🌊 அலை 21 🌊

Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels

கலவரமாய் எனை நோக்கும்

உன் விழிகள்

காதலாய் எனை ஈர்க்கும்

நன்னாளுக்காய்

காத்திருக்கிறேன் என் கண்மணியே!

மதுரவாணி குழப்பமும் கோபமுமாய் திகைத்தவள் மதுசூதனனை உறுத்துவிழிக்க அவனோ சிறுகுழந்தை தன்னிடம் கொடுக்கப்பட்ட பொம்மையைக் காணும் ஆவலுடன் அவளை நோக்கிக் கொண்டிருந்தான்.

அவனது பார்வையை விலக்கியவள் “நீ வரச் சொன்னது உன்னோட அப்கம்மிங் மேரேஜ் ஆபர் பத்தி பேச தானே! நம்ம பேச ஆரம்பிப்போமா?” என்று வருவித்துக் கொண்ட இயல்பான குரலில் கேட்டவளை நமட்டுச்சிரிப்போடு எதிர்கொண்டவன்

“யெஸ்! அப்கோர்ஸ்… பேசலாமே” என்று தனது கையை விரித்துத் தோளைக் குலுக்கிவிட்டுத் தனது இருக்கையை நோக்கி நடந்தான்.

மதுரவாணி அவனுக்கும் தனக்குமான இடைவெளியில் கிடந்த மேஜையில் கையோடு கொண்டு வந்த கோப்புகளை வைத்தவள் அதை அவன் புறமாக வைத்துவிட்டு அமைதியாய் தன்னைக் காட்டிக் கொண்டாள்.

ஆனால் உள்ளுக்குள் மனம் தடுமாறிக் கொண்டிருந்ததை தனது முகம் பிரதிபலிக்கிறது என்பதை அறியவில்லை அவள். மதுசூதனனும் அதற்கு மேல் அவளைச் சோதிக்க விரும்பாமல் வேலையைக் கவனிக்க ஆரம்பித்தான்.

அவன் கோப்புகளைப் புரட்ட ஆரம்பிக்கவும் கௌதமும் திலீப்பும் வந்துவிட்டனர். கோப்புகளில் முகம் புதைத்திருந்த மதுசூதனனையும் அவன் எதிரே உள்ளே இருக்கையில் பதுமை போல வீற்றிருந்த மதுரவாணியையும் பார்த்தவர்கள் அவர்களை நோக்கி ஒரு புன்முறுவலை வீசிவிட்டுத் தாங்களும் அமர்ந்து கொண்டனர்.

மதுசூதனன் அனைத்தையும் படித்துவிட்டு அதில் சில சந்தேகங்களைக் கேட்க மதுரவாணி தனக்குத் தெரிந்தவற்றை விளக்கியவள் தெரியாதவற்றை யாழினிக்கு அழைத்துக் கேட்டுத் தெளிவுபெற்றுக்கொண்டு அவனுக்குப் பதிலிறுத்தாள்.

“முகூர்த்தத்துக்குப் போடுற மாலை ஃபுல்லா ரோஸ் வச்சா நல்லா இருக்கும்… கல்யாணப்பொண்ணுக்கு ரோஸ்னா ரொம்ப இஷ்டம்”

மதுசூதனன் மணமேடை அலங்காரம் குறித்து விளக்கும் போது பேச்சுவாக்கில் வார்த்தையை விட

“கல்யாணப்பொண்ணு உனக்குத் தெரிஞ்சவங்களா?” என்று ஆர்வமிகுதியில் கேட்டுவிட்டாள் மதுரவாணி.

ஆமென்று தலையைசைத்தவன் உதட்டை ஒரு பக்கம் மட்டும் இழுத்துச் சிரித்தபடி “அவளை உனக்கும் நல்லா தெரியும்” என்று பூடகமாய் உரைக்க கௌதமும் திலீப்பும் அவனை நமட்டுச்சிரிப்புடன் நோக்கினர்.

