🌞 மதி 33 🌛

ஆசியாவிலும், இந்தியாவிலும் முதல் முறையாக தமிழ்நாடு இடையிலிங்க குழந்தைகளுக்குச் செய்யப்படும் பால் தேர்வு அறுவை சிகிச்சையை தடை செய்யும் அரசாணையை 13.08.2019 அன்று பிறப்பித்தது. உலகளவில் இச்சிகிச்சையைத் தடை செய்த இரண்டாவது பிரதேசம் தமிழ்நாடு தான்.

ருத்ரா அன்று காலை எழும் போதே தெளிந்த மனநிலையுடன் இருந்தான். சந்திரசேகர், வினாயகமூர்த்தி, மந்தாகினியின் கோரிக்கைகள் அவனுக்கும் நியாயமாகவே தோணியது. மிஞ்சி மிஞ்சி போனால் ஒரு மாதம் அவர்கள் ஆஸ்திரேலியாவில் தங்க வேண்டியிருக்குமா? அது வரை ஆர்.எஸ்.கெமிக்கலின் தினசரி மேலாண்மையைப் பார்ப்பது ஒன்னும் அவனுக்குக் கடினம் அல்லவே.

அதே மனநிலையுடன் குளித்து அலுவலகத்துக்குத் தயாரானவன் அர்ஜூனையும் பள்ளிக்குத் தயார் செய்துவிட்டு அவனுடன் கீழே இறங்கிச் சென்றான். உணவு மேஜையில் இருந்த மூவரைக் கண்டதும் அர்ஜூனின் முகம் பாகற்காய் கடித்ததைப் போல மாற அம்மூவரும் அவனது முகபாவத்தைக் கண்டும் காணாதது போல நடித்தனர்.

ருத்ராவின் கரங்கள் அர்ஜூனின் தோளில் அழுத்தத்துடன் பதிய மாமாவின் முகத்தைப் பார்த்தவன் அவனது முகபாவத்தைச் சரி செய்து கொண்டான். இருவரும் உணவுமேஜையில் நாற்காலியை இழுத்துவிட்டு அமரவும் மந்தாகினி தொண்டையைச் செருமிக் கொண்டார்.

அர்ஜூனை வாஞ்சையுடன் நோக்கி “அஜ்ஜூ கண்ணா! அம்மா, அப்பா, பெரிய மாமா மூனு பேரும் ஆஸ்திரேலியா போகப் போறோம்… வர்றப்போ உனக்கு அங்க இருந்து என்ன வாங்கிட்டு வரணும்?” என்று கேட்க

அவனோ “ஒன்னும் வேண்டாம்… நான் உங்க கிட்ட போன வாரம் எனக்கு பேரண்ட்ஸ் மீட்டிங் இருக்குனு கூப்பிட்டதுக்கு நீங்க வர்றேனு சொல்லி என்னை சீட் பண்ணின மாதிரி இப்போவும் சீட் பண்ணுவிங்க… ஐ டோண்ட் வாண்ட் எனிதிங் ஃப்ரம் யூ மாம்” என்று தெளிவாகக் கூறிவிட்டுத் தட்டில் கண் பதித்தான்.

மந்தாகினி அவன் பேசியதில் கண் கலங்கியவர் மகன் தானே என்று எண்ணிச் சமாதானமுற்றவராய் “அஜ்ஜூ இப்போலாம் சிந்தாம சாப்பிடுறானே! என் செல்லம்” என்று பேச்சை மாற்ற

அவனோ “நம்ம சாப்பிடுற ஒவ்வொரு பருக்கையிலயும் நம்மளோட நேம் எழுதியிருக்குமாம்… நம்ம வேஸ்டா சிந்துற பருக்கையை காட் பார்த்துட்டாருனா அதுல நம்ம நேம் இருக்கிறத வச்சு நம்மளை கண்டுபிடிச்சு பனிஷ் பண்ணுவாராம்… அதனால சிந்தாம சாப்பிடணும்னு இஷிக்கா தான் சொன்னா” என்று சொல்லவும் சந்திரசேகர் மந்தாகினியின் முகத்தில் சங்கடமான ஒரு உணர்வு இழையோடியது.

