🌊 அலை 33 🌊

வல்லினமும் மெல்லினமும்

சேரும் மாயமொழி காதல்!

வடதுருவமும் தென் துருவமும்

இணையும் மாயவிசை காதல்!

திக்கொன்றாய் நிற்பவர்கள்

கலக்கும் மாயாஜாலம் காதல்!

வைஷாலியின் திருமணத்துக்கான ஏற்பாடுகள் ஜரூராக நடந்து கொண்டிருந்தது. மைதிலியும் ராமமூர்த்தியும் காலில் சக்கரம் கட்டிக் கொள்ளாத குறை தான்.

“வெட்டிங் ப்ளானர் பையனை வச்சுக்கிட்டு ஏன் இவ்ளோ டென்சன் ஆகுறிங்க? விடுங்க… அவன் பாத்துப்பான்” இது மதுரவாணி அவர்களிடம் அடிக்கடி சொல்லும் வசனம்.

“இல்லடாம்மா… என் பொண்ணு கல்யாணத்துக்கு ஓடியாடி வேலை செய்யணும்னு எனக்கும் ஆசை இருக்கும்ல… அவ பிறந்ததுமே கண்ட கனவுல இதுவும் ஒன்னு” என்று பதிலளிப்பார் ராமமூர்த்தி. மைதிலியும் அவ்வாறே!

அதனால் அவர்களின் மருமகளின் அவர்கள் பெற்ற சீமந்திரபுத்திரனிடம் வாதாட தொடங்குவாள்.

“அங்கிளுக்கு ஆல்ரெடி பி.பி இர்ரெகுலர்னு நீ சொல்லிருக்க… பனைமரம் உயரத்துக்கு உன்னை வச்சுக்கிட்டு அவரு ஏன்டா இன்விடேசன் டிசைன் பாக்குறதுக்கு அலையணும்? ஒழுங்கா அத நீ பாரு” என்று அவனை மிரட்டுவாள்.

ஆனால் அவளும் வேலைக்குச் சென்றுவிடுவதால் அவரது மைந்தன் தந்தையைக் கட்டுப்படுத்துவது இல்லை.

அதே நேரம் ஸ்ரீரஞ்சனி திருமண ஏற்பாட்டில் உதவுகிறேன் என அடிக்கடி கோவை வந்து ஸ்ரீதரையும் ரேவதியையும் சந்திப்பதை வழக்கமாக்கி விட்டாள்.

ஸ்ரீதரும் அவளும் ஒருவரையொருவர் கேலி செய்து பேசும் தருணங்களில் ரேவதி அதைக் கண்டு ரசிப்பார். மகனுக்கு என கடவுள் முடிவு செய்தவள் இவள் தான் போல! அதனால் தான் தங்களின் கணக்கெல்லாம் தவறாய் போய்விட்டது என எண்ணிக் கொள்வார்.

இவ்வாறு நாட்கள் பறக்க ஆரம்பிக்க இடையில் காதலர் தினம் வந்தது.

ராகினி கூட மதுரவாணியையும் ஸ்ரீரஞ்சனியையும் கேலி செய்தாள்.

“ஃபர்ஸ்ட் வேலண்டைண்ஸ் டே… ஆனா உங்க ரெண்டு பேரோட ஆளுங்களும் இப்போ வரைக்கும் ஒரு ரோசாப்பூ எமோஜி கூட வாட்சப்ல அனுப்பல தானே! ஐயோ ஐயோ! நீங்களும் காதலிக்கிறிங்கனு ஊருக்குள்ள சொல்லிட்டுச் சுத்தாதிங்க”

அதைக் கேட்டு இருவருக்கும் காதில் புகை வராத குறை தான்.

“அது…அது… ஹான் ஸ்ரீதர் இன்னைக்கு கமிஷ்னர் ஆபிஸ்ல ஏதோ மீட்டிங்னு சொன்னாரு… சோ மறந்துருப்பாரு” என ஸ்ரீரஞ்சனி சமாளிக்க

“ஏய் யாரு கிட்ட பொய் சொல்லி எஸ்கேப் ஆகுற? இன்னைக்கு சண்டே… இன்னைக்கு எந்த கமிஷ்னர் ஆபிஸ் ஓபன்ல இருக்கு?” என்று அவள் இன்னும் கலாய்க்க

“இப்போ என்னடி உனக்கு? வேலண்டைன்ஸ் டேக்கு விஷ் பண்ணுனா தான் காதலா என்ன?” என்று அவளை வாயை மூட வைக்க முயன்றாள் மதுரவாணி.

