🌞 மதி 34 🌛

ஆண்களின் நிழலாக மட்டுமே வாழ்ந்து வந்தால் பெண்களால் உடல் ரீதியாகவோ மனரீதியாகவோ தங்கள் மீது நம்பிக்கை வைக்க இயலாதுபுல்புல் ஜயக்கார், எழுத்தாளர்.

ருத்ராவை அல்டர்னேட் டைரக்டராக நியமித்தப் பின்னர் ஆர்.எஸ் கெமிக்கலின் நிர்வாகத்தை மற்ற போர்ட் டைரக்டர்களுடன் பார்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்திவிட்டு சந்திரசேகரும், வினாயகமூர்த்தியும் மந்தாகினியை அழைத்துக் கொண்டு ஆஸ்திரேலியா கிளம்பி ஒரு மாதம் கடந்துவிட்டது. ருத்ராவிற்கு ஜீவனின் பணிச்சுமையை வெங்கட் குறைத்துவிட்டதால் அவன் முழு கவனத்தையும் ஆர்.எஸ்.கெமிக்கல் மீதே பதித்திருந்தான்.

ஆனால் அவனும் அர்ஜூனும் அந்த வீட்டின் வெறுமையில் மனம் வெறுத்துப் போயினர் என்பதே உண்மை. பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும் வீட்டிலிருந்த மூன்று நபர்கள் இல்லாத சூழ்நிலை அவர்களைப் பாதித்தது. இருவர் மட்டுமே புதையல் காத்த பூதம் போல தனிமையில் இருப்பது வெறுத்துப் போனதால் அவன் ஒரு முடிவுக்கு வந்தான்.

பேசாமல் மூவரும் ஆஸ்திரேலியாவிலிருந்து திரும்பும் வரை தாங்கள் இருவரும் சஞ்சீவினிபவனத்தில் சென்று தங்கினால் என்ன என்ற எண்ணம் அவன் மனதில் உதித்திருந்தது. சஞ்சீவினியிடம் அதை வெளியிட்ட போது முதலில் தயங்கினாலும் பின்னர் அவனும் அர்ஜூனும் அங்கே வந்து தங்குவதற்கு ஒப்புக்கொண்டார்.

அதை அர்ஜூனிடம் சொன்னதும் அவன் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. இருவரும் அதன் பின்னர் உற்சாகத்துடன் சஞ்சீவினி பவனத்தில் தங்கள் நாட்களைக் கழிக்கத் தொடங்கினர். ருத்ரா ஏற்கெனவே இளம்வயதில் அங்கே இருந்து பழக்கப்பட்டவன் என்பதால் அவனுக்கு அங்கே தங்குவதில் வித்தியாசமாக எதுவும் தோணவில்லை.

ஆனால் அப்போது அந்த வீட்டில் இஷானி இருந்ததில்லை அல்லவா! இன்றைய நிலையில் இருவரும் ஒரே வீட்டில் இருப்பது அவனது மனதில் இனிய இலயத்தை உண்டுபண்ணியது. இப்போதெல்லாம் அவனது அதிகாலை நேரங்கள் அனைத்தும் அவளது தெய்வீக கானம் செவியைத் தீண்டுவதால் தான் விடிந்தது. அதைத் தொடர்ந்து சிறுமிகளின் நடனப்பயிற்சி பார்ப்பதற்கே கண்கொள்ளாக்காட்சியாக இருக்கும்.

இளம் ரோஜாமொட்டுகள் காலில் சதங்கை அணிந்து ராகம் தாளத்துக்கேற்ப முகபாவனையை அழகாய் மாற்றி ஆடும் விந்தையை வியந்தபடி கையில் காபி கப்புடன் தோட்டத்தில் உலாவுபவனுக்கு இஷானியின் காலை நேர நடன ஆசிரியை அவதாரம் மிகவும் பிடித்தமான ஒன்று.

அதன் பின்னர் கதிரவனின் ஒளிக்கதிர்கள் நாட்டியாலயாவின் மீது முழுவதுமாகப் படியும் நேரம் நடனப்பயிற்சி முடிவுறும். சிறுமிகள் விடைபெற்றதும் இஷானியும் அஸ்மிதாவும் எதாவது வளவளத்துக்கொண்டே வீட்டை அடைவர். பெரும்பாலும் அந்நேரங்களில் ருத்ரா ராஜகோபாலனுடன் சேர்ந்து வீட்டின் வராண்டாவில் அமர்ந்தபடி நாட்டுநடப்பை பற்றி விலாவரியாகப் பேசிக்கொண்டிருப்பான்.

