🌊 அலை 38 (Epilogue) 🌊

வெண்நுரையாய் நீ தீண்டும்

பொழுதுக்காய் காலந்தோறும்

அசையாது காத்திருக்கும்

கரையாய் நான்!

காலந்தோறும் தொட்டுத் தீண்டி

காதலைக் கொட்டித் தீர்க்கும்

அலையாய் நீ!

கரை தீண்டும் கடல் அலையே!

ஊனுறையும் ஓருயிரே!

வான்முகிலவனின் பிறைநிலவே!

நிரந்தர வசந்தமாய் என்னுடன்

என் வாழ்வில் உறைந்து விடு!

நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு….

ஹில்டாப் வெட்டிங் அண்ட் ஈவெண்ட் பிளானிங் நிறுவனத்தில் சந்தடி ஓய்ந்து அதன் ஊழியர்கள் அனைவரும் வீட்டுக்குக் கிளம்பும் பொன்மாலைக்கும் இரவுக்கும் இடையேயான இரண்டுங்கெட்டான் நேரம்…

அங்கே இருந்த கண்ணாடி கேபினில் போடப்பட்டிருந்த மேஜையில் அமர்ந்து கைகளில் பென்சிலைச் சுழற்றியவாறே ஏதோ யோசித்துக் கொண்டிருந்தாள் மதுரவாணி. கடந்த நான்கு வருடங்களாக அவளது பிரசவநேரத்தைத் தவிர்த்து இங்கே தான் கணவனுக்கு உதவியாக வேலை செய்கிறாள்.

தனது யோசனையின் சந்தேகம் தோன்றவும் மொபைலை எடுத்தவள் அதற்கு விடையளிக்கக் கூடியவளுக்கு அழைக்க ஆரம்பித்தாள்.

மூன்றாவது முறை ரிங் சென்ற பின்னர் அழைப்பு ஏற்கப்படவும் மதுரவாணி தனது கையிலிருந்த நோட்பேடில் குறித்து வைத்திருப்பதை வாசிக்க ஆரம்பித்தாள்.

“உன்னோட ப்ரீ வெட்டிங் போட்டோசூட்ல நீயும் கௌதமும் போடப்போற ட்ரஸ் கலருக்கு கான்ட்ராஸ்ட் கலர் ஃப்ளவர் வச்சு டெகரேட் பண்ணனும்… தென் என்கேஜ்மெண்டுக்கு…” என்றவளின் பேச்சில் இடைமறித்தாள் ராகினி!

ஆம்! அவளுக்கும் கௌதமுக்கும் தான் திருமணம்! கிட்டத்தட்ட நான்கு வருடக் காதல்! கௌதம் முதலில் தனக்கும் அவளுக்கும் வயது வித்தியாசம் அதிகம் என்று தயங்க ராகினியோ தனது காதலில் இருந்து ஒரு அடி கூட பின்வாங்குவேனா என்று அடம்பிடித்து அவனது காதலை ஜெயித்தாள்.

இதோ இப்போது அந்தக் காதல் இரு வீட்டாரின் சம்மதத்துடன் திருமணமாக மலரப் போகிறது! அந்த திருமணத்துக்கான ஏற்பாட்டை ஹில்டாப் நிறுவனமே ஏற்றுக் கொள்ள பரமேஸ்வரனுக்கும் பார்வதிக்கும் பெரும் நிம்மதி!

அனைத்துமே ராகினியின் விருப்பப்படி தான் நடக்க வேண்டும் என்று கௌதமின் அன்னையே சொன்ன பிறகு அவளைக் கையில் பிடிக்கவே முடியவில்லை.

அதற்கு அவளிடம் சிக்கியவர்கள் மதுரவாணி, சங்கவி மற்றும் யாழினி தான். நல்லவேளையாக ஸ்ரீரஞ்சனி நிதிப்பிரில் வேலை செய்வதால் தப்பித்துவிட்டாள்.

இப்போதும் ப்ரீ வெட்டிங் போட்டோஷூட்டுக்கு அவளது விருப்பப்படியே மலர் அலங்காரம் செய்ய வேண்டுமென சங்கவியையும் யாழினியையும் படுத்தி எடுத்தவள் நிகழ்வுகள் அனைத்தையும் அட்டவணைப்படுத்தும் பணியை செய்து வந்த மதுரவாணியிடம் சில திருத்தங்களைக் கூறவும்

“ஏய்! நீ அடிக்கடி சேஞ்ச் பண்ண சொல்லுற… போனை ஸ்பீக்கர்ல போடுடி” என்றவள் சங்கவியிடமும் யாழினியிடமும் கேட்டுவிட்டு அவள் சொன்ன மாற்றங்களைக் குறித்துக் கொண்டாள்.

