🌊 அலை 23 🌊

உனைக் கண்டதும்

துள்ளும் மனம் தனை

கரையிட்டு மறைத்தவளால்

மலரும் வதனத்தை

திரையிட்டு மறைக்க

இயலவில்லை என் மாயவனே!

மதுரவாணி அன்றைக்குச் சீக்கிரமே விழித்துவிட்டாள். இரவு முழுவதும் நிம்மதியாக உறங்கியவள் அதிகாலையிலேயே விழித்து வீட்டின் வேலைகளைக் கவனிக்க ஆரம்பித்தாள்.

பெரிதாய் ஒரு வேலையும் இல்லையென்றாலும் குழந்தைகளுக்குத் தனியாக பெரியவர்களுக்குத் தனியாக என சமைப்பதே ஒரு பெரும் வேலை தானே! அதைச் செய்துவிட்டு நிமிர்ந்தவளிடம் சுவர் கடிகாரம் நேரம் காலை ஆறு மணி என அறிவித்தது.

இன்னும் யாரும் எழுந்திருக்கவில்லை. எனவே காபியோ பூஸ்டோ ஹார்லிக்சோ அவரவர் எழுந்ததும் தேவைக்கேற்ப போட்டுக் கொண்டால் போதுமென எண்ணியவளாய் குளிக்கச் சென்றாள்.

தண்ணீர் ஜில்லென்று இருக்க அந்தக் குளிர்ச்சி அவளுக்குப் பழகிப் போனதால் குளித்து முடித்தவள் உடை மாற்றிவிட்டு தலையை உலர்த்த முயன்றபோது தான் அழைப்பு மணி கிண்கிணிநாதமாய் இசைத்தது.

“இந்நேரத்துல யாரு?” என்று தன்னைத் தானே கேட்டபடி படிகளில் இறங்கிவந்தவள் அப்போது தான் விழித்து ஹாலுக்கு வந்த சங்கவியைப் பார்த்ததும்

“எங்க போறக்கா? அதை நான் பாத்துக்கிறேன்,.. நீ காலைல போடவேண்டிய டேப்ளட்டைப் போடு” என்று அதட்டி உருட்டி அனுப்பிவைத்துவிட்டு வாயில் கதைவை அடைந்தாள்.

கதவைத் திறந்ததும் அங்கே நின்ற மதுசூதனனைக் கண்டதும் ஒப்பந்தத்தின் சரத்துகளை வாங்க வந்திருப்பான் என எண்ணியவளாக அவனை நோக்கினாள்.

மதுசூதனன் அப்போது தான் குளித்துவிட்டு புதுமலரைப் போல நின்றிருந்தவளிடம் “ஹாய் வாணி! குட் மானிங்” என்று சொல்லிவிட்டு மென்நகையை வீச அதில் ஒரு கணம் தடுமாறினாலும் பின்னர் சுதாரித்துக் கொண்டாள் மதுரவாணி.

“குட் மானிங்! நீ சொன்னதுக்குப் பதிலா நானும் குட் மானிங் சொல்லிட்டேன்… இப்போ கிளம்புறியா?” என்று கதவை அடைக்க முயல அவன் கதவைத் தனது கையால் பிடித்துக் கொண்டான்.

“ப்ளீஸ் வாணி!” என்று குழைந்த குரலில் அமைதியானவள் என்னவென புருவம் தூக்கி வினவினாள். அவளுக்கும் தெரியும், அவன் ஏன் வந்திருக்கிறான் என்று. ஆனாலும் அவனுடன் ஏட்டிக்குப் போட்டி பேசுவதில் அவளுக்கு ஆர்வம் அதிகம் அல்லவா!

“நீ இப்போ தான் குளிச்சியா?”

“ஆமா… இதைக் கேக்கவா கோயம்புத்தூர்ல இருந்து காருக்குப் பெட்ரோல் போட்டு வந்த?”

“ப்ச்! அதுக்கு இல்ல”

“வேற எதுக்கு?”

“நீ எதுல குளிச்ச வாணி?”

