🌞 மதி 20 🌛
பால் என்பது ஒரு குழந்தை பிறக்கும் போது அதன் பிறப்புறுப்பு, குரோமோசோம்கள், ஜீனோடைப், ஃபீனோடைப்பை வைத்து அடையாளம் கண்டுகொள்வது. உலகில் மூன்று பால்நிலைகளில்தான் மனிதப் பிறப்பு நிகழ்கிறது. அவை ஆண், பெண், இடையிலிங்கம் (Intersex). பிறக்கும்போதே ஆண் இனப்பெருக்க உறுப்போ பெண் இனப்பெருக்க உறுப்போ முழுமையாக வளர்ச்சியடையாமல் இருபாலின இனப்பெருக்க உறுப்புகள் ஒருங்கே அமைந்த குழந்தைகளை ‘இடையிலிங்கம்’ (இன்டர் செக்ஸ்) என்றழைக்கிறார்கள்.
ருத்ரா ஜெய்யும் அஸ்மிதாவும் சிரித்துப் பேசிக்கொண்டிருப்பதை யோசனையுடன் பார்ப்பது நடனவகுப்பை முடித்துவிட்டுத் திரும்பிய இஷானியின் பார்வையில் விழுந்துவிட்டது. வைத்தக் கண் வாங்காமல் அவர்களைப் பார்த்துக் கொண்டிருந்தவனின் அருகில் சென்று அவனை அழைத்தவள்
“ஏன் அவங்க ரெண்டு பேரையும் இப்பிடி பார்த்துட்டிருக்கிங்க?” என்று கேட்க
“அஸ்மி ஜெய் கூட ரொம்ப ஜோவியலா பழகுற மாதிரி உனக்குத் தோணலையா?” என்று பதிலுக்கு அவளிடம் கேட்டான் ருத்ரா.
“இதுல என்ன இருக்கு? அவரு வீக்லி ஒன்ஸ் இங்கே வர்றாரு… குழந்தைங்க கிட்ட பிரியமா நடந்துக்கிறாரு… பைக்ல இருந்து கீழே விழுந்த இன்ஸிடென்ட்ல அவரைத் தேவையில்லாம ஹர்ட் பண்ணிட்டோமோனு அவளுக்குத் தோணுச்சு… அதான் அவரோட ஆபிசுக்கே நேரா போய் சாரி கேட்டுட்டு வந்தா… ஜெய்யும் நல்ல மாதிரி தான் தெரியுறாரு… அதை விடுங்க… அவங்க ரெண்டு பேரும் ஜோவியலா பழகுறதுல உங்களுக்கு என்ன பிரச்சனை?”
“நான் என்ன சொல்லுறேன், நீ என்ன புரிஞ்சிக்கிற இஷி? நான் ஒன்னும் பொண்ணுங்க பசங்களோட பேசவே கூடாதுனு யோசிக்கிற ஆள் இல்ல… என்னோட யோசனை எல்லாம் ஒன்னே ஒன்னு தான்… மாமாவோட கடந்தகால செய்கையால அவ பெரியப்பாவைத் தவிர எந்த ஆம்பளையையும் நம்புறது இல்லைனு நான் கேள்விப்பட்டேன்… இன் ஃபேக்ட் அதை நான் அவளோட ஸ்கூல் டைம்ல நேர்ல கூட பார்த்திருக்கேன்… ஆனா ஜெய் கூட அவ இவ்ளோ நார்மலா சிரிச்சுப் பேசுறதைப் பார்த்ததும் வித்தியாசமா தோணுச்சு”
“இதுக்கான காரணம் ரொம்ப சிம்பிள்.. ஆம்பளைங்க எல்லாருமே சந்திரசேகர் மாதிரி இல்லைனு அவ புரிஞ்சுகிட்டா… அவளோட செல்ல மாமாவா நீங்க இதுக்குச் சந்தோசப்படணுமே தவிர இப்பிடி யோசிக்கக் கூடாது” என்று கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்தி அவனுக்குக் குட்டு வைத்துவிட்டாள் இஷானி.
ருத்ராவும் அவள் சொல்வது சரி தான் என்பதால் அந்த விஷயத்தை அத்தோடு மறந்தான். அன்றைய தினம் அவனுக்கு நிறைய முக்கியமான வேலைகள் மிச்சமிருக்கிறது, அதைக் கவனிப்பதில் கண்ணானவன் அந்த நொடியோடு ஜெய்யையும் அஸ்மிதாவையும் மறந்தான்.
