🌞 மதி 16 🌛

டைட்டானியம் டை ஆக்சைடு ரூட்டைல் தாதுவிலிருந்து குளோரைட் முறையில் பெறப்படுகிறது. இம்முறையில் ரூட்டைல் தாது, கார்பன் மற்றும் குளோரின் வாயுவுடன் 1000 டிகிரி செல்சியசில் வினைபுரிந்து அதிலிருந்து டைட்டானியம் டெட்ரா குளோரைடு பெறப்படுகிறது. இதிலிருந்து ஆக்சிஜனேற்றத்துக்குப் பின்னர் டைட்டானியம் டை ஆக்சைடு கிடைக்கிறது.

ஸ்கூட்டி விபத்து நடந்த நாளில் தனது பேச்சினால் வருந்திய ஜெய்யிடம் மன்னிப்பு கேட்க அஸ்மிதா எவ்வளவோ முயன்றாள். அவன் ஒவ்வொரு ஞாயிறன்றும் துளி நிறுவனத்துக்கு வருகை தரும்போதும் அவனுக்கு முன்னராக அங்கே ஆஜராகும் அஸ்மிதா ஜெய் வந்ததும் அவனிடம் மன்னிப்பு கேட்கலாம் என்று அவனை நெருங்கும் முன்னரே சிறுமிகள் பட்டாம்பூச்சிகளாய் “ஜெய் அண்ணா” என்ற உற்சாகக்குரலுடன் அவனைச் சூழ்ந்து கொள்வர்.

அதன் பின்னர் அவனது நேரம் முழுவதும் அவர்களிடம் உரையாடுவதிலும் அவர்கள் வரைந்த படங்களுக்கு மதிப்பெண் அளிப்பதிலும் அவர்கள் கூறும் கதைகளைக் கேட்பதிலுமே கழியும். இதில் எங்கிருந்து அஸ்மிதா அவனிடம் மன்னிப்பு கேக்க முடியும்? அதிலும் எஞ்சியிருந்த நேரங்களில் சஞ்சீவினி அலுவலகத்தில் இருந்தாரென்றால் அவரிடம் உரையாட ஆரம்பித்துவிடுவான்.

ஜெய் வேண்டுமென்றே அவளைச் சந்திக்காமல் தவிர்க்கிறான் என்பது அஸ்மிதாவுக்குச் சிறிது நாட்களுக்குப் பின்னர் தான் தெரியவந்தது. சரி தான் போடா என்று தூக்கிப்போட்டுவிட்டு போகலாம் என்றால் அவளது மனசாட்சி அதற்கு சம்மதிக்கவில்லை. அன்றைய தினம் அவள் ஏதோ நினைத்து காயம் தந்த வலியில் பேச, அவனோ தனது நடத்தையைக் குற்றம் சாட்டுவதாக அல்லவா எடுத்துக் கொண்டான். இதை அப்படியே விட அவளுக்கு மனமில்லை.

துளி நிறுவனத்தில் மன்னிப்பு கேட்பதற்கான வாய்ப்புகள் அமையாததால் அஸ்மிதா அடுத்த முயற்சியாக வி.என் குழுமத்தின் தலைமை அலுவலகத்துக்கு நேரில் சென்று அவனிடம் மன்னிப்பு கேட்டுவிடலாம் என்று திட்டமிட்டாள். இஷானியிடம் இதை தெரிவித்த போது

“இவ்ளோ தூரம் போய் மன்னிப்பு கேக்கணுமா அஸ்மி? நீ அதுக்குப் பதிலா மேரி அக்கா கிட்ட கேட்டு ஜெய் சாரோட மொபைல் நம்பரை வாங்கி போன்ல சாரி கேக்கலாமே” என்று அவள் மாற்று யோசனை தெரிவித்தாள்.

ஆனால் அது சரிபடாது என்று மறுத்தாள் அஸ்மிதா. ஏனெனில் மேரியிடம் கேட்பதும் சஞ்சீவினியிடம் கேட்பதும் ஒன்று தான். இந்த விசயம் சஞ்சீவினியின் காதுகளுக்குப் போனால் அவரது நூறுபக்க அறிவுரைகளை யார் கேட்பது என்று சலித்துக் கொண்ட அஸ்மிதா தனது திட்டப்படி வி.என் குழுமத்திற்கே நேரடியாகச் சென்றுவிட வேண்டியது தான் என்ற முடிவுக்கே வந்தாள்.

