🌊 அலை 4 🌊
Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels
சொந்தமானவர்களைக் கைநழுவ விட்டே
பழகியதாலோ என்னவோ
சொந்தமானது கைநழுவி விடுமோ
என்ற பதைபதைப்பு
அது அஃறிணையாக இருந்தாலும் கூட
மதுரவாணி எப்போதும் அவள் தங்கும் மாடியறைக்குள் சரணடைந்தவள் அந்த ஊரின் குளிரையும் தாண்டி பயணத்தால் உண்டான கசகசப்பை போக்க குளிக்கச் சென்றாள். வெதுவெதுப்பான நீரில் நீராடி உடை மாற்றியவள் நீண்ட கூந்தலை நீவி விடுகையில் குடும்பத்தினரின் நினைவு மெதுவாய் அவள் மனதில் எட்டிப் பார்த்தது. இந்நேரம் அவளது வீடு அல்லோகலப்பட்டிருக்கும்.
அம்மாவையும் அழகியையும் நினைத்தால் தான் கண்ணைக் கரித்துக் கொண்டு வந்தது. அப்பாவையும் அண்ணன்களையும் பற்றி யோசித்தால் ஓவென்று அழவே தோன்றியது அவளுக்கு. இது வரை எந்தக் கஷ்டமும் வந்துவிடக் கூடாதென அவளைப் பொத்திப் பாதுகாத்த தங்கக்கூண்டை விட்டு முதன் முதலில் தனியாய் வெளியுலகத்தைப் பார்த்தவளுக்குத் தன்னால் அவர்களுக்குச் சிரமம் என்பதும் புரிந்தது.
ஆனால் இதையெல்லாம் பார்த்தால் அவளால் அவளது வாழ்க்கையை அவள் நினைத்தபடி வாழ முடியாது. அவர்கள் சொன்ன டி.சி.பிக்கு வாழ்க்கை முழுவதும் சமைத்துப் போட்டுக்கொண்டும் அவன் சொல்வதற்கெல்லாம் ஆமாம் சாமி போட்டுக் கொண்டும் தனது அன்னை, அத்தை, மதினிகளைப் போல உப்புசப்பற்ற வாழ்க்கை வாழ வேண்டியதாய் இருந்திருக்கும்.
ஆனால் டி.சி.பி ஒன்றும் அவ்வளவு மோசமானவன் போலத் தோணவில்லை. இருந்தாலும் எந்தப் புற்றில் எந்தப் பாம்பு இருக்குமோ! தனது தந்தையும் அண்ணன்களும் மாமாவும் கூட தன்னை தங்கத்தட்டில் வைத்துத் தாங்காத குறை தான்! ஆனால் அவரவர் மனைவிகளிடம் அவர்கள் நடந்துகொள்ளும் முறை என்றைக்குமே மதுரவாணிக்கு உவப்பாக இருந்ததில்லை.
அந்த டி.சி.பி நல்ல உயரதிகாரியாக இருக்கலாம்; நல்ல மகனாக இருக்கலாம்; கனிவான மருமகனாக கூட இருக்கலாம்; ஆனால் ஒரு கணவனாக அவன் தன்னை நடத்தப் போகும் விதம் என்னவோ தனது வீட்டு ஆண்கள் அவரவர் மனைவியை இரண்டாம் பட்சமாய் நடத்துவதைப் போலத் தான் இருக்கும்!
பிறந்த வீட்டில் மகாராணியாய் கோலோச்சிவிட்டு புகுந்த வீட்டில் இரண்டாம் தர குடிமகளாக வாழவேண்டுமென தனக்கு ஒன்றும் தலையெழுத்து இல்லை என நொடித்துக் கொண்டவளுக்கு அடுத்து என்ன செய்யவேண்டும் என்று திட்டமிடவே நேரம் சரியாக இருந்தது. அப்போது கீழே யாரோ அவளை “அடியே மதூஊஊஊஊ” என்று உற்சாகமாய் அழைப்பது கேட்கவும் அந்தக் குரலுக்குச் சொந்தக்காரியைக் காணும் ஆவலில் மற்ற அனைத்தும் மறந்து போக விறுவிறுவென கீழே சென்றாள்.
