🌊 அலை 34 🌊
Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels
ஓடும் நதியின் மௌனம்
வீசும் காற்றின் மௌனம்
துடிக்கும் இதயத்தின் மௌனம்
கீச்சிடும் பறவையின் மௌனம்
இவற்றில் கேள்விக் குறியாகும்
இயற்கையின் உயிர்ப்பு!
உன் மௌனத்தில் என் மகிழ்ச்சி
கேள்விக்குறியாவது போல!
மதுசூதனன் மருத்துவமனையில் பதற்றத்துடன் அமர்ந்திருந்தான். அங்கே மதுரவாணிக்குக் காலில் தையல் போட்டுக் கொண்டிருந்தனர். அவள் வேதனையில் முகத்தைச் சுளித்தாளே தவிர ஒரு சொட்டு கண்ணீர் கூட விடவில்லை.
அவனுக்கு அது தான் ஆச்சரியம். இதே காயம் தனக்கு பட்டிருந்தால் கூட அவன் பொறுத்திருப்பானே! இதற்காக தான் அந்த பழைய ஏணியில் ஏறவேண்டாமென தலை தலையாய் அடித்துக் கொண்டான். இன்னும் மறுநாள் தங்கையின் நிச்சயம். அடுத்த நாளன்று திருமணம்.
அதில் அவனது வாணி ராணியைப் போல வலம் வருவாள் என்று எண்ணினால் இப்போது இப்படி ஆகிவிட்டதே என வருந்தினான்.
நடந்தது என்னவென்றால் நாளை மாலை தான் நிச்சயம் என்றாலும் மண்டபத்தில் ஏற்பாடுகளைக் காணச் சென்றிருந்த இடத்தில் அவனது நிறுவன ஆட்கள் மண்டபத்துக்கு உள்ளே மெயின் ஹாலின் தொங்கவிடப்பட்டிருந்த அலங்கார திரைச்சீலைகளைச் சரி செய்ய பழைய ஏணி ஒன்றை வைத்திருந்தனர்.
மதுரவாணி அந்த திரைச்சீலைகளின் மடிப்பில் ஏதோ குறை சொன்னதோடு தானே அதை சரி செய்கிறேன் என ஏணியில் ஏறியவள் சொன்னபடி சரி செய்தும் விட்டாள்.
ஆனால் இறங்கும் போது அந்த ஏணியில் நீட்டிக் கொண்டிருந்த ஆணி ஒன்று அவளது லெகின்சைக் கிழித்துக் காலின் தசையையும் ஆழமாய் பதம் பார்த்துவிட வலியில் முகம் சுளித்தவாறு கீழே இறங்கியவள் அவனிடம் மருத்துவமனைக்குச் சென்று விட்டு வீட்டுக்குக் கிளம்புகிறேன் என சொல்லும் போது தான் மதுசூதனன் அவள் காலை கவனித்துப் பதறிப் போனான்.
மருத்துவமனைக்கு உடனே அழைத்து வந்தவன் அவளுக்குத் தையல் போட வேண்டும் என்றதும் பதறினான். ஆனால் அவள் நிதானமாக மருத்துவரிடம் பேசியபடி தையல் போட்ட வலியைப் பொறுத்துக் கொண்டாள். எல்லாம் முடிந்ததும் அவளுடன் கிளம்பினான் மதுசூதனன்.
“வலிக்குதா வாணி?” என்று அவளிடம் கேட்டுக் கொண்டே வந்தவன் எதிரில் வந்த யார் மீதோ மோதிக் கொண்டான்.
“சாரி” என்றபடி நிமிர்ந்தவன் அங்கே கண்டது சோர்ந்த முகத்துடன் நின்று கொண்டிருந்த தனுஜாவை தான். அவளது சோர்ந்த முகம் அவனது யோசனையைத் தூண்ட மதுரவாணியும் அவளது நிச்சயத்தில் நடந்த கலவரத்துக்குப் பின்னர் இன்று தான் அவளைக் காண்பதால் சற்று திகைத்துப் போய் நின்றாள்.
தனுஜா இருவரையும் பார்த்தவள் மதுரவாணியின் தோளைச் சுற்றி அரணாய் இருந்த மதுசூதனனின் கரத்தை ஒருவித அசூயையுடன் பார்த்துவிட்டு மனதுக்குள் வெந்து போனாள்.
ஏனோ இது தான் இருக்க வேண்டிய இடம் என்று தோண முகம் மாறாது காத்தவள் பரிதாபமாய் முகத்தை வைத்துக்கொண்டாள்.
