🌊 அலை 2 🌊
Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels
யாருமற்ற கானகத்தில்
நடந்து செல்ல ஆசை!
துணையாய் எனது கனவுகள்
மட்டும் போதும்!
கோயம்புத்தூர் சந்திப்பு…
நேரம் காலை ஏழு மணி முப்பது நிமிடங்கள். வழக்கமான நேரத்தை விட அன்றைய தினம் இரயில் இருபது நிமிடங்கள் தாமதமாக கோவை சந்திப்பை அடைந்திருந்தது. இரயில் நின்றதும் நடைமேடையில் இறங்கினாள் மதுரவாணி. தாவணி காற்றில் படபடக்க நீண்ட கருநாகம் போன்ற பின்னலை முன்னே தூக்கிப் போட்டிருந்தவள் பின்னே தள்ளிவிட்டபடி நடக்கத் தொடங்கினாள்.
கையில் போன் இல்லை. அதை வீட்டிலேயே வைத்துவிட்டுத் தான் பேருந்து ஏறினாள். காவல்துறையில் இரு அண்ணன்களும் பணிபுரிவதால் போனை வைத்து தான் இருக்கும் இடத்தைக் கண்டுபிடிக்கும் வாய்ப்புள்ளது என்ற பயம் அவளுக்கு.
இரயில் நிலையத்தின் கடிகாரத்தில் நேரம் பார்த்தவள் இப்போது லோக்கல் பேருந்தை பிடித்தால் காந்திபுரத்தில் இருந்து மப்சல் பேருந்தில் சென்று விடலாம் என்று யோசித்தபடி விறுவிறுவென ஓட்டமும் நடையுமாக அங்கிருந்து விரைந்தாள்.
கிட்டத்தட்ட ஓடியவள் தனது எதிரே வருபவர்களை இடிக்காமல் ஓட பிரயத்தனப்பட அவளைக் கடந்தான் ஒரு ஆறடி ஆடவன். சட்டென்று கடந்ததால் அவன் முகத்தைக் கவனிக்கவில்லை அவள். அவளது தோள் அவனது புஜத்தில் உரச தாவணியின் நுனியானது அவனது வாட்சில் சிக்கிக் கொண்டது.
அவள் விருட்டென்று கடந்ததில் நுனி கிழிபடவும் அவன் நின்றுவிட்டான். மதுரவாணி அவனைத் திரும்பியும் கூடப் பாராது “சாரி சார்” என்று வேகமாகச் சொல்லிவிட்டு தனது நீண்டப்பின்னலும் தாவணியும் அசைய அங்கிருந்து ஓட்டமும் வேகநடையுமாகக் கிளம்பிவிட்டாள்.
இரயில் நிலையத்தை விட்டு வெளியே வந்தவள் லோக்கல் பேருந்தில் ஏறி காந்திபுரத்தை அடைந்தாள். அங்கே வரிசையாய் மப்சல் பேருந்துகள் நிற்க அவற்றில் ஒன்று மிதமான கூட்டத்துடன் இன்னும் நிரம்பாத இருக்கைகளுடன் நிற்கவே அதில் ஏறி அமர்ந்து கொண்டாள்.
தனது பிறந்த வீட்டிலிருந்து வெகுதூரத்திலிருக்கும் மலைபிரதேசத்தை நோக்கிய அவளது இப்பயணம் முற்றிலும் திட்டமிடாத ஒன்றே. அந்தக் கணத்தில் பாடலைப் பார்த்தாள்! மூட்டை முடிச்சுக்களைக் கட்டிக் கொண்டு ஓடிவந்து விட்டாள்! இதன் விளைவுகள் என்னவாக இருக்கும் என எண்ணிப் பார்க்க மனமில்லை.
