🌊 அலை 26 🌊

காரணமின்றி சிரிக்க வைக்கும்

காரணத்தோடு அழவும் வைக்கும்

நிகழ்காலம் நிறமாலை ஆகும்

வருங்காலம் வசந்தமாய் தோன்றும்

கடந்தகாலம் கண்ணிலிருந்து மறையும்!

அவளும் அவனுமாய் தனித்திருந்தவர்களை

இனி அவர்களாய் ஒன்று சேர்த்து வைக்கும்!

காதல் என்ற மாயப்பெரும் சுழல்!

மறுநாள் விடியல் இயல்பாக கடந்தது. வழக்கம் போல பெண்கள் விழித்துக் கொண்டு வீட்டுவேலைகளை முடித்துவிட்டு குழந்தைகளையும் பள்ளிக்கு அனுப்பிவிட்டு நிமிர்ந்த வேளை நதியூரின் பெண்ணரசிகள் அனைவரும் சங்கரபாண்டியனுடன் சங்கவியின் வீட்டுக்கு வந்து சேர்ந்தனர்.

அழகம்மைக்கு பேத்தியைக் கண்டதும் கண்ணில் தாமிரபரணி ஆறு பெருக்கெடுக்க இருவரும் ஒரு மூச்சு அழுது தீர்த்தனர். விசாலாட்சி தனது மருமகள்களையும் அண்ணன் மனைவியையும் அவர்கள் அழுது தீர்க்கட்டும் என்று சொல்லி அழைத்துச் சென்றுவிட்டார்.

வந்ததும் எதிர்பார்த்தபடியே சங்கவிக்கும் யாழினிக்கும் விழுந்த திட்டுக்களுக்கு அளவே இல்லை. சங்கவியால் பதில் பேசவும் முடியவில்லை. வழக்கம் போல கார்த்திக்கேயன் தான் வந்து காப்பாற்றினான்.

“திட்டணும்னா உங்க சீமந்தபுத்திரிய திட்டுங்க… இவ என்ன பண்ணுவா? அவ அடம்பிடிச்சா இவளால என்ன தான் பண்ண முடியும்மா?”

மகனது பேச்சிலிருந்த நியாயம் புலப்பட அமைதியானவர் அவளது உடல்நலனை விசாரிக்கவே லீலாவதியும் பிரபாவதியும் அவர் இனி கோபப்பட வாய்ப்பில்லை என்பது தெரிந்துவிட தங்களது உடைமைகளை எங்கே வைக்க என்று புரியாது விழித்தனர்.

யாழினி இருவரையும் கையோடு அழைத்துச் சென்றுவிட ஸ்ரீரஞ்சனியும் ராகினியும் விக்னேஷையும் கணேஷையும் விளையாட்டு காட்ட அழைத்துச் சென்றுவிட்டனர்.

சங்கரபாண்டியன் “என்ன இருந்தாலும் நம்ம சாதிசனத்துல மாப்பிள்ளையே இல்லனா கோயம்புத்தூர்ல உமக்கு மருமகப்பிள்ளைய தேடுனீரு மாப்பிள்ள?” என்று தனது ஆதங்கத்தை ரத்தினவேல் பாண்டியனிடம் கொட்ட

“விடுங்க மாப்பிள்ள! நம்ம பிள்ளை ஆசைப்பட்டுட்டா… மருமகனும் நல்ல குணம்; நம்ம பிள்ளைய புரிஞ்சுகிட்டு நீக்குப்போக்கா போற மனுசன்னு பேசுறப்போவே தெரியுது” என்று ரத்தினவேல்பாண்டியன் சமாதானம் செய்ய

“அதுவும் சரி தான்! நீரு பெத்து வச்சிருக்கிற அல்லிராணிக்கு ஏத்த மருமகனைத் தான் பிடிச்சிருக்கீரு! நான் ஒருத்தன், நம்ம வீட்டுப்பிள்ளைய இத்தனை நாள் பாக்காம இருந்துட்டு உம்ம கூட உக்காந்து வழக்கு பேசிட்டிருக்கேன் பாரும்! என்னைச் சொல்லணும்” என்று தன் மருமகளைத் தேடிச் சென்றவர் அழுது கொண்டிருந்த அழகம்மையையும் மதுரவாணியையும் ஒரே அதட்டலில் கப்சிப்பாக்கினார்.

