🌞 மதி 3 🌛

டைட்டானியம் டை ஆக்சைடை உற்பத்தி செய்வதில் முதல் படி ரூட்டைல் அல்லது இல்மனைட்டுடன் சல்பியூரிக் அமிலத்தைச் சேர்ப்பதே. இதன் மூலம் ஃபெரஸ் சல்பேட் என்ற இரும்பு மாசுக்கள் துணைப்பொருளாகக் கிடைக்கும். இவை கலவையிலிருந்து பிரிக்கப்படும். மிச்சமுள்ள அமிலம் மறுசுழற்சி செய்யப்படும் அல்லது மீண்டும் உற்பத்திக்குப் பயன்படுத்தப்படும்.

வி.என். கெமிக்கல் பிரைவேட் லிமிட்டெட்

வி.என் குழுமத்தின் எத்தனையோ பிரிவுகளில் இதுவும் ஒன்று. அவர்களின் முக்கியத் தொழிலே ஆடை ஏற்றுமதி தான். ஆனால் தொழிற்சாலைக்குத் தேவையான முக்கிய வேதிப்பொருட்களைத் தயாரிக்கும் இந்த கெமிக்கல் ஃபேக்டரி அதன் சேர்மனான விஸ்வநாதனின் வெறித்தனமான உழைப்பின் அடையாளம். கடந்த கால ஏமாற்றங்களைத் தாண்டி அவர் அந்தத் துறையில் தனக்கென உருவாக்கிக் கொண்ட அடையாளம் அது.

அவரது காலத்தில் அந்தத் துறையில் தனது நிறுமத்தை முன்னணி நிறுமமாகக் கொண்டுவந்தவர் இன்று அவரது மகனது நிர்வாகத்தின் கீழ் அந்நிறுமத்தை ஒப்படைத்துவிட்டு ஆடை ஏற்றுமதியில் கவனம் செலுத்தத் தொடங்கினார்.

அவர் எட்டடி பாய்ந்தால் அவரது மகன் பதினாறடி பாய்ந்து இன்று வி.என் கெமிக்கலை முதலிடத்துக்குக் கொண்டு வந்துவிட்டான். தனது தந்தையின் கடந்த கால ஏமாற்றங்களுக்கும், துரோகங்களுக்கும் பதிலடி கொடுப்பதற்காகவும் அவனது மனதில் ஆறாக்காயமாய் இருக்கும் ரணத்திற்குக் காரணமானவர்களைப் பழி தீர்க்கவும் தான் அவன் இந்தத் தொழிலைத் தந்தையிடமிருந்து கேட்டுப் பெற்றான். அவன் தேவ் விஸ்வநாதன்.

எதற்காக அத்தொழிலில் கால் பதித்தானோ அதில் பாதிக்கிணற்றைத் தாண்டிவிட்டான். தந்தை விரும்பியத் துறையில் இன்று அவர்களின் நிறுமத்தை முதலிடத்துக்குக் கொண்டு வந்துவிட்டான். நான்கு வருட கடின உழைப்பின் பலன் அது. ஆனால் இன்னும் மனதின் ரணமானது ஆறவில்லை. அது ஆறவேண்டுமென்றால் ஆர்.எஸ்.கெமிக்கல் பிரைவேட் லிமிட்டெட் அஸ்தமனமாக வேண்டும். அதற்கான வேலைகளில் தான் அவன் கடந்த ஆறுமாத காலங்களில் இறங்கியிருந்தான்.

இப்போதும் தனது மேஜையின் மீது வீற்றிருக்கும் லேப்டாப்பில் தனது உதவியாளர் அனுப்பியத் தகவல்களைத் தான் பார்த்துக் கொண்டிருந்தான்.

ஆர்.எஸ் கெமிக்கலின் பங்குதாரர்கள் பற்றிய விபரங்களைப் பார்வையிட்டுக் கொண்டிருந்தவனின் கூரியவிழிகள் திரையில் தெரிந்த விஷயங்களை நோக்கிக் கொண்டிருக்க அச்சமயத்தின் அவனது அலுவலக அறையின் கதவை யாரோ தட்டவும் “யெஸ் கம் இன்” என்றவனின் குரலில் குடி கொண்டிருந்த இறுக்கம் முகத்தின் இறுக்கத்துக்குச் சற்றும் குறைவில்லாதது.

