🌞 மதி 12🌛

டைட்டானியம் டை ஆக்சைடு தயாரிக்கும் போது உண்டாகும் கழிவான ஃபெரஸ் சல்பேட் மறுசுழற்சிக்கு உட்படுத்தப்படாமல் நேரடியாக கடலில் கலக்கும் போது ஃபெரஸ் சல்பேட் கடல்நீருடன் வினை புரிந்து ஃபெரிக் ஹைட்ராக்சைடாக மாறுகிறது. இந்த ஃபெரிக் ஹைட்ராக்சைட் குறிப்பிட்டப் பகுதியிலுள்ள கடல் நீரில் ஆக்சிஜன் அளவைக் குறைப்பதால் மீன்கள் உட்பட கடல்வாழ் உயிரினங்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகிறது (National Institute of Oceanography, Regional Centre, Cochin – 1978)

ருத்ரா அர்ஜூனுடன் துளி அலுவலகத்திலிருந்து கிளம்பியவன் வீட்டுக்குத் திரும்பி வரும் போது உற்சாகத்தில் துள்ளிக் குதித்தவண்ணம் சீட்டியடித்தபடி வீட்டினுள் நுழையவே, எடுத்ததும் மந்தாகினியின் தரிசனம் தான் கிடைத்தது அவனுக்கு.

அர்ஜூன் வழக்கம் போல மாமனின் கண்ணசைவைப் புரிந்துகொண்டு அவனது அறையை நோக்கி ஓடிவிட அவனுமே இன்று ருத்ராவுக்குச் சற்றும் குறையாத உற்சாகத்துடன் இருந்ததை மந்தாகினியால் கண்டுபிடிக்க முடிந்தது. பெற்றவளுக்குத் தெரியாதா பிள்ளையின் முகமாற்றம்!

சகோதரனிடம் “என்னடா விசில் எல்லாம் பலமா இருக்குது? உன்னோட செல்ல அக்கா உனக்கு அங்க ஸ்பெஷல் கவனிப்பு எதுவும் குடுத்தாங்களோ?” என்று குத்தலாகக் கேட்க

ருத்ரா சாவகாசமாக அவளுக்கு எதிர்புறம் அமர்ந்தவன் “நாட் பேட்.. கரெக்டா கண்டுபிடிச்சிட்டியேக்கா… நிஜமாவே சஞ்சுக்கா என்னைப் பாசமா தான் கவனிச்சாங்க… அவங்க மட்டுமில்ல… அவங்களோட ரெண்டு பொண்ணுங்களும் தான்… இன்னைக்கு நாள் என் வாழ்க்கையில மறக்க முடியாத நாள்… நான் எவ்ளோ சந்தோசமா இருக்கேனு வார்த்தையில விவரிக்க முடியாது” என்று கண் மூடிச் சொன்னவன் மீண்டும் அந்த நினைவுகளில் இலயிக்க ஆரம்பிக்கவும் எரிச்சலுடன் இடையிட்டது மந்தாகினியின் குரல்.

“அது சரி! சஞ்சுக்கா பேசுனானு சொல்லு, நான் நம்புறேன்… ஆனா அந்தப் பொண்ணுங்க உன் கிட்ட முகம் குடுத்துப்பேசுறதே அதிசயம்… நீ சும்மா என்னை இரிட்டேட் பண்ணுறதுக்காகச் சொல்லாதே ருத்ரா”

“நீ உன் தம்பியை அண்டர் எஸ்டிமேட் பண்ணுற… வெயிட்” என்றவன் அஸ்மிதாவுடன் எடுத்த செல்பியைக் காட்டவும் மந்தாகினிக்குத் பகீரென்று இருந்தது.

“அஸ்மி எப்போவும் இவன் கூட சிரிச்சுப் பேசமாட்டானு நினைச்சா அந்தப் பொண்ணு செல்பி எடுக்கிற அளவுக்குப் போயிட்டாளா? இந்தப் பையனுக்கு வேற சின்னவயசுல இருந்து அஸ்மினா உயிரு… ஒரு வேளை….” என்று மந்தாகினியின் மூளை தாறுமாறாகக் கணக்கு போட ஆரம்பிக்கவும் இடத்தைக் காலி செய்தான் ருத்ரா.