எல்லாம் பேசி முடித்ததும் “வாணி உன் பொண்ணுங்க ரெண்டு பேரும் இன்னைக்குக் கடல்ல குளிக்கணும்னு பயங்கரமா அடம்பிடிச்சாங்களாம்… சித்தியும் மதினிங்களும் தான் நம்ம ஊரு ஆத்துல குளிப்பாட்டி கூட்டிட்டு வந்திருக்காங்க” என்று சங்கவி சொல்ல மதுரவாணி ஆயாசமாய் பெருமூச்சு விட்டாள்.

“அப்பிடியே அப்பன் புத்தி! நான் என்னக்கா பண்ணுறது? ரெண்டும் ஒன்னுக்கு ஒன்னு சளைச்சது இல்ல… ஒரே நேரத்துல பிறந்து அவங்க அப்பாவோட சேர்ந்து என்னை படுத்தி எடுக்கிறாளுங்களே”

அவள் புலம்ப ஆரம்பிக்கவும் சங்கவி யாழினியுடன் ராகினியும் சேர்ந்து சிரிக்க ஆரம்பித்தாள்.

“நீ பண்ணுனத விடவா தனுவும் ஷானுவும் அதிகமா பண்ணிடப் போறாங்க? போடி… அதுங்க சின்னப்பிள்ளைங்க… அதான் ஆரத்யாவும் சாய்சரணும் கூடவே போயிருக்காங்கள்ல… போதாக்குறைக்கு விஸ்வா, சித்து, தேஜூ எல்லாருமே இருக்காங்க… அவங்களோட விளையாடுறதுல மத்த எல்லாத்தையும் மறந்துடுவாங்க”

யாழினி சொல்வதைக் கேட்டவள் அதுவும் சரி தான் என்று யோசித்தபடியே அழைப்பைத் துண்டித்தாள். தங்களின் மகள்களை நினைத்தால் அவர்களின் குறும்புத்தனம் தான் கண் முன்னே வரும். கூடவே இலவச இணைப்பாக இதழில் குறுநகை ஒன்று ஒட்டிக்கொள்ளும் அவளுக்கு.

அவளது மூன்று வயது மகள்கள் ஷான்வியும் தன்வியும் இரட்டையர்கள். பிடிவாதத்தில் மதுசூதனனையும் அழகில் மதுரவாணியையும் கொண்டு பிறந்தவர்கள்.

மழலை மிச்சமிருக்கும் குரலில் அவர்கள் மதுரவாணியை மிரட்டுவதும் அதைக் கண்டு மதுசூதனன் முறைப்பதும் இந்த கண்கொள்ளாக்காட்சிக்காக ராம்மூர்த்தியும் மைதிலியும் காத்திருப்பதும் அவர்களின் இல்லத்தில் தின்ந்தோறும் நடைபெறும் நிகழ்வுகள்.

இப்போது பள்ளி விடுமுறைக்காலம் என்பதால் தாத்தா வீட்டுக்கு டேரா போட சென்றுவிட்டனர். கூடவே ஸ்ரீதர் ஸ்ரீரஞ்சனியின் பிள்ளைகளான நான்கு வயது சித்தார்த்தும் மூன்று வயது தேஜஸ்வினியும் உடன் சென்றிருந்தனர்.

இவர்களை விட மூத்தவனான வைஷாலி திலீபின் மகன் விஸ்வஜித் அவனது ஐந்து வயதுக்கு மிகவும் பொறுப்பாக நடந்து கொள்வான். அவனும் உடன் சென்றிருப்பதால் குழந்தைகள் ஒருவரோடு ஒருவர் ஒற்றுமையாக இருப்பர்.

சாய்சரணும் ஆரத்யாவும் பொறுப்பான மூத்தச் சகோதரன் சகோதரியாக இருந்து அனைவரையும் அரவணைத்துப் போவதை அழகம்மை ஆச்சரியத்துடன் ஒரு நாள் மதுரவாணியிடம் பகிர்ந்து கொண்டார்.

