🌞 மதி 21 🌛
இடைப்பாலினத்தினர் அல்லது இடையிலிங்கத்தினர் பிறப்பிலேயே தெளிவற்ற பிறப்புறுப்புகளைக் கொண்டவர்கள். அப்படி பிறக்கும் குழந்தைகளுக்கு பாலினத்தேர்வு அறுவைச்சிகிச்சை செய்யப்பட்டு அவர்கள் ஆணாகவோ பெண்ணாகவோ இவ்வுலகிற்கு அடையாளம் காட்டப்படுகின்றனர்.
ஹாலில் பிறந்தநாள் கொண்டாட்டத்தைக் கலைத்தது சஞ்சீவினியின் அறையிலிருந்து ஒலித்த இஷானியின் “அம்மா’ என்ற அலறல். அனைவரும் பதறியடித்துக் கொண்டு சஞ்சீவினியின் அறையை நோக்கி ஓடினர்.
அங்கே அறையில் விளக்கு எரிய மேஜையின் அருகில் விம்மலுடன் நடுங்கிக் கொண்டு கூனிக்குறுகி அமர்ந்திருந்தவளின் தோற்றத்தில் அனைவரும் அதிர்ந்துவிட சஞ்சீவினி வேகமாய் அவளருகில் சென்றதும் நிமிர்ந்த இஷானியின் முகத்தில் வேதனை படர்ந்திருக்க கண்கள் அலை பாய்ந்தபடி மூச்சு வேகமாய் ஏறி இறங்கியது. அவரைக் கண்டதும் எதையோ கண்டு பயந்ததைப் போல அவரை இறுக்கமாக அணைத்துக் கொண்டவள் “ம்மா…அப்பா… எனக்கு வலிக்குதும்மா” என்று அழுகையினூடே சொல்ல சஞ்சீவினிக்கு அவளின் நிலை புரிய ஆரம்பித்தது.
அலமேலு, ராஜகோபாலன் இருவருக்கும் முகம் கலங்கிவிட அஸ்மிதாவோ அவளை இந்நிலையில் சமாளிக்கவல்லவர் அலமேலு மட்டுமே என்பதை உணர்ந்தவள்
“பாட்டி! நீங்க போய் அவளைச் சமாதானப்படுத்துங்க… நான் டாக்டருக்கும் செழியன் அங்கிளுக்கும் கால் பண்ணிக் கூப்பிடுறேன்… இல்லனா நிலமை மோசமாயிடும்” என்று சொன்னதோடு செழியனை போனில் அழைத்து விவரத்தைச் சொல்லிவிட்டாள்.
அதற்குள் அலமேலு இஷானியை கைப்பற்றி எழுந்திருக்குமாறு கூற அவள் பயத்துடன் “ம்ஹூம்! எனக்குப் பயமா இருக்கு பாட்டி… அப்பா… அப்பா அடிப்பாரு” என்று கண்ணை இறுக மூடிக்கொண்டு விம்மலுடன் கூற
“அவரு இப்போ உயிரோட இல்லடாம்மா.. அவரு கடவுள் கிட்ட போய் ஒன்பது வருசம் ஆகுதுடா… அவரு வரவும் மாட்டாரு, உன்னை அடிக்கவும் மாட்டாரு…. இஷானி நல்லப்பொண்ணுல்ல, எழுந்திருடா” என்று கெஞ்சி மெதுமெதுவாய் அவளைப் பேசி சம்மதிக்கவைத்தவர் கட்டிலில் அமர்த்தி வைத்துவிட்டு “சஞ்சு! தண்ணி கொண்டு வா” என்று மகளுக்கு ஆணையிட்டவரின் மடியில் படுத்துக் கொண்டாள் இஷானி. அவரது இடையை இறுக்கமாக அணைத்துக் கொண்டவள் கண்களை இறுக்கமாக மூடிக்கொண்டபடி விம்ம ஆரம்பித்தாள். அவளது மேனி இன்னும் நடுங்கிக் கொண்டிருந்தது.
