🌞 மதி 14 🌛

டைட்டானியம் டை ஆக்சைட் தயாரிக்கும் போது உண்டாகும் கந்தக மாசுக்களை அகற்றி மாசைக் கட்டுப்படுத்த வெட் எலக்ட்ரோஸ்டேடிக் ப்ரிசிபிடேட்டர் (Wet Electrostatic Precipitator) பயன்படுகிறது. இது போக ஆம்பியண்ட் ஏர் குவாலிட்டி மானிட்டர் சிஸ்டம் (Ambient Air Quality Monitor System) மூலமாக மாசின் அளவு கண்காணிக்கப்படுகிறது.

சஞ்சீவினி ருத்ராவுக்குத் தனது அலுவலகம் மற்றும் வீட்டுக்கு வருவதற்கு பூரணச்சுதந்திரம் அளித்துவிட்டதால் அவன் வாரம் தவறாது அர்ஜூனுடன் வந்து விடுவான். ராஜகோபாலன் முதலில் அதிர்ந்தாலும்  பின்னர் குழந்தையிலிருந்து அவர் பார்த்து வளர்ந்தவனிடம் கோபத்தைக் காட்ட இயலாதவராய் அனுசரனையுடன் நடந்து கொண்டார்.

அலமேலும் முதலில் பிகு பண்ணினாலும் சிறிது நாட்களில் அவர்களை ஏற்றுக்கொள்ளப் பழகினார். ‘குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை’ என்று அதற்கு விளக்கம் வேறு கொடுக்க அஸ்மிதாவும் இஷானியும் அதைக் கேட்டு நமட்டுச்சிரிப்புடன் கடந்து செல்வர்.

இவ்வாறிருக்க அவன் ஒவ்வொரு முறை வரும் போதும் இஷானிக்குள் ஒளிந்திருக்கும் தீப்பொறியைத் தூண்டிவிட்டு அது கோபமாய் கொழுந்துவிட்டு எரிவதைக் கண்ணாற ரசிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தான். இது அடுத்தவரின் கண்ணைக் கவராது அவர்களுக்குள் மட்டும் நடக்கும் சிறிய போர். அவளைச் சீண்டுவதற்கு அஸ்மிதா மட்டுமே அவனுக்கு போதுமானவள்.

உதாரணத்துக்கு அவன் வரும் போது அஸ்மிதா இஷானியிடம் நடனம் பயின்று கொண்டிருந்தால் அவளைக் கையோடு அழைத்துச் சென்றுவிடுவான்.

“அஸ்மி! டான்ஸ் கத்துக்கிறதுலாம் அவளை மாதிரி டம்மி பீஸ்களுக்குத் தான் சரிபடும்… நீ டெரர் பீஸ்… உனக்கு இந்த தையா தக்கானு குதிக்கிறது சரிவராது… சோ இனிமே இவ கிட்ட டான்ஸ் கத்துக்காதே” என்று சொல்லி அஸ்மிதாவைத் தன்னுடன் வைத்துக் கொள்வான்.

அஸ்மிதாவுக்கும் நடனத்தில் எல்லாம் பெரிதாக ஆர்வம் இல்லை. இஷானி சொல்கிறாளே என்று கற்றுக்கொள்ள ஆரம்பித்திருந்தாள். எனவே நடனவகுப்புக்கு மட்டம் போடுவது அவளுக்கும் பிடித்திருந்தது.

“கரெக்டா சொன்னிங்க மாமா! இதைச் சொன்னா அல்லு என்னைத் திட்டுது… இதுங்களால என் கராத்தே கிளாஸ் வேஸ்டா போச்சு மாமா.. இல்லைனா நான் இன்னைக்கு பிளாக்பெல்ட் வாங்குற லெவலுக்குப் போயிருப்பேன்” என்று சலித்துக் கொள்பவளை ஆதரவாய் தோளில் தட்டிக்கொடுப்பவனைக் கண்டால் இஷானிக்கு ஆத்திரம் வரத் தானே செய்யும்!

விறுவிறுவென்று இருவர் அருகில் வருபவள் “அஸ்மி உன்னோட மாமா தான் பரதத்தோட அருமை தெரியாத மண்டூகம்னா நீயும் அவரு சொல்லுறதைக் கேட்டுட்டு கிளாசுக்கு மட்டம் போடுறியா?” என்று வரிந்து கட்டுவாள்.