இன்னும் ஏழே நாட்களில் ராகினியின் திருமணம்! அதற்கு ஊரிலிருந்து பெற்றோரும் சகோதரர்கள் மற்றும் மதினிகளும் வரும் போது குழந்தைகளும் வந்து விடுவார்கள் தான்! ஆனாலும் தங்களது பெண்கள் இல்லாத வீடு வெறிச்சென்று இருக்கிறது என மதுசூதனன் புலம்பிக் கொண்டே இருந்தான்.

மதுரவாணிக்கும் அவர்களின் நினைவு தான். இருந்தாலும் “ஆச்சி வீட்டுக்குப் போறோம்மா” என்று பெண்கள் மழலையில் மிழற்றி கேட்கும் போது அவளால் மறுக்க முடியவில்லை.

கூடவே தனது பெற்றோர்கள் பேரப்பிள்ளைகள் மீது உயிரையே வைத்திருந்தனர் என்பதால் இந்த விடுமுறை காலங்களில் குழந்தைகளை அங்கே அனுப்பி வைப்பது மதுரவாணி மற்றும் ஸ்ரீரஞ்சனிக்கு வாடிக்கை ஆகிவிட்டது.

இப்போது மகள்களிடம் பேசலாம் என்று தந்தையின் எண்ணுக்கு அழைத்தவளுக்கு பிசியாக இருப்பதாக அறிவிப்பு வரவும் கண்டிப்பாக மதுசூதனன் தான் அழைத்திருப்பான் என்று அறிந்தவளாக அவனது அலுவலக அறைக்குச் சென்றாள்,

அங்கே சிரிப்புச்சத்தம் பலமாய் கேட்கவும் கதவைத் தட்டிவிட்டு உள்ளே நுழைந்தாள்.

அங்கே மதுசூதனனுடன் திலீபும் கௌதமும் அமர்ந்து அவனது மொபைல் திரையைப் பார்த்து நகைத்துக் கொண்டிருக்க மதுரவாணியும் அதை நோக்க அதில் அவளது மகள்களும் ஸ்ரீரஞ்சனியின் பிள்ளைகளும் அழகம்மையுடன் சேர்ந்து லூட்டி அடித்துக் கொண்டிருந்தனர்.

திரையில் மதுரவாணியின் முகம் தெரியவும் நால்வரும் கப்சிப்பென்று அடங்கிவிட அழகம்மையோ

“அவ கிடக்குறா வாயாடி! நீங்க பாடுங்க என் தங்கங்களா” என்று சொல்லவும்

“அழகி நான் அங்க இல்லங்கிற தைரியத்துல ஓவரா கலாட்டா பண்ணுற… இன்னும் ரெண்டு நாள்ல இங்க தான் வரணும்… அப்போ பாத்துக்கிறேன் உன்னை” என்று அவரை மிரட்டினாள்.

உடனே இரட்டையரில் இளையவளான அவளது மகள் ஷான்வி “மம்மி! நாங்க ஆச்சி தாத்தாவ நேம் சொல்லி கூப்பிட்டா மட்டும் திட்டுறிங்க… ஆனா நீங்க மட்டும் பெரிய ஆச்சிய நேம் சொல்லிக் கூப்பிடுறிங்க?” என்று சொல்லிவிட்டு முறைக்க மதுரவாணி வாயைப் பிளக்க பிள்ளையின் தகப்பனோ தனக்கு இல்லாத தைரியம் தனது பெண்ணுக்காவது உள்ளதே என்று சிலாகித்து சத்தமாய் நகைக்க அவனது நண்பர்களும் அவனுடன் சேர்ந்து கொண்டனர்.

மதுரவாணி கடுப்புடன் மூவரையும் முறைக்கும் போதே அலுவலக அறையின் கதவு திறக்க உள்ளே நுழைந்தனர் ஸ்ரீரஞ்சனியும் காக்கி உடையில் ஸ்ரீதரும்.

ஸ்ரீரஞ்சனியை தினந்தோறும் காலையும் மாலையும் அலுவலத்துக்கு அழைத்து வருவதும், பின்னர் வீட்டுக்கு அழைத்துச் செல்வதும் ஸ்ரீதரின் வேலை! அதை அவன் தான் செய்தாக வேண்டும் என்பது அவனது தாயாரின் கட்டளை வேறு.