காலையிலேயே முழுநீள ஃப்ளாரல் டாப்பில் தயாரானவளை அலமேலு “எப்போ பாரு திரைச்சீலை மாதிரி இது ஒன்னைப் போட்டுட்டு சுத்து” என்று கேலி செய்ய

“அங்கே தான் என் பேத்தி நிக்கிறாடி! புதுசா இருந்தா டிரஸ்சா யூஸ் பண்ணிக்கலாம். பழசா போயிடுச்சுனா திரைச்சீலைக்கு ஆகும்னு தான் அவ பிளான் பண்ணி வாங்கிருக்கா… எல்லாம் சிக்கனம்டி… உனக்கு இதுலாம் புரியாது” என்று ராஜகோபாலன் மனைவிக்குப் பதிலடி கொடுத்துவிட்டுப் பெருமிதத்துடன் பேத்திகளை நோக்கவும் இஷானி நமட்டுச்சிரிப்புடன் நிற்க, அஸ்மிதாவோ

“நீங்க என்னை பெருமையா சொல்லுறிங்களா இல்ல கேலி பண்ணுறிங்களா ஆர்.கே?” என்று கண்ணைச் சுருக்கிக் கொண்டு அவரிடம் சண்டைக்குத் தயாரானாள்.

இஷானி “அஸ்மி தாத்தா வீட்டில தான் இருப்பாரு… நீ போயிட்டு வந்து கூட சண்டை போட்டுக்கலாம்… பட் ஜெய் சாரோட ஆபிஸ் ஹவர்ஸ் ஆரம்பிச்சிடுச்சுனா உன் கூட பேச அவருக்கு டைம் இல்லாம போயிடும்டி… சோ அவரைப் பார்த்துட்டு வந்து தாத்தாவை கவனி” என்று எடுத்துக் கொடுக்கவும் பெருந்தன்மையுடன் ராஜகோபாலனை அப்போதைக்கு விட்டவள் தான் வந்ததும் தனது கேள்விக்கான பதிலை அவர் அளித்தே ஆகவேண்டும் என்று கட்டளையிட்டுவிட்டுக் கிளம்பினாள்.

ஆனால் அலமேலுவிடம் மல்லுக்கு நின்ற நிமிடங்கள், ராஜகோபாலனுடன் போருக்குச் சென்ற நிமிடங்களுடன் நகரத்தின் பிரசித்தி பெற்ற போக்குவரத்து நெரிச்சலும் சேர்ந்து சதி செய்ததில் அஸ்மிதா வி.என் குழுமத்தின் தலைமை அலுவலகத்தை அடைந்த போது அலுவலகநேரம் ஆரம்பித்துவிட்டது.

இனி எப்படி ஜெய்யைச் சந்திக்க முடியும் என்ற சோர்வு எழ அடுத்த நிமிடமே அவளது இயல்பான எதையும் சமாளிக்கும் குணம் வேலை செய்ததில் ஒரு திட்டம் உதயமானது. அதே திட்டத்துடன் கம்பெனியின் ரிசப்சனிஸ்டிடம் சென்று உரையாட ஆரம்பித்தாள் அவள்.

“எக்ஸ்யூஸ் மீ! ஐ வாண்ட் டு மீட் மிஸ்டர் ஜெய்… இங்கே ஜி.எம்மா இருக்காரு”

“சாரி மேம்! அபிஷியல் ஹவர்ஸ்ல ஸ்டாஃப்ஸ் டைம் வேஸ்ட் பண்ணுறது எங்க எம்.டிக்கு பிடிக்காது.. சோ ஐ கான்ட் ஹெல்ப் யூ”

“பட் மேம் இது எமர்ஜென்ஸி.. ப்ளீஸ் டிரை டு அண்டர்ஸ்டாண்ட்… இப்போ நான் பேசியே ஆகணும்… இதுக்காக என்னால இன்னொரு தடவை அலைய முடியாது”