மதுரவாணி குழம்பிப் போனவளாய் “எனக்குத் தெரிஞ்சவங்களா? எனக்கு இங்க என் ஃபேமிலிய தவிர யாரையும் தெரியாதே” என்று ஆட்காட்டிவிரலால் மோவாயைத் தட்டியபடி கண்ணைச் சுருக்கி யோசிக்க அவளுக்குச் சிரமத்தைக் கொடுக்க விரும்பாமல் அவனே மணப்பெண்ணின் பெயரைச் சொல்லவும் மதுரவாணி திடுக்கிட்டாள்.

ஆச்சரியத்தில் அவளது கண்கள் விரிந்த அழகில் அதனுள் மூழ்க ஆரம்பித்தவன் சுதாரித்து மீண்டும் மணப்பெண்ணின் பெயரை உச்சரித்தான்.

“தனுஜாவுக்குத் தான் கல்யாணம்… அவ மேரேஜ் ஆபரை நமக்குத் தான் குடுக்கணும்னு பிடிவாதம் பிடிச்சு அஜய்யைச் சம்மதிக்க வைச்சாளாம்” என்று சொன்னவனைத் திகைப்பும் குழப்பமுமாய் ஏறிட்டவள்

“உனக்கு இதைக் கேட்டப்போ கஷ்டமா இல்லயா?” என கேட்க

“இதுக்கு நான் ஏன் கஷ்டப்படணும்? கல்யாணங்கிறது நல்ல விசயம் தானேம்மா” என்றான் அவன் இலகுவாய்.

“கல்யாணங்கிறது நல்ல விசயம் தான்! ஆனா அது உன்னோட எக்ஸ் லவ்வரோட கல்யாணம்னா உனக்கு மனசுக்குக் கஷ்டமா இருக்கும்ல” என்றாள் அவள் குற்றவுணர்ச்சியுடன்.

மதுசூதனன் தனது சுழல் நாற்காலியில் சாய்ந்தபடியே “ப்ச்… விடும்மா… ஸ்வீட்டான ஃபியூச்சரை எதிர்ல வச்சுக்கிட்டு யாராச்சும் கசப்பான பாஸ்டை பத்தி யோசிப்பாங்களா?” என்றான் குறும்பு வழியும் குரலில்.

அவனது நண்பர்களுக்கு அவனுடைய மறைமுகப்பேச்சுக்கான அர்த்தம் புரிய இருவரும் “இவனாடா ஒரு காலத்துல ஸ்ட்ரிக்ட் சின்னப்பாவா இருந்தான்? இவனுக்குள்ளவும் ஒரு ரோமியோ ஒளிஞ்சிருக்கானு நமக்குத் தெரியாமலேயே போயிடுச்சுடா” என்று தமக்குள் பேசிக்கொண்டனர்.

ஆனால் மதுரவாணிக்கு அவன் சொன்ன அர்த்தம் புரியவில்லை. சங்கடமான மனதுடன் “என்னால தானே உங்க ரெண்டு பேருக்கும் பிரேக்கப் ஆச்சு?” என்று சோகமாய் கேட்க

“ஆமா! ஆனா அதுக்கு என்ன பண்ண முடியும்? நீ இவ்ளோ கில்டியா ஃபீல் பண்ணுறதால எனக்கு ஒரு ஐடியா தோணுது… சொல்லட்டுமா?” என்று கேட்டுவிட்டுக் குறுகுறுவென நோக்கவும் அவன் சொல்லப் போவதை ஆவலாய் கேட்க மேஜையில் ஊன்றியிருந்த கைகளில் முகம் தாங்கியபடி அவனை நோக்கினாள்.

மதுசூதனன் அவளைப் போலவே கையூன்றி அதில் முகத்தைத் தாங்கிக் கொண்டபடி “உன்னால தான் எனக்கு பிரேக்கப் ஆச்சு… பேசாம நீயே என்னை கல்யாணம் பண்ணிக்கோ” என்று சொல்லிவிட்டு வசீகரமாய் சிரித்துக் கண்ணைச் சிமிட்ட அவனது சிரிப்பிலும் கண் சிமிட்டலிலும் இனம்புரியாத அதிர்ச்சி இதயத்தைத் தாக்க பதிலடி கொடுக்காமல் விழித்தாள் மதுரவாணி.

