🌊 அலை 5 🌊

திடுமென இடி முழங்கி

மின்னல் வெட்டிப் பெய்த

கோடை மழையே!

புயலாய் வீசியெனை

வேரோடு சாய்த்தவளே!

யாரடி நீ தேவதையே!

மதுரவாணியோடு சேர்ந்து ஊட்டிக்கு ஷாப்பிங் வந்திருந்தனர் யாழினியும் சங்கவியும். கூடவே குட்டீஸ்களும், ஸ்ரீரஞ்சனி, ராகவியும் அடக்கம். முதலில் மதுரவாணி பிடிவாதம் பிடித்தபடி அழகுநிலையத்துக்குள் நுழைந்தனர் அனைவரும்.

சங்கவி மட்டும் அவளுடன் நின்றிருந்தாள். அழகுநிலையப்பெண் மதுரவாணியின் நீளக்கூந்தலை தோள் அளவுக்கு வெட்ட ஆரம்பித்த போது சங்கவிக்கு ரத்தக் கண்ணீர் வராத குறை தான். இந்த நீளக்கூந்தலுக்கு அழகம்மை ஆச்சி குளித்ததும் சாம்பிராணி போட்டு உலர்த்திய தினங்கள் எல்லாம் கண் முன்னே வந்து சென்றது.

இப்பொது கழுத்தளவில் நின்ற கூந்தலுடன் பொம்மை போல பார்க்க அழகாய் தான் இருந்தாள் மதுரவாணி. இருந்தாலும் அவளது அக்கா சங்கவிக்கு எவ்வளவு நீளக்கூந்தலை சுலபமாய் வெட்டித் தள்ளிவிட்டாள் என்ற ஆதங்கம் சிறிதும் குறையவில்லை.

இந்தப் பெண் எது குறித்தும் கவலைப்பட மாட்டாளா என்ற ஆயாசமும் கூட சேர்ந்து கொண்டது. கூந்தல் வெட்டியப் பின்னர் வேறு ஏதேனும் செய்ய வேண்டுமா என்று கேட்க ஷாம்பு வாஷ் மட்டும் செய்யும்படி சொல்லிவிட்டாள் மதுரவாணி. எல்லாம் முடியவே கட்டணம் செலுத்திவிட்டு அனைவரும் வெளியே வந்தனர்.

அப்போது யாழினிக்கு மொபைலில் அழைப்பு வந்தது. அழைப்பை ஏற்றவளின் முகம் ஆயிரம் வாட்ஸ் பல்பு எரிந்தது. யார் பேசினார்களோ என்று தெரியவில்லை. ஆனால் பேசி முடித்ததும் யாழினியின் முகத்தில் அவ்வளவு சந்தோசம். சங்கவியைக் கட்டியணைத்தவள்

“ஹில்டாப்போட பார்ட்னர் தான் பேசுனாரு கவி! இப்போ அவரு ஊட்டில தான் இருக்காராம்… அவரை மீட் பண்ண த்ரீ ஓ கிளாக் ப்ளூ பேர்ல் ரெஸ்ட்ராண்டுக்கு வர முடியுமானு கேட்டாரு… நான் சரினு சொல்லிட்டேன்” என்று சொல்ல சங்கவிக்குச் சந்தோசத்தில் தலை கால் புரியவில்லை. அந்த ஆர்டர் அவர்களது தொழில் வாழ்க்கையில் ஒரு மைல் கல். ஏனெனில் அது யார் வீட்டுத் திருமணம் என்பதை ஏற்கெனவே அறிவார்கள்.

எனவே மூன்று மணி வரை ஊட்டிக்குள் சுற்றுவோம் என்று முடிவெடுத்தனர் அனைவரும். ராகினி அவர்களிடம்,

“உங்களுக்குப் பெரிய ஆர்டர் கிடைக்கப் போகுது… சோ இதைக் கண்டிப்பா செலிப்ரேட் பண்ணியே ஆகணும்… நம்ம லஞ்சை குயின்ஸ் லேண்ட்ல முடிச்சிடுவோம்… செலவு எல்லாம் கவி அண்ணி பாத்துப்பாங்க… ஈவினிங் ப்ளூ பேர்ல் ரெஸ்ட்ராண்ட்ல ஸ்னாக்ஸ் சாப்பிட்டுட்டு அங்கேயே டின்னருக்கும் ஏதாவது வாங்கிட்டுப் போவோம்… அதுக்கு யாழிக்கா காசு குடுப்பா… எப்பிடி என் அறிவு?” என்று திட்டமிட்டுவிட்டுக் கேட்க அனைவருக்கும் அதில் சம்மதம்.

