🌞 மதி 2 🌛

டைட்டானியம் டை ஆக்சைடு என்ற வேதிப்பொருள் முகப்பூச்சுக்கள், காகிதம், பெயிண்ட், பிளாஸ்டிக் இன்னும் பல்வேறு விதமான பொருட்களைத் தயாரிக்கும் போது பயன்படுத்தப்படும் முக்கிய வெள்ளை நிறமி ஆகும். இது இல்மனைட், ரூட்டைல் போன்ற தாதுப்பொருட்களிலிருந்து கிடைக்கிறது.

சென்னை போட் கிளப் சாலை…

உயர்மட்டத்தினரின் பங்களாக்கள் நிறைந்த பகுதி. அதன் ஒரு பக்கத்தில் காலைப்பொழுதின் இனிமையை வரவேற்றபடி நெடிதுயர்ந்த மரங்களும், பல்வண்ண மலர்களுடன் கூடிய தோட்டமுமாய் ரம்மியமாய் இருந்த அந்தப் பங்களா சேகர் வில்லா என்ற பெயருடன் கம்பீரமாய் நின்றது.

அதன் தோட்டத்தில் மூச்சுவாங்கியபடி ஓடிக்கொண்டிருந்தான் ஒரு பன்னிரெண்டு வயது சிறுவன்.

“முடியாது! எனக்கு ஃப்ரெட் டோஸ்ட் வேண்டாம்.. அது எனக்குப் பிடிக்கலை”

அவன் பின்னே ஓடிவந்தப் பெண்மணிக்கு நடுத்தரவயது, அவனது தாயாராக இருக்கக்கூடும்.

“அஜ்ஜூ! நிக்கப்போறியா இல்லையா? இப்போ மட்டும் நீ ப்ரெட் டோஸ்டை சாப்பிடலைனா அடி பின்னி எடுத்துடுவேன்”

அவரது குரலில் இருந்த கோபத்தில் எரிச்சலுற்ற அச்சிறுவன் அவர் கையில் மாட்டுவேனா என ஆட்டம் காட்டிவிட்டு இறுதியில் சிக்கிக் கொண்டான். அவனது காதைத் திருகியவர்

“அது என்னடா எதுக்கெடுத்தாலும் பிடிவாதம்? பாரு உன் பின்னாடி ஓடி என் ஷேரி நலுங்கிப் போயிடுச்சு.. இனிமே இப்பிடி பண்ணுவியா?” என்று விரலை நீட்டி அவனை மிரட்ட

அவனோ “முடியாது… எனக்கு இது பிடிக்கலை… ரோஹனோட அம்மா தினமும் அவனுக்கு விதவிதமா பிரேக்பாஸ்ட், லஞ்ச் செஞ்சு குடுக்கிறாங்க… நீங்க மட்டும் தான் ரொம்ப பேட்.. யூ ஆர் அ பேட் மதர்” என்று கத்த அடுத்த நிமிடம் அந்தப் பெண்மணியின் கரம் அவன் கன்னத்தைப் பதம் பார்க்கும் ஆவேசத்துடன் ஓங்கியது.

ஓங்கிய கரம் தன் கரத்தில் பதிந்துவிடும் என நினைத்துப் பயந்த அச்சிறுவன் கண்களை மூடிக்கொள்ள ஆனால் ஆபத்பாந்தவனாய் வந்து அக்கரத்தைப் பிடித்து நிறுத்தினான் ஒருவன்.

நெடுநெடுவென உயரத்துடன், கருத்தச் சிகை காற்றில் அசைய, தீட்சண்ய விழிகளில் தீக்கனலாய் கோபம் மின்ன, அவனது கூரியநாசி கோபத்தில் விடைத்து அடங்க, இறுக்கமான உதடுகள் இன்னும் அழுத்ததுடன் வார்த்தைகளை உச்சரிக்க கோபத்தில் கூட வசீகரிக்கும் கம்பீரத்துடன் நின்றிருந்தான் ஒரு ஆடவன். அவனது வயது பின்னிருபதுகளில் இருக்கலாம்.