சஞ்சீவினி தண்ணீர் தம்ளரை தாயாரிடம் நீட்டிவிட்டு அப்படி என்ன தான் நடந்தது; இவள் இவ்வாறு பழையபடி மாறியிருக்க என்ன காரணம் என்று யோசித்தவராய் மேஜையருகே விழுந்து கிடந்த அவரது போனை எடுத்துப் பார்க்க அங்கே கட்செவியஞ்சலில் வீடியோ ஓட ஆரம்பித்தது.
அவரால் கண் கொண்டு அதைப் பார்க்க முடியவில்லை. ஒரு மனவளர்ச்சியற்ற பிஞ்சுக்குழந்தையை அதன் தந்தையே அடிக்கும் காட்சி அவரது நெஞ்சை உலுக்க அவருக்கு ஏன் இஷானிக்கு இப்படி ஆனது என்பது புரிந்தது. அவரது கண்ணிலிருந்து கண்ணீர் வடிய ஆரம்பித்தது.
இவ்வளவு நேரம் இஷானியின் கதறல்களையும் நடுக்கத்தையும் புரியாமல் பார்த்திருந்தவன் அவளது வார்த்தைகளில் குழப்படமடைந்து போயிருந்த ருத்ரா அர்ஜூனை அவனது அறையில் உறங்கச் சொல்லிவிட்டு வர, சஞ்சீவினி கண்ணீரைத் துடைத்துக் கொண்டு நிமிர்ந்தார்.
ருத்ரா அங்கிருந்த அனைவரையும் ஏறிட்டவன் ராஜகோபாலனை மட்டும் அந்த அறையை விட்டு வெளியே அழைத்துச் சென்றான். உள்ளே கேட்கும் இஷானியின் விம்மலொளி அவனது மனதை அறுத்துக் கொண்டிருக்க அவளது இந்நிலைக்கு என்ன தான் காரணம் என்று அறியும் எண்ணம் அவனுக்குள் தோன்றியது.
“பெரியப்பா இஷிக்கு என்னாச்சு? ஏன் இப்பிடி நடந்துக்கிறா? எனக்கு அவளோட பிஹேவியருக்குக் காரணம் புரியலை” என்று குழப்பத்துடன் வினவ
ராஜகோபாலன் “உனக்கு இஷானியைப் பத்தி இதுவரைக்கும் என்ன தெரியும்?” என்று மெதுவாய்க் கேட்க
“அவ சஞ்சுக்காவோட அடாப்டட் டாட்டர்…. அவளோட பன்னிரண்டாவது வயசுல சஞ்சுக்கா இஷானியைத் தத்தெடுத்துக்கிட்டானு சந்துரு மாமா சொல்லிக் கேட்டிருக்கேன்” என்றான் ருத்ரா நிதானமாக.
தொடர்ந்து “ஆனா அதுக்கும் இப்போ இஷி இருக்கிற நிலமைக்கும் என்ன காரணம்?” என்று கேட்க
“அவளை முதல் தடவை நாங்க பார்த்தப்போ அவ இந்த நிலமையில தான் இருந்தா… சொந்தத் தகப்பனைப் பார்த்து பயந்து நடுங்கிட்டு இருந்தா… அவ வாயில இருந்து வந்த ஒரே வார்த்தை ‘பாட்டி’ மட்டும் தான்… அலமேலுவைக் கண்டதும் அவ விடவே இல்ல… ஆனா அவளைப் பெத்தவரோ அவளோட குடும்பத்தைச் சேர்ந்தவங்களோ அவளைப் பார்த்து கொஞ்சம் கூட இரக்கப்படல… இவளைத் தலைமுழுகுனா போதும்னு ஹைவேல அம்போனு விட்டுட்டுப் போயிட்டாரு அந்த மனுசன்” என்று வேதனைக்குரலில் கூறினார் ராஜகோபாலன்.
ருத்ராவுக்கு இன்னுமே புரியவில்லை. இஷானியின் தந்தை அவளை வேண்டாமென்று ஒதுக்கும் அளவுக்கு என்ன தான் பிரச்சனை என்று யாரும் சொல்லவில்லையே. அதோடு இப்படிப்பட்ட பெண்ணை வேண்டாமென்று ஒதுக்கி வைத்த அந்த முகம் தெரியாத மனிதரை அவன் அக்கணமே வெறுக்க ஆரம்பித்துவிட்டான்.
