🌊 அலை 8 🌊

மனம் எனும் வெள்ளைக்காகிதத்தில்

அழியா மையால் எழுதப்பட்ட

எழுத்துகளாய் உன் நினைவுகள்..

அழிக்க முற்பட்டுத் தோற்றுப் போகிறேன் நான்!

மதுசூதனன் அன்னையின் மடியில் தலை சாய்த்துப் படுத்திருந்தவன் அன்றைய தினம் நடந்த அனைத்தையும் அவரிடம் கொட்டிவிட்டான். மைதிலி மகனது சிகையைக் கோதிக் கொடுத்தவர் பெருமூச்சுவிட்டபடி அமைதியாக அவனது அறையில் கிடந்த சோபாவில் அமர்ந்து இருந்தார்.

அவரது மகனைப் பற்றி அவர் நன்கு அறிவார். அன்னையான தன்னையும், வைஷாலியையும் தவிர்த்து வேறு எந்தப் பெண்ணையும் தனது கரத்தைக் கூடத் தொடவிடாதவன் அவன். அது ஏன் அந்த தனுஜாவுக்குப் புரியவில்லை?

ஏதோ ஒரு பெண் சிறுபிள்ளைத்தனமாகச் சொல்லிவிட்டுச் சென்றதற்கு இப்படி மகனைப் பரிதவிக்கவிடுபவள் மீது வழக்கம் போல அவருக்குக் கசப்புணர்வு தான் உண்டானது. எப்போதுமே அவள் மீதோ அவளது தந்தை மீதோ மைதிலிக்கு அவ்வளவாக நல்லெண்ணம் இல்லை. தனுஜாவின் அளவுக்கதிகமான உரிமையுணர்வும், சங்கரநாராயணனின் செல்வச்செருக்கும் இப்போது நினைத்தால் கூட மைதிலிக்கு ஒருவித விலகலை தான் உண்டாக்கியது.

“மது! நீ சின்னக்குழந்தை இல்லடா… நம்மள காதலிக்கிறவங்கள கல்யாணம் பண்ணிக்கிட்டா வாழ்க்கை நல்லா இருக்கும்னு நானும் ஒத்துக்கிறேன்… ஆனா வாழ்க்கையை வாழ வெறும் காதல் மட்டும் போதாதுடா கண்ணா! எந்த உறவுக்கும் அடிப்படையானது நம்பிக்கை தான்… தனுஜாவுக்கு உன் மேல கொஞ்சம் கூட நம்பிக்கை இல்லயே! இப்போ நீங்க வெறும் ஃப்ரெண்ட்ஸ்…. நாளைக்குக் கல்யாணத்துக்கு அப்புறம் அவ உன்னை நம்பாம சந்தேகப்பட்டா ஒவ்வொரு தடவையும் நீ உன்னை நிரூபிச்சிட்டே இருப்பியா? வாழ்க்கை வாழுறதுக்கு தானே தவிர நீ அவளை மட்டும் தான் மனசுல நினைக்கிறேனு ஒவ்வொரு தடவையும் அவளுக்கு நிரூபிக்கிறதுக்கு இல்லடா…. இப்போவும் காலம் கடந்து போகல… நிதானமா யோசி” என்று மகனது மனதில் உண்டான கொந்தளிப்பை தனது ஆறுதல் வார்த்தைகளால் அமைதிப்படுத்தினார்.

மதுசூதனனுக்குத் தாயார் சொன்ன வார்த்தைகள் மனதில் ஆழப் பதிந்தன. அவர் சொன்னதைப் போல வாழ்க்கையை வாழ தனுஜாவின் கண்மூடித்தனமான காதல் மட்டும் போதாது. தங்களிடையே பரஸ்பர நம்பிக்கையை வளர்த்துக் கொள்வது தான் தனக்கும் தனுஜாவுக்கும் நல்லது என்ற முடிவுக்கு வந்துவிட்டான் அவன். இது குறித்து அவளிடம் பொறுமையாகப் பேசி முடிவெடுக்க வேண்டும் என்று தனக்குள் சொல்லிக் கொண்டபடி தாயாரின் மடியிலிருந்து எழுந்தவன் அவரை அணைத்துக் கொண்டான்.

