🌞 மதி 10🌛

உலகப்பொருளாதார கூட்டமைப்பு ஆண்டுதோறும் வெளியிடும் சர்வதேச பாலின இடைவெளி அறிக்கையில் 2019ஆம் ஆண்டு இந்தியா பெற்ற இடம் 112. இந்த கணக்கெடுப்பில் இந்தியாவின் பின்னடைவுக்குக் காரணம் சுகாதாரம், வேலைவாய்ப்பு, கல்வி மற்றும் பொருளாதாரத்தில் இந்தியப் பெண்களின் பங்கு குறைவாக இருப்பதே ஆகும்.

ருத்ரா ஜெய்யை எங்கேயோ சந்தித்துள்ளதாக யோசித்தவன் “நீங்க வி.என்.குரூப் ஹெட் ஆபிஸ்ல ஒர்க் பண்ணுறிங்களா?” என்று கேட்க ஜெய் ஆமென்று தலையாட்டினான்.

அஸ்மிதா “அதான் மாமா எனக்கு டவுட்டா இருக்கு… இவன் இப்போ நிஜமாவே டிராயிங் சொல்லிக் குடுக்கிற வாலண்டியரா வந்துருக்கானா? இல்லை இவனோட பாஸ் போட்டப் பிளானை எக்ஸிகியூட் பண்ண வந்திருக்கானானு தெரியலை” என்று சந்தேகத்துடன் அவனைப் பார்க்க ஜெய்யின் நெற்றியில் வியர்வைத்துளிகள் அரும்பத் தொடங்கின. அதைக் கண்டதும் சந்தேகம் ஊர்ஜிதமானது அஸ்மிதாவுக்கு. ஆனால் ருத்ரா அப்படி சந்தேகிக்கவில்லை. இன்னும் ஜெய்யின் வேலையைக் குறித்த சந்தேகமே அவனுக்கு.

அஸ்மிதா “உனக்கு மாசமானா கிடைக்கிற சேலரி பத்தலைனு இங்க டிராயிங் மாஸ்டரா வந்துருக்க… இதை நாங்க நம்பணும்! நீ நிறைய தமிழ்ப்படம் பார்ப்பியோ?” என்று கேலிவிரவியக் குரலில் கேட்க

ஜெய் மறுப்பாய்த் தலையசைத்தவன் “இல்ல மேடம்! நான் இங்க வாலண்டியரா தான் வந்திருக்கேன்” என்றான் அப்பாவியாய்.

“ஓ! வாலண்டியரா சர்வீஸ் பண்ணுறேனு சொல்லிட்டு உங்க எம்.டிக்கு தகவல் அனுப்புற ஸ்பையா வந்துருக்க… அம் ஐ கரெக்ட்?” என்று அஸ்மிதா தனது பிடிவாதத்திலேயே நிற்க

“நீங்க தான் இப்போ தமிழ் சினிமா சீனை வரிசையா சொல்லிட்டிருக்கிங்க மேடம்… நான் இங்க வந்ததுக்கு ஒரே ஒரு ரீசன் தான்… நானும் இதே மாதிரி இடத்துல தான் வளர்ந்தேன்… எனக்கு குடும்பம், அப்பா அம்மானு யாருமே கிடையாது… ஆஸ்ரமத்துல ஸ்பான்சர்ஸ் குடுக்கிற பணத்தை வச்சு படிச்சு தான் இப்போ இந்த நிலமையில இருக்கேன்… இங்க இருக்கிற குழந்தைங்களும் என்னை மாதிரி தானேனு தோணுச்சு… இதுல எந்த உள்நோக்கமும் இல்ல மேடம்” என்றவன் இன்னும் அவள் நம்பாத பார்வை பார்க்கவும்

“உங்களுக்கு என் மேல நம்பிக்கை இல்லைனு நினைக்கிறேன்… இனியும் நான் இங்கே இருக்கிறது சரியா வராது… நான் கிளம்புறேன் மேடம்” என்று சொல்லிவிட்டுக் கிளம்ப எத்தனிக்க அவனை ருத்ராவின் குரல் தடுத்து நிறுத்தியது.