நேரே தனது அறையை அடைந்தவனுக்கு உண்மையிலேயே அன்றைய நாள் மகிழ்ச்சியான, மறக்க முடியாத நாளாகத் தான் மாறியிருந்தது. அதற்கான முதல் காரணம் இஷானி என்ற பெண்ணின் இன்னொரு அழகானப் பக்கம் அவனுக்குப் புரியவந்தது அன்றைக்குத் தான். இரண்டாவது காரணம் சஞ்சீவினி அவன் இனி எப்போது வேண்டுமானாலும் துளி நிறுவனத்துக்கு வந்து செல்லலாம் என மனப்பூர்வமாகக் கூறிவிட்டார்.

சிலமணி நேரங்களுக்கு முன்னர் நடந்த நிகழ்வுகளை அவன் மனம் அசை போட ஆரம்பித்தது.

அஸ்மிதா ருத்ராவுடன் சாப்பிட்டு முடித்தவள் அவனுடனே சுற்றிக் கொண்டிருக்க இஷானி தனது சகோதரி சுத்தமாகத் தன்னை மறந்துவிட்டாள் என்ற ஆதங்கத்துடன் நேரத்தைக் கழித்துக் கொண்டிருந்தாள்.

ருத்ராவும் அஸ்மிதாவும் பேசிக்கொண்டிருக்கையில் அங்கே சிறுமிகள் இறகுப்பந்து விளையாடிக் கொண்டிருக்க அவர்களில் ஒருத்தி அடித்ததில் அந்த இறகுப்பந்து மட்டையில் பட்டு வேகமாக வந்து ருத்ராவின் கண்ணில் படவே அவன் அவசரத்துடன் கண்ணை மூடிக்கொண்டான்.

அதன் நுனி கண்ணில் பட்டுவிட “ஸ்ஸ்!” என்று சத்தம் எழுப்பியவன் கண்ணைக் கசக்க ஆரம்பிக்கவும் அஸ்மிதா போட்ட கூச்சலில் என்னவோ ஏதோ என்று பயந்து அவர்களிடம் வந்த இஷானி, ருத்ரா கண்ணைக் கசக்கிக் கொண்டிருக்கவும்

“என்னாச்சு? ஏன் கண்ணைக் கசக்கிட்டிருக்கிங்க? ஐயோ ஃபர்ஸ்ட் கண்ணைக் கசக்குறதை நிறுத்துங்க” என்று அவன் கையைப் பற்றவும் அஸ்மிதா இறகுப்பந்து அவன் கண்ணைத் தாக்கியதைக் கூறினாள். ருத்ரா கண் உறுத்தலெடுப்பதாகச் சொல்லி மீண்டும் கரங்களைக் கண்ணை நோக்கிக் கொண்டு செல்ல அவனைக் கண்டிப்பு பார்வை பார்த்தவள்

“தூசி எதும் கண்ணுல ஒட்டியிருக்கும்… அதான் உறுத்தல் எடுக்குது… அதுக்கு கண்ணைக் கசக்கக் கூடாது… நீ போய் கொஞ்சம் தண்ணி எடுத்துட்டு வா அஸ்மி” என்று அவளிடம் கூறவே, அஸ்மிதா சுற்றியிருந்த சிறுமியர் கூட்டத்தை அவரவர் அறைக்குச் செல்லுமாறு பணித்துவிட்டு தண்ணீர் கொண்டு வரச் சென்றாள்.

இஷானி தனது சுடிதார் துப்பட்டாவை கொத்தாகப் பிடித்து வாயில் வைத்து ஊதிவிட்டு “கொஞ்சம் கண்ணைத் திறங்க” என்று சொல்ல ருத்ரா சிரமத்துடன் விழிக்க அவள் துப்பட்டாவை கண்ணில் ஒற்றியெடுத்தாள். அவளது இச்செய்கை மீண்டும் அவனது அன்னையை நினைவூட்டியது ருத்ராவுக்கு.

