🌊 அலை 20 🌊

கோபத்தில் சிவக்கும் வதனம்

நாணத்தில் சிவந்த மாயம் என்ன!

வாதமும் விவாதமுமாய் நகர்ந்த

வாழ்க்கை வர்ணஜாலமான மாயம் என்ன!

புரியாமல் விழித்தவள் உன்னால்

உணர்கிறேன் என் வாழ்வின் முதல்

அழகிய குழப்பம்தனை!

நீ பார்த்த விழிகள்! நீ பார்த்த நொடிகள்!

கேட்டாலும் வருமா! கேட்காத வரமா!

நன்றாக உறங்கிக் கொண்டிருந்த மதுரவாணியின் காதுக்குள் பாடல் சத்தம் கேட்டதும் கனவில் கேட்டது போல இருக்கவும் கண்ணை மூடி உறக்கத்தில் ஆழத் துவங்கினாள் மதுரவாணி. ஆனால் பாடல் ஒலித்த இடமோ அவளது மொபைல். பாடல் தானாகவே முடியும் வரை அவள் எடுத்தால் தானே!

நிஜமடி பெண்ணே! தொலைவினில் உன்னை

நிலவினில் கண்டேன் நடமாட!

வலியடி பெண்ணே வரைமுறை இல்லை

வதைக்கிறாய் என்னை மெதுவாக!

சில நிமிடங்கள் கழித்து மீண்டும் பாடல் ஒலிக்க ஆரம்பிக்க இம்முறை உறக்கம் சுத்தமாக கலைந்த எரிச்சலில் அழைத்த்து யாரென்று கூட பார்க்காது போனைக் காதில் வைத்தவள் தூக்கம் கலையாதக் குரலில் “யாருப்பா அது காலங்காத்தால என் தூக்கத்தைக் கெடுத்த புண்ணியவான்?” என்று கேட்க

“குட் மானிங் தூங்குமூஞ்சி வாணி” என்ற மதுசூதனனின் குரல் உற்சாகமாக ஒலிக்கவும் சுருட்டி வாரிக் கொண்டு எழுந்து அமர்ந்தாள் அவள்.

“நீயா? எதுக்கு இப்போ கால் பண்ணுன?” என்று கேட்டபடி முகத்தை மறைத்து விழுந்த கூந்தலை காதருகே ஒதுக்கிக் கொண்டாள்.

“அதுவா? மதுரவாணியோட தேன்மதுரக்குரலோட தான் இனிமே என்னோட ஒவ்வொரு நாளும் விடியணும்னு என்னோட மனசு எனக்கு ஆர்டர் போட்டுச்சா, உடனே கால் பண்ணிட்டேன்! என்ன வாய்ஸ்டா!” என்று சிலாகித்துச் சிரித்தவனின் ஆர்ப்பாட்டமற்ற சிரிப்பு அவளுள் வித்தியாசமான உணர்வுகளைத் தோன்ற செய்ய

“நீ… நிஜ… நீ பொய் தான சொல்லுற?” என்று திக்கித் திணறி கேட்டவளுக்கு ஏன் தனது வாய் இப்படி வைப்ரேசன் மோடில் உளறிக் கொட்டுகிறது என்ற குழப்பம்!

மறுமுனையில் பேசியவனோ அவளது திக்கல் திணறல்களோடு குரலில் இருந்த குழப்பத்தையும் ரசித்துக் கொண்டிருந்தான்.

அவன் அமைதியாய் இருக்கவும் மதுரவாணி அடுத்து என்ன பேசுவது என்று தெரியாமல் விழித்தாள். அவள் இப்படி யாரிடமும் பேசத் திணறியதோ தயங்கியதோ இல்லை! முதல் முறை ஒருவனின் குரல் அவளைக் குழப்புகிறது!

