🌞 மதி 13 🌛

இந்தியாவில் பெண்களின் பாதுகாப்புக்கு முக்கியமான அச்சுறுத்தல் குடும்பவன்முறை. தேசிய குடும்பநலக் கணக்கெடுப்பின் படி இந்தியப்பெண்களில் 30% பெண்கள் தங்கள் வாழ்க்கையின் ஏதாவது ஒரு கட்டத்தில் உணர்வு ரீதியாக, உடல் ரீதியாக மற்றும் பாலியல் ரீதியாக அவர்களின் கணவர்களாலேயே துன்புறுத்தப் படுகின்றனர். அதே போல இந்தியப் பெண்களில் 75 சதவீதத்தினர் குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்டாலும் யாரிடமும் அதற்காக உதவி கேட்பதில்லை.

இஷானி உறங்கச் செல்லாமல் மாடி வராண்டாவில் நின்று கொண்டிருந்தாள். அன்றைய தினத்தில் நடந்த சம்பவங்கள் அவளை உறங்கவிடவில்லை. இத்துணை வருடங்கள் ருத்ராவே தேடி வந்து பேசியும் அவனை ஒதுக்கிவைத்த சஞ்சீவினி இன்று ஒன்றுவிட்டச் சகோதரனுக்கு ஏதோ ஆகிவிட்டது என்று பதறியது, அவனிடம் கண்ணீர் மல்க பேசியது எல்லாமே இஷானிக்குப் புதிது.

அதோடு இனி ருத்ரா சஞ்சீவினி பவனத்துக்கோ துளி அலுவலகத்துக்கோ வந்து செல்வதில் தனக்கு எவ்வித சங்கடமுமில்லை என்று வேறு சொல்லிவிட அவன் செல்லும் முன்னர் சொன்ன வார்த்தை வேறு அவளை அலைக்கழித்தது.

“இஷி! இனிமே அடிக்கடி டான்ஸ் கிளாஸ் எப்பிடி போகுதுனு செக் பண்ண நான் அடிக்கடி வருவேன்” என்று சொல்லும் போது அவன் கண்களில் தெரிந்த கேலியும் குறும்பும் அவளுக்கு திகைப்பைக் கொடுத்ததோடு இவன் அடிக்கடி இங்கே வந்தால் அஸ்மிதா ஒரேயடியாக அவள் மாமாவுடன் சேர்ந்து கலாட்டா செய்வாளேயொழிய தன்னைக் கண்டுகொள்ளவே மாட்டாள் என்ற ஆதங்கமும் சேர்ந்து கொண்டது.

அந்த சிந்தனைகளுடன் முகம் சுருங்க நின்று கொண்டவளின் போனிடெயிலை யாரோ இழுக்க விருட்டென்று திரும்பியவள் அங்கே நின்று கொண்டிருந்த அஸ்மிதாவைக் கண்டதும் முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.

அஸ்மிதாவுக்கு அவளின் கோபத்துக்கு அர்த்தம் புரிந்தது. இன்று முழுவதும் தான் ருத்ராவுடன் நேரம் செலவளித்தது இஷானிக்கு மனத்தாங்கலைக் கொடுத்திருக்கும் என ஊகித்தவள்

“இஷிக்கு என் மேல கோவமா?” என்று இழுத்துப் பேச ஆரம்பிக்க

“உன் மேல கோவப்பட நான் யாரு அஸ்மி? உனக்கு உன்னோட மாமா தானே முக்கியம்” என்றாள் இஷானி வெடுக்கென்று.

அஸ்மிதாவுக்கு அவளது சிறுபிள்ளைத்தனமான கோபம் சிரிப்பை வரவழைத்தது. சத்தம் போட்டு நகைக்க ஆரம்பித்தவளைக் கண்களைச் சுருக்கிக் கொண்டு பார்த்த இஷானி

“போதும்டி! ரொம்ப இளிக்காதே! உங்க நோமா கூட சேர்ந்து உனக்கும் எதுக்கெடுத்தாலும் கெக்கேபிக்கேனு சிரிப்பு வருது போல… சகவாசதோசம்” என்று என்று நொடித்துக் கொண்டாள்.