உள்ளே நுழைந்தது அவனது உதவியாளனான ரிஷி. இந்த நான்கு வருடங்களில் தேவுடன் இணைபிரியாதிருப்பவன். இப்போதும் தேவ் கேட்டிருந்த அனைத்துத் தகவல்களையும் திரட்டி அனுப்பியவன் வேறு ஒரு பிரச்சனையைப் பற்றி அவனிடம் கூற வந்திருந்தான்.

“சார்! ஷாப்பிங் மாலுக்கு நம்ம பேசி முடிச்ச சைட்டுக்குப் பக்கத்து லேண்டும் சேர்த்துப் பேசலாம்னு சொல்லியிருந்திங்க… நான் அந்த டிரஸ்டி கிட்ட எவ்ளோவோ பேசிப் பார்த்துட்டேன்… பட் அவங்க அந்த இடத்தைக் காலி பண்ண மாட்டோம்னு பிடிவாதமா இருக்காங்க”

இதைக் கேட்டதும் தேவின் விழிகள் லேப்டாப்பின் திரையிலிருந்து பிரிந்தது.

“யாரு அவங்க? அவங்க டீடெய்ல்ஸை கலெக்ட் பண்ணி எனக்கு மெயில் பண்ணு ரிஷி.. அப்புறம் இது விஷயமா அவங்களைச் சமாளிக்க நீ நம்ம ஜி.எம் ஜெய்யை அங்கே அனுப்பு… அவன் பொறுமையாப் பேசி முடிச்சிடுவான்… இந்தச் சில்லறை விஷயத்துக்கெல்லாம் நீயே போறது உன்னோட இமேஜை ஸ்பாயில் பண்ணிடும்”

அவன் சொன்னதற்கு சரியென்று தலையாட்டிவிட்டு ரிஷி வெளியேறிவிட தனது சுழல் நாற்காலியிற்காலியில் சாய்ந்து கொண்டான் தேவ். நினைவலைகள் நான்கு ஆண்டுகளுக்குப் பின்னே சென்றது. அதில் அழகிய காரிகை ஒருத்தியின் முகம் மங்கலாகத் தோன்றி மறையவே அவன் உதடுகள் “மனு” என்ற பெயரை உச்சரித்து அடங்கியது.

சட்டென்று ஏதோ ஒன்று உறுத்த பங்குதாரர்களின் பெயர்களை வாசித்தவன் பெரும்பான்மை பங்குக்குச் சொந்தக்காரரான நபரின் பெயரை வாசித்துவிட்டு அவருக்கு அடுத்து யாருக்குப் பெரும்பான்மை இருக்கிறது என்று கவனிக்கத் தொடங்கினான்.

அதைக் கவனித்த போது தான் சந்திரசேகரின் தந்திரம் புரிந்தது. பெரும்பான்மை பங்குகளை அவர் தனது பெயரிலும், குடும்பத்தினரின் பெயரிலும் வைத்திருந்தார். எஞ்சியிருந்தவை மற்றப் பங்குதாரர்களுக்கு உரியவை. அவனுக்குத் தான் செய்ய வேண்டியது என்ன என்பது இப்போது புரிந்துவிட்டது.

அடுத்து அவன் செய்யவேண்டியது அந்த நிறுவனத்தின் பங்குகளை வாங்குவது மட்டுமே. அதற்கான வேலைகளில் இறங்கியவன் அன்றைய நாள் முழுவதும் அதிலேயே உழன்று விட்டு இரவில் வெகுநேரம் கழித்து வீடு திரும்பினான்.

பிரம்மாண்ட கதவுகளுடன் இருகரம் நீட்டி அவனை அரவணைக்கத் தயாராக இருந்தது அவனது வீடு. வீட்டின் கார் பார்க்கிங்கில் காரை நிறுத்திவிட்டு வீட்டை நோக்கி நடைபோட்டான். வீட்டுக்குள் நுழையும் முன்னர் வீட்டைச் சூழ்ந்திருந்த தோட்டத்தில் ஓய்வாய் அமர்ந்திருந்த ஒரு முதியவர் அவன் கண்ணில் பட்டார். இந்த வயதிலும் கம்பீரம் மாறாமல் அவனது தந்தைக்குத் தலையில் வெள்ளிக்கம்பிகள் முளைத்தது போல மூக்குக்கண்ணாடியுடன் கண்ணை மூடிக்கொண்டு சாய்ந்திருந்தவர் தனக்கு அருகில் கேட்ட ஷூ கால்களின் சத்தத்தில் கண் திறந்தார்.

