🌊 அலை 22 🌊

கண்ணாடியில் தெரியும்

என் பிம்பமும் நாணுதே!

என்னருகில் நிற்கும்

உன் பிம்பம் செய்யும்

மாயக்குறும்பில்!

லவ்டேல்

மதுரவாணி கோப்புகளை சங்கவியிடம் ஒப்படைத்தவள் “அக்கா லீகல் டேர்ம்ஸ் மட்டும் ஒருதடவை செக் பண்ணுவியாம்… மத்தபடி படிச்சிட்டு சைன் பண்ணிட்டேனா நாளைக்கு மானிங் அவனே வந்து வாங்கிப்பானாம்” என்று மனப்பாடம் செய்ததைப் போல ஒப்பித்துவிட்டு அகன்றாள்.

சங்கவி யாழினியிடம் அவற்றை நீட்டியவள் “யாழி இன்னைக்கு ரெண்டு பேரோட முகமும் சரியில்ல! நீ கவனிச்சியா?” என்று கேட்க

“ஆமா கவி! இப்போ என்ன புது பிரச்சனைனு தெரியலயே… ஆனா ஒன்னு, இதுக்கு மேல எந்த அதிர்ச்சி வந்தாலும் ஊதித் தள்ளுற மனோதைரியம் எனக்கு வந்துடுச்சுடி.. காரணம் நம்ம தங்கச்சிங்க தான்!” என்று கேலி போல சொன்னாலும் அவளும் கவனித்துக் கொண்டு தானே இருந்தாள்!

கோவையிலிருந்து திரும்பியதிலிருந்து ஸ்ரீரஞ்சனியும் சரி மதுரவாணியும் சரி சுரத்தின்றி முகத்தைத் தொங்கப் போட்டுக் கொண்டபடி தான் இருந்தனர்.

மதியம் கல்லூரியிலிருந்து திரும்பிய ராகினியும் இதை கவனித்துவிட்டு இருவரிடமும் என்னவென வினவ அவளிடம் மழுப்பிய இருவரும் சிரித்துச் சமாளித்து வைத்தனர்.

அவள் சொன்னால் தான் விடுவேன் என அடம்பிடிக்க முதலில் மதுரவாணி தான் ஆரம்பித்தாள்.

“அந்த மதுசூதனனோட பிஹேவியர் எதுவுமே சரியில்ல ராகி… அவன் பேசுற பேச்சு, பாக்குற பார்வை எல்லாமே வித்தியாசமா இருக்கு… நம்ம எல்லாரும் ரெஸ்ட்ராண்ட்ல பாத்தோமே அந்த மது இல்ல இவன்… இவனோட பிஹேவியர் வித்தியாசமா என்னைக் குழப்புதுடி ராகி”

அவள் பேசி முடித்ததும் ராகினி அவளருகே வந்தவள் மதுரவாணியின் வதனத்தை அப்படியும் இப்படியுமாகத் திருப்பிப் பார்த்தவள் “கன்பார்ம்! உனக்குப் பயம் வந்துடுச்சு” என்று தீவிரக்குரலில் கூறவும் அவளது கையைத் தட்டிவிட்டவள்

“ஷட்டப்! இதையே தான் அவனும் சொன்னான்.. எனக்கு என்னடி பயம்? நான் எப்போவுமே தைரியமான அதே மதுரவாணி தான்.. அவன் வாணி வாணினு கூப்பிடுறதால மட்டும் என்னோட கேரக்டர் சேஞ்ச் ஆயிடுமா?” என்று கேட்டுவிட்டு அவள் அறையில் கிடந்த சோபாவில் சாய்ந்து கொண்டாள் அவள்.

ராகினி நக்கலாய் சிரித்தவள் “அவரு கரெக்டா தான் சொல்லுறாரு… உனக்கு எங்க உன்னோட ப்ரீடம் பறிபோயிடுமோனு பயம்” என்று சொல்ல

“அதான் எப்பிடினு நான் கேக்குறேன்டி ராகி” என்றாள் மதுரவாணி குழப்பத்துடன்.