மதுசூதனன் இதனை அறியாதவனாய் “என்னாச்சு தனு? எதுவும் பிரச்சனையா?” என்று தோழமையுடன் வினவ அவள் கண்ணீர் விட ஆரம்பித்தாள்.
அவளது கண்ணீர் மதுசூதனனோடு மதுரவாணியையும் அசைத்துவிட்டது.
“அப்பாக்கு ஸ்ட்ரோக் வந்துடுச்சு மது… எல்லாமே ஸ்ரீவத்சன் அங்கிளால தான்! அவரும் அஜய்யும் பண்ணுன தப்புக்கு அப்பா என்ன பண்ணுவாரு? என்னமோ அப்பாவும் அவங்களுக்கு ஹெல்ப் பண்ணுன மாதிரி எங்க சரவுண்டிங்ல எல்லாரும் பேச ஆரம்பிச்சிட்டாங்க… போதாக்குறைக்கு அஜய்யோட எக்ஸ் கேர்ள் ஃப்ரெண்ட் செத்துப் போனதுல என்னோட பங்கும் இருக்குனு என்னைப் பத்தியும் அசிங்கமா பேசுனாங்க மது… ஃபேமிலியா ஒரு பார்ட்டிக்குப் போனப்போ இதைக் கேட்டுட்டு அப்பாவுக்கு உடம்பு சரியில்லாம போயிடுச்சு… இன்னும் டூ டேய்ஸ்ல டிஸ்சார்ஜ் பண்ணிடுவாங்க”
அவள் சொன்னதும் இருவருக்கும் பரிதாபமாக இருந்தது. அவளது தந்தையைத் தாங்கள் சந்திக்கலாமா என்று கேட்டவர்களை ஒரு நிமிடம் வியந்து பார்த்தவள்
“நான் போய் நர்ஸ் கிட்ட இப்போ நீங்க வரலாம்னு கேட்டுட்டு வந்துடவா?” என்று வினவ இருவரும் தலையசைத்தனர்.
உடனே விறுவிறுவென நடந்தவளின் மனதில் ஆயிரம் எண்ணங்கள்; கிடைத்த பொக்கிஷத்தைத் தொலைத்தவளுக்கு இப்போது கிடைத்திருப்பது இறுதி வாய்ப்பு. இதை விட்டால் இனி அவளது வாழ்நாளில் என்றுமே மதுசூதனனை அவளால் அடையவே முடியாது!
நேரே தந்தை இருந்த அறைக்குள் நுழைந்தவள் தனது திட்டத்தைச் சுருக்கமாகச் சொல்ல ஏற்கெனவே நொந்து போயிருந்தவர் மனம் கலங்கினார்.
“என்னம்மா இது? இப்பிடி சொன்னா மதுவுக்கு அந்தப் பொண்ணு மேல கோவம் வந்துடாதா?”
“கோவம் வரட்டும்பா.. அதுக்குத் தான் சொல்லச் சொல்லுறேன்… அவ மேல கோவம் வரணும்… அவங்க பிரியணும்.. இது வரைக்கும் நீங்க என்னையும் மதுவையும் பிரிக்க எவ்ளோவோ முயற்சி பண்ணிருக்கிங்க… இந்தத் தடவை அவனையும் என்னையும் நீங்க தான் சேர்த்து வைக்கணும்பா… அடுத்தவளுக்குப் பாவம் பாத்து சொந்தப்பொண்ணு வாழ்க்கைய கேள்விக்குறி ஆக்கப் போறிங்களா?”
மகளும் மதுசூதனனும் பிரியவேண்டுமென என்னென்னவோ செய்தவர் தான்! ஆனால் அவர் நன்கு அறிவாரே மதுசூதனனுக்குத் தன் மகள் மீது என்றுமே காதல் கிடையாது என்பதை! இப்போது அந்தப் பெண் மதுரவாணியை அவன் காதலிக்கிறான் என்பதை மகள் மூலமாக அரசல் புரசலாக கேள்விப்பட்டிருந்தார்.
இவ்வளவு ஏன்! தனுஜாவின் நிச்சய ஏற்பாட்டை ஹில்டாப் ஏற்று நடத்திய போது அவர்கள் இருவருக்குமிடையே உள்ள நெருக்கத்தை அவரும் கண்கூடாகப் பார்த்தவர் தானே!