இவர்களைக் கடந்து செல்கையில் இஷானியின் ஓரப்பார்வை அவனைப் பட்டும் படாமலும் தீண்டிச்செல்லும். அத்தருணங்களில் உள்ளுக்குள் மின்னலடிப்பதை போல உணர்வான் அவன். ஆனால் மன உணர்வுகளை வாய் விட்டுச் சொல்லாமல் நாளைக் கடத்திக் கொண்டிருந்தான். இதையெல்லாம் அஸ்மிதா கண்டுகொள்ளாத மாதிரி கடந்து போனாலும் அவளும் சில நேரங்களில் ருத்ராவைப் பற்றி இஷானியிடம் பேச்சு கொடுப்பாள்.

அவளுக்கு இஷானி கொடுக்கும் ஒரே பதில் “நான் மாமாவுக்குத் தகுதியானவனு எனக்குத் தோணல அஸ்மி… அவருக்கு மேரேஜ் லைப் பத்தி நிறைய கனவுகள் இருக்கலாம்… என்னோட அவர் லைப் பிணைக்கப் பட்டுச்சுனா அது நடைமுறைக்கு ஒத்துவராத வாழ்க்கையா தான் இருக்கும்” என்பது தான்.

இவ்வாறு எண்ணிக் கொண்டிருப்பவளுக்கு ருத்ராவின் காதல் பார்வைகளும் சீண்டல்களும் உள்ளுக்குள் பட்டாம்பூச்சிகளைப் பறக்கச் செய்தாலும் அதற்கு தான் தகுதியானவள் இல்லை என்ற எண்ணம் அவள் உள்ளத்தை ஆக்கிரமித்திருந்தது.

இவை எதையும் ருத்ரா அறியவில்லை. ஆனால் இப்படியே விட்டால் இவர்கள் மௌனத்தில் நாட்களை கடத்துவரே தவிர காதல் என்ற வார்த்தையை உச்சரிப்பேனா என்று அடம்பிடிக்க அஸ்மிதாவே ருத்ராவிடம் இஷானியின் மனநிலையை எடுத்துரைக்க முடிவு செய்தாள்.

ஞாயிறன்று அவன் ஓய்வாக இருக்கையில் அவனை அழைத்தவள் அவனிடம் முக்கியமாகப் பேச வேண்டும் என்று நாட்டியாலயாவை நோக்கி அழைத்துச் சென்றாள். ருத்ராவும் அப்படி என்ன தான் சொல்லப் போகிறாள் என்று அஸ்மிதாவுடன் சென்றவன் அங்கிருந்த கருங்கற்படியில் அமர்ந்தான்.

அஸ்மிதா எடுத்ததும் “எப்போ மாமா வாயைத் திறந்து உங்க லவ்வை இஷி கிட்ட சொல்லுவிங்க?” என்று கேட்டுவிட்டு அவனது பதிலை எதிர்பார்த்து நின்றாள்.

“அவ கிட்ட இதைப் பத்தி பேசுறதுக்கு எனக்கு கொஞ்சம் தயக்கமா இருக்கு அஸ்மி.. நான் என் இஷ்டத்துக்கு ஏதாவது பேசி இஷிக்கு மனக்கஷ்டத்தை உண்டாக்கிட கூடாதேனு யோசிக்கிறேன்”

“பட் மாமா இஷி வேற மாதிரி யோசிக்கிறா.. அவளுக்கு மனசுல இருக்கிற எண்ணமே வேற… அவ உங்களுக்குத் தகுதியானவ இல்லைனு நினைக்கிறா மாமா”

அஸ்மிதா இப்படி சொன்னதும் ருத்ராவுக்கு யோசனையில் முகம் சுருங்கியது. பின்னர் அவள் நிலையை உணர்ந்தவன்

“ப்ச்… நான் அவளோட விலகலுக்குக் காரணம் வேற என்னவோனு நினைச்சேன்… பட் இப்போ நீ சொன்னதுக்கு அப்புறம் தான் இப்பிடி ஒரு எண்ணம் அவளுக்குள்ள இருக்குனு புரியுது… இதுக்கு மேலயும் வெயிட் பண்ணுனா அவ இஷ்டத்துக்குக் கற்பனை பண்ணிட்டு அவளை கஷ்டப்படுத்திப்பா… நான் அவ கிட்ட என் மனசுல உள்ள விஷயத்தைப் பேசப் போறேன் அஸ்மி…. அவளோட இந்தப் பயம், தயக்கம் இது எதுவுமே அவ்ளோ சீரியஸானது இல்லனு அவளுக்குப் புரியவைக்கிறேன்” என்று உறுதியாகப் பேசிய பின்னர் தான் அவள் மூச்சு விட்டாள்.