“சிம்பிள்! ஒரு பையனோட பேச்சு, பார்வை, பிஹேவியர் ஒரு பொண்ணைக் குழப்பி ஸ்தம்பிக்க வைக்குதுனா அது கண்டிப்பா லவ்வா தான் இருக்க முடியும்… ஐ திங் நீ மது சாரை லவ் பண்ண ஆரம்பிச்சிட்ட”

ராகினி தீர்மானமாய் சொன்னதும் மதுரவாணி பதறியடித்துக் கொண்டு எழுந்தாள்.

“நோ வே! அவனை நான் லவ் பண்ணல”

“அப்போ அவரு உன்னை லவ் பண்ண ஆரம்பிச்சிட்டாருனு அர்த்தம்… ரெண்டு பேருல யாரோ ஒருத்தர் மனசுல காதல்ங்கிற கள்ளம் புகுந்துட்டுனா இப்பிடி தான் நடக்கும் மதுக்கா”

எல்லாம் தெரிந்தவள் போல அவள் சொல்லவும் மதுரவாணியின் முகத்தில் குழப்பம் மிகுந்தது.

“அது எப்பிடி? அவனுக்கு இப்போ தான் பிரேக்கப் ஆச்சு… அதுக்குள்ள எப்பிடி இன்னொரு தடவை லவ் வரும்? உனக்கு விவரம் பத்தலடி”

“எனக்கு இந்த வயசுக்குத் தேவையானதை விட அதிகமா விவரம் இருக்கு… உனக்குத் தான் இல்லக்கா”

இவர்கள் இருவரும் விவாதிக்க ஸ்ரீரஞ்சனியோ அங்கே நடப்பதற்கும் தனக்கும் சம்பந்தமே இல்லாததை போல அமர்ந்திருந்தாள்.

அவளை இருவரும் நோட்டமிட்டுவிட்டு அவளருகே சென்று அமர்ந்து கொண்டனர்.

“என்னாச்சு ரஞ்சி? ஏன் ஒரு மாதிரி இருக்க? ஸ்ரீதர் சார் எதுவும் சொன்னாரா?”

மதுரவாணியின் கேள்விக்கு மறுப்பாய் தலையசைப்பு மட்டுமே பதிலாக கிடைக்க ராகினி ஸ்ரீரஞ்சனியை உலுக்கியவள்

“அக்கா ப்ளீஸ்கா! என்னாச்சுனு சொல்லுக்கா… இல்லனா அம்மா கிட்ட உன்னைப் போட்டுக் குடுத்துடுவேன்” என்று மிரட்ட அவளை முறைத்தவள் மடை திறந்த வெள்ளம் போல மனதில் இருந்தவற்றைக் கொட்ட தொடங்கினாள்.

உணவு விடுதியில் தங்களைத் தாக்க வந்தவனைப் பற்றியும் ஸ்ரீதர் அந்த ஆளைத் தாக்கியதையும் கூறியவள்

“ஒரே அறை தான்! அந்த ஆளுக்கு வாய்ல இருந்து ரத்தம் வந்துடுச்சுடி… எனக்கு என்னமோ டி.சி.பி கிட்ட பொய் சொல்லுறதுக்குப் பதிலா பேசாம நம்மளே ஆறடிக்கு ஒரு குழியைத் தோண்டு அதுக்குள்ள போய் படுத்துக்கலாமானு தோணுது” என்று சொல்ல ராகினி பக்கென்று நகைத்தாள்.

“அரண்டவன் கண்ணுக்கு இருண்டதுலாம் பேய்னு சொல்லுவாங்க… நீ தான் அந்த சாக்லேட் பாயை டெர்ர்னு சொல்லு… ஆனா நெக்ஸ்ட் வீக் அவரைத் தான் எங்க காலேஜ்ல ஒரு பங்சனுக்கு சீஃப் கெஸ்டா கூப்பிட்டிருக்காங்க… கேர்ள்ஸ்லாம் இப்போவே மந்திரிச்சு விட்ட மாதிரி அவரு மேல க்ரேசா சுத்துறாளுங்க தெரியுமா?” 

