🌊 அலை 25 🌊

உனைக் கண்ட நாள் முதலாய்

எனை ஆள்வது உன் நினைவே!

உன் ஸ்பரிசம் தீண்டிய உடலோ

வெண்பஞ்சாய் மிதந்திடுதே!

உன் வாய்மொழி கேக்கும் செவியோ

தேன் குரலை ரசிக்கிறதே!

என்ன மாயம் தான்

செய்தாயோ என்னவளே!

ரத்தினவேல் பாண்டியன் மகளைக் கண்ட அடுத்த நொடி இத்தனை நாள் தேடிய புதையலைக் கண் முன் கண்டவரைப் போல ஓடோடிச் சென்று நெஞ்சார அணைத்துக் கொண்டார். பிறந்ததிலிருந்து அவளைப் பிரிந்திடாத மனிதர். பள்ளி விடுதியில் தங்கியிருந்த சமயத்தில் கூட வாரம் ஒரு முறை வந்து பார்க்காவிடில் அவருக்குப் பைத்தியமே பிடித்துவிடும்.

அப்படிப்பட்டவர் மாதக்கணக்கில் மகளைப் பிரிந்து இருந்ததில் அவளைப் பார்த்தால் போதுமென்ற நிலை அவருக்கு. தனது மகள் எந்தக் காரணத்துக்காக இப்படி செய்தாள் என்பதெல்லாம் அவரது மூளையில் பதியவே இல்லை.

மதுரவாணியோ நீண்டநாட்களுக்குப் பின்னர் தந்தையைக் கண்டதும் கண்ணீர் நிரம்பிய விழிகளுடன் அவர் மார்பில் புதைந்து கொண்டாள். அவரிடம் அவளுக்கு வருத்தம் இருக்கலாம். ஆனால் அவரது மகள் என்று சொல்லிக் கொள்வதில் பெருமைப்படுவள் அவள். அப்படியிருக்க அவ்வளவு அன்பான தந்தையைத் தனது செய்கை எந்தளவுக்கு வருத்தியிருக்கும் என்ற எண்ணத்துடன் அழத் துவங்கி விட்டாள்.

“அப்பா! ஐ அம் சாரிப்பா” என்றவளின் அழுகை கலந்து ஒலிக்க சரவணன் தந்தை அருகில் வேகமாய் வந்தவன் மதுரவாணியைத் தந்தையை விட்டு விலக்கியவன் குழம்பி விழித்த தங்கையைக் கோபத்துடன் உறுத்து விழித்தான்.

“அண்ணா!” என்று ஆரம்பித்தவளின் கன்னத்தில் அவனது கரம் வேகமாக இறங்க கார்த்திக்கேயனும் ரத்தினவேலும் அவனைத் தடுத்து நிறுத்தினர்.

சங்கவியும் யாழினியும் இது தங்களுக்கு விழுந்திருக்க வேண்டிய அறை என்று எண்ணியவர்களாய் அதிர்ந்து நோக்க ஸ்ரீரஞ்சனியும் ராகினியும் மூச்சு விட மறந்தவர்களாய் ஸ்தம்பித்துப் போய் நின்றிருந்தனர்.

மதுசூதனன் இதில் தலையிடவில்லை. அவனும் ஒரு சகோதரன் தானே! தனது சகோதரி இப்படி ஒரு காரியத்தைச் செய்தால் தான் எப்படி நடந்து கொள்வோமோ அதே போலத் தான் சரவணனும் நடந்து கொள்கிறான்; அதில் தான் தலையிடுவது சரியல்ல என்பது அவனது எண்ணம்.