போதாக்குறைக்கு குழந்தைகள் இல்லாத தனிமை அவனை மருட்டியதால் மனைவியைக் கேலி செய்து கோபப்படுத்திப் பார்ப்பதில் அந்த தனிமையை மறக்க முயன்றான் அவன்.

அதிலும் சித்தார்த் அழுத்தத்தில் அப்படியே அவனது வாரிசு. தேஜஸ்வினி ஸ்ரீரஞ்சனியைப் போல இனிய சுபாவமும் கலகலப்பும் கொண்ட குழந்தை.

பிள்ளைகளை அனுப்பிவிட்டுக் கணவனும் மனைவியும் பொழுது போகாமல் தவித்தனர். அதே நேரம் அவர்கள் வீட்டுக்குழந்தைகளுக்கு நதியூர் தாத்தாவின் வீடு என்றால் கொள்ளை இஷ்டம் என்று ஆகிவிட்டப் பின்னர் அவர்கள் ஆசையை மறுக்கவும் முடியவில்லை.

ஏதோ ரேவதியுடன் உரையாடும் நேரங்கள், பிள்ளைகளுடன் வீடியோ காலில் பேசும் பொன்னான தருணங்கள் என அவர்களுக்கு ஒரு சின்ன ஆறுதல் தினமும் கிடைத்தது.

எப்போதும் போல அன்றைய தினமும் அவளை அழைத்துச் செல்ல வந்தவனிடம் ஸ்ரீரஞ்சனி மதுசூதனனுக்குக் கொடுக்க வேண்டிய காசோலையைக் காட்டவும் அவனிடம் பேசிவிட்டுச் செல்ல வந்தான் ஸ்ரீதர்.

அவனைக் கண்டதும் கௌதம் கேலியாக “காக்கிச்சட்டைய பாத்தாலே டென்சனாகுது ப்ரோ… வீட்டுக்குப் போய் ட்ரஸ் சேஞ்ச் பண்ணிட்டு உங்க சம்சாரத்தை கூட்டிட்டுப் போகலாமே” என்று சொல்ல

“அட நீங்க வேற! அப்பப்போ இந்த யூனிஃபார்மை போடட்டும்… இல்லனா எனக்கு இவரு டி.சி.பிங்கிறது மறந்து போயிடும் போல” என்றாள் ஸ்ரீரஞ்சனி கேலியாக.

“இனிமே டெய்லியும் யூனிபார்ம் போட்டுத் தான் ஆகணும் போல… அட்லீஸ்ட் அதைப் பாத்தாச்சும் உனக்கு என் கிட்ட கொஞ்சம் பயம் வருதானு பாப்போம்” என்று ஸ்ரீதர் அவள் காலை வாரி விட்டவன்

“குட்டிச்செல்லம் பேசுறாளா மது? இரு நானும் வர்றேன்” என்று அவர்களுடன் சேர்ந்து பிள்ளைகளுடன் வீடியோ காலில் பேசுகிறேன் என லூட்டி அடிக்க நேரம் போனதே தெரியவில்லை.

 போனை வைக்கும் முன்னர் அழகம்மை “ஆசைக்கு ரெண்டு பொண்ணைப் பெத்தாச்சு… ஆஸ்திக்கு ஒரு பையன் வேண்டாமா ராசா? சீக்கிரமா என் கொள்ளுப்பேரனை கையில தூக்கிக் கொஞ்சணும்.. அப்போ தான் என் கட்டை வேகும்யா” என்று மதுசூதனனிடம் ஆவலுடன் சொல்ல அவனோ

“நீங்க ஈசியா சொல்லிட்டிங்க ஆச்சி! ஆனா உங்க பேத்தி ஷானுவும் தனுவும் மட்டும் போதும்னு சொல்லிட்டாளே” என்றான் வருத்தத்துடன்.

அதைக் கேட்டு அழகம்மையுடன் நதியூர் குடும்பத்தினர் நகைப்பது வீடியோவில் தெரிய மதுரவாணி அவனை முறைத்துவைத்தாள்.