அவளை வேற்றுகிரக ஜீவராசியைப் போல பார்த்துவைத்தனர் மதுரவாணியும் ஸ்ரீரஞ்சனியும்.

“இவ்ளோ ஏன், நானே அவரை மறுபடியும் பாக்க எக்சைட்டா இருக்கேன்… ஹவ் கியூட்!” என்று ரசனையுடன் உருக அவள் தலையில் நங்கென்று குட்டு விழுந்தது.

குட்டியது ஸ்ரீரஞ்சனியே தான்! ஏற்கெனவே ஸ்ரீதரை எண்ணிப் பயந்திருந்தவளுக்கு தங்கையின் சிலாகிப்பு பேச்சு காரணமின்றி எரிச்சல் மூட்டியது.

“இன்னொரு வார்த்தை பேசுனேனு வையேன், நான் மனுசியா இருக்க மாட்டேன்… அந்தாளு கிட்ட நம்ம பொய் சொல்லிருக்கோம்… இல்ல… நான் பொய் சொல்லிருக்கேன்… என்னைக்குக் கண்டுபிடிப்பானோனு திகிலா இருக்கு… இவளுக்கு அவன் கியூட்டாம்”

காச்மூச்சென்று கத்தியவளை மதுரவாணி தான் சமாதானப்படுத்தி அமர வைத்தாள். அதற்குள் கீழே இருந்து யாழினி என்னவென்று கேட்கும் சத்தம் வரவே “ஒன்னுமில்லக்கா” என்று சமாளித்தனர் மூவரும்.

அப்போதைக்கு அன்றைய தினம் நடந்தவற்றை மறக்க முயன்றனர் இரு தோழியரும். மாலையில் குழந்தைகள் இருவரும் பள்ளியிலிருந்து வீடு திரும்பவும் அவர்களுக்குச் சிற்றுண்டி செய்து கொடுப்பதிலும் வீட்டுப்பாடம் செய்ய உதவுவதிலும் மதுரவாணியின் நேரம் ஜோராய் கழிந்தது.

அவள் செய்த உருளைக்கிழங்கு பஜ்ஜியை குழந்தைகள் ஆவலாய் சாப்பிட ஒரு தட்டில் சில பஜ்ஜிகளை வைத்தவள் சங்கவியின் அறையில் அமர்ந்து தனுஜாவின் திருமணத்தில் செய்யவிருக்கும் பூ அலங்காரம் பற்றி திட்டமிட்டுக் கொண்டிருந்த சங்கவிக்கும் யாழினிக்கும் கொண்டு சென்று வைத்தாள்.

கூடவே காபியும் சேர்ந்து கொள்ள அன்றைய மாலைநேரம் ரம்மியமாய் கழிய இரவுணவு செய்யும் வேலையை ஸ்ரீரஞ்சனி கவனித்துக் கொண்டாள்.

இதனால் இரு பெண்களுக்கும் இரவு வரை வீட்டு வேலை தவிர வேறு எந்த நினைவுமில்லை!

அதே நேரம் மதுசூதனன் மகிழ்ச்சியுடன் வீடு திரும்பியவன் அங்கேயும் அவனுக்கு மகிழ்ச்சி தரும் விசயம் காதில் விழுந்தது.

இத்தனை நாட்கள் ஜாதகத்தில் உள்ள கோளாறுகளால் வைஷாலிக்கும் திலீபுக்கும் நடக்கவிருந்த திருமணம் தள்ளிப் போனதில் திலீப் அளவுக்கு மதுசூதனனுக்கும் மிகுந்த வருத்தம்!

ஊரில் உள்ள திருமணங்களை எல்லாம் பொறுப்பேற்று நடத்துபவனுக்கு உடன்பிறந்த தங்கையின் திருமணம் குறித்து ஏகப்பட்ட கனவுகள் இருந்தது. ஆனால் மைதிலியும் சரி, திலீபின் அன்னையும் சரி, ஜாதகத்தில் உள்ள கோளாறுகள் அகன்றால் தான் திருமணம் என்பதில் உறுதியாக இருக்கவே திருமணம் தள்ளிப் போய்க் கொண்டே இருந்தது.

