🌊 அலை 27 🌊
Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels
நீ இரவு நேர வானம் என்றால்
அதில் மின்னும் மதி நான்!
நீ சுழலும் பூமி என்றால்
உனை இயக்கும் ஈர்ப்புவிசை நான்!
நீ பொன்மணல் பரவிய கடற்கரை என்றால்
உனை தீண்டிச் செல்லும் கடலலை நான்!
விவாஹா திருமண மண்டபம்…
மதுசூதனன் மற்றும் மதுரவாணியின் குடும்பத்தினர் மற்றும் உறவினரால் நிரம்பி வழிந்தது. மதுரவாணியின் தரப்பில் அவளது குடும்பத்தினருடன் அவள் சகோதரியின் வீட்டினர் கலந்து கொண்டனர். அது போக சங்கவியின் பெற்றோரும் வந்திருந்தனர்.
இதற்காக சங்கவியின் மாமியார் மாமனார் மதுரையிலிருந்து வந்திருந்தனர். கூடவே ஸ்ரீரஞ்சனியின் பெற்றோர் வேறு! எப்படி பார்த்தாலும் மதுசூதனனின் தரப்பினர் தான் அதிகம்!
வெட்டிங்பிளானரின் நிச்சயதார்த்தத்தில் ஏற்பாடுகள் சோடை போகுமா என்ன! மதுசூதனனின் ஹில்டாப் நிறுவனத்தினர் அந்த மண்டபத்தை பூலோக சொர்க்கமாக மாற்றியிருந்தனர். அலங்கார வேலை எல்லாம் வழக்கம் போல சங்கவி மற்றும் யாழினியின் கைவண்ணம் தான்!
மணமகன் அறையில் மதுசூதனன் ஜரூராக தயாராகிக் கொண்டிருந்தான். கௌதமும் திலீபும் அவனைக் கிண்டல் செய்து கொண்டிருக்க அந்த அறைக்குள் வைஷாலியுடன் பேசியபடி நுழைந்தான் ஸ்ரீதர்.
அவனைக் கண்டதும் மதுசூதனன் புன்னகையுடன் எழுந்திருக்க “என்ன மேன் முகத்துல வெக்கம் தாண்டவமாடுது?” என்று அவனும் கூட சேர்ந்து கலாய்க்க
“ஐ.பி.எஸ் ஆபிசர் இவ்ளோ கேசுவலா பேசுவாங்களா?” என்று கண்ணை விரித்த வைஷாலியைப் பார்த்து புன்னகைத்தான் ஸ்ரீதர்.
“ஏன்மா ஐ.பி.எஸ் ஆபிசரும் மனுசன் தானே! அவங்க எப்போவுமே விறைப்பா காட்டன் சட்டை மாதிரி தான் இருக்கணுமா?” என்று கேலியாய் கேட்டபடியே அவன் மதுசூதனனிடம்
“மாப்பிள்ளைய ஐயர் கூப்பிட்டதால தான் நான் வைஷூ கூட இங்க வந்தேன்… கிளம்புறிங்களா சார்?” என்க அவனும் நண்பர்கள் மற்றும் சகோதரியுடன் கிளம்பினான்.
உறவினர்கள் மற்றும் தொழில்முறை நண்பர்கள் சூழ்ந்திருந்த மண்டபத்தின் ஹாலுக்கு வந்தவன் ஐயர் காட்டிய இடத்தில் அமர வைக்கப்பட இரு குடும்பத்தினரும் அங்கே அமர்ந்து கொண்டனர்.
அதே நேரம் மணமகள் அறையில் மதுரவாணியைத் தயார் செய்து கொண்டிருந்தனர் அழகுநிலையப் பெண்கள். அவளது கழுத்தளவு சிகையை அழகாய் சீவி கொண்டையாய் இட்டவர்கள் அதைச் சுற்றி நவீனபாணியில் பூக்களால் அலங்கரிக்க ராகினியும் ஸ்ரீரஞ்சனியும் அவளுக்கு உதட்டுச்சாயத்துக்கான நிறத்தைப் பரிந்துரைத்துக் கொண்டிருந்தனர்.
