🌞 மதி 18 🌛

குளோரைட் முறையில் டைட்டானியம் டை ஆக்சைட் தயாரிக்கையில் வெளியாகும் நச்சுக்களான டயாக்சின், ஃபியூரான், பாலிசைக்ளிக் அரோமேட்டிக் ஹைட்ரோகார்பன்ஸ் போன்றவை கழிவுகளாக மிஞ்சும். இவை உயிர்க்கோளத்தின் சூழல் அமைப்பில் கலந்து தாய்ப்பாலில் கூட கலக்கும் அபாயமுள்ளவைவி.டி.பத்மநாபன் (Society of Science Environment and Ethics)

ஜீவன் ஷேர் டிரேடிங் நிறுவனம்….

வழக்கமான பரபரப்புகளுடன் பணியாளர்கள் பங்குவர்த்தகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தனர். விலையில் உள்ள ஏற்ற இறக்கங்களுக்கேற்ப வாடிக்கையாளர்களின் பங்குகளை விற்பதோ அல்லது வாங்குவதோ நடந்து கொண்டிருக்க ருத்ரா அவனது நண்பன் வெங்கட்டிடம் தீவிரமான முகபாவத்துடன் ஏதோ விவாதித்துக் கொண்டிருந்தான்.

“ஐ காண்ட் பிலீவ் திஸ்… திடீர்னு ஆர்.எஸ்.கெமிக்கலோட ஷேரை யாரு இவ்ளோ வேகமா வாங்குறாங்க? இதுல எதுவும் கார்பரேட் தந்திரம் இருக்குமோ ருத்ரா?”

“மே பி… ஒன்னா ரெண்டா? இந்த ஃபீல்ட்ல அவங்களுக்கு எதிரிகள் அதிகம்… ஒவ்வொரு ஷேர்ஹோல்டரா போய் அவங்க செக் பண்ண முடியாதுல்ல வெங்கட்… எனிஹவ் அந்தக் கம்பெனியைப் பத்தி பேசி நம்ம டைமை வேஸ்ட் பண்ணவேண்டாம்” என்று பேச்சை முடித்த ருத்ரா தனது மனதின் ஒரு ஓரத்தில் அந்தப் பிரச்சனையைக் குறித்துவைத்துக் கொண்டான்.

வெங்கட்டும் அவனும் அதன் பின் வேலைகளில் மூழ்கிவிட்டிருக்கையில் அஸ்மிதாவின் அழைப்பு மொபைலில் வரவும் யாரென்று பார்த்தவன் அவளது பெயரைக் கண்டதும் இதழ்கள் குறுஞ்சிரிப்பில் மலர போனை எடுத்தான்.

“வாட் அ சர்ப்ரைஸ் அஸ்மி? நீயே எனக்கு கால் பண்ணிருக்க? என்ன விசயம்?” என்று விசாரித்தவனுக்கு மறுமுனையில் அஸ்மிதா சொன்ன தகவல் உற்சாகத்தை அளித்தது.

“நீ கவலையே படாதே அஸ்மி… அதுல்லாம் நான் பார்த்துக்கிறேன்” என்று உறுதியளித்துவிட்டுப் போனை கையில் வைத்துச் சுழற்றியவனுக்கு மனம் முழுவதும் சந்தோசத்தில் நிறைந்திருந்தது.

வெங்கட் நண்பனின் முகம் புன்னகையில் விகசிப்பதைக் கண்டவன் “சார்! இப்போ எதுக்கு சிரிக்கிறிங்க சார்? அக்கா வீட்டுக்குப் போறேனு சொல்லி அடிக்கடி உங்க காரோட ரூட் மாறுனப்போவே சந்தேகப்பட்டேனுங்க சார்… எந்தக் காத்து கருப்பு அடிச்சுதுங்க?” என்று கேலி செய்ய

ருத்ரா அவன் தோளில் விளையாட்டாய் அடித்தவன் “காத்து கருப்பு இல்ல நண்பா! என்னைப் பிடிச்சிருக்கிறது ஒரு மோகினி… அதுவும் நோஸ் பின் போட்ட அழகான மோகினி… என்ன அடிக்கடி கொஞ்சம் பூனைக்குட்டி மாதிரி சீறும்… அக்கா மகளாச்சே! அட்ஜெஸ்ட் பண்ணித் தான் ஆகணும்” என்று பெருமூச்சுடன் சொல்லவும்

“டேய் சீரியசாவா சொல்லுற? ஆனா அஸ்மி நோஸ் பின் போட்டிருக்க மாட்டாளே” என்று வெங்கட் தாடையைத் தடவிக்கொள்ள அவனது வார்த்தையில் ருத்ரா அதிர்ந்தான்.