“ஐ லவ் யூமா! இதுக்குத் தான் நீங்க தான் வேணுங்கிறது. இப்போ தான் மனசு தெளிவா மாறிருக்கும்மா… எனக்கு இப்போ கொஞ்சம் ரிலாக்சா ஃபீல் ஆகுதும்மா… நான் தனு கிட்ட இதைப் பத்தி பேசுறேன்” என்று உற்சாகமாய் உரைத்தவனை ஆதுரத்துடன் பார்த்தவர் இரவுணவுக்கு அழைத்துச் சென்றார்.

மதுசூதனன் வழக்கம் போல தங்கையுடன் அரட்டையும் கேலியுமாய் இரவுணவை முடித்தவன் தனது அறைக்குள் வந்து படுக்கையில் விழுந்து கண் மூடினான். திடீரென்று இரயில்கள் கிளம்பும் சத்தமும், அறிவிப்புமாய் அவன் காதுக்குள் ரீங்காரமிட அவனை உரசிச் சென்ற பச்சைவண்ண பட்டுத்தாவணி பெண்ணின் ஸ்பரிசத்தைப் புஜத்தில் உணர்ந்தவனின் இதழ்கள் தானாய் குறுஞ்சிரிப்பில் மலர்ந்தது. அப்படியே உறங்கிப் போனான் அவன்.

மறுநாள் விடியலில் தெளிவான மனநிலையுடன் எழுந்தவன் போனைப் பார்க்க அதில் தனுஜாவிடம் இருந்து தவறிய அழைப்புகள் எக்கச்சக்கமாய் வந்திருந்தது. அதைப் பார்த்ததும் புருவம் சுருக்கியவன் அவளுக்கு அழைத்தான்.

அவன் எப்போது அழைப்பான் என்று காத்திருந்தவளைப் போல அவள் விழுந்தடித்து அழைப்பை ஏற்றுப் பேச ஆரம்பித்தாள்.

“சாரி மது! நான் போனை வீட்டுலயே வச்சிட்டுப் போயிட்டேன்டா…. உன்னோட கால்ஸ் எல்லாம் பாத்துட்டு நான் கால் பண்ணுனேன்”

“நீ மிட்நைட்ல கால் பண்ணிருக்க தனு…. அவ்ளோ நேரம் நான் முழிச்சிருக்கிறது இல்ல”

“சாரி மது! நான் நேத்து பார்ட்டிக்குப் போனேன்… வீட்டுக்கு வர லேட் ஆயிடுச்சுடா… அதான் லேட்நைட் கால் பண்ணுனேன்”

அவள் பேசியதற்கு பதில் ஏதும் சொல்லாமல் வெறுமெனே “நான் உன் கிட்ட கொஞ்சம் பேசணும் தனு… நான் ஃப்ளவர் டெகரேசனுக்கு அட்வான்ஸ் குடுத்துட்டு வர்றேன்… அது வரைக்கும் ஆபிஸ்ல வெயிட் பண்ணு” என்று சொல்லவும் தனுஜா சரியென்று தலையசைத்தவள் போனை வைத்துவிட்டாள்.

மதுசூதனன் குளித்து காலையுணவை முடித்தவன் ஊட்டிக்குச் செல்ல வேண்டியிருப்பதாகச் சொல்லிவிட்டுக் கிளம்பினான்.

அதே நேரம் தனுஜா மதுசூதனனைக் காணச் செல்லத் தயாராகிக் கொண்டிருந்தாள். உற்சாகமாய் தயாராகி வந்தவளைக் கவனித்த சங்கரநாராயணன் மகளிடம் நைச்சியமாய் பேசி விசயத்தைக் கறக்க ஆரம்பித்தார்.

“நான் மதுவ பாக்க அவனோட ஆபிசுக்குப் போறேன்பா… நேத்து நடந்த இன்சிடெண்ட் பத்தி அவன் எனக்கு விளக்கம் சொல்லியே ஆகணும்… யாரு அந்தப் பொண்ணுனு எனக்குத் தெரியணும்பா… எனக்கும் மதுவுக்கும் இடையில நான் அவளை வர விட மாட்டேன்” என்ற மகளை நினைத்து மானசீகமாய் தலையிலடித்துக் கொண்டார்.