“நான் கழுதைப்பால்ல குளிச்சேன்”

அவளது பதிலில் ஒரு நொடி திகைத்து விழித்தவன் குழப்பத்துடன் “வாட்? கழுதைப்பால்லயா?” என்று கேட்க

“பாசிபிள் இல்லனு தெரியுதுல்ல… அப்புறம் என்ன கேள்வி எதுல குளிச்ச வாணினு” என்று சரவெடியாய் பதில் அவளிடம் இருந்து வரவும் ரசனையாய் அவளை நோக்கியவன்

“இல்ல மை டியர் வாயாடிப்பொண்ணு! இந்நேரத்துல ஜில்லுனு இருக்கிற தண்ணில குளிச்சா ஜலதோசம் பிடிச்சுக்கும்… அதான் எதுல குளிச்சனு கேட்டேன்” என்று விளக்கமளித்தான்.

“ஓ! நீ அப்பிடி வர்றியா? நாங்களாம் விடியகாலை குளிர்ல தாமிரபரணில குளிச்சுப் பழகுனவங்க தம்பி! இந்தக் குளிர் என்னை ஒன்னும் பண்ணாது!” என்று அமர்த்தலாய் சொன்னவளைப் பார்க்கப் பார்க்கத் தெவிட்டவில்லை அவனுக்கு.

அவனது கரங்கள் தன்னிச்சையாய் அவளது கூந்தலை ஒதுக்கிவிட உயர அவளது விழிகள் வாளாய் மாறி அவன் இதயத்தைக் கூறு போட ஆரம்பிக்கவும் உயர்ந்த கரங்கள் தானாய் தணியவும் செய்தன.

“உள்ள வா” என்று மட்டும் சொல்லிவிட்டு அவள் செல்ல குறுஞ்சிரிப்புடன் அவளைத் தொடர்ந்தவனை ஹாலில் அமரச் சொன்னவள் சங்கவியின் அறைக்குச் சென்றாள்.

அவள் திரும்பும் போது கையில் கோப்புகளுடன் வரவும் அதை ஆர்வமாய் பார்த்தவன் “மேம் எல்லா டேர்ம்ஸ் அண்ட் கண்டிஷனையும் படிச்சிட்டாங்களா? எதுவும் பிரச்சனை இல்லையே” என்று கேட்கும் போதே அங்கே வந்துவிட்டாள் சங்கவி.

மதுசூதனனைப் பார்த்ததும் புன்னகைத்தவள் தன்னால் கோயம்புத்தூர் வரமுடியாது போனதைப் பற்றி வருத்தம் தெரிவிக்க அவனோ

“நீங்க ஹெல்த்த பாத்துக்கோங்க மேம்… அது தான் முக்கியம்! உங்க சிஸ்டர் அண்ட் சிஸ்டர் இன் லா ரெண்டு பேரும் போதும்… தே ஆர் வெரி குட் ஆர்கனசைர்ஸ்” என்று அவர்களைப் பெருமையாய் பேச சங்கவி புளங்காகிதமுற்றாள்.

பக்கத்தில் கடனே என நின்று இருவரது பேச்சையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த தங்கையின் முழங்கையில் தன் முழங்கையால் இடித்தவள் “சாருக்குக் காபி கொண்டு வா” என்று சொல்ல

“உனக்கு காபியா டீயா?” என்று அவளிடம் கர்மச்சிரத்தையாய் கேட்டாள் மதுரவாணி.

“எனக்கும் காபி தான்” என்றவளை அவள் முறைக்கவும் அலுத்துக் கொண்ட சங்கவி “சரிடி என் தங்கமே! ஹார்லிக்ஸ் கொண்டு வா! அதையே குடிக்குறேன்… அதுக்கு ஏன் மாமியார் மாதிரி முறைக்கிற?” என்று வினவ அவளுக்கு உதட்டைச் சுழித்து அழகு காட்டிவிட்டுச் சமையலறையை நோக்கிச் சென்றாள் அவள்.

தமக்கைக்கு ஹார்லிக்சும் மதுசூதனனுக்குக் காபியும் எடுத்துக் கொண்டு ஹாலுக்கு வந்தவள் அவர்களிடம் கோப்பைகளை நீட்டிவிட்டு நிற்கும் போதே ஆரத்யாவின் அறையில் அவளும் ராகினியும் வளவளப்பது கேட்க “ரெண்டு பேரும் முழிச்சிட்டாங்க போல” என்றவளிடம்

“ரஞ்சி இன்னுமா எழுந்திரிக்கல மது? அவ இவ்ளோ நேரம் தூங்க மாட்டாளே” என்று கேட்டாள் சங்கவி யோசனையுடன்.