வினாயகமூர்த்திக்கோ சஞ்சீவினி சம்பந்தப்பட்ட யாருடைய பெயரையும் கேட்டாலே எரிச்சல் வந்துவிடும். இம்முறையும் “அந்தப் பொண்ணு நம்ம சஞ்சு வீட்டுக்கு வந்ததுக்கு அப்புறம் தான் நல்ல சாப்பாடு சாப்பிடுது… அதுக்கு முன்னாடி சாப்பாட்டுக்கு வழியில்லாம இருந்திருக்கும் போல… அப்பிடிப்பட்டவங்க இந்த மாதிரி தான் அல்பதனமா அட்வைஸ் பண்ணுவாங்கடா மருமகனே… நீ அதை பிடிச்சிட்டுத் தொங்குவியா?” என்று விளையாட்டாகச் சொல்வது போல இஷானியை மட்டம் தட்ட, ருத்ரா சாப்பாட்டை வாய் வரை கொண்டு சென்றவன் கையை கீழே இறக்கினான்.

“அம்மா இறந்ததுக்கு அப்புறம் நானும் மந்தாக்காவும் கூட தான் அடுத்தவேளை சாப்பாட்டுக்கு வழியில்லாம இருந்தோம்… அப்போ எங்களுக்கு அல்பபுத்தினு சொல்லுவிங்களாண்ணா? அவ யாரோ என்னவோ, ஆனா சொன்ன விஷயம் சரி தானே! அதுக்குப் பாராட்டலைனா கூட பரவால்ல. மட்டம் தட்டாதிங்க” என்று சொல்லிவிட்டுச் சாப்பிடாமலே கை கழுவினான்.

அவன் சாப்பாட்டை வீணடிப்பதை விழி விரித்துப் பார்த்த மருமகனிடம் “எனக்கு காட் பனிஷ்மெண்ட் குடுத்தா நான் அனுபவிச்சுக்கிறேன் அச்சு… மாமா பிக் பாய் தானே” என்று சமாதானம் செய்துவிட மந்தாகினி விநாயகமூர்த்தியை ஏன் இப்படி என்பது போல பார்த்துவிட்டு சாப்பிட ஆரம்பித்தார்.

அனைவரும் சாப்பிட்டு முடிக்கும் வரை காத்திருந்தவன் சந்திரசேகர் வரவும் அவரிடம் “நீங்க ஆஸ்திரேலியா போயிட்டு திரும்பி வர்ற வரைக்கும் நான் ஆல்டர்னேட் டைரக்டரா இருக்கேன் மாமா” என்று தெளிவான குரலில் கூற சந்திரசேகருக்கு உண்டான மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. ருத்ராவைக் கட்டிக்கொண்டவர்

“ஐ ஃபீல் வெரி வெரி ஹாப்பி யங் மேன்… இனிமே நாங்க நிம்மதியா கான்பரன்ஸ்ல கலந்துக்கலாம்” என்று பெரும் சுமை இறங்கிய நிம்மதியுடன் கூறினார்.

அவனது முடிவைக் கேட்டு மந்தாகினிக்கும் வினாயகமூர்த்திக்கும் கூட மகிழ்ச்சியே. வினாயகமூர்த்தி தான் உணவு வேளையில் பேசியதற்காக அவன் பதிலடி கொடுத்ததை வைத்து அவன் இந்த ஏற்பாட்டுக்கு ஒத்துக்கொள்ள மறுத்துவிடுவானோ என்று மனதைப் போட்டுக் குழப்பிக் கொண்டவர் தம்பியின் பதிலில் மனம் குளிர்ந்தார்.

“என்ன இருந்தாலும் இரத்தப்பாசம் தான் ஜெயிச்சிருக்கு மந்தா… கூடப்பிறந்தவங்களும் சொந்தக்காரங்களும் கஷ்டப்பட்டா அவன் மனசு தானா துடிக்குது பார்த்திங்களா சேகர்?” என்று இளையச்சகோதரனைப் பற்றி பேசிப் பெருமிதப்பட்டுக்கொண்டார்.

அதன் பின்னர் ருத்ரா வழக்கம் போல அர்ஜூனை பள்ளியில் இறக்கிவிட்டவன் அவனது அலுவலகத்தை நோக்கி சென்றான். காரை பார்க்கிங்கில் விட்டவன் மகிழ்ச்சியுடன் தனது அலுவலக அறையை அடைந்தான். அங்கே அவனுக்கு முன்னரே வந்திருந்த வெங்கட்டிடம் தான் ஆர்.எஸ் கெமிக்கலின் ஆல்டர்னேட் டைரக்டராகச் சிறிதுகாலத்துக்கு நியமிக்கப்படவுள்ளதை உரைத்துவிட்டு

“இந்த கொஞ்சநாளுக்கு நீ தான் ஜீவனைப் பார்த்துக்கணும்டா… ஐ அம் ரியலி சாரி… உன் மேல பெரிய பாரத்தைச் சுமத்துறேனு புரியுது.. பட் ஐ டோன்ட் ஹேவ் எனி ஆப்சன்டா” என்று சொல்ல

வெங்கட் “டேய் என் கிட்ட சாரி சொல்லுற அளவுக்கு நீ பெரியமனுசன் ஆகிட்டியாடா? இனிமே உன் கூட பேசுனேனா என்னன்னு கேளு” என்று முறுக்கிக் கொள்ள ருத்ரா காலில் விழாத குறையாக அவனிடம் கெஞ்சி கூத்தாடி தான் சாரி கேட்டது தப்பு தான் என்று சொன்ன பிறகு தான் அவன் மலையிறங்கினான்.

