🌞மதி 52🌛

சத்தியபிரதா சாஹூவின் அறிக்கையின் படி தென் தமிழகத்தின் இருபெரும் தாதுமணல் நிறுவனங்களின் மோனசைட் கையிருப்பு 18000 மெட்ரிக் டன்கள் மற்றும் 15000 மெட்ரிக் டன்கள் ஆகும். ஆனால் தாதுமணல் எடுப்பதற்கான தடையாணை செப்டம்பர் 2013லிருந்து தமிழகத்தில் அமலில் உள்ளது குறிப்பிடத்தக்கது – சந்தியா ரவிசங்கர், பத்திரிக்கையாளர்.

ரிஷி சொன்ன நான்கு வருடங்களுக்கு முந்தைய சம்பவங்களைக் கேட்ட அஸ்மிதாவின் விழிகள் கலங்கி சிவந்திருந்தன.

“ஆர்.எஸ் கெமிக்கலோட ஷேர் கைக்கு வந்தா தான் ஆர்.எஸ் மினரல்ஸை கன்ட்ரோலுக்குக் கொண்டு வரமுடியும்னு தேவ் சாரும் நானும் தான் ப்ளான் பண்ணுனோம் சிஸ்டர்… அதை உங்க கிட்ட இருந்து எழுதி வாங்கிறதுக்கு தான் உங்க துளி ஆபிஸ் லேண்டை வாங்கிற பிளானுக்கே வந்தோம்… துளி பத்தி டீடெய்ல் கலெக்ட் பண்ணுறப்போ தாத்தா சொன்ன ஒரு வார்த்தைக்காக தான் மேனேஜர் ஜெய்யை அனுப்பாம தேவ் சாரே உங்க துளி ஆபிசுக்கு வந்தாரு…

பட் அவரை அறியாம உங்களோட பிஹேவியர் எல்லாமே தேவியை நியாகப்படுத்துனதால தேவ் சார் உங்க மேல அக்கறை எடுத்துக்கிட்டாரு… நீங்க அவர் கிட்ட ப்ரபோஸ் பண்ணுனப்போ அவரால ரியாக்ட் பண்ண முடியல… அதுக்கு அப்புறம் ஸ்டாம்ப் பேப்பரை படிச்சு கூட பார்க்காம அவருக்காக சைன் பண்ணுனப்போ உங்க லவ் எவ்ளோ டீப்பானதுனு புரிஞ்சுகிட்டாரு… அவருக்கு உங்களை ரொம்ப பிடிக்கும் சிஸ்டர்… இது ருத்ரா சாருக்கும் தெரியும்… அதனால தான் இந்தப் பிளான்ல எங்களுக்கு ஹெல்ப் பண்ணுனாரு… தேவ் சாருக்கு உங்களை ரொம்ப பிடிக்கும் சிஸ்டர்… அதனால தான் உங்களை மேரேஜ் பண்ணிக்கிட்டாரு… தாத்தாவுக்கு அவர் பண்ணிக் குடுத்த பிராமிசையும் காப்பாத்திட்டாரு”

ரிஷியின் வார்த்தைகள் ஒவ்வொன்றும் அஸ்மிதாவின் மனதில் ஜெயதேவ் மீது உண்டான கோபத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக மட்டுப்படுத்திக் கொண்டே வந்தது. மானசாதேவி மற்றும் ஜீவானந்தம் இருவருக்கும் நேர்ந்த அநியாயத்தை நேரில் பார்த்தவன் என்ற முறையில் ஜெயதேவ் திட்டங்கள் வகுத்திருப்பான் என்பதும் புரிந்தது. ஆனால் இத்திட்டத்தில் அவன் எதிர்பாராது நடந்தது அஸ்மிதாவின் காதல் என்பதே ரிஷி சொல்ல வந்த முக்கியமான விசயம்.

அதைப் புரிந்து கொண்ட அஸ்மிதா இவ்வளவு பெரிய அநியாயத்தை ஒரு பெண்ணுக்கும் அவளது தந்தைக்கும் செய்துவிட்டு வினாயகமூர்த்தியால் எப்படி இவ்வாறு சாதாரணமாக நடமாட முடிகிறது என்று மனம் வெதும்பியவள் கேட்க நினைத்த கேள்வி ஒன்றே ஒன்று தான். மானசாதேவிக்கு நடந்த அநியாயத்தில் தன்னைப் பெற்றவரின் பங்கு ஏதேனும் உண்டா என்பது தான் அது.