“அவளுக்கு நியூட் கலர்ஸ் தான் அழகா இருக்கும்… இந்த ஐ லைனரையும் காஜலையும் கொஞ்சம் டார்க் பண்ணுங்க…. லிப் கிளாஸ் வேண்டானு நினைக்கேன்.. ஏன் மது உனக்கு லிப் கிளாஸ் போடணுமா?”
ஸ்ரீரஞ்சனி கேட்டதும் வேண்டாமென மறுத்தவள் ஒரு முறை கண்ணாடியில் தன்னைப் பார்த்து திகைத்துவிட்டாள்.
அவள் இவ்வளவு அழகியா என்று தன்னைத் தானே கேட்டுக் கொண்டாள். நிச்சயத்தின் உற்சாகம் அவளையும் மெதுவாய் தொற்றிக் கொண்டது. இதோ அவளது தோழியர் மகிழ்ச்சியாய் இருக்கின்றனரே! சற்று முன்னர் வந்து அவளுக்கு முகம் வழித்து திருஷ்டி கழித்த அழகம்மையின் மகிழ்ச்சிக்கும் குறைவில்லை!
அன்னையும் அத்தையும் இருபது வயது குறைந்தவர்களாய் மைதிலியுடன் பேசி சிரித்தபடி தாம்பளம் அடுக்கிய காட்சியும் கண்ணுக்குள் வந்து சென்றது அவளுக்கு. இது எல்லாவற்றுக்கும் மேலாய் சகோதரர்களும் தந்தையும் சிரித்த முகத்தினராய் பழைய கம்பீரத்துடன் மதுசூதனனின் குடும்பத்தினருடன் உரையாடிக் கொண்டிருந்தனர்!
இதோ இந்த அறையில் விளையாடும் சகோதரர்கள் பெற்ற புத்திரச்செல்வங்கள் கூட நிமிடத்துக்கு ஒரு முறை ‘மது மாமா’ என்று அன்பாய் அவன் பெயரைத் தானே மிழற்றுகின்றனர்!
அவளால் சில மாதங்களுக்கு முன்னர் தொலைந்த அவள் குடும்பத்தினரின் சந்தோசத்தை இந்த நிச்சயம் திருப்பிக் கொடுக்குமென்றால் அவளும் அதில் மகிழ்ந்திருப்பது தானே நியாயம்!
அதை எண்ணியபடியே தன் பிம்பத்தை ரசித்தவளை ஸ்ரீரஞ்சனியும் ராகினியும் தோளோடு அணைத்துக் கொண்டனர்.
“ரஞ்சிக்கா போனை எடு… ஒரு செல்பி எடுப்போம்” என்று ராகினி சொல்லவும் ஸ்ரீரஞ்சனி போனில் மூவரையும் போனில் படம் பிடிக்க அப்போது உள்ளே வந்த ஸ்ரீரஞ்சனியின் அன்னை மூவரையும் பார்த்துவிட்டு தாடையில் கை வைத்து அதிசயித்தார்.
“எங்க காலத்துல நிச்சயம் அன்னைக்கு நாங்க இருந்த நிலை என்ன? இந்தக் காலத்துப் பிள்ளைங்களுக்குக் கொஞ்சம் கூட பயமும் இல்ல; தயக்கமும் இல்ல போங்க”
அவர் சொல்லவும் மதுரவாணி சிரித்தவள் “எதுக்கு அத்த பயப்படணும்? அந்த மது மனுசன் தானே” என்று சொல்லிவிட்டு ஸ்ரீரஞ்சனிக்கும் ராகினிக்கு ஹைஃபை கொடுக்க
“மதினி உன்னை நினைச்சு புலம்புனது சரி தான்… இந்த வாய் இருக்கே! இது கமலோட கல்யாணத்துல பாத்தப்போ எப்பிடி இருந்துச்சோ அதே போல தான் இப்போவும் இருக்கு… கொஞ்சம் கூட குறையலடி… சரி இப்பிடி வா” என்றவர் அவளது கழுத்தில் மல்லிமொக்கு ஆரத்தை மாட்டி விட்டார்.