 ராகினி தோளைக் குலுக்கியவள் “அக்காஸ் உங்களுக்கு ட்ரெண்டே புரியல… நீங்களே யோசிங்க… ஃபுல்லா லைட்டால டெகரேட் பண்ணுன ஒரு ப்ளேஸ்.. அதுக்கு நடுவுல நீங்க நிக்கிறிங்க… அப்போ வானத்துல பலூன்லாம் பறக்குது… அதுல உங்க நேம் எழுதிருக்கு… அப்போ சடன்னா யாரோ உங்களை கூப்பிடுறாங்க… நீங்க ஆச்சரியமா பாக்குறப்போ உங்க ஹீரோ உங்க பக்கம் வந்து பொக்கே நீட்டி ஐ லவ் யூ; எனக்கு எப்போ ஓகே சொல்லுவனு கேட்டா எப்பிடி இருக்கும் தெரியுமா?” என்று கண்ணில் நட்சத்திரம் மின்ன சொல்லவும் மதுரவாணி அட அற்ப பதறே என தலையிலடித்துக் கொண்டாள்.

அதோடு சோர்ந்து போன ஸ்ரீரஞ்சனியிடம் “ஏய் இந்த கூனி சொல்லுறத கேட்டுகிட்டு ஃபீல் பண்ணாதடி… அவ நேத்து ரெமோ மூவிய அடிக்கடி லேப்டாப்ல போட்டுப் பாத்தப்போவே நினைச்சேன், என்னமோ பைத்தியக்காரத்தனமா பேசுவானு… இதோ பேசிட்டாள்ல… விடு!” என்று சொல்லி விட்டாள்.

ஆனால் அவளுக்குமே வருத்தம் தான்! இத்தனை நாட்களில் மதுசூதனனின் காதல்மொழிகள் இல்லாமல் அவளுக்கு எந்த நாளும் விடிந்ததில்லை. அப்படி இருக்க ராகினி சொன்னது போல அவன் இன்று ஒரு ரோஜாப்பூ ஸ்மைலி கூட அனுப்பாதது அவளுக்கு ஆச்சரியத்தைக் கொடுத்தது.

இதில் நகைச்சுவை என்னவென்றால் யாழினிக்குக் காலையிலேயே மகேஷ் காதலர் தின வாழ்த்து சொல்கிறேன் என போன் செய்து பேச ஆரம்பித்துவிட்டான்.

அதே போல சங்கவி கமலேஷுடன் பேச ஆரம்பித்தவள் அதிலேயே மூழ்கிவிட அன்றைய சமையலை முடித்தது என்னவோ ஸ்ரீரஞ்சனியும் மதுரவாணியும் தான்.

எல்லாவற்றையும் பேசி முடித்த சகோதரிகளும் கேட்ட ஒரே கேள்வி இது தான் “உங்களுக்கு என்னாச்சுடி? போன் பண்ணி இன்னுமா வேலண்டைன்ஸ் டே விஷ் பண்ணல?”

இருவரும் மனதுக்குள் பொறுமினாலும் வெளியே இளித்துவைத்தனர். வேறு வழியில்லையே!

வழக்கம் போல ஞாயிறு என்றால் ஸ்பெஷலாகச் சமைத்து எண்ணெய் தேய்த்துக் குளித்து அந்தக் குளியலால் உண்டான களைப்பு தீர உறங்கி எழுந்தனர் அந்த வீட்டின் பெண்ணரசிகள் அனைவரும்.

மூன்று மணி வாக்கில் ஸ்ரீதர் அங்கே வந்தவன் யாழினியிடமும் சங்கவியிடமும் சம்மதம் பெற்றுவிட்டு ஸ்ரீரஞ்சனியைத் தன்னுடன் அழைத்துச் சென்றுவிட்டான்.