“என்னடா இவன் பொசுக்குனு கேட்டுட்டான்?” என்று கௌதமும் திலீப்பும் திகைக்க மதுசூதனன் மேஜையிலிருந்து கையை எடுத்தவன் அங்கிருந்த டேபிள் வெயிட்டைச் சுழற்றிவிட்டபடி சாவகாசமாய் சுழல் நாற்காலியில் சாய்ந்து கொண்டான்.

“இதுல இவ்ளோ ஷாக் ஆகுறதுக்கு என்ன இருக்கு வாணி? எப்பிடியும் ஸ்ரீதர் சாருக்கும் உனக்கும் கல்யாணம் நடக்கப் போறது இல்ல… நீயும் யாரையும் லவ் பண்ணுற மாதிரி தெரியல… தென் ஒய் டோண்ட் யூ மேரி மீ?”

இப்போது அவளுக்கு அதிர்ச்சி முற்றிலுமாய் வடிந்துவிட்டது. அவன் கேட்ட கேள்வியின் அர்த்தம் புரிய எரிச்சல் மண்ட அவனை ஏறிட்டாள்.

“இது ரெண்டுமே இல்லனா நான் உன்னைக் கல்யாணம் பண்ணித் தான் ஆகணும்னு என்ன கட்டாயம் இருக்கு மிஸ்டர்? உன்னைனு இல்ல யாரையும் மேரேஜ் பண்ணிக்கிறதுல எனக்கு இஷ்டமில்ல… ஐ வாண்ட் டு லிவ் அ இண்டிபெண்டண்ட் லைப் அண்ட் டோண்ட் வாண்ட் டு பி சம் ஒன்ஸ் ஸ்லேவ்”

வார்த்தைகளை அவள் கடித்துத் துப்பிய விதமே அவளுக்குத் திருமணம் என்ற கட்டமைப்பில் உள்ள கசப்புணர்வைச் சொல்லாமல் சொன்னது.

இந்த மனநிலை நீடிப்பது நல்லது இல்லையே என்று யோசித்தவனாய் “ஏன் கல்யாணம் மேல இவ்ளோ வெறுப்பு? எது எப்பிடியோ நான் டிசைட் பண்ணிட்டேன், கல்யாணம் பண்ணுனா மதுரவாணியைத் தான் பண்ணுவேன்… இல்லனா லைஃப் லாங் பிரம்மச்சாரியா இருந்துட்டு வயசான காலத்துல சன்னியாசம் வாங்கிட்டுக் காசி ராமேஸ்வரம்னு போயிடுவேன்” என்று கேலிக்குரலில் சொல்ல

“கிண்டல் பண்ணுறியா? நான் சீரியஸா பேசுறேன் மது” என்றவள் முதல் முறையாக அவனை அவனது பெயரைச் சொல்லி அழைக்க அதை மனதில் குறித்துக் கொண்டான் அவன்.

“நானும் சீரியஸா தான் பேசுறேன் வாணி! சப்போஸ் நீ மேரேஜுக்கு நோ சொன்னேனு வையேன், இப்போவே ஸ்ரீதர் சார் கிட்ட நீயும் நானும் லவ்வர்ஸ் இல்லனு போட்டுக் குடுத்துடுவேன்… அப்புறம் உன்னோட டோட்டல் ஃபேமிலியும் இங்க வந்து உன்னை பெட்டிப்படுக்கையோட உங்க ஊருக்கே கூட்டிட்டுப் போயிடுவாங்க” என்று அவளைச் சீண்டவும் மதுரவாணிக்கு கோபம் உச்சிக்கேற இருக்கையை விட்டு எழுந்தாள்.

“உனக்கு எவ்ளோ தைரியம் இருந்தா நீ என்னையவே மிரட்டுவ? உன்னை சும்மா விட மாட்டேன்டா” என்று சீறியபடி அவனது கையில் சுழன்று கொண்டிருந்த டேபிள் வெயிட்டை அவனிடம் இருந்து பிடுங்கியவள் அவன் மீது வீசப் போக அதற்குள் கௌதமும் திலீப்பும் அவளது கைகளைப் பிடித்துத் தடுத்துவிட்டனர்.