மாட்டி விடும் போதே “இது நீ செலக்ட் பண்ணுன வாழ்க்கைனு மதினி சொன்னாங்க… மாப்பிள்ளையும் பாக்க அம்சமா தான் இருக்காரு… அவங்க குடும்பமும் நல்ல மாதிரி மனுசங்களா இருக்காங்க… இனியும் நீ சின்னப்பிள்ளை இல்ல… பொறுப்பான பிள்ளையா நடந்துக்கணும்… சரியா?” என்று சொன்னதிலேயே அவளது செய்கைகளை அவர் ஏற்றுக் கொண்டது தெரிந்தது.
அவர் சொன்னதற்கெல்லாம் தலையாட்டி வைத்தவளின் மோவாயைக் கிள்ளி முத்தமிட்டவர் “எனக்கு ஒரு மகன் இருந்திருந்தா என் தங்கத்த கட்டி வச்சிருப்பேனே” என்று கேலியாய் சொன்னபடியே அவளை அழைத்துச் சென்றார்.
மதுரவாணி தைரியமானவள் தான்! ஆனால் ஏனோ அன்றைய தினத்தில் உறவினர் கூட்டம் அவளுக்கு அர்த்தமற்ற அச்சத்தைக் கொடுத்தது.
அதை முகத்தில் காட்டிக் கொள்ளாது தலையைக் குனிந்தபடியே தனது குடும்பத்தினர்களின் அருகே அமர்ந்து கொண்டாள். அழகம்மையும் விசாலாட்சியும் அவளின் பதவிசான செய்கையில் மனம் பூரிக்க லோகநாயகி தன் மகள்களிடம் வீட்டுக்குச் சென்றதும் மறவாது மதுரவாணிக்கு திருஷ்டி சுற்றி போட வேண்டுமென கூறினார்.
அதே நேரம் ஸ்ரீரஞ்சனியைக் கண்ட ரேவதி பூவாய் மலர்ந்த சிரிப்புடன் அவளைத் தன்னருகில் அழைக்க அவரருகே அமர்ந்திருந்த ஸ்ரீதர் நிமிர்ந்து அவளைப் பார்த்தவன் ஸ்தம்பித்தான்.
சிவப்புவண்ணப் பட்டுப்புடவையில் தேவதையாய் மின்னியவளின் புன்னகை சிந்தும் வதனம் அவனை ஒரு நிமிடம் பேச்சு மூச்சற்றவனாய் ஆக்க ரேவதி மைந்தனின் இந்நிலையைக் கவனித்தவராய் நமட்டுச்சிரிப்புடன் அவளைத் தன்னருகில் அமரவைத்துக் கொண்டார்.
“ஏன்டா பூ வைக்கலயா? பட்டுப்புடவைக்கு பூ வச்சா தான் அழகா இருக்கும்… இரு” என்றவர் தனக்கு அருகில் அமர்ந்திருந்த வைஷாலியிடம் மல்லிகைச்சரம் எடுத்து வருமாறு பணிக்க அவளும் பூவுடன் திரும்பினாள்.
அதை ஸ்ரீரஞ்சனியின் கரத்தில் திணித்தவர் “இதை வச்சிக்கோ… பாக்க மகாலெட்சுமி மாதிரி இருப்ப” என்று சொல்ல அவளோ
“இல்ல ஆன்ட்டி! நான் வச்சா பூ நிக்காது… வழுகி விழுந்துடும்… நீங்க வச்சு விடுங்களேன்” என்று ஆர்வமாய் சொல்லவும் அவர் தயங்கினார்.
“இல்லடா… நான் எப்பிடி?” என்று தயங்க அவளோ “ஏன் ஆன்ட்டி? நீங்க வச்சுவிட்டா என்னவாம்? உங்க சன் எதுவும் நினைப்பாரா?” என்று கேட்டுவிட்டு ஸ்ரீதரை முறைக்க
“நான் பாட்டுக்குச் சிவனேனு இருக்கேன் ரஞ்சனி… என்னைய ஏன்மா டார்கெட் பண்ணுற?” என்று அப்பாவி போலச் சொல்லிவிட்டுத் தோளைக் குலுக்கினான் அவன்.