காரில் ஏறியதிலிருந்து ஸ்ரீரஞ்சனி அவனது முகத்தைக் கூடப் பார்த்தாளில்லை. எனக்கு வெளிப்புற காட்சிகள் மட்டுமே முக்கியம் என்பது போல அமர்ந்திருந்தவளை நமட்டுச்சிரிப்புடன் பார்த்தபடி அவன் காரை ஓட்டிக் கொண்டிருந்தான்.

கார் எங்கெங்கோ சென்று கடைசியில் நின்ற இடம் உதகமண்டலத்தின் ஒரு பிரபல ஹோட்டல். அன்றைய தினம் காதலர் தினத்துக்குப் பிரத்தியேகமாக அலங்கரிக்கப் பட்டிருந்த அந்த ஹோட்டலில் அவர்களுக்கென ஒரு மேஜை வெளிப்புறத்தில் மலைச்சிகரங்களைக் காணும்படி ஒதுக்கப்பட்டிருந்தது.

நேரம் இரவை நெருங்கியதால் வானில் நிலா உலா வர ஆரம்பிக்க வெட்டவெளியில் கிடந்த அந்த மேஜையின் நடுவே ஒரு மெழுகுவர்த்தி ஏற்றி வைக்கப்பட்டிருந்தது. ஸ்ரீரஞ்சனிக்கு அந்த அமைதியும் வெளிப்புறத்தில் வீசிய குளிர்க்காற்றும் மனதுக்கு இதமாய் இருந்தாலும் காலையில் இருந்து ஒரு போன் கால் கூட செய்யாதவனிடம் இருந்த கடுப்பு மட்டும் மறையவில்லை.

நாற்காலியை இழுத்துக் காட்டி அவளை அமரச் சொன்னவனை வஞ்சகமின்றி முறைத்து வைத்தாள் ஸ்ரீரஞ்சனி. மெதுவாய் அவன் புறம் குனிந்து

“இப்போ எதுக்கு இங்க கூட்டிட்டு வந்திருக்கிங்க டி.சி.பி சார்?” என்று கேட்க

“இங்க ஃபுட் நல்லா இருக்கும் ரஞ்சினி… லாஸ்ட் டைம் அஜய் கேஸ் சம்பந்தமா இங்க வந்தப்போ நானும் சுதாகரும் இந்த ஹோட்டல்ல தான் சாப்பிட்டோம்” என்று ரசனையுடன் சொல்ல அவள் “அட சாப்பாட்டு ராமா” என்று தன் தலையிலடித்துக் கொண்டாள்.

சில நிமிடங்களுக்குள் சர்வர் உணவைப் பரப்ப அந்த மெழுகுவர்த்தி ஒளியில் அவனது புன்னகை முகம் மற்றவற்றை மறக்கடிக்க அவளும் சாப்பாட்டில் கண் பதித்தாள். அன்றைய தினத்தில் அவன் போன் செய்து பேசாததில் கொஞ்சம் அமைதியற்று இருந்தவளுக்கு உணவு ஒன்றும் அவ்வளவு வேகமாக இறங்கவில்லை.

எனவே இப்போது சற்று திருப்தியுடன் சாப்பிட்டவளுக்கு இன்னுமே தன்னை ஏன் ஸ்ரீதர் இங்கே அழைத்து வந்திருக்கிறான் என்பதில் தெளிவில்லை.

அவன் அழைத்ததால் அவளும் வந்துவிட்டாள்; அவன் ஆர்டர் செய்ததால் சாப்பிட்டும் விட்டாள். அவ்வளவே!

ஸ்ரீதர் அவளை வைத்த விழியகற்றாது நோக்கியவன் அவள் சாப்பிட்டு முடிக்கவும் சில நிமிடங்களுக்குத் தங்களை தொந்தரவு செய்ய வேண்டாமென சர்வரிடம் சொல்லிவிட்டான்.

சர்வர் அனைத்தையும் எடுத்துச் சென்றதும் மெதுவாக எழுந்து கையை மார்பின் குறுக்கே கட்டியபடி நின்றான். ஸ்ரீரஞ்சனியும் எழுந்து அவனருகே சென்று நின்று கொண்டாள்.