அதன் பின்னர் காலையுணவுக்கு அனைவரும் ஒன்று கூட பேச்சு வீட்டின் மூத்த மருமகனைப் பற்றி திரும்பியது.

“என்னத்தா இன்னும் எத்தன வருசத்துக்கு மருமகப்பிள்ளை இப்பிடி கண் காணாத நாட்டுல கஷ்டப்படணும்? நம்ம ஊருல இல்லாத வேலையா?” என்று விசாலாட்சி கமலேஷைக் குறித்துக் கேட்க

“இன்னும் ஒரு வருசம் தான் சித்தி! அதுக்கு அப்புறமும் அவரும் அண்ணாவும் வந்துடுவாங்க” என்று யாழினிக்கும் சேர்த்தே பதிலளித்தபடியே அனைவரின் தட்டுக்கள் காலியாவதைக் கவனித்துப் பரிமாறினாள் சங்கவி.

“எப்பிடியோ உனக்கும் யாழியும் மாப்பிள்ளைக்கு மகேஷ் தம்பியும் துணையா இருக்கிறதால சிரமம் தெரியலத்தா!” என்ற ரத்தினவேல் பாண்டியனின் பேச்சைக் கேட்டுத் தலையாட்டியபடியே அனைவரும் உணவை விழுங்கிவைத்தனர்.

ஸ்ரீரஞ்சனி சாப்பாட்டைக் கொறிப்பதைக் கண்டு “என்னம்மா இப்பிடி அணில்பிள்ளையாட்டம் கொறிக்கிற? இந்த வயசுல கை நிறைய அள்ளி வாய் நிறைய சாப்பிடணும்னு ஆச்சி சொல்லுவாங்க… நீ இப்பிடி கிள்ளி சாப்பிடுறியே” என்று அங்கலாய்த்த பிரபாவதிய அவள் தட்டில் இன்னும் இரண்டு இட்லிகளை வைத்து அவற்றை இரண்டு கரண்டி சாம்பாரில் குளிப்பாட்ட இனி வேண்டாமென மறுக்க வழியின்றி சாப்பிட ஆரம்பித்தாள் ஸ்ரீரஞ்சனி.

சாப்பிட்டதும் லீலாவதியும் பிரபாவதியும் தாங்கள் வீட்டை ஒழுங்குபடுத்துவதாகச் சொல்லிவிட்டனர். எனவே யாழினியும் சங்கவியும் ஸ்ரீரஞ்சனியை அழைத்துக் கொண்டு பொக்கே ஷாப்புக்குச் சென்றுவிட மதுரவாணி தனது குடும்பத்துடன் தனித்து விடப்பட்டாள்.

சரவணனும் கார்த்திக்கேயனும் தந்தை மற்றும் மாமாவுடன் நிச்சயதார்த்த வேலைகளில் மதுசூதனனுக்குக் கூடமாட உதவுகிறோம் என்று சொல்லிவிட்டுக் கிளம்பினர்.

லோகநாயகியும் அழகம்மையும் ஒரு பக்கம் உட்கார்த்து சமையலுக்கு காய்கறிகளை நறுக்கிக் கொடுத்தபடி கதை பேச விசாலாட்சி மகளை அழைத்து தன்னருகில் அமர வைத்துக் கொண்டார்.