“அப்புறம் என்ன ஆன்ட்டி! வச்சு விடுங்க… அந்தக் காலத்து மனுசங்க மாதிரி யோசிக்காதிங்க… யாரு கையால வச்சுக்கிட்டாலும் பூ எனக்கு அழகு தான் சேர்க்கும்… அதோட ஒருத்தவங்க ஒரு விசயத்தை அன்பா குடுக்கிறப்போ அதுல எந்த தோசமும் கிடையாது; குத்தமும் கிடையாது… நீங்களே வச்சு விடுங்க…. இல்லனா நான் பூ வச்சுக்கவே மாட்டேன்”
அவள் பிடிவாதம் பிடித்த அழகில் அவரே வைத்துவிட்டார். இளம்வயதில் வாழ்க்கைத்துணையை இழந்தவரை உறவினர்கள் என்றோ அமங்கலச்சின்னமாய் நடத்திய விதம் இன்றைக்கும் அவருக்குள் வலித்துக் கொண்டிருந்தது.
ஆனால் இந்தச் சின்னப்பெண் எவ்வளவு முதிர்ச்சியாய் பேசி அனைத்தையும் துடைத்துவிட்டாள் என்று மனம் நெகிழ்ந்து போனார் ரேவதி.
அவரது மைந்தனோ ஸ்ரீரஞ்சனியின் முத்துப்பற்கள் மின்னும் சிரிப்பையும் அஞ்சனம் தீட்டிய நயனங்களையும் வைத்தக் கண் வாங்காது பார்த்துக் கொண்டிருந்தான். என்ன மனதின் உணர்வுகளைக் காட்டாத முகம் அவனுடையது! அதனால் தப்பித்தான்!
அதே நேரம் மதுசூதனனின் விழிகள் முதன் முதலில் தன்னவளை பட்டுப்புடவையில் கண்ட சந்தோசத்தில் இமைக்க மறந்தது. ஒரு முறை அவள் நேருக்கு நேராகப் பார்த்து அவளது வதனத்தின் பேரழகை ரசிக்க அவனுள்ளம் ஆவல் கொண்டது. அவனது விழிகளும் அவளைப் படம் பிடிக்க தயாராய் தான் இருந்தது! ஆனால் அவள் தான் தலை நிமிர மாட்டேன் என அடம்பிடிக்கிறாளே!
செல்லமாக அலுத்துக் கொண்ட வேளையில் மதுரவாணி மெதுவாய் தலை நிமிர இருவரது கண்களும் நேர்க்கோட்டில் சந்தித்துக் கொண்டன. எப்போதும் குழப்பமும் கோபமுமாய் இருப்பவளின் முகத்தில் இன்று தெளிவு பிறந்திருக்க மதுசூதனனுக்கு இன்று அவள் புதிதாய் தெரிந்தாள்.
மதுரவாணிக்கோ அவனது குறும்பு மின்னும் விழிகளைக் காணும் போது தேயிலைத்தோட்டத்தின் முழுமதி நாள் தான் நினைவுக்கு வந்தது. அந்த நினைவு மனதில் தோன்றும் போதே இடையில் அவன் கரம் அழுத்திய உணர்வு இன்றும் ஏற்பட அவளது உதடுகளில் வெட்கப்புன்னகையும் கன்னங்களில் நாணச்சிவப்பும் குடியேறியது.
இக்கண்கொள்ளா காட்சியைக் கண்ட மதுசூதனனின் மனசாட்சி “இதை அப்பிடியே கேப்சர் பண்ணி உன்னோட ஹார்ட்ல மதுரவாணி மை டியர் ஸ்வீட் ஹார்ட்ங்கிற ஃபோல்டர்ல சேவ் பண்ணிக்கோ” என்று அவனைக் கேலி செய்ய அவனும் அதை கணநேரம் கூட தாமதிக்காது செய்து முடித்தான்.
இதே இனிய மனநிலையுடன் உற்றார் உறவினர் முன்னிலையில் அனைவரின் ஆசியுடன் லக்னப்பத்திரிக்கை வாசிக்கப்பட்டு இருவரும் மோதிரம் மாற்றிக்கொள்ளும் நேரமும் வந்துவிட்டது.
மதுசூதனன் மதுரவாணியின் தளிர்விரலில் மோதிரத்தை மாட்டிவிட்டவன் மனதுக்குள் “இனிமே நீ என்னோட வாணி! உன்னையும் என்னையும் யாராலயும் பிரிக்க முடியாது! இது வெறும் மோதிரம் இல்ல! நம்ம ரெண்டு பேரையும் இன்னும் ஒரு வருசத்துக்குப் பிணைச்சு வைக்க போற அஸ்திரம்” என்று சொல்லிக் கொண்டான்.