அந்நேரத்தில் செழியனுடன் மருத்துவரும் வர அறைக்குள் இருந்தவளுக்கு மனோதத்துவ நிபுணர் வந்து சமாதானம் செய்யுமளவுக்கு என்ன தான் பிரச்சனை என்று புரியாமல் விழித்தான் ருத்ரா.
மருத்துவருடன் சஞ்சீவினியின் அறைக்குள் நுழைந்த செழியன் அவரது பாணியில் பக்குவமாகப் பேசி இஷானியின் அழுகையை நிறுத்தியவர் “புவர் லிட்டில் கேர்ள்! எந்த அப்பாவை நினைச்சு நீ பயப்படுற? அவரு இப்போ இருந்தா தானே உன்னைப் பார்க்க வருவாரு… அவரோ உன் குடும்பத்தைச் சேர்ந்தவங்களோ இப்போ உயிரோடவே இல்லையேம்மா” என்று மெதுவாகச் சொல்ல
இஷானி “இல்ல அங்கிள்… அப்பா அங்கே நின்னு என்னைத் திட்டுனாரு…பாட்டி…. பாட்டி வந்து என்னைக் கூட்டிட்டுப் போனாங்க” என்று நடுங்கியபடி அறையின் மூலையைக் கைகாட்டினாள்.
சஞ்சீவினியோடு சேர்ந்து அனைவருக்குமே அவளது ஆழ்மனதில் உறைந்து போயிருந்த பயத்தை இந்த வீடியோ கிளப்பிவிட்டதன் அறிகுறியே அவளுக்கு மட்டுமே தெரியும் அவளது தந்தை மற்றும் பாட்டியின் உருவம் என்பது புரிந்தது.
ருத்ராவுக்கோ அவளது குடும்பத்தினர் யாருமே உயிருடன் இல்லை என்ற தகவல் புதிது. அழுது சிவந்திருந்த கண்கள் மிரட்சியுடன் இருக்க, முகத்தில் பயத்தின் சாயை படர்ந்திருக்க, விம்மலுடன் நடுங்கிக் கொண்டிருக்கும் இந்தப் பெண்ணுக்குப் பின்னர் ஏதோ ஒரு பெரிய விஷயம் உறங்கிக் கொண்டிருக்கிறது என்பது மட்டும் அவனுக்குப் புரிந்தது.
செழியன் சிறிது நேரம் பேசியபிறகு இஷானியின் அழுகையும் நடுக்கமும் குறைய மருத்துவர் அவளுக்குப் போட்ட இன்ஜெக்சனின் உபயத்தினால் இஷானியின் இமைகள் மூட ஆரம்பித்தது. ஆனால் இன்னும் முழுவதுமாக அடங்காத கேவல் ஒன்று அவளிடம் இருந்து எழ சஞ்சீவினி அலமேலுவிட “இன்னைக்கு நைட் நீங்க இவளோட இருங்கம்மா” என்று சொல்லிவிட அஸ்மிதாவும் அலமேலுவும் சரியென்று தலையாட்டினர்.
ராஜகோபாலனை உறங்கச் சொன்ன சஞ்சீவினி செழியனிடம் “இன்னும் எவ்ளோ நாளுக்கு தான் இவ இப்பிடியே இருப்பா செழியன்? இதுக்கு டிரீட்மெண்ட் எதுவுமே இல்லையா? எனக்குப் பயமா இருக்கு செழியன்.. கடைசி வரைக்கும் இவ இப்பிடியே இருந்துட்டா என்ன பண்ணுறது?” என்று ஆதங்கத்துடன் கேட்க
“அமைதியா இரு சஞ்சு! உன் கேள்வியிலே பதில் இருக்கு… இஷானிக்குள்ள இந்த பயம், குழப்பம் எல்லாமே எப்போவுமே இருக்கும்…. நான் குடுக்கிற கவுன்சலிங் எல்லாமே அதைக் குறைக்கிறதுக்கு மட்டும் தானே தவிர அதைச் சுத்தமா போக வைக்கிறதுக்கு இல்ல… இது அவளோட உடல்ரீதியான மாற்றங்கள், குழப்பங்களோட வெளிப்பாடு… அதனால அவ உடம்புல உயிர் இருக்கிற வரைக்கும் அவ இப்பிடி தான் இருப்பா… நீங்க எல்லாருமா சேர்ந்து அவளைப் பத்திரமா பார்த்துக்கணும்” என்று தன்னால் முடிந்ததை விளக்கிவிட்டு மருத்துவருடன் வெளியேறினார்.
