🌞மதி 62🌛

Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels

இந்தியாவில் மோனசைட் பெரும்பாலும் கடற்கரை மாநிலங்களில் இருந்தே அதிகளவில் கிடைக்கிறது. எந்த மாநிலத்தில் எவ்வளவு மோனசைட் எடுக்க முடியும் என்ற பட்டியலில் ஆந்திரா முதலிடத்தில் உள்ளது. ஆந்திராவில் 3.72 மில்லியன் டன், தமிழகத்தில் 2.46 மில்லியன் டன், ஒரிசாவில் 2.41 மில்லியன் டன், கேரளாவில் 1.9 மில்லியன் டன், மேற்கு வங்காளத்தில் 1.22 மில்லியன் டன், ஜார்க்கண்டில் 0.22 மில்லியன் டன்களும் மோனசைட் உள்ளது தினகரன்.

அஸ்மிதா சங்கரராமனுடன் வாயாடியபடி இருந்தவள் எங்கோ சென்றுவிட்டு அவசரமாக வீட்டினுள் நுழைந்த ஜெயதேவ்வைக் கண்டதும் புருவம் உயர்த்திவிட்டு மீண்டும் அவரிடம் வம்பளக்க ஆரம்பித்தாள். சாந்தினி ஏதோ சிற்றுண்டி செய்தவர் மாமனாருக்கும் மருமகளுக்கும் தட்டில் போட்டு எடுத்து வந்தவர் மகனைக் கண்டதும் அவனையும் அமருமாறு கட்டளையிட்டார்.

சமையலறையிலிருந்து திரும்பியவர் மூவருக்கும் தட்டுக்களில் உள்ள சிற்றுண்டியை நீட்ட ஜெயதேவ் வேண்டாமென மறுக்க வாயெடுத்தவன் பின்னர் இதே போல ஒரு நாள் நடந்த நிகழ்வை நினைவுறுத்திப் பார்த்துவிட்டு  அஸ்மிதாவை ஆராய்ச்சிப்பார்வையுடன் நோக்கிவிட்டு தட்டை வாங்கிக் கொண்டான்.

அஸ்மிதா கேலியாக உதட்டைச் சுழித்துவிட்டு சாப்பிட ஆரம்பித்தாள். கூடவே சங்கரராமனுடன் கலாட்டா செய்தபடி இருந்தாள். ஜெயதேவ் அவளை அமைதியாகும் படி சைகை காட்டியவன்

“தாத்தா நான் உங்க கிட்ட ஆபிஸ் விஷயமா பேசணும்” என்று சொல்லவும் அஸ்மிதா கடுப்புடன் அவனை முறைத்தவள்

“எப்போவும் ஆபிஸ் பத்தின பேச்சு தானா? அதுல்லாம் இனிமே நடக்காது… தாத்தா நீங்க அவன் கூட பேசக்கூடாது… என் கிட்ட பேசுங்க” என்று அவர் அருகில் அவரை மறைப்பது போல அமர்ந்து கொள்ள ஜெயதேவ் அவரிடம் சிறிது நேரம் கழித்து பேசிக்கொள்ளலாம் என்று சைகை காட்டிவிட்டு அவனது அறைக்குச் சென்றுவிட்டான்.

பின்னர் சிறிது நேரத்தில் ரிஷியுடன் போனில் பேசியபடி வெளியேறியவன் அஸ்மிதாவைப் பார்த்து “கோயம்புத்தூர் பேப்பர் ஃபேக்டரியோட மேனேஜர் கால் பண்ணுவாரு… அவர் கிட்ட சொல்ல வேண்டியதை உனக்கு மெயில் பண்ணிருக்கேன்… சோ அதைப் பண்ணி முடிச்சுடு” என்று கட்டளையிட்டவனைக் கண்டு வாயைப் பிளந்தாள் அவள்.

“சண்டே கூட எனக்கு வேலை குடுக்கிறியே! உனக்கு மனசாட்சியே கிடையாதா தேவ்?”