மதுரவாணியோ “என்னோட சுதந்திரமான வாழ்க்கைங்கிற கனவு கனவாவே போயிடும்ங்கிறது இப்போ எனக்குப் புரிஞ்சிடுச்சு… ஆனா நான் எப்போவுமே என்னோட ஒரிஜினாலிட்டிய இழந்துட மாட்டேன்… நிச்சயம் முடிஞ்சாலும் சரி; கல்யாணமே ஆனாலும் சரி! இந்த மதுரவாணி அவளோட கொள்கைல இருந்து மாறவே மாட்டா” என்று சூளுரைத்துக் கொண்டபடி மதுசூதனனின் விரலில் மோதிரம் போட அவளது முகத்தில் உண்டான உணர்வுக்கலவைகளை அவன் கவனித்து விட்டான்.
மீண்டும் இவள் ஏதோ தாறுமாறாக சிந்திக்கிறாள்! இப்படியே இவள் யோசிப்பது நல்லதல்ல! முதலில் இவளது குழப்பம் முழுவதையும் துடைத்தெறிய வேண்டும்! ஆனால் அதற்கு இது நேரமல்ல!
மதுசூதனன் இந்த நிச்சயதார்த்த களேபரங்கள் முடிந்ததும் அவளிடம் பேச வேண்டுமென முடிவு செய்து கொண்டான்.
அதே நேரம் தனித்திருந்த ஸ்ரீரஞ்சனியின் அன்னையும் ரேவதியும் பேசிக் கொண்டிருக்க ரேவதி அவரிடம்
“ரஞ்சனிக்கு வரன் பாக்குறிங்களா என்ன?” என்று கேட்டு வைக்க அவரும் ஆமென்றவர் அங்கே ஸ்ரீரஞ்சனியிடம் பேசிக் கொண்டிருந்த ஸ்ரீதரை ஓரக்கண்ணால் பார்த்தபடியே
“நீங்களும் உங்க மகனுக்கு பொண்ணு பாக்குறிங்களா?” என்று பதிலுக்குக் கேட்டார்.
அதன் பின்னே பெண்ணைப் பெற்றவரும் பையனைப் பெற்றவரும் என்ன பேசிக் கொள்வரோ அந்தப் பேச்சுவார்த்தை ஆரம்பித்தது.
ஆனால் இதை ஸ்ரீரஞ்சனியும் ஸ்ரீதரும் அறியவில்லை. இருவரும் விவாதித்துக் கொண்டிருந்த விசயமே வேறு!
“உனக்குப் புரியல ரஞ்சனி! அந்த ஸ்ரீவத்சன் மோசமான ஆளு! அவருக்கு என் மேல கை வைக்கிற அளவுக்குத் தைரியம் கிடையாது… அதான் எனக்கு நெருக்கமானவங்கள வச்சு என்னை டார்கெட் பண்ணுவாருனு நான் கெஸ் பண்ணுறேன்… எனக்கு நெருக்கமானவங்க ரெண்டே பேரு தான்… ஒன்னு அம்மா; இன்னொன்னு நீ”
அவன் அவ்வாறு சொல்லவும் திடுக்கிட்ட ஸ்ரீரஞ்சனி அவனை வெட்டுவது போல முறைக்க உடனே
“ஐ மீன் நீ எனக்கு நெருக்கமானவனு அந்தாளு நினைக்கிறாரு… சோ கொஞ்சம் சேஃபா இருந்துக்கோ” என்றவனின் குரலில் கொட்டிக் கிடந்த அக்கறை அவளது மனதை நெகிழ வைத்தது.
இருந்தாலும் நழுவிய இதயத்தைப் பிடித்து நிறுத்திவிட்டு “ஏன் சார் இப்பிடி பயப்படுறிங்க? முதல்ல நானும் கொஞ்சம் பயந்தேன் தான்! அப்புறம் தான் அவங்களாம் வேஸ்ட் பீஸ்னு தெரிஞ்சுது… நீங்களும் அவங்கள மறந்துடுங்க சார்” என்று அமர்த்தலாய் உரைத்தவளை உஷ்ணப்பார்வை பார்த்தான் ஸ்ரீதர்.