இப்போது கோளாறு அகன்று சுபநிகழ்வுக்கான சம்மதம் பெரியவர்களிடம் கிடைத்த மகிழ்ச்சியில் முதல் வேளையாக நண்பனுக்குப் போன் செய்தான் அவன்.

இன்னும் வீடு போய் சேராத திலீபுக்குத் தனது வாயால் இந்த நல்ல விசயத்தைச் சொல்லவேண்டும் என ஆர்வமாய் அழைத்தான் அவன்.

விசயம் கேட்டதும் நண்பனுக்கு வெட்கத்தில் பேச்சு வராமல் போக அவனைக் கலாய்த்துத் தள்ளிவிட்டு இன்னும் வைஷாலிக்கு யாரும் சொல்லவில்லை என்றவன் திலீப் அதை அவனது வாயால் சொன்னால் அவள் மிகவும் மகிழ்வாள் என்று சொல்ல திலீப்பும் உடனே அவளுக்குச் சொல்கிறேன் என இணைப்பைத் துண்டித்தான்.

ராமமூர்த்திக்கு ஒரு கிண்ணத்தில் கேசரியைப் போட்டு நீட்டிய மைதிலி மகனிடம் “கண்ணா நீயும் சாப்பிடுறியாடா?” என்று கேட்க அவனோ இரவுணவோடு சேர்த்து சாப்பிட்டுக் கொள்வதாகச் சொல்லிவிட்டுத் தனது அறைக்குள் புகுந்தான்.

அலுப்பு தீர குளித்து இலகு உடைக்கு மாறியவன் லேப்டாப்பில் முகம் புதைத்தான். அப்போது தான் சங்கவியிடம் இருந்து மின்னஞ்சல் வந்திருந்தது.

ஒப்பந்தத்தின் சரத்துகளை அனுப்பியிருந்தவள் மற்றவற்றை நேரில் கொடுப்பதற்கு ஏதுவாய் கையெழுத்திட்டு வைத்துள்ளதாக தெரிவித்திருந்தாள். அவளுக்கு நன்றி என பதிலளித்தவன் தானே நேரில் வந்து கையெழுத்திட்ட சரத்துகளை வாங்கிக் கொள்வதாகச் சொல்லிவிட்டான்.

லவ்டேலுக்கு நாளை காலை செல்ல வேண்டும் என்ற எண்ணம் உதித்ததுமே மதுரவாணியின் முகம் நினைவுக்கு வந்தது. கூடவே உணவு விடுதியில் அவளது நாசியுடன் உரசிய அவனது நாசி இப்போது கூட குறுகுறுத்தது.

தான் இன்று அவளை அதிகப்படியாகத் தான் சீண்டிவிட்டோம் போல என்று எண்ணியவன் நகைப்போடு போனை எடுத்தான். அவளுக்கு அழைத்தால் என்ன என்ற எண்ணம் தோன்றும் போதே கையில் டேபிள் வெயிட்டுடன் அவன் முன்னே நின்றவளின் கோபமுகம் தான் நினைவுக்கு வந்தது.

“சாப்பாட்டுல காரத்தைக் குறைச்சுக்கோனு அட்வைஸ் பண்ணணும்… சின்ன சின்ன விசயத்துக்குலாம் கோவம் வருது இந்தப் பொண்ணுக்கு” என்று செல்லமாக அலுத்துக் கொண்டவன் கீழே தங்கையின் குரல் கேட்கவும் அவளது திருமண அறிவிப்பின் சந்தோசமான தருணத்தை அவளுடன் சேர்ந்து அனுபவிக்க உற்சாகத்துடன் எழுந்து கீழே சென்றான்.

திருமணம் என்றதும் வைஷாலிக்கு வெட்கம் வந்துவிட அவளைக் கேலி செய்தபடியே இனிப்பை அவளுடன் சேர்ந்து உண்டவன் குடும்பத்துடன் கலாட்டா பேச்சுக்களில் கலந்து கொண்டதில் அப்போதைக்கு மதுரவாணியின் நினைவுகளுக்குத் தற்காலிக ஓய்வு கொடுத்து அனுப்பி வைத்தான்.