வழக்கமாக அவனும் அர்ஜூனும் மதியமே கிளம்பிச்சென்று விடுவர். ஆனால் அன்றைக்கு மாலையும் கடந்துவிட இருவரும் கிளம்பாமல் வீட்டையே சுற்றிச் சுற்றி வர அலமேலுவுக்குச் சந்தேகம்.
“ஏன்டா ருத்ரா! மந்தா வெளியூருக்குப் போயிருக்காளா? நீங்க ரெண்டு பேரும் வீட்டுக்குப் போகாம இங்கேயே சுத்திட்டிருக்கிறிங்க.. இந்நேரத்துக்கு அவ உனக்குப் போன் பண்ணிருக்கனுமே” என்று வினவ
“அவ போன் பண்ணுவானு தெரிஞ்சு தான் நான் சுவிட்ச் ஆப் பண்ணிட்டேன் பெரியம்மா… சும்மா நைநைனு நச்சு பண்ணுறா” என்று சொல்லிவிட்டு முகம் சுருக்கிய ருத்ராவைப் பார்த்து நகைத்த அலமேலுவுடன் ராஜகோபாலனும் இணைந்து கொண்டார்.
கூடவே “அதான் போனை சுவிட்ச் ஆப் பண்ணிட்டியேடா, இன்னைக்கு ஒரு நாள் ரெண்டு பேரும் இங்கேயே டின்னரை முடிச்சிட்டு காலம்பற வீட்டுக்குப் போங்க” என்றார் பெரியவர்.
அதன் பின்னர் வீடு கலகலப்பாக இருக்க கண்ணம்மாவுடன் சேர்ந்து அன்று சஞ்சீவினியும் இரவுணவைத் தயாரிக்கும் வேலையில் இறங்கிவிட்டார். அஸ்மிதா இஷானி இருவரும் ருத்ராவிடம் சைகைமொழியில் ஏதோ கேட்க அவன் கட்டைவிரலை மட்டும் உயர்த்திக் காட்டினான்.
இதை வீட்டிலுள்ள பெரியவர்கள் கவனித்தாலும் இளையவர்களுக்குள் ஏதோ விளையாட்டு போல என்று நினைத்துக் கொண்டனர். ஆனால் இரவுணவுக்குப் பின்னரும் ருத்ராவும் அர்ஜுனும் கிளம்பாமல் அங்கேயே இருக்க சஞ்சீவினியும் அலமேலுவைப் போலவே கேட்க
“ஒரு நாள் உன் வீட்டுல நாங்க தங்கிக்க அலோ பண்ண மாட்டியாக்கா?” என்று ருத்ரா கேட்கவும் அதற்கு மேல் அவனிடம் விவாதித்து அவனை வருத்த சஞ்சீவினிக்கு இஷ்டமில்லை. எனவே அந்தப் பெரிய வீட்டில் இருக்கும் விருந்தினர் அறைகளில் ஒன்றில் தங்கிக்கொள்ள சொல்லிவிட்டார்.
அர்ஜூன் “ஐ ஜாலி! மாமா நான் போய் நம்ம டிரஸ்ஸை கார்ல இருந்து எடுத்துட்டு வர்றேன்” என்று கார் நிறுத்தியிருக்கும் இடத்துக்கு ஓட
“ஏய் பார்த்துப் போடா… நைட் நேரம் எதுவும் பூச்சி எதுவும் தோட்டத்துல நடமாடும்” என்று அஸ்மிதாவும் பின்னே ஓடினாள்.
இருவரும் ஓட சஞ்சீவினி தம்பியிடம் “அப்போ டிரஸ்லாம் பேக் பண்ணிட்டு எல்லாத்துக்கும் பிரிப்பேரா வந்திருக்க?” என்று கேட்க அவன் அசடு வழியவும் சிரித்தபடி உறங்கச் சென்றுவிட்டார்.
அஸ்மிதா இருவரது உடைகள் அடங்கிய பேக்கைத் தூக்கி வரவும் ருத்ரா அவளிடமிருந்து வாங்கிக்கொண்டு தனக்கென ஒதுக்கப்பட்ட அறைக்கு மருமகனுடன் சென்றான்.
அதன் பின்னர் அவரவர் அறையில் அடங்கிவிட சிறிது நேரத்தில் நித்திராதேவி அந்த வீட்டில் உள்ள அனைவரையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிடவே வீடு அமைதியில் ஆழ்ந்தது.