“அப்போ கூடிய சீக்கிரமே மாமாக்கும் இஷிக்கும் டும் டும் டும்…” என்று சொன்னவளைப் புன்னகையுடன் நோக்கிய ருத்ராவின் மனம் முழுவதும் இஷானியிடம் இந்த விஷயத்தைச் சொல்லி எப்படி புரியவைப்பது என்ற யோசனை தான் ஓடியது.

அதே யோசனையுடன் அன்று மாலை வரை நாளைக் கடத்தியவன் மாலையில் செழியனுடன் வீடு திரும்பிய சஞ்சீவினி சோர்வாக வந்ததை கண்டதும் “என்னாச்சுக்கா?” என்று பதறிப்போய் அவரை அரவணைத்துக் கொள்ள

“ஃபீவர் தான் யங்மேன்… டுமாரோ கவர்மெண்ட் ஆர்ட்ஸ் காலேஜ்ல ஒரு மீட்டிங் இருக்கு… அதுக்கு எப்பிடி போகப்போறாங்கனு தான் தெரியல” என்று பதிலளித்த செழியனிடம்

“என்ன மீட்டிங்கா வேணாலும் இருக்கட்டும்… அது எல்லாத்தையும் உடம்பு சரியானதுக்கு அப்புறமா வச்சுக்கலாம்கா.. நீங்க வந்து ரெஸ்ட் எடுங்க” என்று சகோதரியை அவரது அறைக்கு அழைத்துச் சென்றான். அதன்பின் அவனுடன் சிறிதுநேரம் பேசிவிட்டுச் செழியன் கிளம்ப ருத்ரா சஞ்சீவினியின் அறைக்குச் சென்றவன் அவர் தூங்காமல் மொபைலில் யாரிடமோ பேசிக்கொண்டிருக்க விருட்டென்று அறைக்குள் சென்றவன் அவரிடமிருந்து போனை பிடுங்கினான்.

“ருத்ரா! போனை குடுடா.. பிரின்ஸிபால் பேசுறாரு.. டுமாரோ மீட்டிங் பத்தி டிஸ்கஸ் பண்ணிட்டிருக்கேன்”

“ஒன்னும் தேவையில்லக்கா! உனக்கு உடம்பு முடியலை… இப்போ நீ மீட்டிங் அட்டெண்ட் பண்ணியே ஆகணுமா?”

“என் ஒருத்திக்காக மீட்டிங்கை தள்ளிப்போடறது தப்பு ருத்ரா… நான் வேற யாராவது ஒருத்தரை துளி சார்பா அனுப்பலாம்னு யோசிக்கிறேன்… அதுக்குத் தான் பிரின்ஸிபால் கிட்ட பேசிட்டிருந்தேன்”

“அப்பிடியா? அங்கே அப்பிடி என்ன தான் பேசப்போற நீ?”

“கொஞ்சம் சென்சிடிவ்வான டாபிக் ருத்ரா… பால் புதுமையர் அதாவது செக்ஸ் க்வியர் (SEX QUEER) பத்தி பேசணும்னு ரெடி பண்ணி வச்சிருந்தேன்… இந்த மீட்டிங் நடத்துறதோட நோக்கமே ஸ்டூடண்ட்ஸ்கு மத்த ஜெண்டர் பத்தின ஒரு அவேர்னெஸ் கிடைக்கணும்கிறது தான் ருத்ரா… இப்போ இப்பிடி ஆயிடுச்சே”

இவர்கள் பேசிக்கொண்டிருப்பதைக் கேட்டபடியே உள்ளே வந்த இஷானி சஞ்சீவினியிடம் அவருக்காகப் போட்டு எடுத்து வந்திருந்த கஷாயத்தை நீட்டினாள்.