“என்னய்யா பொம்பளப்பிள்ளைய கை நீட்டி அடிக்க மாட்டேனு உன் அம்மா கிட்ட செஞ்சு குடுத்த சத்தியத்த மறந்துட்டியா? இது மட்டும்  உங்கம்மாக்குத் தெரிஞ்சா ஜென்மத்துக்கும் உன் கிட்ட பேச மாட்டா”

சரவணன் முகம் கொள்ளா சினத்துடன் தந்தையை ஏறிட்டவன் “நீங்க சும்மா இருங்கப்பா… எத்தனை நாள் இவ இல்லாம வீடு நரகமாயிடுச்சுனு ஆச்சி புலம்பிருப்பாங்க? நம்மள திட்டித் தீத்துருப்பாங்க… அம்மா இவளால எத்தனை நாள் சாப்பிடாம தூங்கிருப்பாங்க? இவ எங்க போனாளோ என்ன ஆனாளோனு தெரியாம எனக்கும் சின்னவனுக்கும் பைத்தியம் மட்டும் தான் பிடிக்கல… எல்லாம் தெரிஞ்சும் உங்களால வேணும்னா அமைதியா இருக்க முடியும்… என்னால முடியாதுப்பா” என்று சொல்லவே

“விடுண்ணா! பாப்பா வேணும்னா இப்பிடி பண்ணிருப்பா? நம்மளும் கொஞ்சம் முசுடா இருந்துட்டோம்”

கார்த்திக்கேயனை முறைத்தவன் “முசுடா தானே இருந்தோம்! செத்து ஒன்னும் போயிடலயே” என்று சொல்ல

“என்ன அண்ணா இப்பிடி பேசுற?” என்று அதிர்ந்தாள் மதுரவாணி.

“வேற எப்பிடி பேச சொல்லுற மதுரா? நீ பண்ணுன காரியம் அப்பிடி…. எதோ ஸ்ரீதர் சாரும் அவங்கம்மாவும் நல்ல மாதிரி ஆளுங்களா இருந்ததால இவ்ளோ ஆனதுக்கு அப்புறமும் நம்ம மானம் பறிபோகாம இருக்கு.. இதுவே வேற யாராச்சும் அவங்க இடத்துல இருந்திருந்தா நம்ம குடும்ப மானம் கப்பல் ஏறி சிலோனுக்குப் போயிருக்கும்”

மதுரவாணி தலையைக் குனிய இவ்வளவுக்கும் காரணமான மதுசூதனன் சரவணனை அமைதியாகும் படி வேண்டிக் கொண்டான். ரத்தினவேல் பாண்டியனும்

“எய்யா! அவரு இவ்ளோ தூரம் சொல்லுறப்போ நம்ம முறைச்சுக்கிட்டு நின்னா நல்லாவா இருக்கும்? நம்ம வீட்டுப்பிள்ளைய இத்தனை நாளு கழிச்சுப் பாத்ததுக்கு அப்புறம் அவ இவ்ளோ நாள் பத்திரமான இடத்துல தான் இருந்திருக்கானு சந்தோசப்படுவோம்யா…” என்று மகனைச் சமாதானம் செய்தவர் மதுசூதனனிடம்

“தம்பி உங்க கிட்ட கொஞ்சம் பேசணும்” என்று சொல்ல அவனும் சரியென்று தலையசைக்கவும் அவர் அங்கே நின்ற பெண்களைப் பார்க்க சங்கவி அனைவரையும் கையோடு அழைத்துக் கொண்டு மாடியறைக்குச் சென்றுவிட்டார்.

இது அவர்களின் குடும்பவழக்கம். ஆண்கள் முக்கியமாகப் பேசும் போது பெண்கள் அங்கே பொம்மைகள் போல நிற்கத் தேவையில்லை. ரத்தினவேல் பாண்டியனின் பார்வைக்கு அர்த்தமே “உள்ள போங்க” என்பது தான்!

அவர்கள் சென்றதும் ரத்தினவேல் பாண்டியன் “அப்புறம் தம்பி…” என்று ஆரம்பித்தது மட்டும் தான் மதுரவாணியின் காதில் விழுந்தது. அதன் பின்னே எதையும் கேட்கும் மனநிலையில் அவள் இல்லை.

தந்தை சகோதரர்கள் முன்னே சங்கவியையும் யாழினியையும் குற்றவாளிகளைப் போல நிற்க வைத்து விட்டோமே என்ற குற்றவுணர்ச்சியும் எப்படியும் இன்னும் சில நாட்களில் நதியூருக்குச் சென்றாகவேண்டும் என்ற எண்ணமுமே அவள் மனதில் ஓடிக் கொண்டிருந்தது.