“மனசாட்சிய எல்லாம் கழட்டி வச்சிட்டுத் தான் நான் வேலைய ஸ்டார்ட் பண்ணுறதே! சோ ஆர்கியூ பண்ணி டைம் வேஸ்ட் பண்ணாம வீடியோ கான்ஃபரன்சிங்ல அவர் கிட்ட பேசிடு மை டியர் ஒய்ஃப்” என்று கேலியாக மொழிந்தவன் அவள் பதிலளிக்கும் முன்னர் அங்கிருந்து மாயமானான்.

பார்த்திங்களா தாத்தா இவனை?” என்று அஸ்மிதா சங்கரராமனிடம் பொருமினாலும் அவன் சொன்ன வேலையை செய்யச் சென்றுவிட்டாள்.

வீடியோ கான்ஃபரன்சிங்கில் அவன் சொன்னபடி பேப்பர் கம்பெனியின் மேலாளர் மற்றும் இன்னும் சில முக்கிய அதிகாரிகளுடன் அவள் பேசிக் கொண்டிருக்க எதேச்சையாக தேவ்வின் அறைக்கு வந்த விஸ்வநாதன் அவள் பேசுவதைப் பார்த்தபடி நின்றவர் பின்னர் அவளைத் தொந்தரவு செய்யாமல் ஹாலுக்குச் சென்றுவிட்டார்.

சென்றவர் அங்கே அமர்ந்திருந்த தந்தையிடம் “இப்போ வீடியோ கான்ஃபரன்சிங்ல பேசுற அஸ்மிய பார்க்கிறப்போ அப்பிடியே ராம் மாமாவைப் பார்க்கிற மாதிரி இருக்குப்பா… அவ்ளோ லாவகமா பேசுறா” என்று சிலாகிக்க

“அவளுக்கு மேனேஜ்மெண்ட் ட்ரெயினிங் குடுத்தது யாரு? என் பேரனாக்கும்” என்று பெருமைப்பட்டுக் கொண்டார்சங்கர ராமன்.

அவர்களின் பேச்சுவார்த்தையில் நேரம் காற்றாய் பறக்க ஜெயதேவ் இரவு வீட்டுக்கு வந்தவன் தான் ரிஷியுடன் டின்னரை முடித்துவிட்டதாகச் சொல்லி அவனது அறைக்குச் சென்றுவிட்டான். அஸ்மிதா வழக்கம் போல வீட்டுப்பெரியவர்களுடன் இரவுணவை முடித்தவள் அவர்களின் அறைக்குத் திரும்ப அங்கே ஜெயதேவ் யோசனையுடன் அமர்ந்திருக்க இப்போது என்ன திட்டம் தீட்டுகிறானோ என்று எண்ணியபடி டிரஸ்ஸிங் டேபிள் கண்ணாடி முன்னே அமர்ந்தவள் வழக்கம் போல ஏதோ லோசனை எடுத்துக் கைகளில் பூச ஆரம்பித்தாள்.

ஜெயதேவ் லோசனின் நறுமணத்தில் கவனம் கலைந்தவன் வழக்கம் போல அவளைச் சீண்டுவதற்காக “சுவத்துக்குச் சுண்ணாம்பு அடிக்கிற மாதிரி டெய்லியும் இதைப் பூசியே ஆகணுமா?” என்று கேலி செய்ய அஸ்மிதா உதட்டைச் சுழித்து அழகு காட்டுவது கண்ணாடியில் அவனுக்கு நன்றாகவே தெரிந்தது.

ஜெயதேவ் குறும்பாக அவளைப் பார்த்தபடி எழுந்தவன் “வாவ்! நீ இப்பிடி லிப்சை சுழிக்கிறப்போ பார்க்கிறதுக்கு கொள்ளை அழகா இருக்கு தெரியுமா? இதுக்கு எதாவது கிப்ட் குடுக்கணுமே” என்று கண்ணில் டன் கணக்கில் குறும்பு வழிய அவளை நெருங்க அஸ்மிதாவின் கையிலிருந்த லோசன் பாட்டில் தவறி கீழே உருண்டோடியது.