பின்னர் மகளின் குணமறிந்த தந்தையாய் “அவன் உண்மைய சொன்னா எனக்கும் சந்தோசம் தான் தனும்மா! ஆனா இந்தக் காலத்துப் பசங்களை நம்புறதும் கஷ்டம் தான்… எனக்கு அந்தப் பையன் மேல நம்பிக்கை இல்ல… ஆனா உனக்கு இஷ்டம்னா இந்த அப்பா என்னைக்குமே அதுக்குத் தடையா இருக்க மாட்டேன்டா… ஆனா ஒன்னு சம்பந்தப்பட்ட பொண்ணு வந்து சொன்னா தான் அது உண்மையா பொய்யானு தெரியும்டா… மதுவோட வாய் வார்த்தைய மட்டும் நம்பி நீ எதுவும் முடிவுக்கு வந்துடாத” என்று மகளுக்கு வேப்பிலை அடிக்கவே அவரது மனைவியும் தனுஜாவின் தாயுமான செல்வநாயகி அதைக் கண்டுகொண்டார்.

கணவரின் சூட்சுமத்தை அறிந்த மனைவி அவர். அத்தோடு கட்டாயம் கணவர் மகளையும் அவள் விரும்பும் பையனையும் பிரிக்கத் தான் பார்ப்பார் என்பதுவும் அவருக்குத் தெரியும். முதல் முறை அவன் வீட்டுக்கு வந்து சென்ற பின்னரே மனைவியிடம் இது பற்றி தெரிவித்துவிட்டார்.

மகளைச் சமாதானம் செய்வதெல்லாம் வெறும் கண்துடைப்பு மட்டுமே! எப்படியாவது இருவருக்கும் இருக்கும் இந்தக் கருத்துவேறுபாடு பெரிதாகி அவர்கள் பிரிந்தால் போதும் அவருக்கு. அதற்குத் தான் அவர் காத்திருந்தார்.

அவ்வாறிருக்க நேற்றைய தினம் முடிந்தளவுக்கு மதுசூதனனை வெறுப்பேற்றி வேடிக்கை பார்த்தவரிடம் மகள் மீண்டும் அவனிடம் பேசிப்பார்க்கிறேன் என்று சொல்லவும் அவளைத் தூண்டிவிட ஆரம்பித்தார். அவர் சொன்னபடியே சம்பந்தப்பட்ட அந்தப் பெண் வந்து சொன்னால் மட்டுமே தான் இனி அவனை நம்புவேன் என தனுஜாவும் அவரிடம் உறுதியாய் கூற வில்லத்தனமான புன்னகையுடன் மகளை வழியனுப்பி வைத்தார் சங்கரநாராயணன்.

அவரது மனைவி “ஏங்க இப்பிடிலாம் பண்ணுறிங்க? அந்தப் பையனுக்கு என்னங்க குறைச்சல்? இந்தச் சின்னவயசுலயே இவ்ளோ சூட்டிப்பா தொழிலை நடத்துறான்… அவன் வருங்காலத்துல நல்ல நிலமைக்கு வருவானு எனக்கு நம்பிக்கை இருக்குங்க” என்று மதுசூதனனுக்கு ஆதரவாய் பேசி சங்கரநாராயணனின் முறைப்பை பதிலாய் பெற்றார்.

“நம்ம அந்தஸ்துக்கும் தகுதிக்கும் அவன் நம்ம கிட்ட கூட வர முடியாதுடி… தனு சின்னப்பொண்ணு! ஆள் பாக்க அம்சமா இருக்கான்னதும் அவனை விரும்ப ஆரம்பிச்சிட்டா… ஆனா அவன் இவளை பொம்மை மாதிரி வச்சுக்கிட்டு வேடிக்கை காட்டுறான்டி… அவன் மனசுல இன்னும் நம்ம தனுஜா மேல காதல் வரலையாம்… எப்பிடி வரும்? இன்னும் அவ பேருல எந்தச் சொத்தும் வாங்கிப் போடலயே! எல்லாம் உன் பேருல தான் இருக்கு… அந்தப் பையனுக்கு எப்போவுமே இவ மேல காதல் வராது… அப்பிடி வந்தாலும் அவனை மாதிரி மிடில்கிளாசை என் மருமகன்னு சொல்லிக்க எனக்கு இஷ்டமில்லடி… என் மகளோட கல்யாணம் ஸ்ரீவத்சனோட மகன் அஜய் கூட தான் நடக்கும்… யுவஸ்ரீ கல்யாணம் முடிஞ்சதும் நாங்க நிச்சயம் பண்ணிக்கலாம்னு இருக்கோம்” என்று தானும் நண்பரும் ஏற்கெனவே எடுத்த முடிவை மனைவியிடம் தில்லாக கூறிவிட்டுக் கிளம்பினார் அந்தக் காரியக்கார மனிதர்.

