🌊 அலை 32 🌊

என்னில் சரிபாதியாய்

உன்னை எண்ணுகிறேன்!

உன் இதயக்கூட்டில்

வாசம் செய்யும்

சிறு பறவையாய்

என் காதல் வாழ

அனுமதிப்பாயா என்னவளே!

மதுசூதனன் வீட்டுக்கு வந்த பிறகும் அவனால் இயல்பாக இருக்க முடியவில்லை. என்ன தான் மதுரவாணி வீடு வந்து சேர்ந்துவிட்டாள் என சங்கவி சொன்ன போதும் தொலைபேசியில் கேட்ட மதுரவாணியின் குரல் அவனுக்கு உள்ளுக்குள் உளைச்சலை உண்டாக்கியது.

எவ்வளவு நம்பிக்கையுடன் தான் அவளை அழைத்துச் செல்வேன் என்று நின்றாளோ! அவள் முகத்தில் ஏமாற்றத்துடன் அவன் புறக்கணித்துச் சென்ற வலியும் அப்பட்டமாகத் தெரிய அவனால் இரவுணவை நிம்மதியாக உண்ண முடியவில்லை.

வைஷாலியும் மைதிலியும் என்னென்னவோ பேச அவனது தந்தை அதற்கு பதிலடி கொடுப்பது செவியில் விழுந்தாலும் கருத்தில் பதியவில்லை. ஏனெனில் அவனது சிந்தை முழுவதையும் அப்போதைக்கு குத்தகைக்கு எடுத்துக் கொண்டவள் இந்நேரம் எம்மாதிரி மனநிலையில் இருக்கிறாளோ என்ற கலக்கம் அவனுள் எழுந்திருந்தது.

அனைவரையும் சமாளித்துவிட்டு அறைக்குள் சென்று அடைபட்டவனுக்கு மதுரவாணியை அழைத்தால் என்ன என்ற யோசனை வர போனை எடுத்து அழைத்தான். அவளது எண் சுவிட்ச் ஆப் என்ற தகவல் மட்டும் வரவே அவனுக்கு உள்ளுக்குள் எடுத்த உறுத்தல் அதிகரித்தது.

வழக்கமாகத் தூங்கும் நேரத்தில் போனை சுவிட்ச் ஆப் செய்துவிடுவது மதுரவாணியின் வழக்கம்! எப்போதும் பதினொன்று முப்பதுக்கு முன்னர் அவள் உறங்கியதாகச் சரித்திரம் இல்லை. சகோதரிகள் மற்றும் தோழியருடன் அரட்டை அடித்துவிட்டு வீட்டினருடன் வீடியோ காலில் பேசிய பிறகே அவளது நித்திரை ஆரம்பிக்கும்.

அப்படிப்பட்டவள் இன்று இவ்வளவு சீக்கிரமாக உறங்கச் சென்றது அவனுக்குக் குற்றவுணர்ச்சியை உண்டாக்க உடனே கார்ச்சாவியை எடுத்தவன் வேறு எந்த யோசனைக்கும் இடமளிக்காது லவ்டேலை நோக்கிக் காரைச் செலுத்தினான்.

சில மணி நேர பிரயாணத்துக்குப் பின்னர் சங்கவியின் வீட்டை அடைந்துவிட்டான். அன்று அனைவருமே சீக்கிரம் உறங்கிவிட்டனர் போல! அவன் மதுரவாணியை எப்படி சந்திப்பது என்ற யோசனையுடன் நின்றவன் அங்கிருந்தே சுலபமாக பால்கனிக்குச் செல்லும் படி வீட்டை வடிவமைத்திருந்த பொறியாளருக்கு நன்றி தெரிவித்துவிட்டு சிரமத்துடன் அங்கிருந்த பைப்பை பிடித்து ஏறினான்.