அதன் பின்னர் தான் ருத்ரா அவனுக்குத் தான் இந்த முடிவு எடுத்ததற்கான காரணத்தை விளக்கினான். அதைக் கேட்ட பின்னர்

“அப்போ ஆர்.எஸ்.கெமிக்கல்ஸோட ஷேரை வாங்கினது யாருனு உனக்குத் தெரிஞ்சு போயிடுச்சுல்ல, இதே போல மிஸ்டர் சந்திரசேகருக்கும் தெரிஞ்சிருக்கலாம்ல ருத்ரா?” என்று வெங்கட் சந்தேகத்துடன் கேட்க

“அப்பிடி தெரிஞ்சிருந்துனா அவர் இப்பிடி ரிலாக்ஸா கான்பரன்ஸ் அட்டெண்ட் பண்ணுறேனு சொல்லிட்டு ஆஸ்திரேலியா போக ரெடி ஆகியிருக்க மாட்டாரு.. என் அண்ணாவும் சேகர் மாமாவும் பேருமா சேர்ந்து எதாவது கிரிமினல்தனம் பண்ணிருப்பாங்க.. மந்தாக்கா இதால டென்சன் ஆகியிருப்பா… வீட்டுல கொஞ்சம் போல ஒட்டியிருக்கிற சந்தோசமும் காணாம போயிருக்கும்… இப்பிடி எதுவும் இதுவரைக்கும் நடக்கலையே.. அதனால அவருக்கு விசயம் தெரிஞ்சிருக்கிறதுக்கான வாய்ப்பு ரொம்ப கம்மி” என்றான் ருத்ரா உறுதியாக.

ஆனால் அப்படி பெரும்பான்மை பங்குகள் வேறு ஒரு நபரின் கைக்குச் செல்லும் போது நிறுமத்தின் மேலாண்மை கைமாற வாய்ப்புள்ளது என்பதை புரிந்து கொண்டான் ருத்ரா.

காலம் எனும் ஆசான் தவறிழைத்தவர்களுக்குத் தண்டனை கொடுக்க முடிவு செய்த பிறகு சாதாரண மனிதனான அவனால் மட்டும் அதை தடுக்கவா முடியும்? அடுத்து நடக்கப்போகிற சம்பவங்கள் அனைவரின் வாழ்விலும் உண்டாக்கப் போகிற சாதக பாதகங்களை நேரம் வரும் போது கவனித்துக் கொள்ளலாம் என்று ஒதுக்கிவைத்து விட்டான்.

அதே நேரம் இதெற்கெல்லாம் காரணகர்த்தாவான தேவ் மகிழ்ச்சியின் உச்சியில் இருந்தான். ஏனெனில் அஸ்மிதாவின் பெயரிலிருக்கும் பங்குகளை அவன் பெயருக்கு மாற்றுவதற்கான பங்கு மாற்ற பத்திரத்தில் (SHARE TRANSFER DEED) அஸ்மிதாவின் கையெழுத்து பெறப்பட்டுவிட்டது. அதோடு அவளது பெயரிலிருக்கும் பங்கு சான்றிதழ் (SHARE CERTIFICATE) என அனைத்தும் இப்போது அவன் கைவசம் வந்துவிட்ட மகிழ்ச்சி.

ஆனால் அதை முழுமையாக அனுபவிக்க முடியாதபடி நிறுமத்தின் விதிகள் அவனைப் பாடாய்படுத்தியது. சம்பந்தப்பட்டவளிடமே இவ்வளவு சுலபமாக கையெழுத்து வாங்கியாயிற்று, இனி அந்த நிறுமத்தின் போர்டை சமாளிப்பது தான் அவனது அடுத்த சவால். அதிலும் அவன் எதிர்பார்த்த மாற்றம் கூடிய விரைவில் வரப்போவதை அறிந்து தான் அவன் இப்போது மகிழ்ச்சிக்கடலில் மிதந்து கொண்டிருந்தான்.