மதுசூதனன் மகிழ்ச்சிக்கடலில் மூழ்கியிருக்க ஸ்ரீதரோ அன்றைய தினம் வெளிறிய முகத்துடன் உணவுவிடுதியில் அவனிடம் விடை பெற்றுச் சென்ற ஸ்ரீரஞ்சனியின் திடீர் முகமாற்றத்துக்குக் காரணம் புரியாது தவித்தான்.

அன்றைய தினம் நடந்த கொலை முயற்சி அவனுக்கு ஒன்றும் புதிது அல்ல. ஆனால் ஸ்ரீரஞ்சனி இதையெல்லாம் பார்த்துப் பழக்கப்பட்டவள் இல்லையே! அதனால் பயந்திருப்பாளோ என்ற ஐயம் எழ அதே ஐயத்துடன் விசாரணைக்கு அழைத்துவந்தவன் கொடுத்த தகவல்களைத் திரட்டிவிட்டு வீட்டுக்கு வந்து சேர்ந்தான்.

வீட்டிற்கு வந்ததும் அன்னையிடம் சங்கவியின் மொபைல் எண்ணைக் கேட்கவும் ரேவதி மகனை விசித்திரமாகப் பார்க்க ஸ்ரீதர் அன்றைய தினம் நடந்த விசயத்தை ஒரு வரி விடாது ஒப்பித்தான்.

“ஃபுட் கோர்ட்ல இருந்து கிளம்பிப் போறப்போ அந்தப் பொண்ணு முகம் தெளிவில்லாம வெளிறிப் போய் இருந்துச்சும்மா… பாவம்! எனக்கு விருந்துபசாரம் பண்ணுறேனு எவ்ளோ சந்தோசமா ஃபுட் கோர்ட்டுக்குக் கூட்டிட்டு வந்தா தெரியுமா? நான் மட்டும் இன்னைக்குக் கவனிக்கலைனா அந்தாளு அவளைக் கண்டிப்பா குத்திருப்பான்” என்று கவலை தோய்ந்த குரலில் முடித்தான்.

“சம்பந்தம் இல்லாம ரஞ்சனிய ஏன்டா கொல்ல நினைக்கணும்?”

“அட! இது யூனிவர்சல் தியரிமா… ஒரு ஆம்பளைய பயமுறுத்தணும்னா அவனுக்கு நெருக்கமானவங்களைத் தாக்கணும்… இதைத் தான் அந்தாளும் செய்ய நினைச்சிருக்கான்… ஆனா எனக்கும் ரஞ்சனிக்கும் எந்த நெருங்கிய சம்பந்தமும் இல்லனு அவனுக்குத் தெரியாதுல்ல”

“ச்சே! என்ன மனுசன் அவன்! ஏற்கெனவே அவனால ஒரு பொண்ணு செத்துப் போயிட்டா… இதுல இன்னைக்கும் ஒருத்தனை ஏவிவிட்டிருக்கானே! எல்லாம் பணத்திமிர் ஸ்ரீ!”

ரேவதி பொறுமியதோடு மகன் இன்னும் ஸ்ரீரஞ்சனியின் நிலை குறித்துக் கவலையுடன் இருப்பதால் தானே சங்கவிக்குப் போன் செய்து ஸ்ரீரஞ்சனியுடன் தான் பேச வேண்டுமென சொல்லிவிய சங்கவி மறுபேச்சின்றி இளைய நாத்தனாரிடம் போனை நீட்டினாள்.

ஸ்ரீரஞ்சனி போனை வாங்கியவள் “ஹலோ! சொல்லுங்க ஆன்ட்டி” என்றதும் காதில் விழுந்த ஸ்ரீதரின் குரலில் சிலையானாள்.

சங்கவி போனைக் கொடுத்துவிட்டுச் சென்றுவிட மறுமுனையில் ரேவதியும் மைந்தனிடம் போனை ஒப்படைத்துவிட்டு அகன்றார்.