ஜெயதேவ் அதைக் குனிந்து எடுத்தவன் முழந்தாளிட்டபடி அஸ்மிதாவிடம் பாட்டிலை நீட்டிவிட்டு அருகில் வரவும் எழுந்து செல்ல முற்பட்டவள் அவனது கைகள் டிரஸ்ஸிங் டேபிளின் இருபுறமும் அரணாய் ஊன்றி அவளைத் தடுக்கவே அப்படியே மோடாவில் அமர்ந்தாள். கண்கள் அவன் அருகாமையில் படபடக்க ஆரம்பிக்க அவளது இதயத்துடிப்பு தாறுமாறாக ஒலிக்கத் தொடங்கியது.

“என்ன கிப்ட் குடுத்துடுவோமா?” என்று சொல்லி புருவத்தை ஏற்றியிறக்கியவனின் குரலில் அவளுக்குள் தாறுமாறான எண்ணங்கள் வலை விரிக்க ஆரம்பிக்க திருதிருவென்று விழித்தாள் அஸ்மிதா.

ஜெயதேவ் அவளை இன்னும் நெருங்கியவன் “உன் மைண்ட்ல என்ன ஓடுதுனு நான் கண்டுபிடிச்சிட்டேன்… சோ அதை அப்பிடியே மூட்டை கட்டிவச்சிட்டு கொஞ்சம் எழுந்திரி” என்று சொன்னதோடு அவளை எழுப்பியும் விட்டான்.

அஸ்மிதா “இது உச்சக்கட்ட அவமானம்! ஏன் அஸ்மி இவன் முன்னாடி இப்பிடி அப்நார்மலா பிஹேவ் பண்ணி அசிங்கப்படுற?” என்று தன்னைத் தானே கடிந்துகொண்டபடி நிற்க ஜெயதேவ் அந்த அறையை விட்டு வெளியேறினான். அஸ்மிதா அவனது செய்கையில் குழம்பி நிற்கும் போதே போனவன் சில நிமிடங்களில் கையில் சில பேப்பர்களுடன் திரும்பவும் திகைத்தாள்.

“ஆஹா! அடுத்து எதோ ப்ளான் பண்ணிட்டான் போலயே.. பகவானே! இவன் மூளை மட்டும் ஏன் எப்போவும் ப்ளான் பண்ணிட்டே இருக்குது? சரியான கலியுக சாணக்கியனா இருப்பான் போல…. கணக்கு போடுறது காய் நகர்த்துறதுனு இதுல ஒரு குறைச்சலும் இல்ல” என்று மனதிற்குள் நொடித்துக் கொண்டாள்.

அதற்குள் அவள் நெருங்கியவன் அறியும் முன்னர் தன் முகபாவத்தைச் சீராக்கிக் கொண்டாள். ஜெயதேவ் அவளை நெருங்கியவன் அந்த பேப்பர்களை அவள் கையில் திணிக்க அவள் என்னவென்று திறந்து படித்துப் பார்த்தவள் முடிவில் அதிர்ந்தாள். மெல்லிய அதிர்வு தான் என்றாலும் அவள் வாழ்க்கையையே புரட்டிப் போட்ட காகிதங்கள் அல்லவா அவை!

வாசித்து முடித்தவளின் கண்கள் கலங்கியிருக்க ஜெயதேவ் திகைத்து விழித்தான்.

“என்னாச்சு அஸ்மி?”

“இ.. இந்த பேப்பர்ஸ்…” என்று அவள் இழுக்கவே அவனே வார்த்தையை முடிக்க முற்பட்டான்.