“அடேய்! நான் அஸ்மியைச் சொல்லலைடா… அவ எனக்குக் குழந்தை மாதிரி… நான் இஷியைப் பத்தி பேசிட்டிருக்கேன்டா எருமை” என்று சொல்லிவிட்டு இம்முறை சற்று வேகமாகவே அவன் முதுகில் அடிக்க வெங்கட் வலியில் முகத்தைச் சுளித்தான். அவன் இதைக் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் மீண்டும் புன்னகைத்துவிட்டு இஷானியைப் பற்றி நண்பனிடம் பேச ஆரம்பித்தான்.

“முன்னலாம் என்னைப் பார்த்தாலே அவாய்ட் பண்ணுவா… இல்லைனா சைலண்டா தலையைக் குனிஞ்சிட்டுப் போயிடுவா… இப்போ கொஞ்சநாளா என் கிட்ட உரிமையா கோவப்படுறா… அற்பசொற்பமா மாமானு கூப்பிடுறா… எனக்கு இதெல்லாம் பிடிச்சிருக்குடா… அவளைப் பார்க்கிறப்போ அடிக்கடி என் அம்மா நியாபகம் வருது… அவங்களும் அவளை மாதிரி தான் டயமண்ட்ல நோஸ் பின் போட்டிருப்பாங்க… அதை வச்சு கேள்வியா கேட்டு அம்மாவை டார்ச்சர் பண்ணுனதுலாம் மனசுக்குள்ள வந்து போகும்… அதுவும் எனக்குக் கண்ணுல பேட்மிண்டன் ராக்கெட் பட்டப்போ அவ செஞ்ச காரியம் ரொம்ப சின்னது தான்… ஆனா அதுல இருந்த அக்கறை இருக்கே, அது இந்த யூனிவர்சை விட பெருசு” என்று மனதில் உள்ள உணர்வை வார்த்தைகளாய் வெளிப்படுத்தியவனை வெங்கட் ஆச்சரியமாய் பார்த்தான்.

இது நாள் வரை ருத்ராவின் கேலி கிண்டல் கோபம் சோகம் என்று அனைத்து உணர்வையும் ஒரு நண்பனாய் உடனிருந்து பார்த்து உணர்ந்தவன் வெங்கட். தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்க வேண்டுமென்ற எண்ணம் மட்டுமே நிறைந்திருந்த அவனது மனதில் இஷானி என்ற பூவையும் இப்போது இடம்பெற்று விட்டாள் என்பதை அறிந்து ஒரு நண்பனாய் ருத்ராவுக்காக அவன் சந்தோசப்பட்டான்.

ஏனெனில் அடிக்கடி ருத்ரா அவனிடம் “வாழ்க்கையில கல்யாணம் குழந்தைனு ஒரு மண்ணாங்கட்டியும் எனக்கு தேவையில்லடா… எனக்கு அர்ஜூன் இருக்கான்… அவன் போதும்… பொண்டாட்டினு ஒருத்தி வந்து என் அர்ஜூனையும் என்னையும் பிரிச்சிட்டா என்ன பண்ணுறது? மந்தாவால சத்தியமா அவனுக்கு ஒரு நல்ல அம்மாவா இருக்க முடியாது” என்று சொல்லியிருந்தான். இப்போதாவது நண்பனின் மனம் மாறியதே என்று எண்ணி மகிழ்ந்தவன்

“அதென்னடா யூனிவர்சை விட பெருசுனு சொல்லுற? பொதுவா இந்த உலகத்தை விடப் பெருசுனு சொல்லிக் கேள்விப்பட்டிருக்கேன்.. இது என்னடா புதுசா இருக்கு?” என்று ருத்ராவைக் கேலி செய்ய