அங்கே நின்றிருந்த இரு இளம்பெண்களில் ஒருத்தி இயல்பாகவே கம்பீரமான அழகி! மதுரவாணியின் வயது தான் அவளுக்கும். ஆனால் அவளை விட மனமுதிர்ச்சி அதிகம். மற்றொருத்தியோ இன்னும் குழந்தைத்தனம் மாறா முகத்துடன் இருக்கும் சிறுபெண்! இப்போது தான் கல்லூரியில் அடியெடுத்து வைத்திருக்கிறாள்.
இருவரும் யாழினியின் சித்தி மகள்கள். சங்கவியின் இளைய நாத்தனார்கள். சங்கவி கமலேஷின் விவாகத்தின் போது மூவருக்கும் இடையே உண்டான நட்பு அடிக்கடி இரு குடும்பத்தினரும் சந்தித்துக் கொண்டதால் இன்னும் நெருங்கிவிட்டிருந்தது.
இருவருக்கும் மதுரவாணியைக் கண்ட மகிழ்ச்சி! ஓடிச் சென்று ஒரே நேரத்தில் அவளை அணைத்துக் கொண்டனர்.
அந்தக் கம்பீரமான அழகியின் கன்னத்தைப் பிடித்துக் கிள்ளிய மதுரவாணி “எப்பிடி இருக்க ரஞ்சி? முன்னை விட இப்போ ரொம்ப அழகாயிட்ட… எனக்கு லைட்டா பொறாமையா இருக்கு!” என்று சொல்லிக் கண் சிமிட்டினாள். அவள் சொன்னதைக் கேட்டு இதழ் விரித்தாள் ரஞ்சி என அழைக்கப்பட்ட ஸ்ரீரஞ்சனி. அவளுடன் நிற்கும் அச்சிறுபெண் அவளது உடன்பிறப்பு ராகினி. மதுரவாணி ஸ்ரீரஞ்சனியைப் புகழவும்
“அப்போ நான் அழகா இல்லையா மதுக்கா?” என்று உதட்டைப் பிதுக்கினாள் அவள்.
“நீ குழந்தைப்பிள்ளை! சில்ரன் ஆர் ஆல்வேஸ் பியூட்டிபுல்… நீயும் அழகி தான் ராகி குட்டி” என்று அவள் கன்னத்தில் முத்தமிட்டாள்.
மூவரும் வளவளக்க யாழினியும் சங்கவியும் ரத்தினவேல் பாண்டியனையும் சங்கரபாண்டியனையும் நினைத்துக் குளிர் ஜூரம் வந்தவர்களைப் போல மனதுக்குள் நடுங்கிக் கொண்டிருந்தனர். அவர்கள் இளங்கன்றுகள் அல்லவா! பயமின்றி சந்தோசத்தில் குதித்துக் கொண்டிருந்தனர்.
ஸ்ரீரஞ்சனி தான் முதலில் அவர்களின் சோகம் ததும்பும் முகத்தைக் கவனித்தாள். என்னவென்று வினவ இருவரும் அழாதக் குறையாக மதுரவாணியைப் பற்றிச் சொல்ல இப்போது அவளுக்கும் மதுரவாணியின் இந்த முடிவின் மீது அதிருப்தி பிறந்தது.