“யெஸ் இந்தப் பேப்பர்ஸ் தான்… உன்னையும் என்னையும் சேர்த்து வச்சதா எல்லாரும் நினைக்கிறது இந்த பேப்பர்சை தான்.. ஆனா உண்மை என்ன தெரியுமா? இது தான் உன்னையும் என்னையும் பிரிச்சு வச்சதே! நான் செஞ்சது எதையும் நியாயப்படுத்த விரும்பல அஸ்மி… ஆனா ஒன்னு மட்டும் சொல்லுவேன்… பொய்யான அடையாளம், பொய்யான கேரக்டர்னு உன் கூடப் பழகுன நான் நீ காதலிக்கிறேனு தெரிஞ்சப்புறம் உன் கிட்ட நடிக்கல அஸ்மி… இந்தப் பிரச்சனைலாம் முடிஞ்சதும் உன் கிட்ட எல்லாத்தையும் சொல்லி புரியவைக்கணும்னு நினைச்சேனே தவிர உன்னை ஏமாத்தணும்னு நினைக்கல… உன் கிட்ட இருந்து தப்பான முறையில நான் வாங்குன ஷேர்சை உனக்கே திருப்பிக் குடுத்துட்டேன்… இனிமே அது உன்னோடது… அந்தக் கம்பெனியும் தான்”

ஜெயதேவ் பேசி முடிக்கவும் அஸ்மிதா நிமிர்ந்து அவனை நோக்கியவள் எதுவும் பேசாமல் நிற்க அவனே தொடர்ந்தான்.

“இதை உன் கிட்ட இருந்து எழுதி வாங்குனதுக்கு ரெண்டு காரணம் இருந்துச்சு.. ஒன்னு என் அப்பாவை ஏமாத்துன சந்திரசேகருக்குப் பாடம் புகட்டணும்… ரெண்டு ஆர்.எஸ் கெமிக்கலை வச்சே ஆர்.எஸ் மினரல்சை என் கைவசம் கொண்டு வந்து வினாயகமூர்த்தியோட சுயரூபத்தை வெளிச்சம் போட்டுக் காட்டணும்… முதல் காரணம் என்னோட மனதிருப்திக்காக, ரெண்டாவது காரணம் மனுவுக்காக… ரெண்டையும் இப்போ செஞ்சு முடிச்சிட்டேனே… இனிமே இது எனக்குத் தேவைப்படாது அஸ்மி”

அஸ்மிதா அவனை ஏறிட்டவள் அந்த முகத்தில் பொய் சொன்னதற்கான சுவடில்லாமல் இருக்க இவனைத் தான் வார்த்தைக்கு வார்த்தை நடிகன் என்று சொன்னோமே என்ற எண்ணத்துடன் முகம் சுருக்க ஆரம்பிக்க ஜெயதேவ் அவள் முகம் சுருக்குவது பொறுக்காது அவளை இழுத்து அணைத்துக் கொண்டான்.

“இப்போ உன் முன்னாடி நான் வெறும் ஜெய்யா தான் நிக்கிறேன் அஸ்மி… துளி ஆபிஸ்ல நீ பார்த்த அதே ஜெய்… உன் கூட காபி சாப்பிட்ட அதே ஜெய்… வாழ்க்கை முழுக்க நீ யாரை மத்தவங்க கிட்ட இருந்து காப்பாத்துவேனு சத்தியம் பண்ணுனியோ அந்த ஜெய்யா தான் நிக்கிறேன்… என்னை மன்னிப்பியா? பழையபடி என்னை ஜெய்னு கூப்பிடுவியா அஸ்மி?” என்றவனின் குரலில் எங்கே அவள் மறுத்துவிடுவாளோ என்ற கலக்கம் நிறைந்திருக்க அஸ்மிதாவுக்கு அவன் சொன்ன வார்த்தைகள் ஒவ்வொன்றும் மனம் எனும் கல்வெட்டில் மெதுமெதுவாய் படியத் தொடங்கியது.