அவனோ “நீயே சொல்லிட்டியே எல்லாரும் உலகத்தை விடப் பெருசுனு சொல்லுவாங்கனு… அதான் ஒரு சேஞ்சுக்கு யூனிவர்சை விடப் பெருசுனு சொன்னேன் நண்பா” என்று பதிலளித்தவன்

“அவளைப் பத்தி நினைக்கிறப்போ வினோதமா பேச ஆரம்பிச்சிடுறேன்டா! கொஞ்சம் அட்ஜெஸ்ட் பண்ணிக்கோ” என்று கண்ணைச் சுருக்கிச் சொல்லிவிட்டு வேலையைக் கவனிக்க ஆரம்பித்தான்.

அன்று சீக்கிரமாகவே வேலையை முடித்தவன் இரவு சஞ்சீவினி பவனத்துக்குச் சென்று ஒரு எட்டு அஸ்மிதாவிடம் அவள் சொன்ன விஷயத்தைக் கேட்டு உறுதிபடுத்திக் கொண்டு செல்லலாம் என்று எண்ணியபடி அங்கு நோக்கி காரைச் செலுத்தினான்.

அவனைக் கண்டதும் சல்யூட் அடித்தக் காவலாளி கதவைத் திறந்துவிட அவரை நோக்கி ஒரு புன்னகையை வீசிவிட்டு காரை உள்ளே செலுத்தியவன் பார்க்கிங்கில் நிறுத்திவிட்டு வீட்டை நோக்கிச் செல்லும் சிமெண்ட் நடைபாதையில் நடக்கும் போது தான் அந்தக் கானம் அவன் செவியைத் தீண்டியது.

பொன்னார் மேனியனே புலித்தோலை அரைக்கசைத்துமின்னார் செஞ்சடைமேல் மிளிர்கொன்றை யணிந்தவனே

இனிமையான அதே சமயம் தெளிவான உச்சரிப்புடன் இறைவனை எண்ணி உருகிப் பாடிய அக்குரலின் சொந்தக்காரி அவன் மனதில் நிறைந்திருப்பவளே என்று எண்ணும் போதே வைரமூக்குத்தியின் ஜொலிப்பு கண்ணுக்குள் வந்து போனது. அந்தக் குரல் நாட்டியாலயாவில் இருந்து கேட்கவே அங்கே அவனது கால்கள் அவனை அறியாது செல்ல ருத்ரா நாட்டியாலயாவில் நுழைந்தான்.

மன்னே மாமணியே மழபாடியுள் மாணிக்கமேஅன்னே உன்னையல்லால் இனியாரை நினைக்கேனே

உன்னையன்றி வேறு யாரை நான் எண்ணுவேன்?’ என்று தன் முன்னே வீற்றிருக்கும் நடராஜரிடம் உருகிக் கேட்டபடி விழியைச் சுழற்றியவளின் விழிவீச்சில் விழுந்தான் அவளைப் பார்த்தபடி நின்றிருந்த ருத்ரா.

அவனைக் கண்டதும் சற்று அதிர்ந்தவள் கைக்கூப்பி நடராஜரை வணங்கிவிட்டு எழுந்தாள்.

“இந்த நேரத்துல இங்கே என்ன பண்ணுறிங்க? வீட்டுக்குப் போற வழியை மறந்துட்டிங்களா?” என்று நையாண்டியாய் கேட்டபடி அவனை ஏறிட்டவளுக்கு அவன் பார்வையின் வித்தியாசம் புரியாமல் இல்லை. ஆனால் அதற்கு பதில்மொழி என்ன என்பது தான் இஷானியின் மிகப்பெரிய கேள்வியே.