“என்னம்மா அவன் தான் ஏதோ விளையாட்டுக்குப் பேசுறான்னா, நீயும் அதுக்கு இவ்ளோ கோவப்படுறியே?” என்று அவளைச் சாந்தப்படுத்த முயல அதற்கு மதுசூதனன் விட்டால் தானே!

தன் முன்னே கடுங்கோபத்துடன் நின்றவளை நமட்டுச்சிரிப்புடன் ஏறிட்டபடியே “ஹேய் நான் விளையாடலடா… நான் சீரியஸா சொல்லுறேன்… மது வெட்ஸ் மது… கேக்கவே காதுல தேன் வந்து பாயுதுல்ல” என்று கண்ணை மூடி ரசிப்பது போல பாவனை செய்ய

“என்னை விடுங்கண்ணா! இன்னைக்கு இவனை நான் கொல்லாம விட மாட்டேன்” என்று அவர்களின் கையை விலக்க முயன்றாள் அவள்.

“ஏய் விடுங்கடா அவளை! அப்பிடி என்ன செஞ்சுடுவானு நானும் பாக்குறேன்… மேடம்கு இவ்ளோ நாளா யாரு கிட்டவும் பணிஞ்சு போய் பழக்கமில்ல… எங்க என் விசயத்துல அது நடந்துடுமோனு செல்லக்குட்டிக்குப் பயம் வந்துடுச்சு” என்று அவளைச் சீண்டிவிட்டு வேடிக்கை பார்த்தான் அவன்.

மதுரவாணி தன்னை வேண்டுமென்றே சீண்டுகிறான் என்பதைக் கண்டுகொண்டவள் “இருடா! நான் கவிக்கா கிட்டவும் யாழிக்கா கிட்டவும் சொல்லி உன்னோட பிசினஸ் ரிலேசன்ஷிப்பை கட் பண்ணிவிடலயாக்கும், என் பேரு மதுரவாணி இல்ல” என்று சபதமிட்டாள்.

மதுசூதனன் தனது இருக்கையிலிருந்து எழுந்தவன் “அஹான்! போய் சொல்லு! நானும் ஸ்ரீதர் சார் கிட்ட சொல்லுவேன்… அவர் கிட்ட உங்க அப்பா மிஸ்டர் ரத்தினவேல் பாண்டியனோட நம்பரை வாங்கி உங்க பொண்ணு இங்க தான் இருக்கா மாமா, வந்து கூட்டிட்டுப் போங்கனு சொல்லுவேன்… சொல்லட்டுமா வாணி?” என்று புருவம் உயர்த்தி வினவவும் மதுரவாணி திகைத்துப் போனாள்.

கோபம் அடங்காத விழிகளுடன் அவனை ஏறிட்டவள் அங்கிருக்க பிடிக்காதவளாய் விருட்டென்று வெளியேற மதுசூதனன் மீண்டும் அவனது இருக்கையில் சென்று அமர்ந்து கொண்டான்.

கௌதம் அவனிடம் “டேய் என்னடா இது? ஏன் அந்தப் பொண்ணை டென்சன் ஆக்கி விளையாடுற?” என்று ஆயாசமாய் வினவ

“பின்ன என்னடா? நான் எங்க தனுவ லவ் பண்ணுனேன்? அடிக்கடி இவ பிரேக்கப்னு சொல்லுறப்போ எனக்குக் கொஞ்சம் இரிட்டேட் ஆகுது… இனிமே என்னோட பிரேக்கப்புக்கு அவ தான் காரணம்னு விளையாட்டுக்குக் கூட சொல்ல மாட்டா… எப்பிடி இருந்தாலும் இந்த மேரேஜ் முடியுற வரைக்கும் இது சம்பந்தமா வாணி தான் இங்கு வந்து போகணும்… மெதுவா சமாதானப்படுத்திக்கலாம்” என்று சொன்னபடி அவள் வைத்துவிட்டுச் சென்ற கோப்புகளைப் புரட்ட ஆரம்பித்தவன் அப்போது தான் அவளது மொபைல் போனை அங்கேயே வைத்துவிட்டுச் சென்றதைப் பார்த்தான்.