ஒரு வழியாக பால்கனியை அடைந்த பிறகு தான் மதுரவாணியின் அறைக்கதவு வெளிப்புறமாக தாழிடப்பட்டிருப்பதை அறிந்தான். இப்போது என்ன செய்ய என்று அவன் யோசிக்கும் போதே கதவு திறக்க அங்கே வரிவடிமாய் தெரிந்த மதுரவாணியைக் கண்டதும் அவளை நெருங்கியவன் அவள் எதையோ கையில் வைத்திருப்பதை கண்டு சுதாரித்து அவள் கரங்களைப் பற்றிக் கொண்டான்.

மற்றவர்களுக்குக் கேட்டுவிடக் கூடாதே என்று கவனத்துடன் அவள் காதருகே குனிந்து “வாணி நான் தான்! சத்தம் போடாத ப்ளீஸ்” என்றவனின் உதடுகள் அவள் காது மடலில் உரசும் சாக்கில் அதை முத்தமிட்டு மீண்டன.

மதுரவாணி சிலையாய் சமைந்திருந்தவள் அவன் கையை உதறித் தள்ளிவிட்டு வேகமாகச் சென்று தன் அறையின் விளக்கை ஒளிரச் செய்தாள்.

 அவள் எதிரே எவ்வித உணர்ச்சியும் காட்டாமல் நின்றிருந்தவனை வெறித்தவள் “இப்பிடி திருட்டுத்தனமா என் ரூம்கு வர்றதுக்கு உனக்கு வெக்கமா இல்ல?” என்று சாட்டையாய் நாக்கைச் சுழற்ற மதுசூதனன் எதுவும் பேசவில்லை.

மெதுவாய் அவளை நெருங்கியவன் அவள் முகத்தை உற்றுக் கவனித்துவிட்டு “ரொம்ப அழுதியா?” என்று கேட்க அவள் அதை ஒப்புக்கொள்ள பிரியமில்லாதவளாய் முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.

அவனோ அவளது முகத்தைப் பிடிவாதமாகப் பற்றி தன் புறம் திருப்பிக் கொண்டவன் “ஐ லிட் எல்லாம் தடிச்சுப் போயிருக்கு… நோஸ் கூட ரெட்டிஷா இருக்கு.. உன்னோட வாய்ஸும் சரியில்ல… உண்மைய சொல்லு… ரொம்ப அழுதியா?” என்று கேட்க

“எனக்கு ஜலதோசம்” என்று ஒற்றை வார்த்தையில் அவளிடமிருந்து பதில் வந்தது.

இவ்வளவு நேரம் இருந்த வெறித்தப்பார்வை அகல கண்கள் மெதுவாய் கலங்க தொடங்கியது. அழக் கூடாது என்று ஆயிரம் முறை சொல்லிக் கொண்டாலும் அவளுக்குக் கண்ணீரைக் கட்டுப்படுத்தும் மந்திரம் தெரியவில்லையே!

அதன் விளைவு அடுத்தச் சில நொடிகளில் கண்ணீர் அவள் கன்னங்களில் வழிந்து ஓட ஆரம்பித்தது.

மதுசூதனன் மௌனமாய் நின்றவன் “ஐ அம் சாரி! நான் உன்னைக் கார்ல கூட்டிட்டு வந்திருக்கணும்… என்னோட மிஸ்டேக் தான்… மிஸ்டேக்னு சொல்லுறத விட ஈகோனு வச்சுக்கோயேன்… பட் என் ஈகோவ விட என்னோட லவ் எனக்குப் பெரிசுனு நினைக்கேன்… அதான் உன் லிமிட்ல இருனு சொன்னவ கிட்ட மறுபடியும் லிமிட்ட கிராஸ் பண்ணிப் பேசிட்டிருக்கேன்” என்று தெளிவாய் உரைக்க மதுரவாணி விலுக்கென்று நிமிர்ந்தாள்.