தொண்டையைச் செறுமியவள் “இப்போ எதுக்கு நம்ம இங்க வந்தோம்? ஏன் நீங்க சிலை மாதிரி நின்னு போஸ் குடுக்கிறிங்க? ஐ காண்ட் அண்டர்ஸ்டான்ட்” என்று புரியாது கேட்க

“இன்னைக்கு வேலண்டைண்ஸ் டே… உனக்குத் தெரியுமா தெரியாதா?” என்று அவளைப் பார்த்தபடியே கேட்டான் ஸ்ரீதர்.

“நல்லா தெரியுமே! அதுக்கு என்ன இப்போ? நீங்க ஏன் அதை பத்தி பேசுறிங்க? உங்களுக்கு முக்கியமான விசயம் எவ்ளோவோ இருக்கும்? அதுல வேலண்டைன்ஸ் டேலாம் ஒரு மேட்டரா என்ன?” என்று அலட்சியம் போல காட்டி அவள் பேசினாலும் இன்று முழுவதும் அவன் தனக்கு ஒரு வாழ்த்து கூட அனுப்பாத வருத்தம் அவள் குரலில் கொட்டிக் கிடந்தது.

ஸ்ரீதர் அதைப் புரிந்து கொண்டவனாய் “ம்ம்… அதுவும் சரி தான்! வெறுமெனே விஷ் பண்ணுனா மட்டும் வேலண்டைன்ஸ் டே ஸ்பெஷல் ஆயிடுமா என்ன?” என்று கேட்க இப்போது ஸ்ரீரஞ்சனிக்கு குழப்பம் அதிகரித்ததேயன்றி குறையவில்லை.

அவனைப் புரியாது ஏறிடும் போதே பேண்ட் பாக்கெட்டிலிருந்து ஊதா நிற சிறிய வெல்வெட் பெட்டியை எடுத்தவன் அதைத் திறக்க அதில் அவளைப் பார்த்துக் கர்வமாய் கண் சிமிட்டிச் சிரித்தது அழகிய பிளாட்டின மோதிரத்தின் நடுவே அமர்ந்திருந்த குட்டி வைரம் ஒன்று.

அதைப் பார்த்ததும் அவள் கண்ணை விரித்த நொடி அவளது தளிர்க்கரங்களை மற்றொரு கையால் பற்றிக் கொண்ட ஸ்ரீதர் “வில் யூ மேரி மீனு கேட்டா ரொம்ப ஃபார்மலா இருக்கும்… அதனால அப்பிடி எதுவும் கேக்க போறது இல்ல” என்று சொல்லிவிட்டு நிறுத்த ஸ்ரீரஞ்சனி அவன் என்ன சொல்லப் போகிறான் என்று ஆவலுடன் நோக்க ஆரம்பித்தாள்.

“எல்லா வருசமும் வேலண்டைன்ஸ் டேய உன் கூட கொண்டாடுறதுக்கு எனக்கு ஆசையா இருக்கு… அதுக்கு அடையாளமா இந்த மோதிரத்தைப் போட்டுவிடலாம்னு நினைக்கேன்” என்று உரைத்தவன் அதை அவளது மோதிரவிரலில் மாட்டினான்.

அவளது விரலுக்குப் பொருத்தமாக இருந்த மோதிரத்தை மகிழ்ச்சியுடன் பார்த்தவளை காதலுடன் ஏறிட்ட ஸ்ரீதர் அவளது மோவாயைப் பற்றி நிமிர்த்தி “என்னைக் கொஞ்சம் பாரு” என்று சொல்லிவிட்டு அவள் விழிகளை ஆராய ஆரம்பிக்கவும் ஸ்ரீரஞ்சனிக்குக் கண்ணில் நட்சத்திரம் மின்ன ஆரம்பித்துவிட்டது.

அவளது விழிகளில் ஆழ்ந்தவன் “ஐ லவ் யூ ரஞ்சனி” என்று தனது மனதில் உள்ள ஒட்டுமொத்தக் காதலையும் புரியவைத்துவிடும் ஆர்வத்துடன்.

ஸ்ரீரஞ்சனி அதைக் கேட்டதும் தனது முத்துப்பற்கள் மின்ன புன்னகைத்தவள் அடுத்த வினாடி அவனது மார்பில் சரணடைந்தாள்.

“ஐ லவ் யூ சோ மச் ஸ்ரீ” என்று மெதுவாய் முணுமுணுத்தபடி அவனை இறுக அணைத்தவள் விட்டால் அவன் இதயத்துக்குள் புகுந்துவிடுவாள் போல!