“இல்லக்கா! அவ நைட்டே தூக்கத்துல பயந்து புலம்புனா… நான் விபூதி பூசிவிட்டதும் தான் அமைதியா தூங்குனா… எதையோ பாத்துப் பயந்திருக்கானு நினைக்கேன்”

“அவ அவ்ளோ சீக்கிரம் பயப்படுற ஆளு இல்லையே மது” என்ற சங்கவியின் பேச்சின் குறுக்கே வந்த மதுசூதனன் “நேத்து ஃபுட் கோர்ட்ல ஸ்ரீதர் சார் கூட பேசுறப்போவே அவங்க முகம் சரியில்ல” என்று சொல்லவும் மதுரவாணி அவனைப் பார்த்தவள் வேறு எதையும் சொல்லி வைக்காதே என கண்ணால் சைகை காட்ட அவனோ அவளிடம் கோப்பையை கொடுக்கும் சாக்கில் அவள் காதில் இரகசியமாய் நிபந்தனை விதித்தான்.

“இப்போ நான் கிளம்புறப்போ என் கூட கோயம்புத்தூர் வர்றேனு சொல்லு! நான் ஃபுட் கோர்ட்ல நடந்ததை சங்கவி மேம் கிட்ட சொல்ல மாட்டேன்”

சங்கவி மட்டும் இல்லையென்றால் அன்றைய தினம் தான் மதுசூதனனின் வாழ்வில் கடைசி நாளாக இருந்திருக்கும். ஆனால் அவனது ஆயுளை பிரம்மன் கெட்டியாய் எழுதியிருந்ததால் தப்பித்தான்.   

“சரி! வர்றேன்… நீ எதையும் உளறி வைக்காத! அக்காவுக்கு ஆல்ரெடி உடம்பு சரியில்ல” என்று சொல்லிவிட்டுக் கோப்பைகளைக் கழுவும் சாக்கில் சமையலறைக்குள் சென்றுவிட்டாள்.

அவள் கழுவி கவிழ்த்து விட்டு வந்த போது தமக்கையும் அவனும் சாதாரணமாய் பேசிக்கொண்டிருக்கவும் அவன் எப்படியோ சமாளித்துவிட்டான் போல என்று எண்ணிக் கொண்டாள்.

அவளிடம் சங்கவி மதுசூதனனுடன் சென்று அவன் தரும் முக்கியமான கோப்புகளை வாங்கி வருமாறு சொல்லவும் அவனை முறைத்தபடி சரியென்று தலையாட்டினாள்.

அதற்குள் ஆரத்யா குளித்துவிட்டு உலர்ந்த கூந்தலுடன் மதுரவாணியிடம் வந்தவள் “சித்தி! எனக்கு ஜடை போட்டுவிடு… ராகி அத்தைக்கு ஒன்னுமே தெரியல” என்று குறைபட அவளைத் தன்னுடன் அழைத்துச் சென்றவள் அவளுக்குச் சிகையலங்காரம் முடிக்கும் தருவாயில் ஹாலில் ஸ்ரீரஞ்சனியின் குரல் கேட்டது.

அவள் எழுந்துவிட்டாள் போல என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டபடி ஹாலுக்கு வந்தவள் தோழியிடம் “ஆர் யூ ஓகே நவ்?” என்று கேட்க அவள் ஆமென்று தலையை ஆட்டிவைத்தாள்.

                மதுரவாணி குடும்பத்தினரிடம் அக்கறையுடன் பேசுவதையும் பம்பரமாய் சுழன்று அனைவரையும் கவனித்துக் கொள்வதையும் பார்த்தவன் கண்டிப்பாக இந்தப் பெண் காரணமின்றியோ அல்லது முன்பு சொன்னபடி அற்ப காரணத்துக்காகவோ வீட்டை விட்டு வந்திருக்க மாட்டாள் என்பதைப் புரிந்து கொண்டான்.

தன்னிடமும் இதே அக்கறையை இவள் காட்டினால் எவ்வளவு நன்றாக இருக்குமென கனவுலகில் மிதக்கச் சென்றவனை மதுரவாணியின் குத்தீட்டி விழிகள் மீண்டும் பூமிக்கே இழுத்துவிட பெருமூச்சுடன் நிமிர்ந்தான்.