 ஒருமணி நேரம் இவ்வாறு கடக்க பேச்சுவார்த்தை முடிந்தது போல என்று எண்ணும் போதே மதுசூதனன் அவர்கள் அனைவரும் இருந்த அறை வாயிலுக்கு வரவும் ஸ்ரீரஞ்சனி மதுரவாணியிடம்

“ஏன் வீட்டுல போட்டுக் குடுத்தாருனு கேளுடி மது” என்று உசுப்பேற்றி அனுப்பி வைத்தாள்.

அவனோ நேரடியாக உள்ளே வந்தவன் “நான் வாணி கிட்ட கொஞ்சம் பேசணும்” என்று சொல்ல

“மாமாக்கு இதுல்லாம் பிடிக்காது சார்… நீங்க எதுவா இருந்தாலும் போன்ல பேசிக்கோங்க” என்றாள் ஸ்ரீரஞ்சனி கறாராக.

அவனோ “மாமா தான் பெர்மிசன் குடுத்தாரு மை டியர் தங்கச்சி! கொஞ்சம் எங்களுக்கு ப்ரைவசி குடுத்தா நல்லா இருக்கும்… அக்கா, அண்ணி கொஞ்சம் சொல்லுங்களேன்!” என்று அனைவரையும் உறவுமுறை வைத்து அழைக்கவும் மதுரவாணியோடு சேர்ந்து மற்ற பெண்களும் அதிர்ந்து போயினர்.

ஆனால் யாழினி அனைவரையும் இழுத்துக் கொண்டு வெளியேறிவிட மதுரவாணி இவன் தானே தந்தையையும் சகோதரர்களையும் வரவழைத்தான் என்ற கடுப்பில் அவனை முறைத்துவிட்டு பால்கனியில் சென்று நின்றாள்.

மதுசூதனன் அவளைத் தொடர்ந்து சென்றவன் பால்கனியில் வீசும் குளிர்க்காற்றில் அசைந்தாடும் அவளின் கூந்தலை காதோரமாய் ஒதுக்கிவிட மதுரவாணி சட்டென்று நகர்ந்தாள்.

“என்ன பண்ணுற நீ? கீழ என்னோட குடும்பம் மொத்தமும் இருக்காங்க… நீ இப்பிடி என் கிட்ட…” என்றவளின் பேச்சில் இடையிட்டவன்

“நான் உன்னை ஒன்னுமே பண்ணலயே! எனக்கும் நாசூக்கு நாகரிகம் தெரியும் மேடம்… நீ சொன்ன மாதிரி கீழ உன் ஃபேமிலிய வச்சுக்கிட்டு பால்கனில உன் கூட ரொமான்ஸ் பண்ண நான் ஒன்னும் சினிமா ஹீரோ இல்ல” என்று பதிலடி கொடுக்கவும் மதுரவாணி தணிந்தாள்.

இருப்பினும் அவனை அப்படியே விட மனமில்லாதவளாய் “நீ தானே எங்கப்பா கிட்ட நான் இங்க இருக்கேனு போட்டுக் குடுத்த? உன்னால தான் சரவணன் அண்ணா என்னை அடிச்சிட்டான்” என்று சொல்லும் போதே அவளது குரல் கட்டிக் கொண்டது.

மதுசூதனனுக்கு அது கேட்க கஷ்டமாக இருந்தாலும் வேறு வழி இல்லையே! இப்படியே விட்டால் இவள் திருமணம் குடும்பம் என்றெல்லாம் சிந்தியாது நாடோடியாக வாழப் பழகி விடுவாள் என்ற அச்சம் அவனுக்கு.

“இன்னும் கொஞ்சநாள்ல நான் மறுபடியும் ஊருக்குப் போயிடுவேன்… என் கிட்ட எவ்ளோ டயலாக் பேசுன? எல்லாம் வேஸ்ட்…. எங்கப்பா என்னை ஊருக்குக் கூட்டிட்டுப் போய் ஒரு குப்பனுக்கோ சுப்பனுக்கோ கட்டி வைக்கப் போறாரு… நானும் கடனேனு வாழ்ந்துட்டு விதி முடிஞ்சதும் செத்துப் போகப் போறேன்” என்று ஆற்றாமையுடன் புலம்ப மதுசூதனனுக்கு அவளது புலம்பல் வேடிக்கையாக இருந்தது.