“என் தங்கம்! ஏன்டி முடிய வெட்டிக்கிட்ட? நான் ஆசை ஆசையா செக்குல ஆட்டுன தேங்கா எண்ணெயும் கரிசலாங்கண்ணி தைலமும் தேய்ச்சு வளத்த முடியாச்சே! திருச்செந்தூருல போன வருசம் பூமுடி எடுக்கணும்னு அத்த சொன்னப்போ கூட வேண்டாம்னு சொன்னேனே… இப்பிடி கட்டையும் குட்டையுமா வெட்டிக்கிட்டு ஆம்பளைப்பயலாட்டம் இருக்கிறத பாரு”

ஆதங்கமும் பாசமுமாய் பேசிய படியே கையோடு கொண்டு வந்திருந்த கரிசலாங்கண்ணி தைலத்தை வழிய வழிய தேய்த்துவிட்டவர் அவள் மறுக்க மறுக்க கேளாது கையோடு கொண்டு வந்திருந்த சிகைக்காய் பொடியுடன் அவள் கூந்தலை அலசிவிட்டு குளிக்கச் சொன்ன பிறகு தான் ஓய்ந்தார்.

மதுரவாணி அடம்பிடித்தாலும் இந்த கரிசலாங்கண்ணி தைலமும் சிகைக்காய் கலவையும் அவள் அன்னையின் அன்பல்லவா! எனவே ஒரேயடியாக வேண்டாம் என மறுக்காது நல்லப்பெண்ணாய் குளித்துவிட்டு வந்தாள்.

கூந்தலை உலர்த்திக் கொண்டிருந்தவளிடம் லோகநாயகி பேச்சு கொடுத்தார்.

“உன்னைப் பத்தி என்னென்னமோ சொல்லுறாவளே மதுரா! ஆனா நான் எதையும் நம்பல… என் தங்கத்த பத்தி எனக்குத் தெரியும்.. நீயாவது வீட்டுக்குத் தெரியாம ஒருத்தனை காதலிக்கிறதாவது… நீ வீட்டை விட்டுப் போனதுக்கு இங்க இருக்கிறவியளோட முரட்டுத்தனம் தான் காரணம்னு எனக்குத் தெரியும்! இங்க வந்ததுக்கு அப்புறம் வேணும்னா உனக்கு அந்தப் பையனைப் பிடிச்சிருக்கலாம்!

ஆனா இப்போ நம்ம வீட்டுல நிலமை மாறிடுச்சு… உங்க அப்பாவும் மாமாவும் இந்த அடிதடிய விட்டுட்டு இப்போ மில்லையும் தோட்டம் தொரவையும் மட்டும் தான் பாக்காங்க… மருமகப்பிள்ளைகளும் முன்ன மாதிரி எடுத்ததுக்கு எல்லாம் கைநீட்டுறது இல்ல… நம்ம பிரபாவ இந்தி கிளாசுல மருமகன் சேர்த்து விட்டிருக்காரு தெரியுமா?’

அவர் பேச பேச மதுரவாணிக்கு ஆச்சரியம் தாங்கவில்லை. உலகமே அழிந்தாலும் இவர்கள் மாற மாட்டார்கள் என்று எண்ணியிருந்தவளுக்கு தனது குடும்பத்தவர்களின் இம்மாற்றம் ஆச்சரியத்தோடு சந்தோசத்தையும் அள்ளிக் கொடுத்தது.

இதே மகிழ்ச்சியுடன் இருந்தவளின் மனதில் மதுசூதனனின் முகம் நிழலாடியது. அவனுடனான நிச்சயத்தை நினைக்கும் போது சந்தோசமும் இல்லாத துக்கமும் இல்லாத ஒரு உணர்வு! நியாயப்படி இல்லாத ஒன்றை சொல்லி ஏமாற்றுகிறாயே என்று அவன் மீது கோபம் வந்திருக்க வேண்டும்.

ஆனால் ஏனோ அவளால் கோபப்பட இயலவில்லை! காரணம் என்னவென்று அவளால் வரையறுக்கவும் முடியவில்லை. என்ன தான் தன்னிடம் அவன் அடிக்கடி திருமணம் குறித்து குறிப்பு காட்டி பேசினாலும் அவை அனைத்தும் இது நாள் வரை விளையாட்டுப்பேச்சு என்றே எண்ணியிருந்தவளுக்கு அதில் அவன் தீவிரமாய் இருப்பதை அறிந்ததும் எப்படி எதிர்வினை ஆற்றுவது என்று விளங்கவில்லை.