ருத்ரா அனைத்தையும் கேட்டுக் கொண்டிருந்தவன் சஞ்சீவினியிடம் “சஞ்சுக்கா! இஷிக்கு அப்பிடி என்ன தான் ஆச்சு? நீ, செழியன் சார், பெரியப்பானு எல்லாரும் ஏன் மூடுமந்திரமா பேசுறிங்க? தயவுபண்ணி எனக்குச் சொல்லுக்கா” என்று கேட்க
சஞ்சீவினி “ஒன்னும் இல்ல ருத்ரா… இதை தெரிஞ்சுகிட்டு நீ ஒன்னும் பண்ண முடியாது… அது தெரிஞ்சதுக்கு அப்புறமா என் பொண்ணை நீ பார்க்கிற பார்வை மாறிடும்… அதோட முடிவு ஒன்னு நீ இஷானியைப் பார்த்து இரக்கப்படுவ இல்லனா அவளை ஏதோ வித்தியாசமான ஒரு ஜீவனை மாதிரி நடத்துவ… ரெண்டுமே தேவையில்ல” என்று பிடிவாதக்குரலில் மறுக்க
“ஏன்கா புரிஞ்சுக்க மாட்ற? எனக்கு இஷியை ரொம்ப பிடிக்கும்… பிடிக்கும்னு சொல்லுறதை விட இப்போலாம் அவளைப் பார்க்காம என் நாள் சரியா போறது இல்ல… அவளை எப்போவுமே என் கூடவே வச்சிக்கணும்னு ஆசைப்படுறேன்கா… இன்னுமா உனக்குப் புரியலை” என்று மனதிலுள்ளதை இலைமறை காயாகத் தெரிவித்தான் ருத்ரா.
அவளது அன்பிற்கும் அக்கறைக்கும் சிறுபிள்ளைத்தனமானக் கோபத்திற்கும் என்றோ அவன் மனம் அடிமையாகி விட்டது. அவளைத் தன்னவள் என்றே அவன் நம்பியிருக்க அவளுக்கு இப்போது ஏதோ பெரிய பிரச்சனை என்று அனைவரும் பேசிக்கொள்வதால் அதைத் தெரிந்து கொள்ளும் கடமை தனக்கிருக்கிறது என்று நம்பினான் ருத்ரா. அதன் விளைவே அவன் சஞ்சீவினியிடம் இஷானியைப் பற்றி விசாரித்தது.
சஞ்சீவினி கண்கள் கலங்க “இந்த நேசம் அவளைப் பத்தின உண்மை தெரிஞ்சதுக்கு அப்புறமும் இருக்குமா ருத்ரா?” என்று கேட்கும் போதே அவரது குரல் கம்மிவிட
ருத்ரா “என்னோட அன்பு, நேசம்லாம் நேரத்துக்கு ஏத்த மாதிரி மாறாதுக்கா… நான் ஒரு தடவை ஒருத்தவங்க மேல நேசம் வச்சுட்டா சாகுற வரைக்கும் என்னால அதை மாத்திக்க முடியாது… என்னை நம்புக்கா… என்ன தான் பிரச்சனை இஷிக்கு? அவளோட பாஸ்ட்ல அப்பிடி என்ன தான் நடந்துச்சு?” என்று ஆணித்தரமாக உறுதியளித்துவிட்டு தனது கேள்விகளை அடுக்கினான்.