“அன்னைக்கு நீ என்னை ரூல் பண்ணுற மாதிரி பேசுனது பிடிக்காம நான் ஒரு வார்த்தைய விட்டுட்டேன்… அதுக்குனு நீ இப்பிடி என்னை அவாய்ட் பண்ணி வேடிக்கை பாப்பியா?

எங்க ஸ்கூல்ல ஒரு சிஸ்டர் அடிக்கடி சொல்லுவாங்க, அன்புக்கு மட்டும் அடிமை ஆயிடவே கூடாது வாணினு… ஏன்னா திடீர்னு அது நின்னு போயிடுச்சுனா அந்த வேதனை மரணவேதனையை விட கொடூரமா இருக்குமாம்… ஷீ வாஸ் ரைட்… எந்தக் காலத்துலயும் ஒரு ஆம்பளையோட அன்புக்கு அடிமை ஆயிடவே கூடாது… உங்களோட மேல் ஈகோவால என்னைக்காவது ஒரு நாள் நீங்க எங்கள ஹர்ட் பண்ணுவிங்க”

தனது மோவாயைப் பற்றியிருந்த அவனது கரங்களைத் தட்டிவிட்டவள் அங்கிருந்து பால்கனிக்குச் சென்றுவிட்டாள். ஆனால் அடுத்த நொடிகளில் அவளைப் பின்னிருந்து வளைத்த கரங்களில் சிக்குண்டவள் அதிலிருந்து விடுபட முயல மீண்டும் அவனது உதடுகள் உச்சரித்த வார்த்தை “சாரி வாணி”.

“நான் தப்பு பண்ணிட்டேன் தான்! நானும் சராசரி மனுசன் தானே! தப்பு பண்ணுனா அதுக்குனு ஒரேயடியா தள்ளிப் போயிடுவியாடி? நீ என்னை விலக்கி வச்சு பாக்காத வாணி! ப்லீவ் மீ… யூ ஆர் வெரி வெரி ப்ரீசியஸ் டூ மீ… அதனால தான் உன் கிட்ட நான் உரிமையா பேசுறேன்… இதுல உன்னை ரூல் பண்ணுறதுக்கோ, உன்னை விலக்கி வைக்கிறதுக்கோ எதுவும் இல்ல… இன்னைக்கு நான் செஞ்சது தப்பு தான்.. இந்த தப்பு இனிமே நடக்காது… ஐ ப்ராமிஸ்”

அவள் மௌனமாய் இருக்கவே அவளைத் தன் புறம் திருப்பியவன்
“என்ன செஞ்சா நீ என்னை மன்னிப்ப? சொல்லு இப்போவே செய்யுறேன்” என்று கேட்க மதுரவாணியின் கண்ணீரில் நனைந்த இமைகள் கொட்டிக் கொண்டன. ஆனால் வாயைத் திறந்து அவள் பேசினால் தானே!

“அமைதியா இருக்காதடி… உன்னோட சைலன்ஸ் எனக்குப் பைத்தியம் பிடிக்க வைக்குது வாணி… நான் தான் சொல்லுறேன்ல இனி இப்பிடி நடக்காதுனு… நம்புடி”

மதுரவாணி தன் பெரியவிழிகளால் அவனை ஏறிட்டாள். அவள் அறிந்த அவளது வீட்டின் ஆண்கள் எவருமே தன் தவறிலிருந்து இறங்கி வந்து மன்னிப்பு கேட்டதாய் சரித்திரமே இல்லை!

அவளை விரும்புவன் தன்னைச் சராசரி ஆண் என்று சொல்லிக் கொண்டாலும் அவன் அப்படிப்பட்டவன் இல்லை என்பதற்கு இது ஒன்றே சான்று! இனியும் கோபத்தில் குமுற அவளுக்கு விருப்பம் இல்லை. கூடவே தான் அவனுக்கு எவ்வளவு முக்கியம் என்றால் அவன் இந்த இரவு நேரத்தில் வந்திருப்பான்! தனக்காக யோசிப்பவனுக்காக தானும் கொஞ்சம் யோசிக்கலாம்! தப்பில்லை…

“நான் உன்னை நம்புறேன் மது… நானும் உன் கிட்ட ஒன்னு சொல்லலாமா?”