அவள் பல முறை சங்கவியுடன் நதியூருக்குச் சென்றிருக்கிறாள். அவள் அறிந்தவரையில் ரத்தினவேல் பாண்டியன் கொஞ்சம் கறார் பேர்வழி தானே தவிர மகளின் மீது கொள்ளைப் பிரியம் அவருக்கு. இந்தத் திருமணவிஷயத்தில் அவர் கொஞ்சம் பிடிவாதத்தை விட்டுக் கொடுத்திருந்தால் மதுரவாணி இம்முடிவுக்கு வந்திருக்க மாட்டாள் என்பதை ஸ்ரீரஞ்சனி நன்கு அறிவாள். கூடவே அடிதடி, கட்டப்பஞ்சாயத்து விவகாரத்தில் மதுரவாணிக்குத் தந்தை, தமையன்கள், மாமா மீது வருத்தம் என்பதுவும் நீண்டநாட்களுக்கு முன்பிருந்தே அவளுக்குத் தெரியும்.
இவை எல்லாம் சேர்ந்து தான் மதுரவாணியை இம்முடிவுக்கு வரத் தூண்டியிருக்கும் என்பதால் இந்த விசயத்தில் தோழிக்கு ஆதரவாக இருக்க முடிவு செய்தவள் தமக்கையிடமும் அண்ணியிடமும் மதுரவாணிக்குப் பரிந்து பேசி அவர்களை இயல்புக்குக் கொண்டு வந்தாள். இருவரும் முதலில் பயந்து முறுக்கிக் கொண்டாலும் பின்னர் தலைக்கு மேல் வெள்ளம் போகும் போது ஜாண் போனால் என்ன, முழம் போனால் என்ன என ஜென் நிலைக்கு வந்துவிட்டனர்.
வருவதைச் சமாளிப்போம் என மனதைத் தேற்றிக் கொண்டனர் இருவரும். மதுரவாணிக்கு ஆச்சரியம்! தன்னிடம் ஒப்பாரி வைக்காத குறையாக அழுதவர்கள் ஸ்ரீரஞ்சனி பேசிப் புரியவைத்ததும் சமாதானமாகி விட்டார்களே! இது தான் அவளிடம் மதுரவாணிக்குப் பிடித்ததே.
பிரச்சனை எவ்வளவு பெரியதாக இருந்தாலும் அவளது தோழி ரஞ்சியிடம் அதற்குத் தீர்வு இருக்கும். மகிழ்ச்சியுடன் அவளைக் கட்டிக்கொண்டவள் “ரஞ்சி! எனக்கு கொஞ்சம் ஷாப்பிங் பண்ணணும்டி… அப்புறம் ஹேர்கட் கூட பண்ணனும்… என்னை ஊட்டிக்குக் கூட்டிட்டுப் போ.. இவங்க ரெண்டு பேருக்கும் பொக்கே ஷாப்ல வேலை இருக்கும்லா” என்று சொல்லவும் தான் சங்கவிக்கும் யாழினிக்கும் தாங்கள் இன்று மாலை புதிய ஆர்டர் சம்பந்தமாகச் சந்திக்கவேண்டிய நபரின் நினைவு வந்தது. இருவரும் பரபரப்புடன் எழுந்துகொண்டனர்.
கடந்த ஐந்து வருடங்களாக இரு தோழியரும் சேர்ந்து ‘பிளாசம் பொக்கே அண்ட் ஃப்ளவர் டெகரேசன்’ என்ற பொக்கே ஷாப்பை நடத்தி வந்தனர். பொக்கேக்கள் தயார் செய்வதோடு திருமண வீடுகள், விசேஷங்கள், பார்ட்டிகளுக்கு மலர் அலங்காரம் செய்யும் பணியையும் ஏற்று நடத்தினர். கல்லூரி முடித்த பின்னர் வீட்டில் சும்மா இருக்க விரும்பாத ஸ்ரீரஞ்சனியும் அவர்களுடன் சேர்ந்து கொண்டாள்.
அவளுக்குப் பொக்கே ஷாப்பின் கணக்குவழக்குகளைப் பார்க்கும் வேலை. யாழினி மற்றும் சங்கவியுடன் இன்னும் மூன்று பெண்களும் சேர்ந்து பொக்கேக்களைச் செய்வர். மலர் அலங்காரமும் அவ்வாறே!