ஸ்ரீதர் கேலியாக “எல்லாரும் முடியாதுனு சொல்லுறவன் கிட்டயே கேளுங்க… என் கிட்ட மட்டும் யாரும் கேக்குறது இல்ல” என்று கூற

“அதான் கணக்கா ரெண்டு பேபிஸை பெத்து கைல குடுத்தாச்சுல… இன்னும் என்ன வேணும் உங்களுக்கு?” என்று ஸ்ரீரஞ்சனி எகிறவும் அவன் கரம் கூப்பியவன்

“தெரியாம கேட்டுட்டேன்… இனிமே அடுத்தக் குழந்தைனு வாயைத் திறக்கவே மாட்டேன் தாயே” என்று சொல்ல வீடியோவில் அவனது மைந்தனும் மகளும் அவனைக் கண்டு நகைக்க

“சித்து, தேஜூ ரெண்டு பேரும் உங்கம்மா கிட்ட டூ விடுங்கடா… அப்பாவ திட்டுறா பாருங்க” என்று பரிதாபமாய் சொல்ல ஸ்ரீரஞ்சனி பெற்றெடுத்த மாணிக்கங்கள் “அம்மா உன் கூட டூ” என்று முறைக்கவும் அவள் வாயைப் பிளந்தாள்.

“நீங்க சித்தி கூட டூ போட்டிங்கனா நானும் சரண் அண்ணாவும் உங்க கூட டூ… ஷானு தனுவும் பேச மாட்டாங்க” என்று மிரட்டினான் விஸ்வா.

“நீ தான் என் செல்லக்குட்டிடா விஸ்வா… நீ ஊருக்கு வந்ததும் சித்தி உனக்குப் பிடிச்ச ஸ்பிரிங் ரோல் செஞ்சு தர்றேன்” என்று ஸ்ரீரஞ்சனி சொல்ல “அத்த எங்களுக்கு?” என்று ஷானுவும் தனுவும் கேட்க சில மணி நேரங்கள் குழந்தைகளுடன் செலவளித்தவர்கள் வீட்டுக்குச் செல்ல எழுந்தனர்.

மதுசூதனன் கௌதமிடம் இனி திருமணம் முடிந்த பிறகு அவன் அலுவலகம் வந்தால் போதுமென தெரிவித்துவிட்டான். அவனும் திலீபும் கிளம்பிய பிற்பாடு ஸ்ரீதர் ஸ்ரீரஞ்சனியுடன் விடை பெற்றான்.

இருவரும் காரில் ஏறும் போதே “சாருக்கு மூனாவது தடவை அப்பா ஆகுற ஆசை வந்துடுச்சோ?” என்று ஸ்ரீரஞ்சனி கேலி செய்வதையும்

அதற்கு “என் மூனாவது பேபிக்கும் நீ தான் அம்மாவா இருக்கப் போற! அப்புறம் ஆசைப்படுறதுக்கு என்னவாம்?” என்று கொஞ்சலாய் கேட்டபடி அவளுடன் ஸ்ரீதர் காரில் அமர்வதையும் பார்த்தபடி நின்றிருந்தனர் மதுசூதனனும் மதுரவாணியும். அவர்களுக்கு டாட்டா காட்டிவிட்டுக் காரை கிளப்பினான் ஸ்ரீதர்.

அவர்கள் சென்றதும் மதுசூதனனும் காரை எடுக்க மதுரவாணி அவனருகில் அமரவும் கார் கிளம்பியது.

காரை ஓட்டியபடி அவ்வபோது மனைவியை ஓரக்கண்ணால் நோக்கியவனை மதுரவாணி கவனித்துவிட்டாள்.

“என்னடா வேணும் உனக்கு? ஏதோ சொல்ல வர்ற மாதிரி இருக்கு” என்று அவள் கேட்கவும் அவன் பதில் சொல்ல வாயெடுக்கும் போதே மதுரவாணிக்கு மொபைலில் அழைப்பு வந்தது.

வேறு யார்! மைதிலி தான். மருமகள் காலையில் கீரை வடை சாப்பிட்டு நாளாயிற்று என்று சொன்னதால் இன்று செய்யலாம் என்று எண்ணியிருந்தவர் கடலை பருப்பு தீர்ந்து போனதைக் கவனிக்கவில்லை.

இப்போது பார்த்து அவளுக்குப் போனில் சொன்னவர் வரும் போது சூப்பர் மார்கெட்டில் வாங்கிவருமாறு கூற மதுரவாணியும் கீரைவடையில் சுவையில் நாவூற “சரி அத்த! வர்ற வழில நான் வாங்கிட்டு வர்றேன்… கீரைவடை சாப்பிட்டு ஒரு வாரம் ஆகுது” என்று ஆசையுடன் சொல்லிவிட்டு போனை வைத்தாள்.