அவனைக் கண்டதும் அச்சிறுவன் “மாமா!” என்றபடி அவனது கால்களைக் கட்டிக்கொண்டான் அழுகையுடன். அந்த ஆடவனின் கரங்கள் வாஞ்சையுடன் அச்சிறுவனைத் தட்டிக்கொடுக்க அதே நேரம் விழிகள் தன் எதிரே நின்ற அச்சிறுவனின் தாயாரை சுட்டெரிக்குமளவுக்குக் கோபத்தைக் கக்கிக் கொண்டிருந்தன.

அப்பெண்மணி “ருத்ரா! உனக்கு என்ன நடந்துச்சுனு தெரியாதுடா.. இவன் என்ன வார்த்தை சொன்னான் தெரியுமா?” என்று ஆதங்கத்துடன் சொன்னவரிடம்

“தெரியும்! யூ ஆர் அ பேட் மதர்… அதானே! அவன் சொன்னதுல என்ன தப்பு இருக்குக்கா?” என்று சிறிதும் குறையாத சீற்றத்துடன் தமக்கையிடம் பேச ஆரம்பித்தான் அவன், ருத்ரா.

அவன் எதிரே நிற்கும் மந்தாகினியின் (அது தான் அப்பெண்மணியின் பெயர்) பிரியத்துக்குரிய இளையச்சகோதரன். அவருக்குப் பிறகு பன்னிரெண்டு வருடங்கள் கழித்துப் பிறந்தவன். தமக்கையின் மகனைத் தட்டிக் கொடுத்தபடி

“அஜ்ஜூ! குட்பாயா ஸ்கூலுக்கு ரெடியாகு போ.. மாமா இப்போ வந்துடுவேன்.. நானே உனக்கு என் கையால பிரேக்பாஸ்ட் செஞ்சு தர்றேன்” என்று சொல்லி மருமகனை வீட்டுக்கு அனுப்பிவைத்தவன் அவன் சென்றதும் தமக்கையிடம் வெடிக்கத் தொடங்கினான்.

“அக்கா என்னால ஒரு லெவலுக்கு மேல பொறுமையா இருக்க முடியாது… இனிமே உன்னோட கை அஜ்ஜூ மேல படவே கூடாது… நீ நல்ல மனுசி இல்லைனு பன்னிரெண்டு வருசத்துக்கு முன்னாடி உனக்குக் கிடைச்ச பேரையே நீ இன்னும் சரி செய்யலை… இதுல நல்ல அம்மாவும் இல்லைனு நீ பெத்தப் பிள்ளை கிட்டவே பேரு வாங்கிடாதே… இதுக்கு மேலே எனக்குச் சொல்லத் தெரியலை” என்று அவன் பொறுமையை இழுத்துப் பிடித்துக்கொண்டு பேசும் போதே “ருத்ரா!” என்ற அவனது பெயரை உச்சரித்தது ஒரு கம்பீரமான நடுத்தர வயது ஆண் குரல்.

ருத்ரா பேச்சை நிறுத்திவிட்டு அக்குரல் வந்த திசையை நோக்க அங்கே நின்று கொண்டிருந்தார் குரலின் கம்பீரத்தைத் தன்னகத்தே கொண்டிருக்கும் சந்திரசேகர், மந்தாகினியின் கணவர் மற்றும் அஜ்ஜூ என்ற பன்னிரெண்டு வயது சிறுவனின் தந்தை.

அவரைக் கண்டதும் ருத்ராவின் வாய் தற்காலிகமாக அடைபட்டாலும் அவன் முகத்தில் அலட்சியம் குடிகொண்டது. இந்த மனிதர் தானே அனைத்துக்கும் காரணகர்த்தா என்ற கசப்புணர்வு முகத்தில் பிரதிபலிக்க நின்றவனிடம் வந்த சந்திரசேகர்

“ருத்ரா! இனிமே மந்தாவை நீ இப்பிடி எடுத்தெறிஞ்சு பேசி என் காதுல விழக் கூடாது… இந்த வீட்டுக்கு நீ வந்தப்போ பதினஞ்சு வயசுப்பையன்டா… உன் அக்கா உனக்காக எவ்ளோ தியாகம் பண்ணிருக்கானு தெரிஞ்சுமா இப்பிடி பேசுற?” என்று கர்ஜித்தவரின் கர்ஜனையெல்லாம் தன்னை எதுவும் செய்யாது என்பது போல கைகளை மார்பின் குறுக்கே கட்டிக்கொண்டபடி நின்ற ருத்ரா அவருக்குப் பதிலடி கொடுக்க ஆரம்பித்தான்.