“வினாயகமூர்த்திய சட்டத்துல இருந்து காப்பாத்துனதை தவிர அவரு செஞ்ச தப்பு எதுவும் இல்ல… ஆனா அந்தாளுக்கு பனிஷ்மெண்ட் கிடைச்சிருந்தா தேவ் சார் கொஞ்சமாச்சும் அமைதியா இருந்திருப்பாரு… ப்ச்… பழசை பேசி என்ன ஆகப்போகுது சிஸ்டர்? நான் ஒன்னே ஒன்னு தான் சொல்லுவேன், தேவ் சார் பழி வாங்குறதுக்கு உங்கள கல்யாணம் பண்ணிக்கல… யூ ஹேவ் அ ப்ளேஸ் இன் ஹிஸ் ஹார்ட்… அது மட்டும் எனக்கு தெரியும்… உங்களுக்குப் புரியுதுல்ல?” என்று கேட்டவனின் வார்த்தைகள் ஆறுதலையும் ஆச்சரியத்தையும் ஒரு சேர அளித்தன.

புரிகிறது என்று தலையாட்டியவளிடம் “இனிமே உங்க ரெண்டு பேருக்கும் இந்த விசயத்தால சண்டை வராதுனு நம்புறேன் சிஸ்டர்… தேவ் சார் உங்களோட முதல் காதல்… அவர் உங்களை ஏமாத்தல.. உங்க மேல அவருக்கும் அக்கறை, அன்பு இருக்கு… இந்தப் பிரச்சனைலாம் முடிஞ்சு உங்களோட அமைதியான வாழ்க்கைய வாழணும்னு அடிக்கடி சொல்லுவாரு.. அந்த நாளுக்காக தான் நாங்க எல்லாருமே காத்திருக்கோம் சிஸ்டர்” என்றவன் சொல்ல வந்த அனைத்தையும் அவளிடம் கொட்டிவிட்டத் திருப்தியில் அங்கிருந்து எழுந்தான்.

அஸ்மிதா அவனுடன் எழுந்தவள் “அண்ணா வந்துட்டு எதுவுமே சாப்பிடாம போனா என்ன அர்த்தம்? ஆன்ட்டி கையால காபி குடிச்சிட்டு போங்க… அவங்க காபி செமயா இருக்கும்” என்று தங்கையின் நினைவால் மனம் வருந்தாது அவனை இயல்பாக்க முயன்றவாறு பேச்சு கொடுத்தபடி ரிஷியுடன் நடந்தாள்.

அவனுக்கு அஸ்மிதா இயல்பாகத் தன்னிடம் உரையாடியதில் மனதில் இத்தனை நாள் தேவ்வின் எதிர்காலம் குறித்து இருந்த கலக்கம் அகன்றது. அவனும் அஸ்மிதாவும் ஹாலுக்கு வந்த நேரம் ஜெயதேவ் அங்கில்லை. எனவே அவள் சொன்னபடி சாந்தினியின் கையால் காபி குடித்துவிட்டுத் தான் சென்றான் ரிஷி.

அவன் கிளம்பியதும் அஸ்மிதாவின் மனதில் தேவ் மீது உண்டான கோபம் மெதுவாய் விலகியது. ஜெயதேவ் மீது இப்போது அவளுக்குத் தோன்றியது பரிதாபம் மட்டுமே. ஒரே நேரத்தில் காதலித்தவளையும் வழிகாட்டியையும் இழந்த ஜெயதேவ் மீது இனி கோபப்பட்டு எதுவும் ஆகப்போவதில்லை. அதோடு அவன் தன்னைத் திருமணம் செய்தது பங்குகளுக்காகவோ அல்லது பழி வாங்கவோ அல்ல என்று ரிஷி சொன்னதே அவளது அலைபாய்ந்த மனதை ஒரு கட்டுக்குள் கொண்டு வந்தது.

இனி அவளும் நிகழ்காலத்தின் உண்மையை ஏற்றுக்கொள்ள பழக வேண்டுமே தவிர ஜெயதேவின் கடந்த காலத்தைச் சுட்டிக்காட்டி தங்கள் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கிவிடக் கூடாது என்ற முடிவுக்கு வந்தாள் அஸ்மிதா. தனக்காக, தன் மீது கொண்ட அக்கறையோ அல்லது அன்போ ஏதோ ஒரு உணர்வுக்காகத் தன்னை மணந்து கொண்டவனை இனி வறுத்தெடுக்க அவள் விரும்பவில்லை.

