🌊 அலை 7 🌊

மனம் எனும் வெள்ளைக்காகிதத்தில்

அழியா மையால் எழுதப்பட்ட

எழுத்துகளாய் உன் நினைவுகள்..

அழிக்க முற்பட்டுத் தோற்றுப் போகிறேன் நான்!

திருநெல்வேலி

ரேவதி தனக்கும் மகனுக்குமாய் இரவுக்குத் தோசை வார்த்துக் கொள்ளலாம் என்று எண்ணியிருந்தவர் அதற்குக் கொத்துமல்லி சட்னி அரைத்துத் தாளித்துக் கொண்டிருந்த நேரம் ஸ்ரீதரின் ஜீப் வந்து நிற்கும் சத்தம் கேட்டது. பின்னர் ஜீப்பின் கதவைத் திறந்து மூடும் சத்தமும் அதைத் தொடர்ந்து ஷூ அணிந்த கால்களின் சத்தமும் கேட்க சமையலறையிலிருந்து வெளியே வந்தவர் ஹாலுக்குச் சென்றார்.

அங்கே ஹால் சோபாவில் யோசனையுடன் அமர்ந்திருந்த மகனிடம் “யூனிபார்ம் மாத்தாம என்ன யோசனை ஸ்ரீ? எதுவும் சிக்கலான கேசா?” என்று ஆதுரத்துடன் கேட்டபடி அவனருகில் அமர்ந்தார்.

ஸ்ரீதர் அன்னையிடம் இல்லையென தலையசைத்து மறுத்துவிட்டு “எனக்குக் கோயம்புத்தூருக்கு டிரான்ஸ்பர் கிடைச்சிருக்குமா… இன்னும் த்ரீ வீக்ஸ்ல அங்க போய் சார்ஜ் எடுத்துக்கணும்” என்று சொல்ல ரேவதிக்கும் இப்போதைய நிலையில் இந்த இடமாற்றம் நன்மைக்கே என்று தோணியது.

“அதுக்கு ஏன்டா இவ்ளோ யோசிக்கிற?”

“இன்னைக்கு சரவணனும் கார்த்திக்கும் ஆபிசுக்கு வந்திருந்தாங்க… என் கிட்ட மன்னிப்பு கேட்டாங்க… அது இப்போ பிரச்சனை இல்ல… ஆனா மதுரா எங்க தான் போயிருப்பா? அந்தப் பொண்ணு பத்திரமா வீட்டுக்கு வந்துட்டா எனக்குக் கொஞ்சம் நிம்மதியா இருக்கும்மா… இந்தக் கல்யாணம் பத்தி யாரும் பேசாம இருந்திருந்தா அந்தப் பொண்ணு இப்பிடி ஒரு முடிவுக்கு வந்திருக்க மாட்டாளோனு எனக்கு குற்றவுணர்ச்சியா இருக்கு”

மகனது சிகையை வாஞ்சையுடன் வருடிக் கொடுத்தார் ரேவதி. அவன் இடத்தில் வேறு ஒருவன் இருந்திருந்தால் கோபத்தில் கொந்தளித்திருப்பான். ஆனால் அவரது மகனோ ரேவதியின் வளர்ப்பு சோடை போகாது என நிரூபித்துவிட்டான். இம்மாதிரியான இக்கட்டான சூழ்நிலையில் அமைதியும் நிதானமும் தான் அவசியம் என்று அடிக்கடி ரேவதி கூறுவதை அவரது மைந்தன் தனது வாழ்வின் முதல் இக்கட்டில் கடைபிடித்ததை எண்ணி அவருக்குச் சந்தோசமே!

ஆனால் இங்கேயே இருந்தால் யாராவது மதுரவாணி பேச்சை எடுத்து அவனை கவலைப்பட வைப்பர் என்பதால் இந்த இடமாற்றத்தைக் கடவுள் கொடுத்த வாய்ப்பாக எண்ணினார் அவர்.