அஸ்மிதா தலையை இடவலமாக ஆட்டியவள் இஷானியின் கன்னத்தைப் பற்றிக் கொண்டு “ஓ மை டியர் சிஸ்டர்! இதுக்கா கோவப்படுற? உனக்கே தெரியும்ல ருத்ரா மாமானா எனக்கு உயிருனு” என்று செல்லம் கொஞ்ச அவள் கையைத் தட்டிவிட்டாள் இஷானி.

“நல்லா தெரியுமே! அதான் அவன் வந்ததும் நீ என்னை மறந்துட்டு அவன் கூட சேர்ந்து சுத்துற… என் கூட பேசாதே அஸ்மி!” என்று மீண்டும் சண்டை பிடிக்க ஆரம்பித்தவளிடம்

“அடியே! மாமாக்கு நம்மளை விட ஆறு வயசு அதிகம்டி… மரியாதை மரியாதை” என்று விளையாட்டாக விரல் நீட்டி எச்சரித்தாள் அஸ்மிதா.

“மரியாதை வயசைப் பொறுத்து வர்றது இல்ல… நடந்துக்கிற விதத்தைப் பொறுத்து தான் வரும்” – இஷானி

“ஏன் மாமா அப்பிடி என்ன பண்ணிட்டாரு?” – அஸ்மிதா.

“என்ன பண்ணிட்டாரா? ஏய் அவன் எப்போ பார்த்தாலும் மாமானு சொல்லு சொல்லுனு என் உயிரை வாங்குறான்… எனக்கு அவன் முகத்தைப் பார்த்தாலே மந்தாகினிமா நியாபகம் வருது… என்னால அவன் கிட்ட உன்னை மாதிரி சாதாரணமா பேச முடியலைடி” என்றாள் இஷானி எரிச்சலுடன்.

அஸ்மிதா கையைக் கட்டிக் கொண்டு புருவச்சுழிப்புடன் அவளை ஏறிட்டவள் “ஆனா இன்னைக்கு நீயே அவரை மாமானு சொன்னியே! அப்புறம் அவருக்கு ஏதோ ஃபர்ஸ்ட் எய்ட் பண்ணுன மாதிரி கூட தெரிஞ்சுது… இப்போ என்னடி இப்பிடி சொல்லுற?” என்று கேட்க, அதற்கு பதிலளிக்காது இஷானி அமைதி காத்தாள்.

அஸ்மிதா இது இவளது இயல்பில்லையே என்று யோசித்தவாறே “இஷி! உன் ஆதங்கம் புரியுதுடி.. எனக்கும் இவ்ளோ நாள் மந்தாகினிமாவோட தம்பிங்கிறதால தான் மாமா மேல வருத்தம்… ஆனா அவங்க பண்ணுன தப்புக்கு மாமா என்ன பண்ணுவாரு? ருத்ரா மாமாவை அம்மாக்கு ரொம்பவே பிடிக்கும்… ஏதோ காரணம் இருக்கப் போய் தான் இத்தனை நாள் அவரோட ஒட்டாம இருந்திருக்காங்கனு என் மனசு சொல்லுது… நீ இனிமே அந்தம்மாவைக் காரணமா வச்சிட்டு ருத்ரா மாமாவைத் திட்டாத இஷி” என்று வேண்டுகோள் விடுக்க

இஷானி அவள் சொல்வதைக் கேட்டுவிட்டு ஏதோ யோசனையுடன் நிற்க அவளது யோசனை நல்லவிதமான தீர்வை அவளுக்குக் கொடுக்கும் என்ற நம்பிக்கையுடன் நின்றிருந்தாள் அஸ்மிதா.