அவளைத் தன்னை நோக்கித் திருப்பியவன் “லுக்! நீ இவ்ளோ யோசிக்கிற அளவுக்கு ஒன்னுமில்ல… எல்லாம் நல்லபடியா நடக்கும்… ஜஸ்ட் டூ டேய்ஸ் வெயிட் பண்ணு… நானே வந்து உங்கப்பா கிட்ட பேசுறேன்” என்று சொல்லவும்

“ஏன்? டூ டேய்ஸ் கழிச்சு தான் நல்லநாள் வருதா?” என்று மதுரவாணி வெடிக்க

“நீ சொன்னாலும் சொல்லலனாலும் டூ டேய்ஸ் கழிச்சு சுபமுகூர்த்தநாள் இருக்கு.. சோ அன்னைக்கு சொன்னா ஸ்பெஷலா இருக்கும்” என்று சொல்லிவிட்டுக் கண்ணைச் சிமிட்டினான் அவன்.

அவள் சினத்தில் முகம் சிவக்க ஏதோ சொல்ல வர வழக்கம் போல ஆட்காட்டிவிரலால் அவள் உதட்டுக்கு அணையிட்டவன்

“உன்னைப் பாக்காம உன் அப்பாவும் ப்ரதர்சும் ரொம்பவே கஷ்டப்பட்டிருப்பாங்க… அவங்க கூட டைம் ஸ்பெண்ட் பண்ணு.. வேற எதையும் யோசிச்சு இல்லாத மூளைய குழப்பிக்காத” என்று சொல்லிவிட்டுக் கிளம்பினான்.

அவன் சொன்ன வார்த்தையில் எரிச்சலுற்று திட்ட எத்தனித்தவள் அவன் வேகமாய் சென்றுவிடவே மௌனமாய் ஏதும் பேசாமல் நிற்க சகோதரிகளும் தோழிகளும் வந்து அவன் என்ன சொன்னான் என்று கேட்டு வைக்க

“இன்னும் டூ டேய்ஸ்ல வர்றேனு சொல்லுறான்… டூ டேய்ஸ் கழிச்சு தான் சுபமுகூர்த்தமாம்.. இல்ல, நான் தெரியாம தான் கேக்குறேன், இவன் என்ன என்னைய கல்யாணமா பண்ணப் போறான்? இடியட் மாதிரி இரிடேட் பண்ணிட்டுப் போறான்” என்று பொறுமி தீர்த்தாள் அவள்.

ராகினி அனைவரிலும் முந்திக் கொண்டவள் “அப்போ உனக்கு விசயமே தெரியாதா?” என்று நீட்டி முழக்க அதில் ஏதோ அபாயம் உள்ளதாக மதுரவாணிக்குத் தோணியது.

மற்ற மூவரும் குழப்பமாய் மதுரவாணியிடம் “அப்போ மது சார் உன் கிட்ட விசயம் என்னனு சொல்லவே இல்லையா?” என்று கேட்க

“டூ டேய்ஸ்ல வர்றேனு சொன்னான். அது வரைக்கும் அப்பா, அண்ணனுங்க கூட டைம் ஸ்பெண்ட் பண்ணுனு சொன்னான்… வேற எதுவும் சொல்லவே இல்லையே” என்று உதட்டைப் பிதுக்கிய மதுரவாணி தனது படுக்கையில் சென்று அமர ஸ்ரீரஞ்சனி அவளிடம் ஓடிச் சென்றாள்.

அவளது தோளைக் கட்டிக்கொண்டவள் “அடியே மக்கு மதுரா! உனக்கும் மதுசூதனன் சாருக்கும் இன்னும் டூ டேய்ஸ்ல என்கேஜ்மெண்ட் பண்ணப் போறாங்கடி… அவரு என்ன சொல்லி மாமாவை இங்க வரவழைச்சிருக்காருனு உனக்கு தெரியாதா?” என்று கேட்க மதுரவாணி இல்லையென மறுப்பாய் தலையசைத்தாள்.