ருத்ரா தலையை உலுக்கிவிட்டு நகைத்தவன் “இந்த வழியா கார்ல போயிட்டிருந்தப்போ ஒரு தெய்வீகக்கானம் என்னை இங்கே இழுத்துட்டு வந்துடுச்சு…. பை த வே லார்ட் சிவாவை நினைச்சு உருகி உருகி பாடுறிங்களே மேடம்… எதுவும் வேண்டுதல் வச்சிருக்கிங்களா?” என்று பதிலுக்குக் கேட்க

“நோ நோ! நான் உருகி உருகிப் பாடுறதுக்குக் காரணம் ஒன்னே ஒன்னு தான்… நான் கடவுளுக்கு தேங்க்ஸ் சொல்ல ஆசைப்படுறேன்… அதைப் பாட்டா பாடுறேன்.. தட்ஸ் ஆல்… அதோட அவர் கிட்ட கேக்கிறதுக்கு எனக்கு எதுவுமே இல்லை மாமா… அவர் தான் எனக்கு எல்லா விஷயத்தையும் குடுத்திருக்காரே” என்று மனநிறைவுடன் உரைத்தவள் ருத்ராவின் விஷமச்சிரிப்பைக் கண்டதும் நாக்கைக் கடித்துக்கொண்டாள்.

வேறு என்ன! அவள் பேச்சுவாக்கில் அவனை மாமா என்று அழைத்துவிட்டாள், அது தான் காரணம். அவள் எப்போதெல்லாம் தன்னை மறந்து அவனை அவ்வாறு அழைக்கிறாளோ அப்போதெல்லாம் அவன் இதழில் இந்த விஷமச்சிரிப்பு மின்னுவது வழக்கமே… அதை வைத்து இம்முறை கண்டுகொண்டாள்.

“சரி அடிக்கடி நாக்கை கடிக்காத… அஸ்மி எங்க போயிட்டா? நான் அவளைப் பார்க்கத் தான் ஓடோடி வந்தேன்” என்று சொல்லிவிட்டு இஷானியுடன் சேர்ந்து வீட்டை நோக்கி நடைபோட்டான்.

இருளின் ஆக்கிரமிப்பு ஆரம்பித்திருந்த வேளையில் தோட்டத்தில் ஆங்காங்கு வெள்ளைநிற குழல்விளக்குகள் ஒளியைச் சிந்திக் கொண்டிருக்க அதன் நடுவில் வெள்ளை நிற டாப், பட்டியாலா அணிந்து பக்கவாட்டு போனிடெயில் போட்டபடி தன்னுடன் நடந்து வந்தவளின் கூந்தல் கற்றைகள் காற்றில் அவன் முகத்தில் உரசி இம்சை செய்ய இஷானி அதை அறியாதவளாய் தலையைச் சரிசெய்தபடி அவனுடன் நடந்தாள்.

நாட்டியாலயாவிலிருந்து வீடு சில அடிகள் தூரம் தான். ஆனால் இஷானியுடன் நடக்கும் போது ருத்ராவுக்கு தூரம் நகரவே இல்லை போலும் என்ற எண்ணம் தான் தோன்றியது.

ஆனால் நேரம் சரியாகத் தான் போகிறது, நீ தான் காதல் வேகத்தில் பினாத்துகிறாய் மகனே என்று அவனது மனசாட்சி அவனைக் கேலி செய்ய அவளுடன் வீட்டை அடைந்தான் ருத்ரா.

ஹாலில் ராஜகோபாலனுடன் அஸ்மிதா அமர்ந்து டிவி பார்த்துக் கொண்டிருக்க அலமேலு ஏதோ புத்தகத்தை வாசித்துக் கொண்டிருந்தார். உள்ளே வந்த இருவரையும் கண்டவர்கள் ருத்ராவை கேள்வியாகப் பார்க்க

“நான் தான் மாமாவை வரச் சொன்னேன் பாட்டி” என்றபடி சோபாவிலிருந்து அஸ்மிதா விறுவிறுவென அவன் அருகில் சென்றவள்

“கொஞ்சம் குனிங்க மாமா… உங்க காது எனக்கு எட்டல” என்று சொல்ல இஷானி பக்கென்று சிரித்துவிட்டு அஸ்மிதாவின் முறைப்புக்குப் பின்னர் அமைதியானது போல நடித்தாள். அஸ்மிதா அவளது நடிப்பைக் கண்டுகொண்டவளாய்

“நீ உள்ளுக்குள்ள சிரிக்கேனு எனக்குத் தெரியும் இஷி… ஆனா பாருங்க நீங்களும் என்னோட ஹைட் தான்” என்று பழிப்பு காட்டிவிட்டு இன்னும் நிமிர்ந்து நின்று கொண்டிருந்த ருத்ராவின் தோளில் பட்டென்று அடிக்கவும் அவன் அவள் புறம் திரும்பினான்.

