🌞 மதி 31🌛

டைட்டானியம் டை ஆக்சைடு வெப்பத்தை தாங்கக் கூடியது. சூரிய புற ஊதாக்கதிர்களை கிரகிக்கும் தன்மை கொண்டது. எனவே தான் சன் ஸ்க்ரீன் தயாரிப்பில் இது முக்கியப்பங்கு வகிக்கிறது.

கே.கே. மருத்துவமனை..

நெற்றியில் சிறுகட்டுடன் பெட்டில் கால் நீட்டி அமர்ந்திருந்தான் ஜெய். அவனருகில் ஒரு முக்காலியில் கன்னத்தில் கைவைத்து அமர்ந்தபடி அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள் அஸ்மிதா. பயப்படும் படி ஒன்றுமில்லை என்று சொல்லிவிட்டனர். டிஸ்சார்ஜ் செய்வதற்கான வழிமுறைகளை முடித்துவிட்டு வந்தவள் மருத்துவர் கமலகண்ணனிடம் சொல்லிவிட்டுக் கிளம்புவதற்காக இருவரும் காத்திருந்தனர். அவரிடம் சஞ்சீவினிக்கு இந்த விசயம் தெரியவேண்டாம் என்று கேட்டுக்கொள்ள தான் அஸ்மிதா காத்திருந்தாள். ஜெய்யோ அடிபட்டு வந்தவனை காவல்நிலையம் வரை அலையவிடாமல் சிகிச்சை அளித்ததற்கு நன்றி கூறுவதற்காகக் காத்திருந்தான்.

அஸ்மிதா அவனை குறுகுறுவென்று பார்க்கவும் அவனால் அவள் பார்வையை எதிர்கொள்ள இயலவில்லை. தனக்காகப் படித்துப் பார்க்காமல் பத்திரத்தில் கையெழுத்திட்டவளின் காதல் ஏற்படுத்திய திகைப்பே இன்னும் அவனுக்கு அடங்கவில்லை. இதில் அவனை மருத்துவமனையில் சேர்த்து அன்புடன் அருகிருந்து பார்த்துக் கொண்டவளுக்குத் தான் எங்ஙனம் நன்றிக்கடனைத் திருப்பிச் செலுத்தப் போகிறோம் என்று மனதிற்குள் மறுகினான் அவன்.

அஸ்மிதா அவனது மனதிற்குள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போராட்டத்தை அறியாதவள் அவன் இன்னும் பயந்து போய் தான் இருக்கிறான் போல என்று எண்ணிக்கொண்டு அவனுக்கு அறிவுரை சொல்ல ஆரம்பித்தாள்.

“உத்தியோகம் மட்டுமில்ல, தைரியமும் புருசலெட்சணம் தான்… நீ ஏன் இவ்ளோ பயந்தாங்கொள்ளியா இருக்கடா? இதுல கார்பரேட் கம்பெனியில மேனேஜராம் இவன்” என்று கிண்டல் செய்த அஸ்மிதாவை பரிதாபமாகப் பார்த்தான் அவன்.

அவனது பரிதாபமான முகம் அவளுக்குள் இஷானியை நினைவூட்ட உள்ளுக்குள் உருகியபடி அவன் தோளில் கைவைத்தவள் “லிசன் ஜெய்! வாழ்க்கையில நமக்கு வர்ற பிரச்சனைகளைச் சமாளிக்க நம்ம தைரியமா இருக்கிறது ரொம்ப அவசியம்… நீ இவ்ளோ பயந்தவனா இருந்தா ஒன்னும் பண்ண முடியாதுடா… ஒரு நாலு பேரை உன்னால பேசி சமாளிக்க முடியாம கன்னத்துல, நெத்தியில அறை வாங்கிட்டு வந்திருக்க… நீ எப்பிடி வருங்காலத்துல பிரச்சனைகளை ஃபேஸ் பண்ணுவ?” என்று அமைதியாக அவனுக்கு அறிவுரை சொன்னவளைப் புன்னகையுடன் ஏறிட்டான் ஜெய்.