இது எதையும் அறியாத அவரது மகளோ மதுசூதனனின் அலுவலகத்துக்குக் காரில் சென்று கொண்டிருந்தாள்.

*************

லவ்டேல்

காலையில் சோம்பல் முறித்தபடி விழித்தாள் மதுராவணி. வழக்கம் போல கைகள் கூந்தலைக் கோத உயர்ந்தது. கழுத்தளவில் கூந்தல் நின்றது இப்போது தான் அவளது கருத்தில் பதிந்தது. அதைத் தடவிக் கொடுத்தபடி புதிய மொபைலில் விக்ரமின் எண்ணுக்கு அழைத்தாள். நேற்று போலவே இன்றும் அவன் போனை எடுக்கவில்லை. அவனுக்கு என்ன பிரச்சனையோ என்று யோசித்தபடியே குளியறைக்குள் புகுந்து கொண்டாள்.

குளித்துவிட்டு வெளிர்பச்சை நிற முழூநீள ஸ்லீவ்லெஸ் காட்டன் கவுனை அணிந்து கொண்டவள் கண்ணாடியில் அப்படியும் இப்படியுமாக திருப்பிப் பார்த்துத் திருப்திப்பட்டுக்கொண்டாள். கூந்தல் நீளம் கம்மி என்பதால் வெகுசீக்கிரத்தில் உலர்ந்துவிட்டது.

கூந்தலைச் சிலுப்பிக் கொண்டு கீழே வந்தவளுக்கு அன்றைய தினக் காலையுணவு அவளுக்குப் பிடித்ததாக இருக்க நாவில் எச்சில் ஊறியது. ஆரத்யா சீருடை அணிந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தவள் சித்தியைப் பார்த்ததும்

“மது சித்தி! உனக்குப் பூரி பிடிக்கும்ல… இந்தா வாங்கிக்கோ” என தனது தளிர்க்கரங்களால் ஒரு விள்ளலை கிழங்குடன் சேர்த்து நீட்ட மதுரவாணி அக்கா மகளிடம் ஒரு வாய் வாங்கிக் கொண்டாள்.

“செல்லத்துக்கு நான் ஊட்டிவிடவா?” என்று அவளிடம் விளையாடியபடியே சாப்பிட்டு முடித்தவள் அவளைப் பள்ளி பேருந்தில் ஏற்றிவிட சங்கவியிடம் சொல்லிக்கொண்டு அழைத்துச் சென்றாள்.

வெளியே வரும் போது குளிர் சிலீரென மேனியைத் தாக்க அது கூட அவளுக்கு இதமாகத் தோணியது. ஆரத்யாவுடன் சாய்சரணையும் அழைத்துக் கொண்டவள் தானே அவர்களை பேருந்தில் ஏற்றுவிடுவதாகச் சொல்லிவிட்டு நகர முற்பட ஸ்ரீரஞ்சனியும் ராகினியும் அவளுடன் சேர்ந்து கொண்டனர். இன்னும் சில நாட்கள் தான் அவள் அங்கே தங்க போகிறாள் என்று தெரிந்ததால் அவள் சென்னைக்குக் கிளம்பும் வரை தாங்களும் ட்ரீம் வேலியில் தான் தங்குவோம் என்று யாழினியிடம் சொல்லிவிட்டனர்.

மூவருமாய் சேர்ந்து இரு குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு வெளியேறவும் மதுசூதனனின் கார் ட்ரீம் வேலியின் நுழைவுவாயிலுக்குள் வரவும் சரியாக இருந்தது. அவனும் சரி மதுரவாணியும் சரி ஒருவரை ஒருவர் கவனிக்கவில்லை.