“எவ்ளோ பெரிய விஷயமானாலும் அதுக்கு இங்கே பெர்மிசன் இல்லை மேம்… இன்னைக்கு எம்.டி ஹெட் ஆபிஸ்ல இருக்காரு.. அனேகமா ஜி.எம் அவரோட தான் இருக்கணும்.. அந்த மாதிரி டைம்ல வேற யாரும் பெர்சனலா ஸ்டாஃப்சை மீட் பண்ணக் கூடாது… இது எம்.டியோட ஆர்டர்.. டவுட்னா அந்த போர்டை பாருங்க” என்று அவளது தலைக்கு மேல் ஓடிக்கொண்டிருந்த டிஜிட்டல் போர்ட் அறிவிப்பைக் காட்டினாள்.

அஸ்மிதா மனதுக்குள் “என்னடா ரூல்ஸ் போடுறிங்க? இரிட்டேட்டிங் இடியட்ஸ்… இவங்க எம்.டி மட்டும் என்ன வானத்துல இருந்து குதிச்சு வந்தானா? அவனுக்குக் குடும்பம், குழந்தை, குட்டிலாம் இருக்காது?… சப்போஸ் அவன் பொண்டாட்டிக்கு இந்த டைம் டெலிவரினா அவன் போய் தானே ஆகணும்” என்று அறிமுகமாகாத அந்த மனிதனை வறுத்தெடுத்தவளுக்குத் திடீரென்று குறுக்குப்புத்தி வேலை செய்ய ஆரம்பித்தது.

அதன் விளைவாக அவள் சொன்னதைக் கேட்டு ரிசப்சனிஸ்ட் ஜி.எம்மை அழைத்ததில் அடுத்த இரண்டாவது நிமிடம் ஜெய் ரிசப்சனில் வந்து நின்றான். அவனைக் கண்டதும் ரிசப்சனிஸ்ட் ஏதோ சொல்லவர “சாரி நான் பார்த்துக்கிறேன்” என்று படபடத்தவன் அஸ்மிதாவின் கரத்தைப் பற்றி கம்பெனியின் காபடேரியா பகுதிக்கு அழைத்துச் சென்றான்.

அங்கே சென்று நின்றதும் அவளது புருவச்சுழிப்பின் அர்த்தம் உணர்ந்து அவள் கையை விட்டவன்

“ஏன் மேடம் இப்பிடி ஒரு ரீசனை சொன்னிங்க? இப்போ நீங்க போனதும் அந்த ரிசப்சனிஸ்ட் ஆபிஸ் முழுக்க இதைப் பத்தி சொல்லப் போறா” என்று பதற ஆரம்பிக்க

“எதைப் பத்தி? நீ அப்பா ஆகப்போறதை பத்தியா ஜெய்?” என்று கேலியாகச் சொல்லிவிட்டு கண்ணைச் சிமிட்டியவளின் பாவனையில் அவன் தலையில் அடித்துக் கொண்டான்.

அஸ்மிதா அவனது பதற்றத்தை ரசித்தபடியே “நான் என்ன பண்ணுறது ஜெய்? உங்க எம்.டி மாங்காமடையன் இப்பிடி கேனைத்தனமா ஒரு ரூலை போட்டிருப்பான்னு நான் என்ன கனவா கண்டேன்? அதான் உன்னைப் பார்க்கிறதுக்காக நான் உன்னோட ஒய்ப்னும், நீ ஆபிஸ் கிளம்புற அவசரத்துல உன் ஃபைலுக்கு பதிலா என்னோட பிரெக்னென்சி சம்பந்தப்பட்ட ரிப்போர்ட்டை எடுத்துட்டு வந்துட்டேனு பொய் சொன்னேன்… அப்பிடி சொல்லலைனா அந்த ரிசப்சனிஸ்ட் உனக்கு இன்பார்ம் பண்ணியிருப்பாளா? இல்ல நீ தான் அடிச்சு பிடிச்சு வந்திருப்பியா?” என்று அமர்த்தலாக மொழிந்தபடி ஒரு நாற்காலியை இழுத்துப் போட்டு அமர்ந்தாள்.