சிறியளவில் மனதுக்குப் பிடித்த தொழிலைச் செய்ய ஆரம்பித்த அந்தப் பெண்களை வீட்டுப் பெரியவர்களும் சரி, வாழ்க்கைத் துணைவர்களும் சரி தடுக்கவில்லை. அவர்களின் ஆதரவும் கிடைத்ததால் தான் தொழில் நல்லபடியாகப் போய்க்கொண்டிருக்கிறது என்று யாழினியும் சங்கவியும் அடிக்கடி சொல்லுவர்.
இதோ இப்போது கிடைத்திருக்கும் ஆர்டர் ஒரு பெரிய நகைமாளிகை அதிபரின் மகளது திருமணம் மற்றும் வரவேற்புக்கான மலர் அலங்கார வேலை. இது சம்பந்தப்பட்ட வேலைகளைச் செய்ய மணமகள் வீட்டில் ஏற்பாடு செய்திருந்த ஈவெண்ட் பிளானிங் நிறுவனம் இவர்களது மற்றொரு மலர் அலங்கார வேலையைப் பார்த்துவிட்டுக் கொடுத்த ஆர்டர் இது.
அது சம்பந்தமாக அந்நிறுவனத்தின் பார்ட்னர்களுள் ஒருவனுடன் மீட்டிங் ஒன்று ஊட்டியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
மதுரவாணி கொடுத்த அதிர்ச்சியில் இருவரும் அதை மறந்து போயிருந்தனர். இப்போது நினைவுக்கு வந்துவிட வேலைக்கான பரபரப்பை பூசிக்கொண்டன அவர்களின் வதனங்கள். அவர்கள் மாலை ஊட்டிக்குச் செல்வதைப் பற்றி பேச ஆரம்பிக்க ஸ்ரீரஞ்சனி மதுரவாணியை ஷாப்பிங் செல்லத் தயாராகும்படி கூறினாள்.
அதே நேரம் மதுரவாணி சம்பந்தப்பட்ட அனைத்துத் தகவல்களையும் அவளது சகோதரன்கள் வாயிலாக அறிந்துகொண்டு இறுகிப் போன முகத்துடன் தனது இருக்கையில் அமர்ந்திருந்தான் அவன். காவல் துறை அதிகாரிக்கே உரித்தான விறைப்பான அதே சமயம் இயல்பிலேயே கம்பீரம் மின்னும் முகம், ஆளுமையான கூரியப் பார்வை. இவ்வளவு நடந்தும் கோபம் கொள்ளாத நிதானத்துடன் அமர்ந்திருந்தவனின் முன்னே இருந்த டேபிளில் சிறிய கருப்பு நிறப்பெயர்ப்பலகையில் ‘ஸ்ரீதர் – இணை காவல் ஆணையர், திருநெல்வேலி நகரம்’ என்று பொன் வண்ண எழுத்துக்களில் பொறிக்கப்பட்டிருந்தது.
அவன் முன்னே இருந்த இருக்கையில் பவ்வியத்துடன் அதே சமயம் சங்கடம் சூழ்ந்த முகத்துடன் அமர்ந்திருந்தனர் சரவணனும் கார்த்திக்கேயனும். இருவருமே பாளையங்கோட்டை சுற்றுவட்டார காவல் நிலையங்களில் ஆய்வாளர்களாகப் பணியாற்றி வருவதால் அன்றைய தினம் பணி சம்பந்தமாகவும் அவனைச் சந்திக்க வேண்டியிருந்தது.
அதோடு கோவில் திருவிழாவுக்கு வந்திருந்த சமயம் ஸ்ரீதரின் தாயார் ரேவதி மதுரவாணி குறித்துக் கேட்க அவளுக்கு உடல் நலமில்லை என்று பொத்தாம்பொதுவாக ஒரு பொய்யைச் சொல்லிச் சமாளித்த குற்றவுணர்ச்சி வேறு! எனவே அவனிடம் உண்மையைக் கொட்டிவிட்டனர் இருவரும்.