ராகினி சொன்னபடி மதியவுணவுக்கு ஹோட்டல் குயின்ஸ் லேண்ட் ஹோட்டலுக்குச் செல்ல ஆயத்தமாயினர்.

**************

அழுது அழுது மூக்கு, கண்கள், முகமெல்லாம் சிவந்து போயிருந்தது தனுஜாவுக்கு. இந்த உலகில் அவளால் தாங்கிக் கொள்ள முடியாத ஒரு விசயம் உண்டென்றால் அது மதுசூதனனின் கோபமும் பாராமுகமும் மட்டுமே! அவளுடைய காதலுக்கு வயது கிட்டத்தட்ட மூன்று வருடங்கள். ஆம்! கல்லூரியில் முதல் நாள் அவனைப் பார்த்த முதல் நொடியே அவன் மீது காதலில் விழுந்தவள் அவள்.

அவனிடம் தோழமையாகப் பழகி அவனிடம் தனது காதலை சொல்வதற்கு அவளுக்கு மூன்று ஆண்டுகள் ஆனது. ஆனால் அடிக்கடி அவளது உரிமையுணர்வு அவளது காதலின் வலிமையை அசைத்துப் பார்த்தது. தனுஜாவைப் பொறுத்தவரைக்கும் மதுசூதனனை வேறு பெண்கள் எதேச்சையாகப் பார்த்தால் கூட அவர்களிடம் சண்டையிடுபவள்.

கூடவே மற்ற ஆண்களைப் போல காதலிக்கும் போதே மதுசூதனன் தன்னிடம் உரிமை எடுத்துப் பழக வேண்டுமென விரும்புபவள். அப்படி பழகினால் தான் காதல் என்று அவளுடன் சுற்றும் தோழிகள் அவள் மூளையில் பதிய வைத்திருந்தனர்.

ஆனால் மதுசூதனனைப் பொறுத்தவரை காதலியாகவே இருந்தாலும் திருமணத்துக்கு முன்னர் தனுஜாவிடம் உரிமையாகப் பழகுவது அவனுக்கு ஏனோ அசௌகரியமாக இருந்தது. வளர்ந்த சூழல், பழக்கவழக்கங்கள் கூட அதற்கு காரணமாக இருக்கலாம்.

அது தான் தனுஜாவின் அலைக்கழிப்புக்குக் காரணமாக இருந்தது. தோழிகள் எல்லாம் தனது காதலர்களுடன் அங்கே சுற்றினேன்; இங்கே சுற்றினேன் என சொல்லும் போது விரல் கூட தீண்டாது பழகும் மதுசூதனனின் காதல் மீது அவளுக்கு நம்பிக்கை வர மறுத்தது.

இந்தக் காலத்தில் திருமணத்துக்கு முன்னர் சேர்ந்து வாழ்வதே பெருநகரங்களில் சாதாரணமாகிவிட்டது; ஆனால் அவன் ஒரு முத்தம் தர கூட மறுக்கிறான், தன்னையும் தர விடுவதில்லை என அவள் குறைபடும் போதே மதுசூதனன்

“என்னோட சரவுண்டிங்ல அப்பிடி யாரும் ரொம்ப கேஷுவலா பழக மாட்டாங்க தனு! நீ என்னோட ஒய்பா ஆனதுக்கு அப்புறம் உன் கிட்ட என்னால உரிமையோட நடந்துக்க முடியும்… அது வரைக்கும் லவ் பண்ணுனாலுமே நம்ம தேர்ட் பெர்சன்ஸ் தான்” என்று நிர்தாட்சணியமாக மறுத்துவிடுவான்.