ஆனால் ஒன்று, முன்பெல்லாம் அவனை நினைத்தால் தனுஜா நினைவுக்கு வருவாள்; நேற்றில் இருந்தோ அவனை நினைத்தால் தேயிலைத்தோட்டத்தில் முழுநிலவொளியில் தன்னைக் கரங்களில் தாங்கியவனே நினைவுக்கு வந்தான். தலையை உலுக்கி அவன் நினைவுகளைத் துரத்த முயன்று தோற்றாள்.

**************

காவல் ஆணையர் அலுவலகம்

ஆணையருக்குச் சல்யூட் அடித்துவிட்டு அவர் முன்னே இருந்த இருக்கையில் அமர்ந்தான் ஸ்ரீதர். அவரது முகம் இப்போது தான் தெளிவாய் இருந்தது. வருசக்கணக்கில் இழுத்தடித்த வழக்கின் குற்றவாளியை அவன் ஆதாரத்துடன் சட்டத்தின் முன்னே நிறுத்திவிட்டான் அல்லவா!

“குட் ஜாப் ஸ்ரீதர்! இனிமே நந்தகுமாரை நான் எந்த வித கில்டி ஃபீலிங்கும் இல்லாம ஃபேஸ் பண்ணுவேன்!” என்றார் ஆணையர் அனந்தசயனன்.

நந்தகுமார் அவரது நண்பர்; முக்கியமாக அஜய்யால் திட்டமிட்டுக் கொல்லப்பட்ட வானதியின் தந்தை. மகளின் காதலனே அவளுக்கு எமனாகி விட்டான் என்ற கலக்கத்தில் கிட்டத்தட்ட பித்து பிடித்துப் போயிருந்த மனிதர் மகளுக்கு நியாயம் கிடைத்தாக வேண்டும் என்று நண்பர் மூலம் அந்த வழக்கை மீண்டும் தொடங்கினார்.

அதற்காக தான் அனந்தசயனன் ஸ்ரீதரை கோயம்புத்தூருக்குப் பணிமாற்றம் செய்யும்படி பரிந்துரைத்ததே! அவன் எடுத்தால் முடிக்காத வழக்குகளே இல்லை! எதிர்பார்த்தபடியே இவ்வழக்கையும் வெற்றிகரமாக முடித்துக் கொடுத்துவிட்டான் என்ற திருப்தியோடு நண்பரின் மகளுக்கு நீதி கிடைக்கும் என்ற நிம்மதியும் அவருக்கு!

ஸ்ரீதர் “இட்ஸ் மை டியூட்டி சார்! அந்த அஜய் வானதி கூட சேர்ந்து சுத்துனதுக்கு அவனோட ஃப்ரெண்ட்ஸ் ரெண்டு பேர் வீடியோ மூலமா சாட்சி சொல்லிருக்காங்க… அது போக ஆக்சிடெண்ட் நடந்த டேட்ல அவளை அவன் கார்ல கூட்டிட்டுப் போறப்போ ஒரு பெட்ரோல் பங்க்ல பெட்ரோல் போடுறது அங்க உள்ள சிசிடிவி கேமரால ரெக்கார்ட் ஆகிருக்கு… அது போக அந்தப் பொண்ணு பிரெக்னெண்ட்னு தெரிஞ்சு அவன் அபார்ட் பண்ணுறதுக்கு கூட்டிட்டுப் போன ஹாஸ்பிட்டலோட டாக்டரும் சாட்சி சொல்ல தயாரா இருக்காங்க… அவன் சட்டத்துல இருந்து தப்பிக்கவே முடியாது” என்றான் ஆணித்தரமாக.

“இப்போ தான் நான் ரிலாக்சா ஃபீல் பண்ணுறேன்… பட் டோண்ட் ஃபர்கெட் ஒன் திங்க்! அந்த ஸ்ரீவத்சன் ஒரு மாதிரியான ஆளு! சோ கொஞ்சம் கேர்புல்லா இருங்க” என்று எச்சரித்தவர் அவனுக்குக் கை கொடுத்து விட்டு அனுப்பி வைத்தார்.