நீண்ட நாட்களுக்குப் பின்னர் தன்னை பழைய அஸ்மிதாவாக உணர்ந்தவள் இந்த விசயத்தை இஷானியிடம் போனில் பகிர்ந்து கொண்டாள். அதற்கும் காரணம் இருந்தது. ஏதோ தன் வாழ்வு ருத்ரா ஜெயதேவுக்குச் செய்த உதவியால் வீணாகிவிட்டதாக எண்ணி இஷானி அவளது வாழ்வை பாழ்படுத்திக் கொள்ளக் கூடாதே என்று முதல் வேலையாக அவளுக்கு இந்த விசயத்தைத் தெரிவித்தாள்.

அதைக் கேட்ட இஷானிக்குத் தான் தங்கியிருக்கும் வீட்டில் ஒரு கொலைபாதகனும் தங்கியிருக்கிறானா என்ற ஆதங்கத்துடனும் அதே சமயம் அச்சத்துடனும் உலாவினாள். ருத்ரா வந்ததும் அவனது சகோதரர் பற்றி அவனிடம் கேட்டே ஆக வேண்டும் என்று தீர்மானித்தாள் அவள்.

இரு சகோதரிகளின் வாழ்வில் சூழ்ந்திருந்த குழப்ப மேகங்களும் தற்போது அகன்றுவிட்டது.  

அஸ்மிதாவின் தெளிந்த முகம் சாந்தினி மற்றும் விஸ்வநாதனுக்கு நிம்மதியைக் கொடுத்தது. சங்கரராமனும் அஸ்மிதாவைத் திருமணம் செய்யச் சொல்லி தான் ஒன்றும் இருவரின் வாழ்விலும் விளையாடவில்லை என்ற சமாதானமடைந்தார். இனி சஞ்சீவினியையோ அவரது பெற்றோரையோ சங்கடமின்றி எதிர்கொள்ளலாமே!

ஜெயதேவ் மதியமே எங்கோ சென்றவன் வீடு திரும்புகையில் மாலை ஆறு மணியைத் தாண்டிவிட்டது. அதன் பின்னரும் தனது அலுவலக அறைக்குள் சென்று அடைபட்டுக் கொண்டவனை யாரும் தொந்தரவு செய்யவில்லை. இரவுணவுக்குக் கீழே வந்தவன் கடமைக்கு கொறித்துவிட்டு விறுவிறுவென்று சாப்பிட்டுக் கை கழுவி விட்டு மீண்டும் அவனது அலுவலக அறையை தஞ்சம் அடைந்தான்.

அஸ்மிதா அவன் அறைக்கு வந்ததும் நேற்றைய பேச்சுக்காக அவனிடம் மன்னிப்பு கேட்கலாம் என்று எண்ணியிருந்தவள் அவனது இந்த அலட்சியத்தில் எரிச்சலுற்றாள். ஆனால் அவள் சொல்லித் தான் அவன் இந்த அறைக்கு வரவில்லை என்பதை வசதியாக மறந்து போனாள் அஸ்மிதா.

சிறிது நேரம் பொறுத்துப் பார்த்தவள் பின்னர் அவனது அலுவலக அறைக்குள் புயலாய் நுழைந்தாள். ஜெயதேவ் சோபாவில் அமர்ந்திருந்தவன் லேப்டாப்பின் திரையை உற்றுநோக்கிக் கொண்டிருந்தவன் ஓரக்கண்ணால் தன் பக்கவாட்டில் நின்று தன்னை முறைத்துக் கொண்டிருப்பவளை கண்டுகொள்ளாதது போல வேலையைத் தொடர்ந்தவனது லேப்டாப் திரையைப் பட்டென்று மூடினாள் அஸ்மிதா.

ஜெயதேவ் அதில் எரிச்சலுற்று அவளை நோக்கியவன் “ஆர் யூ க்ரேசி? ஒர்க் பண்ணிட்டிருக்கிறப்போ நீ இப்பிடி திடுதிடுப்புனு வந்து வேலையைக் கெடுப்பியா?” என்றபடி முறைக்க

அஸ்மிதா “நான் உன் கிட்ட பேசணும் ஜெ… ப்ச்.. தேவ்” என்று பதிலிறுத்தாள்.