இஷானி யோசித்து முடித்தவள் “எல்லாம் ஓகே! பட் எப்போ பார்த்தாலும் என் கிட்ட வம்பிழுத்துட்டே இருந்தா நான் என்ன பண்ணுறது?” என்று முகத்தைச் சுருக்கிக் கேட்கவும் அஸ்மிதா பெருமூச்சு விட்டவள் இஷானியைக் கேலி செய்ய ஆரம்பித்தாள்.

“அது தான் மாமா! இவ்ளோ நாள் பொறுமையின் சிகரமா, பேசாமடந்தையா இருந்த உன்னையவே இப்பிடி வெடிச்சு சிதற வச்சிட்டாருனா ஹீ ஹேஸ் சம் மேஜிக் இஷி”

“மண்ணாங்கட்டி… மேஜிக்காம் மேஜிக்”

“அடியே நிஜமா தான் சொல்லுறேன்… அது மட்டுமில்லாம மாமாக்கு உன் மேல ஒரு கண்ணு… விடாம உன்னை சைட் அடிக்கிறதை நான் என்னோட ரெண்டு கண்ணால பார்த்தேன் இஷி”

“வேண்டாம் அஸ்மி! வீணா என்னைக் கொலைகாரியா மாத்தாதே! நான் ஆல்ரெடி உன் மாமா மேல செம காண்டுல இருக்கேன்… அவன் கூட சாதாரணமா பேச ஆரம்பிச்சதுல இருந்து நீ என்னைக் கண்டுக்கவே மாட்ற… அதான் அவன் மேலே காரணம் இல்லாம கோவம் வர்றதுக்கு செகண்ட் ரீசன்”

இஷானி இப்படி சொன்னதும் அஸ்மிதா திகைத்துப் போனாள். அவளைத் தோளோடு சேர்த்து அணைத்துக்கொண்டவள்

“இஷி நீ ஏன் இப்பிடி சின்னப்பிள்ளை மாதிரி யோசிக்கிற? நீயும் நானும் வேற வேறயா? வீ ஆர் சிஸ்டர்ஸ்… பட் மாமா கூட இன்னைக்கு ஃபுல்லா சுத்துனதுக்குக் காரணம் இது வரைக்கும் நான் அவரை வார்த்தையால ரொம்பவே ஹர்ட் பண்ணிருக்கேன்டி… அது எனக்கு கில்டியா ஃபீல் ஆச்சு. அதான் முன்ன மாதிரி சகஜமா பேசிட்டிருந்தேன்” என்று தனது செய்கைக்கான விளக்கத்தைக் கொடுத்தாள்.

இஷானிக்கு ஏதோ கொஞ்சம் புரிந்தது போல இருக்க, அஸ்மிதா தொடர்ந்து

“ஆனா நீயும் ஒன்னும் அப்பிடி மாமா மேல கோவமா பொங்கலயே… அவருக்குக் கண்ணுல அடிபட்டுடுச்சுனு நினைச்சு பதறுனது என்ன? ஃபர்ஸ்ட் எய்ட் பண்ணுனது என்ன? மாமானு உருகுனது என்ன?” என்று கேலி செய்ய

“அது ஹியூமானிட்டி அஸ்மி… யாரா இருந்தாலும் நான் அப்பிடி தான் பிஹேவ் பண்ணிருப்பேன்.. அப்புறம் ஏதோ ஒரு டென்சன்ல நான் மாமானு கூப்பிட்டுட்டேன்… அதையே சொல்லிக் காட்டாதே ஓகே” என்றாள் இஷானி அமர்த்தலுடன்.

“அஹான்! நம்பிட்டேன்டி தங்கம்” என்ற அஸ்மிதாவுடன் சேர்ந்து அவர்களின் அறைக்குத் திரும்பியவள் அஸ்மிதா உறங்கிய பின்னரும் தூக்கம் வராமல் படுக்கையில் புரண்டு கொண்டு தான் இருந்தாள்.