ஸ்ரீதர் கமிஷ்னரின் அறையிலிருந்து வெளியே வந்தவன் மொபைல் அடிக்கவும் எடுத்துப் பார்த்தான். ரேவதி தான் அழைத்திருந்தார். உடனே அவருக்கு அழைத்தவன் விசயம் என்னவென்று கேட்க ரேவதியோ நதியூரிலிருந்து மதுரவாணியின் குடும்பத்தவர் வந்த விசயத்தைத் தெரிவித்தவர் அவர்களைப் பார்த்துவிட்டு வருவோமா என்று கேட்டார்.

அவரின் மைந்தன் என்றாவது அவரது பேச்சைத் தட்டியிருக்கிறானா என்ன! உடனே ஒப்புக்கொண்டவன் நாளை மறுதினம் மதுரவாணிக்கும் மதுசூதனனுக்கும் நிச்சயதார்த்தம் என்பதால் தன்னை அவன் உதவிக்கு அழைத்திருப்பதாகச் சொல்ல ரேவதியும் அதற்கு ஒப்புக்கொண்டார்.

அன்னையிடம் பேசிவிட்டுப் போனை வைத்தவனுக்கு முன் பின் தெரியாத எண்ணிலிருந்து இரண்டு தவறிய அழைப்புகள் இருக்கவே யாரென்று தெரிந்து கொள்ள அழைத்தான்.

 போனை எடுத்ததும் அடக்கப்பட்ட ஆத்திரத்துடன் பேச ஆரம்பித்த குரல் ஸ்ரீவத்சனுடையது.

“என்ன டி.சி.பி சார் ரொம்ப சந்தோசமா இருக்கிங்க போல? ஆனா நான் சந்தோசமா இல்லயே! என் வாரிசு அங்க ஜெயில்ல கஷ்டப்படுறத பாத்துட்டுப் புழுவா துடிக்கிறேன்… இதை ஏன் உன் கிட்ட சொல்லுறேனு பாக்குறியா?”

திடீரென ஒருமைக்குத் தாவியவர் கோபத்தில் கொந்தளிக்க ஆரம்பித்தார்.

“என் மகனை ஆயிரம் பேர் முன்னாடி கைல விலங்கு மாட்டி இழுத்துட்டுப் போனேல்ல… அப்போ என் பையன் அவமானத்துல புளுங்கினதைப் பாத்து நான் துடிச்ச மாதிரி நீயும் உனக்கு நெருக்கமானவங்கள இழந்து துடிக்க வைப்பேன்டா… இந்த ஸ்ரீவத்சன் மகனை ஏன்டா அரெஸ்ட் பண்ணோம்னு உன்னை கலங்க வைக்குறேன்”

அவரது வெஞ்சினத்துடன் கூடிய பேச்சை ஸ்ரீதர் பொறுமையாய் கேட்டவன்

“த்சு! என்ன சார் இது? புத்திரச்சோகத்துல தசரதன் கூட இந்த மாதிரி புலம்பியிருக்க மாட்டாரு போல… அந்த மனுசன் உத்தமனை மகனா பெத்தவரு! அவரு புலம்பினதுல கூட நியாயம் இருக்கு… நீங்க எதுக்கு இப்போ இவ்ளோ சூடா டயலாக் பேசுறிங்க? பொறுக்கிய பிள்ளையா பெத்தது அசிங்கம் இல்ல! அவன் ஒரு கொலை செஞ்சதை தெரிஞ்சும் அவனுக்குச் சப்போர்ட் பண்ணுனது அசிங்கம் இல்ல! ஆனா நான் அவனை அரெஸ்ட் பண்ணி லாக்கப்ல உக்கார வச்சது தான் தப்புனு சொல்லுறிங்க! சரி விடுங்க! ரொம்ப உடம்பைப் போட்டு அலட்டிக்காதிங்க… இல்லனா தசரதன் மாதிரியே புத்திரசோகம் உங்க உயிரையும் வாங்கிட போகுது” என்று ஏளனமாய் உரைத்துவிட்டுப் போனை வைத்துவிட்டான்.