அவனைப் பார்த்து மூக்கைச் சுருக்கியவாறு “எப்போ பாரு சைட் அடிச்சிட்டே இருங்க… அவ இங்கே தான் இருப்பா… சோ அப்புறமா கூட சைட் அடிக்கலாம் மாமா” என்று சொல்லவும் ருத்ரா அவள் உயரத்துக்குக் குனிந்தான்.

அவன் காதுக்குள் இரகசியம் பேசிவிட்டு “ஓகேவா?” என்று கேட்க ருத்ரா தலையாட்டவும்

“இப்போ எவ்ளோ நேரம் வேணும்னாலும் சைட் அடிச்சிக்கோங்க மாமா” என்று குறும்பாக உரைத்த அஸ்மிதா இஷானியை அவனிடம் தள்ளிவிட்டு மீண்டும் தாத்தாவுடன் சென்று அமர்ந்துவிட்டாள்.

ராஜகோபாலன் பேத்தியிடம் “என்னடா சொல்லுற அஸ்மி? நீ சொல்லுற எதுவுமே தாத்தாவுக்கு விளங்கலையே?” என்று கேட்க அலமேலுவும் அது தானே! இந்தப் பெண்ணின் விளையாட்டுக்கு ஒரு எல்லையே இல்லாது போய்விட்டது என்று சலித்தபடி அவளை நோக்கினார்.

அஸ்மிதா குறும்பாய் ருத்ராவை நோக்கவே அவன் அவசரமாக ராஜகோபாலனிடம்

“பெரியப்பா அது ஒன்னுமில்ல… அஸ்மி ஏதோ விளையாட்டா” என்று சொல்லவும் ராஜகோபாலன் கண்ணாடியைச் சரி செய்தபடி

“உன் பேரு அஸ்மியா?” என்று கேட்க அவன் தலை மறுப்பாய் அசைய

“நான் உனக்கு தாத்தாவா?” என்று அடுத்தக் கேள்வியைக் கேட்க அதற்கும் இல்லையென்று தலையசைத்தான் அவன்.

“அப்போ நீ சைலண்டா இரு… அஸ்மி நீ என்ன விஷயம்னு சொல்லுடா” என்றான் ராஜகோபாலன்.

அஸ்மிதா நமட்டுச் சிரிப்புடன் “அது ஒன்னும் இல்ல தாத்தா… நம்ம ருத்ரா மாமா இருக்காருல, அவரு… அவரு…” என்று இழுத்தவள் இஷானியைப் பார்த்தபடி

“நம்ம இஷியை சைட் அடிக்கிறாரு… ஒரு தடவை ரெண்டு தடவை இல்லை தாத்தா.. இதோட டூ ஹண்ட்ரெட் டைம்ஸ்” என்று சொல்ல ராஜகோபாலன் அலமேலுவுடன் இஷானியும் திகைப்பில் வாயைப் பிளக்க, ருத்ரா அவசரமாக அதை மறுத்து

“நோ! டூ ஹன்ட்ரெட் அண்ட் செவண்டி ஃபைவ் டைம்ஸ்” என்று சரியான எண்ணிக்கையைச் சொல்லவும் ராஜகோபாலனும் அலமேலுவும் நகைக்க ஆரம்பித்தனர். அவன் அருகில் நின்ற இஷானியோ கையைக் கட்டிக் கொண்டு அவனை முறைக்க ஆரம்பித்திருந்தாள்.