எப்படியும் இன்னும் சில தினங்களில் அவளுக்கு மாநில தலைநகரில் வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கை இருந்தது. அது வரை நதியூரிலே இருந்திருக்கலாம் தான்! ஆனால் அவளது தந்தையும் சகோதரர்களும் செல்வி மதுரவாணியைத் திருமதி மதுரவாணி ஆக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கியது தான் அவள் இம்முடிவுக்கு வரக் காரணம்.
இப்போது தங்களது வீட்டில் என்ன கலவரம் நடந்து கொண்டிருக்கிறதோ என யோசித்தவாறே வெளியே வேடிக்கை பார்த்தபடி பேருந்து பயணத்தை ரசிக்க ஆரம்பித்தாள் மதுரவாணி.
அதே நேரம் நதியூரில் ரத்தினவேல் பாண்டியனின் இல்லம் யுத்தகளம் போல காட்சியளித்தது. ஆட்கள் கோபம் கொந்தளிக்கும் முகத்துடன் நிற்க கூண்டுக்குள் அடைபட்ட சிங்கங்களை போல வீட்டின் முகப்பில் உள்ள பெரிய திண்ணையில் நாற்காலியில் அமர்ந்திருந்தனர் ரத்தினவேல் பாண்டியனும், சங்கரபாண்டியனும்.
அவர்களின் இரு புறமும் காவலர்களைப் போல கைகளை மார்பின் குறுக்கே கட்டிக் கொண்டபடி முகத்தில் சினம் பொங்க நின்றிருந்தனர் சரவணனும், கார்த்திக்கேயனும்.
வீட்டினுள்ளே அழகம்மை சத்தம் போட்டு அழுவது கேட்டது.
“ஆசையா கல்யாணத்துக்கு தயாரா நின்ன என் தங்கம் மேல எந்தக் கரிமுடிவான் கண்ணு பட்டுச்சுனு தெரியலயே! நம்ம வம்சத்துல இப்பிடி ஒரு காரியம் நடந்துருக்கா? எய்யா இதைலாம் பாக்க கூடாதுனு தான் நீரு சீக்கிரமா போயி சேந்துட்டீரா?”
காணாமல் போன பேத்திக்காக காலம் சென்ற கணவரிடம் முறையிட்டு அழுது கொண்டிருந்தார் அப்பெண்மணி. அவர் அருகில் பிரபாவதியும் லீலாவதியும் கவலை தோய்ந்த முகத்துடன் அமர்ந்திருந்தனர்.
விசாலாட்சி விசும்பலுடன் இடிந்து போய் அமர்ந்திருக்க லோகநாயகி அவருக்கு ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தார். அழகம்மையின் அழுகை இன்னும் உரத்தக் குரலில் கேட்கவும் ரத்தினவேல் பாண்டியன் கோபத்துடன் திண்ணையிலிருந்து வீட்டுக்குள் வந்தவர்
“இப்ப எதுக்குத்தா இப்பிடி ஒப்பாரி வைக்கிய? நான் போயிட்டேனா? இல்ல நான் பெத்தவனுங்க போயிட்டாங்களா? செத்த நேரம் செவனேனு இரேன் ஆத்தா! பொட்டைப்பிள்ளைய ராத்திரில இருந்து காணமேனு நெஞ்சு ரணமா கிடக்கு… நீ வேற ஒப்பாரி வச்சு மனுசனை நிம்மதி இல்லாம பண்ணாத” என்று சீற்றமாய் பேச அழகம்மைக்கு ஆங்காரம் வந்துவிட்டது.
“கொல்லையில கிடக்கிற பனந்தூரு மாதிரி இத்தனை ஆம்பளைங்க வீட்டுக்குக் காவல் இருந்தும் என் தங்கம் காணாம போயிருக்காளே! அதுக்குப் பதில் சொல்லுயா! நீ வேலைக்கு வச்சிருக்கியே அந்த தடிமாடுங்கள வேட்டிக்குப் பதிலா சீலைய சுத்திக்க சொல்லு! இவனுங்க எல்லாரும் இருந்தும் காலணாவுக்குப் பிரயோஜனமில்ல”
அழகம்மையின் குரலில் திண்ணையில் இருந்த சங்கரபாண்டியன், கார்த்திக்கேயன், சரவணன் மூவரும் கூடத்துக்கு வந்தனர். சங்கரபாண்டியன் அத்தையைச் சமாதானம் செய்ய முயல ஒரு பயனும் இல்லை.