அதன் பின்னர் அவன் ஸ்ரீவத்சனைப் பற்றி யோசிக்கவில்லை. யோசிக்கவும் அவன் விரும்பவில்லை. ஆனால் அவரைப் பற்றி யோசித்திருக்கலாமோ என்று எண்ணுமளவுக்கு பின்னால் வருத்தப்படுவோம் என அவன் அப்போது அறியவில்லை.

அதே நேரம் மதுசூதனனின் இல்லத்தில் மதுரவாணியின் குடும்பத்து ஆண்களுக்கு ராஜ உபச்சாரம் நடந்து கொண்டிருந்தது.

நால்வரும் மதுசூதனன் ஏற்பாட்டின்படி மண்டபத்துக்குச் சென்றவர்கள் அவனது நிறுவனத்தினர் பெரும்பாலான வேலைகளை முடித்திருப்பதைப் பார்த்தனர். மாப்பிள்ளை கெட்டிக்காரன் தான் போல என்று தங்களுக்குள் பேசிக்கொண்டனர் அவர்கள்.

மதுசூதனன் இனி நிச்சயம் அன்று வந்தால் போதும் என்றவன் தனது இல்லத்துக்கு அழைக்கவும் தயங்கினர்.

அவனோ “அட என்ன மாமா இன்னுமா பழங்காலத்து சம்பிரதாயத்த பத்தி யோசிக்கிறிங்க? எங்கம்மா வேற உங்களுக்கு மாமாவுக்கு சித்தப்பாவுக்குலாம் என்ன பிடிக்கும்னு சங்கவி அண்ணி கிட்ட கேட்டு சமைச்சு வச்சிருக்காங்க… நீங்க வந்தே ஆகணும்” என்று அடம்பிடிக்கவும் அனைவரும் அவனுடன் கிளம்பி வந்துவிட்டனர்.

முதலில் தயங்கிய ரத்தினவேல் பாண்டியனும் சங்கரபாண்டியனும் பின்னர் ராமமூர்த்தியும் மைதிலியும் அன்பாய் உபசரித்த விதத்தில் மனம் குளிர்ந்து போயினர். சரவணனும் கார்த்திக்கேயனும் கூட அவர்களின் அணுகுமுறையில் கவரப்பட்டனர்.

சங்கரபாண்டியன் “என்ன ஒரு அன்பான மனுசங்க! படிச்சவங்கனு அகராதி இல்லாம நமக்கு ஏதுவா பேசுறாங்க மாப்பிள்ள.. நம்ம சாதிசனத்துல ஒருத்தன் இப்பிடி இருப்பானா? நாலெழுத்து படிச்சிட்டோம்னு திமிரு பிடிச்சுல்லா அலையுறானுவோ… இவங்க குணமான மனுசங்களா இருக்காங்க… எனக்கு இந்தக் குடும்பத்த ரொம்ப பிடிச்சி போச்சு மாப்பிள்ள” என்று வாய் விட்டே சொல்லிவிட்டார்.

மைதிலியிடமும் ராமமூர்த்தியிடமும் பெண் வீட்டுக்கார்ர்களாய் சம்பிரதாயப்பேச்சை எடுத்த சங்கரபாண்டியனையும் ரத்தினவேல் பாண்டியனையும் அவர்கள் கையமர்த்தினர்.

“இங்க பாருங்கண்ணே! என் பையன் சொந்த தொழில் பண்ணுறான்… அவன் சம்பாத்தியமே போதும் போதும்னு இருக்கு… இவருக்கு வர்ற பென்சன் பணம் எங்க ரெண்டு பேருக்கும் போதும்… சின்னவ சேலரிய அவ கல்யாணத்துக்குச் சேர்த்து வைக்குறோம்… இவ்ளோ தான் எங்க குடும்பத்தோட பொருளாதார நிலமை!