இதைத் தோழியரிடம் சொன்னால் “நீ மூனு வருசமா பின்னாடியே சுத்துறியேனு பாவப்பட்டு அவன் ஆறு மாசத்துக்கு முன்னாடி உன் பிரபோசலை ஏத்துக்கிட்டிருப்பான் போல… அவன் மனசளவுல உன்னை காதலிக்கவே ஆரம்பிக்கல தனு…. அதான் டிஸ்டன்ஸ் மெயிண்டெயின் பண்ணுறான்” என்று சொல்லி அவளை உசுப்பேற்றிவிடுவர்.

அதனாலேயே மதுசூதனன் விசயத்தில் தனுஜாவுக்கு நம்பிக்கை வர மறுத்தது. இன்னும் தன் மீதான காதல் அவனது மனதை வியாபிக்காத நிலையில் எந்நேரம் வேண்டுமானாலும் தங்களுக்குள் இன்னொருத்தி வந்து விடுவாள் என்ற பயம் அவளுக்குள் எப்போதும் உருண்டு கொண்டே இருக்கும். அந்தப் பயம் தான் இன்றைய தினம் யாரோ ஒரு பெண்ணின் துணி கிழிசலை அவனது கைக்கடிகாரத்தில் பார்த்ததும் கோபத்தில் கொந்தளித்துவிட்டாள்.

கைக்கடிகாரம் அவனுக்கு இவ்வளவு முக்கியமானதா என்ன? அப்பாவிடம் கேட்டால் வேறு ஒன்று வாங்கித் தரப் போகிறார். இதற்கு அவளிடம் இவ்வளவு கோபத்துடன் நடந்து கொள்ள வேண்டுமா? அவனது கோபம் அவளது சந்தேகத்தை இன்னுமே ஊர்ஜிதப்படுத்துவது போல தானே உள்ளது! ஆனால் அப்படியே விட்டுவிட்டால் தங்களின் காதல்(?) ஆரம்பநிலையிலேயே முறிந்துவிட வாய்ப்பு அதிகம் என்பதை உணர்ந்தவள் உடனே அவனை சமாதானப்படுத்தி மன்னிப்பு கேட்க விரும்பினாள்.

கண்ணீரைத் துடைத்துவிட்டு மதுசூதனனை போனில் அழைக்கத் தொடங்கினாள் அவள். முதல் இரண்டு அழைப்புகளைத் துண்டித்துவிட்டு மூன்றாவது அழைப்பை ஏற்றவனின் ஹலோவில் மறைந்திருந்த கோபம் அவளுக்குப் புரியாமல் இல்லை.

“சாரி மது! நான் வேணும்னே பண்ணலடா… எனக்கு உன்னை யாராவது என் கிட்ட இருந்து பிரிச்சிடுவாங்களோனு பயமா இருக்கு மது… என்னால நீ இல்லாத ஒரு லைபை நினைச்சுப் பாக்கவே முடியாதுடா… ப்ளீஸ் டிரை டு அண்டர்ஸ்டான்ட் மீ…. அந்த வாட்ச் அங்கிள் வாங்கிக் குடுத்ததுனு தெரியாதுடா… என் கிட்ட கோவப்படாத மது… நீ என்னை இக்னோர் பண்ணுனா எனக்குச் செத்துடலாம் போல இருக்கு”

பேச்சின் இடையில் கதறியழுதவளின் குரல் அவனை ஏதோ செய்ய மெதுவாய் மலையிறங்கத் தொடங்கினான் மதுசூதனன். அவள் ஏன் தன்னை நம்ப மறுக்கிறாள் என்ற ஆதங்கம் இன்னும் மனதின் ஒரு மூலையில் முரண்டிக் கொண்டிருந்தது.

அவளைப் போல எல்லையற்று காதலிக்கத் தெரியாதவன் அவன். தான் தோழியாக எண்ணிப் பழகியவள் தன்னை மூன்றாண்டுகள் காதலித்த விசயத்த ஆறு மாதங்களுக்கு முன்னர் கேள்விப்பட்ட தருணத்தில் அவன் மனதில் மெல்லிய ஆச்சரியத்துடன் ஒரு பெண்ணின் காதல் கிடைக்குமளவுக்குத் தான் தகுதியானவன் என்ற சந்தோசமும் உண்டானது.