சிறுவயதில் அவன் கண்ணில் தூசிபட்டு விட்டால் முதலில் புடவை நுனியைக் குவித்து ஊதிவிட்டு கண்ணில் வைத்து ஒற்றியெடுப்பது அவரது பழக்கம். இன்று தன்னருகில் அமர்ந்து அதே அக்கறையுடன் ஒற்றியெடுப்பவளின் செய்கையும், சூரியவெளிச்சத்தில் ஒளிர்ந்த வைரமூக்குத்தியும் அவனது அன்னையே அவனுடன் இருப்பது போன்ற உணர்வை தோற்றுவித்தது என்னவோ உண்மை.

இந்த அக்கறையும் அவள் கண்ணில் தெரியும் அன்பு கலந்த பதற்றமும் வாழ்நாள் முழுவதும் காணக்கிடைத்தால் தன்னை விட அதிர்ஷ்டசாலி எவனுமில்லை என்று சம்பந்தமேயின்றி சிந்தித்தது அவனது மனது. தனது மென்கரத்தால் அவன் கரத்தைப் பற்றியிருப்பவளின் கவனமெல்லாம் அவன் கண்ணைக் கசக்கிவிடக் கூடாதென்பதில் இருக்க அவனோ அவளின் அன்புச்செய்கையில் விழித்தக் கண் மூடாமல் நின்றிருந்தான்.

சிறிது நேரத்தில் அஸ்மிதா ஒரு வாயகண்ட பாத்திரத்தில் தண்ணீர் கொண்டு வர அதில் விழித்துப் பார்க்குமாறு இஷானி கூறும் போதே சஞ்சீவினியின் குரல் அவன் காதில் இனிய நாதமாய் ஒலித்தது.

“என்னடா ஆச்சு ருத்ரா?” என்று பதறிப்போய் மகள் பின்னே ஓடிவந்தவர் அவன் தண்ணீரில் விழித்துப் பார்த்துவிட்டு முகமெல்லாம் ஈரமாகி நின்றிருக்க அவனுக்கு என்னவோ ஏதோ என்ற அச்சத்துடன் தனது கைக்குட்டையால் முகத்தைத் துடைத்துவிட்டார்.

ஒரே நேரத்தில் அன்னையின் அன்பைப் பொழியும் பெண்ணையும் இத்தனை நாள் மறைத்து வைத்திருந்த பாசத்தைப் பதற்றமாய் காட்டும் தமக்கையையும் புரிந்துகொண்டவனாய் ருத்ரா பேசாமல் நின்று கொண்டிருந்தான்.

“என்னாச்சுடா? ஏன் எதுவும் பேச மாட்டேங்கிற? அஸ்மி உனக்குக் கண்ணுல அடிபட்டுடுச்சுனு சொன்னாளே… வா! டாக்டரைப் போய் பார்ப்போம்” என்று அவன் கரத்தைப் பற்றி அழைத்துச் செல்ல முயல

“அக்கா! எனக்கு ஒன்னும் இல்லக்கா! பேட்மிண்டன் ராக்கெட் கண்ணுல பட்டுடுச்சு… அதுல ஏதோ தூசி இருந்துச்சுனு நினைக்கிறேன், கண்ல லைட்டா உறுத்தல்… அவ்ளோ தான்… இஞ்சுரி எதுவுமில்லக்கா… ஐ அம் ஆல்ரைட் நவ்” என்று சொன்னபடி கண் கலங்க சஞ்சீவினியால் இன்னுமே அவனது சிவப்பேறியிருந்த கண்களில் இருந்து பார்வையை அகற்ற முடியவில்லை.