“அப்போ நம்ம போலாமா வாணி?” என்று கேட்டவனிடம்

“அதுக்குள்ளவா? நான் இன்னும் ப்ரேக்ஃபாஸ்ட் சாப்பிடல” என்று சொல்லிவிட்டு விழித்தாள் அவள்.

“இட்ஸ் ஓகே வாணி! அங்கே தான் எங்க வீடு இருக்கே… அம்மா இன்னைக்கு ரவா தோசை பண்ணுறேனு சொல்லிருக்காங்க.. அது தான் எங்க அம்மாவோட நளபாகத்துலயே பெஸ்ட் ரெசிபி… அதை நீயும் டேஸ்ட் பண்ணிப் பாரேன்” என்றவனின் இலகுவான எளிமையான பேச்சில் அங்கிருந்த பெண்கள் அனைவருமே நெகிழ்ந்து போய்விட்டனர்.

அதன் பின்னரும் மதுரவாணி மறுப்பாளானால் அவள் அவர்களின் பார்வையில் பிடிவாதக்காரியாகத் தெரிய ஆரம்பித்துவிடுவாள்! எனவே சுதாரித்தவள் தனது அறைக்கு உடை மாற்றச் செல்லும் போது தான் சங்கவியின் மொபைல் சிணுங்கியது.

அதில் தெரிந்த பெயரைக் கண்டதும் சங்கவியின் முகத்தில் கலவரம் பரவ மதுரவாணி அழைத்தது யாரென ஓரளவுக்கு ஊகித்துவிட்டாள்.

அவள் திருதிருவென விழிக்கும் போதே சங்கவி போனை எடுத்து “ஹலோ! சித்தி எப்பிடி இருக்கிங்க?” என்று ஆரம்பிக்கவும் அழைத்தது தனது அன்னை தான் என்பதை அறிந்தவள் தமக்கையிடம் போனை லவுட் ஸ்பீக்கரில் போடும்படி சைகையில் கேட்டுக்கொள்ள தங்கை சொன்னதை செய்தாள் அவள்.

“கவி உனக்கு உடம்பு சரியில்லயாமே! என்னம்மா பண்ணுது? வேலை வேலைனு அலைஞ்சு உடம்ப போட்டு அலட்டிக்காத தங்கம்!”

விசாலாட்சியின் குரலில் தெரிந்த கனிவும் அக்கறையும் நீண்டநாட்களுக்குப் பின்னர் அவரது குரலைக் கேட்ட மதுரவாணியின் கண்களைக் கலங்க வைத்தது.

சங்கவியின் உடல்நலக்குறைவுக்கு நாட்டுமருந்து சிலவற்றைச் சொன்னவர் “உடம்பை பாத்துக்கத்தா! நம்மள மாதிரி பொம்பளைங்க குடும்பம் பிள்ளைக்குட்டினு யோசிச்சு நம்ம உடம்பை கவனிச்சுக்கிறதே இல்ல… நாளைக்கு நம்ம படுத்துட்டா அவங்களுக்குத் தான் சிரமம்” என்றவரிடம் மற்றவர்களின் நலனை விசாரிக்க ஆரம்பித்தாள் சங்கவி.

“உங்க சின்னய்யாவுக்கு என்ன? அவரு நல்லா தான் இருக்காரு… நானும் அத்தையும் தான் பொம்பளைப்பிள்ளைய பறிகுடுத்துட்டு அவளைப் பாக்க ஏலாம இருக்கோம்! அத்தைக்கு அவ நினைப்பு தான் எப்போவுமே… இந்தப் பயலுவ அவனுங்க போலீஸ்கார டிப்பாட்மெண்ட்ல சொல்லி தேடச் சொல்லியும் பிரயோஜனம் இல்லையேத்தா! பொம்பளைப்பிள்ளை வேணும்னு குலதெய்வத்துக்கு நேந்துகிட்டுப் பிறந்த பிள்ளைய சீராட்டி வளத்துட்டு இப்பிடி பறிகுடுத்துட்டு நிக்கிறேன்”

அன்னையின் குரலில் தெரிந்த ஆற்றாமை மதுரவாணிக்குக் கண்ணீரை வரவழைத்தது. சங்கவியிடம் போனை வாங்கி பேசிவிடுவோமா என்று எண்ணி அவளை நெருங்கியவள் அதற்குள் இணைப்பு துண்டிக்கப்படவும் கடவுளுக்கே தான் பேசுவதில் இஷ்டமில்லை போல என்று எண்ணி அமைதியானாள்.