“அஸ்மிக்கு மூக்கு மேல கோவம் உக்காந்திருக்குனா உனக்கு உன்னோட மூக்குத்தி மேல உக்காந்திருக்கு” என்று சொன்னபடி அவளது மூக்கைச் செல்லமாகத் திருகியவனின் குரல் அவள் காதில் ஒலிக்க அவளது கை அனிச்சை செயலாக மூக்கைத் தடவிப்பார்த்தது.

மந்தாகினியின் தம்பியாக அவனை ஒதுக்கியது, அஸ்மிதாவை தன்னிடமிருந்து பிரிப்பதாக எண்ணி அவனிடம் கடுகடுத்தது எல்லாம் வரிசையாக நினைவடுக்கில் தோன்ற இறுதியாக அவனது கண்ணில் தனது துப்பட்டாவை ஒற்றி எடுத்தக் காட்சி தான் மனதில் நிலைத்தது.

அப்போது மனதில் ஏதோ விசித்திரமான உணர்வு எழ அதற்கு பெயரிட விரும்பாமல் உறக்கம் வந்து அணைத்ததும் அந்த அணைப்பில் மெய்மறந்து கண்ணயர்ந்தாள்.

*********

சேகர் வில்லா…

இரவின் அமைதி அந்த இல்லமெங்கும் வியாபித்திருக்க மந்தாகினி உறங்க முடியாமல் தவித்தபடி வீட்டைச் சுற்றியிருந்த தோட்டத்தில் உலாவிக் கொண்டிருந்தார். மனமெங்கும் ருத்ராவின் வார்த்தைகளும் நினைவெங்கும் அவனது அண்மைக்கால நடவடிக்கைகளுமே ஆக்கிரமித்திருக்க சுற்றுபுறத்தில் நடக்கும் எதுவும் அவரது புத்தியில் உறைக்கவில்லை.

அதனால் தான் அவரது அண்ணனான விநாயகமூர்த்தி நெடுநேரமாக அவரைக் கவனித்துக் கொண்டிருந்தது தெரியாது யோசனையுடன் நின்றிருந்தார். அதற்கு மேல் நிற்க பொறுமையின்றி மந்தாகினியை நெருங்கினார்.

“என்னாச்சும்மா மந்தா? தீவிரமான யோசனையில இருக்கிற மாதிரி தெரியுது… எதுவும் பிரச்சனையா?”

அண்ணனின் குரல் கேட்டுத் திடுக்கிட்டுத் திரும்பியவர் அவரைப் பார்த்த பார்வையிலிருந்த தவிப்பு வினாயகமூர்த்தியை இன்னும் குழப்பத்துக்கு உள்ளாக்கியது.

“பிரச்சனைனு சொல்ல முடியாதுண்ணா… சின்ன கன்பியூசன்.. அதுவும் நம்ம வீட்டுப்பையனால தான்” என்ற மந்தாகினியின் கூற்று அவருக்குப் புரியவில்லை.

வினாயகமூர்த்தியைப் பொறுத்தவரைக்கும் ருத்ரா அவரது இளைய தம்பி. ஆனால் அவரது கொள்கையைப் புரிந்துகொள்ளாத முட்டாள். தான் தோன்றித்தனமாக நடப்பது ஒன்றே வேலையாய் செய்து வருபவன். முக்கியமாகப் பிழைக்கத் தெரியாதவன். அவனால் என்ன குழப்பம் நேர்ந்திருக்கும் என்ற கேள்வியுடன் தங்கையை நோக்க, அவர் கடந்த சில தினங்களாக நடந்த நிகழ்வுகளை வினாயகமூர்த்தியிடம் விவரித்தார்.

அனைத்தையும் கேட்டவர் “இதுல என்ன இருக்கு மந்தா? அவன் எப்போவும் சஞ்சு பின்னாடி போனாலும் அவ என்னைக்குமே கண்டுக்காம போறது தான் வழக்கம்” என்றார் சாதாரணமாக.