“நல்லா தெரியும் மாமா! அவ பண்ணுன தியாகம் எல்லாம் இன்னும் மனசுல இருக்கிறதால தான் இன்னும் நான் இந்த வீட்டுல இருக்கேன்…. நான் உங்க ஒய்பை ஒன்னும் சொல்லலை… அதே மாதிரி அவளும் இனிமே அஜ்ஜூ விஷயத்துல கோவப்படக்கூடாதுனு சொல்லி வைங்க” என்று அவன் முடிக்கும் போதே “மந்தா!” என்றபடி டிராக்சூட்டுடன் வந்தார் ஒரு நடுத்தர வயது ஆண்.

அவரைக் கண்டதும் முகம் சுளித்த ருத்ரா “வந்துடுச்சு… இந்த ஓணானுக்கு ஏத்த வேலி” என்று கடிந்துவிட்டு அங்கிருந்து அகல சந்திரசேகரும் மந்தாகினியும் அவனையே கையாலாகாத்தனத்துடன் பார்த்துக் கொண்டிருந்தனர்.

அதற்குள் அந்த டிராக்சூட் நபர் இத்தம்பதியினரிடம் வந்து நின்றவர் “என்ன மாப்பிள்ளை வழக்கம் போல சின்னவன் உங்களை எரிச்சப்படுத்திட்டானா? அவனை விட்டுத் தள்ளுங்க… இளரத்தம், கொஞ்சம் துள்ளித் தான் அடங்கும்… அவன் அப்பிடியே எங்க அப்பா மாதிரி… நீதி, நேர்மை, நியாயம்னு கதை பேசுவான்… அவன் பேசுனதை மனசுல வச்சுக்காதிங்க… மந்தா! என்னம்மா நீயே கலங்கிப் போனா என்ன அர்த்தம்? அவன் பேசுறது என்ன புதுசா? வாங்க ரெண்டு பேரும்” என்று உதட்டளவில் ஆறுதல் சொல்லிவிட்டு இருவரையும் அழைத்துச் சென்றார் அவர்.

அவரது கழுகுப்பார்வைக்கு எதுவுமே தப்பிக்க முடியாது. தந்திரப்புத்தியும், குயுக்தியும் நிறைந்த அம்மனிதரின் குணமே அவருக்கு இத்தனை வருடம் சந்திரசேகரையும் மந்தாகினியையும் கட்டுப்படுத்தும் வலிமையைத் தந்திருந்தது. அவர் தான் விநாயகமூர்த்தி. மந்தாகினி மற்றும் ருத்ராவின் மூத்தச் சகோதரர். அவருக்கென்று குடும்பம் எதுவுமில்லை. எனவே தங்கையுடன் அவரது புகுந்தவீட்டிலேயே தங்கிவிட்டாரெனலாம்.

இவர்களில் மந்தாகினிக்குச் சுயபுத்தி என்பது கிஞ்சித்தும் கிடையாது. எடுப்பார் கைப்பிள்ளை என்ற வாக்கியத்துக்கு சிறந்த உதாரணம் அப்பெண்மணி தான். பெற்றப்பிள்ளையைக் கவனிப்பதை விட கேளிக்கை, ஆடம்பரத்தில் கண்ணானவர் இதனாலேயே ருத்ராவிற்கு பிடிக்காதவரானார்.

ஆனால் அஜ்ஜூ பிறப்பதற்கு முன்னரே மந்தாகினியும் விநாயகமூர்த்தியும் ருத்ராவிடம் மரியாதையை இழந்துவிட்டனர். அப்போது அவனுக்குப் பதினைந்து வயது தான். ஆனாலும் அச்சம்பவம் இன்னும் அவன் நினைவில் இருக்கிறது. இப்போது நினைத்தாலும் சகோதர சகோதரிகளின் மீது அடக்கமுடியாதக் கோபம் வரும் அவனுக்கு.