ஸ்ரீதர் அனைத்தையும் பொறுமையுடன் கேட்டுவிட்டு “மேரேஜுக்கு அவங்களுக்குச் சம்மதம் இல்லனா ஏன் கம்பெல் பண்ணுனிங்க? அது தான் எல்லா தப்புக்கும் காரணம்… உங்களுக்கு என்னைப் பிடிச்சிருக்கலாம்… ஆனா உங்க சிஸ்டருக்குப் பிடிக்கல… அது தெரிஞ்சும் நீங்க அரேஞ்ச்மெண்ட் பண்ணுனது தப்பு… இப்போ யோசிச்சோ வருத்தப்பட்டோ எதுவும் ஆகப் போறதில்ல… மதுராவை தேட ட்ரை பண்ணுவோம்… நீங்க உங்க ரிலேட்டிவ் வீடுகளைக் கான்டாக்ட் பண்ணி அங்க வந்தாங்களானு விசாரிங்க… டிப்பார்ட்மெண்ட் சைட்ல நான் என்னால முடிஞ்ச முயற்சியைப் பண்ணுறேன்” என்று சொல்லவும் இருவரின் குற்றவுணர்ச்சி இன்னும் அதிகரித்தது.
ஆனால் ஸ்ரீதருக்கு வேலை நேரத்தில் சொந்த விசயங்களைப் பேசுவது பிடிக்காது என்பதால் இந்த அளவோடு நிறுத்தியவர்கள் மாலையில் அவன் வீட்டுக்கே சென்று ரேவதியிடமும் அவனிடமும் மன்னிப்பு கேட்டுவிட வேண்டுமென முடிவு செய்தவர்களாய் அவரவர் காவல் நிலையத்துச் செல்லக் கிளம்பினர்.
அவர்கள் சென்ற பின்னர் ஸ்ரீதருக்கு உண்டான கவலை இரண்டே இரண்டு தான். ஒன்று பார்த்த முதல் நாளே மதுரவாணியைத் தன் மருமகளாக வரித்து அவள் தனது இல்லத்துக்குள் காலடி எடுத்து வைக்கும் நாளுக்காகக் காத்திருக்கும் அன்னையை எவ்வாறு சமாளிக்கப் போகிறோம் என்பது. மற்றொன்று ஒரு காவல்துறை அதிகாரியாக எந்த தடயமுமின்றி காணாமல் போன ஒரு இளம்பெண்ணை எவ்வாறு தேடிக் கண்டுபிடிக்கப் போகிறோம் என்பது.
சராசரி மனிதனாக தான் திருமணம் செய்யவிருந்தவள் தன்னை புறக்கணித்து ஓடிப்போனது ஒரு புறம் கஷ்டமாக இருந்தாலும் முன்னரே தெளிவாகத் தெரிவித்திருந்தால் இந்தக் கஷ்டத்துக்கு அவசியமில்லையே என்ற ஆதங்கமும் மதுரவாணியின் குடும்பத்தினர் மீது ஒரு சேர எழுந்தது.
அதே நேரம் கீதாச்சாரம் நினைவுக்கு வந்தது. நடந்தது, நடக்கின்றது நடக்கப் போவது எல்லாமே நன்றாகவே நடக்கும் என்ற வாசுதேவனின் போதனையை மனதில் சொல்லிக் கொண்டவன் அன்றாட அலுவலில் மூழ்க ஆரம்பித்தான்.
***************
ஊட்டி…
இயற்கையன்னை தனது ஒட்டுமொத்த அழகையும் வஞ்சனையின்றி கொட்டி வைத்து மலைப்பெண்ணவளை பசுமை எனும் ஆடை போர்த்தி அழகு பார்க்கும் மலைவாசஸ்தலம்.
எங்கு நோக்கினும் மலைச்சிகரங்களைத் தொட்டுத் தழுவிச் செல்லும் மஞ்சுக்கூட்டங்களும், கண்ணுக்கு விருந்தளிக்கும் காலை நேர பனிப்புகைமூட்டங்களும் தான் எவ்வளவு அழகு!