“ம்ம்”

“இனிமே என்னை யாரோ மாதிரி ட்ரீட் பண்ணாத… இட்ஸ் ஹர்ட்டிங்… எனக்கு உள்ளுக்குள்ள ரொம்ப வலிக்குது…. ஐ டோண்ட் னோ வெதர் ஐ அம் இன் லவ் வித் யூ ஆர் நாட்… பட் நீ என்னை விலக்கி வச்சா எனக்குக் கஷ்டமா இருக்கு… ரொம்ப வலிக்குது”

சொன்னவளின் விழிகளில் வந்த கண்ணீர் அவனது புறக்கணிப்பில் அவள் எவ்வளவு வேதனையுற்றிருக்கிறாள் என்பதைச் சொல்லாமல் சொல்ல மதுசூதனன் அவளது கண்ணீரைத் துடைத்தவன் அவளை இறுக்கமாய் அணைத்துக் கொண்டான்.

“இனிமே எப்போவும் உன்னை நான் என்னை விட்டு விலக விட மாட்டேன்… நீயே விலகிப் போனாலும் நான் அதுக்கு உன்னை அலோ பண்ணவும் மாட்டேன்… பிகாஸ் ஐ லவ் யூ… ஐ லவ் யூ சோ மச்” என்றவன் அவளது உச்சந்தலையில் ஆதரவாய் இதழ் பதித்து அதை உறுதி படுத்தினான்.

மதுரவாணிக்கு இத்தனை நாட்கள் இருந்த தவிப்பு மாறி நிம்மதி பிறந்தது. எப்போதும் தன்னை நெருங்குபவனை விலக்கி வைத்துக் கண்ணால் எச்சரிக்கை விடுப்பவள் இன்று அவன் அணைப்பில் ஆறுதலாய் உணர்ந்தாள்.

அந்த அணைப்பை விலக்க அவனுக்கும் விருப்பமில்லை; அதிலிருந்து விலக அவளுக்கும் எண்ணமில்லை. வினாடிகள் நிமிடங்கள் ஆக திடீரென வீசிய வாடைக்காற்று இருவருக்கும் இடம் பொருள் ஏவலை உணர்த்த மதுரவாணி வேகமாக அவனிடமிருந்து விலகினாள்.

“போதும்! நான் சமாதானமாயிட்டேன்… இப்போ நீ கிளம்பு” என்று சொன்னவளை ஆச்சரியமாய் பார்த்தவன்

“வாட்? இவ்ளோ தூரம் ட்ராவல் பண்ணி வந்தது பாதில கிளம்பவா? நோ வே! நான் இன்னைக்கு நைட் இங்க தான் இருப்பேன்” என்று சொல்லிவிட்டு அவளது அறைக்குள் சென்றுவிட மதுரவாணிக்கு இவ்வளவு நேரம் இருந்த மயக்கம் எல்லாம் அகன்று விட்டது.

“என்ன உளறுற? ஒழுங்கா இப்போ கிளம்பு” என்று அவனை மிரட்டியபடி வந்தவளைக் குறும்பாய் நோக்கியவன் கைகளை உயரே தூக்கிச் சாவகாசமாய் சோம்பல் முறித்துக் கொண்டான்.