அதை எல்லாம் அசை போட்டபடி குளித்து முடித்துவிட்டு உடை மாற்றியவன் அஜ்ஜூவுக்குக் கொடுத்த வாக்கின்படி யூடியூபில் பார்த்து ஏதோ ஒரு காலையுணவைத் தயார் செய்தான். அஜ்ஜூவும் மாமனின் அன்புக்குக் கட்டுப்பட்டவன் ருசியைப் பற்றி யோசிக்காமல் “நல்லா இருக்கு மாமா!” என்று சப்புக்கொட்டியபடி சாப்பிட்டான்.

சந்திரசேகர் இதை ஒரு வித இயலாமையுடன் பார்த்துக் கொண்டிருந்தவர் மந்தாகினியிடம் “ருத்ரா ஒருத்தன் மட்டும் இல்லையோ நம்ம அஜ்ஜூ நம்மளை இன்னும் அதிகமா வெறுத்திருப்பான் மந்தா” என்று சொல்ல

அவரது மனைவியும் “ஆமா சேகர்! ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணுனு எனக்கு அவன் மட்டும் தான் இருக்கான். ஆனா இந்த அம்மா மேல தான் அவனுக்கு எவ்ளோ கோவம் இந்தச் சின்னவயசுலயே… நினைக்கவே கஷ்டமா இருக்கு சேகர்” என்று வேதனையுடன் சொன்னபடி தம்பியுடன் அரட்டையடித்தபடி உணவுண்ணும் மகனைப் பார்த்துக் கொண்டிருந்தார்.

சந்திரசேகரும் மந்தாகினியும் இப்போது உணவுமேஜைக்குச் சென்றால் மாமனும் மருமகனும் சாப்பாட்டைப் பாதியிலேயே விட்டுச் சென்றுவிடுவர் என்று பொறுமை காத்தனர். அவர்கள் சாப்பிட்டு வீட்டை விட்டுக் கிளம்பியதும் உணவுமேஜையில் அமர்ந்தவர்கள் அவர்கள் கம்பெனியான ஆர்.எஸ் கெமிக்கல் பிரைவேட் லிமிட்டெட்டின் கணக்கு வழக்குகளைப் பற்றி விலாவரியாகப் பேச ஆரம்பித்தனர் இருவரும்.

கணவன் மனைவி இருவருமே அந்தத் தொழிற்சாலையில் முழுநேர மேலாண்மையில் கவனம் செலுத்துவர். சந்திரசேகர் மேலாண்மை இயக்குனர் வேறு. கேட்கவா வேண்டும்? இருபத்து நான்கு மணிநேரமும் வர்த்தகத்தைப் பற்றியும் அதைப் பெருக்கிப் பணமாக்குவதைப் பற்றியுமே யோசித்தவர்கள் யாருக்காக ஓடியோடி உழைக்கிறார்களோ அந்தச் செல்வமகனையே மறந்தார்கள் என்பது தான் கசப்பான உண்மை.

அச்சிறுவனும் தன் பெற்றோர் இப்படித் தான் என்று புரிந்துகொண்டவனாய் அவர்களிடமிருந்து விலகி தன்னைப் போலவே இயல்புள்ளவனான மாமனிடம் ஒட்டிக்கொண்டான். ருத்ராவுக்கும் அவன் ஒரு பற்றுக்கோடானான் என்றால் மிகையில்லை. இவ்வாறு வாழ்க்கை அதன் போக்கில் போன போது தான் சந்திரசேகரின் கெமிக்கல் தொழிற்சாலைக்குப் போட்டியாக இருக்கும் நிறுவனம் தற்போது வெகு வேகமாக வேர் பிடித்து வளரத் தொடங்கிவிட்டது என்ற தகவல் வெளிவர ஆரம்பித்தது.