அங்கே உள்ள தனியாருக்குச் சொந்தமான பிரபல காட்டேஜ் ஒன்றில் நண்பர்களான திலீப் மற்றும் கௌதமுடன் அமர்ந்திருந்தான் மதுசூதனன். அவர்களை அங்கே வரச் சொன்னவளைத் தான் இன்னும் காணவில்லை. சும்மாவே அவள் மீது திலீப்புக்கோ கௌதமுக்கோ நல்ல அபிப்பிராயம் இல்லை. இதில் இப்படி காலம் தாழ்த்தினால் ‘உள்ளதும் போச்சு நொள்ளைக்கண்ணா’ கதை தான் என்று மனதிற்குள் கடுகடுத்துக் கொண்டான் மதுசூதனன்.
“டேய் மது! இன்னும் எவ்ளோ நேரம்டா வெயிட் பண்ணணும்? திஸ் இஸ் டூ மச்டா… ஐ அக்ரி, இந்த மேரேஜ் கான்ட்ராக்ட் நமக்குக் கிடைக்க அவ தான் காரணம்… பட் இவ்ளோ நேரம் வெயிட் பண்ண வைக்கிறது எனக்குப் பிடிக்கலடா”
அவன் அப்படி சொல்லக் காரணமும் இருக்கிறது. அவர்கள் யாரைப் பற்றி பேசிக்கொண்டிருக்கிறார்களோ அவளுக்கு மற்றவர்கள் தனக்காக காத்திருப்பது மிகவும் பிடிக்கும். அப்படி அவர்கள் காத்திருந்து தான் வந்த பின்னர் தன்னைக் கண்டு முகம் மலரும் போது தன்னை ஒரு மகாராணி போல உணர்வதாக அவள் அடிக்கடி கூறுவாள்.
இதில் விதிவிலக்கு மதுசூதனன் மட்டும் தான். அவனுக்கு யாருக்காகவும் காத்திருக்கப் பிடிக்காது. சொன்னால் சொன்ன நேரத்துக்கு வர வேண்டும். இல்லையென்றால் அது யாராக இருந்தாலும் புறக்கணித்துவிட்டு அடுத்த வேலையைப் பார்க்கச் சென்றுவிடுவான். ஆனால் இன்று அவனையும் சேர்த்து தான் காத்திருக்கச் செய்துவிட்டாள் அவள்.
திலீப் இவ்வாறு சொல்லிவிட்டு புருவத்தைச் சுழிக்கும் போதே வெளிநாட்டு நறுமண திரவியத்தின் வாசனை அந்த இடத்தைக் கிறங்கடித்தது. யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே என்பது போல அவள் வருவதற்கு அறிகுறி தான் இந்த நறுமண திரவியத்தின் வாசனை அங்கிருக்கும் காற்றில் பரவிய நிகழ்வு!
கூடவே ஹைஹீல்சின் டக்டக்கென்ற ஒலியும் செவிப்பறைக்குள் செல்ல மூவரும் திரும்பிப் பார்க்க அங்கே வந்து நின்றாள் ஒரு இளம்பெண்.
அவளது ஆடை நேர்த்தி, முகம் மற்றும் கூந்தல் அலங்கார நேர்த்தியே சொல்லிவிடும் அவள் ஒரு மேல்தட்டுப்பெண் என்பதை. அவள் தனுஜா. மதுசூதனனின் மனதைக் கவர்ந்த காதலி. அவனது கல்லூரிப்பருவத் தோழி. இவை எல்லாவற்றுக்கும் மேலாக கோயம்புத்தூரின் மிகப்பெரிய நகைமாளிகை அதிபரான சங்கரநாராயணனின் ஒரே வாரிசு.
அவளது முகத்தில் குடியிருக்கும் அலட்சியமும் கர்வமும் மதுசூதனனுக்கு மட்டும் புரியாது போனது ஏன் என்பது தான் அவனது நண்பர்களின் நீண்டகால ஆதங்கம்.