தனக்காக இன்றைக்கு அவள் செய்த காரியயத்தை நினைத்துப் பார்த்தவன் தன் தோளில் இருந்த அவளது கரத்தைப் பிடித்துத் தன் கன்னத்தில் அழுத்திக் கொண்டபடி “நீங்க என் கூட இருக்கிங்கல்ல அஸ்மி… நீங்க என்னைப் பார்த்துக்க மாட்டிங்களா? இன்னைக்கு அந்த ரவுடிப்பசங்க கிட்ட இருந்து காப்பாத்துன மாதிரி வாழ்க்கையில எனக்கு வரப்போற எல்லா பிரச்சனைகளை நீங்க பார்த்துக்க மாட்டிங்களா?” என்று கேட்ட அந்த ஆறடி உயர மனிதனின் அப்பாவித்தனத்தில் எப்போதும் போல தொலைந்து போனாள் அஸ்மிதா.

பின்னர் சுதாரித்தவள் “அது சரி! கதை, சினிமால்ல எல்லாம் ஹீரோ தான் ஹீரோயினைக் காப்பாத்துவான்… இங்கே எல்லாம் தலை கீழ இருக்குடா… பட் கவலைப்படாதே ஜெய்.. நான் உன்னைப் பத்திரமா பார்த்துப்பேன்” என்று அவனுக்கு வாக்களித்தவளை பெட்டில் இருந்தபடியே இறுக்கமாக அணைத்துக் கொண்டான் ஜெய்.

“எனக்குத் தெரியும் அஸ்மி” என்று அவனது உதடுகள் முணுமுணுத்து அடங்கின. அஸ்மிதா அவனது தோளைத் தட்டிக்கொடுத்தவள் பின்னர் தாங்கள் இருப்பது மருத்துவமனையில் என்பது புத்தியில் உறைக்கவும்

“ஹலோ! நம்ம ஹாஸ்பிட்டல்ல இருக்கோம் மிஸ்டர் டேமேஜர்… கொஞ்சம் விடுயா என்னை” என்று சொல்லவும் ஜெய் பதறியவனாய் விலகிக் கொண்டான். அவனது பதற்றத்தில் சிரிப்பு பீறிட்டுக் கொண்டு வர சத்தம் போட்டு நகைத்தாள் அஸ்மிதா.

அதன் பின்னர் கமலகண்ணனிடம் நன்றி சொல்லிவிட்டுக் கிளம்பியவர்கள் நேரே போய் நின்ற இடம் ஜெய்யின் அப்பார்ட்மெண்ட். அவனை ஓய்வெடுக்குமாறு சொல்லிவிட்டு வீட்டுக்குக் கிளம்பினாள் அவள்.

சில நாட்களில் அவன் பூரண குணமடைய அந்த ரௌடி கும்பலைப் பற்றி காவல்துறையில் புகார் அளிக்கலாம் என்று அஸ்மிதா எவ்வளவோ எடுத்துக் கூறியும் ஜெய் அதைக் கேட்க மறுத்துவிட்டான்.

“எப்பிடிங்க கம்ப்ளைண்ட் குடுக்கமுடியும்? நீங்க சைன் பண்ணுன ஸ்டாம்ப் பேப்பர்ல என்ன எழுதிருந்துச்சுனு நீங்க வாசிக்கல… அதுல அவங்க ஏடாகூடமா எதாவது கிளாஸ் ஆட் பண்ணியிருந்தா நம்ம குடுக்கிற கம்ப்ளைண்ட் நமக்கே ஆபத்தா போய் முடியும்… அதோட அந்த ஆளு உங்க கிட்ட சொன்னதை நீங்க மறந்துட்டிங்களா? அவங்களோட ஆட்கள் போலீஸ் டிபார்ட்மெண்ட்லயும் இருக்காங்க… நம்ம கம்ப்ளைண்ட் குடுக்கப் போன அடுத்த நிமிசம் அவங்களுக்குத் தெரிஞ்சுடும் அஸ்மி… சோ இதோட இந்தப் பிரச்சனையை விடுங்க… நான் கரெக்டா இன்ட்ரெஸ்ட் பே பண்ணிட்டு அந்த ஸ்டாம்ப் பேப்பர்ஸை அவங்க கிட்ட இருந்து வாங்கி உங்களுக்குத் திருப்பிக் குடுத்துடுவேன்.. குடுத்தா தான் என்னால நிம்மதியா இருக்க முடியும்” என்று வெளிப்படையாகக் கூறிவிட்டான்.