“வாட் த ஹெல்? அந்தாளைப் பத்தி தெரிஞ்சதுக்கு அப்புறம் தான் டூ டேய்ஸா அம்மாக்கு செக்யூரிட்டிக்கு ஆளை வச்சிருக்கேன்… உனக்கு எதாவது ஆயிடுமோனு பதற காரணமும் இது தான்… நீ என் கிட்ட இருந்து ரொம்ப தூரமா இருக்க ரஞ்சனி..; ஒவ்வொரு தடவையும் உன்னோட சேஃப்டி பத்தி நான் கவலைப்பட முடியாது… அதான் சொல்லுறேன்… கொஞ்சம் கவனமா இருனு… அதைப் புரிஞ்சிக்காம உளறாத”
“அஹான்! பார்றா சாருக்குக் கோவம் வருது போல! விட்டா நெத்தில கன்னை வச்சு மிரட்டுவிங்க போல”
“தேவைப்பட்டா அதையும் செஞ்சு தானே ஆகணும்… ஏன்னா சொல்பேச்சு கேக்காதவங்களை அதட்டி உருட்டித் தான் வழிக்குக் கொண்டு வரணும்…”
அவன் இறுகியக்குரலில் சொன்ன விதம் ஸ்ரீரஞ்சனியை உசுப்பேற்ற அவளும் பதிலுக்குச் சீறத் துவங்கினாள்.
“ஓஹோ! உங்க டைம் ஓவர் டைமா தான் போயிட்டிருக்கு டி.சி.பி சார்… இந்த ஆர்டர் போடுற வேலை, மிரட்டுற வேலைலாம் என் கிட்ட செல்லுபடி ஆகாது… ஏதோ தெரியாம ரெண்டு தடவை, ரெண்டே ரெண்டு தடவை உங்களோட குளோசா பேசிட்டேன்… அதுக்குனு என்னையும் உங்களையும் சம்பந்தப்படுத்திப் பாத்தா நானா பொறுப்பு? அரண்டவன் கண்ணுக்கு இருண்டதுலாம் பேயாம்… அது மாதிரி நீங்களும் எடுத்ததுக்குலாம் பயந்துட்டு என்னையும் டென்சன் ஆக்காதிங்க… சை! சரியான பயந்தாங்கொள்ளி”
“ஏய் யாருடி பயந்தது?”
“என்னது ‘டி’யா? போயா யோவ்! ஐ.பி.எஸ்னு மரியாதை குடுத்தா நீ என்னை ‘டி’ போட்டுக் கூப்பிடுவியா? ஆளைப் பாரு! பனைமரத்துக்கு ஷேர்ட் பேண்ட் போட்டுவிட்ட மாதிரி இருந்துகிட்டு சும்மா அப்பிடி இரு, இப்பிடி இருனு ஆர்டர் போடுறது! இதுக்கு மேல பேசுனா நான் மனுசியா இருக்க மாட்டேன்”
“இப்போ மட்டும் நீ மனுசியாவா இருக்க? போய் கண்ணாடில உன் மூஞ்சிய பாரு! பாக்குறதுக்கு அப்பிடியே பிசாசு மாதிரி இருப்ப… தெரிஞ்ச பொண்ணாச்சே! சின்னவயசுல அல்பாயுசுல போய் சேர்ந்துட கூடாதேனு அக்கறைல சொன்னா நீ ஓவரா ஆட்டிட்டியூட் காட்டுற… எப்பிடியோ போய் தொல”
இவ்வாறு இவர்கள் பதிலுக்குப் பதில் பேசி சண்டை போடுவது தூரத்தில் இருந்த அவர்களின் அன்னையர்களின் பார்வைக்கு அவர்கள் ஏதோ உரிமையாகப் பேசுவது போல தோற்றமளித்தது. அவர்கள் அதைப் பார்த்துவிட்டுப் பூடகமாய் சிரித்துக் கொண்டனர்.
அதே நேரம் மதுரவாணியின் குடும்பமும் மதுசூதனனின் குடும்பமும் பேசி சிரித்து இரண்டறக் கலந்து விட்டனர். அவள் அக்காட்சியை மகிழ்ச்சியுடன் கண்டுகொண்டிருக்க அவளிடம் வந்த வைஷாலி மெதுவாய் பேச்சு கொடுத்தாள்.