அவரது மைந்தனுக்கோ அன்னையின் கனவு கானலாகிப் போனதில் அவர் மனம் வருந்துகிறாரோ என்ற கலக்கம். ஆனால் அவர் ரத்தினவேல் பாண்டியனும் சங்கரபாண்டியனும் வந்து சென்ற விவரத்தைக் கூறினார்.

“நம்ம நினைக்கிறதுலாம் நடக்காது ஸ்ரீ… கடவுள் வேற என்னவோ தீர்மானிச்சிட்டாரு போல… மதுரவாணி என் மருமகளா வரக் கூடாதுனு விதி… அதுக்குத் தான் இப்பிடிலாம் நடந்திருக்கு… அந்தப் பொண்ணு எந்த ஆபத்துலயும் சிக்கிக்க கூடாதுனு தான் நான் திருச்செந்தூர் முருகன் கிட்ட வேண்டிருக்கேன்… அவ சீக்கிரமே கிடைச்சிடணும்”

அன்னையும் தன்னைப் போலவே தான் மனதில் எண்ணுகிறார் என்பது தெரிந்த்தும் நிம்மதியுற்றான். தந்தையின் மறைவுக்குப் பின்னர் அவருக்கென எந்த வித ஆசாபாசங்களையும் சிந்திக்காது மகன் மட்டுமே தனது வாழ்வு என அவனுக்காக தான் அவர் அனுதினமும் யோசிக்கிறார். அப்படிப்பட்ட தாயின் மனம் வருந்தினால் தனயனுக்குப் பொறுக்காது அல்லவா?

அவரை இப்போதைய சோகமான மனநிலையிலிருந்து மாற்ற விரும்பியவன் உடையை மாற்றிவிட்டு அவருக்கு உதவியாகத் தோசை சுடுகிறேன் என சமையலறைக்குள் புகுந்துகொள்ள மகன் அடித்த லூட்டியில் ரேவதி மெதுவாக இயல்புக்குத் திரும்பினார்.

அதே நேரம் மதுரவாணியின் இல்லத்தில் முழுக்குடும்பமும் மௌனமாய் இரவுணவை விழுங்கிக் கொண்டிருந்தனர். மதுரவாணி ஊரை விட்டுச் சென்ற சம்பவத்துக்குப் பின்னர் மொத்தக் குடும்பமும் மௌனத்திலே தான் உழன்றனர். சங்கரபாண்டியன் அன்றைய தினத்திலிருந்து மனைவியுடன் அங்கேயே தங்கிவிட்டார்.

இன்றைய தினம் இரவுணவின் போது கார்த்திக்கேயன் தந்தையிடம் “நம்ம சொந்தகாரங்க வீட்டுல விசாரிப்போமாப்பா? ஸ்ரீதர் சார் தான் சொன்னாரு” என்று மெதுவாய் பேச்சை எடுக்க

“என்ன மாப்பிள்ளை நீங்க? அம்புட்டுப் பயலுவளும் நம்ம மேல எரிச்சல்ல திரியுறானுவ… இப்போ நம்ம வீட்டுப்பொண்ணு காணாம போயிட்டானு தெரிஞ்சா நாக்கு மேல பல்லு போட்டு எகத்தாளமா பேசுவானுவ.. அதுலாம் சரிப்படாதுய்யா” என்று சங்கரபாண்டியன் ரத்தினவேல் பதில் சொல்லும் முன்னர் முந்திக்கொண்டு பதிலளிக்க அவரது பதிலில் சரவணன், கார்த்திக்கேயனோடு அழகம்மைக்கும் விருப்பமில்லை.

காணாமல் போன பெண்ணைத் தேடும் நேரத்தில் என்ன கௌரவம் வேண்டியது இருக்கிறது என்ற எரிச்சல் அவருக்கு. தனது எரிச்சலை வார்த்தைகளில் கொட்டத் தொடங்கினார் அம்முதியப்பெண்மணி.