சஞ்சீவினி கண்ணீரை விழுங்கியவர் “இஷானியை நான் சந்திச்ச இடம் நேஷ்னல் ஹைவே… அப்போ அவ அழுதிட்டிருந்தா.. அவளோட வாயில இருந்து பாட்டிங்கிற வார்த்தையைத் தவிர வேற எந்த வார்த்தையும் வரல… அழுதிட்டிருந்த இஷானியோட சேர்ந்து அவளோட அம்மா, அப்பா, தம்பினு எல்லாருமே இருந்தாங்க…
இஷானியோட அப்பா அவளை வெறுப்புல பேசுன வார்த்தைகள் எல்லாமே கார் ரிப்பேர் ஆய்டுச்சுனு அங்கே நின்ன எங்களோட காதுல விழுந்துச்சு… பக்கத்துல நின்ன அவங்கம்மா கண்ணுல இருந்து கண்ணீர் மட்டும் தான் வந்துச்சு… அவளோட அப்பானு சொல்லப்படுற மனுசன் அவளை ரோட்டோரத்துல தள்ளிவிட்டுட்டுக் காரை எடுத்துட்டுப் போயிட்டாரு… எனக்கு ரோட்டோரத்துல ஒரு பொண்ணை அப்பிடியே விட்டுட்டு வர மனசு இல்ல… அம்மாவும் அப்பாவும் என் கூட தான் அப்போ இருந்தாங்க… அவங்களுக்கும் இது சரியா படல… அதனால இஷானியை நான் நம்ம வீட்டுக்குக் கூட்டிட்டு வந்தேன்…
ஆரம்பத்துல அவ பேசவே இல்லடா… வெறிச்சு வெறிச்சு பார்த்துட்டிருப்பா… திடீர்னு அப்பா அடிக்காதிங்கனு கத்துவா… பாட்டியும் அப்பாவும் அங்கே நிக்கிறாங்க, இங்கே நிக்கிறாங்கனு அவ பேசுறதைப் பார்த்துட்டுத் தான் நான் செழியனை வச்சு கவுன்சலிங் குடுக்க வச்சேன்… செழியனோட டிரீட்மெண்ட்டோட சேர்ந்து அம்மா மேல அவளுக்கு வந்த ஒரு குருட்டுத்தனமான பாசமும் இஷானியைச் சீக்கிரமா நார்மலாக்குச்சு… அதுக்கு அப்புறம் தான் அவளோட வாழ்க்கையில பன்னிரண்டு வருசமா என்ன நடந்துச்சுனு எங்களுக்குத் தெரிய வந்துச்சு” என்று சொல்லி நிறுத்தினார் சஞ்சீவினி.
ருத்ராவுக்கு இப்போதும் விளங்கவில்லை, சாலையோரமாக விட்டுச் செல்லுமளவுக்கு இஷானியின் தந்தைக்கு அவள் மீது என்ன வெறுப்பு என்பது. அப்படி என்ன தான் அவளது கடந்தகாலத்தில் மறைந்துள்ளது என்று சஞ்சீவினியிடம் வினவ “அவளோட கடந்தகாலம்ங்கிறது அவளோட பிறப்புல இருந்தே ஆரம்பிச்சது ருத்ரா” என்று அழுத்தமானக் குரலில் சொன்னவர் அவனிடம் இஷானியைப் பற்றி கூற ஆரம்பித்தார்.
இருபத்தியோரு வருடங்களுக்கு முன்னர்…
மருத்துவமனையின் வார்டில் படுத்திருந்தார் ஒரு பெண்மணி. அவரது அருகிலுள்ள தொட்டிலில் ரோஜா இதழ்களைக் குழைத்துச் செய்திருந்ததைப் போல கொள்ளை அழகுடன் கண் மூடி உறங்கிக் கொண்டிருந்தது அந்தப் பச்சிளங்குழந்தை. சுகப்பிரசவம் தான் என்றாலும் அப்பெண்மணிக்குச் சற்று களைப்பாகவே இருந்தது. ஆனால் அது எல்லாமே அவரது கணவர் புன்னகையுடன் அந்த அறைக்குள் வரும் வரை தான்.