எனவே தான் யோசித்தார். ஆனால் கண்ணீர் விடும் மகளின் முன்னே வேறு யாரும் பெரிதாய் தோன்றவில்லை.
தனுஜா தந்தையின் அனுமதி கிடைத்ததும் மதுசூதனனையும் மதுரவாணியையும் அழைத்து வந்தாள்.
மதுசூதனன் அவரிடம் நலம் விசாரிக்க அவரோ மதுரவாணியை வெறித்தவர்
“அன்னைக்கு தனு சொன்ன மாதிரி இந்தப் பொண்ணு உன்னைக் கூட்டிட்டு வந்திருந்தானா எல்லா பிரச்சனையும் தீர்ந்திருக்குமே” என்று கண்ணீர் விட அவனுக்குக் குழப்பமானது.
மதுரவாணியோ அவரது பேச்சில் அதிர்ந்தவள் அவர் சொல்வது போல அன்றைய தினம் தான் செய்தால் இந்த மனிதர் செத்துவிடுவேன் என மிரட்டியதை நினைவு கூர்ந்தவளாய் குழம்பிப் போய் நின்றாள்.
அவளின் குழம்பிய முகத்தைப் பார்த்தபடியே “ஆமா மது! என்கேஜ்மெண்ட் நின்னுப் போனப்போ நானும் அப்பாவும் உன் கிட்ட மன்னிப்பு கேக்கணும்னு நினைச்சோம்… என் தப்பைச் சொல்லி உன் கிட்ட மன்னிப்பு கேட்டு நம்ம ரிலேசன்ஷிப்ப பழையபடி சரி பண்ணிக்கலாம்னு நினைச்சேன் மது… ஆனா உனக்கு எதுவும் தெரியாது போலயே” என்று மதுசூதனனிடம் கேட்டவளை அதிர்ந்து போய் பார்த்தாள் மதுரவாணி.
“வாட்? வாணி கிட்ட நீ என்னைப் பாக்கணும்னு சொன்னியா? என்ன சொல்லுற? ஒன்னுமே புரியல தனு” என்று மதுசூதனன் கேட்கவும் தனுஜா அன்றைய தினம் மதுரவாணி தனது அறைக்குள் வந்தது, தான் அவளிடம் பேசியது என அனைத்தையும் சொன்னவள் கவனமாய் அவனை அழைத்து வந்தால் தான் துப்பாக்கியால் சுட்டுச் செத்துப் போய் விடுவதாக தந்தை மிரட்டியதை மட்டும் மறைத்துவிட்டாள்.
மதுரவாணி அதைச் சொல்ல வந்த போது சங்கரநாராயணன் மூச்சிரைப்பது போல நடந்து கொள்ள மதுசூதனனின் கவனம் அவர் புறம் சென்றுவிட்டது.
“என்ன பண்ணுது சார்?” என்று பதறியவனின் கையைப் பற்றிக் கொண்டவர்
“பழசை மனசுல வச்சுக்காம என் பொண்ணை ஏத்துக்கோப்பா.. இதை நான் நிச்சயம் நின்னுப் போன அன்னைக்கே உன் கிட்ட சொல்லணும்னு தான் இந்தப் பொண்ணு கிட்ட உன்னை அழைச்சுட்டு வரச் சொன்னேன்… ஆனா அவ உன் கிட்ட சொல்லவே இல்லனு இப்போ தானே தெரியுது!” என்று சிரமத்துக்கு இடையே சொல்ல மதுரவாணி இவர் ஏன் பொய் சொல்கிறார் என்று அதிர்ந்து விழிக்க மதுசூதனனால் மதுரவாணி இவ்வளவு பெரிய விசயத்தைத் தன்னிடம் மறைத்திருப்பாள் என்பதை நம்ப இயலவில்லை.
ஆனால் தனுஜா தந்தையை ஆறுதல் படுத்துவது போல “விடுங்கப்பா! நானும் மதுவும் சேர்றதுல அவளுக்கு விருப்பம் இருந்திருக்காது போல… அதான் மது கிட்ட மறைச்சிட்டா” என்று சொல்ல மதுசூதனனால் இதற்கு மேல் பொறுக்க முடியாது
“போதும் தனு… பழசையே பேசி நேரத்தை வேஸ்ட் பண்ணாம அவரைப் பத்திரமா பாத்துக்கோ! உடம்பை பாத்துக்கோங்க சார்” என்று சொல்லிவிட்டு மதுரவாணியோடு அங்கிருந்து வெளியேறினான்.