அவள் அமர்வதைக் கண்டவன் “என்னங்க உக்கார்றிங்க? இங்க பாருங்க எதுவா இருந்தாலும் சண்டே பேசிக்கலாம்” என்று யாரும் பார்த்துவிடுவார்களோ என்று பதற

“நோ வே! சண்டே நீ என் கூட ஹைட் அண்ட் சீக் விளையாடிட்டு ஓடிடுவ… அதுக்குத் தானே பிளான் போடுற… ஒழுங்கா உக்காரு… நான் உன் கிட்ட சாரி கேக்கணும்” என்று அநாயசமாக மிரட்டினாள் அவள்.

“வாட்? சாரி கேக்குறவங்க இவ்ளோ ஆட்டிட்டியூடா கேக்க மாட்டாங்க அஸ்மி” என்று சட்டென்று அவளது பெயரைச் சுருக்கி அழைக்க அஸ்மிதாவுக்கு வினோதமாகத் தனது பெயர் ஒலிப்பது போல ஒரு பிரம்மை. அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் சிரித்துச் சமாளித்தவள்

“நான் என்ன பண்ணுறது ஜெய்? எனக்கு சாரி கேட்டுப் பழக்கம் இல்லையே” என்று கண்ணை விரித்து உதட்டைப் பிதுக்கிச் சொல்லவும் ஜெய் இன்னுமே பதற்றம் குறையாநிலையில் இருந்தவன் சிகையைக் கோதிக்கொண்டான்.

“இங்க பாருங்க மேடம் ப்ளீஸ்! நீங்க கிளம்புங்க” என்று சொன்னவனைப் பார்த்தவள்

“அப்போ என் சாரியை அக்செப்ட் பண்ணிட்டேனு சொல்லு… அடுத்த செகண்ட் நான் போயிடுவேன்” என்றாள் அசராமல்.

“திஸ் டூ மச் அஸ்மி…. யாராச்சும் உங்களையும் என்னையும் சேர்த்து வச்சு பார்த்தா என்ன நினைப்பாங்க?” என்று சொன்னவனின் குரல் கொஞ்சமே கொஞ்சம் அத்திப்பூத்தாற் போல கோபம் எட்டிப்பார்க்க அஸ்மிதா அதை பொருட்படுத்தவில்லை.

“என்ன நினைப்பாங்க? ஜெய் அவரோட ஒய்பை எவ்ளோ கேரிங்கா பார்த்துக்கிறாருனு நினைப்பாங்க” என்றவள் தான் வந்த வேலை முடியாமல் இங்கிருந்து கிளம்புவதாக இல்லை என்று அவளது செய்கையின் மூலம் அவனுக்கு உணர்த்திவிட வேறு வழியின்றி ஜெய் இறங்கிவந்தான்.

“இப்போ நான் என்ன பண்ணுனா நீங்க கிளம்புவிங்க?”

“நான் சாரி சொல்லுவேன்.. நீ மன்னிச்சிட்டேனு சொல்லணும்”

“சரி கேளுங்க”

அஸ்மிதா நாற்காலியிலிருந்து எழுந்தவள் தொண்டையைச் செறுமிக் கொண்டு “ஐ அம் சாரி” என்று சொல்லவும் அவளைக் கையெடுத்துக் கும்பிட்டவன்

“தெய்வமே! நான் உங்களை மன்னிச்சிட்டேன்… இப்போவாச்சும் இங்கே இருந்து கிளம்புங்க ப்ளீஸ்” என்று கெஞ்சவும்

“இந்த உலகத்துல கையெடுத்துக் கும்பிட்டு மன்னிப்பை ஏத்துக்கிட்டவன் நீ மட்டும் தான் ஜெய்… ஐ லைக் இட்” என்று நக்கலாகச் சொன்னவள் குறும்புப் புன்னகை வீசிவிட்டு

“பட் ஐ அம் ரியலி சாரி… நான் அன்னைக்கு பெயின்ல தான் அப்பிடி பேசிட்டேனே தவிர உன்னோட கேரக்டரை கொஸ்டீன் பண்ணலை… அப்பிடி பண்ணுறவளா இருந்தா நான் அங்கேயே உன்னை இறக்கிவிட்டுட்டுப் போயிருப்பேன் ஜெய்… நான் உன்னை நம்பலைனா உன் கூட முகம் குடுத்துப் பேசிருக்க மாட்டேன்… அதோட நீ மத்த ஆம்பளைங்க மாதிரி ஈகோ பிடிச்சவனோ, திமிரு பிடிச்சவனோ இல்லை… உன்னை நான் நம்புறதுக்கு உன்னோட இந்த அப்பாவித்தனம் ஒன்னு போதும்” என்றவளின் கடைசிவார்த்தையில் அவனது முகத்தில் தெளிவு பிறந்தது.