இங்கே நடந்த அனைத்தையும் மதுசூதனன் ஆராய்ச்சிப்பார்வையுடன் பார்த்துக் கொண்டு தான் இருந்தான்.

மதுரவாணியின் அன்னையின் குரலில் மகளின் பிரிவில் உண்டான பரிதவிப்பைக் கேட்டவனுக்கு மனம் ஆறவில்லை. இந்தப் பெண்மணிக்காகவேனும் மதுரவாணி அவளது ஊருக்குத் திரும்பினால் நலம் என்று எண்ணியவன் தொண்டையைச் செறுமினான்.

“ஐ திங்க் இப்போ நீங்க எல்லாரும் எமோசனலா இருக்கிங்க… நான் வேணும்னா இன்னொரு நாள் வாணியை கூட்டிட்டுப் போய்க்கிறேன்” என்று எழுந்திருக்கவும்

“பரவால்ல! எனக்கும் மைண்ட் கொஞ்சம் டிஸ்டர்பா இருக்கு… வெளியே எங்கயாச்சும் போனா தான் சரியாகும்… நான் வர்றேன்… கொஞ்சம் வெயிட் பண்ணுங்க” என்ற மதுரவாணி மாடிப்படிகளில் ஏறி மறைந்தாள்.

திரும்பி வந்தவளின் முகம் எந்த வித உணர்வுமின்றி இருக்க மதுசூதனன் வேறு எந்தக் கேள்வியும் கேட்காது அவளுடன் வெளியேறினான்.

இருவரும் காரில் கிளம்பிச் சென்ற சத்தம் கேட்டதும் சங்கவி ஆரத்யாவுக்குச் சாப்பாடு எடுத்துவைக்கச் சென்றாள்.

காரில் ஏறியதிலிருந்து மதுரவாணி அமைதி காக்கவும் மதுசூதனன் காரை லவ்டேலில் இருந்து கோயம்புத்தூர் செல்லும் வழியிலுள்ள மோட்டல் அருகே உள்ள அமைதியான இடத்தில் நிறுத்தினான்.

அவள் என்னவென்று நோக்க “கொஞ்சம் கீழ இறங்கு” என்று அவன் சொல்ல குழப்பத்துடன் காரிலிருந்து வெளியேறி இறங்கினாள்.

அவன் கை காட்டிய இடத்தில் புல்வெளி மட்டும் நிறைந்திருக்க எதிரே மலைச்சிகரங்கள் ஒன்றோடொன்று கரம் கோர்த்தபடி நின்று கொண்டிருக்க அந்தச் சூழல் அவளது மனதிலுள்ள உணர்வு போராட்டம் நிறைந்த நிலைக்கு இதமாக இருந்தது.

அங்கே சென்றவள் வீசும் இளங்குளிர்க்காற்றை அனுபவித்தபடி மலைச்சிகரங்களை நோக்க அவளருகில் வந்து நின்றவன் சுற்றி வளைக்காமல் நேரடியாகவே மதுரவாணியைக் குற்றம் சாட்ட துவங்கினான்.

“உங்கம்மா இவ்ளோ வருத்தப்படுறாங்களே! இதைக் கேட்டும் உனக்கு மனசு மாறலயா வாணி?”

“இப்போ நீ என்ன சொல்ல வர்ற? உனக்கு எதுவும் முழுசா தெரியாது மது… விசயம் தெரியாம என்னை ப்ளேம் பண்ணாத ப்ளீஸ்”

“நீ ஸ்ரீதர் சாரோட உனக்கு ஃபிக்ஸ் பண்ணுன மேரேஜ் பிடிக்காம வீட்டை விட்டு வந்துட்ட… இது போதுமே! நீ சொல்லியும் அவங்க உன் பேச்சைக் கேக்கலனு தெரியுது… ஆனா அதுக்குனு இப்பிடி நீ எங்க இருக்கனு தெரியாம அவங்களைத் தவிக்க விடுறது தப்பு வாணி”

“எனக்கும் இப்பிடிலாம் பண்ணனும்னு ஆசை ஒன்னும் இல்ல… ஆனா… ஆனா நா… ப்ச்… உனக்கு என் ஃபேமிலிய பத்தி ஒன்னும் தெரியாது… ப்ளீஸ் நம்ம இதைப் பத்தி பேசிக்க வேண்டாம்” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து செல்ல எத்தனித்தவளின் கரம் பற்றி நிறுத்தினான் அவன்.