தனுஜா அதோடு விடாமல் அவன் பின்னே ஓடியவள்
“மது நானும் அப்பாவும் சொல்லுறது தான் உண்மை… இந்தப் பொண்ணு உன் கிட்ட வேணும்னே அதை மறைச்சிருக்கா… உடம்பு சரியில்லாம படுக்கைல இருக்கிறவரு ஏன் பொய் சொல்லப் போறாரு?” என்று அவசரமாய் கேட்க மதுசூதனன் தனுஜாவின் பேச்சை நம்பவில்லை.
ஆனால் அவளது தந்தைக்குத் தன்னைப் பிடிக்காது என்ற போது அவர் ஏன் பொய் சொல்லவேண்டும் என்ற ரீதியில் யோசித்தவனுக்கு மதுரவாணி எதையோ மறைக்கிறாள் என்பது புரிபட அவன் முகம் கடுகடுத்தது.
“இவ சொல்லுறதுலாம் உண்மையா?” இறுகியக்குரலில் கேட்டுவிட்டு நின்றவனின் முகமும் எஃகாய் இறுகி உணர்ச்சிகளை இழந்திருந்தது. இப்படி அவனைப் பார்த்ததே இல்லை என்று மதுரவாணி பொய்யுரைக்க மாட்டாள்.
ஆனால் காதல் என்ற வார்த்தையை அவள் இதயத்தில் எழுதிய பிறகு மதுசூதனன் இவ்வாறெல்லாம் இல்லையே!
இன்று மீண்டும் பழைய மதுசூதனனாய் நின்றவன் அவள் கண்ணுக்கு அவளது மதுவாகத் தெரிவதற்கு பதிலாக தனுஜாவின் முன்னாள் காதலனாகவே தோற்றமளித்தான்.
“நான் கேட்டதுக்கு இன்னும் பதில் வரலை மதுரவாணி”
அவளை முழுப்பெயர் சொல்லி அழைக்கும் போது அவனை விட்டு வெகுதூரம் போய்விட்டாள் மதுரவாணி.
அவளது விழியில் பட்டாள் வெற்றி சிரிப்புடன் நின்று கொண்டிருந்த தனுஜா! இறுதியில் அவள் நினைத்தது நடந்துவிட்ட மகிழ்ச்சியில் பூரித்திருந்தாள் போல.
மதுரவாணி பதில் சொல்லாது தனுஜாவை வெறிக்க அவனோ அவளது கரம் பற்றி அங்கிருந்து இழுத்துச் சென்றான்.
காரில் ஏறி ஹில்டாப் அலுவலகத்தை அடையும் வரை இருவரும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை.
அங்கே சென்ற பின்னர் அவனது அலுவலக அறையில் இருக்கையில் அமர்ந்தவனின் முகம் இன்னும் இறுக்கத்துடன் இருக்கவே மதுரவாணி அவன் தன் மீது சந்தேகப்பட்டுவிட்டானோ என்று அலைபாயும் நெஞ்சத்துடன் அவன் முன்னே தலைகுனிந்தபடி நின்றிருந்தான்.
இதற்கு மேல் தலை குனிந்து நிற்க என்ன இருக்கிறது என்று யோசித்தவளாய்
“ஆமா! அவ சொல்லுறது உண்மை தான். அவளோட என்கேஜ்மெண்டுக்கு முன்னாடி நான் அவ கிட்ட தனியா பேசுனேன்… மிஸ் அண்டர்ஸ்டாண்டிங்க கிளியர் பண்ணுனேன்.. அப்போ அவ உன் கிட்ட பேசணும்னு சொன்னா… நான் உன்னை நேர்ல கூட்டிட்டு வர கிளம்புனேன்.. ஆனா தனுஜாவோட அப்பா உன்னை அங்கே கூட்டிட்டு வரக்கூடாதுனு சொல்லி என்னை மிரட்டுனாரு மது… அவரு கையில துப்பாக்கி வச்சிருந்தாரு.. சப்போஸ் நான் உன்னை கூட்டிட்டு வந்து தனுஜாவும் நீயும் சமாதானம் ஆனிங்கனா அந்த அவமானம் தாங்காம சாகுறதுக்கு இப்போவே செத்துடுவேனு சொன்னாரு” என்று நடந்த விசயங்களை அவனிடம் ஒப்பித்துவிட்டு நிமிர்ந்தாள்.