“உன் கண் இன்னும் சிவந்து தான் இருக்கு ருத்ரா” என்றவருக்கு அவன் பதிலளிக்கும் முன்னர் முந்திக் கொண்ட இஷானி

“மாமா கண்ணைப் போட்டுக் கசக்குனதுல தான் இப்பிடி ரெட்டிஷா ஆயிடுச்சும்மா” என்றாள் வேகமாக.

சொன்ன வேகத்தில் அவனை ‘மாமா’ என்று விளித்தது கூட அவள் சிந்தையில் உறைக்கவில்லை. ஆனால் ருத்ரா அதைக் கவனித்துவிட்டான்.

அந்த வார்த்தைக்காக இந்த மூன்று சந்திப்புகளில், தான் அதிகமாகத் தான் அவளைச் சீண்டிவிட்டோமோ என்று எண்ணியிருந்தவனுக்கு இப்போது மனம் நிறைந்துவிட்டது.

அதே மனநிறைவுடன் “சஞ்சுக்கா! உன் பொண்ணு உனக்கு மேல இருக்கா… லைட்டா கண்ல அடிபட்டதுக்கு இவ்ளோ ஆர்ப்பாட்டமா?” என்று அங்கலாய்த்தவன் தனக்கு எதுவும் இல்லை என்று இன்னும் பத்துமுறை சொன்னபிறகே சஞ்சீவினி அமைதியானார்.

அவனை அலுவலக அறைக்கு அழைத்துச் சென்றவர் அங்கே மேரியுடன் கதையளந்து கொண்டிருந்த அர்ஜூனை அழைக்க அவன் இத்தனை நாட்கள் பேசாத பெரியம்மா தன்னைப் பாசமாக அழைத்ததில் ஆவலுடன் ஓடிவந்து அவரருகில் நின்றுகொண்டான்.

“என்ன பெரியம்மா?” என்று கேட்டபடி அவரை நிமிர்ந்து பார்த்தபடி நின்ற பன்னிரண்டு வயது சிறுவனின் முகத்தில் இன்னும் குழந்தைத்தனம் மிச்சமிருக்க அவனது சாயல் இளவயது ருத்ராவுடன் ஒத்துப்போவதையே இன்று தான் கவனித்திருந்தார் சஞ்சீவினி.

அவனிடம் குனிந்தவர் “உங்க அம்மா கிட்ட மாமாக்கு அடிபட்ட விஷயத்தைச் சொல்லக் கூடாது… சரியா?” என்று சொல்லவே

அவன் வேகமாகத் தலையசைத்துவிட்டு “சொல்ல மாட்டேன் பெரியம்மா… சொன்னாலும் அவங்க இதெல்லாம் கண்டுக்கவே மாட்டாங்க” என்று அன்னையைப் பற்றி அலட்சியத்துடன் உரைக்க அது சஞ்சீவினியையும் அவரது இரு மகள்களையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

திகைத்துப் போனவர்களாய் ருத்ராவைப் பார்க்க அவனோ இது தான் சேகர் வில்லாவின் தற்போதைய நிலை என்பதை சொல்லாமல் சொல்ல சஞ்சீவினிக்கு மனம் கனத்துப் போனது.

அர்ஜூனை அஸ்மிதா, இஷானியுடன் வெளியே அனுப்பியவர் “என்ன தான் நடக்குது அங்கே? குழந்தை இப்பிடி சொல்லுற அளவுக்கா மந்தா அவன் மேல அக்கறை இல்லாம நடந்துக்கிறா? அவ அப்பிடி கிடையாதே! உன்னைச் சின்ன வயசுல யார் கையிலயும் குடுக்காம தாங்குனவடா அவ… இப்போ சொந்தப்பிள்ளையைக் கண்டுக்காம இருக்கானு சொன்னா என்னால நம்பமுடியலை” என்று ஆச்சரியம் கலந்த அதிர்ச்சியுடன் கேட்க