“யாராச்சும் காலங்காத்தால ஒரு அழகான பொண்ணு கிட்ட பொய் சொல்லுவாங்களா? நிஜமா உன்னோட வாய்ஸ் ஸ்வீட்டா இருக்கு… எவ்ளோ ஸ்வீட்னா இப்போ நான் குடிக்கப் போற காபில சுகர் போட வேண்டாம்னு சொல்லிட்டேன்… அவ்ளோ ஸ்வீட் உன் வாய்ஸ்!”

இதற்கும் என்ன பதில் சொல்வது என்று புரியாது மலங்க மலங்க விழித்தவள் “நா… நா… போனை… போனை வைக்குறேன்… அக்கா கூப்பிடுறா” என்று வேகமாகச் சொன்னபடி போனை வைக்கச் செல்ல

“இதுக்கே டென்சன் ஆனா எப்பிடி? இன்னைக்கு உனக்கு ஒர்க்கே கோயம்புத்தூர்ல என்னோட ஆபிஸ்ல தான்” என்று மதுசூதனன் சாதாரணமாகச் சொல்ல

“நான் எதுக்கு உன்னோட ஆபிஸ்கு வரணும்?” என்று படபடத்தவளின் குரலில் முன்னர் இருந்த திக்கல்கள் காணாமல் போயிருந்தது.

“ஏன்னா எங்க கன்சர்ன்கு ஒரு மேரேஜ் ஆபர் வந்திருக்கு… அதுக்கு டெகரேசன் ஒர்க்கை நாங்க யாழினி மேம், சங்கவி மேம்கு தான் குடுக்கப் போறோம்.. அதோட இனிமே எங்களோட கன்சர்ன் எடுத்துக்கிற எல்லா கான்ட்ராக்ட்லயும் பிளாசம் தான் ஃப்ளவர் டெகரேசன் ஒர்க்கைப் பண்ணப் போறாங்க.. அது ரிலேட்டடா ஒரு அக்ரிமெண்ட் சைன் பண்ணப் போறோம்… சோ பிளாசம் சைட்ல இருந்து யாராச்சும் வந்தாகணும்”

“அபிஷியல் ஒர்க் எல்லாமே கவிக்காவும் யாழிக்காவும் தான் பாப்பாங்க… அதுக்கு நான் ஏன் வரணும்?”

“யூ ஆர் ரைட்.. பட் சங்கவி மேம்கு உடம்புக்குச் சரியில்ல”

“வாட்? அக்காவுக்கு என்னாச்சு?”

“ஒரே வீட்டுல இருக்கிற… ஆனா அவங்களுக்கு என்னாச்சுனு தெரியல… இது நம்ம வாழ்க்கைக்கு நல்லது இல்ல… சேஞ்ச் திஸ் ஹேபிட்”

“நான் கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லாம சம்பந்தம் இல்லாம உளறுனா நான் போனை வச்சிட்டுப் போயிட்டே இருப்பேன்”

“இதான்… இப்பிடி பொசுக்குனு கோவம் வருதே இது தான் உன் பிரச்சனையே! காம் டவுன் அண்ட் ரிலாக்ஸ்… நான் சொல்ல வர்றதை கேட்டுட்டு ஆசை தீர கோவப்பட்டுக்கோ… சங்கவி மேம் இன்னைக்கு மானிங் உடம்பு சரியில்லனு கால் பண்ணுனாங்க… அவங்களுக்கு தைராய்ட் ப்ராப்ளம்கு செக் பண்ண யாழினி மேம் கூட ஹாஸ்பிட்டல் போறாங்களாம்… சோ இன்னைக்கு அவங்களுக்குப் பதிலா கோயம்புத்தூர் வரப் போறது நீ தான்”

அக்காவிற்கு உடல்நலம் இல்லை என்பது அதிர்ச்சி தான்! ஆனால் இவனது அலுவலகத்துக்குத் தான் செல்ல வேண்டுமென்பது அவளுக்கு மிகப் பெரிய அதிர்ச்சி!

“நான் உன் ஆபிஸ்கு வர மாட்டேன்” என்றாள் சட்டென்று.