“ஒரு நிமிசம் நில்லுங்க சார்” என்றவன் ஜெய்யின் அருகில் சென்றான். ஜெய் இவன் மட்டும் என்ன புதிதாகவா சொல்லப் போகிறான் என்ற சலிப்புடன் அவனை நோக்க

“நீங்க இங்கேயே ஜாயின் பண்ணிக்கோங்க சார்… என் அக்கா பொண்ணுக்கு வாய் கொஞ்சம் ஜாஸ்தி… சோ அவ சொன்னதை நீங்க பெருசுபடுத்தாதிங்க” என்று சொல்லவும் அஸ்மிதா கடுப்புடன் ஏதோ சொல்லவர அவளை அமைதி காக்குமாறு சைகை காட்டியவன் மேரியை அழைத்து ஜெய்யை ஓவியப்பயிற்சி அளிக்கும் அறைக்கு அழைத்துச் செல்லுமாறு பணித்தான்.

மேரியுடன் ஜெய் சென்றதும் அஸ்மிதா கடுப்புடன் “யாரை கேட்டு அவனை இங்கே ஜாயின் பண்ணிக்கச் சொன்னிங்க மிஸ்டர் ருத்ரா? இது எங்களோட ஆபிஸ்… ஏதோ எங்கம்மா சொன்னாங்களேனு உங்களுக்குக் கொஞ்சம் மரியாதை குடுத்தா தலை மேல ஏறி உக்காந்துக்குவிங்களே” என்று பொங்கியெழ ருத்ரா அர்ஜூனுடன் சேர்ந்து அவள் ஏதோ புரியாத பாஷையில் பேசுவது போல வேடிக்கை பார்க்க ஆரம்பித்தான்.

அது இன்னமும் அவளுக்கு எரிச்சலை மூட்ட “முதல்ல நீங்க எதுக்கு இங்க வந்திங்க? உங்க இஷ்டத்துக்கு நினைக்கிறப்பலாம் வர்றதுக்கு இது ஒன்னும் உங்க மாமியார் வீடு இல்ல” என்றவளை கரம் உயர்த்தித் தடுத்தவன்

“நான் உங்க டிரஸ்டோட ரெகுலர் டோனர்மா… நான் குடுத்த டொனேசனை நீங்க முறைப்படி செலவு செய்றிங்களானு பார்க்க அடிக்கடி இங்க விசிட் பண்ண எனக்கு ரைட்ஸ் இருக்குனு உங்களோட டிரஸ்டி சஞ்சீவினி சொல்லிட்டாங்க… அதனால எந்தச் சில்வண்டோட இறைச்சலுக்கும் நான் காது குடுக்கிறதா இல்லை” என்று அமர்த்தலாக மொழிந்துவிட்டு அதற்கு அவள் ஏதோ சொல்லவரவும்

“மிஸ்டர் ஜெய் கிளாசுக்குப் போய் ரொம்ப நேரமாச்சு… அவர் உண்மையாவே டிராயிங் சொல்லிக் குடுக்கத் தான் வந்திருக்காரானு செக் பண்ண வேண்டாமா அஸ்மி?” என்று கேலியாக வினவவும் அஸ்மிதாவுக்கு இது வேறு இருக்கிறது அல்லவா என்று புத்தியில் உறைத்தது.

“ஓகே! ஃபர்ஸ்ட் அவன் கதையை முடிச்சுட்டு உங்களைக் கவனிச்சுக்கிறேன்” என்று சொன்னவள் ஆட்காட்டிவிரலையும் நடுவிரலையும் விரித்துத் தனது கண்ணைச் சுட்டிக்காட்டிவிட்டு ருத்ராவையும் சுட்டிக்காட்டியவள் நான் உங்களைக் கவனித்துக் கொண்டே இருப்பேன் என்று சைகையில் சொல்லிவிட்டு ஜெய்யை உளவுபார்க்க விரைந்தாள். அர்ஜூனும் வேடிக்கை பார்க்கச் சென்றுவிட ருத்ரா மட்டும் அலுவலக அறையில் தனித்துவிடப்பட்டான்.

சும்மா இருக்கப் பிடிக்காமல் அந்த பெரிய அலுவலகத்தினுள் நடைபோட்டவன், அன்று ஞாயிறு என்பதால் உள்ளே காலியாகக் கிடந்த பணியாளர்களின் பகுதிக்குச் சென்று ஒவ்வொன்றையும் ஆராய்ச்சிப்பார்வை பார்த்துக் கொண்டிருக்க யாரோ அலுவலக அறைக்குள் நுழையும் சத்தம் அவன் செவியில் விழுந்தது.