மதுசூதனன் மேட்டில் இருந்த கார் பார்க்கிங்கில் காரை நிறுத்திவிட்டு அந்த இடத்தின் அழகை ரசித்தபடி சரிவில் அமைந்திருந்த படிகளில் இறங்கினான். சங்கவியின் வீடு உள்ளே நுழைந்ததும் முதல் வீடு என்று அவள் ஏற்கெனவே சொல்லியிருக்க அவளது வீட்டின் அழைப்புமணியை அழுத்தியவன் அவள் வந்து கதவைத் திறக்கும் வரை வானை முட்டும் சிகரங்களையும், அவற்றை முத்தமிடும் மேக கூட்டங்களையும் ரசித்துக் கொண்டிருந்தான்.

கதவு திறக்கவும் புன்னகைத்தவன் “ஹாய் மேம்!” என்று சினேகமாய் புன்னகைக்க சங்கவி மலர்ந்த முகத்துடன் அவனை உள்ளே அழைத்துச் சென்றாள். யாழினியும் அங்கே வந்துவிட்டவள் அவனைக் கண்டதும் நேற்றே அவர்கள் லேப்டாப்பில் மலர் அலங்காரம் குறித்து எடுத்து வைத்திருந்த விபரங்களை அவனிடம் காட்ட மதுசூதனனுக்குத் தான் வேலையை ஒப்படைத்திருக்கும் பெண்மணிகளின் திறமையின் மேல் நம்பிக்கை அதிகரித்தது.

அவர்களிடம் காசோலையை நீட்டியவன் “இது அட்வான்ஸ் மேம்! பேலன்ஸ் மேரேஜ் முடிஞ்சதும் செட்டில் பண்ணிடுவாங்க” என்று சொல்ல இருவரும் அதை வாங்கிக் கொண்டவர்கள் கண்ணில் ஒற்றிக் கொண்டனர்.

“கண்டிப்பா எங்க கிட்ட குடுத்த வேலையை நல்லபடியா முடிச்சிடுவோம் சார்” என்று ஒரே குரலில் நம்பிக்கையுடன் உரைத்தவர்கள் அவனைப் பார்த்துப் புன்னகைக்க அவன் கிளம்ப எழுந்தான்.

யாழினி அவசரமாக “என்ன சார் எங்க வீட்டுக்கு வந்துட்டு ஒரு கப் காபி கூட குடிக்காம போனா என்ன அர்த்தம்? ப்ளீஸ் சார்! கொஞ்சம் வெயிட் பண்ணுங்க… நான் காபியோட வர்றேன்” என்று வேண்டிக் கேட்க மறுக்கும் மனமில்லாது சரியென்று ஒத்துக்கொண்டவன் சோபாவில் அமர்ந்தான்.

அந்நேரம் வாயில் கதவு திறக்க மூன்று பெண்களின் சிரிப்புச்சத்தமும், அவர்களின் பாதுகைகளின் ஒலியும் கேட்கவே வீட்டினுள் இருந்த மூவரும் வாயிலை நோக்கித் திரும்ப மதுரவாணி ஓடோடி ஹாலுக்கு வந்தவள் “கவிக்கா ஒரு ஜோக் கேளேன்” என்று உற்சாகமாய் சொல்ல வாயெடுக்க, அந்த ஹாலின் சோபாவில் அமர்ந்திருந்தவனைக் கண்டதும் அப்படியே சிலையானாள்.

அவள் பின்னே சிரித்தமுகமாய் வந்த ஸ்ரீரஞ்சனியும் ராகினியும் வாயைப் பிளந்தபடி திருதிருவென விழித்து வைக்க யாழினியும் சங்கவியும் அவர்கள் மூவரையும் பார்த்து புரியாது விழித்தனர்.

மதுசூதனன் மதுரவாணியை அழுத்தமாய் அளவிட்டவன் உறைந்து போய் நின்றவளைப் பார்த்த பார்வையில் வாழ்க்கையில் முதல் முறையாக பயம் என்றால் என்ன என்பதை அனுபவப்பூர்வமாக அறிந்து கொண்டாள் அவள்.

இவன் எப்படி இங்கே வந்தான்? ஒருவேளை தான் செய்த குறும்புத்தனத்தை அக்காவிடம் சொல்லித் திட்டு வாங்க வைத்துவிடுவானோ? அவளது குறும்புத்தனத்தைப் பொறுக்காது அக்கா அப்பாவுக்குத் தான் இங்கே இருப்பதை சொல்லிவிட்டால் தன் நிலமை என்னவாகும்?