“நான் உன்னோட ரெஸ்யூமை ஹெச்.ஆருக்கு ஃபார்வேட் பண்ணிருந்தேன் வாணி! இப்போ எங்க கம்பெனியோட ஊட்டி பிராஞ்ச்ல வேகன்சிக்கு வாக்-இன் ஸ்டார்ட் பண்ணப் போறாங்க… உன்னோட ரெஸ்யூமை பிரையாரிட்டி குடுத்து எடுத்து வச்சிட்டாரு… இன்னும் டூ டேய்ஸ்ல உனக்கு இண்டர்வியூ… ஆனா மாமா உன்னை ஊருக்குக் கூட்டிட்டுப் போகப் போறதா அப்பா கிட்ட சொல்லுறாரு வாணி”
மதுரவாணி அதைக் கேட்டவள் மெதுவாய் புன்னகைத்துவிட்டு “எங்க ஊர்ப்பக்கம் நிச்சயம் பண்ணுனதுக்கு அப்புறம் மாப்பிள்ளையும் பொண்ணும் பாத்துக்கிறது வழக்கமில்ல.. போன்ல வேணும்னா பேசிக்கலாம்… நிச்சயம் முடிஞ்சும் நான் இங்க இருந்தா ஊர்ல ஒரு மாதிரி பேசுவாங்கனு அப்பா நினைச்சிருக்கலாம்.. அதான் கூட்டிட்டுப் போறேனு சொல்லுறாரு… விடு வைஷூ! எல்லாருமே ஆசைப்படலாம்… ஆனா ஒரு சிலருக்குத் தான் அந்த ஆசைகள் நிறைவேறும்… என்னோட ஆசை எல்லாமே நிறைவேறாத ஆசைகள் தான் போல” என்று சொல்லிவிட்டு இயல்பாக காட்டிக் கொள்ள முயன்றாள்.
ஆனால் வைஷாலி மதுரவாணியின் முகமாற்றத்தைக் கண்டுகொண்டவள் அதை மறவாது அண்ணனிடம் தெரிவித்துவிட்டாள். மதுசூதனன் யோசனையுடன் மதுரவாணியைப் பார்க்க அவளோ மோதிரவிரலில் அவன் போட்ட நிச்சயதார்த்த மோதிரத்தையே பார்த்துக் கொண்டிருக்க அவளைச் சூழ்ந்திருந்த உறவுக்காரப்பெண்கள் எதையோ சொல்லவும் சிரிக்கிறேன் என்று உதட்டை இழுத்துப் பிடித்து வைத்தாள்.
அவளுடன் பழகிய இத்தனை நாட்களில் அவள் உண்மையாகச் சிரிக்கிறாளா போலியாகச் சிரிக்கிறாளா என்பது கூட அறியாதவனா அவன்! இந்தச் சிரிப்பு அவனை வதைக்க அவளைப் பழையபடி துறுதுறுவென உலா வரும் மதுரவாணியைப் பார்க்க அவன் எதையும் செய்யத் தயாரானான்.
இளையவர்களின் மனநிலை இவ்வாறிருக்க பெரியவர்களோ தங்களின் பிள்ளைகளுக்குத் தகுந்த வாழ்க்கைத்துணை அமைந்துவிட்ட பெரும் நிம்மதியில் திளைத்தனர். என்ன திருமணத்துக்கு இன்னும் ஒரு வருடம் இருக்கிறது! அதுவும் கூட நன்மை தானே! இருகுடும்பமும் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு நட்பு பாராட்ட இந்த ஒரு வருட காலத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என ராமமூர்த்தி கூற ரத்தினவேல் பாண்டியனும் அதை ஆமோதித்தார்.
இவ்வாறு பல்வேறு விதமான மனிதர்களின் பலவித உணர்ச்சிப்போராட்டங்களுக்கு நடுவே திருநிறை செல்வன் மதுசூதனன் மற்றும் திருநிறை செல்வி மதுரவாணியின் நிச்சயதார்த்தம் இனிதே நிறைவுற்றது.
அலை வீசும்🌊🌊🌊