பின்னர் மெதுவாக “மா! நான் வேணும்னா அந்த டாபிக்கைப் பத்தி அந்த மீட்டிங்ல பேசட்டுமா?” என்று கேட்டுவிட்டு ஆர்வத்துடன் சஞ்சீவினியைப் பார்க்க அவர் கஷாயத்தை வாயருகில் கொண்டுச் சென்றவர் குடிக்காமல் அவளைப் பார்க்க ருத்ரா

“சூப்பர் ஐடியாக்கா! இஷி பேசட்டுமே.. சும்மா சும்மா என் கூட சண்டைக்கு வர்றாள்ல! ஒரு நாள் ஸ்டேஜ்ல ஏறிப்பேசட்டுமே” என்று அவளுக்குப் பரிந்து கொண்டு பேசவும்

“ஆமாம்மா! இந்த டாபிக்கைப் பேச என்னை விடச் சரியான ஆள் இருக்க முடியாதும்மா… இதுக்காக நான் ஸ்பெஷலா எதுவும் ப்ரிபேர் பண்ண வேண்டாமே… என்னோட லைஃபை வச்சே அவங்க கிட்ட பேசுவேன்மா” என்றவளை திடுக்கிட்டுப் பார்த்தார் சஞ்சீவினி.

“நீ என்னடா சொல்லுற? நான் உன்னை….” என்றவரின் கரத்தை ஆதரவாகப் பற்றியவள்

“என்னோட உடம்பை பத்தின குழப்பம் எனக்கு எப்போவுமே போகாதும்மா… ஆனா நான் யார்ங்கிறதை நான் ஏன் மறைக்கணும்? இன்னைக்கு என்னை எல்லாருமே ஒரு பொண்ணா பார்க்கிறாங்கனா அது என்னைப் பெத்தவங்க செஞ்ச காரியத்தால தான்… ஆனா எனக்கு தெரியும் நான் ஒரு இண்டர்செக்ஸ்னு… இதுல நான் அசிங்கப்படவோ வெக்கப்படவோ எதுவும் இல்லம்மா!

நான் இந்த வீட்டுக்கு வந்தப்போ நீங்க என் கிட்ட பேசுன வார்த்தைகள் இன்னும் எனக்கு நினைவு இருக்கும்மா… எப்போவுமே ஏன்டா நான் இப்பிடி பிறந்தேனு நான் நினைக்கக்கூடாதுனு நீங்க தானே சொன்னிங்க… கடவுளோட அனுக்கிரகம் இருக்கிறதால எனக்கு நீங்க அம்மாவா கிடைச்சிங்க… ஆனா என்னை மாதிரி இருக்கிறவங்க எல்லாருக்கும் சஞ்சீவினி மாதிரி நம்பிக்கை குடுக்கிற ஒரு அம்மா கிடைக்க மாட்டாங்களே… நீங்க எனக்கு குடுத்த நம்பிக்கையை நான் என்னை மாதிரி இருக்கிறவங்களுக்குக் குடுக்கணும்னு நினைக்கிறேன்மா” என்று தெளிவானக்குரலில் இயம்பிவிட சஞ்சீவினி ருத்ராவிடம் இருந்து போனை வாங்கி தனக்கு பதிலாக தனது மகள் இஷானி அந்த மீட்டிங்கிற்கு தலைமையுரை ஆற்றுவாள் என்று உறுதியளித்துவிட்டார்.

இஷானிக்கு அதைக் கேட்டுச் சந்தோசமாக இருந்தது. அதை அவளால் வார்த்தைகளில் விவரிக்கமுடியவில்லை. ருத்ரா அவளின் முகமாற்றத்தை ஆரம்பத்திலிருந்தே கவனித்தவன் அவளின் மகிழ்ச்சியில் தானும் மகிழ்ந்தவன்

“நீ ரெஸ்ட் எடுக்கா! உன் பொண்ணு நாளைக்கு ஸ்பீச் குடுக்க பிரிப்பேர் பண்ணட்டும்… நானும் ஒரு முக்கியமான வேலையை முடிச்சுட்டு வர்றேன்” என்று சொன்னபடி தமக்கையை ஓய்வெடுக்கச் சொல்லிவிட்டு இஷானியுடன் அந்த அறையிலிருந்து வெளியேறினான்.

வெளிவராண்டாவில் நடக்கும் போதே இஷானியை ஓரக்கண்ணால் கவனித்தவன் “மேடம் ரொம்ப தெளிவா இருக்கிங்க போல?” என்று கேட்க இஷானி அதற்கு உற்சாகமாக ஆமென்று தலையாட்டினாள்.