“அண்ணா எனக்கு பிரச்சனை சஞ்சுக்கா இல்லை… அவளோட பொண்ணுங்க தான்.. அதுலயும் அஸ்மிக்கு என்னைக் கண்டாலே சுத்தமா ஆகாது… ஆனா இந்தப் பையன் மூச்சுக்கு முன்னூறு தரம் அஸ்மி அஸ்மினு புலம்புறான்… அன்னைக்கு அஜ்ஜூவைக் கூட்டிட்டு வர பெரியப்பா வீட்டுக்குப் போனப்போவே அந்தப் பொண்ணு என்னை புறவாசல் வழியா வந்தவனு குத்திக்காட்டுனா.. ஒரு வேளை ருத்ராவுக்கு அவ மேல எதாவது அபிப்பிராயம் இருந்துச்சுனா வருங்காலத்துல நமக்கு தம்பினு ஒருத்தன் இருந்ததையே நம்ம மறந்துட வேண்டியதுதான்” என்று சோகம் ததும்பியக் குரலில் கூறிய தங்கையின் பேச்சின் முற்பாதி மட்டுமே வினாயகமூர்த்தியின் காதில் விழுந்தது.

காதில் விழுந்ததோடு மட்டுமன்றி அவரது சினத்தையும் தூண்டியது என்றால் மிகையாகாது. கோபத்தில் முகம் சிவக்க நின்றவர்

“முளைச்சு மூனு இலை விடாத கழுதை உன்னை புறவாசல் வழியா வந்தவனு சொல்லிச்சுனா அதை யாருமே கண்டிக்கலையா?” என்று வெகுண்டவர்

“இதுக்கு மேல நான் பொறுமையா இருக்க மாட்டேன் மந்தா.. சஞ்சீவினியோட மகளுக்கு ஆயுசு கட்டைனு கடவுளே எழுதிட்டான் போல” என்று வஞ்சத்துடன் உரைக்கவும் மந்தாகினிக்கு உடன்பிறந்தவரின் இந்தப் பேச்சு கிலியை ஊட்டியது.

“என்ன சொல்லுறிங்கண்ணா? அப்பிடிலாம் பேசாதிங்க… அவ ஏதோ சின்னப்பொண்ணு… அவ பேசுன வார்த்தை தப்புனு அந்த இடத்துலயே சஞ்சுக்கா கண்டிச்சிட்டா… நீங்க கோவத்துல ஏடாகூடமா எதுவும் யோசிக்காதிங்கண்ணா” என்று பதைத்தக் குரலில் தடுத்த மந்தாகினியை விசித்திரமாக நோக்கினார் வினாயகமூர்த்தி.

“உனக்கு உன் புருசனோட மகள் மேல ஏன் இந்த திடீர் அக்கறை? என்னைக்கு இருந்தாலும் அந்தக் குடும்பத்தால நமக்கு கஷ்டம் தான் மந்தா… அவங்களை ஒரேயடியா ஒழிச்சுக் கட்டிட்டா….” என்று கொடூரத்துடன் கூடியவரை “நிறுத்துண்ணா” என்ற மந்தாகினியின் கோபக்குரல் வாயடைக்கச் செய்தது.

ஏற்கெனவே அஸ்மிதாவைக் குறித்து வினாயகமூர்த்தி உரைத்த வஞ்சவுரையில் பதைத்துப் போயிருந்த மந்தாகினி இப்போது மொத்தக்குடும்பத்தையும் ஒழித்துக் கட்டிவிடும் அண்ணனின் துர் எண்ணத்தால் அதிர்ந்து கோபத்துடன் நின்றார்.

“இதுக்கு மேல ஒரு வார்த்தை பேசாதண்ணா.. உன் மேல நான் நிறைய மரியாதை வச்சிருக்கேன்… ஆனா அதுக்காக நீ சொல்லுற எல்லாத்தையும் கேட்டுட்டுச் சைலண்டா போயிடுவேனு நினைச்சியா? உனக்குத் தெரிஞ்சு பேசுறியா? தெரியாம பேசுறியா?