“அக்கப்போரு பிடிச்ச நாயி வக்கப்போருல உக்காந்துட்டு தானும் திங்காதாம், திங்கிற மாட்டையும் திங்க விடாதாம்… அந்தக் கதையால்ல இருக்கு! என் பேத்தி காணாம போயி இன்னையோட முழுசா ஒரு நாள் முடிஞ்சு போச்சு… இன்னும் ஒரு தகவலும் வரல… இப்போவும் கௌரவத்தை இழுத்துப் பிடிச்சு என்ன செய்யப் போறிய மருமகனே? ஏலே சரவணா! நீ நம்ம சொந்தக்காரப்பயலுவ வீட்டுக்குப் போனை போட்டு விசாரில… எனக்கு என் தங்கத்த பாத்தா தான் மனசு ஆறும்”

அதற்குப் பின்னர் யாரும் மூச்சு விடவில்லை. அழகம்மையின் வார்த்தைக்கு என்றைக்குமே மரியாதை அளிக்கும் அவரது மகனும் மருமகனும் இம்முறையும் அப்பெண்மணியின் கோபத்துக்கு முன்னர் அமைதியாகிப் போயினர். அவர் சொன்னபடியே சரவணனும் கார்த்திக்கேயனும் உறவினர் வீடுகளுக்குப் போன் செய்ய ஆரம்பித்தனர்.

அழகம்மை மகனை நோக்கியவர் “எய்யா! அப்பிடியே நீ சோறு போட்டு சம்பளம் குடுத்து வச்சிருக்கியே அந்த தடியனுங்கள வச்சு திருநெல்வேலி பூரா தேடச் சொல்லுயா… இனிமேலயாச்சும் அவனுங்க உருப்படியா வேலை செய்யட்டும்” என்று ரத்தினவேல் பாண்டியனது கையாட்களுக்கு ஒரு குட்டு வைத்துவிட்டுத் தனது அறையை நோக்கிச் சென்றார்.

இவ்வளவையும் கேட்டுக்கொண்டு வீட்டின் பெண்மணிகள் நால்வரும் மௌனம் மட்டுமே காத்தனர். கல்லூரி முடித்தப் பின்னர் முழுநேரமும் மதுரவாணி அம்மா முந்தானையைப் பிடித்தவண்ணம் வீட்டுக்குள் அங்குமிங்கும் அலைந்து திரிந்தபடியே கொட்டமடிப்பாள். அழகம்மையிடம் வம்பிழுப்பாள்.

மதினிகளிடம் அவர்களின் அப்பாவித்தனத்தைச் சுட்டிக்காட்டி ஆதங்கப்படுவாள். அத்தையிடமோ “இவ்ளோ அப்பாவியா ரெண்டு பொண்ணுங்களயும் வளத்து வச்சிருக்கிங்களே அத்தை… டூ பேட்” என்று வாதாடுவாள்.

இவ்வளவையும் செய்து வீட்டைக் கலகலப்பாய் வைத்திருப்பவள் மாயமானது வீட்டை அமைதியிலும் சோகத்திலும் ஆழ்த்திவிட்டது. இப்போது அவர்களால் முடிந்தது பெருமூச்சு விடுவது மட்டுமே.

***********

லவ்டேல்

ப்ளூ பேர்ளில் இருந்து வாங்கி வந்த உணவை இரவுக்கு உண்டுவிட்டு சங்கவியும் யாழினியும் தங்களது ஆர்டருக்கான திட்டமிடுதலில் ஈடுபட குட்டீஸ்களை ஸ்ரீரஞ்சனி கதை சொல்லி உறங்கவைத்தாள்.