அந்தப்போட்டியைச் சமாளிக்கும் நேரத்தில் சந்திரசேகரின் நிறுமம் இரண்டாமிடத்துக்குத் தள்ளப்பட்டிருந்தது தான் வேதனை. அந்த இக்கட்டான நேரத்தில் ருத்ராவைத் தனது நிறுமத்தின் இயக்குனராகப் பொறுப்பேற்றுக் கொள்ளும்படி சந்திரசேகர் வைத்த வேண்டுகோள் அனைத்தையும் தவிடுபொடியாகிவிட்டான் அவன்.

“என் ஷேர் டிரேடிங்ல நான் ராஜாவா இல்லைனாலும் நானும் பத்து பேரை வச்சு வேலை வாங்குறேன் மாமா… இந்தச் சின்னத் திருப்தி எனக்குப் போதும்.. உங்க கம்பெனி மாதிரி பெரிய இடம்லாம் எனக்குச் சரியா வராது.. நான் என் சொந்தக்கால்ல நிக்கணும்னு ஆசைப்படுறேன்” என்று ஒரேயடியாக மறுத்துவிட்டான்.

அவனது பங்குவர்த்தகம் செய்யும் நிறுவனத்தை அவனும் அவனது நண்பனும் சேர்ந்து நடத்தி வந்தனர். இருவரும் அதற்கு முன்னர் அதே துறையில் மூன்றாண்டுகள் வேலை செய்து அந்த அனுபவத்தை வைத்தே ஜீவன் ஷேர் டிரேடிங் நிறுவனத்தை ஆரம்பித்தனர்.

முதல் வருடம் இருவர் மட்டுமே உழைத்தாலும் அடுத்தடுத்த வருடத்தில் அவர்கள் வாயிலாகப் பங்குகளில் முதலீடு செய்தவர்களுக்கு நல்ல இலாபத்தையும், பங்காதாயத்தையும் ஈட்டித் தந்ததால் தற்போது பத்து நபர்களை வைத்து வேலை வாங்குமளவுக்கு அவர்கள் வளர்ந்துவிட்டனர். எனவே தான் ருத்திரா தனது மூன்று வருட உழைப்பை விட்டுவிட்டு சந்திரசேகரின் பின்னே செல்ல விரும்பவில்லை.

மந்தாகினிக்கும் விநாயகமூர்த்திக்கும் இதில் பெரும்வருத்தம். இந்தப் பையன் இப்படி பிழைக்கத் தெரியாதவனாக இருக்கிறானே என்று புலம்பித் தீர்த்தவர்கள் சந்திரசேகருக்காக அவனிடம் தூது சென்று மூக்குடைப்பட்டது தான் மிச்சம். ருத்ரா தனது முடிவிலிருந்து சிறிதும் பின்வாங்கவில்லை.

அவனைப் பொறுத்தவரை வெற்றி என்பது கடின உழைப்பின் பயனாகக் கிடைத்தால் மட்டுமே அதை முழு மனதோடு அனுபவிக்க முடியும் என்று நம்புபவன். அப்படிப்பட்டவனுக்கு அடுத்தவர் உழைப்பில் நடக்கும் தொழிலில் ஒப்புக்குச் சப்பாணியாக இருக்க விருப்பமில்லை.

தன் உழைப்பால் உண்டான நிறுவனம் சிறிதே என்றாலும் அதில் தனது உழைப்பு எனும் முதலைப் போட்டு வெற்றி எனும் இலாபத்தை ருசித்துக் கொண்டிருந்தான். சந்திரசேகரின் நிறும இலாபத்தோடு ஒப்பிட்டால் அது மிகவும் குறைவு தான். ஆனால் அதில் ஒவ்வொரு பைசாவிலும் அவனது கடின உழைப்பு உள்ளதே!

கடின உழைப்பும் ஒரு போதை மாதிரி தான். ஒரு முறை அதை அனுபவித்தவர்கள் வாழ்வின் இறுதிமூச்சு வரை அதை விட விரும்புவதில்லை. ருத்ராவும் அந்தப் போதைக்கு அடிமையான கடுமையான உழைப்பாளன் தான்.

தண்மதி ஒளிர்வாள்🌛🌛🌛