“ஏன் பயமா இருக்குதா?” என்று கேலியும் குறும்புமாய் வினவியவன் நகைக்க

“எனக்கு என்ன பயம்? அதுவும் உன்னை மாதிரி ஒரு தயிர்சாதத்தைப் பாத்து… நான் ஒன்னும் பயப்படலயே!” என்று சமாளிக்க முயன்றாள் மதுரவாணி.

“நான் தயிர்சாதமா தக்காளி சாதமானு எப்போவும் சாப்பாட்டைப் பத்தி மட்டுமே யோசிச்சுக் குழம்பாம தைரியம் இருந்தா நேர்ல வா… பாத்துக்கலாம்” என்றான் அவன் சவாலிடும் குரலில்.

அந்தக் குரலில் சீண்டப்பட்டவள் இணைப்பைத் துண்டித்துவிட்டாள்.

இன்றைய தினம் மதுரவாணியின் குரலில் இது வரை இல்லாத படபடப்பு தெரிய அது மதுசூதனனின் மனதுக்கு இதமாகவே இருந்தது.

போனின் தொடுதிரையைப் பார்த்தபடி குறுநகையுடன் தனது அறையின் பால்கனியில் அமர்ந்திருந்தவன் வைஷாலியின் கண்ணில் வசமாகச் சிக்கிக் கொண்டான்.

“என்னடா அண்ணா சிரிப்பெல்லாம் ஒரு மார்க்கமா இருக்கு… அந்தச் செல்பிபுள்ள கிட்ட பேசுனியா?” என்று எடுத்ததும் விசயத்தைக் கண்டுகொண்டவளை திகைப்புடன் பார்த்தவன்

“வைஷு! எப்பிடிம்மா இதுல்லாம்?” என்று சிவாஜிகணேசன் குரலில் தங்கையைக் கேலி செய்ய

“போடா அண்ணா! நீ என்னைக் கிண்டல் பண்ணுற” என்று வைஷாலி சிணுங்க

“நீ மட்டும் வாணிய செல்பிபுள்ளனு கிண்டல் பண்ணாலாமா?” என்று வரிந்து கட்டினான் அவளது அண்ணன்.

வைஷாலி ஆச்சரியத்துடன் நாடியைப் பிடித்துக் கொண்டவள் “அடி ஆத்தி! அந்தப் பொண்ணை சொன்னா நீ ஏன் இவ்ளோ டெரர் ஆகுற?” என்று அவனைக் குறுகுறுவென ஆராய்ச்சிப்பார்வை பார்க்க ஆரம்பிக்கவும் மதுசூதனன் மூளையில் எச்சரிக்கையாய் அலாரம் அடிக்க ஆரம்பித்தது.

செல்லமாய் தங்கையின் தலையில் குட்டியவன் “அதை விடு… வாணியோட நம்பர் உனக்கு ஃபார்வேட் பண்ணுனேனே… கால் பண்ணிப் பேசுனியா?” என்று கேட்க

“க்கும்! நான் இப்போ தான் அவளுக்கு டிரை பண்ணுனேன்… காலகாத்தாலயே பிஸினு வருது… செல்பிபுள்ள இஸ் வெரி வெரி பிஸி நவ்… கொஞ்சநேரம் ஆகட்டும்” என்று சொன்ன தங்கையிடம் மதுரவாணி இவ்வளவு நேரம் பேசிக் கொண்டிருந்தது தன்னுடன் தான் என்பதைச் சாமர்த்தியமாக மறைத்தபடி அன்னையின் கையால் காபி அருந்த சென்றான் மதுசூதனன்.

அதே நேரம் மதுரவாணி தமக்கையின் அறையில் சோகவடிவாய் நின்றிருந்தாள். சங்கவிக்கு தைராய்டு சுரப்பியில் உண்டான பிரச்சனைக்குத் தினமும் மாத்திரை போட வேண்டும். ஆனால் சமீபத்திய நிகழ்வுகளால் அவள் அதை மறந்துவிட அதுவே அவளுக்கு மூச்சுத்திணறலோடு உடல்நலக்குறைவை உண்டாக்கிவிட்டது.