அதன் பின்னர் வந்த நாட்களில் தான் இப்படி ஒரு ரௌடி கும்பலிடம் என்னவென்று படித்துப் பார்க்காமல் முத்திரைத்தாளில் கையெழுத்திட்டதை அஸ்மிதா கிட்டத்தட்ட மறந்தே போய்விட்டாள்.

அதே நேரம் தனது காதலை வீட்டில் சொல்லும் தருணத்துக்காகக் காத்திருந்தாள் அவள். ஜெய் தான் அவசரப்பட வேண்டாமென்று அவளுக்கு அறிவுறுத்தியிருந்தான். நாட்கள் அதன் போக்கில் கடக்க இன்னுமே அவன் அஸ்மிதாவிடம் தன் காதலை உரைக்கவில்லை. ஆனால் ஒவ்வொரு முறை அவளைக் காணும் போது அவன் கண்ணில் உண்டாகும் ஒளியே அவளுக்குப் போதுமென்றிருக்க அவனிடம் இருந்து வாய் வார்த்தையாக எந்த ஒப்புதலையும் பெற வேண்டுமென்று அவளுக்குத் தோணவில்லை. ஏனெனில் ஜெய் அவளது காதல் வேண்டாமென்று மறுப்பவனாக இருந்தால் அன்றைக்கு மருத்துவமனையில் அணைத்திருக்க மாட்டான் என்பது அவளின் எண்ணம்.

அதோடு வருங்காலம் குறித்தக் கனவுகளை அவனிடம் பகிரும் போது அவனும் கூடச் சேர்ந்து அவற்றை எல்லாம் ரசிக்கத் தான் செய்தானே தவிர தனக்கு அப்படி எந்த எண்ணமுமில்லை என்பதை அவன் இது வரை கூறியதில்லை.

அவ்வாறிருக்கையில் அன்று பிரதோச தினம். மாலையில் ஜெய்யை வீட்டுக்கு அழைத்து வந்து சஞ்சீவினியிடம் காதல் விஷயத்தைத் தெரிவித்து விடலாமென்று திட்டமிட்ட அஸ்மிதா அவனுக்குப் போன் செய்து விவரத்தைக் கூறிவிட்டாள். அவனும் அலுவலகம் முடிந்த கையோடு சஞ்சீவினி பவனத்துக்கு வந்துவிடுவதாகக் கூறிப் போனை வைத்துவிட்டான்.

அஸ்மிதா ஜெய்காக காத்திருக்கையில் வீட்டின் காம்பவுண்டுக்குள் கார் வரும் சத்தம் கேட்டு ஓடிச்சென்று எட்டிப்பார்த்தவளுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. ஏனெனில் காரை நிறுத்திவிட்டு வந்தவன் ருத்ரா. இந்நேரத்தில் இவன் இங்கே என்ன செய்கிறான் என்ற யோசனையுடன் அவனை வரவேற்றாள் அஸ்மிதா.

“வாங்க மாமா! என்ன சர்ப்ரைஸ் விசிட்? இரண்டு வாரமா ஆளையே காணுமே” என்று வினவியவளிடம்

“கொஞ்சம் ஒர்க் டைட்டா போகுது அஸ்மி… ஆமா வீட்டுல யாரையுமே காணுமே? எங்கே போயிருக்காங்க?” என்று கேட்டபடி வராண்டாவில் காலடி எடுத்துவைத்தவன் அவளுடன் சேர்ந்து வீட்டினுள் நுழைந்தான்.