அவரது கணவர் உள்ளே நுழைந்ததும் அந்தப் பெண்மணி முகம் விகசிக்க அவரிடம் “வந்துட்டிங்களாங்க? நீங்க வர லேட் ஆனதும் நான் ரொம்ப பயந்துட்டேங்க… ஆனா அத்தை சொன்னாங்க, உங்களுக்கு இன்னைக்கு என்னமோ மீட்டிங் இருந்துச்சுனு… நம்ம பொண்ணைப் பாருங்க” என்று ஆவலாய் குழந்தையைக் காட்ட அந்நேரத்தில் மருத்துவரும் செவிலியும் அந்த அறைக்குள் குழப்பம் நிறைந்த முகத்துடன் நுழைந்தனர்.
அப்பெண்மணியின் கணவர் தனது குழந்தையைக் கையில் எடுத்தவர் “என் ராஜாத்தி! எவ்ளோ அழகா தூங்குறா பாரு” என்று கொஞ்சியபடி அதன் நெற்றியில் முத்தம் பதித்தார். மருத்துவர் இக்காட்சியைத் தயக்கத்துடன் பார்த்தவர் “மிஸ்டர் தாமோதரன்” என்று மெதுவாக அழைக்க அவர் என்னவென்று ஆர்வத்துடன் திரும்பினார்.
“கொஞ்சம் என் கூட வாங்க… ஒரு சீரியசான விஷயம் பேசணும்” என்று கையோடு அவரைத் தன்னுடன் அழைத்துச் சென்றுவிட்டார்.
அவரது அறையில் நுழைந்த தாமோதரன் மருத்துவர் இவ்வளவு யோசிக்குமளவுக்கு அப்படி என்ன விஷயம் என்று புருவம் சுருக்கியவாறு அமர்ந்திருக்க மருத்துவர் தொண்டையைச் செறுமிக் கொண்டு சொன்ன விஷயத்தைக் கேட்டு அவரது தலையில் இடி விழுந்ததைப் போல அதிர்ந்து போனார் அவர்.
“தாமோதரன் சார் உங்க குழந்தையோட ஜெனிட்டல் பார்ட்டை (பிறப்புறுப்பு) வச்சு பார்த்தா அது பொண்ணும் இல்ல, ஆணும் இல்ல…. இப்பிடி பிறக்கிற குழந்தைங்களை நாங்க இண்டர்செக்ஸ்னு சொல்லுவோம்… இவங்க வளர்ந்ததுக்கு அப்புறம் தான் ஆணா அடையாளம் காட்டணுமா இல்ல பெண்ணா வளர்க்கணுமானு நீங்க தீர்மானிக்க முடியும்” என்று சொன்னபிறகு தாமோதரனின் முகத்தில் சொல்லவொண்ணா இறுக்கம் பரவியது.
அறிவியல் மற்றும் மரபியல் ரீதியாக பிறப்பு என்பது ஆண் பெண் மற்றும் இடையிலிங்கம் என்ற மூன்று நிலைகளில் மட்டுமே நடக்கும். பிறப்பால் ஆண் மற்றும் பெண் பிறப்புறுப்பைக் கொண்ட அல்லது தெளிவற்ற பிறப்புறுப்பைக் கொண்ட மனிதர்களே இடையிலிங்க மனிதர்கள் ஆவர். பால் என்பது ஒரு குழந்தை பிறக்கும்போது அதனுடைய பிறப்புறுப்பை வைத்து, அதாவது குரோமோசோம்களை வைத்து அல்லது ஃபினோடைப் ஜினோடைப் என்பதை வைத்து அக்குழந்தை ஆணா அல்லது பெண்ணா அல்லது இடையிலிங்கத்தவரா (இண்டர்செக்ஸ்) என்று நிர்ணயிக்கப்படுகிறது.