அஸ்மிதா பரிதாபமாய் ருத்ராவைப் பார்த்துவைக்க, அவனோ “ஆமா! இவ அப்பிடியே நாட்டியப்பேரொளி… என் அஸ்மிக்குட்டி டான்ஸ் கத்துக்கணும்னா நான் நல்ல பரதம் தெரிஞ்ச மாஸ்டரா பார்த்து அவளைக் கிளாஸ்ல சேர்த்துவிடுவேன்” என்று அவளைக் கேலி செய்வான்.

இதைப் பார்த்துவிட்டு அர்ஜூன் இஷானிக்காக இருவரிடமும் சண்டை போட சஞ்சீவினி பவனமே ஞாயிறு ஆனால் ஜெகஜோதியாய் காட்சியளிக்கும்.

என்ன தான் ருத்ரா வரும்போதெல்லாம் இஷானியைக் கேலி கிண்டல் செய்து சீண்டினாலும் அவன் மனதில் அவளுக்கென ஒரு அழகான இடம் இருந்தது. எப்படி சஞ்சீவினிக்கும், அஸ்மிதாவுக்கும் காலம் சென்ற அவனது அன்னைக்கும் அவனது இதயத்தில் மரியாதையும் அன்பும் கலந்த ஒரு இடத்தை அளித்திருந்தானோ அதே இடத்தில் இஷானிக்கும் சமீபகாலங்களில் சிறிது பங்கு கொடுத்திருந்தான்.

நடனம் பயில வரும் குழந்தைகளிடமும், துளியில் வளரும் சிறுமிகளிடமும் அவள் கள்ளமின்றி பழகும் விதமும், குறுகியக்காலத்தில் அர்ஜூனோடு அவள் ஏற்படுத்திக் கொண்ட பிணைப்புமாய் சேர்ந்து ருத்ராவை அவளைத் திரும்பிப் பார்க்க வைத்தது. அதிலும் அலமேலுவுக்கு சின்ன மூச்சிரைப்பு வந்ததற்கு அவள் அழுத அழுகை, தனக்கு வேண்டியவருக்கு ஒன்றென்றால் துடித்துப் போகும் அந்தப் பெண்ணின் மென்மையான மனதை அவனுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டியது.

“இவ்ளோ டெண்டர் ஹார்ட்டா இருக்கிறது நல்லது இல்ல இஷானி” என்று அவனே ஒரு முறை நேரடியாகச் சொன்னபோது

“எனக்கு பாட்டினா உயிரு மாமா… அவங்களுக்கு ஏதாவது ஒன்னுனா என்னால என்னைக் கன்ட்ரோல் பண்ணிக்க முடியலை… எனக்கும் புரியுது மாமா இப்பிடி பயந்தாங்கொள்ளியா, அழுமூஞ்சியா இருக்கக்கூடாதுனு… ஆனா என்னோட இயல்பே இது தான்” என்று சொல்லுபவளின் பேச்சில் உள்ள நியாயமும் அவனுக்குப் புரியாமல் இல்லை.

அதோடு இந்த மாதிரி அற்பச்சொற்பமான தருணங்களில் தான் இஷானி பெரிய மனது பண்ணி அவனை மாமா என்று அழைப்பதே. அந்தப் பொன்னான தருணத்தை மனதில் சேமித்து வைத்துக் கொண்டபடியே

“யாரு நீயா பயந்தாங்கொள்ளி? நீயா அழுமூஞ்சி? என் கிட்ட வரிஞ்சு கட்டிட்டுச் சண்டைக்கு வர்றவ பேசுற பேச்சா இது?” என்று கேலி செய்தாலும் மற்றவர்களைப் போலன்றி தன்னிடம் அவள் காட்டும் பூனைக்குட்டியைப் போன்ற சீற்றம் அவனுக்கும் பிடித்து தான் இருந்தது.

அதை அவனது குறும்பு நிறைந்த பார்வையே இஷானிக்குக் கட்டியம் கூறிவிட அவளால் அதற்கு உடனடியாக எதிர்வினையாற்ற முடியாதவாறு ஏதோ ஒன்று அவளைத் தடுத்தது. அவனது பேச்சில் இருக்கும் செல்லச்சீண்டல்கள், குறும்புகள், கேலிக்கிண்டல்கள் அனைத்துக்கும் அடிப்படை ஏதோ ஒரு பெயர் சூட்டப்படாத உணர்வு என்பது மட்டும் அவளுக்குத் தெரியும். அவள் அறியாததெல்லாம் ஒன்றே ஒன்று தான். என்றைக்கு அந்த உணர்வுக்கு பெயர் வைக்கப்படுகிறதோ அன்றோடு அதற்கு முற்றுபுள்ளியும் வைக்கப்பட்டுவிடும் என்பது தான் அது.