அவன் தந்தை அடிக்கடி சொல்லுவார், மற்றவர்களின் அன்பை ஜெயிப்பது ஒன்றும் சுலபமல்ல. தன்னலமற்ற அன்பு எங்கிருந்தாவது கிடைத்தால் அதற்குரிய மரியாதையைத் தரவேண்டுமே தவிர அன்பு காட்டுபவர்களை எள்ளி நகையாடக் கூடாது என்று. தனுஜாவின் மூன்றாண்டு காதல் விவகாரத்தை அவள் வாயால் கேட்ட போது அவளது தன்னலமற்ற காதலும் அப்படிப்பட்ட ஒன்று தானே என எண்ணிக் கொண்டான்.

எப்படியும் தான் யாரோ ஒருத்தியை மணமுடித்துத் தான் ஆகவேண்டும். அந்த யாரோ ஒருத்தி தன்னை உயிருக்குயிராய் காதலிக்கும் தனுஜாவாக இருந்தால் ஒன்றும் பெரிய தவறில்லை என்பது சராசரி ஆணாக அவனது எண்ணம். மூன்றாண்டு தோழமை மீது வைத்த நம்பிக்கையில் அவளை வாழ்க்கைத்துணையாக ஏற்றுக்கொள்ள அவன் தயாரானான். ஆனால் இதில் அவனது தாயாருக்கும் நண்பருக்கும் பிடித்தமில்லை என்பதும் அவனுக்குத் தெரியும்.

“தனு என் மேல இவ்ளோ லவ் வச்சிருக்காளே, அப்போ என்னோட அம்மா அப்பா மேலயும் இதே அன்பு, அக்கறையைக் காட்டுவாடா… எனக்கு அவ மேல நம்பிக்கை இருக்கு” என்று சொல்லி அவர்களின் வாயை அடைத்துவிட்டான். அவனது தாயாருக்கு இன்று வரை தனுஜா மீது பெரிதாய் விருப்புமில்லை; வெறுப்புமில்லை.

அதே நேரம் தனுஜா அளவுக்குத் தன்னால் கண்மூடித்தனமாக காதலிக்க முடியாது என்று அவளிடம் ஏற்கெனவே தெரிவித்த போது “உனக்கும் சேர்த்து நான் உன்னை வாழ்க்கை முழுக்க லவ் பண்ணுவேன் மது! நீ என் கிட்ட காதலை எப்போ உணர்றியா அப்போ சொல்லு… ஆனா அது வரைக்கும் என்னால உன்னை அப்பா கிட்ட இன்ட்ரடியூஸ் பண்ணாம இருக்க முடியாது” என்றவள் அன்றைய தினமே அவளது தந்தை சங்கரநாராயணனிடம் அவனை அறிமுகப்படுத்தினாள்.

அவளது தந்தை ஒன்னும் சாமானியப்பட்ட மனிதர் அல்ல. தமிழகத்தின் மிகப்பெரிய நகைக்கடை அதிபர்களில் ஒருவர். அப்படிப்பட்டவரின் மருமகன் ஒரு சாதாரண நடுத்தரவர்க்கத்தைச் சேர்ந்தவன் என்பதை அவரால் சீரணிக்கவே முடியவில்லை. அது அவரது நடவடிக்கையில் தெளிவாகத் தெரிந்தது.

ஆனாலும் தன்னைக் காதலிப்பவளின் காதலுக்கு மரியாதை கொடுத்து பேசிவிட்டு வந்தான். அவன் மனதில் அவளுக்கென ஒரு இடமும் உண்டு என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. ஆனால் அவள் சொல்கிறபடி அவளிடம் உரிமை எடுத்துக்கொள்ள இன்று வரை அவனுக்குத் தோணவில்லை.