ஜெயதேவ் கையைக் கட்டிக்கொண்டு சோபாவில் சாய்ந்து கொண்டவன் கால் மேல் கால் போட்டுத் தோரணையாக அமர்ந்தபடி அவளை நோக்க அஸ்மிதா அவனது தோரணையில் முகம் சுருக்கியபடி தானும் அதே சோபாவில் கால் மேல் கால் போட்டு அமர்ந்துகொண்டாள்.

பெருமூச்சை எடுத்துவிட்ட ஜெயதேவ் “இப்பிடி ரட்டினக்கால் போட்டு உக்கார தான் இங்க வந்தியா மேடம்?” என்று கேலியாக கேட்க

“இல்லையே! நான் நிக்கிறப்போ நீ மட்டும் தோரணையா கால் மேல கால் போட்டு உக்காந்திருக்கிறது எனக்குப் பிடிக்கல.. அதான் நானும் உக்காந்துட்டேன்… எனி பிராப்ளம்?” என்று கேட்டாலும் அவனுக்கு அதில் பிரச்சனை இருந்தாலும் தனக்கு கவலை இல்லை என்பது போல அமர்ந்திருந்தாள் அஸ்மிதா.

“இஸிண்ட்? அப்போ எதுக்கு வந்தியோ அதை சொல்லிட்டுக் கிளம்பு… எனக்கு நிறைய வேலை இருக்கு”

அஸ்மிதா இவ்வளவு நேரம் இருந்த அலட்சியப்பாவத்தை விலக்கிவிட்டு மெதுவாக “ரிஷி அண்ணா என் கிட்ட எல்லாத்தையும் சொல்லிட்டாரு… ஐ ரியலி ஃபீல் பேட் ஃபார் மானசா” என்று சொன்னவள் தனது பேச்சில் இறுகிப் போனவனை ஓரக்கண்ணால் பார்த்தவள் அமைதியாகிவிட்டாள்.

பின்னர் சில நிமிட அமைதிக்குப் பின்னர் “நான் உன் கிட்ட பேசுனது எல்லாமே சரியா தப்பானு தெரியல… ஆனா என் காதலை ஒருத்தன் தப்பா யூஸ் பண்ணிக்கிட்டானோனு குழம்பிட்டேன் ஜெ.. ப்ச்… தேவ்… இப்போ நான் ஓரளவுக்குத் தெளிவாயிட்டேன்… நிதர்சனத்தைப் புரிஞ்சுகிட்டேன்… நான் காதலிச்சது ஜெய்யைத் தான்… இந்தத் தேவ் எனக்கு யாரோ ஒருத்தன்… ஆனா நான் தேவ்வோட வாழப் பழகிப்பேன்… நாட்டுல எத்தனையோ பொண்ணுங்க அரேஞ்ச் மேரேஜ் பண்ணிட்டு சந்தோசமா இல்லையா? நானும் அப்பிடி இருக்க டிரை பண்ணுறேன்” என்றவள் அவனது பதிலுக்குக் காத்திருக்காமல் அங்கிருந்து வெளியேறினாள்.

ஜெயதேவ் விறுவிறுவென்று அங்கிருந்து சென்றவளைக் கண்ணுற்றவன் தலையை உலுக்கிக் கொண்டான். சில நிமிடங்கள் யோசனையுடன் கழிய அவர்களின் அறைக்குச் சென்றான்.

அஸ்மிதா இன்னும் உறங்காமல் ஆனால் வழக்கமான கோபமோ விரக்தியோ இல்லாமல் அமைதி தவழ்ந்த அவளது முகத்தைக் கண்டதும் ஓரளவுக்கு நிம்மதியடைந்தான்.

“அஸ்மி”

அவனது அழைப்பில் படுக்கையில் அமர்ந்து ஏதோ சிந்தித்துக் கொண்டிருந்தவள் கவனம் கலைந்து திரும்பிப் பார்க்க ஜெயதேவ் அதற்குள் அவள் எதிரே வந்து நின்றிருந்தான்.

“நீ சொல்ல வேண்டியதை சொல்லிட்ட… நானும் என்னோட விளக்கத்தைக் குடுக்கணும் இல்லையா?”