“அப்பிடி என்ன தான் பிரச்சனை உன் ஃபேமிலில? சொன்னா தானே தெரியும்? சும்மா நான் அடிமையா வாழ விரும்பலனு ஃபெமினிசம் பேசிட்டுச் சுத்தாத வாணி… குடும்பத்துல உள்ளவங்க நம்மளை என்னைக்குமே அடிமையா நினைக்கிறது இல்ல… அதே போல எனக்குக் கல்யாணம் வேண்டாம்; நான் சாகுற வரைக்கும் தனியா இண்டிபெண்டண்டா இருக்க தான் விரும்புறேனு சொல்லுறதுக்கு இது ஒன்னும் வெஸ்டர்ன் கன்ட்ரி இல்ல… நம்ம நாட்டுக்குனு சில கட்டமைப்புகள் இருக்கு… அதை மதிக்க கத்துக்கோ ஃபர்ஸ்ட்”

சொன்னவனின் குரலில் இருந்த அழுத்தம் அவளுக்கு எரிச்சல் மூட்டியது.

“வெஸ்டர்ன் கன்ட்ரிஸ்ல பதினைஞ்சு பதினாறு வயசுல குழந்தைங்க தன்னோட செலவுக்குத் தானே சம்பாதிக்க ஆரம்பிச்சிடுவாங்க… நீயோ நானோ அப்பிடியா வளந்தோம் வாணி? ஒரு சின்ன சின்ன விசயத்துக்கும் நமக்கு ஃபேமிலி சப்போர்ட் வேணும்… அதான் நம்ம கல்சரும் கூட!

இன்னைக்கு மானிங் பிரேக்ஃபாஸ்டுக்கு நான் என் அம்மாவைத் தான் டிபெண்ட் பண்ணி இருக்கேன்… எனக்கு தொழில்ல அடுத்து என்ன பண்ணனும்னு தெரியாம முழிக்கிறப்போ ஒரு கைடா எனக்கு வழிகாட்டுற என் அப்பாவை டிபெண்ட் பண்ணி இருக்கேன்… இவ்ளோ ஏன்! எனக்கு மனசுக்குக் கஷ்டமா இருக்கிறப்போ லோன்லியா நான் ஃபீல் பண்ணுவேனோனு யோசிச்சு சொல்லுற சின்ன சின்ன ஆறுதலுக்காக நான் என் தங்கச்சிய டிபெண்ட் பண்ணிருக்கேன்… இதுல்லாம் நீ சொல்லுற இண்டிபெண்டண்ட் லைப்ல உனக்குக் கிடைக்குமா? இது எதுவுமே கிடைக்காத இண்டிபெண்டண்ட் லைஃபுக்காக நீ உன் மேல உயிரையே வச்சிருக்கிற அம்மா, அப்பா, அண்ணன்னு எத்தனை பேரை கஷ்டப்படுத்திட்டிருக்க தெரியுமா? இதுக்குப் பேரு சுயநலம்”

அவனது சுயநலம் என்ற வார்த்தை மதுரவாணியைச் சீண்டிவிடவே “ஷட்டப் மது! நான் சுயநலவாதியா? என்னைப் பத்தி என்னடா தெரியும் உனக்கு? என்னால அங்க நடக்குற விசயங்களைப் பாக்க முடியாம தான் நான் வீட்டை விட்டு வந்துட்டேன்… எப்போ பாத்தாலும் அடிதடி, இரத்தம், சண்டைனு சுத்துற அப்பாவும் மாமாவும் வீட்டை விட்டு வெளியே போனா எப்போ வருவாங்கனு என் அம்மாவும் அத்தையும் பயத்தோட காத்திருப்பாங்க…

என் அண்ணனுங்க போலீஸ் ஆபிசர்ஸ்… ஒரு தடவை ஒரு மணல் குவாரி ஓனரை அரெஸ்ட் பண்ணுனதுல அந்தாளு லாரிய வச்சு என் சரவணன் அண்ணனைக் கொல்ல பாத்தாரு தெரியுமா? ஆறு மாசம் நடக்க முடியாம பெட்ல தான் இருந்தான்… என் அண்ணிக்கு அந்த ஆறு மாசமும் நரகமா தான் கழிஞ்சுது…