அவள் சொன்னதை அவன் புரிந்து கொள்வான் என்று நம்பியவளுக்கு அவனது ஏளனப்பார்வை அதிர்ச்சியைக் கொடுத்தது. இன்னுமா இவன் தான் சொன்னதை நம்பவில்லை என்று அதிர்ச்சியாய் ஏறிட்டவளுக்கு அவனது விழிகளில் தெறித்த ஏளனம் வலியை உண்டாக்கியது.
மதுசூதனனுக்கு எப்போதுமே பொய் சொல்வதோ ஏமாற்றுவதோ பிடிக்காது! அவ்வாறிருக்க இவ்வளவு பெரிய விசயத்தை அவள் எப்படி மறைக்கலாம் என்ற கோபம் அவளது பேச்சையும் பொய் என எண்ண வைத்தது.
“இசிண்ட்? அதாவது சொந்த அப்பா அம்மாவ பத்தி கவலைப்படாம உன் வாழ்க்கைய உன் இஷ்டத்துக்கு வாழணும்னு வீட்டை விட்டு ஓடி வந்த நீ, யாரோ ஒருத்தியோட அப்பாவுக்குப் பாவம் பாத்தியா? போதும்… ஏற்கெனவே நீ நிறைய பொய் சொல்லிருக்க மதுரவாணி… இனியும் நீ சொல்லுறத நம்புறதுக்கு நான் ஒன்னும் இளிச்சவாயன் இல்ல” என்றவனின் முன்னே இதற்கு பிறகும் நின்று மன்றாட அவளது சுயமரியாதை இடமளிக்கவில்லை.
ஆனால் பாழாய் போன காதல் கண்ணில் கண்ணீரை வரவைத்து விட்டது.
“நீ நம்ப வேண்டாம்… உன் மனசுல மதுரவாணினா பொய் சொல்லுறவனு பதிஞ்சு போயிடுச்சு… அது அப்பிடியே இருக்கட்டும்… நான் கிளம்புறேன்” என்று சொல்லிவிட்டு விருட்டென்று வெளியேறியவள் அங்கே சிலையாய் நின்ற ஸ்ரீரஞ்சனியைக் கண்டதும் முகத்தைச் சீராக்கிக் கொண்டு அவளை அழைத்துக் கொண்டு கிளம்பிவிட்டாள்.
இருவரும் சேர்ந்து தான் இங்கே வந்தனர். ஸ்ரீதருடன் அவன் இல்லத்துக்குச் சென்றுவருவதாகச் சொன்னவள் எப்போது வந்தாள் என்ற கேள்வியுடன் காரை ஓட்டத் தொடங்கினாள் மதுரவாணி.
ஸ்ரீரஞ்சனியோ முகம் இறுகிப் போனவளாய் அமர்ந்திருந்தாள். சற்று முன்னர் அவளுக்கும் ஸ்ரீதருக்கும் நடந்த விவாதத்தின் அடிப்படை என்னவோ மதுரவாணி மற்றும் மதுசூதனனின் காதல் தான்!
மதுசூதனனும் மதுரவாணியும் விவாதித்ததைக் கேட்ட ஸ்ரீதருக்கு திகைப்பு. இவர்களுக்கு நடுவில் வருமளவுக்கு அந்த தனுஜா யார் என்ற கேள்வி தான் அவனது திகைப்புக்குக் காரணம்.
ஸ்ரீரஞ்சனி அவனிடம் பொய் கூற மனமற்றவளாய் மதுரவாணி ஊரிலிருந்து இங்கே வந்ததிலிருந்து நடந்த அனைத்தையும் சொல்லிவிட்டாள்.
இங்கே வந்த பின்னர் தான் அவளுக்கும் மதுசூதனனுக்கும் பழக்கம் உண்டானது என்பதைச் சொன்னதும் ஸ்ரீதர் திடுக்கிட்டான். அவர்கள் காதலிக்கிறார்கள்; அதனால் தான் மதுரவாணி வீட்டை விட்டு வந்தாள் என்றல்லவா அவன் எண்ணியிருந்தான்!