“ட்வெல்வ் இயர்ஸ்ல நிறைய விஷயம் மாறிடுச்சு சஞ்சுக்கா! மாமா, மந்தாக்கா ரெண்டு பேருக்கும் முக்கியமானக் கவலையே ஆர்.எஸ் குரூப்போட நெட் ஒர்த்தை இன்கிரீஸ் பண்ணுறது தானே தவிர வேற எதுவுமில்ல… இன்னும் மாறாம பழைய நரிக்குணத்தோட ஒருத்தரு இருக்காரு… என் கூடப்பிறந்த நல்ல மனுசன் தான் அவரு… சந்துரு மாமாவோட மூளையை விஷமா மாத்தி வச்சிருக்காருக்கா அவரு… மந்தாக்காவும் முன்ன மாதிரி இல்ல… சொல்லப் போனா நானும் அஜ்ஜூவும் அந்த வீட்டுல பேயிங் கெஸ்ட் மாதிரி தான் இருக்கோம்… ஆயிரம் கோடி சம்பாதிச்சாலும் அன்புங்கிற விஷயத்தை விலை குடுத்து வாங்க முடியாதுக்கா.. அது அங்கே யாருக்கும் புரியலை” என்று சொல்லி முடிக்கும் போது அவன் குரல் அன்புக்கான ஏக்கத்தில் தளுதளுத்தது.

அவனது குரலில் இருந்த ஏக்கம் சஞ்சீவினியின் நெஞ்சைச் சுட்டது. அவருக்குத் தெரியும் கற்பகம் அவனைத் தரையில் கூட நடக்கவிடாது தூக்கிக் கொண்டே சுற்றுவார். இரு வாரிசுகளுக்குப் பிறகு நீண்டநாள் கழித்துப் பிறந்தவன் என்பதால் அவன் மீது கற்பகத்துக்கும் நீலகண்டனுக்கும் பிரியம் அதிகம். நீலகண்டனின் மறைவுக்குப் பின்னரும் அவனுக்குக் கஷ்டம் என்றால் என்னவென்று தெரியாமல் வளர்த்தனர் கற்பகமும் மந்தாகினியும்.

கணவரின் மறைவு ஏற்படுத்திய வெறுமையும், நீண்டநாள் சிகிச்சை பெறாமல் அதிகரித்திருந்த சுவாசநோயும் கற்பகத்தின் உயிரைப் பறிக்கும் எமனாக மாற, வினாயகமூர்த்தி அச்சமயத்தில் பொறுப்பின்றி வீட்டை விட்டு ஓடிவிடவே தன்னந்தனியாக நின்ற ருத்ராவையும் மந்தாகினியையும் தங்களுடன் அழைத்து வந்த அந்தத் தினம் கூட இன்றும் சஞ்சீவினிக்குப் பசுமையாக நினைவிலிருந்தது.

வருந்தும் சகோதரனின் கரத்தை ஆதரவாகத் தட்டிக் கொடுத்தவர் “மந்தாவை வெறுத்துடாதேடா… அவ பாவம்” என்று மெதுவாகக் கூற ருத்ரா அதிருப்தியாய் உச்சுக் கொட்டினான்.

“நான் அவளை வெறுக்கிறது இருக்கட்டும்… நீ ஏன்கா என்னை ஒதுக்கி வச்ச? நான் ஆசைப்பட்டு மந்தாகினியோட தம்பியா பிறக்கலையேக்கா… இந்த ட்வெல்வ் இயர்ஸ்ல நானும் அஜ்ஜூவும் உண்மையான அன்பு கிடைக்காதானு எத்தனை நாள் தனியா உக்காந்து கலங்கிருப்போம் தெரியுமா? உன்னோட பார்வையில தெரியிற அன்னியத்தன்மை, அஸ்மியோட அலட்சியமான பேச்சுனு எல்லாமா சேர்ந்து வாழவே ஆசையில்லாம இருந்த எனக்கு அர்ஜூன் மட்டும் தான் ஆதரவுக்கா… அதே மாதிரி அம்மாவோட பாசத்துக்கும், அப்பாவோட அரவணைப்புக்கும் ஏங்கிப் போயிருந்த அர்ஜூனுக்கும் நான் மட்டும் தான் எல்லாமே” என்று சொல்லிமுடிக்கவும் சஞ்சீவினியின் கண்ணில் இருந்து கண்ணீர் அருவியாய்க் கொட்டத் துவங்கியது.