அவனது கேள்விக்கு ஆமென்றும் இல்லாது இல்லையென்றும் மறுக்காது மத்திமமாய் தலையாட்டினாள்.

அவள் அருகே அமர்ந்தவன் அஸ்மிதாவின் கையைப் பற்றிக் கொள்ள அஸ்மிதா கையை அவனிடமிருந்து உருவ முயன்று தோற்றப் பின்னர் ஜெயதேவ்வை முறைத்து வைத்தாள்.

அதை பொருட்படுத்தாமல் “நான் உன்னை விரும்பித் தான் கல்யாணம் பண்ணிக்கிட்டேன் அஸ்மி… உனக்கு எப்பிடியோ எனக்கு உன் கூட சேர்ந்து அமைதியா எந்த பிக்கல் பிடுங்கலும் இல்லாம சாதாரணமா ஒரு வாழ்க்கை வாழணும்னு ஆசையா இருக்கு… அதுக்கு முன்னாடி தீர்க்க வேண்டிய கணக்கையெல்லாம் தீர்த்துட்டு நம்ம லைபை ஸ்டார்ட் பண்ணுவோம்” என்று சொன்னவனின் பேச்சில் அவன் இப்போது ஜெய்யா, தேவ்வா அல்லது ஜெயதேவ்வா என்று புரியாது விழித்தாள் அஸ்மிதா.

முன்பு அவன் என்ன சொன்னாலும் காரணமின்றி நம்பியவள் இப்போது அவன் மனதாற சொன்னாலும் நம்ப முடியாது தவித்தாள். அவளது நிலையைப் புரிந்து கொண்ட ஜெயதேவ்

“உன்னால நான் என்ன சொன்னாலும் நம்ப முடியாதுனு புரியுது… ஆனா உனக்கு வேற வழி இல்லையே மேடம்… ப்லீவ் மீ…. ஐ வில் க்ளியர் ஆல் ப்ராப்ளம்ஸ்… அது வரைக்கும் எனக்காக வெயிட் பண்ணுவியா?” என்று கேட்க அஸ்மிதாவின் சிரம் தானாய் அசைந்து சரியென்று சொல்ல அவளது அனுமதியை எதிர்பாராது அணைத்துக் கொண்டான் தேவ்.

அஸ்மிதாவுக்கும் அவனது அணைப்பில் புதைந்து காணாமல் போக விருப்பம் தான். ஆனால் அவளது மனதில் இன்னும் சில நெருடல்கள். அந்த நெருடல்கள் என்று தீர்கிறதோ அன்று தான் அவளால் அவனது தோளில் நிம்மதியாக சாய்ந்து கண் மூட முடியும். ஆனால் இப்போதைய அணைப்பில் மனதின் அலைக்கழிப்பு அடங்கி மனம் சாந்தமானது அஸ்மிதாவுக்கு.

ஜெயதேவின் விரல்கள் அவள் சிகையை வருடிக் கொடுத்தபடி “நியாயமா இப்போ நீ என் கன்னத்துல அறைஞ்சிருக்கணுமே.. என்னாச்சு? அஸ்மிதாவோட ஃபயர் அணைஞ்சு போச்சா?” என்று கேலி செய்ய அவள் அணைப்பிலிருந்து திமிறி விலகினாள்.

“நீ எழுந்திரி மேன்… எதோ ஆறுதல் சொல்ல வந்திருக்கானேனு சைலண்டா இருந்தா நீ அதுக்குனு என்னை கலாய்ப்பியா? ஒழுங்கா உன் ஆபிஸ் ரூம்கு ஓடிப்போயிடு”

அவளது இந்த முன்கோபத்தில் சிவந்த முகம் எப்போதுமே அவனுக்கு சிரிப்பு மூட்டும். இப்போதும் அப்படி தான். அவனது சிரிப்பில் அஸ்மிதாவின் முன்கோபம் கற்பூரமாய் கரைய அவளது முகம் மீண்டும் இயல்புக்குத் திரும்பி இதழ்கள் சிரிப்பில் நெளியத் தொடங்கியது. இருவரும் நீண்டநாள் கழித்து செல்லமாய் சண்டையிட்டுத் தங்கள் மணவாழ்வின் முதல் அத்தியாயத்தில் அடியெடுத்து வைத்தனர்.

தண்மதி ஒளிர்வாள்🌛🌛🌛