“ஹலோ! ரஞ்சனி ஆர் யூ தேர்?” என்றவனின் குரல் அமைதியாக இருந்தாலும் அவன் எடுத்த ருத்திர அவதாரம் இன்னும் கண்ணுக்குள் தான் இருக்கிறது அவளுக்கு.

அதை எண்ணி மிகவும் மெதுவான குரலில் “சொல்லுங்க சார்!” என்று பேசியவளின் நலனை விசாரித்தான் அவன்.

“இன்னைக்கு ஃபுட் கோர்ட்ல இருந்து கிளம்புறப்போ உன்னோட ஃபேஸ் சரியில்ல… ரொம்ப பயந்த மாதிரி இருந்துச்சு.. ஆர் யூ ஓகே நவ்?”

இந்தக் குரலில் அக்கறையும் அவள் நலன் விரும்பும் அன்பும் மட்டுமே தெரிந்தது ஸ்ரீரஞ்சனிக்கு. கூடவே தான் பயந்தது வெறுமெனே கத்தி சம்பவத்துக்கு மட்டும் தான் என்று எண்ணுபவனை நினைத்துச் சங்கடப்பட்டவள் பேச இயலாது தவித்தாள். ஆனால் இவ்வாறு தான் தயங்கினால் அவன் தன்னை சந்தேகிக்கும் வாய்ப்பு அதிகம் என உணர்ந்து தனது இயல்பான பேச்சுக்குத் திரும்ப முயன்றாள்.

மறுமுனையில் ஸ்ரீதர் அவளிடம் மன்னிப்பு கேட்டவன் அவளைப் பத்திரமாக இருக்குமாறு சொல்லவே அவள்

“ஏன் சார் அடிக்கடி கேர்ஃபுல்னு சொல்லுறிங்க? எங்க ஏரியாவுக்கு டெரரிஸ்ட் யாரும் வந்திருக்காங்களா?” என்று அவளது இயல்பான குறும்புப்பேச்சை எடுத்துவிடவும் மறுமுனையில் மெல்லிதாய் சிரிப்புச்சத்தம் கேட்டது.

“அவ்ளோ பெரிய ஆபத்துலாம் இல்ல… ஆனா அலட்சியம் பண்ணுற அளவுக்குச் சின்ன ஆபத்தும் இல்ல… இன்னைக்கு ஃபுட் கோர்ட்ல அவன் அட்டாக் பண்ண வந்தது என்னை இல்ல… உன்னைத் தான்”

ஸ்ரீதர் சொல்லி முடிக்கும் முன்னரே மறுமுனையில் ஸ்ரீரஞ்சனிக்கு அட்ரினலின் சுரக்க ஆரம்பித்தது.

தடுமாறியவளாய் “நான்… நான் என்ன பண்ணுனேன்? அட்டாக் பண்ணுற அளவுக்கு எனக்கு எதிரிங்க இல்ல… ப்ச்… எனக்கு எதிரியே இல்லங்க சார்… அப்புறம் எப்பிடி?” என்று வினவ

“உனக்கு எதிரிங்க இல்லாம இருக்கலாம்.. ஆனா எனக்கு இருக்காங்களே!” என்றான் ஸ்ரீதர் கேலியாக.

“உங்களுக்கு எதிரிங்க இருந்தா அது உங்களோட தலைவலி.. அதுக்கும் எனக்கும் என்ன கனெக்சன் சார்?”

“லிசன்! நான் கோவைக்கு டிரான்ஸ்பர் ஆகி வந்ததே ஒரு கேஸ் விசயமா தான்… அது கொஞ்சம் பெரிய இடம்… சோ நான் இங்க காலடி எடுத்து வச்சதுல இருந்து அவங்களோட ஆட்கள் என்னை வேவு பாக்குறாங்க… அன்பார்சுனேட்லி அன்னைக்கு ரெஸ்ட்ராண்ட்ல நீயும் நானும் பேசுனதை அவங்களோட ஆட்கள் கவனிச்சிட்டாங்க… அதோட விட்டிருந்தா பரவால்ல…