தனுஜா குறையாகச் சொல்வதும் அதுவே. தனுஜாவே நெருங்கி வந்தாலும் அவன் விலகிச் செல்லக் காரணம், தான் கொடுக்கும் முதல் முத்தம் கூட தனது மனைவிக்குத் தான் என்பதில் அவன் பிடிவாதமாக இருந்தான். இப்படி ஒரு ஆண்மகனா என்று மற்றவர்கள் கேலி செய்தாலும் தான் எப்போதும் இந்த கொள்கையிலிருந்து மாறப்போவதில்லை என்பதை தெளிவாக தெரிவித்துவிட்டிருந்தான்.

அப்படி இருந்த போதும் ஒவ்வொரு முறையும் தன்னை தனுஜா சந்தேகிப்பது அவனுக்குப் பிடிக்கவில்லை. ஒவ்வொரு முறையும் அவளிடம் தன்னை நிரூபித்துச் சலித்துப் போனவனுக்கு இம்முறை தந்தை பரிசளித்த கைக்கடிகாரத்தை அவள் தூக்கியெறிந்ததில் கோபம் வந்துவிட்டது.

இதற்கு முன்னர் மூன்று முறைகள் நண்பர்கள் தொடர்பான வாக்குவாதத்திலும் அவன் கோபமுற்றிருக்கிறான். ஆனால் அவள் அழுதுவிட்டாலோ மன்னிப்பு கேட்டுவிட்டாலோ மதுசூதனனின் மனம் சாந்தமடைந்துவிடும். இப்போதும் அப்படி தான்!

அதே காட்டேஜில் தாங்கள் பேசிக் கொண்டிருந்த இடத்துக்கே மீண்டும் அவளைத் தேடி வந்தவன் அங்கே நாற்காலியில் சோக வடிவாய் அமர்ந்திருந்தவளிடம் சென்று பேச்சு கொடுத்தான்.

தனுஜா மீண்டும் மன்னிப்பு கேட்கவே அவளை மன்னித்து விட்டவன் தான் ப்ளூ பேர்ல் ரெஸ்ட்ராண்டுக்குச் செல்ல வேண்டுமென சொல்லிவிட்டு அவள் இன்னும் மதியவுணவு சாப்பிடாததால் தன்னுடன் வரும்படி அழைத்தான்.

தனுஜா தன் மீதுள்ள கோபம் அகன்று தனக்குப் பசிக்குமே என்று கவலையுறுபவனின் அக்கறையில் கரைந்தவளாய் அவனை நோக்கியவள் அவனுடன் செல்ல எழுந்தாள். மதுசூதனன் எழவும் அவனைக் கட்டியணைத்துவிட்டு “தேங்க்யூ சோ மச் மது…. என் மேல இவ்ளோ அக்கறை எடுத்துக்கிறதுக்கு” என்று மையலாய் உரைத்தாள்.

மதுசூதனன் அவளது அணைப்பில் அசௌகரியமாய் உணர்ந்தவன் வேகமாய் அவளை விலக்கி நிறுத்தவும் தனுஜாவின் முகம் தக்காளிப்பழம் போல சிவக்கத் தொடங்கியது.

“இப்பிடி பண்ணுறப்போ தான் உனக்கு உண்மையாவே என் மேல விருப்பம் இருக்கானு சந்தேகம் வருது மது… நான் உன்னைக் காதலிக்கிறேனு சொன்னதுக்கு அப்புறமும் ஏன் என் கிட்ட விலகி நிக்கிற?”

“ஏன்னா நான் இன்னும் உன்னைக் காதலிக்கல தனு” என்று அழுத்தம் திருத்தமாகச் சொன்னான் மதுசூதனன். அது தான் உண்மையும் கூட!