தன்னெதிரே நின்றவனைக் கண்டதும் வாஞ்சையுடன் “வாடாப்பா! ஏன் இன்னைக்கு இவ்ளோ லேட் ஆயிடுச்சு தேவ்? வேலை ஜாஸ்தியா?” என்று கேட்டவரிடம் முழங்காலிட்டு நின்றவன்

“வேலை ஜாஸ்தி தான் சங்கரராமன் அவர்களே! ஆனா இப்பிடி கண்மூடித்தனமா வேலை செய்யுறது கூட நல்லா தான் இருக்கு… மனசோட காயத்தை ஆற வைக்க எல்லாரும் மத்தப் பழக்கத்துக்கு அடிமையாவாங்க… நான் என் வேலைக்கு அடிமையாயிட்டேன் தாத்தா” என்று சொல்லி புன்னகைக்க அந்தப் பெரியவரின் விழிகளும் கலங்கியது.

“வேலை வேலைனு அலைஞ்சு உடம்பைப் போட்டு அலட்டிக்காதேடா கண்ணா… உங்கப்பா ஆசைப்பட்டதை செஞ்சு முடிச்சிட்டல்ல… இன்னும் ஏன் நிக்காம ஓடுற? போதும்டா! மனசுல பழியுணர்ச்சி வந்துட்டா வாழ்க்கை நரகமாயிடும் தேவ்” என்று அக்கறையுடன் உரைத்தவருக்கு எங்கே பேரன் பழிவாங்கும் உணர்ச்சியில் அவனது வாழ்க்கையைக் கேள்விக்குறியாக்கிக் கொள்வானோ என்ற பயம் நீண்டநாட்களாவே இருந்தது.

அவரது பயம் அவனுக்குப் புரியாமல் இல்லை. ஆனால் தேவ் இனியும் தனக்கு வாழ்க்கை என்ற ஒன்று இருக்கிறதா என்று ஆச்சரியப்பட்டுக் கொள்வான். அவனைப் பொறுத்தவரை அவனது வாழ்க்கைக் கனவுகள் அனைத்தையும் தன்னோடு சேர்த்துக் கொண்டு போய்விட்டாள் ஒருத்தி. இனி அவை அவன் கையில் சேர எவ்வழியும் இல்லை.

ஆனால் அதைச் சொல்லி அந்த வயோதிகரின் மனதை வருத்தும் எண்ணம் அவனுக்கில்லை. எனவே கனிவுடன் அவரைப் பார்த்தவன்,

“என்னோட ரெண்டாவது முயற்சி ஜெயிச்சுடுச்சுனா நீங்க என்ன சொன்னாலும் நான் கேக்குறேன் தாத்தா… அது வரைக்கும் என் கவனம் எல்லாமே அந்தச் சந்திரசேகரை இல்லாம ஆக்கிறதுல மட்டும் தான் இருக்கும்… ஆனா மனுசன் பயங்கரக்கேடி தாத்தா… மெஜாரிட்டி ஷேர் ஃபேமிலி மெம்பர்ஸ் கிட்ட இருக்கிற மாதிரி செட்டப் பண்ணிருக்கார்… பட் நான் அந்தச் செட்டப்பை இன்னும் கொஞ்சநாள்ல உடைச்சு ஆர்.எஸ் கெமிக்கலோட எம்.டியா போய் உக்காருவேன்… அன்னைக்குத் தான் என் மனசும் உடம்பும் அமைதியாகும் தாத்தா” என்று கோபமா விரக்தியா என புரியாத ஒரு குரலில் அவரிடம் வாக்களிப்பது போல பேச, அவனது முகத்தை வருடக் கொடுத்தன சங்கரராமனின் கைகள்.