யாழினி சங்கவியியைத் தான் கவனித்துக் கொள்வதாகச் சொன்னவள் மதுசூதனனின் அலுவலகத்துக்குச் செல்லும் பொறுப்பை தங்கையிடமும் மதுரவாணியிடமும் ஒப்படைத்தாள். மதுரவாணி வந்தால் அவளிடம் விளக்குவது தனக்கு எளிதாக இருக்குமென மதுசூதனன் சொன்னதையும் அங்கே பதிவு செய்ய யாழினி தவறவில்லை.

ராகினி குழந்தைகளைப் பள்ளிக்குத் தயார் செய்து விட்டுத் தானும் கல்லூரி கிளம்பிவிட்டாள். அன்று சமைக்கும் வேலையைக் கவனித்துக் கொண்ட மதுரவாணி ஸ்ரீரஞ்சனியிடம் கோயம்புத்தூர் அலுவலகத்துக்குக் கொண்டு செல்லத் தேவையான கோப்புகளை எடுத்துவைக்கச் சொல்லிவிட்டாள்.

சமைக்கும் போதே மதுசூதனனைக் கறுவிக்கொண்டே தான் இருந்தாள் அவள்.

“நான் வந்தா அவனுக்கு வசதியா இருக்கும்னா சொன்னான்? இருடா! இன்னைக்கு நான் குடுக்கிற பதிலடில நீ என் கிட்ட இந்த மாதிரி நக்கல் நையாண்டிலாம் பண்ணுறதுக்கு ஒரு தடவைக்கு ஆயிரம் தடவை யோசிப்ப”

முணுமுணுத்தபடியே குழந்தைகளுக்கும் அவர்களுக்குமாய் தனித்தனியாய் சமைத்து முடித்தவளுக்கு அவன் முன்னே சென்றால் தன்னால் முன்பு போல அவனிடம் தயக்கமின்றி பேச முடியுமா என்ற சந்தேகமும் எழத் தான் செய்தது. இனி அது குறித்து ஆராய்வது வீண் என எண்ணியவளாய் கோயம்புத்தூர் செல்வதற்காகத் தயாரானாள்.

கையில் கிடைத்த உடையை அவசரமாய் திணித்துக் கொண்டவள் வேகமாய் உணவை அள்ளிப்போட்டுக் கொண்டு ஸ்ரீரஞ்சனியுடன் கிளம்பினாள்.

போகும் முன்னர் யாழினியும் சங்கவியும் மாறி மாறிச் சொன்ன அறிவுரைகளின் சாராம்சம் இது தான்.

“நேத்து நைட் மது சார் கிட்ட எடுத்தேன் கவுத்தேனு பேசுன மாதிரி இப்போவும் பேசி வச்சிடாத மது… அபிஷியல் டேர்ம்ஸ் பேசுறப்போ கொஞ்சம் பொலைட்டா பேசணும்! சரியா? பெட்டர் ரஞ்சியே அபிஷியல் டேர்ம்சை பேசி முடிக்கட்டும்… நீ சைலண்டா வேடிக்கை மட்டும் பாரு”

“சைலண்டா இருக்கிறதுக்கு நான் ஏன் அங்க போகணும்? அதுக்கு நான் பொக்கே ஷாப்லயே இருந்துக்குவேன்கா” என்றவளை முறைத்த சங்கவி

“மது சார் உன் நேமை மென்சன் பண்ணி சொன்னதுக்கு அப்புறம் நீ போகலனா நல்லா இருக்காதுடி… அது மட்டுமில்ல நேத்து அவரு நமக்கு எவ்ளோ பெரிய ஹெல்ப் பண்ணிருக்காரு” என்று கிடைத்த இடத்தில் அவனைப் புகழ்ந்து தள்ள நிறுத்துமாறு சைகை செய்த மதுரவாணி ஸ்ரீரஞ்சனியுடன் கிளம்பிவிட்டாள்.