இவர்களுக்கிடையே போர்க்களம் நடந்து கொண்டிருந்த அதே நேரம் உணவு விடுதியில் ஸ்ரீரஞ்சனியும் ஸ்ரீதரும் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.

ஸ்ரீதருக்கு அவளது படபடக்கும் விழிகளும் கஷ்டப்பட்டு இழுத்துவைத்த உதடுகளும் கவனத்தில் பட மிகச் சுலபமாக அவள் எதையோ மறைக்கிறாள் என்பதைக் கண்டுகொண்டான்.

“சாக்கோ லாவா கேக் நல்லா இருக்குல்ல?” என்று குழந்தையாய் குதூகலித்தபடி அவள் சாப்பிடுவதைப் பார்த்தவன் யோசனையாய்

“நீங்க என் கிட்ட எதையும் மறைக்கிறிங்களா ஸ்ரீரஞ்சனி?” என்று கேட்க ஸ்ரீரஞ்சனி சிரித்துச் சமாளித்தவள்

“நான் உங்க கிட்ட என்ன மறைக்க போறேன் சார்? நீங்க சாப்பிடணும்னு சொன்னிங்க.. ரிலேட்டிவா வேற போயிட்டிங்க… அதான் சாப்பிட வாங்கனு கூட்டிட்டு வந்தேன்… இது ஒரு தப்பா?” என்று அங்கலாய்த்தாள்.

ஸ்ரீதரன் மறுப்பாய் தலையசைத்தவன் “நோ நோ! ஆக்சுவலா நான் மது சாரைப் பாக்குறதுக்காக தான் போனேன்… ஆனா நீங்க என்னை டிஸ்ட்ராக்ட் பண்ணுன மாதிரி இருந்துச்சே” என்று சொல்லவும் ஸ்ரீரஞ்சனிக்கு அதிர்ச்சியில் விக்கல் வந்தது.

அவள் கண்ணை விரித்து தண்ணீர் தம்ளரைத் தேட அதை அவளிடம் நீட்டியவன் அவள் தண்ணீர் குடித்து முடிக்கும் வரை பொறுமை காத்தான்.

“மது சாரும் மதுராவும் லவ் பண்ணுறாங்கங்கிறதுலாம் சரி… அவங்க ரெண்டு பேரும் எப்பிடி அறிமுகம் ஆனாங்க? அவங்க எத்தனை வருசமா லவ் பண்ணுறாங்க? இதுல்லாம் ஒரே குழப்பமா இருக்கு… எங்கயோ யாரோ என்னைக் குழப்ப டிரை பண்ணுற மாதிரி ஒரு ஃபீல்”

புருவமத்தியில் ஆட்காட்டிவிரலால் தட்டியபடி அவளை யோசனையுடன் பார்த்தவன் அவளுக்கு அந்த ஏசி அறையிலும் வியர்ப்பதைக் கண்டு டிஸ்யூவை அவளது வதனத்துக்கு அருகில் கொண்டு செல்ல ஸ்ரீரஞ்சனி திடுக்கிட்டு விலக புருவம் உயர்த்திப் பார்த்தான்.

பின்னர் சட்டென்று அவன் கையிலிருந்து அவள் டிஸ்யூவை வாங்கி குனிந்து முகத்தைத் துடைக்கவும் அவளுக்குப் பின்னே இருந்து ஒருவன் கையில் கத்தியுடன் அவளைத் தாக்க முயலவும் சரியாக இருந்தது.

கத்தி தன்னையோ ஸ்ரீரஞ்சனியையோ தாக்கும் முன்னர் சுதாரித்த ஸ்ரீதர் தாக்க வந்தவனின் மணிக்கட்டைப் பற்றிக் கொண்டு அழுத்திய விதத்தில் கத்தி மேஜையின் மீது விழ ஸ்ரீரஞ்சனி கண்ணில் திகிலுடன் இந்தக் காட்சியைப் பார்த்தபடி அரண்டு போய் நாற்காலியை விட்டு எழுந்து நின்றாள்.