“மனசுக்கு நிம்மதியா இருக்குங்க… நான்… நான் அன்னைக்கு ரொம்பவே அழுதுட்டேன்” என்று சொல்லவும் அஸ்மிதாவுக்கு ஆச்சரியம்.

“வாட்? பசங்க எங்கயாச்சும் அழுவாங்களா?” – அஸ்மிதா.

“எங்களுக்கும் மனசு இருக்குங்க… யாராச்சும் சம்பந்தமே கேரக்டர் அசாசினேசன் பண்ணுனா எங்களுக்கும் வலிக்கும்… அழுறதுக்கு பொண்ணுங்களுக்கு மட்டும் தான் உரிமை இருக்குதா? பசங்களோட கண்ணுலயும் கண்ணீர்ச்சுரப்பி இருக்குங்க” என்றான் ஜெய் உணர்ச்சிவசப்பட்டவனாய்.

அஸ்மிதா “ஐயா சாமி! உங்களுக்கு எல்லா உரிமையும் இருக்கு… நான் தான் தப்பா சொல்லிட்டேன் போதுமா?” என்று சரண்டர் ஆகவும் அவனது இதழில் புன்சிரிப்பு எட்டிப் பார்த்தது.

அவனது சிரிப்பு அவள் மனதிலிருந்த குற்றவுணர்ச்சியை அகற்றிவிட அஸ்மிதாவின் முகத்திலும் குறுஞ்சிரிப்பு மலர்ந்தது. மனநிம்மதியுடன் அங்கிருந்து கிளம்ப எத்தனித்தவள் 

“ஓகே! நான் கிளம்புறேன் மிஸ்டர் டேமேஜர்… எனக்கு டைம் ஆகுது… டாக்டரைப் பார்க்கணும்” என்று சொல்லிவிட்டு அவனுடன் கிளம்ப

“ஏன் டாக்டரைப் பார்க்கணும்? உங்களுக்கு உடம்பு சரியில்லையா?” என்று மெய்யான அக்கறையுடன் வினவியவனைப் பார்த்து குபீரென்று சிரித்தவள்

“இந்த மாதிரி டைம்ல அடிக்கடி செக்கப் போகணும்ல ஜெய்… அது தானே நம்ம பேபிக்கு நல்லது” என்று அவனைக் கேலி செய்ய ஜெய் பதறிப்போய் தங்கள் பேச்சை யாராவது கேட்டிருப்பார்களோ என்ற ஐயத்துடன் சுற்றும் முற்றும் பார்க்க ஆரம்பிக்கவும் மீண்டும் அஸ்மிதாவுக்குச் சிரிப்பை அடக்க முடியவில்லை.

ஒருவழியாக சிரித்து ஓய்ந்தபடி அவனுடன் ரிசப்சன் முன்னே வந்தவள் அங்கிருந்த ரிசப்சனிஸ்டிடம் “தேங்க்யூ மேம்! நான் கிளம்புறேன்” என்று சொல்லிவிட்டு ஜெய்யிடம் திரும்பிவள்

“அப்போ நான் போயிட்டு வர்றேங்க… ஈவினிங் சீக்கிரமா வீட்டுக்கு வந்துடுங்க” என்று கொஞ்சிவிட்டு நமட்டுச்சிரிப்புடன் அங்கிருந்து கிளம்ப ரிசப்சனிஸ்டின் முகம் ஆச்சரியத்தில் நிரம்பி வழிய ஜெய் “இம்பாஸிபிள்” என்று முணுமுணுத்துவிட்டு அங்கிருந்து அகன்றான். அகன்றவனின் இதழில் அஸ்மிதாவின் குறும்புச்செய்கையால் மலர்ந்த புன்னகை இன்னும் வாடாமல் இருந்தது.

தண்மதி ஒளிர்வாள்🌛🌛🌛