“லுக் மிஸ் மதுரவாணி! ஐ அம் சோ டயர்ட் நவ்… என்னால இனியும் டிரைவ் பண்ண முடியாது… சப்போஸ் டிரைவ் பண்ணுனேன்னா டேரக்டா சிவலோகப்பதவி தான்… தூக்கம் கண்ணைச் சுழட்டுதுடி செல்லம்! இங்க பாரேன்! எவ்ளோ பெரிய பெட்! நீ அந்த ஓரமா படுத்துக்கோ… நான் இருக்கிற இடமே தெரியாம இந்த ஓரமா படுத்துக்கிறேன்… என்னைப் போனு சொல்லாத வாணி”

அவனது குறும்பு மிளிரும் விழிகளின் கொஞ்சல்மொழியில் மெய்மறப்பதற்குள் சுதாரித்தவள் “என்னைப் பாத்தா உனக்கு எப்பிடி தெரியுது?” என்று கண்ணை உருட்டி இடுப்பில் கையூன்றி கேட்க

“ம்ம்… நல்ல தூக்கத்துல எழுப்புனாலும் அழகா கியூட்டா டால் மாதிரி தெரியுற! இந்த ஒப்பனையற்ற பேரழகுக்கு நான் அடிமையடி” என்று அவளை ரசனையுடன் பார்த்தபடியே கவிதை சொல்கிறேன் என அவன் லூட்டி அடிக்க மதுரவாணி உள்ளுக்குள் நாணிச் சிவந்தாலும் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை.

வேகமாக அவனருகில் வந்தவள் “நா சீரியஸா சொல்லுறேன் மது! கிளம்பு…. யாரும் பாத்தாங்கனா உன்னையும் என்னையும் தப்பா நினைப்பாங்கடா” என்று தீவிரக்குரலில் சொல்ல

“நானும் சீரியசா தான் சொல்லுறேன் வாணி! என்னால இப்போ டிரைவ் பண்ண முடியாது… பிகாஸ் நான் இப்போ காதல் மயக்கத்துல இருக்கேன்” என்று மீண்டும் கேலி செய்ய மதுரவாணி அறையில் நோட்டமிட்டவள் கீழே கிடந்த ஃப்ளவர் வாஷை மீண்டும் எடுத்தாள்

“இதால மண்டைல ரெண்டு அடி போட்டா மயக்கம் தீருமா சாருக்கு?” என்று அவள் உஷ்ணக்குரலில் கேட்க அவன் பயந்தவனாய் நடித்தான்.

ஆனால் அங்கிருந்து அவனால் போக முடியாது என்பதில் மட்டும் பிடிவாதம் பிடித்தான். மதுரவாணி மிரட்டியும் பார்த்தாள்; கெஞ்சியும் பார்த்தாள். எதற்கும் பலனில்லை என்றதும் அவன் அங்கே தூங்க ஒத்துக் கொண்டாள்.

“நீ பெட்ல படுத்துக்கோ… நான் தரையில படுத்துக்கிறேன்… பட் ரிமெம்பர் ஒன் திங்க்.. இது தான் ஃபர்ஸ்ட் அண்ட் லாஸ்ட் வார்னிங்… இனிமே நீ இப்பிடி ஏடாகூடமா எதாச்சும் பண்ணுனா நான் பொல்லாதவளா ஆயிடுவேன்”

“கண்டிப்பா இன்னொரு தடவை இப்பிடி நடக்காது வாணி! இப்போ தூங்கலாமா? குட் நைட்” என்றவனின் முகத்தில் தெரிந்த சோர்வைக் கண்ணுற்றவள் தரையில் விரித்துவிட்டு விளக்கை அணைத்தாள்.

“பதிலுக்குக் குட் நைட் கூட சொல்ல மாட்டிங்களா மேடம்? ஆனா சிரிக்க மட்டும் செய்விங்க” என்று குறைபட்டான் அவன்.

“நான் ஒன்னும் சிரிக்கலயே! நான் சிரிச்சது இருட்டுல கூட கண்டுபிடிக்கிற அளவுக்கு உன் ஐ பவர் இருக்குதா? நீ மனுசனா? இல்ல ஆந்தையா? ஒழுங்கா தூங்கு… குட் நைட்” என்று கேலி பேசிய மதுரவாணியின் இதழ்கள் உண்மையிலேயே சிரிப்பைப் பூசிக் கொண்டிருந்தன. அதே சிரிப்பு தான் அவன் இதழிலும்!