உண்மை தான்! அவள் முன்னே நிற்பவன் ஜெய் தான்! அஸ்மியின் ஜெய். அவளது முதலும் கடைசியுமான காதல் இன்று அவள் முன்னே நின்று தன்னை மன்னிக்குமாறு இறைஞ்ச இந்தக் கணத்தில் ஒரு காதலியாய் மாறியவள் அவனது முகத்தைத் தன் கரங்களில் பற்றிக் கொண்டாள். அவனைக் கண்ணோடு கண் நோக்கியவளின் விழிகளில் நிறைந்திருந்த பரிசுத்தமான காதல் அவள் மனதை மறையாது உரைத்தது ஜெயதேவ்விற்கு.

எத்தனை நாட்கள் இவன் ஜெய்யா அல்லது ஜெயதேவ்வா என்று எண்ணி மருகி குழப்பத்தில் கரைந்திருப்பாள் அவள்! அவளது குழப்பத்துக்குத் திமிர் தைரியம் என்று முகமூடி பூட்டி மற்றவர் அறியாது காத்தவள் எத்தனை முறை சொந்த மனசாட்சியிடம் வாதிட்டுத் தோற்றிருப்பாள்! போதாக்குறைக்குத் தன்னை வெறும் பங்குகளுக்காக மணந்தவனை ஏற்கவும் முடியாது அவனை உதறித் தள்ளவும் முடியாது தனக்குள் குழம்பியிருப்பாள்!

எல்லா கேள்விகளும் அவசியமற்ற இத்தருணத்தில் அவளுக்குள் இத்தனை நாள் மறைந்திருந்த காதல் மீண்டும் முகிழத் தொடங்கியது.

“எல்லாமே பொய்னு நினைச்சுப் பயந்துட்டேன் ஜெய்! வாழ்க்கையில முதல் காதலோட நினைவும் அது குடுக்கிற ஏமாற்றமும் மூச்சு நிக்கிற வரைக்கும் இருக்கும்னு சொல்லுவாங்க… எங்க என் வாழ்க்கையோட கடைசி நிமிசம் வரைக்கும் என் முதல் காதல் கானலாவே போயிடுமோனு பயந்துட்டேன்… இப்போ அது மறுபடி கிடைச்சிருக்கு… நான் இதை இழக்க விரும்பல ஜெய்… ஐ லவ் யூ ஜெய்” என்றவள் நொடிப்பொழுதும் யோசிக்காது அவன் இதழில் தன் இதழைப் பொருத்தினாள்.

முதல் முதலில் ஒரு பெண்ணின் இதழணைப்பு! அதிலும் அவனை அளவின்றி காதலிப்பவளின் இதழணைப்பில் மெய் மறந்து இலயிக்க ஆரம்பித்தான் ஜெயதேவ்.

அந்தக் கணத்தில் அஸ்மிதாவின் கைகளில் இருந்த பேப்பர்கள் நழுவ அதோடு சேர்ந்து ஜெயதேவ்வின் இதயமும் நழுவி அவளது இதயத்தோடு இணைந்து காதலின் முதல் முத்திரையில் மூழ்க ஆரம்பித்தது.

காதல் கொடுத்த நெகிழ்விலும் மனமகிழ்விலும் உருகித் திளைத்தவர்களின் வாழ்வில் இல்லறச் சங்கீதத்தின் முதல் ராகம் இனிதே ஒலிக்க ஆரம்பித்தது அந்த அழகிய இரவில். அவர்களின் வாழ்வின் அழகிய அத்தியாயம் அந்த இரவில் எழுதப்பட்டது. இத்தனை நாட்கள் தனது சொந்த வாழ்வில் நிகழ்ந்த அநியாயங்களில் தகித்துப் போயிருந்த அந்த வெய்யோனைத் தன் காதலால் குளிர்விக்க முயன்றாள் அவனது தண்மதி. தண்மதியின் காதலில் கரைந்து அவளுடன் இரண்டறக் கலந்தான் அவளது வெய்யோன்.

தண்மதி ஒளிர்வாள்🌛🌛🌛