கூடவே இனிமையான ஹம்மிங் சத்தமும் சேர்ந்து எழ உள்ளேயிருந்து எட்டிப் பார்த்தவனுக்கு அலுவலக அறையின் மேஜையில் ஏதோ எடுத்து வைத்துக் கொண்டிருந்த மஞ்சள் சுடிதார் அணிந்திருந்த ஒரு பெண்ணின் முதுகு தான் தெரிந்தது. அவனால் யாரென்று அனுமானிக்க முடியவில்லை.

எனவே விருட்டென்று அந்தப் பகுதியின் கதவைத் திறந்து கொண்டு அலுவலக அறைக்குள் பிரவேசித்தவனது காலடிச்சத்தத்தில் ஹம்மிங் செய்வதை நிறுத்திவிட்டுத் திரும்பினாள் அங்கே கோப்புகளை வரிசைப்படி அடுக்கி வைத்துக் கொண்டிருந்த இஷானி.

இவன் இங்கே என்ன செய்கிறான் என்ற கேள்வி எழ புருவங்கள் கேள்வியாய் வளைய அவனை நோக்கியவளிடம் வந்தவன்

“என்னாச்சு இஷி? பாட்டை ஏன் நிறுத்திட்ட?” என்று கேட்க

“நீங்க இங்க என்ன பண்ணுறிங்க?” என்று அவளும் பதிலுக்குக் கேள்வி கேட்டுவிட்டுக் கையைக் கட்டிக்கொண்டபடி நின்றாள்.

ருத்ரா சாவகாசமாக ஒரு நாற்காலியை இழுத்துப் போட்டு அமரவும் இவனுக்கு வேறு வேலைவெட்டி இல்லை போல என்று எண்ணியவளாய் அந்த அறையின் ஜன்னல்களைத் திறந்துவிட ஆரம்பித்தாள். வெளியே மரங்களின் கிளைகளைத் தாண்டி கதிரவனின் கதிர்கள் முண்டியடித்துக் கொண்டு அறைக்குள் பிரவேசிக்க அதில் ஜன்னலருகே நின்றிருந்தவளின் மூக்குத்தியின் ஒற்றைவைரம் கண்சிமிட்டி அடங்கியது.

ருத்ராவுக்கும் உண்மையாகவே சஞ்சீவினி வரும் வரை பொழுது போகாது என்பதால் அலுவக அறையைப் பார்த்துக் கொண்டிருந்தவன் ஜன்னலைத் திறக்கவும் சூரியவெளிச்சத்தில் வெட்டி மின்னிய இஷானியின் மூக்குத்தி வைரத்தின் ஜொலிஜொலிப்பில் கண் பதிக்க அவளோ இப்படி ஒருவன் இருக்கிறான் என்பதையே கண்டுகொள்ளவில்லை.

ருத்ராவுக்கு அவளது வைரமூக்குத்தி அவனது அன்னையை நினைவூட்டியது. அவரிடம் கடைசியாக மிஞ்சியது அது மட்டும் தான். அதையும் மந்தாகினிக்கு என்று வைத்திருந்தவர் தீபாவளி, பொங்கல் போன்ற விழாச்சமயங்களில் மட்டும் அதை அணிவது வழக்கம். அப்போதெல்லாம் அது வெட்டும் போது ருத்ரா ஏடாகூடமாக கேள்வி கேட்டு வைப்பான்.

“மா! உன் மூக்குத்திக்குள்ள யாரும்மா சூரியனை ஒளிச்சு வச்சது?” என்று கேட்பவனுக்குப் பதில் சொல்லத் தெரியாது விழிப்பார் அவனது தாயார் கற்பகம்.

ஏனெனின் ஒரு முறை அவனுக்கு ராஜா ராணியின் கதை சொன்னபோது ராஜாவிடம் முகம் சூரியன் போல ஜொலித்தது என்று சொல்லிவிட அவன் அதைப் பிடித்துக் கொண்டான். ஐந்து வயதானவனுக்கு அதன் பின்னர் ஜொலிப்பவை அனைத்தும் சூரியன் தான் போல என்ற எண்ணம்.

“ரொம்ப நாள் கழிச்சுப் பிறந்ததும் தான் பிறந்தான் கேள்வி கேட்டுட்டே இருக்கான்… அப்பிடியே அவனோட தாத்தா மாதிரி” என்று செல்லமாக அலுத்துக் கொண்டாலும் மகனது கேள்விகளுக்கு சளைக்காமல் பதிலளிப்பார் அவனது அன்னை.

அவரது நினைவில் அவன் முகம் குறுஞ்சிரிப்பில் மலர கண்கள் மட்டும் தன்னைப் பத்து வயதில் தமக்கையின் பொறுப்பில் விட்டுச் சென்றவரின் நினைவில் கலங்கியது.