“என்ன ஹெல்ப் பண்ணுனான்? என் பிளான்ல மண்ணள்ளிப் போட்டது உங்களுக்கு ஹெல்பா தெரியுதா?” என்று பொறுமியபடி காரில் அமர்ந்தவள் தனக்கு இருக்கும் குழப்பமும் அலைக்கழிப்புமான மனநிலையில் தான் கார் ஓட்டுவது சரி படாது என ஸ்ரீரஞ்சனியை ஓட்டச் சொல்லிவிட்டாள்.

ஆனால் சில நிமிடங்களில் ஸ்ரீரஞ்சனியின் கலகலப்பான பேச்சில் மதுரவாணி இயல்பாகிவிட இரு தோழியரும் அரட்டை அடித்தபடியே கோயம்புத்தூருக்குள் வந்து சேர்ந்தனர்.

ஆர்.எஸ்.புரம் பகுதியில் கார் நுழையவும் மயூரா டவர்ஸ் கட்டிடத்தின் முன்னே இறங்கிய மதுரவாணி ஸ்ரீரஞ்சனியிடம் “ரஞ்சி நீ காரை பார்க் பண்ணிட்டு வா… நான் கோயம்புத்தூருக்கு வந்துட்டோம்னு யாழிக்காவுக்குப் போன் பண்ணிச் சொல்லிடுறேன்” என்று சொல்ல ஸ்ரீரஞ்சனி காரை தரிப்பிடத்தில் நிறுத்தச் சென்றாள்.

மதுரவாணி யாழினிக்குப் போன் செய்தவள் தாங்கள் இருவரும் கோவைக்கு வந்து விட்டதாகச் சொன்னவள் ஏதேனும் சந்தேகம் வந்தால் அழைப்பதாகச் சொல்லிவிட்டு இணைப்பைத் துண்டித்தாள்.

ஸ்ரீரஞ்சனியும் வந்துவிடவே இருவரும் சேர்ந்து கட்டிடத்துக்குள் காலடி எடுத்து வைக்கச் சென்ற அடுத்த நொடி “ஹாய் மதுரா” என்ற குரல் கேட்கவும் இருவரும் திருதிருவென ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டவர்கள் சட்டென்று திரும்ப அங்கே கூலர்சைக் கழட்டியபடி மப்டியில் நின்று கொண்டிருந்தான் ஸ்ரீதர்.

தோழியர் இருவரும் அதிர்ந்து போய் அவனை நோக்க ஸ்ரீதர் சாவகாசமாய் மதுரவாணியை அடுத்திருந்த ஸ்ரீரஞ்சனியை நோட்டம் விட அவள் திருதிருவென விழித்தபடி இளித்து வைத்தாள்.

“என்ன டிசிபி சார் இங்க ஏன் வந்திங்க? ஐ மீன் இங்க உங்களுக்கு என்ன வேலைனு கேட்டேன்” என பேசவேண்டுமே என்று எதையோ கேட்டுவைத்தவளைக் கேள்வியாக நோக்கியவன்

“இது நான் கேக்க வேண்டிய கேள்வி… ஆக்சுவலி ஒரு கேஸ் விசயமா என்கொயரி பண்ணுறதுக்கு வந்தேன்.. அப்பிடியே இங்க இருக்கிற புட்கோர்ட்ல சாப்பிட்டுப் போவோமேனு நினைச்சேன் … மிஸ்டர் மதுவோட ஆபிஸ் இந்த பில்டிங்ல தான் இருக்குனு அவரு சொன்னாரு! அப்பிடியே அவரைப் பாத்துட்டுப் போகலாம்னு..” என்றவன் வாக்கியத்தை முடிப்பதற்குள் மதுரவாணி ஸ்ரீரஞ்சனியிடம் கண்களாலேயே இவனை எப்படியாவது தடுத்து நிறுத்து என்று வேண்டிக் கொள்ள அவள் தான் பார்த்துக் கொள்வதாகத் தோழிக்கு அபயம் அளித்தாள்.