நீங்க ஊருல நிலம் நீச்சுனு வாழுற பெரிய மனுசன்… உங்களவுக்கு இல்லனாலும் எங்க வீட்டு மருமகளை நாங்க சந்தோசமா வச்சிப்போம்… மத்தபடி உங்க பொண்ணுக்கு நீங்க செய்யணும்னு நினைக்கிறத நாங்க தடுக்க மாட்டோம்.. நீங்க சொன்ன மாதிரியே மதுரவாணிக்கு வியாழநோக்கம் வரட்டும்… அதுக்கு அப்புறம் கல்யாணத்த வச்சிக்கலாம்… இப்போ அவ தான் இவனுக்குனு உறுதி பண்ணிடுவோம்”

அவரும் ராமமூர்த்தியும் அவ்வாறு சொன்னதும் மதுசூதனன்  வரதட்சணை எதுவும் வேண்டாமென சொல்ல வாயெடுக்க அவனது அன்னை அவனைப் பார்வையால் அடக்கினார்.  வழக்கம் போல அதில் அவன் அமைதியாகிவிட்டான்.

சம்பிரதாயப்பேச்சுவார்த்தை அனைத்தும் முடிய மதுரவாணியின் வீட்டு ஆண்கள் மதிய உணவை அங்கே முடித்துவிட்டு மனநிறைவுடன் அங்கிருந்து விடைபெற்றனர்.     

அவர்கள் சென்றதும் மதுசூதனன் அன்னையிடம் “மா! நான் வரதட்சணை இல்லாம தான் கல்யாணம் பண்ணிப்பேன்… நீங்க ஏன் அவர் கிட்ட இப்பிடி பேசுனிங்க?” என்று முரண்டு பிடிக்க

அவரோ “முதல்ல சினிமால வர்ற ஹீரோ மாதிரி உளறாத மது! இது நம்ம கேட்டு வாங்கல… அவங்க பொண்ணுக்கு அவங்க விரும்பி செய்யுறது தான்! கொஞ்சம் அவங்க பக்கம் இருந்து யோசிச்சு பாரு! புகுந்த வீட்டுல தன்னோட பொண்ணு சுயமரியாதையோட இருக்கணும்னா அவ பொருளாதார சுதந்திரத்தோட இருக்கணும்னு அவங்க நினைக்கிறாங்க… மது கொண்டு வர்ற நகை, பணம் எல்லாத்தையும் அவ நேம்ல பேங்க்ல லாக்கர் ஓப்பன் பண்ணி வச்சிடு…. அது அவளுக்கு மட்டும் தான் சொந்தம்னு அவளுக்குப் புரிய வச்சிடு… அவ்ளோ தான்… நம்ம விருப்பத்த அவங்க மேல திணிக்கிறது தப்புடா… வெள்ளந்தி மனுசங்க மனசு கஷ்டப்படுற மாதிரி ஆகிடக் கூடாது” என்று நிதர்சனத்தைப் புரியவைக்கவே அவன் அரைமனதாய் சம்மதித்தான்.

இவ்வாறு மதுசூதனனும் மதுரவாணியும் ஒவ்வொரு விதமான மனநிலையுடன் தங்களின் நிச்சய நாளை எதிர்நோக்கி இருந்தனர். மதுசூதனன் மனம் நிறைய காதலுடன் காத்திருந்தான் என்றால் மதுரவாணியோ இன்னொரு முறை தன்னால் குடும்பத்துக்கு ஏமாற்றமோ வருத்தமோ உண்டாக வேண்டாம் என்ற நல்லெண்ணத்துடனும் திருமணத்துக்குத் தான் இன்னும் காலம் உள்ளதே; அதற்குள் என்னென்னவோ மாற்றங்கள் நேரலாம் என்ற நம்பிக்கையுடனும் காத்திருந்தாள்.

இதில் உண்மையாகப் போவது மதுசூதனின் காதலா? அல்லது மதுரவாணியின் நம்பிக்கையா? இவ்வினாக்களுக்கு எல்லாம் காலம் தான் பதில் சொல்ல வேண்டும்!

அலை வீசும்🌊🌊🌊