அவனது முகத்தில் தெரிந்த சந்தோசம் அவன் எதிரில் நின்று கொண்டிருந்த பாலாவின் முகத்திலும் பிரதிபலிக்க

“சார்! அப்போ நான் சாயந்திர ட்ரெயினுக்கு ஊருக்குக் கிளம்புறேன்… இங்க வந்ததுக்கு ஏதோ என்னாலான உதவியை உங்களுக்குப் பண்ணிட்டேன்… ஆனா அன்னைக்குக் கொஞ்சம் பலமா அடிச்சிட்டேன் சார்..” என்று வருத்தத்துடன் கூற தேவ்வும் அதை ஆமோதித்தான்.

“ஆனா நான் தான் சொன்னேன்ல பாலா, இரக்கம் பார்த்தா காரியம் நடக்காதுனு… நீங்க அப்பிடி நடந்துக்கலனா அந்தப் பொண்ணு கையெழுத்து போட்டிருக்கவே மாட்டால்ல” என்று தேவ் கேட்கவும் பாலா ஆமென்று தலையசைத்தான்.

“எவ்ளோ சீக்கிரமா முடியுதோ அவ்ளோ சீக்கிரமா நீங்க சென்னையை விட்டுப் போயிடுங்க பாலா… நீங்க பண்ணுன உதவியை நான் எப்போவுமே மறக்கமாட்டேன்” என்று சொன்னவன் சற்று இறங்கியக்குரலில்

“வீட்டை பத்திரமா பார்த்துக்கோங்க… என் மனுவோட ஜீவன் அந்த வீடு தான்” என்று உணர்ச்சியை மறைத்தபடி கூற முயன்று தோற்றான்.

பாலா அவன் அருகில் வந்தவன் அவன் தோளைத் தட்டிக்கொடுத்தபடி “ஜீவா சார் அடிக்கடி சொல்லுவாரு உங்களை மாதிரி ஒருத்தர் மாப்பிள்ளையா கிடைக்க குடுத்து வச்சிருக்கணும்னு… தேவிக்கு அந்த அதிர்ஷ்டம் இருந்துருக்கு,… ஆனா விதி அவளை முழுசா அந்த அதிர்ஷ்டத்தை அனுபவிக்க விடல… அதுக்காக நீங்க இப்பிடியே இருந்துடாதிங்க சார்… அன்னைக்கு” என்றவனை இடைமறித்தான் தேவ்.

“என்னால இன்னும் எந்த முடிவுக்கும் வர முடியல பாலா… என் கவனம் எல்லாமே இப்போ ஆர்.எஸ் கெமிக்கலோட மேனேஜ்மெண்டை என் கைக்கு கொண்டு வர்றதுல தான் இருக்கு… அது நடந்துச்சுனா மத்த விசயங்களை பார்க்கலாம்” என்றான் மொட்டையாக.

பாலாவும் அதற்கு மேல் அவனை வற்புறுத்தவில்லை. அவனைப் பொறுத்தவரைக்கும் அவர்களின் ஊரின் நலனுக்காக அவனால் முடிந்த உதவியை தேவ்விற்கு செய்துவிட்டான். அதோடு இளம்வயதிலிருந்தே உடன்பிறவா தங்கையாகப் பழகி வந்த மானசாவின் இறப்புக்குப் பழிவாங்க தேவ்விற்கு அவனும் சிறு துரும்பால உதவியுள்ளான் என்ற மகிழ்ச்சியே வாழ்நாள் முழுமைக்கும் போதுமென்ற எண்ணத்துடன் கிளம்பினான் பாலா.

அவன் சென்றபின்னர் கண்களை இறுக மூடிக்கொண்ட தேவ்வின் மனக்கண்ணில் வந்தவள் மானசா தேவி.

“மானசா தேவினு அழகான நேமை சுருக்கி மானசா ஜீவனாந்தம்னு சொல்லி ஊரை ஏமாத்திட்டிருக்க… அப்பிடி தானே”

“ஹலோ! இந்த ஏமாத்துறது, பித்தலாட்டம் பண்ணுறதுலாம் உங்களை மாதிரி கார்பரேட்காரங்களோட வேலை… வீ ஆர் காமன் பீபிள்… நாங்க எங்களோட அடையாளத்தை மறைச்சுக்க வேண்டிய அவசியம் இல்ல”

“இஸிண்ட்? சரிம்மா தேவி, போய் ஒரு கப் காபி கொண்டு வா பார்ப்போம்”

“லாஸ்ட் வார்னிங் இது, இனிமே என்னை தேவினு கூப்பிடாதிங்க… அது எங்க அப்பா மட்டும் கூப்பிடுறதுக்குனு ரிசர்வ் பண்ணி வச்சதாக்கும்…. கால் மீ மானசா ஜீவானந்தம்”

ஆட்காட்டிவிரலை நீட்டி அவனை எச்சரித்தவளின் குரல் இன்றும் அவன் காதில் நீங்காத ரீங்காரமாய் ஒலிப்பது போன்ற பிரம்மை.