அவன் அப்படி எண்ணுவதற்கு காரணம் ஸ்ரீரஞ்சனி அவனிடம் சொன்ன பொய்கள்! பொய், புரட்டு, ஏமாற்றுவேலை இதெல்லாம் சற்றும் பிடிக்காதவனின் காதலி ஒரு காலத்தில் வாயைத் திறந்தால் அவனிடம் பொய் மட்டும் தான் பேசியிருக்கிறாள் என்பதை அறிந்ததும் அவனுக்கு வேதனையோடு கூடிய கோபம் வர
“நீ என்னை லவ் பண்ணுறேனு சொன்னியே! அதாச்சும் உண்மையா? இல்ல அதுவும் பொய்யா?” என்று அழுத்தம் திருத்தமாக வினவ ஸ்ரீரஞ்சனியின் கண்களில் கண்ணீர் பளபளத்தது.
அவளின் உதடுகள் விசும்பலை வெளியிட “அவங்க லவ் பண்ணுறாங்கனு நம்பி தான் நான் மதுராவோட ஃபேமிலி கிட்ட மது சாரை இன்ட்ரடியூஸ் பண்ணுனேன்… அப்போ உங்க கண்ணுக்குலாம் நான் ஜோக்கர் மாதிரி தெரிஞ்சிருப்பேன்ல…” என்றவனின் குரலில் இருந்த விலகல் அவளது இதயத்தைத் தாக்க அவனோ அதைக் கண்டுகொள்ளாதவனாய் சினத்துடன் அங்கிருந்து கிளம்பிவிட்டான்.
யாருக்கும் தீமை பயக்காது என்று எண்ணி அவள் சொன்ன சிறுபொய் தான் இன்று அவளது வாழ்வையே கேள்விக்குறியாக்கி விட்டது! அதே நிலை தான் காரை ஓட்டிக் கொண்டிருந்த மதுரவாணிக்கும்!
அவளும் கலங்கிப் போய் தான் இருந்தாள். மதுசூதனனின் வார்த்தைகள் மூளைக்குள் விளையாடிய சடுகுடுவில் கார் அவளது கட்டுப்பாட்டை இழந்து எதிரில் வந்த லாரியில் மோதச் செல்ல “மதுஊஊ!!!” என்ற ஸ்ரீரஞ்சனியின் அலறலில் கடைநொடியில் ஸ்டீயரிங் வீலை ஒடித்துத் திருப்பி சாலையோரம் காரை கொண்டு வந்து நிறுத்தினாள்.
உடல் நடுங்க விழித்தவளின் கண்ணில் கண்ணீர் நிரம்பியிருக்க ஸ்ரீரஞ்சனி அவளது கரங்களை ஆதரவாகப் பற்றியவள்
“மனசைப் போட்டுக் குழப்பிக்காத மது! இதுவும் கடந்து போயிடும்டி… இப்போ வீட்டுக்கு ஊர்ல இருந்து மாமா அத்தை ஆச்சினு எல்லாரும் வந்திருப்பாங்க… நம்ம அழுமூஞ்சியா போய் நின்னா சரியா வராது… தண்ணி பாட்டில எடு” என்றவளிடம் தண்ணீர் பாட்டிலை நீட்டினாள் மதுரவாணி.
ஸ்ரீரஞ்சனி முகத்தைக் கழுவிக் கொண்டவள் மதுரவாணியையும் கழுவச் சொல்லிவிட்டு முகத்தைத் துப்பட்டாவில் துடைத்துக் கொண்டாள்.
மதுரவாணி அவளிடம் என்னவாயிற்று என்று வினவ அவள் ஸ்ரீதருக்கு எல்லா விசயமும் தெரிந்துவிட்டது என்றவள் நடந்ததை ஒப்பித்தாள்.
இருவரது நிலையும் ஒன்று தான் என புரிந்து கொண்டவர்கள் தங்கள் சோகத்தைப் பகிர்ந்து கொண்டதில் மனபாரம் சற்று இறங்கியதைப் போல உணர்ந்தனர்.
அழுது புலம்புவதால் எந்தப் பயனுமில்லை என அறிந்த இருவரும் இனி தங்களது வாழ்வில் என்ன நடக்குமோ அது ஆண்டவன் சித்தம் என்று எண்ணியவர்களாய் காரில் அமர்ந்தனர்.
ஸ்ரீரஞ்சனி தன் மனம் தெளிந்துவிட்டதால் தானே காரை ஓட்டுவதாகச் சொல்ல மதுரவாணி மெல்லிய இளநகையுடன் அவளுக்குப் பக்கத்து இருக்கையில் அமர்ந்து கொண்டாள்!
மனதின் துயரம் சற்று குறைந்தவர்களாய் லவ்டேலை நோக்கி பயணித்தனர் அந்த இரு தோழியரும்.
அலை வீசும்🌊🌊🌊