தொடர்ந்து “நாம காதலிக்கிறவங்கள விட நம்மள காதலிக்கிறவங்க வாழ்க்கைத்துணையா கிடைச்சா நம்ம வாழ்க்கைல சந்தோசத்துக்குப் பஞ்சமே இருக்காதுனு எங்கப்பா அடிக்கடி சொல்லுவாரு… கூடவே ஒருத்தவங்க நம்ம மேல அளவுக்கடந்த காதலைக் கொட்டுறப்போ அதுக்கு மரியாதை குடுக்கணும்னு சொல்லுவாரு…. என் மனசுல உன் மேல நிறைய மரியாதை இருக்கு… உன்னோட காதலையும் நான் மதிக்கிறேன்… ஆனா எனக்குனு நான் வகுத்துக்கிட்ட கொள்கைய யாருக்காகவும் மாத்திக்க முடியாது… என்னோட மனைவிய தவிர வேற யாரையும் என்னால மனசாற நெருங்க முடியாது… அது என்னை காதலிக்கிற நீயா இருந்தாலும் சரி! எதுவா இருந்தாலும் நம்ம மேரேஜுக்கு அப்புறம் பாத்துக்கலாம்” என்றவனின் ‘நம்ம மேரேஜ்’ என்ற வார்த்தை தான் தனுஜாவின் நம்பிக்கையே!

கூடவே “எனக்கு நம்பிக்கை இருக்கு மது! கல்யாணத்துக்கு அப்புறம் நீ என்னைக் காதலிக்க ஆரம்பிச்சிடுவ” என்றாள் தனுஜா அவனது விழிகளில் தன் விழிகளைக் கலக்க விட்டபடி.

விதியானது வெகு சீக்கிரத்தில் இதெற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கப்படப் போவதை அறியாது அவனும் அவ்வாறே நம்பினான். புன்னகையுடன் அவளது கரத்தைக் கோர்த்துக் கொண்டவன் “சரி மேடம்! எனக்குப் பயங்கரமா பசிக்குது… போய் லஞ்சை முடிச்சிடுவோமா? இப்போவே டைம் டூ ஃபாட்டி ஃபைவ் ஆகுது” என்று சொல்ல தனுஜா உற்சாகமாய் தலையாட்டிவிட்டு அவனுடன் கிளம்பினாள்.

**************

திருநெல்வேலி….

ஸ்ரீதரின் இல்லத்தில் அவனது அன்னை முன்னிலையில் தலை குனிந்து அமர்ந்திருந்தார் ரத்தினவேல் பாண்டியன். கூடவே வந்திருந்த சங்கரபாண்டியனின் முகத்திலும் தர்மச்சங்கடம் சூழ்ந்த உணர்வு.

அவர்களுக்கு எதிரே சாந்தமான முகத்தில் சோகத்தின் சாயல் சிறு தீற்றலாய் தெரிய அவர்களுக்குக் காபியைக் கொண்டு வந்து வைத்துவிட்டுத் தானும் அமர்ந்து கொண்டார் ரேவதி.

அவர்களைக் காபியை எடுத்துக்கொள்ள சொன்னவர் அவர்கள் தயங்கவே “எதுக்குத் தயங்குறிங்கண்ணே? நடந்த விசயம் ரொம்ப சங்கடமானது தான். ஆனா அதுக்குப் பெரியவங்க நம்ம தான் காரணம்… பசங்க மனசுல என்ன இருக்குனு தெரியாம அவசரப்பட்டு முடிவெடுத்து… ப்ச்… இப்போ பாருங்க… நம்ம பொண்ணு எங்கே போனானு தெரியல… பொம்பளைப்பிள்ளை காணாம போன வருத்தத்துல இருக்கிறவங்க கிட்ட மூஞ்சி காட்டுற அளவுக்கு நான் கல்நெஞ்சக்காரி இல்லண்ணே! காபி எடுத்துக்கோங்க” என்று தண்மையாய் உரைக்கவும் இருவரும் எடுத்துக் கொண்டனர்.

கூடவே மதுரவாணி பற்றி எத்தகவலும் கிடைக்கவில்லை என்று சோர்வாய் சொன்னவர்களுக்கு ஆறுதல் கூறினார் ரேவதி.