இஷானி ஜன்னல்களைத் திறந்துவைத்துவிட்டு மேஜையை நெருங்கும் போது ருத்ராவின் முகமும் கண்களும் எதிரெதிர் உணர்வைப் பிரதிபலிக்க வழக்கம் போல அவனிடம் சிடுசிடுக்காமல் “என்னாச்சு? ஏன் திடீர்னு சைலண்ட் ஆகிட்டிங்க?” என்று தண்மையாகக் கேட்க அவன் அவளது குரலில் பழைய நினைவுகளிலிருந்து மீண்டு தலையை உலுக்கித் தன்னைச் சமனப்படுத்திக் கொண்டான்.

“நான் உங்க கிட்ட ஹார்சா பிஹேவ் பண்ணிட்டேனா?” என்று இத்தனை நாட்கள் அவளது மனதிலிருந்த சந்தேகத்தை வாய்விட்டுக் கேட்டாள் இஷானி.

ஏனெனில் அவளுக்கே நன்றாகத் தெரியும் அவளால் யாரிடமும் முகம் சுளிக்கவோ, கடுகடுக்கவோ முடியாதென்று. ஆனால் ருத்ராவுடனான கடந்த சில சந்திப்புகளில் அந்நிலவரம் மாறியிருந்ததை அவளால் உணர முடிந்தது. காரணமே இல்லாமல் அவனிடம் இப்படி கடுகடுவென்று இருக்கவேண்டிய அவசியம் என்ன என்று யோசித்தவளின் மனக்கண்ணில் வந்த உருவம் மந்தாகினியே.

அவரால் தான் சஞ்சீவினியின் வாழ்க்கை கேள்விக்குறியானது என்ற எண்ணம் அஸ்மிதாவைப் போலவே இஷானியின் மனதிலும் ஆழப்பதிந்து விட்டது. அவரது சகோதரன் என்பதால் ருத்ராவைக் காணும் போதும் அவளை அறியாது எரிச்சல் வந்து அவள் முகத்தில் ஒட்டிக்கொள்கிறது சில நாட்களாக. முன்பு போல அமைதியாக அவனைக் கடக்க வேண்டும் என்று அவள் எண்ணினாலும் அவனது சீண்டல்கள் அவளைச் சீற வைத்தது என்பது தான் உண்மை.

இத்தனைக்கும் கடந்த இரண்டு சந்திப்புகளில் தான் அவள் வாய் விட்டு அவனிடம் பேசியிருக்கிறாள். இரண்டும் பேச்சுவார்த்தையாக இல்லாமல் வாதங்களாக முடிந்ததில் தான் தனது அடிப்படைக்குணத்தையே இவன் மாற்றிவிடுவான் போல என்று எண்ணமிடலானாள் இஷானி.

யாரையும் வார்த்தைகளால் வதைப்பது நல்லதல்ல என்பது தான் சஞ்சீவினி இஷானிக்குக் கற்றுத் தந்த முதல் பாடம். அதை இது நாள் வரை கவனமாகக் கடை பிடித்து வந்தவளை ருத்ராவின் சீண்டல்கள் தான் வார்த்தைகளைக் கவனமின்றி கையாள வைத்தன. இதனால் தான் அவன் மனம் கலங்கிவிட்டானோ என்று மெய்யான வருத்தத்துடன் கேட்டவளுக்கு ஒரு நமட்டுச்சிரிப்பைப் பதிலாக அளித்தான் அவன்.

பின்னர் தலையாட்டி மறுத்தவன் “நீ ஹார்சா பிஹேவ் பண்ணிட்டாலும் அப்பிடியே நான் மனசு உடைஞ்சு போயிடுவேன் பாரு… உனக்கு அதுக்குலாம் டிரெயினிங் பத்தாது இஷி… சொல்லப்போனா உன்னால யாரையும் ஹர்ட் பண்ண முடியாது” என்றான் மென்மையாக.

“அப்போ ஏன் உங்க கண் கலங்கியிருந்துச்சு?” என்று வினவியளைக் குறும்புடன் நோக்கியவன்

“மாமா ஏன் கண் கலங்குறிங்கனு அனுசரணையா கேளு, பதில் சொல்லுறேன்” என்று மீண்டும் அவளைச் சீண்ட ஆரம்பிக்கவும்

“ஐயோ ரொம்ப அவசியம் பாருங்க… நீங்க எப்பிடி இருந்தா எனக்கு என்ன?” என்று பழிப்பு காட்டியவளுக்கு உள்ளுக்குள் அவன் கலக்கத்திற்கு என்ன தான் காரணமாக இருக்கக் கூடும் என்று தெரிந்து கொள்ளும் ஆவல் இருந்தது என்னவோ உண்மை.