“வாவ்! கணக்குல கன் மாதிரி இருக்கிங்க மாமா… ஷேர் மார்க்கெட்னா சும்மாவா” என்று சொல்லிவிட்டு அவனுக்கு நெட்டி முறித்துக் திருஷ்டி கழிக்க ருத்ரா அவளது கிண்டலைப் பார்த்து கடுப்பானவன்

“இஸிண்ட்? உன்னை என்ன செய்யுறேன் பாரு” என்று சோபாவை நெருங்க அதற்குள் சோபாவிலிருந்து எழுந்த அஸ்மிதா அதைச் சுற்றிக்கொண்டு ஓட ஆரம்பித்தாள்.

அவள் நேரே தோட்டத்தைப் பார்க்க ஓட ருத்ரா அவளை விட வேகமாக ஓடியவன் அவளைக் கையும் களவுமாகப் பிடித்துவிட்டான். அவளது காதுமடலைப் பிடித்து திருகியவன்

“உனக்கு இவ்ளோ வாய் ஆகாது… பெரியப்பா கிட்ட மாட்டியா விடுற ராஸ்கல்?” என்று கூற

“ஐயோ மாமா! தெரியாம போட்டுக்குடுத்துட்டேன்… இந்த ஒரு தடவை மன்னிச்சு விட்டிருங்க ப்ளீஸ்… நல்ல மாமால்ல, காது வலிக்குது” என்று அஸ்மிதா உச்சஸ்தாயியில் கத்தவும் அவள் காது மடலை விடுவித்தான் ருத்ரா.

அஸ்மிதா அவனை விட்டு சில அடிகள் நகர்ந்தவள் இடுப்பில் கை வைத்து அவனைக் கேலியாகப் பார்த்தபடி

“என் காதையா பிடிச்சு திருகினிங்க? இருங்க அம்மா வரட்டும்… அவங்க கிட்ட போட்டுக்குடுக்கிறேன்” என்று மிரட்டவும் ருத்ரா அவளது காதை மீண்டும் பிடிக்கச் செல்லும் முன்னர் இஷானியின் கரம் அவனைத் தடுத்தது.

“நீங்க என்னமோ சொன்னிங்களே அதைக் கொஞ்சம் திருப்பிச் சொல்லுங்க பார்ப்போம்” என்று கண்ணை உருட்டியவளின் பாவனையில் அவனுக்கே கொஞ்சம் ஜெர்க்கானது தான் உண்மை.

ஆனால் சமாளித்தவண்ணம் “அது ஒன்னும் இல்ல இஷி… டூ ஹண்ட்ரட் அண்ட் செவண்டி ஃபைவ் டைம்ஸ் ஜஸ்ட் உன்னைப் பார்த்தேன்… அவ்ளோ தான்” என்று சொல்ல

“அதுக்கு பேரு தான் சைட் அடிக்கிறது” என்று பல்லைக் கடித்தவள் அவள் சொன்ன விதத்தில் அவன் நகைக்க ஆரம்பிக்கவும்

“செய்யுறதையும் செஞ்சிட்டு நீங்க சிரிக்க வேற செய்றிங்களா?” என்று அவனைச் சராமாரியாக அடிக்க ஆரம்பித்தாள் அவள்.

ருத்ராவுக்கு அந்தப் பூங்கரங்களால் அடித்த அடி சிறிது கூட வலிக்கவில்லை என்றாலும் வலிப்பது போல நடித்தவன் “வலிக்குது இஷி” என்று அவளைத் தடுக்க முயல அவளோ தாங்கள் நின்று சண்டையிட்டுக் கொண்டிருப்பது நடுத்தோட்டத்தில் என்ற நினைவு இல்லாமல் அவனை அடித்துக் கொண்டேயிருக்க அக்காட்சி துளி நிறுவனத்திலிருந்து வீடு திரும்பிய சஞ்சீவினியின் கண்ணில் பட்டுவிட்டது.

அஸ்மிதா அன்னையைக் கண்டுவிட்டவள் “ஷ்ஷ்! மாமா அம்மா வர்றாங்க” என்று இரகசியக்குரலில் எச்சரிக்க சண்டையிடும் மும்முரத்தில் அவர்கள் இருவரும் அவளது பேச்சைக் காது கொடுத்துக் கேட்டால் தானே!

தண்மதி ஒளிர்வாள்🌛🌛🌛