தான் காதலித்தவளின் அருகாமையில் உருகத் தொடங்கியவன் கண் மூடி அந்தக் கணத்தை ரசிக்க ஆரம்பித்தான். ஸ்ரீரஞ்சனியும் அவ்வாறே!

இவர்களின் நிலை இவ்வாறிருக்க மதுரவாணி என்னவானாள் என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டுமல்லவா!

ஸ்ரீதர் ஸ்ரீரஞ்சனியை அழைத்துச் சென்ற பின்னர் ராகினி மதுரவாணியைச் சீண்ட ஆரம்பித்தாள்.

“எப்போவும் சண்டைக்கோழி மாதிரி முறைச்சிட்டே இருந்தல்ல… அதான் அண்ணாவுக்கு வேலண்டைன்ஸ் டே கூட மறந்து போயிடுச்சு போல” என்றவளை முறைத்த மதுரவாணி அவளைத் திட்ட வாயெடுக்கும் போது வாயிலில் ஷூ கால்களின் ஓசை கேட்கவும் இவர்களின் சண்டையை ரசித்துக் கொண்டிருந்த சங்கவியும் யாழினியும் திரும்பி பார்த்தனர்.

அங்கே மதுசூதனன் வரவும் அவர்களுக்கு விசயம் புரிந்துவிட்டது. ஆனால் மதுரவாணி என்ன மனநிலையில் இருக்கிறாளோ என்று எண்ணமிடும் போதே அவள் வேகமாக எழுந்து மாடிக்குச் சென்றுவிட்டாள்.

மதுசூதனன் ஆயாசமாய் நோக்கவும் ராகினி நெற்றியில் கோடிழுத்துக் காட்டி “உங்க தலையெழுத்து காலம் முழுக்க அவளைச் சமாதானம் பண்ணிட்டே இருக்கணும்னு எழுதியிருக்கு போல… போங்க! போய் மதுக்காவ சமாதானம் பண்ணி கடத்திட்டுப் போங்க… இப்போ தான் ஒருத்தர் வந்து ரஞ்சிக்காவ கிட்னாப் பண்ணிட்டுப் போனாரு” என்று சொல்ல அவனோ தயக்கத்துடன் சங்கவியையும் யாழினியையும் பார்த்தான்.

சங்கவி நமட்டுச்சிரிப்புடன் எழுந்தவள் மாடியறையில் முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டு அமர்ந்திருந்த தங்கையைத் தாங்கி தடுக்கி கீழே அழைத்து வந்தாள்.

மதுசூதனன் அவளிடம் “வாணி! நீ உன்னோட அந்த தாவணிய சேஞ்ச் பண்ணிட்டு வாயேன்” என்று சொல்லவும் அவள் முடியாதென்பது போல நிற்க ராகினி கேலி செய்ய தொடங்கினாள்.

“அந்தக் கிழிஞ்சு போன தாவணிய அவரும் விடப் போறது இல்ல… நீயும் தூரப் போடப் போறது இல்ல… எப்பிடியோ நல்லா இருந்தா சரி”

“நீ கொஞ்சம் சும்மா இரேன்டி… வயசுக்கு அதிகமா வாய் பேசிட்டுச் சுத்துறத முதல்ல நிறுத்து” – யாழினி.

“வயசுல மூத்தவங்க டியூப் லைட்டா இருந்தா சின்னவங்க பல்ப் மாதிரி இருக்கிறதுல தப்பு இல்ல யாழிக்கா” என்று அனைவரையும் டியூப் லைட் என்று ஒரே வார்த்தையில் கவிழ்த்தாள் அவள்.

இதற்கு மேல் பிடிவாதம் பிடித்தால் அவள் சொன்னது போல தானும் டியூப் லைட் வகையறா ஆகிவிடுவோம் என்று சுதாரித்தவளாய் மாடிக்குச் சென்றவள் உடை மாற்றிவிட்டுத் திரும்பினாள்.

அவள் வந்ததும் அவனது விழிகள் அவளைத் திருப்தியுடன் ஏறிட இருவரும் கிளம்பினர்.