வழக்கம் போல அந்த ஞாயிறும் ருத்ரா அர்ஜூடன் வந்திருந்தவன் அலமேலுவுடன் அமர்ந்து கேரம் விளையாடிக் கொண்டிருக்க அர்ஜூனும் அஸ்மிதாவும் தோட்டத்தில் குழி தோண்டி ஏதோ செடி நடப்போவதாகக் கலாட்டா செய்து கொண்டிருந்தனர்.

இஷானி வழக்கம் போல துளியில் நாட்டியப்பயிற்சியை முடித்துவிட்டு வந்தவள் நாட்டியலாயாவிலுள்ள நடராஜரின் முன்னே சென்று கண் மூடி அமர்ந்துவிட்டாள்.

அவளது செய்கைக்கு அர்த்தம் புரியாமல் கண்ணால் ராஜகோபாலனிடம் வினவ அவர் மூக்குக்கண்ணாடியைச் சரிசெய்தபடி

“டான்ஸ் கிளாஸ் முடிச்சதும் நடராஜர் கிட்ட ரெண்டு நிமிசம் பேசுறது இஷியோட பழக்கம்… அவ சின்னவயசுல இருந்து இப்பிடி தான்” என்று கூறவும் ருத்ரா அதை தலையாட்டிக் கேட்டுக்கொண்டபடி மீண்டும் விளையாட்டில் மூழ்கிவிட்டான்.

திடீரென்று நாட்டியாலயாவில் இருந்து “அம்மா” என்ற இஷானியின் அலறல் கேட்டதும் அனைவரும் பதற, ருத்ரா அவளுக்கு என்னவாயிற்றோ என்று வேகமாக அங்கே ஓடியவன் நாட்டியாலயாவின் படிக்கட்டுகளில் காலைப் பிடித்தவண்ணம் கண்ணீருடன் அமர்ந்திருந்த இஷானியைக் கண்டதும் அவளருகில் சென்றான்.

“என்னாச்சு இஷி?” என்று பதறியவனிடம்

“வேகமா படியில இறங்குனதுல கால் சுலுக்கிடுச்சு மாமா… ரொம்ப வலிக்குது” என்று கண்ணீர் விட்டபடி காலைப் பிடித்துக் கொண்டிருந்தாள் இஷானி.

அஸ்மிதா அவளை மெதுவாக எழுந்திருக்கச் சொல்லவும் இஷானி காலை நகர்த்தக் கூட முடியவில்லை என்று கூறவே அலமேலுவும் ராஜகோபாலனும் பயந்து போயினர்.

ருத்ரா அவளை எழும்பவிடாமல் தடுத்தவன் தானே அவளைத் தன் கரங்களில் ஏந்திக் கொண்டபடி வீட்டை நோக்கிச் செல்ல அவன் இப்படி செய்வான் என்று எதிர்பார்க்காத இஷானி வலியுடன்

“விடுங்க மாமா! நானே நடந்து வர்றேன்” என்று முணுமுணுக்க ருத்ரா அவளை அழுத்தமாகப் பார்த்ததில் வாயை மூடிக் கொண்டாள்.

அவன் கடுப்புடன் “ஸ்ப்ரெயினோட நடந்து வர அளவுக்கு நீ என்ன அவ்ளோ பெரிய ஒண்டர் உமனா?” என்று அதட்டிவிட்டு வராண்டாவில் ராஜகோபாலன் அமர்ந்திருந்த நாற்காலியில் அவளை அமரவைத்தான்.

அதற்குள் அஸ்மிதா வேகமாக வீட்டினுள் சென்றவள் வலிநிவாரணி ஸ்பிரேயுடன் திரும்ப அதை வாங்கியவன் இஷானியின் காலில் சுலுக்கு பிடித்த இடத்தில் ஸ்ப்ரே செய்துவிட்டு “காலை அசைக்காதே! நான் மெடிக்கல்ஷாப்ல கம்ப்ரெஷன் பாண்டேஜ் வாங்கிட்டு வர்றேன்” என்றவன் அவளைப் பார்த்துக் கொள்ளுமாறு அனைவரிடமும் சொல்லிவிட்டுக் காருடன் கிளம்பினான்.