மதுரவாணியின் தலைக்குள் ஆயிரம் கேள்விகள் முளைக்கவும் படபடப்புடன் மதுசூதனனை ஏறிட அவனோ அவளது முகமாற்றத்தைத் தான் நோக்கிக் கொண்டிருந்தான்.

நேற்று பார்த்த போது என்ன பேச்சு! என்ன சிரிப்பு! உரிமைப்பட்டவள் போல ‘டார்லிங்’ என்ற அழைப்பு வேறு! அதற்கு அப்படியே நேர்மாறாக தன்னைக் கண்டதும் இன்று வாயடைத்து நின்றவளின் தோற்றம் அவனுக்குள் இனம்புரியாத சந்தோசத்தை உண்டாக்க “மாட்டுனியா குட்டிப்பிசாசு? நேத்து அவ்ளோ பேசுன! இன்னைக்கு வாயை மியூட்லயா போட்டிருக்க? இப்போ பேசு” என்று தனக்குள் சொல்லிக் கொண்டவனின் பார்வையும் அதைத் தான் பிரதிபலித்தது.

சங்கவி இந்தப் பார்வை பரிமாற்றங்கள் எதுவும் புரியாது “மது” என்று அழைக்க இருவரும் ஒரே நேரத்தில் “என்ன?” என்று கேட்டுவிட்டு ஒருவரை ஒருவர் மாறி மாறிப் பார்த்துக் கொள்ள சங்கவி தன் தலையில் பொய்யாய் குட்டிக் கொண்டாள்.

“சார் இது என்னோட சிஸ்டர் மதுரவாணி… இவளை நாங்க மதுனு தான் கூப்பிடுவோம்” என்று சொல்ல தலையாட்டிக் கேட்டுக்கொண்டவனின் பார்வை மீண்டும் அவளைக் கூறு போட ஆரம்பித்தது.

சங்கவி தங்கையிடமும் நாத்தனார்களிடம் “இவர் தான் மதுசூதனன் சார்! ஹில்டாப்போட பார்ட்னர்” என்று சொல்ல மூவரும் கார்ட்டூன் கேரக்டர்களைப் போல முட்டைக்கண்களை விரித்து இமைகளைக் கொட்டிக் கொண்டனர். வாயிலிருந்து வார்த்தைகள் வரவில்லை.

யாழினி மூவரையும் நோக்கியவள் இவர்கள் ஏன் பேயறைந்தாற் போல நிற்கிறார்கள் என்ற யோசனையுடன் “ஸ்ரீ சாருக்குக் காபி போட்டுக் கொண்டு வர்றியா? மது, ராகி ரெண்டு பேரும் கூடப் போங்க” என்று கட்டளையிட்டுச் சமையலறைக்கு அனுப்பி வைத்தாள்.

மூவரும் அங்கே சென்றதும் மதுரவாணிக்கு மயக்கம் வராத குறை தான். படபடப்புடன் நின்றவளின் கையில் ஸ்ரீரஞ்சனி காபி கப்பைத் திணிக்க அவளோ “ஏன் கிட்ட எதுக்கு குடுக்கிற ரஞ்சி? எனக்கு அவனைப் பாத்தா திகிலா இருக்குடி” என்று சொல்ல

“அந்தாளு என்ன வேம்பயரா, ட்ராகுலாவா? என்னமோ உன்னைக் கடிச்சு முழுங்கப் போற மாதிரி பயப்படுற? அவரு உக்காந்திருக்கிற போஸை பாத்தியா? செம ஸ்மார்ட்ல” என்று ராகினி சிலாகித்தபடியே மதுரவாணியைக் கேலி செய்ய ஸ்ரீரஞ்சனி அவள் தலையில் நறுக்கென்று கொட்டினாள்.

“வாயை மூடுடி! உன்னால தான் இவ்ளோவும்… இப்போ அவரு மட்டும் கவி அண்ணி கிட்ட நேத்து நடந்ததைச் சொல்லிட்டா அவ்ளோ தான்” என்று தங்கையைக் கடிந்து கொண்டவள் மதுரவாணியை காபியைக் கொடுத்துவிட்டு ஓடிவந்துவிடு என சொல்லி அனுப்பி வைத்தாள்.