ஸ்ரீதர் அந்த மனிதனின் கையைப் பிடித்து முறுக்கி முதுக்குப் பின்னே கொண்டுவந்தபடி அவனை மண்டியிடச் செய்துவிட்டு ஸ்ரீரஞ்சனியிடம் அங்கே அமருமாறு சொல்ல அவள் இன்னும் பயம் விலகாமல் விக்கித்துப் போய் தான் நின்று கொண்டிருந்தாள். கண்களில் மரணபீதி! பயத்தில் கண்ணீர் கூட வந்திருந்தது!

ஸ்ரீதர் அவனது கரத்தைப் பற்றியிருந்தபடியே தனது போனை ஸ்ரீரஞ்சனியிடம் கண்ணால் காட்டிவிட்டு “இதுல கால் ஹிஸ்டரில லாஸ்டா வந்த நம்பருக்குக் கால் பண்ணு” என்று சொல்லவும் முதல் முறை ஒருமையில் அழைத்தவனின் குரலில் உணர்வு பெற்றவளாய் போனை எடுத்தவள் தொடுதிரையில் விரல்களை அழுத்தி அந்த எண்ணுக்கு அழைத்தாள்.

அழைப்பை மறுமுனையில் ஏற்றதும் லவுட் ஸ்பீக்கரில் போடச் சொன்னவன் உடனே உணவுவிடுதிக்கு வருமாறு மறுமுனையில் யாருக்கோ கட்டளையிட்டான்.

அவன் கையை முறுக்கி வைத்திருந்ததில் அந்த மனிதன் வலியில் முணகவும்

“உன்னை அனுப்பி வச்சவங்க ஸ்ரீதரை மட்டும் தானே ஃபாலோ பண்ணச் சொல்லிருப்பாங்க… நீ எதுக்கு தேவையே இல்லாம இந்தப் பொண்ணை அட்டாக் பண்ண பாத்த?” என்று ரவுத்திரத்துடன் கேட்க அவன் வலியில் முகம் சுளித்தாலும் கல்லுளி மங்கன் போல வாயிலிருந்து ஒரு முத்தைக் கூட உதிர்க்காது இருக்கவே எரிச்சலில் இன்னொரு கரத்தால் அவன் கன்னத்தில் பளாரென அறைய அந்த மனிதனின் வாயில் இருந்து உதிரம் கசியத் தொடங்கியது.

உணவு விடுதியில் உள்ள வாடிக்கையாளர்கள் நடப்பதை சினிமா போல வேடிக்கை பார்க்க ஸ்ரீரஞ்சனியோ இந்தக் கத்தி கபடா சண்டை இரத்தம் இவற்றையெல்லாம் முதல் முறை பார்த்த அதிர்ச்சியில் இன்னும் அதிர்ச்சி விலகாதவளாய் நின்றிருந்தாள்.

போதாக்குறைக்கு ஸ்ரீதரின் முகத்தில் எப்போதும் இருக்கும் சினேகபாவம் விடைபெற்றிருக்க முகம் சினத்தில் சிவக்க இருந்தவனைக் காண அவளுக்குச் சற்று அச்சமே!

ஏன் மதுரவாணி வன்முறை என்றால் வெறுக்கிறாள் என்பதையும் அவள் வீட்டை வெறுத்து ஓடி வந்ததையும் ஸ்ரீரஞ்சனியால் அப்போது புரிந்துகொள்ள முடிந்தது.

பிறந்தவீட்டினர் தான் கட்டப்பஞ்சாயத்து, அடிதடி என்று அலைந்தனர் என்றால் புகுந்தவீடும் காவல்துறை என்பதால் உண்டான விரக்தியே அவளை இவ்வாறு செய்ய வைத்துள்ளது! கண் இமைக்கும் நேரத்தில் அந்தக் கத்தி தன் உடம்பிலோ ஸ்ரீதரின் உடம்பிலோ இறங்கியிருந்தால் கண்டிப்பாக இங்கே ஒரு இறப்பு நிச்சயமாகியிருக்கும்!

அவன் கவனமாக இருந்ததால் ஏதோ இருவரும் உயிர் தப்பினர். எப்போதுமே ஒரு மனிதன் கழுகு போல இவ்வளவு கவனமாய் இருக்க இயலாதல்லவா! அப்படி இல்லாத தருணத்தில் அவன் உயிருக்கு ஆபத்து நேர்வதைத் தடுக்க இயலாதே!