அடுத்த பதினைந்து நிமிடத்தில் பாண்டேஜுடன் திரும்பியவன் அதை அவளது காலில் கட்டிவிட அலமேலு, ராஜகோபாலன், அஸ்மிதா மூவருக்கும் இஷானியின் மீதான அவனது அக்கறை மனதை நெகிழச்செய்தது.

இஷானிக்கு ருத்ராவின் அதட்டலும் அக்கறையும் கலந்த அன்பில் கண்ணீர் மட்டுமே பெருக்கெடுத்தது, கூடவே கால்வலி வேறு. அழுததால் சிவந்திருந்த விழிகளுடன் அவனை ஏறிட்டவள் அவனது கண்ணில் தெரிந்த வலிக்கு என்ன காரணம் என சிந்திக்க ஆரம்பிக்க, ருத்ராவுக்கு இஷானியின் வலியையும் அழுகையையும் பார்த்து இனம்புரியாத வேதனை ஒன்று எழுந்து அவன் உள்ளத்தை வருத்தத் தொடங்கியது.

தன்னைக் கேள்வியுடன் நோக்கிய அவளது நீளவிழிகளுடன் தனது விழிகளைக் கலக்கவிட, அஸ்மிதா அந்த நேரத்தில் ருத்ரா மற்றும் இஷானியின் விழிகள் பரிமாறிய செய்தியைக் கண்டுகொண்டவள் “ஓஹோ! அப்பிடி போகுதா விஷயம்?” என்று எண்ணியவள் மனதிற்குள் அவளது பிரியத்திற்குரிய சகோதரிக்காகவும், அன்பான மாமாவுக்காகவும் கடவுளை வேண்டிக் கொண்டாள்.

அதன் பின்னர் ஆயிரம் அறிவுரைகளைச் சொல்லி இஷானியை அவளது அறையில் சென்று விட்டவன் அர்ஜூனுடன் வீட்டுக்குக் கிளம்பிவிட்டான். அவனால் அவள் வலியில் முகம் சுருக்குவதை இதற்கு மேல் பார்க்க முடியாது என்பதே காரணம்.

********

ஹோட்டல் ராயல் ஹில்..

அதன் கான்ஃபரன்ஸ் ஹால் தென்னிந்தியாவின் மிகப்பெரிய கெமிக்கல் நிறுமத் தொழிலதிபர்களால் மூழ்கியிருந்தது. அவர்கள் அனைவரும் சேர்ந்திருந்த கூட்டமைப்பால் நடத்தப்படும் முக்கியமான மீட்டிங் அது. இந்த மாதிரியான மீட்டிங் ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறுவது வழக்கம்.

தொழில்மயமாக்கலின் விளைவால் அன்றாட வாழ்வில் வேதிப்பொருட்களின் பயன்பாடு தவிர்க்க முடியாததாகிவிட அவற்றைத் தயாரிக்கும் தொழிற்சாலைகளுக்கு நாளுக்கு நாள் அரசு கெடுபிடி விதிப்பது தான் அவர்களின் முக்கியத் தலைவலி.

சுற்றுச்சூழல் மாசுபாடு, மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் விதிமுறையை மீறுவது, தொழிற்சாலைகளில் கட்டாயமாக்கப்பட வேண்டிய மாசுக்கட்டுப்பாட்டு வழிமுறைகள் பற்றி அனைவரும் மூன்றுமணி நேரத்துக்கும் அதிகமாக விவாதித்தனர்.

இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் மாசுக்கட்டுப்பாட்டு வழிமுறைகளை செலவு அதிகம் என்று பின்பற்ற தயங்கியவர்கள் கூட விதிமீறல்களுக்கான அபராதத்தொகையைக் கட்டத் தயாராக இருந்தது தான் ஆச்சரியம்.

அதில் அனைவரும் தத்தம் எண்ணத்தை வெளியிட, அந்த மீட்டிங்கில் தேவ் விஸ்வநாதனும் இடம்பெற்றிருக்க இப்போது பேசவேண்டியது அவனது முறை.

தொண்டையைச் செறுமிக் கொண்டு தனக்கு முன்னர் வைக்கப்பட்டிருந்த மைக்கில் தனது கருத்துக்களை அழுத்தமாகப் பதிவு செய்யத் தொடங்கினான் அவன்.