“ஆக்சுவலி நாங்களும் அவரைப் பாக்கத் தான் வந்தோம்… ஐ மீன் எங்க மது, அவளோட மதுவைப் பாக்க வந்திருக்கா… நான் சும்மா துணைக்கு வந்தேன்” என்று சமாளித்தவள் தங்களுக்கும் மதுசூதனனுக்குமான உறவு ஹில்டாப் வெட்டிங் பிளானிங் நிறுவனத்தால் உண்டானது என்பதை சாமர்த்தியமாக மறைத்துவிட்டாள்.

ஸ்ரீதர் அதைக் கேட்டவன் “ஓகே! இப்போ நீங்க மது சாரை தானே பாக்கப் போறிங்க… வாங்க நானும் அவருக்கு ஒரு ஹாய் சொல்லிட்டுக் கிளம்புறேன்” என்று கட்டிடத்துக்குள் நுழைய முயல ஸ்ரீரஞ்சனி வேகமாகச் சென்று அவனது கரத்தைப் பற்றி நிறுத்தினாள்.

அவன் மட்டும் மதுசூதனனைச் சந்தித்தால் அவனுக்கும் மதுரவாணிக்குமான உறவு வெறும் தொழில்ரீதியானது என்று சொன்ன தனது குட்டு வெளிப்பட்டுவிடுமே என்று பதறிப் போய் தடுத்தாள்.

“எங்க போறிங்க சார்? அவங்க லவ்வர்ஸ்… அவங்களுக்குள்ள என்னவோ பேசட்டுமே… நம்ம எதுக்கு இடைல நந்தி மாதிரி இருக்கணும்?”

“இஸிட்? அப்போ நீங்க ஏன் போறிங்க?”

“நான் ஒன்னும் அவ கூடப் போகல… நான்…. நான்…” என்று திணறியவள் திடீரென்று அவன் சொன்ன புட்கோர்ட் என்ற வார்த்தை நினைவுக்கு வரவே “நான் புட்கோர்ட்டுக்குப் போகப் போறேன்” என்று சொன்னவள் அவனையும் கையோடு இழுக்க

“அதுக்கு ஏன் என்னையும் சேர்த்துக் கூட்டிட்டுப் போறிங்க மேடம்?” என்றவன் விலக முயல

“என்ன சார் நம்ம அப்பிடியா பழகிருக்கோம்? தெரிஞ்சோ தெரியாமலோ நம்ம ரிலேட்டிவ்ஸ் ஆகிட்டோம்… உங்களைப் பாத்துட்டு அப்பிடியே விட்டுட்டுப் போக முடியுமா? இல்ல வீட்டை விட்டு வெளியே இருக்கோம்னு விருந்தோம்பலைத் தான் மறக்க முடியுமா? அதனால நீங்க என் கூட வந்து காபியோ டிபனோ சாப்பிட்டே ஆகணும்” என்று அவன் கையை இறுக்கமாகப் பற்றிக்கொண்டவள் மதுரவாணியிடம் நீ உள்ளே செல் என்று கண்ணாலேயே கட்டளையிட அவளும் இருவருக்கும் டாட்டா காட்டிவிட்டு தப்பித்தோம் பிழைத்தோம் என்று ஓடி மறைந்தாள்.

அவள் செல்வதைப் பார்த்தபடி நின்ற ஸ்ரீதரை இழுத்துக் கொண்டு இடத்தைக் காலி செய்தாள் ஸ்ரீரஞ்சனி.

மதுரவாணியோ விறுவிறுவென மின் தூக்கிக்குள் நுழைந்தவள் இரண்டாவது தளத்தை அடைந்தாள். ஹில்டாப் அலுவலகத்தினுள் நுழைந்தவள் மதுசூதனனின் அலுவலக அறை கதவைத் தட்டிவிட்டு அவன் அனுமதிக்காக காத்திருக்க “யெஸ் கம் இன்!” என்றவனின் அமர்ந்த குரல் கேட்க உள்ளே பிரவேசித்தாள்.