செல்லும் முன்னர் “நைட் சீக்கிரமா வந்துடுங்க… ஆச்சி கால் பண்ணுவாங்க… அவங்கள என்னால சமாளிக்க முடியாதுப்பா” என்று சங்கவி எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தாள்.

மதுரவாணி சரியென தலையாட்டியவள் அவனை விழியெடுத்தும் பாராது விறுவிறுவென வீட்டை விட்டு வெளியேறியவள் தேயிலைத்தோட்டத்தையும் கடந்து வாயிலில் வந்து நின்றாள்.

மதுசூதனன் காருடன் வரவும் அதில் ஏறிக்கொண்டவள் உம்மணாமூஞ்சியாய் வரவும் அவன் பேச்சு கொடுக்க ஆரம்பித்தான்.

“வேலண்டைன்ஸ் டே அன்னைக்குக் கூட சண்டை போடுற மூட்லயே இருப்பியா வாணி?”

சரேலென்று திரும்பியவள் “காலைல இருந்து சாயந்திரம் நாலு மணி வரைக்கும் நீ கோமால இருந்தியோ? இப்போ தான் சாருக்கு வேலண்டைன்ஸ் டே கூட நினைவுக்கு வருது  போல” என்று நொடித்துக் கொண்டவளின் கன்னத்தை அவன் செல்லமாக கிள்ளவும் தனது அகன்ற விழிகளால் அவனை முறைத்தவள் கையை எடு என்று சைகையால் தெரிவிக்க மதுசூதனனும் சிரிப்புடன் கையை விலக்கிக் கொண்டான்.

ஆனால் காரின் வேகத்தை வெகுவாக குறைத்திருந்தான் அவன். ஏன் என்று வினவியவளுக்கு “கார்ல பெட்ரோல் கம்மியா இருக்கு” என்று பதில் வரவும் மதுரவாணி தலையில் அடித்துக் கொண்டாள்.

“பெட்ரோல் லெவல் கூட செக் பண்ணாம தான் சார் இவ்ளோ தூரம் வந்திங்களா?”

“காதல் மயக்கத்துல பெட்ரோல் லெவல் பாக்கணும்னு தோணல வாணி”

மதுரவாணி கேலியாய் உச்சுக் கொட்டினாள். மதுசூதனன் காரை கட்டைவண்டி வேகத்தில் ஓட்டி கடைசியில் கொண்டு வந்து நிறுத்திய இடம் அவர்கள் வழக்கமாய் வரும் மோட்டல் தான்! அதைப் பார்த்ததும் அவளுக்கு இருந்த கோபமெல்லாம் முற்றிலும் வடிந்துவிட்டது. அவன் எதற்கு அழைத்து வந்திருக்கிறான் என்பதுவும் புரிந்துவிட்டது.

அப்போது இருட்டி விட்டதால் விளக்குகள் எரிந்து கொண்டிருந்தன. அன்றைய தினம் அவர்கள் நின்று பேசிக் கொள்ளும் பள்ளத்தாக்கு அருகே உள்ள பெஞ்ச் ஏரியாவில் கூட விளக்குகள் ஜொலித்தன.

மதுசூதனன் மதுரவாணியை அங்கே அழைத்துச் செல்ல அவளும் மௌனமாய் அவனைத் தொடர்ந்தாள்.

என்ன தான் செய்யப் போகிறான் என்று பார்ப்போமே என்று ஆவலுடன் அவன் பின்னே சென்றவள் அவன் பெஞ்சில் அமரவும் தானும் அமர்ந்தாள்.

“உன்னை ஏன் இங்க கூட்டிட்டு வந்தேனு தெரியுமா?”

“தெரியும்! வேலண்டைன்ஸ் டே அன்னைக்கு நமக்கு ஸ்பெஷலான ப்ளேஸ்ல வச்சு நீ எனக்கு கிப்ட் குடுக்க நினைக்கிற… அம் ஐ ரைட்?”

“ஐயோ! எவ்ளோ புத்திசாலியா இருக்க நீ?”

“ஏன்டா இது உனக்கே கொஞ்சம் ஓவரா இல்லயா? மார்னிங் கல்யாணவேலைல இன்னைக்கு வேலண்டைன்ஸ் டேங்கிற விசயத்தையே மறந்துருப்ப… இப்போ நியாபகம் வந்ததும் கூட்டிட்டு வந்துட்ட.. பட் ஹானஸ்ட்லி இப்போ எனக்கு ஒரு துளி கூட கோவம் இல்ல”

“நிஜமாவா?”