இதை எல்லாம் ஒரு மூன்றாவது மனுஷியாய் யோசிக்கும் போதே தனக்குப் பகீரென்று இருக்கிறதென்றால் மதுரவாணிக்கு எப்படி இருந்திருக்கும்?

சிந்தனையோட்டங்களினூடே ஸ்ரீதர் அழைத்த காவலர் அங்கே வந்தது, ஸ்ரீதர் அந்த மனிதனை அவரிடம் ஒப்படைத்தது என எதுவுமே ஸ்ரீரஞ்சனியின் கருத்தில் படவில்லை.

அந்த மனிதன் சென்று சில நிமிடங்கள் ஆகியும் அவள் சிலையாய் நிற்பதைக் கண்ட ஸ்ரீதர் அவள் தோளைத் தொட்டு உலுக்கவும் திடுக்கிட்டவள் மலங்க மலங்க விழிக்க

“உன்னோட சாக்கோ லாவா கேக் கொஞ்சம் மிச்சம் இருக்கு… அதைக் காலி பண்ணு” என்று சொல்ல இயந்திரம் போல நாற்காலியில் அமர்ந்தவள் கடகடவென கேக்கைக் காலி செய்தாள்.

சாப்பிடும் போதே தயக்கத்துடன் “உங்களுக்கு கோவம் ரொம்ப வருமா சார்?” என்று திக்கித் திணறி கேட்க

“சும்மா சும்மா கோவப்படுறதுக்கு நான் பைத்தியக்காரன் இல்ல… யாராவது பொய் சொன்னாலோ இல்லனா என் முதுகுக்குப் பின்னால எதாவது திருட்டுவேலை பாத்தாலோ, என்னை ஏமாத்த நினைச்சாலோ கண்டிப்பா கோவப்படுவேன்… அதுக்குக் கூட கோவப்படலனா நான் ஜடம்னு அர்த்தம்” என்றவனின் அழுத்தம் திருத்தமான பேச்சில் ஸ்ரீரஞ்சனிக்கு முதுகுத்தண்டு சில்லிட்டது.

அதே சில்லிட்ட உணர்வுடன் கேக்கைக் காலி செய்தவள் அவசரத்தில் உதட்டின் ஓரங்களில் கேக் துணுக்குகள் ஒட்டிக் கொள்ள அதைக் கவனிக்கும் நிலையில் இல்லை.

ஸ்ரீதர் நாற்காலியில் சாய்ந்தபடி அவளையே பார்த்துக் கொண்டிருந்தவன் அவள் அவசரமாய் கேக்கை காலி செய்துவிட்டு எழவும் “ஒரு நிமிசம்” என்றபடி கேக் துணுக்குகள் இருப்பதை சைகையால் காட்ட ஸ்ரீரஞ்சனிக்கு மனதில் இருந்த கலக்கத்தில் அவனது சைகைகளுக்கான அர்த்தம் புரியவில்லை.

அவன் மானசீகமாகத் தலையிலடித்துக் கொண்டபடி தான் சொன்னது புரியாமல் விழித்தவளின் மோவாயைப் பற்றியவன் டிஸ்யூவை எடுத்து கேக் துணுக்குகளைத் துடைத்துவிட ஸ்ரீரஞ்சனி அவனது அழுத்தமான கரங்களின் ஸ்பரிசத்தில் திருதிருவென விழித்தாள்.

கையை எடு என்று சொல்லலாமா? வேண்டாமா? சொன்னால் அந்த மனிதனிடம் கோபப்பட்டதை போல தன்னிடமும் கோபப்பட்டால் என்ன செய்வது? ஆனால் இவ்வாறு அறிமுகமற்ற ஆடவனது தொடுகையை விலக்காமல் இருப்பதுவும் தவறு தானே!