இதைலாம் பாத்து பாத்து எனக்கு அந்த வாழ்க்கை மேல விரக்தி வந்துடுச்சு… ஆனா எனக்கும் ஒரு போலீஸ் ஆபிசரை மாப்பிள்ளையா கொண்டு வந்து நிறுத்துனா நான் என்ன பண்ண முடியும்? எனக்கு இந்த மாதிரி சண்டை சச்சரவு துப்பாக்கி கத்தினு எதுவுமே இல்லாத ஒரு அமைதியான வாழ்க்கை வேணும் மது! அதே நேரம் எதுக்கெடுத்தாலும் மீசைய முறுக்கிட்டு வீட்டுப்பொம்பளங்கள திட்டுற, சண்டைக்குப் போற ஆண்களுக்கு மத்தில வளந்த்தால எனக்கு எல்லா ஆண்களும் இப்பிடி தான்னு மனசுல பதிஞ்சு போச்சு… அதான் நான் எந்த ஆணுக்கும் மேரேஜ்ங்கிற பேருல அடிமையா இருக்க விரும்பல” என கோபாவேசத்தோடு சொல்லி முடித்தாள்.

மதுசூதனன் அனைத்தையும் பொறுமையாய் கேட்டவன் சற்று நேரம் அமைதி காத்துவிட்டு பெருமூச்சு ஒன்றை வெளியிட்டான்.

பின்னர் அவளை நோக்கியவன் “நீ சொல்லுறதுலாம் சரி தான்! ஆனா உன் பிரிவால அவங்க மனசு மாறிருக்கவும் வாய்ப்பு இருக்கே… நீ ஏன் அந்த ஆங்கிள்ல யோசிக்க மாட்டேங்குற வாணி?” என்று சொல்லவே

“சரி! நான் அந்த ஆங்கிள்ல யோசிச்சு என் வீட்டுக்கே திரும்பிப் போறேனு வையேன்! உன் காதல் என்னாகும் மது?” என்று அவனை மடக்குவதற்காக கேட்டு வைத்தாள் அவள்.  ஆனால் கேட்ட பிறகு தான் விதண்டாவாதமாய் பேசுவதாக எண்ணி என்னடி உளறி வைத்திருக்கிறாய் என்று தன்னைத் தானே திட்டிக் கொண்டாள் மதுரவாணி.

ஆனால் மதுசூதனன் கண்களில் சுவாரசியம் கூட

“நாட் பேட்! என் லவ் பத்தி உனக்கு இவ்ளோ அக்கறை இருக்கே! ஐ அம் இம்ப்ரெஸ்ட்… பட் அதை பத்தி நீ கவலைப்பட வேண்டாம்… என் லவ்வுக்காக நீ உன் குடும்பத்தைப் பிரிஞ்சு இருக்கணும்னு எந்த அவசியமும் இல்ல… நீ என்ன செவ்வாய் கிரகத்துக்கா போகப் போற? இதே தமிழ்நாட்டுல இருக்கிற தூத்துக்குடிக்குத் தானே போகப் போற! அங்க வந்து உன் குடும்பத்துல முறைப்படி பொண்ணு கேட்டு மேரேஜ் பண்ணிப்பேன் செல்லக்குட்டி.. சோ நீ என் காதலுக்காக இவ்ளோ தூரம் யோசிக்க வேண்டாம்” என்றான் தீர்மானமாய்.

அவள் அவனை முறைத்தபடியே “உனக்கு ஓவர் கான்பிடென்ஸ் ஜாஸ்தி… எங்கப்பா என்னைக்குமே உன்னை மருமகனா ஏத்துக்கவே மாட்டாரு… ஏன்னா அவரு…” என்று பேசும் போது இடைமறித்தவன்

“காரணம் எனக்கும் தெரியும்… ஆனா எனக்கு நம்பிக்கை இருக்கு… அவரு கண்டிப்பா ஒத்துப்பாரு… சோ என்னோட லவ்வை காரணமா சொல்ல வேண்டாம் மை டியர் வாணி… கொஞ்சம் உன் ஃபேமிலிய பத்தி யோசி” என்றான் முடிவாக.