மதுரவாணி காபி கப்புடன் ஹாலுக்கு வந்தவள் அவனது முகத்தைக் கூடப் பார்க்காது அவனிடம் நீட்ட அவளை வெட்டும் பார்வை பார்த்தபடியே வாங்கிக் கொண்டான் மதுசூதனன்.

காபியை அருந்தியபடியே “மேம் உங்க சிஸ்டரை இதுக்கு முன்னாடியே எங்கேயோ பாத்த மாதிரி இருக்குது… ஆக்சுவலா நேத்து ஈவினிங் ப்ளூ பேர்ள் ரெஸ்ட்ராண்ட்ல….” என்று இழுத்தவன் சொல்லிவிடவா என்று மதுரவாணியிடம் புருவம் உயர்த்தி வினவ அவளோ

“இந்த வைக்கோல்போர் மண்டைலாம் என்னை மிரட்டுது… இது என்னடா எனக்கு வந்த சோதனை? எனக்கு வர்ற ஆத்திரத்துக்கு இவன் கழுத்தை நெறிச்சுக் கொல்லணும் போல இருக்கு” என்று மனதிற்குள் எண்ணிக் கொண்டாலும் அப்படியெல்லாம் செய்தால் சங்கவி தனது பெட்டி படுக்கையைக் கட்டி மீண்டும் நதியூருக்கு அனுப்பி வைத்துவிடுவாள் என்று யோசித்தபடியே அமைதி காத்தாள்.

மதுசூதனன் காபியை மிடறு மிடறாக அருந்தியவன் கப்பை டீபாயின் மீது வைக்க மதுரவாணி அதை எடுக்க குனிந்த கணத்தில் வேகமாக அவளது காதுக்குள் “ஒழுங்கா நீ செஞ்ச தப்புக்குச் சாரி கேட்டுடு குட்டிபிசாசு” என்று மற்றவர் அறியாவண்ணம் முணுமுணுக்க

மதுரவாணியோ “உண்மையாவே உனக்கு டேலண்ட் இருந்துச்சுனா என் வாயில இருந்து அந்த வார்த்தைய வாங்கு! பாப்போம்” என்றாள் சவாலாக.

எவ்வளவு நேரம் தான் இவனுக்குப் பயந்து நடுங்குவது! ஆனது ஆகட்டும் என்று தைரியமாகக் கேட்டவளை முறைத்தவன் சங்கவியிடம் பேச எத்தனிக்க அப்போது சங்கவிக்குக் கார்த்திக்கேயனிடமிருந்து போனில் அழைப்பு வந்தது.

அதை எடுக்க தயங்கியவாறு விழித்தவளைப் பார்த்த மதுசூதனன் “கால் அட்டெண்ட் பண்ணுங்க மேம்… ரொம்ப நேரமா அடிக்குது பாருங்க” என்று சொல்ல வேறு வழியின்று அழைப்பை ஏற்றுக் காதில் வைத்தவள் “சொல்லு கார்த்தி” என்று பேச ஆரம்பிக்கவே தமையனின் பெயரைக் கேட்டதும் மதுரவாணிக்குத் தூக்கி வாரிப் போட்டது.

அவளோடு சேர்ந்து யாழினியும் கண்ணின் கருமணி வெளியே வந்துவிடுமளவுக்கு விழித்து வைக்க மதுசூதனனின் பார்வை அவர்கள் மூவரையும் ஆராய்ந்துவிட்டு இறுதியாய் மதுரவாணியின் மீது படிந்தது.

மதுரவாணி தன்னை கூர்ந்து நோக்குபவனைக் கவனித்துவிட்டு முகத்தைச் சீர்படுத்திக் கொண்டாலும் அவளது அலைபாயும் கண்களும் படபடக்கும் இமைகளும் அவன் பார்வைக்குத் தப்பவில்லை. நேற்று இவளால் தான் திகைத்து நின்றதை யோசித்துப் பார்த்தவனுக்கு அவளது இந்த அலைக்கழிப்பு நிலை ஏனோ திருப்தியைத் தரவில்லை. மதுரவாணியோ அண்ணன் போனில் என்ன சொல்கிறானோ என்ற பதபதைப்புடன் நோக்கினாள்.

அலை வீசும்🌊🌊🌊