இப்போதும் அவளது அலட்சியபாவனையில் மற்ற இருவரின் முகமும் சுருங்க மதுசூதனன் மட்டும் மலர்ந்த முகத்தோடு எழுந்தான். அவனைக் கண்டதும் வழக்கம் போல கையசைத்தபடி வந்தவள் “ஹாய் மது! இஸ் எவ்ரிதிங் ஆல்ரைட்?” என்று தனது கரியவானவில் புருவத்தை உயர்த்திக் கேட்கவும் மூவரும் தலையசைத்தனர்.
அவர்களிடம் பேசுவதற்காக நாற்காலியில் சாய்ந்து அமர்ந்துகொண்டவள் கால் மேல் கால் போட்டுக்கொண்டு பேச ஆரம்பித்தாள்.
“இந்த மேரேஜ் ஸ்ரீவத்சன் அங்கிளோட சரவுண்டிங்ல எல்லாரும் ரொம்ப எதிர்பாக்குற ஈவெண்ட்… இதுல எல்லாமே பெர்பெக்டா இருக்கணும்னு நான் ஆசைப்படுறேன்… ஏன்னா இதை நல்லபடியா முடிச்சிட்டா எலைட் கிளாஸ் ஈவெண்ட்ஸ்ல உங்களுக்குத் தனி இடம் கிடைக்கும்… அதோட டாட் மதுவோட ஒர்த் என்னனு புரிஞ்சிப்பாரு” என்று கண்ணில் கனவு மின்ன பேசினாள்.
விஷயம் இது தான். ஸ்ரீவத்சனும் சங்கரநாராயணனும் தொழில்முறை போட்டியாளர்கள் என்றாலும் இருவரும் பால்ய சினேகிதர்கள். அவர்களின் குடும்பத்தினருக்கிடையே எப்போதும் நல்லுறவு தான். அவரது மகள் யுவஸ்ரீயின் திருமணத்தை ஏற்று நடத்தும் பொறுப்பை மதுசூதனனின் ஹில்டாப் வெட்டிங் அண்ட் ஈவெண்ட் பிளானிங் நிறுவனத்துக்கு வாங்கிக் கொடுத்தவளே தனுஜா தான்.
சங்கரநாராயணனுக்கு தனது மகள் தங்களது அந்தஸ்தில் இருந்து குறைந்த ஒரு நடுத்தர வர்க்கத்துப் பையனை காதலிப்பதில் சற்று அதிருப்தி தான். அவருக்கு மதுசூதனனின் பொறுப்பு, குணநலன், வேலைநேர்த்தியைக் காட்டும் வாய்ப்பாக இத்திருமணத்தைப் பயன்படுத்திக் கொள்ள எண்ணினாள் தனுஜா.
அதன் விளைவு அத்திருமணத்தை ஏற்று நடத்தும் ஒப்பந்தம் பல்வேறு போட்டிகளுக்கிடையே ஹில்டாப்பின் வசம் வந்தது. அதற்காக அவர்களும் கடினமாக உழைத்துக் கொண்டு தான் இருக்கின்றனர்.
ஆனால் தனுஜா சட்டென்று சிலநேரம் முகத்திலடித்தாற் போல “இதுல்லாம் மிடில்கிளாஸுக்கு ஓகே திலீப்… எங்கள மாதிரி ஹை சொசைட்டி இன்னும் குவாலிட்டியா எதிர்பாப்பாங்க” என்று சொல்லி அவர்களின் முயற்சியை மட்டம் தட்டிவிடுவாள். இதனாலே அவள் மீது திலீபுக்கும் கௌதமுக்கும் நல்ல எண்ணம் வர மறுத்தது.