இந்த இனிய மனநிலையுடன் இரவும் கடந்தது. விடியல் புலர்ந்த போது மதுரவாணி நல்ல உறக்கத்தில் இருக்க மதுசூதனன் தனது மொபைலில் நேரம் பார்க்க அது அதிகாலை நான்கு மணி என்றது.

இப்போது கிளம்பினால் சரியாக இருக்கும்! மெதுவாய் எழுந்தவன் போர்வையை மடித்துவிட்டு உறங்கிக் கொண்டிருந்தவளின் அருகில் அமர்ந்தவன் அவளது கலைந்த கூந்தலை ஒழுங்கு படுத்தினான்.

“குட் மானிங் வாணி!” என்று சொன்னவன் அவள் நெற்றியில் இதழ் பதித்துவிட்டு ஒலி எழுப்பாது அங்கிருந்து வெளியேறினான். பால்கனிக்குச் சென்றவன் எப்படி வந்தானோ அப்படியே இறங்கி கார் நிறுத்தியிருந்த தரிப்பிடத்திலிருந்து அதை எடுத்துக் கொண்டு டெய்சி ரெசிடென்சியல் கம்யூனிட்டியை விட்டு வெளியேறினான்.

அவன் சென்று நெடுநேரம் கழித்து தான் மதுரவாணி விழித்தாள். விழித்தவளின் பார்வை படுக்கையை ஆராய அது ஒழுங்குப்படுத்தி வைக்கப்பட்டிருந்தது. அவன் கிளம்பிவிட்டான் என அறிந்ததும் ஒருவித ஏமாற்றம் சூழ அவன் வீட்டுக்குச் சென்றுவிட்டானா என்று அறிய அவனுக்கு அழைத்தாள்.

போனை எடுத்தவன் “மகாராணிக்கு இப்போ தான் துயில் கலைஞ்சுதா?” என்று கேலியாய் பேச அவன் பத்திரமாய் வீடு போய் சேர்ந்த நிம்மதியில் அவனுடன் வளவளக்க ஆரம்பித்தாள் மதுரவாணி.

இருவரும் தடையற்றுப் பேசிக்கொள்ள மற்றொரு ஜோடியினருக்கு அப்போது தான் வைகறையே வந்தது.

ஸ்ரீரஞ்சனி ஆவலுடன் போனை எடுத்தவள் புலனத்தை எடுத்து ஸ்ரீதரிடம் இருந்து ஏதேனும் செய்தி வந்துள்ளதா என ஆராய்ந்தவள் இன்னும் இல்லை என அறிந்ததும் உற்சாகத்துடன் ஒரு ‘குட் மானிங்’கை தட்டிவிட்டாள்.

சில நிமிடங்களில் அதற்குப் பதில் வரவும் “இன்னைக்கு நான் தான் வின்னர்… பிகாஸ் நான் தான் ஃபர்ஸ்ட் உங்களுக்கு குட் மானிங் சொன்னேன்… சோ டுடே நானே உங்களை மீட் பண்ண வருவேன்… அதான் அந்தாளு ஸ்ரீவத்சனை உண்டு இல்லனு பண்ணிட்டிங்களே! நீங்க இருக்கிறப்போ எனக்கு என்ன பயம்?” என்று பதிலனுப்பினாள் அவள்.

“தாராளமா வா! அம்மாவும் உன்னைப் பாக்கணும்னு சொல்லிட்டே இருக்காங்க… இன்னைக்கு வந்து ஃபுல் டே அவங்களோட ஸ்பெண்ட் பண்ணிட்டுப் போ!… அக்கா வீட்டுல இருக்கிறதால நீ அடிக்கடி உங்கம்மாவையே மறந்துடுறேனு நேத்து தான் ஆன்ட்டி அம்மா கிட்ட கம்ப்ளைண்ட் பண்ணுனாங்க” என்றான் ஸ்ரீதர் கேலியாக.

