் உடம்புல நான் பொண்ணுனு அடையாளம் காட்டுறதுக்கு இயங்கிட்டிருக்க ஆர்கன்ஸ், பார்ட்ஸ் எல்லாமே ஹார்மோன் தெரபியால தான் இயங்கவே ஆரம்பிச்சுது… ஒரு பொண்ணா எனக்கு வரவேண்டிய மாற்றங்கள் எல்லாமே ரொம்ப ரொம்ப தாமதமா தான் வந்துச்சு மாமா.. உங்களை நான் கல்யாணம் பண்ணிக்கிட்டா என்னால உங்களுக்கு ஒரு குழந்தையைப் பெத்துக்குடுக்க முடியுமாங்கிறது பெரிய கேள்விக்குறி… எனக்குத் தெரிஞ்சே என்னால உங்க வாழ்க்கையை நாசம் பண்ண முடியாது மாமா”

சொல்லிமுடிக்கையில் அவள் குரல் கேவலாக மாறிவிட்டிருந்தது. கண்ணீர்க்கோடுகள் கன்னங்களில் தீட்டப்பட்டிருக்க ருத்ராவுக்கு அவளை எப்படி சமாதானம் செய்து அவள் மனதில் மறைந்திருக்கும் இந்த எண்ணத்தை மாற்றுவது என்ற கவலை தொற்றிக்கொண்டது.

கார் சாலையிலிருந்து பிரிந்து சஞ்சீவினி பவனத்துக்குள் நுழையவும் கண்களை அழுந்த துடைத்தவள் பார்க்கிங்கில் கார் நின்றதும் அவன் முகம் பார்க்காது இறங்கி வீட்டை நோக்கிச் செல்லும் பாதையில் விறுவிறுவென்று நடக்க ஆரம்பித்தாள். ருத்ரா காரை விட்டு இறங்கி இஷானியின் பின்னே வேகமாகச் சென்றான்.

அவனைப் பொருட்படுத்தாது வீட்டுக்குள் நுழைந்தவளின் பார்வை ஹாலை அளவிட்டது. அங்கே யாருமில்லை என்றதும் தனது அறைக்குச் செல்ல மாடிப்படியேற தொடங்கியவளின் கண்ணீர்ச்சுரப்பிகள் மீண்டும் வேலை செய்ய ஆரம்பித்தது.

ருத்ரா அவள் அறைக்குச் செல்வதைப் பார்த்தவன் “இஷி ஸ்டாப்” என்றபடி பின் தொடர்ந்தான். அவன் சொன்ன விஷயங்களை அவள் காதில் விழுந்ததாக காட்டிக்கொள்ளாமல் கதவை அடைக்க முயல ருத்ரா கதவின் குறுக்கே கை வைத்துத் தடுத்தவன் உள்ளே நின்றவளின் கரம் பற்றி வெளியே இழுத்தான்.

இஷானி அவன் இழுத்த வேகத்தில் தடுமாறி அவன் மீது மோதவும் அவளைக் கீழே விழாமல் பிடித்தவன்

“ஒரே ஒரு விஷயம் மட்டும் சொல்லு… என்னை உனக்குப் பிடிக்குமா? பிடிக்காதா?” என்று அழுத்தமானக்குரலில் கேட்க இஷானி பதிலளிக்காமல் கண் கலங்கியவளாய் அவனை நோக்கினாள்.

“ஐ அம் வெயிட்டிங் ஃபார் யுவர் ரிப்ளை இஷி”

இமைகள் மீண்டும் மூடிக்கொள்ள கண்ணீர் கன்னங்களில் வழிய “பிடிக்கும் மாமா… அதான் நான் உங்களுக்குப் பொருத்தமில்லனு தெரிஞ்சு விலகிப் போறேன்… ஏன் என்னை மறுபடி மறுபடி தேடி வர்றிங்க?” என்று அழுதபடி வினவ

“இன்னொரு கேள்விக்குப் பதில் சொல்லு” என்று அடுத்தக் கேள்வியைக் கேட்க விழி திறந்தவள் என்னவென்று அவனை நோக்கினாள்.

“மேரேஜ்ங்கிறது வெறும் பிசிக்கல் ரிலேசன்ஷிப், குழந்தை பெத்துக்கிறதுக்கான லைசென்ஸ் மட்டும் தானா?”

கேள்வியைக் கேட்டவனின் விழிகளில் அதற்கான விடை தேடும் தீவிரத்துடன் அவள் விழிகளை நோக்க இஷானி இல்லையென்று மறுப்பாய் தலையசைக்கவும் ருத்ரா அவளது கரங்களைப் பற்றிக் கொண்டான்.

“நானும் அதை தான் சொல்லுறேன் இஷி! ஐ வான்ட் டு ஷேர் மை லைப் வித் யூ… ஐ வாண்ட் டு லிவ் வித் யூ.. நீ சொல்லுற விசயம் எல்லாமே என்னை பொறுத்தவரைக்கும் ரெண்டாம் பட்சம் தான் இஷி… இந்தச் சின்ன விசயத்துக்காக நீ என்னை விட்டு விலகிப் போகாத இஷி… ஐ லவ் யூ” என்றவனின் வார்த்தைகளைக் கேட்டவளுக்கு அழுகையை மீறி முகம் ஒரு கணம் ஜொலித்தது என்னவோ உண்மை.

ஆனால் கண்ணிலிருந்து வழியும் கண்ணீர் மட்டும் நிற்கவேயில்லை. தன்னையும் ஒருவன் அளவின்றி காதலிக்கிறான் என்ற உண்மை அவளுக்கு மகிழ்ச்சியை அளவின்றி கொடுத்தாலும் அதை முழுவதுமாக அனுபவிக்கும் மனநிலையை அவள் இன்னும் அடையவில்லை.

அவன் விழியில் தெரிந்த காதலில் ருத்ரா உறுதியாக இருக்க இஷானி அந்த உறுதி தனக்கும் வாய்க்கக் கூடாதா என்று ஏங்கியவள் விடை கூறும் வழியறியாது ஆனந்தமும் தயக்கமும் கலந்த உணர்வுடன் விழியில் நீர் பெருக நின்றிருந்தாள்.

“மாமா!” என்று அழைத்தபடி அஸ்மிதா வரவும் விருட்டென்று விலகி நின்று கொண்ட இருவரும் அஸ்மிதாவின் கவனத்தைக் கவர்ந்ததில் ஆச்சரியம் எதுவுமில்லை.

இஷானியின் அழுது சிவந்த கண்களும் மூக்கும், ருத்ராவின் பதட்டம், தடுமாற்றம் நிறைந்த உடல்மொழியும் அவள் கண்ணில் பட்டாலும் அதைப் பற்றிக் கேள்வி கேட்க விரும்பாதவளாய் இருவரையும் நோக்கியவள் “இஸ் எவ்ரிதிங் ஆல்ரைட்?” என்று கேட்க இருவரும் ஆமென்றும் சொல்லாமல் இல்லையென்றும் மறுக்காமல் மத்திமமாய் தலையாட்டி வைத்தனர்.

அஸ்மிதா இருவருக்குள்ளும் ஏதோ நடந்திருக்கிறது என்றளவில் யூகித்தவள் இஷானியை ஓய்வெடுக்கச் சொல்லிவிட்டு ருத்ராவைக் கையோடு அழைத்துச் சென்றுவிட்டாள் தன்னுடன்.

தண்மதி ஒளிர்வாள்🌛🌛🌛