“அதான் டிபார்ட்மெண்ட்ல அவளோட போட்டோ குடுத்துத் தேடச் சொல்லிருக்கிங்கல்ல…. சீக்கிரமா அவ கிடைச்சிடுவா… எதுக்கும் உங்க சொந்தகாரங்க வீடுகளுக்கும் கால் பண்ணிக் கேளுங்கண்ணே”

“இன்னும் யாரு கிட்டவும் விசாரிக்கல சம்மந்திம்மா! விசாரிச்சா நம்ம வீட்டுப் பிள்ளைய பத்தி தேவையில்லாம புரணி பேசுவாங்களேனு யோசிக்கிறோம்… கடைக்குட்டினு செல்லம் குடுத்து வளத்ததுக்கு நல்லப் பாடம் கத்துக் குடுத்துட்டா சம்மந்திம்மா… மனசுலாம் ரணமா இருக்கு”

ரேவதிக்கு ரத்தினவேல் பாண்டியனைப் பார்க்க பாவமாய் இருந்தது. அவரைப் பற்றி மகன் வாயிலாக அரசல் புரசலாக கேள்விப்பட்டிருக்கிறார் தான். இருப்பினும் திருச்செந்தூருக்கு அவரது குடும்பத்தினருடன் வந்திருந்த போது மதுரவாணியைப் பார்த்ததும் பிடித்துவிட அடுத்த வாரமே வீடு தேடிப் போய் மதுரவாணியை ஸ்ரீதருக்குப் பெண் கேட்டவர் ரேவதி தான்.

பெண் பார்க்க லட்சணமாக துருதுருவென இருந்தாள்; கூடவே அலட்டலின்றி இயல்பாய் மரியாதையுடன் அவள் பேசியவிதம் அவருக்குப் பிடித்திருந்தது. ஸ்ரீதர் போன்ற அழுத்தமானவனுக்கு இந்தக் குறும்புக்காரி தான் சரி என இரு குடும்பத்துப் பெரியவர்களும் பேசி முடித்துவிட்டனர்.

ரத்தினவேல் பாண்டியனுக்கோ தனது மகளை வீடு தேடி வந்து பெண் கேட்டதால் மகிழ்ச்சி! கூடவே பெரிய போலீஸ் அதிகாரியின் மாமனார் ஆகப் போகிற பெருமிதம் வேறு! அப்போதைக்கு பூ வைத்தவர்கள் திருமணத்துக்கு இரண்டு மாதங்கள் கழித்து நாளும் குறித்துவிட்டனர்.

எல்லாம் நன்றாய் போய்க் கொண்டிருக்கையில் யாரும் எதிர்பாராமல் நடந்த நிகழ்வால் இப்போது அனைவருமே சோகத்தில் உழன்றனர்.

காபியைக் குடித்துவிட்டு மீண்டும் மன்னிப்பு கேட்ட ரத்தினவேல் பாண்டியன் “சம்மந்திம்மா! ஸ்ரீதர் தம்பி மாதிரி ஒருத்தரை மருமகனாக்கிக்க எனக்கு அதிர்ஷ்டம் இல்ல… எங்க வீட்டுப்பொண்ணு தலையெழுத்துல என்ன எழுதிருக்கோ அது தானே நடக்கும்… எங்களால உண்டான சங்கடத்துக்கு நான் மறுபடியும் மன்னிப்பு கேட்டுக்கிறேன்மா” என்று சோகமாய் உரைக்க ரேவதி அவருக்கு ஆறுதல் சொல்லி அனுப்பிவைத்தார்.

இருவரும் கிளம்பிய பின்னர் ஒரு பெருமூச்சுடன் தனது அறைக்குள் சென்றவர் படுக்கையில் சாய்ந்து கண் மூடி ஓய்வெடுக்க ஆரம்பித்தார்.

அதே நேரம் மதுசூதனன் தனுஜாவுடன் ப்ளூ பேர்ல் ரெஸ்ட்ராண்டின் முன்னே காரில் வந்து இறங்கினான். அவன் காரைப் பார்க் செய்துவிட்டு வருவாதாக கூற தனுஜா மட்டும் உள்ளே சென்றாள்.

அடுத்த சில நொடிகளில் மதுரவாணியும் ஸ்ரீரஞ்சனியும் தங்கள் அக்காக்களுடனும் குட்டீஸ்களுடனும் கால் டாக்சியில் வந்து இறங்கினர்.

இரயில் நிலையத்தில் தன்னைக் கடந்து சென்ற தாவணிப்பெண் யாரென்று இனியாவது அறிந்து கொள்வானா மதுசூதனன்?

அலை வீசும்🌊🌊🌊