அதன் பின்னர் மதுரவாணி தங்கியிருக்கும் மாடியறைக்கு வந்தவள் அவளும் ராகினியும் வயிறு வலிக்கச் சிரித்துக் கொண்டிருப்பதைக் கேட்டுவிட்டுக் கடுப்பானாள். பின்னே என்னவாம்! மாலையில் ப்ளூ பேர்ளில் இருந்து திரும்பியதிலிருந்து இருவருக்கும் அங்கே மதுரவாணி செய்துவிட்டு வந்த கலாட்டாவும் அந்த வாலிபனின் முகபாவனைகளும் தான் பேச்சுப்பொருளாக மாறிவிட்டிருந்தன.

ஸ்ரீரஞ்சனிக்கு முன்னே பின்னே தெரியாத அவனை எண்ணிப் பாவமாக கூட இருந்தது. ஆனால் இந்த இரு பெண்களும் அவனைக் கேலி செய்து சிரிக்கிறார்களே என்ற ஆதங்கம் உள்ளுக்குள் எழவும் கடுகடுத்த முகத்துடன் அவர்கள் முன்னே சென்று பிரசன்னமானாள் அவள்.

“ஏய்! என்ன கெக்கபிக்கனு சிரிக்கிறிங்க? இப்பிடி சிரிக்கிற அளவுக்கு என்ன நடந்துடுச்சு? ஒன்னும் தெரியாத ஒரு பையனை அவன் தங்கச்சி கிட்ட மாட்டிவிட்டு வீட்டுல டோஸ் வாங்க வச்சதுல அவ்ளோ சந்தோசமா? மது! சிரிக்காத”

“சரிடி! நான் சிரிக்கல… ஆனா நீ என்னவோ என் மேல தான் தப்புங்கிற மாதிரி பேசறியே ரஞ்சி? ஆக்சுவலா இன்னைக்கு நான் பொய் சொன்னேனு எனக்கும் தெரியும்; அந்த வளந்த மனுசனுக்கும் தெரியும். அப்பிடி இருந்தும் ஏன் அவன் சைலண்டா இருந்தான்? அது அவன் பண்ணுன தப்பும்மா! அதுக்கு நான் என்ன பண்ண முடியும்?” என்று தோளைக் குலுக்கிய மதுரவாணிக்கு ராகினி ஹைஃபை கொடுக்க அடுத்தச் சில நிமிடங்களில் இருவரது தலைக்கும் ஸ்ரீரஞ்சனியின் தளிர்க்கரத்தால் குட்டுகள் பரிசாக அளிக்கப்பட்டது.

இருவரும் தலையைத் தடவிக்கொண்டபடி பல்லைக் கடிக்க கேலியாக அவர்களை நோக்கிய ஸ்ரீரஞ்சனி “இது தான் லாஸ்ட் வார்னிங்… நீ இந்தக் கலாட்டா பண்ணுன நேரம் அக்காவும் அண்ணியும் குட்டீசைப் பார்க்ல விளையாட விடப் போனதால அவங்களுக்கு இது எதுவும் தெரியாது… ஆனா இனியும் இப்பிடி குட்டிக்கலாட்டா பண்ணி யாரையும் மாட்டிவிட டிரை பண்ணுனிங்கனா நான் அவங்க கிட்ட சொல்லிடுவேன்” என்று மிரட்டவே இருவரும் நல்ல பெண்களாக இனி இப்படி நடந்து கொள்ள மாட்டோம் என வாக்களித்தனர்.

அதன் பின்னர் ஸ்ரீரஞ்சனி மதுரவாணியின் குடும்பத்தினரைப் பற்றிய பேச்சை எடுக்க அவளது முகம் கலங்கிவிட்டது. அவளுக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து அவள் குடும்பத்தினரைப் பிரிந்திருந்ததில்லை. பகல் பொழுதில் ஆங்காங்கே வேடிக்கை பார்த்தபடி சுற்றியதில் வீட்டு நினைவு வரவில்லை. ஆனால் இப்போது ஸ்ரீரஞ்சனி பேச ஆரம்பிக்கவும் மனதுக்குப் பாரமாக இருந்தது அவளுக்கு.