அதற்கு மேல் அவளிடம் அது குறித்து வாதிட விரும்பவில்லை. ஆனால் அன்றைய தினத்துக்குப் பின்னர் அடிக்கடி அவனைத் தொழில் விசயமாகச் சந்திக்க கோயம்புத்தூருக்கு வர வேண்டிய அவசியம் மதுரவாணிக்கு உண்டானது.

இது அவனுக்கும் அவளுக்குமிடையேயான நெருக்கத்தை அவளே விரும்பாவிட்டாலும் அதிகரிக்கத் தான் செய்தது. போதாக்குறைக்கு ஒவ்வொரு முறையும் அவன் வீட்டுக்கு அழைத்துச் செல்ல ராமமூர்த்தியும் மைதிலியும் அவளுடன் நன்றாகவே நெருங்கிவிட்டனர்.

இதில் ஐந்தாறு முறை மதுசூதனனும் மதுரவாணியும் ஸ்ரீதரின் அன்னை ரேவதியையும் பார்த்துவந்தது வேறு கதை! ஒவ்வொரு முறையும் ரேவதி தவறாது ஸ்ரீரஞ்சனி பற்றி விசாரிப்பார்.

ஸ்ரீதர் அஜய்யின் கேசை விசாரிப்பதால் அவனால் அடிக்கடி அவளைச் சந்திக்க முடியவில்லை. ஆனால் ராகினியின் கல்லூரிக்கு வந்த போது தவறாமல் சங்கவியின் இல்லத்துக்கு வந்து அவளது உடல்நலனை விசாரித்தவன் மறவாமல் ஸ்ரீரஞ்சனியின் பாதுகாப்பையும் உறுதி செய்துவிட்டுச் சென்றான்.

இவ்வாறு இரு ஜோடிகளின் வாழ்விலும் எவ்வித இடைஞ்சலுமின்றி கழிந்த நிலையில் தான் தனுஜாவின் நிச்சயதார்த்த நாள் வந்தது. அவளது நிச்சயம் கோவையில் நடப்பதால் உடல்நலம் பெற்ற சங்கவியும் யாழினியும் தங்கள் ஊழியர்களோடு சென்றிருந்தனர்.

அவள் கண்டிப்பாக மதுரவாணியும் வரவேண்டும் என்று கேட்டுக்கொள்ளவே மதுரவாணியும் வேறு வழியின்றி வந்து சேர்ந்தாள். அங்கே வேண்டுமென்றே தனுஜா பூ அலங்காரங்களைக் குறை சொல்லி அடிக்கடி மாற்ற வைத்து வேடிக்கை பார்க்க மதுரவாணியோ அவளை ஒரு பொருட்டாக கூட மதிக்கவில்லை.

ஆனால் நிச்சயதார்த்தப்பெண்ணான அவளால் அதிக நேரம் அந்த மேரேஜ் ஹாலில் நிற்க முடியாததாலும் அவளுக்கு உடை தைத்த ஆடை வடிவமைப்பாளர் இறுதி கட்ட திருத்தம் செய்த உடையுடன் வந்ததாலும் கிளம்பிச் சென்றுவிட்டாள்.

மதுசூதனன் இதை அமைதியாக கவனிக்க அவனது நண்பர்கள் தான் பொங்கிவிட்டனர். ஆனால் அவர்களை அமைதிப்படுத்தியவன் மற்ற வேலைகளைக் கவனிக்கச் சென்றுவிட்டான்.

தனுஜா நிச்சயதார்த்தத்துக்காக உற்சாகமாகத் தயாரானவள் மதுசூதனனையும் மதுரவாணியையும் அங்கே அழைத்ததே தனது வாழ்வில் தனக்குக் கிடைத்த அதிர்ஷ்டத்தை அவர்களிடம் காட்டி பெருமைப்பட தான்! ஆனால் அவை யாவுமே கானல் நீராய் மாறப் போவதை அவள் அறியவில்லை!

கூடவே மதுரவாணியின் வாழ்விலும் மிகப்பெரிய அதிர்ச்சி ஏற்படப் போவதை அவளும் அறியவில்லை. இவை அனைத்தையும் விதி என்ற நாடகக்காரன் அரங்கேற்றப் போகும் அந்தப் பொன்மாலை பொழுதும் வந்து சேர்ந்தது.

அலை வீசும்🌊🌊🌊