கோயில்ல நீ என் கிட்டவும் அம்மா கிட்டவும் உரிமையா பேசுனது, அப்புறம் இன்னைக்குக் கையைப் பிடிச்சே இழுத்துட்டுப் போய் ஃபுட் கோர்ட்ல என்னோட டைம் ஸ்பெண்ட் பண்ணுனது இதைலாம் வச்சு உனக்கும் எனக்கும் சம்திங் சம்திங்னு டிசைட் பண்ணிட்டு உன்னை அடிச்சா எனக்குப் பயம் வரும்னு ஒரு கால்குலேசன் போட்டு ஆளை அனுப்பிருக்கான் அந்த ராஸ்கல்… பை காட்ஸ் கிரேஸ், உனக்கு எதுவும் ஆகல… சோ இனிமே கொஞ்சம் கேர்புல்லா இரு”

“வாட்? உங்களுக்கும் எனக்கும் சம்பந்தமே கிடையாது… யோவ் உங்க பிரச்சனைல ஏன்யா என் தலையை உருட்டுறிங்க? நான் உண்டு; என் ஃபேமிலி உண்டுனு சத்தமில்லாம அழகான வாழ்க்கையை வாழ்ந்திட்டுருக்கேன்… என்னைப் போய் ஒரு கடுவன் பூனையோட ஆளுனு நினைச்சுட்டுக் கொலை பண்ண டிரை பண்ணுறானுங்களே”

ஸ்ரீரஞ்சனி ஆதங்கத்திலும் பயத்திலும் புலம்ப ஸ்ரீதருக்கு அவளின் இந்தப் புலம்பல் வேடிக்கையாக இருந்தது. அந்த நேரத்தில் அவள் தன்னை கடுவன் பூனை என்றது கூட பெரிதாய் தோணவில்லை அவனுக்கு.

“இவ்ளோ புலம்ப வேண்டிய அவசியமே இல்ல… கொஞ்சம் கேர்புல்லா இரு! போதும்”

“அஹான்! நீங்க ஏன் சார் சொல்ல மாட்டிங்க? ஊஞ்சலாடுறது என்னோட உயிரு தானே! என்னைப் போய் எப்பிடி உங்களோட கனெக்ட் பண்ணிப் பாத்தானுங்க?”

“ஓகே ஓகே! பதறாத… நான் வேணும்னா சேப்டிக்கு காப்ஸ் அனுப்பி வைக்கவா?”

“எதுக்கு? அவங்க இமேஜினேசன்ல நினைச்சத உண்மைனு நிரூபிக்கவா? இங்க பாருங்க சார்! இனிமே நம்ம மீட் பண்ணிக்கவே வேண்டாம்! நான் நார்த்ல வந்தேனா நீங்க சௌத் பக்கமா போங்க… இப்பிடி டிஸ்டென்ஸ் மெயின்டெய்ன் பண்ணுனாலே அவங்க என்னை மறந்துடுவாங்க”

“இம்பாசிபிள்! நான் உன்னை சேப்கார்ட் பண்ணுறேனு நினைச்சு இன்னும் தீவிரமா உன்னைப் போட்டுத் தள்ள பாப்பாங்க”

“எவ்ளோ ஈசியா போட்டுத் தள்ளுறதுனு சொல்லுறிங்க? அது சரி! சொந்தச் செலவுல சூனியம் வைக்கிற மாதிரி தெரிஞ்சே உங்க கிட்ட பேசுனது நான் தானே! விடுங்க! என் தலையெழுத்து அல்பாயுசுல போகணும்னு இருந்தா அதுக்கு யாரு என்ன பண்ண முடியும்?”

இப்போது ஸ்ரீதர் சத்தமாகவே நகைக்க பல்லைக் கடித்த ஸ்ரீரஞ்சனி “இனாப்! நான் உயிர் பயத்துல புலம்புறது உங்களுக்குச் சிரிப்பா இருக்குதோ? சரியான கல்நெஞ்சக்காரன்” என்று கடுகடுக்கவும்

“ரிலாக்ஸ்! ரிலாக்ஸ்! அப்பிடிலாம் உன்னை யாரும் நெருங்க விட மாட்டேன் ரஞ்சனி.. பிலீவ் மீ! ஐ வோண்ட் லெட் திஸ் ஹேப்பன் அகெய்ன்” என்று அமர்ந்த குரலில் உறுதியளிக்க அவன் குரல் என்னவோ செய்ய இவ்வளவு நேரம் புலம்பியவள் வாயடைத்து அமைதியானாள்.