“நான் எல்லாரயும் ரொம்ப மிஸ் பண்ணுறேன் ரஞ்சி! ஆனா அவங்க நான் சொல்லுறத கேக்கவே இல்லயே! எனக்கு அந்த டிசிபிய கல்யாணம் பண்ணிக்க விருப்பமில்லனு எத்தனை தடவை சொல்லிருப்பேன்? அப்பாவுக்கு நான் இன்னும் சின்னப்பிள்ளை; அம்மா கிட்ட சொன்னா ஆம்பளைங்க ஒரு முடிவெடுத்ததுக்கு அப்புறம் நம்ம எதிர்த்துப் பேசுறது தப்புனு சொல்லுவாங்க… அண்ணனுங்க ரெண்டு பேருக்கும் ஹையர் ஆபிசர் வீட்டுமாப்பிள்ளையா வரப் போற சந்தோசத்துல என் பேச்சு காதுலயே விழலை…

மாமா டிசிபியே வீட்டுக்கு மாப்பிள்ளையா வந்ததுக்கு அப்புறம் இனிமே தைரியமா கட்டப்பஞ்சாயத்து பண்ணலாம்னு கணக்கு போட்டாரு… மதினிங்க ரெண்டு பேரும் வாயில்லாப் பூச்சி… அழகி மட்டும் தான் எனக்காக பேசும்…. ஆனா அழகிக்கே ஸ்ரீதரை ரொம்ப பிடிச்சுப்போச்சு… நான் என்ன தான் பண்ணுறது? வேற வழி இல்லாம தான் இந்த முடிவுக்கு வந்தேன்… இன்னும் கொஞ்சநாள் தான் ரஞ்சி… அதுக்கு அப்புறம் விக்கி சொன்ன மாதிரி எனக்கு ஜாப் அரேஞ்ச் பண்ணிடுவான்… நான் உண்டு என் வேலை உண்டுனு இருப்பேன்…. அடுத்தவங்க பிரச்சனைக்குப் போகவே மாட்டேன்டி”

எதிர்காலம் குறித்த எதிர்ப்பார்ப்புகளுடன் உரைத்தவளை ஸ்ரீரஞ்சனி ஆதுரத்துடன் பார்த்துக் கொண்டிருந்தாள். தோழியின் கரத்தைப் பற்றியவள் “டிசிபி வேண்டாம்டி… வேற யாராச்சும் நல்ல மாப்பிள்ளையா பாத்து…..” என்று இழுக்க நிறுத்து என்பது போல கை காட்டினாள் மதுரவாணி.

“எனக்குக் கல்யாணம் பண்ணிக்கிறதுல துளி கூட இஷ்டமில்ல ரஞ்சி… நான் இப்பிடியே இருந்துடுறேன்டி… உனக்கு என்னைப் பத்தி நல்லாவே தெரியும் தானே! என்னோட பிடிவாதக்குணத்த அட்ஜஸ்ட் பண்ணிட்டுப் போற பொறுமையுள்ளவன் இன்னும் இந்த பூமில பிறக்கல… இனிமே பிறந்தாலும் அவன் என்னை விட இருபத்திநாலு வயசு சின்னப்பையனா இருப்பான்… அவ்ளோ ஏஜ் கேப்ல மேரேஜ் பண்ணிக்கிறது நல்லாவா இருக்கும்?” என்று தீவிரக்குரலில் ஆரம்பித்து கேலியாய் முடித்தாள் மதுரவாணி.

ஸ்ரீரஞ்சனியும் கேலியாய் “எது எப்பிடியோ? இன்னைக்கு உன்னால ஒரு ஜீவன் வீட்டுல தர்ம அடி வாங்கிட்டிருக்கும்… அதை நினைச்சா தான் கவலையா இருக்கு” என்று சொல்லிவிட்டு உச்சுக் கொட்ட

“ரஞ்சிக்கா! என்ன தான் அந்த வளந்த மனுசனோட தங்கச்சி போட்டுக் குடுத்தாலும் எல்லா வீட்டுலயும் இருக்கிற மாதிரி அவனுக்கு அம்மா சப்போர்ட் இருக்கும்… சோ தப்பிச்சிடுவான்… ஆனா ஒன்னு! இனிமே ஜென்மத்துக்கும் அவன் உன்னை மறக்க மாட்டான் மதுக்கா” என்றாள் ராகினி கேலியாக.