“வீட்டுல உன்னைப் பாத்தப்போ மண்டைலயே ரெண்டு அடி போடலாமானு யோசிக்கிற அளவுக்குக் கோவம் தான்… ஆனா உண்மையா காதலிக்கிறவங்களுக்கு எல்லா நாளும் வேலண்டைன்ஸ் டே தானே! சோ இன்னைக்கு ஒரு நாள் கூத்துக்காக உன் கூட சண்டை போடுறது ரொம்ப ஓவர்னு தோணுச்சு… சோ கோவமும் போயிடுச்சு”

அவளை காதல் மின்னும் விழிகளால் ஏறிட்டவன் “நீ ரொம்ப மாறிட்ட வாணி!” என்று சொல்ல அவளும் அதை புன்னகையால் ஆமோதித்தாள்.

அந்தப் புன்னகையை ரசித்தபடி எழுந்தவன் பெஞ்சில் அமர்ந்திருந்தவள் அருகே முழங்காலிட்டுக் கையை நீட்ட அவள் புரியாது விழித்தாள்.

“உன்னோட காலை வை” என்று தனது உள்ளங்கையை நீட்ட மதுரவாணி திகைத்தாள்.

“என்னடா பண்ணுற? அதுல்லாம் தப்பு… நீ என்னை விட வயசுல பெரியவன்.. எப்போவுமே வயசுல பெரியவங்க சின்னவங்களோட காலை தொடக் கூடாதுனு சொல்லுவாங்க”

அவளின் படபடப்பைக் கண்டு மென்னகை புரிந்தபடி அவளின் பாதத்தை தனது கால் மீது வைத்துக் கொண்டவன் தனது ஷேர்ட்டின் பாக்கெட்டிலிருந்து எதையோ வெளியே எடுத்தான்.

அவை வெள்ளியில் சிறிய கயிறு போல மின்னிய நவீனபாணி கொலுசுகள்! மதுரவாணி ஆச்சரியமாய் பார்த்துக் கொண்டிருக்கும் போதே அதை அவளது காலில் மாட்டிவிட்டவன் அடுத்தக் காலிலும் போட்டுவிட்டு அழகு பார்த்தான்.

“கிப்ட் பிடிச்சிருக்கா மேடம்?”

“ரொம்ப பிடிச்சிருக்கு மது” என்றவளின் குரலில் மிளிர்ந்த சந்தோசத்துக்கு அளவே இல்லை.

அவனை எழுப்பி விட்டவள் பெஞ்சில் அமருமாறு கண் காட்ட அவளருகே அமர்ந்தான் மதுசூதனன்.

மதுரவாணி அவனது புஜத்தைத் தனது கரத்தால் சுற்றி வளைத்தவளாய் அவன் தோள்வளைவில் சாய்ந்து கொண்டாள். மனம் அவள் கண் முன் தெரிந்த வானம் போல நிர்மலமாய் எவ்வித குழப்பமுமின்றி தெளிவாய் இருந்தது.

அந்தத் தெளிந்த மனம் அவளிடம் என்ன சொன்னதோ மதுரவாணியின் உதடுகள் “ஐ லவ் யூ மது” என்று காதலுடன் உரைக்க மதுசூதனன் மகிழ்ச்சியுடன் அவள் நெற்றியில் முத்தமிட்டான். அவன் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவில்லை எனலாம்!

என் வாழ்க்கை; என் சுதந்திரம் என முழுநீளவசனம் பேசுபவளிடம் தனது காதல் எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்திவிட்டது என்ற ஆச்சரியமும் கூடவே அவளும் தன்னைக் காதலிக்க ஆரம்பித்துவிட்டாள் என்ற மகிழ்ச்சியுமாய் திக்குமுக்காடிப் போனான் அவன்.

“ஐ லவ் யூ வாணி” என்று சொல்லிவிட்டுக் கண் மூடி தனது காதலை அவள் உணர்ந்த அத்தருணத்தை அனுபவிக்கத் தொடங்கினான்.

அலை வீசும்🌊🌊🌊