இப்போதும் இவள் சொன்னாளே என்று தான் திலீப் சென்னை வரை சென்று திருமண அழைப்பிதழ் டிசைனைக் காட்டிவிட்டு வந்தான். வெறுமெனே மின்னஞ்சலில் முடிந்திருக்கவேண்டிய விசயம் என கல்யாணப்பெண்ணே வாய் விட்டுக் கூறினாள் என்பது வேறு விசயம். இருந்தாலும் அவனும் கௌதமும் மதுசூதனனுக்காக அவளது அலட்டல் அனைத்தையும் பொறுத்துக் கொண்டனர்.
வழக்கம் போல அவள் பாட்டுக்கு அறிவுரைகளை அள்ளிவிட்டவள் மதுசூதனனின் வாட்சில் இருந்த பச்சை நிற துணியைக் கண்டதும் புருவம் சுருக்கினாள். அது ஏதோ உடைக்கிழிச்சல் என்பது அவளுக்குத் தெரியும். சிந்தனை தாறுமாறாகச் செல்ல அவளது முகத்தில் என்னென்னவோ உணர்ச்சிகள்!
அதை மறைக்க முயன்றவாறே “இது என்ன மது?” என்று கேட்டவளிடம் என்ன சொல்வது என்று புரியாது விழித்தான் மதுசூதனன். அவன் விழிப்பது தனுஜாவின் இதயத்தில் பந்தயக்குதிரையை ஓட வைத்தது.
அதே நேரம் மதுசூதனன் இரயில்வே நிலையத்தில் நடந்ததை சொல்ல அவளுக்கு எங்கிருந்து வந்ததோ அவ்வளவு கோபம்! வேகமாக அவனது வாட்சைக் கழற்றியவள் அதே கோபத்துடன் தூர வீசினாள். அது எங்கேயோ விழும் சத்தம் கேட்டதும் தான் அவள் முகத்தில் நிம்மதி பரவியது.
என்றைக்கும் அமைதியாக இருக்கும் மதுசூதனன் அவளது இச்செய்கையில் கடுஞ்சினமுற்றான். ஏனெனில் அந்த வாட்ச் அவனது தந்தை அவனுக்குப் பரிசாக அளித்தது. அதை தூக்கியெறிந்தவள் காதலியே என்றாலும் அவனால் பொறுமை காக்க முடியவில்லை.
இறுகிப் போனக் குரலில் “எதுக்கு அதைக் கழட்டி வீசுன தனுஜா?” என்று கேட்டவனின் முகத்தில் கோபம் ஆட்சி செய்ய, அவன் தன்னை முழுப்பெயர் சொல்லி அழைத்ததும் திடுக்கிட்டாள் தனுஜா.
ஏனெனில் மதுசூதனன் அவ்வாறு முழுப்பெயரையும் உச்சரித்தால் அவள் மீது இருக்கும் காதல் எல்லாம் அவனுக்கு இரண்டாம் பட்சம் தான் என்று அர்த்தம். ஏற்கெனவே இரு முறை கௌதம் விசயத்தில் இவ்வாறு நடந்த முன் அனுபவம் வேறு உள்ளது.
இருந்தாலும் அவனுக்குச் சற்றும் குறையாத கோபத்துடன் “எவளோ ஒருத்தியோட துணி கூட உன்னை டச் பண்ண நான் அலோ பண்ண மாட்டேன் மது” என்று சொன்னவளின் குரலில் தெரிந்த அகங்காரம் மதுசூதனனுக்கு எரிச்சல் மூட்டியது.
“அதுக்கு வாட்சை தூக்கி வீசுவியா? ஏய் அது எங்க அப்பா எனக்கு கிப்டா குடுத்தது… உனக்கு அதைக் கழட்டி வீசுறதுக்கு ரைட்ஸ் இல்ல தனுஜா” என்று கடினக்குரலில் உரைத்துவிட்டு இன்னும் குறையாத சினத்துடன் அங்கிருந்து வேகமாக வெளியேறியவனை கண்ணில் நீர் ததும்ப தனுஜா நோக்க அவனது நண்பர்களோ அவன் பின்னே ஓடினர்.
அலை வீசும்🌊🌊🌊