மதுரவாணி இல்லாத காலரைத் தூக்கிவிட்டுப் பெருமைப்பட்டவாறே “பின்ன மதுரானா சும்மாவா? அவனுக்கு எவ்ளோ திமிரு இருந்தா என்னைப் பாத்து குட்டிப்பிசாசுனு சொல்லுவான்? நல்லா அவஸ்தை படட்டும்!” என்று குதூகலித்தாள்.

அவள் செய்த குறும்புத்தனமான செய்கை எத்தகைய அனர்த்தங்களை மதுசூதனனின் வாழ்வில் உண்டு பண்ணப் போகிறது என்பதை அறியாதவளாய் அவள் உற்சாகமாய் தோழிகளிடம் அரட்டை அடிக்க ஆரம்பித்தாள்.

ஆனால் மதுசூதனன் இதற்கு எதிர்மாறாக கோபத்துடன் அவனது அறையில் உலாவிக் கொண்டிருந்தான். இன்று மட்டும் தான் அவனுக்கு இரண்டு விதமான அதிர்ச்சிகள். ஒன்று காலையில் சந்தித்த இரயில் நிலைய தாவணிப்பெண், காரணமேயின்றி அவளது உருவம் மனதில் அதிர்வை உண்டாக்கிவிட்டுப் பதிந்து போனது. இரண்டாவது ரெஸ்ட்ராண்டில் அவன் சந்தித்த குட்டிப்பிசாசு. அவள் சொன்ன சரளமான பொய்கள் அவனுள் அதிர்வை உண்டாக்கியதோடு அவளது கரங்கள் மற்றும் தோளின் ஸ்பரிசத்தில் மெய் மறந்தது தான் அவனுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியே!

இப்போது அவனது கோபம் முன் பின் தெரியாத ரெஸ்ட்ராண்டில் சந்தித்த அந்தக் குட்டிப்பிசாசின் மீதா அல்லது தனுஜா மீதா என்று கேட்டால் தயக்கமின்றி தனுஜா மீது தான் என்று ஒத்துக்கொள்வான்.

தான் எப்படிப்பட்டவன் என்பதை அனுபவத்தில் அறிந்திருந்தும் யாரோ ஒருத்தி வந்து உளறியதை நம்பிக்கொண்டு மாலையிலிருந்து இப்போது வரை அவனது ஒரு தொலைபேசி அழைப்புகளைக் கூட ஏற்காது புறக்கணித்தவள் மீது அவனுக்குக் கடுஞ்சினம் பொங்கியது. அத்தோடு இது தான் சாக்கு என்று சங்கரநாராயணன் அவனது அழைப்பை ஏற்று வெறுப்பேற்றவும் கொதிநிலைக்கே சென்று விட்டான் மதுசூதனன்.

“மை டியர் யங் மேன்! இனியாச்சும் என் பொண்ணுக்கு மனுசங்களோட தராதரம் பாத்துப் பழகணும்னு புரிஞ்சிருக்கும்… இனிமே தனுக்குக் கால் பண்ணி அவ நிம்மதிய ஸ்பாயில் பண்ணாதப்பா… அவளுக்கு உன் கிட்ட பேச இஷ்டமில்லயாம்… இப்போ தான் அவ ஃப்ரெண்ட் சனா வந்திருந்தா… ரெண்டு பேரும் அஜய் குடுக்கிற பார்ட்டிக்குப் போயிருக்காங்க” என்று சொல்லிவிட்டு அவனது பதிலுக்குக் காத்திராமல் போனை வைத்துவிட்டார் அவர்.