நள்ளிரவில் சஞ்சீவினியின் அறைக்கதவு தட்டப்பட அவர் நல்ல உறக்கத்தில் இருந்தவர் தூக்கம் கலைந்து என்னவென்று பார்க்க அறைக்கதவைத் திறந்தபோது அங்கே அவரெதிரே நின்று கொண்டிருந்தான் அர்ஜூன்.
இந்த நேரத்தில் இவன் தனது அறையின் கதவைத் தட்ட என்ன காரணம் என்று யோசித்தபடி “என்னாச்சுடா அஜ்ஜூ? தூக்கம் வரலையா?” என்று கேட்க
அவனோ கண்ணைக் கசக்கியபடி “இல்ல பெரியம்மா… நான் தண்ணி குடிக்க கீழே வந்தேன்… ஹால்ல யாரோ நிக்கிற மாதிரி இருக்கு” என்று சொல்லவும் அவனை அழைத்துக் கொண்டு இருளில் ஆழ்ந்திருந்த ஹாலுக்கு வந்தார்.
அங்கே யாரோ நடமாடுவது போல தெரிய “யாரது?” என்று சத்தம் கொடுத்தவர் அர்ஜூனின் கரத்தை இறுக்கமாகப் பற்றிக்கொண்டபடி கேட்க அடுத்த நொடி அறையின் விளக்குகள் ஒளிர்ந்தது.
“ஹேப்பி பர்த்டேமா” என்ற சந்தோசக்கூவலுடன் இஷானி வந்து அணைத்துக் கொள்ள நடுவில் அலங்கரிக்கப்பட்ட மேஜையில் அழகாய் வீற்றிருந்தது கேக்.
மேஜையின் அருகில் நின்று கொண்டிருந்த ருத்ராவும் அஸ்மிதாவும் அவளைத் தொடர்ந்து சஞ்சீவினியை நோக்கி நெருங்கினர். சஞ்சீவினி இந்தத் திடீர் ஏற்பாட்டில் அதிர்ந்து போயிருந்தவர் இஷானியின் அணைப்பில் சுயநினைவுக்கு வந்தார். இஷானி அவரது கன்னத்தைப் பற்றிக் கொண்டவள் “பர்த்டே பேபி என்ன யோசிக்கிறிங்க?” என்று கொஞ்ச ஆரம்பிக்கவும் அவருக்கு இந்த திடீர் ஏற்பாட்டின் அதிர்ச்சி, ஆனந்தம் எல்லாமுமாய்ச் சேர்ந்து கண்கள் கலங்கிவிட்டது.
அர்ஜூன் அதற்குள் அலமேலுவையும் ராஜகோபாலனையும் எழுப்பிக் கையோடு ஹாலுக்கு அழைத்துவந்துவிட அஸ்மிதா அவளது அன்னையை அணைத்துக் கொண்டாள்.
“வெரி வெரி ஹேப்பி பர்த்டே மை டியர் ஹிட்லர் மம்மி” என்று அவரை அணைத்துக் கொண்டவள் அர்ஜூனைப் பார்க்க அதே சமயம் சஞ்சீவினியும் அவனை நோக்கியவர் பொய்க்கோபத்துடன்
“டேய் திருடா! பொய்யா சொல்லுற… இரு வர்றேன்” என்று அவனை நெருங்கி அவன் காதைப் பிடித்துத் திருக
“பெரியம்மா அஸ்மிக்காவும் இஷிக்காவும் தான் இந்த ஐடியாவைக் குடுத்தாங்க… அவங்களோட காதையும் சேர்த்து திருகுங்க” என்று அவர்களையும் மாட்டிவிட
அஸ்மிதா ருத்ராவிடம் “பயபுள்ள எப்பிடி மாட்டிவிடுது பாருங்க… அடுத்து அவங்க கவனம் என் மேல தான் திரும்பும் மாமா… ஏன்னா இவ அப்பாவியாம், இவளை நான் தான் கெடுத்து வச்சிருக்கேனு ஒரு நாள்ல தவுசண்ட் டைம் சொல்லிக் காமிப்பாங்க” என்று முணுமுணுக்க
ருத்ரா இஷானியைச் சுட்டிக்காட்டி “இவளா அப்பாவி? கண்ணுல படுற நேரம்லாம் என்னைப் போட்டு வறுத்தெடுக்கிறா” என்று குறைப்பட்டுக் கொண்டான்.