“சுத்தம்! மது சாரும் நீயும் லவ் பண்ணுறிங்க, உங்க லவ்வுக்காக தான் நீ வீட்டை விட்டு வந்தேனு சொல்லிருக்காருடி”

“என்னது?”

“ஷாக்க குறை! ஆக்சுவலி இதுக்குப் பிள்ளையார்சுழி போட்டு மாமா கிட்ட பேசுனது அந்த டி.சி.பி தான்”

“ஸ்ரீதர் சாரா? அவரு ஏன் இப்பிடி பண்ணணும்? அடியே ரஞ்சி! எனக்குத் தலை சுத்துதுடி”

“மொத்தமா கேட்டுட்டு ஒரேயடியா தலை சுத்தி மயக்கம் போட்டு விழுந்துக்கோ மது” என்ற ஸ்ரீரஞ்சனி ரத்தினவேல் பாண்டியனும் அவரது புத்திரச்செல்வங்களும் இங்கே வந்த கதையைச் சொல்ல ஆரம்பித்தாள்.

“மது சார் உன்னை ரொம்ப டீப்பா லவ் பண்ணுறாராம்… அவரு இதை டேரக்டா ஸ்ரீதர் கிட்ட ஷேர் பண்ணிருக்காரு… அதோட அன்னைக்கு அத்தை கவி அண்ணி கிட்ட நீ இல்லாம எல்லாரும் கஷ்டப்படுறாங்கனு சொன்னதை வேற மது சார் கேட்டுட்டாருல்ல… அதான் ஸ்ரீதர் கிட்ட பேசிருக்காரு… ரெண்டு பேருமா சேர்ந்து தான் மாமாவ இங்க வர வச்சிருக்காங்க… சரவணன் மாமா வந்ததுமே சொல்லிட்டாரு உன்னோட நிச்சயதார்த்தத்தை முடிச்சிட்டுத் தான் உன்னை ஊருக்குக் கூட்டிட்டுப் போவாங்களாம்”

“வாட்? ஏய் நான் எங்கடி அவனை லவ் பண்ணுனேன்? ஸ்ரீதர் எப்பிடி இத நம்புனாரு?”

“அது… அவரு உன்னை ஹோட்டல்ல பாக்குறப்போ…” என்று ஸ்ரீரஞ்சனி இழுக்க மதுரவாணி தன் தலையில் அடித்துக் கொண்டாள்.

“வீணா ஸ்ரீதர் கிட்ட பொய் சொன்னதுக்குத் தான் இப்போ நான் வசமா சிக்கிட்டு முழிக்கிறேன்… எல்லாம் இந்த மது எருமையால வந்தது தானே! அவனை…” என்று பல்லைக் கடித்தவண்ணம் மொபைலை எடுத்தவள் திடீரென அவனுக்கு அழைக்காமல் போனை வைத்தாள்.

ஏன் என்று கேள்வியாய் நோக்கியவர்களிடம் “அது… இப்போ அவன் ட்ராவல்ல இருப்பான்ல… இப்போ போன் பண்ணி பேசி அவனை டென்சன் ஆக்கவேண்டானு தான்…” என்று இழுத்தவளை சங்கவியும் யாழினியும் குறிப்பாய் பார்த்துவைத்தனர்.

ராகினியோ “ஓஹோ! அப்பிடிங்களா மேடம்? அவரு மேல உங்களுக்கு ஏன் இவ்ளோ அக்கறை? யாரோ ஒரு மூனாவது மனுசன் தானே!” என்று சீண்ட அவளை முறைத்த மதுரவாணி

“ஏய் சும்மா இருடி! நீ தான் எல்லாத்துக்கும் காரணம்! நீ சீண்டுனேனு போய் அவன் கிட்ட நான் பேசுனது தான் தப்பு” என்று புலம்பிய மதுரவாணிக்கு இப்போது என்ன செய்வது என்று புரியவில்லை.

 ஆனால் இதற்கு மேலே பேசினால் சத்தியமாக ரத்தினவேல் பாண்டியனும் சரி; அவளது சகோதரர்களும் சரி தன்னைச் சும்மா விட மாட்டார்கள்!