அதன் பின்னர் தான் மதுசூதனனுக்கு ஆத்திரம் மிகுந்தது எனலாம். தான் இங்கே தனுஜாவுக்கு என்னவாயிற்றோ என்று எண்ணிப் பதறிக் கொண்டிருக்க அவளோ சாவகாசமாய் பார்ட்டிக்குக் கிளம்பிப் போனது, அதிலும் எந்த சனாவுடன் அவன் பழக வேண்டாமென எச்சரித்தானோ அதே சனாவுடன், எந்த அஜய்யுடன் தனுஜாவின் திருமணம் நடைபெற வேண்டுமென சங்கரநாராயணன் விரும்புகிறாரோ அதே அஜய்யின் பார்ட்டிக்குச் சென்றது தான் மதுசூதனனுக்குக் கிஞ்சித்தும் பிடிக்கவில்லை.

ஆரம்பத்திலிருந்தே சனாவுக்கு மதுசூதனன் மீது பெரிதாய் மரியாதை ஒன்றுமில்லை. ஆடியும் பென்ஸுமாய் பார்த்தவளுக்கு தனுஜாவின் காதலனது ரெனால்ட் க்விட் கேலியாகத் தெரிந்ததில் ஆச்சரியம் எதுவுமில்லை.

மதுசூதனனுக்குத் தனது அந்தஸ்து செல்வாக்கின்மையைச் சுட்டிக்காட்டிப் பழகுவது சற்றும் பிடிக்காது. மனிதர்களுக்கிடையேயான உறவு அன்பை அடிப்படையாக வைத்துத் தான் அமைய வேண்டுமேயன்றி அந்தஸ்தினால் அமையக் கூடாது. மாறாக அதன் அடித்தளம் அந்தஸ்தால் அமைக்கப்படுமாயின் அந்த உறவு என்றைக்கு வேண்டுமானாலும் பலகீனமாய் மாறி உடைந்துவிடும் அபாயம் உள்ளது என்பது அவனது நம்பிக்கை.

எனவே தான் சில முறை உயர்வகுப்பு என தனுஜா மார் தட்டிக்கொள்ளும் போது மதுசூதனனுக்குப் பிடிப்பதில்லை. அதே காரணங்களுக்காகத் தான் சங்கரநாராயணன் மற்றும் சனாவிடம் அவன் அதிகம் பேச்சுவார்த்தை வைத்துக்கொள்வது இல்லை.

இப்போதும் தன்னை நம்பாதவளிடம் சென்று பேச அவனுக்குக் கிஞ்சித்தும் விருப்பமில்லை. ஆனால் அவர்களுக்கிடையேயான மூன்றாண்டு நட்புக்கும், தன் மீது அவள் வைத்திருக்கும் கண்மூடித்தனமான காதலுக்கும் மதிப்பளித்தே அவளிடம் பேச பகீரத பிரயத்தனம் செய்து கொண்டிருந்தான். ஆனால் சம்பந்தப்பட்டவள் பார்ட்டி கொண்டாடச் சென்ற பின்னர் இனி தான் மட்டும் ஏன் இவ்வளவு மெனக்கிட வேண்டும் என அலட்சியத்துடன் ரெஃப்ரெஷ் ஆகச் சென்றான் அவன்.

குளித்து முடித்து உடை மாற்றிவந்தவன் அவனது அறையின் பால்கனியில் அவனுக்காக காத்திருக்கும் அன்னையைக் கண்டதும் இன்று தனது மனபாரம் முழுவதையும் அவரிடம் இறக்கிவைத்துவிட வேண்டும் என்ற முடிவுடன் மைதிலியிடம் பேச சென்றான்.

ஏனெனில் இவ்வுலகில் அனைத்துத் துன்பங்களையும் போக்கும் அன்பை அன்னையின் மடியிலும், தந்தையின் மார்பிலும். நண்பனின் தோளிலும் சாயும் போது உணர முடியும்.

அலை வீசும்🌊🌊🌊