“குட் மார்னிங் ஆல்! நமக்கு இருக்கிற மிகப்பெரிய சவால் கவர்மெண்டோட ரெஸ்ட்ரிக்சன்னு நீங்க நினைச்சிங்கனா ஐ அம் ரியலி சாரி.. அதான் இல்லை… நமக்கு இருக்கிற பிக்கஸ்ட் சேலன்ஜ் நம்ம ஃபேக்டரிஸ் வெளியிடுற டாக்சிக் எப்ளூயண்ட்ஸை பிராப்பரா ரிசைக்கிள் பண்ணுறதும், பொல்யூசன் கண்ட்ரோல் சிஸ்டம்மை ஸ்ட்ராங் ஆக்கிறதும் தான்.. இதுக்காக நம்ம கொஞ்சம் அதிகமா செலவு செய்யணும் தான்.. ஆனா இப்பொவே இதை ரெகுலேட் பண்ணலைனா நம்ம ரொம்ப கஷ்டப்படுவோம்… பிசினஸ் எதிக்சை மறந்துடக் கூடாதுங்கிறது என்னோட கருத்து” என்று தனது கருத்தை கூறியவன் தன்னெதிரே அமர்ந்திருந்த சந்திரசேகரை ஏறிட அவரோ இவன் தொழில் செய்ய இலாயக்கற்றவன் என்ற ரீதியில் அவனை நோக்கி அலட்சியப்பார்வையை வீசினார்.

பின்னர் தனது கருத்தை வெளியிட ஆரம்பித்தார்.

“மிஸ்டர் தேவ் சொன்ன மாதிரி பொல்யூசன் கன்ட்ரோல் சிஸ்டம்மை பலப்படுத்தணும் தான்… பிசினஸ்ல எதிக்ஸே இலாபம் சம்பாதிக்கிறது தான்… நீங்க சொல்லுற சிஸ்டம்சை இன்ஸ்டால் பண்ண அடிப்படை செலவே ஒரு பெரிய அமவுண்ட் ஆகுதுங்கிற நிலமையில நமக்கு இலாபம்னு பெருசா சொல்லிக்கிற அளவுக்கு எதுவும் வராது… அப்போ நம்மளை நம்பி இருக்கிற ஷேர்ஹோல்டர்சுக்கு நம்ம என்ன பதில் சொல்ல முடியும்?” என்று இலாபநோக்கில் தனது உரையை முடித்துக் கொண்டார்.

அவர் பேசி முடித்ததும் அங்கே சலசலப்பு. தேவ் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டவன்

“ஐ நோ இலாபம் இதனால குறையலாம்… ஆனா நம்ம இப்பிடியே கவர்மெண்ட் போடுற ரூல்சை மீறுனா நம்ம கம்பெனிகளோட குட்வில்லும் சேர்ந்து குறையுங்கிறதை யாராலயாச்சும் மறுக்க முடியுமா?” என்று கேட்க அதையும் பலர் சரியென்று ஆமோதித்தனர்.

ஒரு நிறுமத்தின் இலாபம் என்பதை இப்போது ஈட்டாவிட்டாலும் பின்னர் ஈட்டிக்கொள்ளலாம். ஆனால் நற்பெயர் போனதென்றால் போனது தான். திரும்ப அதைப் பெறுவது அவ்வளவு எளிதல்ல என்பதை புரிந்துகொண்டவர்கள் அந்த ஆண்டுக்கான பொதுக்கூட்டத்தில் இதைப் பற்றி பங்குதாரர்களிடம் கலந்தாலோசிக்கலாம் என்ற முடிவுக்கு வந்தனர்.

ஒருவழியாக மீட்டிங் முடிந்து அனைவரும் கிளம்ப எத்தனிக்கையில் தேவ் நின்றிருக்கும் இடத்திற்கு வந்தார் சந்திரசேகர். எடுத்த உடனே ஏகவசனத்தில் தான் ஆரம்பித்தார் அவர். எல்லாம் வினாயகமூர்த்தியின் குறுக்குப்புத்தி போதித்த கருத்துக்கள் தான்.

“இந்த சேம்பரோட முடிவை நான் என்னோட கம்பெனியோட ஏ.ஜி.எம்ல பேசப்போறதில்லை தேவ்… இது என்னைப் பொறுத்தவரைக்கும் வீண்செலவு… பன்னிரண்டு வருசத்துக்கு முன்னாடி உன்னை மாதிரி வெட்டிப்பேச்சு பேசி தான் உங்கப்பா ஆர்.எஸ்ல இருந்த ஷேரை இழந்தான்.. அப்பனுக்குப் பிள்ளை தப்பாம பிறந்திருக்கியே” என்று வஞ்சப்புகழ்ச்சியில் பேச, தேவ் அதைக் கேட்டு கேலியாக உச்சுக் கொட்டினான்.