“அதுல்லாம் நல்லா நியாபகம் இருக்கு டி.சி.பி சார்! என்ன பண்ணுறது? எனக்கு கோயம்புத்தூரை விட லவ்டேல் தான் பிடிச்சிருக்கு”

“ம்ம்… பேசாம நம்ம மேரேஜுக்கு அப்புறம் அங்க ஒரு வீடு பாத்து செட்டில் ஆயிடலாமானு யோசிக்கிறேன்… வாட் அபவுட் யுவர் ஒபீனியன்?”

“நல்ல ஐடியா தான்… ஆனா எனக்கு பொக்கே வாங்கவே காசு இல்லனு நேத்து யாரோ சொன்னாங்க… அவங்களுக்கு வீடு வாங்க மட்டும் காசு இருக்குது பாருங்களேன்”

“சேச்சே! வீடு வாங்குறேனு தான் சொன்னேன்… என் காசுல வாங்குவேனு சொன்னேனா? எனக்கு வாங்கிக் குடுக்கிறதுக்கு என் மாமனார் இருக்காருமா… அவர் கிட்ட கேட்டா ஒரு வீடு என்ன, மொத்த லவ்டேலையும் எனக்கு வாங்கிக் குடுப்பாரு”

“அஹான்! குடுப்பாரு குடுப்பாரு! அவரு பொண்ணை உங்களுக்குக் கட்டி வைக்கிறதே பெருசு… இதுல வீடு வேணுமாம்ல… நல்ல கனவு தான்… ஆனா பலிக்காது மகனே! இன்னும் உங்களுக்கு உறக்கம் கலையல… போய் மூஞ்சிய கழுவிட்டு யோசிங்க” என நொடித்துக் கொண்ட ஸ்ரீரஞ்சனியின் குரல் ஸ்ரீதருக்குள் உற்சாகத்தை ஏற்படுத்த அவளை வேண்டுமென்றே சீண்டிக் கொண்டே அன்றைய நாளை ஆரம்பித்தான் அவன்.

இவ்வாறு இரு ஜோடிகளும் தங்களுக்கு இடையேயான காதலை அவ்வபோது பேச்சிலும் செய்கையிலும் வெளிப்படுத்த வீட்டுப் பெரியவர்களுக்கும் அவர்களின் ஒற்றுமையில் திருப்தி. இரு வீட்டுப் பெரியவர்களும் இரு திருமணங்களையும் ஒரே தேதியில் வைத்துக் கொள்ளலாம் என்ற முடிவுக்கு வர அது காதல் ஜோடிகளுக்கும் ஏற்புடையதாகவே இருந்தது.

அதற்கு இடையில் வைஷாலியின் திருமணம் வேறு இருக்கிறதே! எனவே மதுசூதனன் அதற்கான ஏற்பாட்டில் இறங்க அந்தத் திருமணம் சம்பந்தமாக அடிக்கடி கோவை வந்து சென்ற ஸ்ரீரஞ்சனி முடிந்தவரை ரேவதியுடனும் அவரது மைந்தனுடனும் மனதளவில் நெருங்கிவிட்டாள்.

அதே போல மதுரவாணி வேலைக்குச் சென்று கொண்டிருந்தாலும் நாத்தனாரின் திருமணவேலையில் மனமுவந்து பங்கெடுத்துக் கொண்டாள். இது அவளுக்கு மதுசூதனனின் காதலை முழுவதும் அறிந்து கொள்ளும் வாய்ப்பை அளித்தது.

எனவே இரு ஜோடிகளுக்கும் காலம் காதலும் கனவுகளுமாய் கடந்தது. கூடவே வருங்காலத்துக்கான திட்டமிடலும் சேர்ந்தே நடந்தது.

அலை வீசும்🌊🌊🌊