அவள் அமைதியானதும் “ஹலோ ஆர் யூ தேர் ரஞ்சனி?” என்று கேட்டவனுக்கு வெறும் உம் கொட்டும் சத்தம் மட்டுமே கேட்க

“நீ எதுக்கும் பயப்படாத… முடிஞ்சவரைக்கும் நீ கோயம்புத்தூருக்கு வர வேண்டாம்… நான் இருக்கேன்… நான் எல்லாத்தையும் பாத்துக்கிறேன்… ஓகேவா?” என்று அவளுக்கு வாக்களித்தான் அவன்.

அவனது வார்த்தைகளில் இழந்த தைரியத்தைத் திரும்ப பெற்றவள் அவனுக்குப் பதிலளிக்க

“மதுராவோட ஃப்ரெண்டா இருந்துட்டு இவ்ளோ பயந்தாங்கொள்ளியா இருக்கியேம்மா? அவ இந்த மாதிரி சிச்சுவேசன்ல மாட்டுனா கண்டிப்பா உன்னை மாதிரி ரியாக்ட் பண்ணிருக்க மாட்டா” என்றான் கேலியாக.

“ம்ம்! யூ ஆர் ரைட்! மது ரொம்ப போல்ட் தான்! ஆனா இந்த மாதிரி சிச்சுவேசனை ஃபேஸ் பண்ண விரும்பாம தான் அவ எல்லாரையும் விட்டுட்டு இங்க வந்துட்டா… உங்களை வேண்டானு சொல்லவும் இது மட்டும் தான் காரணம்! இந்தச் சண்டை, இரத்தம் இதுல்லாம் பாத்துப் பாத்து அவளுக்கு வெறுப்பு தட்டிப் போச்சு ஸ்ரீதர்… அவளால இந்தச் சிச்சுவேசனை சமாளிக்க முடியுமே தவிர தொடர்ந்து இதே மாதிரி ஒரு சரவுண்டிங்ல அவளால வாழ முடியாதுங்கிறதுல தெளிவா இருக்கா”

ஸ்ரீரஞ்சனி சொன்னது நூற்றுக்கு நூறு உண்மை என்பதை ஸ்ரீதரும் அறிவான்.

“சரி! மதுரா புகழ் பாடுனது போதும்! உனக்கு என்னாச்சோனு தான் நான் ஒரி பண்ணுனேன்… தேங்க் காட்! யூ ஆர் பேக் டு நார்மல்… இனிமே நான் நிம்மதியா தூங்குவேன்… குட் நைட்” என்று சொல்லவும் தனக்காக இவன் ஏன் கவலைப்படுகிறான் என்ற கேள்வியுடனே பதிலுக்கு குட் நைட் சொல்லிவிட்டுப் போனை வைத்தாள் ஸ்ரீரஞ்சனி.

ஸ்ரீதர் புன்முறுவலுடன் அன்னையிடம் போனைக் கொடுத்துவிட்டுத் தனது அறைக்குத் திரும்பினான்.

மனம் சற்று ஓய்ந்து அமைதியாய் இருந்தது. படுக்கையில் வீழ்ந்து கண்ணை மூடியவனின் மனக்கண்ணில் “சாக்கோ லாவா கேக் நல்லா இருக்குல்ல?” என்று குதூகலித்தபடி கேக்கை முட்கரண்டியால் அழகாய் வெட்டி அருந்தியவளின் அழகு முகம் வந்து செல்ல கண் மூடியபடியே “கியூட்” என்று மென்மையாய் சொன்னபடி புன்னகைத்தான் அவன். அதே மனநிலையுடன் சிரித்த முகமாய் உறங்கியும் போனான்.

அலை வீடும்🌊🌊🌊