“மனுசங்களுக்கு அழிவு நெருங்கிறப்போ வருங்காலம் கண்ணுக்குத் தெரியுமாம் மிஸ்டர் சந்திரசேகர்… உங்களுக்கும் அப்பிடி தான் போல… நான் சொல்லுறது புரியலையா?” என்று கேலியாக கேட்டவண்ணம் அந்த நீண்டமேஜையின் மீது சாய்ந்து கொண்டான்.

சந்திரசேகரின் முகம் இறுகுவதை ரசித்துவிட்டு “நீங்க சரியா சொல்லியிருக்கிங்க சந்திரசேகர், உங்க கம்பெனியோட ஏ.ஜி.எம்ல இதைப் பத்தி நீங்க டிஸ்கஸ் பண்ணப்போறது இல்லை… அதைப் பண்ணப் போறது நான் தான்” என்று தேவ் உறுதியாகச் சொல்லவும், சந்திரசேகருக்கு அவனது பேச்சு உளறலாகப் பட்டது.

அவரின் இதழில் அலட்சியச்சிரிப்பு ஒன்று மலர அதைக் கண்டுகொள்ளாமல் “ஏ.ஜி.எம்கு இன்னும் கொஞ்சநாள் தான் இருக்கு… அதுக்குள்ள என்ன செய்யணுமோ அதைச் செய்யுறேன்… எந்தக் கம்பெனி இருக்கிற திமிர்ல இப்பிடி தலை கால் புரியாம ஆடுறிங்களோ அதையே இல்லாம பண்ணலைனா நான் விஸ்வநாதனோட மகன் இல்லை” என்று வன்மத்துடன் உரைத்தவனின் விழிகள் வெறுப்பை வஞ்சனையின்றி கக்கின.

அவனது முகத்தில் அப்பட்டமாகத் தெரிந்த பழியுணர்வைக் கண்ட சந்திரசேகர் “வேண்டாம்… நீ யாரு கூட மோதுறேனு தெரியாம மோதுற தேவ்… பிசினஸ் வேர்ல்டுக்கு நீ புதுசு… சொல்லப் போனா நேத்து பெய்ஞ்ச மழையில இன்னைக்கு முழைச்ச காளான் நீ… ஒரு தடவை என்னை ஜெயிச்சிட்டா நீ நம்பர் ஒன் ஆயிட முடியாதுடா” என்று ஆவேசத்துடன் உரைக்கவும் அவரைப் பார்த்து கேலியாக உச்சுக் கொட்டினான் தேவ்.

“ரொம்ப கோவப்படாதிங்க மிஸ்டர் சந்திரசேகர்… இது ஆரம்பம் தான்… இப்போ தான் உங்களோட நம்பர் ஒன் பொசிசன் எனக்குக் கிடைச்சிருக்கு.. இனிமே வரிசையா உங்களுக்குச் சொந்தமான எல்லாமே எனக்குச் சொந்தமாகும்… அதை நீங்களும் பார்க்கத் தான் போறிங்க… இந்தத் திமிரு, அகம்பாவம்லாம் ஒடுங்கி என் கிட்ட வந்து உங்களைக் கெஞ்ச வைக்கல, என் பேரு தேவ் இல்லை” என்று வன்மத்துடன் உரைத்தவன் அங்கிருந்து வெளியேறினான். முகம் நிறைய கோபம், மனம் நிறைய பழிவெறியோடு வெளியேறியவனின் செவிகளில் “ஐ லவ் யூ தேவ்” என்று பேசிய தேன்மொழியாளின் கடைசிவார்த்தை இன்னும் ஒலித்தது. “ஐ லவ் யூ மனு” என்று அவனது இதழ்களும் முணுமுணுத்தது. இன்று அவள் இல்லாது போனது இந்தச் சந்திரசேகரால் தானே என்ற எண்ணம் வழக்கம் போல மனதில் புயலை உண்டாக்கியது. சந்திரசேகரின் சரிவு ஒன்று தான் இதற்கு தீர்வு என்று எண்ணியபடி அந்த ஹோட்டலின் பார்க்கிங்கில் நின்ற காரை எடுத்துக் கொண்டு கிளம்பினான் தேவ்.

தண்மதி ஒளிர்வாள்🌛🌛🌛