“எதைப் பண்ணுனாலும் கவனமா பண்ணு தேவ்… சந்திரசேகர் தொழில்னு வந்துட்டா பாவ புண்ணியம் பார்க்க மாட்டான்… வினாயகமூர்த்தி அந்தளவுக்கு அவன் மூளையைக் குழப்பி வைச்சிருக்கான்… நாலு வருசத்துக்கு முன்னாடி நடந்த மாதிரி எதுவும் அசம்பாவிதம் நடந்திருமோனு தான் எனக்குப் பயம்டா கண்ணா”

“நீங்க கவலைப்படாதிங்க தாத்தா… எல்லாத்துக்கும் சேர்த்து தான் அந்தாளுக்கு வட்டியும் முதலுமா திருப்பிக் குடுக்கப் போறேன்… இந்தத் தடவை எனக்குச் சொந்தமான யாரையும் நான் இழக்கப் போறது இல்லை… எல்லா இழப்பும் அந்தச் சந்திரசேகருக்கு மட்டும் தான்”

தாத்தாவிடம் சபதம் போலச் சொல்லிவிட்டு எழுந்தவன் “எழுந்திருங்க தாத்தா… இதுக்கு மேல பனியில உக்காந்திங்கனா உடம்புக்கு நல்லது இல்ல” என்று சொல்லி அவரது கரத்தைப் பற்றி தன்னுடன் அழைத்துச் சென்றான்.

வீட்டுக்குள் இருவரும் நுழையும் போதே “தாத்தாவுக்கும் பேரனுக்கும் கடிகாரம் ஓடுறதே மறந்துடும் போல இருக்கு… நீ என்னடானா நேரம் கெட்ட நேரத்துக்கு வீட்டுக்கு வர்ற… மாமா என்னடானா பேரன் இல்லாமல் நான் சாப்பிட மாட்டேனு ஒரே அடம்… உங்க ரெண்டு பேரையும் சமாளிக்கிற பொறுப்பை என் தலையில கட்டிட்டு உங்கப்பா ஜாலியா கோயம்புத்தூருக்குப் போயிட்டார்… வரட்டும் அவர்” என்று செல்லமாகக் கோபித்துக் கொண்டார் தேவின் தாயாரும், சங்கரராமனின் மருமகளும், விஸ்வநாதனின் தர்மபத்தினியுமான சாந்தினி.

அருமையான மனைவி, அன்பான மருமகள், அரவணைக்கும் அன்னை என்ற மூன்று கதாபாத்திரங்களையும் திறம்படச் செய்துவருபவர். மாமியாரின் மறைவுக்குப் பின்னர் மாமனாரைச் சொந்த தந்தையாகவே கவனித்துக் கொண்டார். சங்கரராமனும் மருமகளை மகளாகவே நடத்தி வந்தார். சொல்லப் போனால் மகனும் பேரனும் தொழில் தொழில் என்று காலில் சக்கரம் கட்டாதக்குறையாக ஓடிக்கொண்டிருந்ததில் அவருக்கு வீட்டில் பேச்சுத்துணை என்றால் மருமகள் மட்டுமே.

சாந்தினிக்கும் வீட்டின் வேலைகளை எல்லாம் செய்வதற்குப் பணியாளர்கள் இருப்பதால் மாமனாருடன் பழைய கதைகளைப் பேசுவதிலேயே பொழுது கழிந்தது. இப்போதும் மகனுக்கும் மாமனாருக்கும் பரிமாறியபடியே அவரது தோழியின் பேரனது பிறந்தநாள் விழாவைப் பற்றித் தான் பேசிக்கொண்டிருந்தார்.

“என்னையும் சீக்கிரமா பாட்டினு சொல்ல ஒரு குழந்தை இந்த வீட்டுல தவழாதானு ஏக்கமா இருக்கு மாமா… ஆனா உங்க பேரன் கிட்ட பேசுறதும் சுவத்துல போய் முட்டிக்கிறதும் ஒன்னு… மூனு வருசமா நான் புலம்புறேனே, என் மேல அவனுக்கு ஏன் இரக்கமே வரலை?” என்று அழாதக்குறையாகக் கேட்க

“அதுக்கு ரெண்டே ரெண்டு காரணம் தான்மா” என்றான் தேவ் தீவிரக்குரலில்.

மாமனாரும் மருமகளும் அவன் ஏதோ பயங்கரமான காரணத்தைச் சொல்லப் போகிறான் போல என்று காத்திருக்க

“நம்பர் ஒன் உங்களுக்கு இன்னும் பாட்டி ஆகிற வயசு வரலை… அண்ட் நம்பர் டூ எனக்குத் தெரிஞ்சவரைக்கும் தவழுற ஸ்டேஜ்ல இருக்கிற குழந்தை பேசாது” என்று சொல்லிவிட்டுத் தோளைக் குலுக்க பெரியவர்கள் இருவரும் அங்கலாய்த்தனர்.