பன்னிரண்டு வருடங்கள் அடக்கி வைத்திருந்த அழுகையெல்லாம் சேர்ந்து வெடிக்கத் துவங்க ருத்ரா தான் சிரமத்துடன் அவரைச் சமாதானப்படுத்தினான்.

“உன்னைக் கஷ்டப்படுத்தணும்னு இதை நான் சொல்லலைக்கா! என்னையும் அஜ்ஜூவையும் ஒதுக்கி வைக்காதேக்கா! ப்ளீஸ்” என்று சொன்னவனின் கரங்களைப் பற்றிக் கொண்டவர்

உன்னை எப்பிடிடா என்னால வெறுக்கமுடியும்? இதே கையில தான் சித்தி உன்னையும் மந்தாவையும் ஒப்படைச்சாங்க… எங்களுக்குனு இருக்கிற ஒரே தம்பி நீ தானேடா! உன்னை என்னால எப்போவுமே வெறுக்க முடியாது… நான் உன்னை ஒதுக்கி வச்சதுக்குக் காரணம் சந்துரு மந்தாவைக் கல்யாணம் பண்ணுனதுக்குக் காரணமே தன்னால அவளோட வாழ்க்கை நாசமாயிருச்சேங்கிற குற்றவுணர்ச்சி தான்… குற்றவுணர்ச்சியில ஆரம்பிக்கிற உறவுக்கு முற்றுப்புள்ளி எப்போ வேணும்னாலும் வைக்கப்படலாம்னு மந்தாகினி இந்த நிமிசம் வரைக்கும் பயந்துட்டிருக்கா…

இதுல நான் உன்னை அவ கிட்ட இருந்து பிரிச்சிட்டேன்னா அவ உடைஞ்சு போயிடுவா ருத்ரா… புருசனோட உண்மையான அன்புக்குத் தான் சொந்தக்காரி இல்லைங்கிற அவளோட மனசுல ஒரு எண்ணம் இருக்கு, தம்பியும் தன்னை விட்டு போயிடுவானோனு அவ பயப்படுறா… அதனால தான் உன்னை என் கிட்ட நெருங்கவே விடலடா” என்று விஷயத்தைப் போட்டு உடைத்துவிட ருத்ராவுக்கு மனதிலிருந்த பெரும்பாரம் அகன்றது போல இருந்தது.

சஞ்சீவினி கண்ணீரைத் துடைத்துக் கொண்டவர் “இனிமே நீ இங்கேயோ வீட்டுக்கோ எப்போ வேணும்னாலும் வரலாம்… யாரும் உன்னை எதுவும் சொல்ல மாட்டோம்… வர்றப்போ அர்ஜூனையும் கூட்டிட்டு வா… அப்பாவும் அம்மாவும் இதுக்கு எந்த முட்டுக்கட்டையும் போட மாட்டாங்க” என்று தீர்மானமாக உரைத்தது இப்போதும் அவன் செவியில் தேனாய்ப் பாய்ந்தது.

அந்தச் சம்பவங்களை அசைபோட்டு முடித்தவனின் மனதில் இறுதியாய் நின்றது இஷானியின் அன்பும் அக்கறையும் நிறைந்த முகமும் அவளது மாமா என்ற அழைப்பும் தான். இனிமேல் அடிக்கடி இவையனைத்தையும் பார்த்தும் கேட்டும் ரசிக்கலாம் என்ற எண்ணமே அவனுக்குள் உற்சாக ஊற்றைப் பொங்க செய்தது.

சந்தோசத்தில் மிதந்தவனை அர்ஜூனின் குரல் தட்டியெழுப்பவே “இதோ வர்றேன்டா” என்று மருமகனின் அறையை நோக்கிச் சென்றான் ருத்ரா.

தண்மதி ஒளிர்வாள்🌛🌛🌛