ஒரு குழந்தை ஆண் பிறப்புறுப்போடு பிறந்தால் ஆண், பெண் உறுப்போடு பிறந்தால் பெண். இரு வேறு உறுப்புகளும் தெளிவில்லாமல் பிறந்தால் அந்தக் குழந்தை இன்டர்செக்ஸ் (இடையிலிங்கத்தவர்) குழந்தை. இந்தக் குழந்தைகளுக்கு XX அல்லது XY வகையில் குரோமோசோம்கள் இல்லாமல், 14 வேறுபட்ட வகைகளில் மாறுபட்டு அமையலாம்.
மருத்துவர் இவற்றை விளக்கிய பிறகு என்ன தான் படித்து அரசாங்க வேலையில் இருந்தாலும் பழமைவாதியான தாமோதரனுக்கு அந்தப் பச்சிளங்குழந்தையின் மீது உண்டான வெறுப்புக்கு அளவில்லை. தனக்குப் பிறந்த குழந்தை இப்படி சிக்கலான உடலமைப்புடன் பிறந்திருப்பதை அவரால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. உள்ளுக்குள் கோபமும், வெறியும் ஊற்றெடுத்துக் கிளம்ப “இப்பிடி ஒரு குழந்தை எனக்குத் தேவை இல்ல டாக்டர்” என்றார் கடினமானக்குரலில்.
அதைக் கேட்டு மருத்துவருடன் சேர்ந்து அவரது அறைக்குள் நுழைந்த தாமோதரனின் தாயார் வேணியும் அதிர்ந்தார். பதறியவராய் மகனிடம் வந்தவர் “எப்பிடிய்யா உன்னால இப்பிடி பேச முடிஞ்சுது? பச்சைக்குழந்தையை வெறுக்காதே தாமு” என்று இறைஞ்சியவர் மருத்துவரிடம் கைகூப்பினார்.
“என் வீட்டு முதல் வாரிசு… உங்களைக் கடவுளா நினைச்சிக்கிறேன் டாக்டரய்யா… எதாச்சும் பண்ணி குழந்தையைச் சரியாக்குங்க”
மருத்துவருக்குப் படிப்பறிவற்ற அப்பெண்மணியின் கூற்று புரிபட “இங்க பாருங்கம்மா! குழந்தைக்கு வந்தது நோய் இல்ல… இது குழந்தையோட உடல் சம்பந்தப்பட்டது… இந்த உலகத்துல பிறக்குற குழந்தைங்க எல்லாருமே ஆணாவோ, பெண்ணாவோ, இடைப்பாலினமாவோ தான் பிறக்குறாங்க… இது இயற்கை தான்… உங்களுக்குச் சம்மதம்னா குழந்தைக்கு செக்ஸ் செலக்டிவ் சர்ஜரி (பாலினத்தேர்வு அறுவைச்சிகிச்சை) பண்ணி ஜெனிட்டலைச் சரிபண்ணிடலாம்… என்ன சொல்லுறிங்க தாமு சார்?” என்று தாமோதரனைப் பார்க்க அவரோ வெறுப்பை உமிழும் பார்வையுடன்
“அந்தச் சனியனுக்கு எதையோ ஒன்னைப் பண்ணுங்க… ஆனா எனக்கு அதோட முகத்தைப் பார்க்க கூட இஷ்டமில்ல” என்று உரைத்துவிட்டு வெளியேறினார்.
அதன் பின்னர் குழந்தைக்கு பாலினத்தேர்வு அறுவைச்சிகிச்சை நடத்தப்பட்டு அது பெண்ணாக இந்த உலகத்துக்கு அடையாளம் காட்டப்பட்டது. குழந்தைக்கு பிறப்புச்சான்றிதழுக்குப் பெயர் கேட்கும் போது அதன் தாயார் வருத்தத்தில் மூழ்கியிருக்கவும் அதன் கொள்ளையழகில் கவர்ந்திழுக்கப்பட்ட செவிலி ஒருவர் “இஷானினு வைங்க… அழகான நேம்” என்று கூறவே அங்கிருந்த ஒருவரும் அதற்கு மறுப்பு தெரிவிக்காமல் போக குழந்தைக்கு இஷானி என்ற நாமகரணம் மருத்துவமனை வார்டில் நடந்தேறியது.
தண்மதி ஒளிர்வாள்🌛🌛🌛