அஸ்மிதா அனைவரும் பிரதோசவழிபாட்டுக்குக் கோயிலுக்குச் சென்றிருப்பதாகக் கூறவும் சரியென்றவன் அஸ்மிதாவிடம் குடிக்கத் தண்ணீர் கேட்க அவள் சமையலறையை நோக்கிச் சென்றாள். அங்கே சென்றவளுக்கு ஜெய்யிடம் இருந்து போன் வரவே அவன் அலுவலகத்தில் இருந்து திரும்பிவிட்டானா என்று கேட்டபடியே பேச ஆரம்பித்தவள் அவனுடன் பேசிய சுவாரசியத்தில் ருத்ராவை மறந்தாள். கிட்டத்தட்ட பதினைந்து நிமிடங்கள் தொடர்ந்த அந்த பேச்சு முடியவும் தான் “ஐயோ மாமா தண்ணி கேட்டது கூட மறந்து போச்சு” என்று தலையிலடித்துக் கொண்டாள் அஸ்மிதா.

அவள் ஹாலுக்குத் தண்ணீருடன் திரும்பும் போது ருத்ராவின் நெற்றியில் வியர்வைப்பூக்கள் பூத்திருக்க சிறிது பதற்றத்துடன் இருந்தவன் அஸ்மிதா தண்ணீருடன் திரும்பவும் முகத்தைச் சீர்படுத்திக் கொண்டான். பின்னர் அவளிடம்

“இஷியோட மெடிக்கல் சர்டிபிகேட்ஸ் எல்லாமே அக்காவோட ரூம்ல தானே இருக்குது?” என்று கேட்டுவிட்டு ருத்ரா அவள் கொடுத்த தண்ணீரை ஒரே மூச்சாகக் காலி செய்ய

“ஆமா மாமா! ஏன் கேக்கிறிங்க?” என்று பதில் கேள்வி கேட்டபடி அவன் நீட்டிய காலி தம்ளரை வாங்கிக் கொண்டாள் அஸ்மிதா.

“எனக்கு தெரிஞ்ச சைக்யாடிரிஸ்ட் ஒருத்தர் கிட்ட அவளை கவுன்சலிங் கூட்டிட்டுப் போகலாம்னு நினைக்கேன்” என்றவனை ஏறிட்ட அஸ்மிதா

“மாமா! அவளுக்கு இருக்கிற மன இறுக்கத்தைச் சுத்தமா துடைச்செறியது கஷ்டம்னு செழியன் அங்கிள் சொன்னது உங்களுக்கும் தெரியும் தானே” என்று சொல்லிவிட்டுச் சமையலறையை நோக்கி நடைபோட்டாள்.

அவள் திரும்பிவந்து சோபாவில் அமரும் வேளையில் வெளியே கார் நிற்கும் ஓசை கேட்டதும் ஆவலுடன் ஓடிச் சென்றவளின் பார்வையில் விழுந்தனர் ஜெய்யும் அவளுடன் நடந்து வந்து கொண்டிருந்த இஷானியும். இருவரையும் கண்டதும் முகம் மலர்ந்தாள்.

மூவருமாக உள்ளே சென்றபோது இஷானியின் முகம் அங்கே சோபாவில் சாவகாசமாக அமர்ந்திருந்த ருத்ராவைக் கண்டதும் சுருங்கியது. அஸ்மிதாவும் ஜெய்யும் சோபாவில் அமர இஷானி அஸ்மிதாவின் நெற்றியில் விபூதியை வைத்துவிடவும் ருத்ராவின் பார்வை இஷானியின் கையிலிருக்கும் விபூதியில் பட்டு நீங்கியது.