அவளுக்குக் கோபம் வருமென்று தெரிந்தே அவளை தேவி என்று அழைத்து வெறுப்பேற்றுவான் அவன். அப்போதெல்லாம் அவள் கடுகடுப்புடன் முறைப்பதைப் பார்க்க அவனுக்குத் தெவிட்டியதே இல்லை. சுற்றுச்சூழல் பாதிப்பு, மாசுபாடுகள் என்று பக்கம் பக்கமாக அவனுக்கு வகுப்பு எடுக்கும் போது பெரிய பெண்ணாகத் தோற்றமளிப்பவள் தேவி என்ற அழைப்பு அவன் வாயிலிருந்து வரும் போதெல்லாம் அவன் சிகையைப் பிடித்து ஆட்டி வைக்கும் சமயங்களில் சிறுபெண்ணைப் போல நடந்து கொள்வாள்.

ஒரு பக்கம் அவள் புவிவெப்பமயமாதல் பற்றி பேசி அவனைக் கடுப்பாக்கினாள் என்றால், தேவ் அவளிடம் தொழில்மயமாக்கல் இல்லையென்றால் அவள் கன்யாகுமரியிலிருந்து சென்னைக்கு மாட்டுவண்டியில் தான் வந்திருக்க வேண்டும் என்று கேலி செய்வான். இருவரது வாக்குவாதங்களும் கிட்டத்தட்ட வார்த்தைப்போர் தான் என்றாலும் அதில் அடுத்தவர் மனதை வருத்தும் வார்த்தைகள் இடம்பெறாது. இருவரும் அவரவர் தரப்பை நியாயப்படுத்த முயன்று கடைசியில் நடுநிலைக்கு வந்து நிற்பர்.

அந்த வாக்குவாதங்கள் எல்லாம் அவனைப் பொறுத்தவரைக்கும் பொக்கிஷங்கள். மானசாவுடன் அவன் கழித்த ஒவ்வொரு நிமிடமும் அவன் வாழ்வின் பொன்னான தருணங்கள். அவள் இருக்கும் போது கேலியாகத் தெரிந்த அவளின் கொள்கைகளும் கோட்பாடுகளும் அவளது மறைவுக்குப் பின்னர் தேவ்விற்கு உயிர்மூச்சாகிப் போனது. என்னவளின் ஆசையையும் கனவையும் அவள் இல்லையென்றாலும் நான் நிறைவேற்றி வைப்பேன் என்று சூளுரைத்துக் கொண்டு தான் தேவ் ஒவ்வொரு நாளையும் ஆரம்பிக்கிறான் கடந்த நாலு வருடங்களாக.

அவனால் முடிந்தவரை மானசா கூறியவற்றை அவனது குழுமத்தின் அனைத்து தொழிற்சாலைகளிலும் கடைபிடித்தவன் தற்போது ஆர்.எஸ் குழுமத்தின் ஆணிவேரான ஆர்.எஸ் கெமிக்கலின் பங்கு மாற்ற பத்திரங்களுடன் யோசனையில் ஆழ்ந்துவிட்டான்.

அதே நேரம் ஆஸ்திரேலியாவுக்குச் செல்வதற்கான ஏற்பாடுகளை முடிக்குமாறு ரிஷிக்கு கட்டளையிட்டவன் அந்த கான்பரன்சின் முக்கியத்துவத்தை உணர்ந்திருந்ததால் அதில் கண்டிப்பாக கலந்துகொள்ள வேண்டும் என்ற அவனது முடிவைத் தாத்தாவிடமும் கூறிவிட்டான். சங்கரராமனும் அதற்கு மேல் பேரனை வற்புறுத்தவில்லை.

தேவ்வின் இந்த முயற்சிகளை அனைத்தையும் மௌனமாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார் விஸ்வநாதன். அவ்வபோது மகனிடம் “நீ போற டிராக் சரியில்ல தேவ்… கவனமா இரு” என்று எச்சரிக்கவும் தவறவில்லை. தந்தையின் பயம் அர்த்தமற்றது என்றாலும் அவரது உணர்வுகளைக் காயப்படுத்த விரும்பாத தேவ் அவர் சொன்னதற்கும் தலையாட்டி வைத்தான்.

தண்மதி ஒளிர்வாள்🌛🌛🌛