அதற்குள் அஸ்மிதாவை நோக்கி முறைத்தபடி வந்த சஞ்சீவினியை ருத்ரா மறிக்கவே அவனை ஏறிட்டுப் பார்த்தவர் விழியில் நீர் நிறைய அவனை அணைத்துக் கொள்ள
“ஹேப்பி பர்த்டேக்கா… இந்த பிறந்தநாள் உன் வாழ்க்கையில பெரிய மாற்றத்தைக் கொண்டு வரணும்” என்று வாழ்த்தியவன்
“நீ பர்த்டே செலிப்ரேட் பண்ண மாட்டேனு அஸ்மி சொன்னப்போ நான் எவ்ளோ ஃபீல் பண்ணுனேன் தெரியுமா? அதான் நான், அஸ்மி, இஷி கூட சேர்ந்து பிளான் பண்ணுனேன்… இவனையும் எங்களோட கூட்டு சேர்த்துக்கிட்டோம்” என்று மருமகனை இழுத்துக் கொண்டான்.
அலமேலுவும் ராஜகோபாலனும் ஒவ்வொரு பிறந்தநாளுக்கும் மகள் வருத்தத்துடன் இருப்பதையே பார்த்துப் பழகியவர்கள் இன்றைக்கு அவரது முகத்தில் விகசித்த மகிழ்ச்சியைக் கண்டதும் அவர்களின் மனம் நிம்மதியடைந்தது.
சஞ்சீவினி பெற்றோரிடம் ஆசிர்வாதம் வாங்கிக் கொண்டவர் அடுத்து இளையவர்கள் வற்புறுத்தலின் காரணமாகக் கேக் வெட்ட ஒத்துக்கொண்டார்.
“பெரியம்மா! கேண்டிலை ஊதுறதுக்கு முன்னாடி காட் கிட்ட வேண்டிக்கோங்க” என்று அர்ஜூன் பெரியமனிதன் போல கூறவும் புன்னகைத்தவர் கண் மூடி கடவுளை வேண்டிக்கொண்டார். வேறு என்ன இரண்டு பெண்களின் வாழ்விலும் இனி நடக்கப்போகும் அனைத்தும் நல்லதாக மட்டுமே இருக்க வேண்டும் என்று கடவுளுக்குக் கட்டளையிட்டு விட்டு மெழுகுவர்த்தியை ஊதியவர் கேக்கை வெட்டி அனைவருக்கும் ஊட்டிவிட்டு தனது பெண்களைப் போலவே அர்ஜூனுக்கும் ஊட்டிவிட அந்தச் சிறுவன் கண் கலங்கிவிட்டான்.
அனைவரும் மகிழ்ச்சியாக இருந்த அத்தருணத்தில் தான் சஞ்சீவினியின் போன் சிணுங்கியது. எப்போதும் இரவானால் போனை சுவிட்ச் ஆப் செய்து வைத்துவிடுவது அவரது வழக்கம். ஆனால் இன்றைய நிகழ்வுகளின் உற்சாகத்தில் அவர் போனை சுவிட்ச் ஆப் செய்ய மறந்துவிட்டிருந்தார்.
போன் இடைவிடாமல் சிணுங்கவே இஷானி தானே போய் போனை எடுக்கச் சஞ்சீவினியின் அறையை நோக்கிச் சென்றாள். போன் சிணுங்கியபடி மேஜையின் மீது இருக்க அதை எடுத்தவள் திரையில் தெரிந்த பெயரைக் கண்டதும் புன்னகையுடன் பேச ஆரம்பித்தாள்.
“சொல்லுங்க மனோ ஆன்ட்டி” என்று பேச ஆரம்பித்தவள் மறுமுனையில் பேசியவரின் உரையைக் கேட்டு முடித்துவிட்டு அழைப்பைத் துண்டித்தாள்.
போனில் பேசியது மனோகரி என்ற சஞ்சீவினியின் தோழி ஒருவர். அவரது அண்டைவீட்டுப் பெண்மணி சஞ்சீவினியிடம் ஏதோ சொல்ல விரும்புவதாகவும் அதற்காக சஞ்சீவினியின் எண்ணை அவருக்கு அளித்ததாகவும் கூறினார். அந்த அண்டைவீட்டுப்பெண்மணி சஞ்சீவினிக்கு கட்செவியஞ்சலில்(WHATSAPP) ஒரு வீடியோ ஆதாரத்தை அனுப்பியுள்ளதாகச் சொல்லிவிட்டுப் போனை வைத்தார் மனோகரி.
இஷானி ஆர்வத்தில் சஞ்சீவினியின் கட்செவியஞ்சலைத் திறந்து பார்க்க அதில் புதிய எண்ணில் இருந்து ஒரு வீடியோ வந்திருந்தது. அதை ஓட விட்டுப் பார்க்க ஆரம்பித்தாள் அவள்.