“ரொம்ப நாளுக்கு அப்புறம் நீ ஜோக் சொல்லிருக்கடா மகனே! ஆனா எனக்கும் உன் தாத்தாவுக்கும் இப்போ சிரிப்பு வரலை… நான் தான் சொன்னேனே மாமா! இவன் நம்ம பேச்சைக் கேக்க மாட்டான்” என்று சலித்துவிட்டு அங்கிருந்து அகன்றார் சாந்தினி.

மருமகளின் பேச்சில் தெரிந்த கவலை சங்கரராமனுக்குப் புரிந்தாலும் பேரன் இன்னும் மனதளவில் திருமண உறவுக்குத் தயாராகவில்லை எனும்போது அவனை வற்புறுத்துவதில் அவருக்கும் விருப்பமில்லை. எனவே பேரனை இன்னொரு சப்பாத்தி வைத்துக் கொள்ளுமாறு சொல்லிவிட்டுத் தானும் சாப்பாட்டில் கண்பதித்தார்.

தாத்தாவும் பேரனும் இரவுணவை முடித்ததும் தேவ் சங்கரராமனுடன் அவரது அறைக்குச் சென்றவன் எப்போதும் போல அன்றாடம் அலுவலகத்தில் நடந்ததை அவரிடம் பகிர்ந்து கொண்டான். என்ன இருந்தாலும் அவர் முன்னாள் பிசினஸ் மேன் அல்லவா? அவரது ஆலோசனையும் சாணக்கியத்தனமும் என்றுமே அவனது இக்கட்டானச் சூழ்நிலையில் அவனுக்கு உதவியாக இருப்பதால் அவரிடம் தொழில் சம்பந்தப்பட்ட அவனது எந்த நடவடிக்கையையும் மறைப்பதில்லை தேவ்.

நீண்டநேரம் சென்ற உரையாடல் சாந்தினி வந்து இருவரையும் உறங்கச் செல்லுமாறு அதட்டவும் முடிவுக்கு வந்தது. சங்கரராமன் படுக்கையில் சாய்ந்துகொள்ள அவரது அறையில் மிதமானக் குளிரில் ஏ.சியை வைத்துவிட்டு விளக்கணைத்துக் கதவைச் சாத்திவிட்டுக் கிளம்பினான் தேவ்.

மாடியில் அவனது அறையை அடைந்தவன் எப்போதும் போல அந்தப் பெரிய அறையின் சுவரை அலங்கரிக்கும் அவனது மனதை வென்ற காரிகையின் புகைப்படத்தினருகில் சென்று நின்றான். கள்ளமற்றப் புன்னகையுடன் புகைப்படத்தில் சிரிப்பவளது முகத்தில் இயல்பான கம்பீரமும் கூடவே குழந்தைத்தனமும் சேர்ந்து போட்டி போட்டு அழகை அள்ளித் தெளித்திருந்தது.

அவள் இன்று உயிரோடு இல்லை என்பதை அவனால் இப்போதும் நம்ப இயலவில்லை. புகைப்படத்தில் கூட உயிர்ப்புடன் தெரியும் புன்னகை தவழும் முகத்துக்குச் சொந்தக்காரி இப்போது இல்லை.

அந்த எண்ணமே தினந்தோறும் அவனுக்கு உறங்கா இரவுகளைப் பரிசாக அளித்தது. சாந்தினியும் விஸ்வநாதனும் அவனைச் சரிகட்ட எவ்வளவோ முயன்றும் முடியவில்லை. ஆனால் சங்கரராமன் சொன்னது போல அழுது புரண்டாலும் மாண்டவர் மீள்வதில்லை என்பது அவனுக்குப் புரியாமல் இல்லை. ஆனால் அவனது மனம் நிறைந்த காதலியான மானசாதேவியை மறக்கவே இயலவில்லை.

“மானசாதேவி வெட்ஸ் தேவ், சொல்லுறதுக்கே எவ்ளோ அழகா இருக்கில்ல தேவ்?” என்று சொல்லி குதூகலித்தவளின் கன்னம் குழிந்த புன்னகையில் தான் மகிழ்ந்தது இன்றும் அவன் நினைவிலாடியது.

அவளைப் பற்றி நினைவுகளே தன் வாழ்க்கை முழுமைக்கும் போதும் என்று வழக்கம் போல எண்ணியபடி அறையின் விளக்கை அணைக்க அவனது மனதைப் போலவே அந்த அறையும் இருண்டு போனது.

தண்மதி ஒளிர்வாள்🌛🌛🌛