அன்னைக்கு அடுத்த வேளை சாப்பாட்டுக்கு வழியில்லாம நின்ன எனக்கும் ருத்ராவுக்கும் ஆதரவு குடுத்தது பெரியம்மாவும் பெரியப்பாவும் தான்… உனக்கு ஒரு நல்ல வேலையை வாங்கித் தந்தது நீ இன்னைக்கு எந்தப்பொண்ணுக்கு ஆயுசு கட்டைனு சொல்லுறியோ அதே பொண்ணோட அம்மா, என்னோட அக்கா சஞ்சீவினி தான்… இந்த நன்றியை என்னைக்குமே மறக்கக் கூடாதுண்ணா…

இன்னைக்கு வரைக்கும் சஞ்சுக்கா என்னையோ சேகரையோ ஒரு வார்த்தை தப்பா பேசியிருப்பாளா? அவளோட பொண்ணு பேசுனதுலயும் தப்பில்லையே… அவளோட அப்பாவை அவ கிட்ட இருந்து நான் தான் பிரிச்சிட்டேன்… எல்லாம் பழைய விஷயம்ணா… ஆனா இனிமே எந்த அனர்த்தமும் நடந்துடக் கூடாதுனு நான் நினைக்கிறேன்” என்று கோபத்துடனே கூறினார்.

வினாயகமூர்த்தி புருவம் நெரிபடப் பார்க்க மந்தாகினி பொறுமையை வரவழைத்துக் கொண்டு

“ருத்ரா நம்ம கிட்ட இருந்து முழுசா விலகிப்போயிடுவானோனு தான் நான் பயந்தேனே தவிர சஞ்சுக்கா குடும்பத்தை அழிக்கணும்னு நான் எப்போவுமே யோசிச்சது கிடையாது… ஏற்கெனவே செஞ்ச பாவமே போதும்… இனிமே நீ சஞ்சுக்காவைப் பத்தியோ அவ பொண்ணுங்களைப் பத்தியோ யோசிக்கவே கூடாது… உன்னால என்னைகுமே அவங்களுக்கு பிரச்சனை வரக்கூடாதுண்ணா.. அப்பிடி வந்துச்சுனா நான் என்ன பண்ணுவேனு எனக்கே தெரியாது” என்று எச்சரித்தவர் அதற்கு மேல் அங்கே நிற்க பிடிக்காமல் வீட்டினுள் சென்றார்.

வினாயகமூர்த்திக்கு இதே குரலில் முன்பு ஒருமுறை யாரோ பேசியது நினைவில் தோன்றியது.

“இனிமே நீங்க விஸ்வா அண்ணாவைப் பத்தியோ அவரோட குடும்பத்தைப் பத்தியோ ஒரு வார்த்தை பேசுனாலும் நான் என்ன பண்ணுவேனு எனக்கே தெரியாது” என்று எச்சரித்த சஞ்சீவினியின் குரல் தான் அது.

அன்று அவளது குரல் அவரது உள்ளத்தில் மூட்டிய அக்னியை பேராசை எனும் நெய் கொழுந்துவிட்டு எரியச்செய்ய அதன் விளைவு தான் நீண்டகால உயிர் நண்பர்களான சந்திரசேகர் மற்றும் விஸ்வநாதனின் பிரிவும், அதைத் தொடர்ந்து நடந்த விபரீதங்களும். இப்போது தனது பேச்சும் அதே வேலையைத் தான் செய்திருக்கிறது என்பதை அறியாத மந்தாகினிக்குத் தெரியவில்லை அவரது அண்ணன் வினாயகமூர்த்தி ஆயிரம் சகுனிகளுக்குச் சமம் என்பது.

தண்மதி ஒளிர்வாள்🌛🌛🌛