லேப்டாப்பில் எதையோ கவனித்தபடி அமர்ந்திருந்தவன் அவளைக் கண்டதும் விழியகலாது அவளை நோக்க ஆரம்பிக்கவும் மதுரவாணிக்கு வாழ்க்கையில் முதல் முறையாக ஒரு ஆடவனின் பார்வை அவள் மனதில் வித்தியாசமான குறுகுறுப்பை உண்டாக்கியது.

கூட அவனது நண்பர்கள் இருப்பார்கள் என்று ஊகித்து யோசிக்காமல் உள்ளே வந்தது தவறோ என்று எண்ணியவளுக்கு நேற்றைய இரவில் அவன் பேசியது வேறு தவறான நேரத்தில் நினைவுக்கு வந்து தொலைத்தது.

கண்கள் அலைபாய முடிந்தளவு தன்னை இயல்பாக காட்ட முயன்றபடி கதவின் அருகிலேயே அவள் நிற்கவே மதுசூதனன் தனது இருக்கையை விட்டு எழுந்து அவளை நோக்கி வந்தான்.

அவன் அருகே நெருங்கவும் தன்னிச்சையாக அவளது கால்கள் பின்னோக்கி அடிகளை எடுத்து வைக்க அதற்குள் அவளருகே வந்திருந்தவன் அவளது பதற்றத்தை ரசித்தவனாய்

“போன்ல பேசுறப்போ தயிர்சாதம்னு சொன்னிங்களே! இப்போ ஏன் சினிமால வர்ற வில்லனை நேர்ல பாத்த மாதிரி இவ்ளோ டென்சனா இருக்கிங்க மேடம்? அச்சோ! குழந்தைக்கு வேர்த்து விறுவிறுத்துப் போச்சே” என்று குறும்பாய் உச்சுக் கொட்டிக் கேட்டபடி நின்றவனிடம் என்ன பேசுவது என்று புரியாது விழித்தாள் மதுரவாணி.

சாதாரண நேரமாக இருந்தால் அவள் இந்நேரம் மதுசூதனனின் நிலையைக் கவலைக்கிடம் ஆக்கியிருப்பாள். ஆனால் நேற்றிலிருந்து அவனைக் கண்டால் உண்டாகும் இந்தத் தயக்கம் திடீரென்று எங்கிருந்து முளைத்தது என்று தான் அவளுக்குப் புரியவில்லை.

மதுசூதனன் அவளது இமை தட்டாத பார்வையில் அகன்ற கருவிழியில் தொலைந்து போனவன் அவளது கன்னத்தில் தட்டி “என்னாச்சு வாணி?” என்று கேட்க அவனது உள்ளங்கை பட்ட கன்னம் குறுகுறுக்க இயல்புக்கு வந்தவள் அவனை மிகவும் அருகாமையில் பார்த்த அதிர்ச்சியை விலக்கிவிட்டுத் தன் கரங்களால் அவனைத் தள்ளி நிறுத்தினாள்.

“எதுவா இருந்தாலும் நாலு அடி தள்ளி நின்னு பேசு… என் கிட்ட வர்ற வேலை வச்சுக்காத ஓகே!” என்று கண்களை உருட்டி மிரட்ட முதல் முறை தன் வீட்டுப்பெண்களைத் தவிர வேறொருத்தி தன்னைச் சுவாதீனமாகத் தொட்டுத் தள்ளியிருக்கிறாள்; ஆனால் தனுஜாவின் சிறு கைப்பற்றலில் கூட தான் உணரும் அன்னியத்தன்மையை இவளிடம் ஏன் உணரவில்லை என்ற விசித்திரமான உணர்வுடன் நின்றிருந்தான் மதுசூதனன்.

அலை வீசும்🌊🌊🌊