அதில் ஒரு ஆண் ஒரு குழந்தையைப் போட்டு அடித்துக் கொண்டிருந்தார். அந்தக் குழந்தை முதலில் சிரித்துக் கொண்டே இருந்தவள் ஒரு கட்டத்தில் வலி தாங்காமல் கதறத் துவங்கினாள். ஆனால் அவனது வார்த்தைகளும் செய்கைகளும் ஒழுங்கின்றி வர ஆரம்பிக்கவும் இஷானிக்கு அவளது மனநிலை புரிந்து கைகள் நடுங்கத் தொடங்கியது.
அந்த வீடியோவில் “சனியனே! என்ன சொன்னாலும் சிரிக்கவா செய்யுற? செத்துத் தொலை… எனக்குனு வந்து பிறந்திருக்குது பாரு… இது பிள்ளை இல்ல, நான் பண்ணுன பாவம்… இவளால நான் இன்னும் என்ன அசிங்கப்படணுமோ” என்று சொல்லியவண்ணம் அந்தக் குழந்தையை அடித்து நொறுக்க
குழந்தையின் தாயார் “அவளை அடிக்காதிங்க! நீங்க அடிச்சாலும் அவளுக்கு விவரம் புரியாதுங்க… இனிமே உங்க ஃப்ரெண்ட்ஸ் முன்னாடி அவ வராம நான் பார்த்துக்கிறேங்க” என்று அவரைத் தடுக்க முயல
அந்த ஆணோ “கிழிப்ப! இதை எதாவது ஆஸ்மரத்துல சேர்த்துவிடுனு எத்தனை தடவை சொன்னேன்? என் பேச்சைக் கேட்டியா? இது பிறக்கலைனு யாரு அழுதாங்க? ஒவ்வொரு தடவையும் இவளால எனக்கு அசிங்கம் தான்” என்று சொல்லிவிட்டு அந்தக் குழந்தையை பொத்தென்று கட்டிலில் வீசினார்.
குழந்தை வலி தாங்காமல் கதற ஆரம்பிக்கவும் “மன வளர்ச்சி இல்லாத குழந்தை கிட்ட ஏன் இப்பிடி கொடூரமா நடந்துக்கிறிங்க?” என்ற அலறலுடன் அந்தப் பெண் குழந்தைக்கு எதுவும் அடிப்பட்டிருக்குமோ என்று பதறியவராய் அதன் அருகில் செல்ல
அந்தக் குழந்தையின் தந்தையான ஆணோ கிஞ்சித்தும் தனது செயலை நினைத்து வருந்தாமல் “சனியன் அப்பிடியாச்சும் சாகட்டும்… இது இருந்து வேஸ்ட் தான்… வெறும் சதைப்பிண்டம் தானே” என்று சொல்லிமுடிக்கவும் வீடியோ முடிந்தது.
வீடியோ முடிவதற்குள் இஷானியின் காதுக்குள் யாரோ “நீயெல்லாம் எதுக்கு பிறந்த சனியனே? நீ பிள்ளை இல்ல… நான் பண்ணுன பாவத்துக்குப் பிறந்த சதைப்பிண்டம்” என்ற ஒரு ஆணின் குரல் காதில் கேட்க, அவளது இதயத்துடிப்பு எகிற ஆரம்பித்தது.
சுற்றிலும் இருந்த காட்சிகள் மங்கலாக ஒரு முதியப்பெண்மணியின் உருவம் வந்து “ஐயா தாமு! பிள்ளையைத் திட்டாதய்யா… இனிமே அவ உன் கண்ணு முன்னாடி வரமாட்டா” என்று கெஞ்சியக் காட்சி வேறு கண் முன் தோன்றியது.
அந்த உருவங்கள் கண் முன்னே அங்குமிங்கும் நடமாடத் துவங்க அவளுக்கு வியர்த்துக் கொட்ட ஆரம்பித்தது. அந்த ஆணின் குரல் மீண்டும் மீண்டும் காதில் ஒலிக்க யாரோ அடிப்பது போல உடலெங்கும் வலி பரவத் தொடங்கியது இஷானிக்கு. சிறிது நேரத்தில் வலி உடலெங்கும் பரவ வேதனை தாங்காமல் “அம்மா!” என்று வேதனைக்குரலுடன் கத்தியவளின் சத்தம் சஞ்சீவினிபவனத்தில் இவ்வளவு நேரம் நிறைந்திருந்த சந்தோசத்தைக் கலைத்துவிட்டு எதிரொலித்தது.
தண்மதி ஒளிர்வாள்🌛🌛🌛