ஒன்று அவளைக் கையோடு ஊருக்கு அழைத்துச் சென்று அவள் முன்பே சொன்னது போல ஏதோ ஒரு குப்பனுக்கோ சுப்பனுக்கோ கட்டி வைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

அல்லது அவள் மீது வைத்திருந்த பாசத்தைச் சுத்தமாகத் துடைத்தெறிந்து விடும். இரண்டும் அவளுக்கு நல்லதல்ல! எனவே அன்றைய இரவு முடிந்தவரை அமைதி காப்பதே சிறந்தது என்ற முடிவுக்கு வந்தாள் மதுரவாணி.

கூடவே யாழினியும் சங்கவியும் அவளுக்கு எடுத்துரைத்துப் புரியவைத்தனர்.

“ஆல்ரெடி நீ ஸ்ரீதர் சாரைப் பிடிக்கலனு சொல்லி வீட்டை விட்டு வந்தது மாமாவை ரொம்பவே பாதிச்சிருக்கு மது… ஒரு தகப்பனா பொண்ணு கல்யாணம் பண்ணி நிம்மதியா வாழணும்னு அவரு நினைக்கிறது ஒன்னும் அவ்ளோ பெரிய தப்பில்லையே! இப்போவும் நீ மது சாரை வேண்டாம்னு சொல்லி ஏதாவது ஏடாகூடம் பண்ணுனேனா அது அவருக்கு இன்னும் கஷ்டத்தைக் குடுக்கும்! வேத்து ஜாதி மனுசங்களோட பழக கூட யோசிக்கிறவரு இன்னைக்கு உனக்காக தான் இவ்ளோ தூரம் இறங்கி வந்திருக்காருங்கிறத மறந்துடாத… அதுவுமில்லாம ஸ்ரீதர் நல்ல மனுசன்… அவரு என்னமோ நீ மது சாரை லவ் பண்ணுனதால அவரை வேண்டாம்னு சொல்லிட்டேனு நினைக்காரு… அந்த நல்ல மனுசன் மனசையும் நீ காயப்படுத்தப் போறியா? நல்லா யோசி! முடிஞ்சவரைக்கும் அமைதியா இருடி” என்ற யாழினியின் அறிவுரை அவளை யோசிக்க வைத்தது.

எனவே அவள் சொன்னபடி அமைதியாக கீழே வந்தவள் நீண்டநாள் கழித்து சகோதரர்கள் தந்தையுடன் இரவுணவு அருந்தினாள்.

 அதற்குள் சரவணனின் கோபமும் மட்டுப்பட்டிருக்க தங்கையுடன் இயல்பாக பேசினான் அவன். கார்த்திக்கேயனும் இத்தனை நாட்கள் பிரிந்திருந்த தங்கை பாதுகாப்பாயிருந்த சந்தோசமே அவனுக்குப் போதும் என்று எண்ணிக் கொண்டான். எனவே குடும்பத்தினரைப் பற்றி பேச்சைத் தொடங்கினான் அவன்.

மதுரவாணி அவளது பிரியத்துக்குரிய அழகம்மையைப் பற்றி விசாரித்தவள் அன்னை அத்தை மருமகன்கள் மதினிகள் என அனைவரின் நலனையும் கேட்க ஆரம்பித்தாள். மகள் கேட்டது தான் தாமதம், சாப்பாட்டோடு சேர்த்து இத்தனை நாள் நடந்த சொந்தக்கதை சோகக்கதை அனைத்தையும் மகளிடம் இறக்கி வைத்தார் ரத்தினவேல் பாண்டியன்.

எல்லா கதையும் பேசி முடித்து உறங்க சென்ற மதுரவாணி அன்றைய தினம் மனதில் எவ்வித பாரமுமின்றி தூங்கினாள்.

என்ன தான் தனித்திருந்தாலும் குடும்பத்துடன் நேரம் செலவளிப்பதால் உண்டாகும் சந்தோசத்துக்கு நிகர் ஏதுமில்லை. இதை உணராது இன்றைய தலைமுறையினர் பிரைவசி, சுதந்திரம் என்று அந்தச் சந்தோசத்தை அனுபவிக்கத் தவறுகின்றனர்.

அலை வீசும்🌊🌊🌊