“இதே தெளிவு எல்லா விசயத்திலும் இருந்தா எனக்குக் கொஞ்சம் வசதியா இருக்கும்” என்று சொன்னவனின் பேச்சில் அவனை யோசனையுடன் பார்த்தவள்

“அப்பிடி என்ன வசதியா இருக்கும்? எனக்கு உங்களோட பேச்சு புரியலை மாமா” என்று கேள்வியாய் நோக்க

“புரிஞ்சா தான் ஆச்சரியம் ஞானசூனியமே… நீயெல்லாம் எப்பிடி எக்சாம்ல பாஸ் பண்ணுன? உண்மைய சொல்லு… நீ எத்தனை அரியர் வச்சிருக்க?” என்று கடுப்பை மறைத்தபடி கேட்டவனிடம்

“ஹலோ! எங்க கிளாஸ்லயே நான் தான் பிரைட் ஸ்டூடண்டாக்கும்” என்று அமர்த்தலாக மொழிந்தவளைக் கண்டு புருவம் உயர்த்தியவன்

“இஸிண்ட்? எவ்ளோ பிரைட்? டியூப் லைட் போட்ட மாதிரி பிரைட்டா இருப்பியா?” என்று கேலி செய்ய

“உங்களுக்கு என் அறிவைப் பார்த்து பொறாமை மாமா! இட்ஸ் ஓகே! உலகமே இப்பிடித் தானே.. ஒருத்தவங்க கொஞ்சம் பிரில்லியண்டா இருந்துட கூடாது… உடனே அவங்களை மட்டம் தட்டி உக்கார வைக்கப் பார்க்கும்” என்று சொல்லிவிட்டு அவனுக்குப் பழிப்பு காட்டியவள் தனது அறையை நோக்கி உற்சாகமாய் நடைப்போட்டாள்.

உண்மையிலேயே அவள் இன்று மகிழ்ச்சியில் மிதந்தாள் எனலாம். நாளை அவள் மேடையில் பேசப்போகிறாள், அதுவும் தன்னைப் பற்றி, தன்னைப் போன்றவர்களைப் பற்றி. இதுவரை இருந்த தயக்கங்கள், பயம், குழப்பம் எல்லாம் விடைபெற அவள் மனது நிர்மலமாக இருந்தது. நாளை பேச வேண்டிய தலைப்புகள் பற்றி சிறுகுறிப்பு மட்டும் எடுத்துக் கொண்டவள் மறுநாள் எப்போது விடியும் என்ற காத்திருப்புடன் கண்ணுறங்கினாள்.

காலையில் நடனவகுப்பு இல்லையென்று அஸ்மிதா மூலம் தகவல் அனுப்பிவிட்டு அரசு கல்லூரியில் நடக்கவிருக்கும் மீட்டிங்குக்குச் செல்லத் தயாராக ஆரம்பித்தாள். எட்டுமணி வாக்கில் எளிமையான காட்டன் சுடிதாரில் கம்பீரமாக இறங்கிவந்தவளின் முகத்தில் எப்போதும் இருக்கும் மிரட்சி அன்றைக்கு விடுமுறை எடுத்திருந்தது.

இஷானியை அவ்வளவு தெளிவான முகத்துடன் பார்த்ததில் அனைவருக்கும் மகிழ்ச்சியே! காலையுணவை முடித்துக்கொண்டு கிளம்பத் தயாரானவள் அலமேலு, ராஜகோபாலனிடம் ஆசிர்வாதம் வாங்கிக் கொண்டாள். அஸ்மிதா ஆசிர்வதிப்பது போல கைகாட்ட அவளை அணைத்துக் கொண்டாள் இஷானி.

“தைரியமா போயிட்டு வா இஷி… மாமா தான் இன்னைக்கு உன் கூட வரப் போறாரு” என்று சொல்லவும் இஷானி யோசனையுடன் ருத்ராவைப் பார்க்க அவனும் ஆமென்று தலையாட்டினான்.

அதோடு “அஜ்ஜூவை ஸ்கூல்ல டிராப் பண்ணிடு அஸ்மி… அவன் இன்னும் எழுந்திருக்கல.. கண்டிப்பா மிஸ் கிட்ட திட்டு வாங்குவான்.. நீ கொஞ்சம் கிளாஸ் மிஸ் கிட்ட பேசி அவனை ஸ்கூல்ல விட்டுட்டு வா” என்று மருமகனைப் பள்ளிக்குத் தயார் செய்யும் பணியை அஸ்மிதாவிடம் ஒப்படைத்தான் அவன்.

ராஜகோபாலன் அவனிடம் “என் பேத்தியைப் பத்திரமா கூட்டிட்டுப் போடா” என்று கட்டளையிட இருவரும் வீட்டினருக்கு டாட்டா காட்டிவிட்டு  ருத்ராவின் காரில் கிளம்பினர்.

தண்மதி ஒளிர்வாள்🌛🌛🌛