“மது கொஞ்சம் சூப்பர் மார்கெட் பக்கம் காரை விடு! அத்த இன்னைக்கு எனக்காக கீரை வடை செய்யப் போறாங்க” என்று குழந்தையாய் குதூகலித்தவளின் கன்னத்தில் கிள்ளினான் அவளது கணவன்.

“எப்போ பாரு வடை பஜ்ஜினு திங்கிறத பத்தி மட்டும் யோசி… இதைத் தவிர உனக்கு வேற எதுவும் மைண்ட்ல தோணாதா வாணி? இன்னைக்கு அழகி ஆச்சி சொன்னாங்களே! அதையும் அப்பப்போ யோசிச்சு வை… நம்ம வருங்காலத்துக்கு நல்லது” என்றான் அமர்த்தலாக.

மதுரவாணி அவனைக் கேலியாக நோக்கிவிட்டு “அழகி என்ன சொல்லுச்சு? எனக்கு மறந்து போச்சே” என்று நடிக்கவும்

“இசிண்ட்? நான் வேணும்னா காரை ஓரமா நிறுத்திட்டு நியாபகப்படுத்தவா?” என்று சொல்லிக் கொண்டே காரை ஓரங்கட்டியவன் அவள் முகம் நோக்கிக் குனிய அவனைத் தள்ளிவிட்டவள்

“ஒழுங்கா காரை எடு… ரெண்டு பிள்ளைக்கு அப்பா ஆயாச்சு… இன்னும் சாருக்கு ரோமியோனு மனசுல நினைப்பு” என்று சொல்ல

“மூனாவதா ஒரு பையனைப் பெத்துக் குடு… நான் உன்னை டிஸ்டர்ப் பண்ணவே மாட்டேன்… பிராமிஸ் வாணி” என்று கண்ணில் குறும்பு மின்ன கூறியவனின் காதைத் திருகினாள் மதுரவாணி.

நீ யாருனு எனக்கு நல்லாவே தெரியும்டா திருட்டுப்பூனை… ஒழுங்கா காரை எடு… எனக்கு இப்போவே கீரை வடை நினைப்புல நாக்கு ஊறுது” என்று அவன் முகத்தைச் சுருக்கியபடி காரை எடுக்க முடியாது என பிடிவாதமாய் அமர்ந்து கொண்டான்.

மதுரவாணி அவனது புஜத்தைத் தனது கரங்களால் வளைத்துக் கொண்டு “என் செல்லம்ல… ராஜால்ல… காரை எடுடா மது! வீட்டுக்குப் போனதுக்கு அப்புறமா உன்னோட மூனாவது பேபிய பத்தி டிஸ்கஸ் பண்ணலாம்” என்று சொல்ல மகிழ்ச்சியில் முகம் ஜொலிக்க திரும்பினான் மதுசூதனன்.

அவளைக் காதலுடன் நோக்கியவன் “ஐ லவ் யூ வாணி” என்று சொல்லிவிட்டு அவளது நெற்றியில் முத்தமிட நான்கு ஆண்டுகள் அவனது காதலில் முக்குளித்து மகிழ்ந்திருந்த மதுரவாணி இன்றும் அவனது ஆசை முத்தத்தைக் கண் மூடி அனுபவித்தாள்.

பின்னர் அவளை விடுவித்தவன் அதே மகிழ்ச்சியுடன் காரைக் கிளப்ப அவனது தோளில் சாய்ந்தபடி தங்களின் பயணத்தைத் தொடர்ந்தாள் மதுசூதனனின் மதுரவாணி!

ஒருவர் மண்ணில் ஜனிக்கும் போதே அவருக்கான வாழ்க்கைத்துணை யார் என்பதை இறைவன் முடிவு செய்து விடுவாராம்! அது அறியாது மனிதர்கள் போடும் கணக்கு எல்லாம் என்றுமே வெற்றி பெறுவதில்லை என்பதற்கு மதுரவாணி – மதுசூதனன், ஸ்ரீரஞ்சனி – ஸ்ரீதர் இவர்களே உதாரணம்!

இவர்களின் வாழ்க்கைப்பயணம் இதே காதலுடனும் ஆழ்ந்த புரிதலுடனும் தொடரட்டும் என அந்த இறைவனிடம் வேண்டிக்கொள்வோம்!

இனிதே நிறைவுற்றது!