கண்டபடி யோசித்தவளின் மனசாட்சியோ “வெய்ட் அ மினிட்… யாரு உனக்கு அறிமுகமில்லாதவன்? இவனா? இவனை தானே கொஞ்சநேரத்துக்கு முன்னாடி பாசமா கையைப் பிடிச்சு இழுக்காத குறையா கூட்டிட்டு வந்த! இப்போ அவன் அன்னியன் அவதாரம் எடுக்கவும் மேடம்கு பயம் வந்துடுச்சு” என்று அவளை வஞ்சகமின்றி வாரிவிட்டு வேடிக்கை பார்க்க ஆரம்பித்தது.

அவளது மனசாட்சி மட்டுமல்ல! இன்னொரு ஜீவனும் இந்தக் கண்கொள்ளா காட்சியை வாயைப் பிளந்தபடி வேடிக்கை பார்த்தபடி நின்று கொண்டிருந்தது. வேறு யாருமல்ல! சாட்சாத் மதுரவாணியே தான்!

தனது தோழியின் மோவாயைப் பற்றியிருந்த ஸ்ரீதரையும் பொம்மை போல அமர்ந்திருந்த தோழியையும் பார்த்துவிட்டு அவள் சிலையாய் நிற்க அவளது மொபைலை ஒப்படைக்க அவளைப் பின்தொடர்ந்து வந்த மதுசூதனனும் இக்காட்சியைப் பார்த்துவிட்டான்.

மதுரவாணியின் அதிர்ச்சியைக் கண்டு குறுநகை புரிந்தபடி அவளருகே வந்தவன் “செம ஷாக்கா இருக்குல்ல வாணி” என்று கேட்க அவள் சற்று முன்னர் அவனது பேச்சுகள் ஏற்படுத்திய கோபத்தை மறந்தவளாய்

“ஆமா மது! ஸ்ரீக்கு அனாவசியமா யாரும் அவளை டச் பண்ணுறது பிடிக்காது… ஆனா இங்க என்னென்னவோ நடக்குது” என்று திகைத்தக் குரலில் சொல்லவும் அவனது குறுநகை சிரிப்பாய் விரிந்தது.

அவளது காதருகே இரகசியம் பேசும் குரலில் “பட் இதுவும் நல்லது தான்… என் லைன் கிளியர் ஆயிடுச்சு” என்று முணுமுணுக்க மதுரவாணி அவன் சொன்ன வார்த்தைகளின் அர்த்தம் புரிந்தவளாய் விருட்டென்று திரும்பியவள் தன்னருகே குனிந்திருந்தவனின் நாசியோடு அவளது எள்ளுப்பூ நாசி உரச விதிர்விதிர்த்து நின்றாள்.

தன்னருகே நின்றவனின் விழிகளை ஏறிட்டவள் அதில் குறும்பும் வசீகரமும் டன் கணக்கில் நிரம்பி வழிய இதெற்கெல்லாம் காரணம் விளங்காதவளாய் குழம்ப மதுசூதனன் பெயருக்கேற்றபடி மந்திரப் புன்னகையுடன் அவளைத் தனது விழிகளால் ஆராய்ந்து கொண்டிருந்தான்.

அவனது குறும்புப்பார்வையும் காந்தப்புன்னகையும் தனது வாழ்க்கையில் தான் எடுத்த தீவிர முடிவுகள் அனைத்தையும் தூள் தூளாக்கிவிடுமோ என்ற அச்சம் முதல் முதலாய் மதுரவாணிக்குள் எழுந்தது.

அதே நேரம் ஸ்ரீதரின் அலட்டலற்ற தோற்றத்தை வைத்து தான் அவனை மிகவும் சாதாரணமாக எடை போட்டுவிட்டோமோ என்ற பயம் ஸ்ரீரஞ்சனிக்குள்ளும் எழுந்தது.

அர்த்தமற்ற குருட்டுத்தைரியம் என்றைக்கும் ஆபத்து தான்; அதே நேரம் அர்த்தமுள்ள அச்சம் கூட சில நேரம் நன்மை பயக்கும். இந்தத் தோழியரின் அச்சம் அவர்களுக்கு நன்மை பயக்குமா அல்லது சங்கடத்தில் முடியுமா என்பதைக் காலம் தான் தீர்மானிக்க வேண்டும்.

அலை வீசும்🌊🌊🌊