இஷானி அவன் முன்னே கையை நீட்டியதும் ருத்ரா விபூதியை எடுத்துக் கொள்ளாமல் அவளது விழியுடன் தனது விழிகளுடன் கலக்கவிட்டவன் புருவம் உயர்த்த இஷானினியின் கரங்கள் தானாகவே அவன் நெற்றியில் விபூதியைப் பூசிவிட்டது.

ருத்ரா அவள் பூசிவிட்டு அகலவும் கண்ணைப் பொத்திக் கொண்டபடி “ஆவ்! கண்ணுல விபூதி விழுந்துடுச்சே” என்று கத்தத் துவங்கவும் அஸ்மிதா, ஜெய், இஷானி என்று மூவருமே பதறிவிட அவன் வழக்கம் போல கண்ணைக் கசகக்க ஆரம்பிக்கவும் இஷானி அவன் கையைப் பற்றிக் கொண்டாள்.

“சும்மா சும்மா கண்ணைக் கசக்காதிங்க” என்று அதட்டியவள் அவன் கண்ணைத் திறக்கச் சொல்லிவிட்டு மெதுவாக ஊதத் துவங்க அவனுக்கு மிக அருகில் தெரிந்த அந்த பூமுகமும், கயல்விழிகளும், செவ்விதழும் ருத்ராவை வேறு உலகிற்கு விசா பாஸ்போர்ட் எதுவுமின்றி அழைத்துச் சென்றன.

இஷானி அவன் கண்ணில் ஊதிக்கொண்டிருந்தவள் அவனது முகத்தில் தெரிந்த ரசனையில் விழி விரித்துப் பார்க்க ருத்ரா கண்ணைச் சிமிட்டவும் “இவ்ளோவும் நடிப்பா?” என்று திகைத்தாள் அவள்.

ருத்ரா ஆமென்பது போல தலையசைத்தவன் சோபாவில் இரு கைகளையும் அதன் முனைகளில் வைத்தபடி சாய்ந்து கொண்டான். இஷானி எரிச்சலுடன் “உங்களுக்குக் கொஞ்சம் கூட விவஸ்தையே கிடையாதா மாமா?” என்று கடுகடுக்க

“விவஸ்தையா? அது எந்தக் கடையில விக்குது? அஸ்மி நீ இதுக்கு முன்னாடி அதை வாங்கியிருக்கியா என்ன? ஹலோ டியூட் நீ வாங்கியிருக்கியாப்பா?” என்று ஜெய்யையும் அஸ்மிதாவையும் கூட்டு சேர்த்துக் கொண்டு இஷானியைக் கேலி செய்யும் முயற்சியில் இறங்கினான் அவன்.

இஷானி அவனை எரிப்பது போல முறைத்தவள் “சை! உங்களுக்குப் போய் பாவம் பார்த்தேன் பாருங்க… என் புத்தியை…” என்றவளிடம்

“செருப்பு வேணுமா இஷி?” என்று கிண்டலடித்தவனை இதற்கு மேல் பொறுக்கமுடியாது கடுப்புடன் எழுந்தவன் அவனைப் படபடவென்று அடிக்க ஆரம்பித்தாள். ருத்ரா அவளைத் தடுக்க முயல்வது போல திறமையாக நடிக்க

அஸ்மிதா ஜெய்யிடம் “பாரேன்! மாமாவோட ஆக்டிங் டேலண்டுக்கு முன்னாடி யாரும் நிக்க முடியாது… இந்த இஷிக்கு இன்னுமா புரியலை அவ அடிக்கிறது அவருக்கு வலிக்காதுனு…. ரொம்ப இன்னசண்ட்பா” என்று சொல்லிவிட்டுத் தோளைக் குலுக்கிக் கொண்டாள்.

அந்த இருவரின் சண்டையை இந்த இருவர் நமட்டுச்சிரிப்புடன் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க இந்நால்வரையும் கையைக் கட்டிக்கொண்டு ஏறிட்டுக் கொண்டிருந்தனர் சஞ்சீவினியும் அவரது பெற்றோரும்.

தண்மதி ஒளிர்வாள்🌛🌛🌛