ருத்ரா அவளது கண்ணில் மின்னிய ஆர்வத்தைக் கண்டுகொண்டவன் “ஒன்னுமில்ல… திடீர்னு உன் மூக்குத்தி சன்லைட்ல ஜொலிச்சதும் எங்கம்மாவோட நியாபகம் வந்துடுச்சு… அவங்களும் உன்னாட்டம் தான் மூக்குத்தி போட்டிருப்பாங்க… ஆனா அது கொஞ்சம் பெரிசு” என்று சொல்லும் போதே அவன் குரலில் தாயை இழந்த சோகம் அவனை அறியாது வெளிப்பட இஷானியாலும் அதைப் புரிந்து கொள்ள முடிந்தது.

தாய்ப்பாசத்துக்காக ஏங்குவதெல்லாம் பெருங்கொடுமை. அது மட்டும் தனது எதிரிக்குக் கூட நேரக்கூடாது என்று எண்ணியவள் அவனிடம் அடுத்து என்ன பேசுவது என்று புரியாமல்

“அம்மா வர்றதுக்கு டைம் ஆகும்… நீங்க என்ன விஷயமா வந்திங்கனு சொன்னா நானே உங்களுக்கு ஹெல்ப் பண்ணிடுவேன்” என்று சொல்லவும்

“வேற எதுக்கு இவ்ளோ தூரம் வரப் போறேன் இஷி? ஒரு தடவையாச்சும் உன் வாயால மாமானு சொல்ல மாட்டியானு மனசுக்குள்ள சின்னதா ஒரு ஆதங்கம்… அதான் கிளம்பி வந்துட்டேன்” என்றபடி நாற்காலியில் சாய்ந்து கொண்டவன் கேலியாய் அவளை நோக்க

“ஷட் அப்! உங்களுக்குப் போய் பாவம் பார்த்து ஹெல்ப் பண்ணவானு கேட்டேன் பாருங்க, என் புத்தியைச் செருப்பாலயே அடிக்கணும்” என்று எண்ணெயிலிட்ட அப்பளமாய் குதித்தவள் அங்கிருந்து கிளம்ப எத்தனிக்க

“அக்கா வர்ற வரைக்கும் பேச்சுத்துணைக்காச்சும் இருக்கலாம்ல இஷி?” என்று கேட்டவனைக் கடுப்புடன் முறைத்தவள்

“எனக்காக டான்ஸ் கிளாஸ்ல பிள்ளைங்க வெயிட் பண்ணிட்டிருப்பாங்க… உங்க கூட உக்காந்து வெட்டிக்கதை பேச எனக்கு நேரமில்லை மிஸ்டர் ருத்ரா” என்று பணிவாகச் சொல்ல

ருத்ரா எழுந்தவன் அவள் அருகில் வந்து “அஸ்மிக்கு மூக்கு மேல கோவம் உக்காந்திருக்குனா உனக்கு உன்னோட மூக்குத்தி மேல உக்காந்திருக்கு” என்று சொல்லிவிட்டு செல்லமாக அவளது மூக்கைத் திருக இஷானி முதலில் திகைத்தவள் பின்னர் சட்டென்று அவன் கையைத் தட்டிவிட்டாள்.

அவள் பெரிய கண்களை உருட்டியபடி ஏதோ சொல்லவரவும் ருத்ரா கைகளை உயர்த்தியவன் “ஓகே ஓகே! ஐ அம் சாரி டு டச் யுவர் நோஸ்… உன் மூக்கு உன் உரிமை… இனிமே இப்பிடி பண்ண மாட்டேன்” என்று மீண்டும் கிண்டலடிக்கவும் விருட்டென்று அவனைக் கடந்து சென்றவள் வேகமாக அந்த அறையை விட்டு வெளியேறினாள். ருத்ரா அவள் அப்படி என்ன தான் நாட்டியப்பயிற்சி அளிக்கப் போகிறாள் என்று தான் பார்ப்போமே என்ற எண்ணத்துடன் அவளைத் தொடர்ந்தான்.

தண்மதி ஒளிர்வாள்🌛🌛🌛