“என் பேத்திய பாத்தா தான்யா என் மனசு ஆறும்! செப்புச்சிலை மாதிரி நேத்து அலங்காரம் செஞ்சு விட்டதுலாம் இப்பிடி ராவோட ராவா தொலைக்கவா? என் ராசாத்தி! நீ எங்க இருக்கியோ?” என்று அவர் வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டு அழ ஆரம்பிக்க சரவணனும் கார்த்திக்கேயனும் சமாதானம் செய்ய முன்வர அவர்களைக் கைநீட்டி தடுத்தார் அழகம்மை.
“அங்கயே நில்லுங்கலே! உங்க யாரோட சமாதானமும் எனக்குத் தேவை இல்ல! உங்களுக்குலாம் எதுக்குல காக்கி உடுப்பு? வீட்டைச் சுத்தி ஆளு அம்பாரம் இருந்தும் என் பேத்திக்கு இப்பிடி ஒரு நிலமை வந்துடுச்சே”
இரு சகோதரர்களாலும் எதுவும் சொல்ல முடியாத நிலை. மதுரவாணி அவர்களின் உயிர்மூச்சுக்குச் சமானமானவள்! அவளை யார் என்ன செய்தார்கள் என்பது புரியாத புதிராக இருக்கிறது! இருவரும் எந்தக் கோணத்தில் யோசித்தாலும் அவர்களுக்குப் புலப்பட்ட ஒருவர் சமீபத்தில் அவர்களிடம் நிலவிவகாரத்தில் தகராறு செய்த குலசேகரன்.
அவரும் நதியூரில் பெரிய தலைக்கட்டு தான். ஆனால் புதுப்பணக்காரர் வகையறா. அதனால் ரத்தினவேல் பாண்டியனுக்கும் சங்கரபாண்டியனுக்கும் நதியூரில் கிடைத்த மரியாதையும், அவர்கள் பெயர் சொன்னாலே அனைவருக்கும் வரும் ஒருவித பயம் கலந்த பணிவும் குலசேகரனுக்கு எரிச்சல் மூட்டியது.
இதனாலேயே சமீபத்தில் துறைமுகம் அருகில் உள்ள நிலத்துக்கு நடந்த ஏலத்தில் இந்த இருவருக்கும் போட்டியாக கலந்து கொண்டார். வென்றது என்னவோ சங்கரபாண்டியனும் ரத்தினவேல் பாண்டியனும் தான். அப்போது சங்கரபாண்டியன் உயரப் பறந்தாலும் ஊர்க்குருவி கழுகு ஆகாது என அவரை எள்ளி நகையாட அங்கே ஆரம்பித்தது பிரச்சனை.
அன்றைய தினத்திலிருந்து இரு குடும்பத்தினரும் ஜென்ம விரோதிகள் ஆகிப் போனார்கள்.
கார்த்திக்கேயன் யோசனையுடன் “எனக்கு அந்த ஆளு குலசேகரன் மேல தான் சந்தேகமா இருக்குப்பா… அவன் தான் ஏதோ சித்துவிளையாட்டு காட்டுறான்… எனக்கு வர்ற கோவத்துக்கு அவனை…” என்று பல்லைக் கடித்தவனை வெட்டுவது போல பார்த்தார் இவ்வளவு நேரம் அழுது கொண்டிருந்த விசாலாட்சி.
புடவையை உதறிக்கொண்டு எழுந்தவர் “என்ன பண்ண போற? போய் அந்த மனுசன் கதைய முடிக்கப் போறியா? முட்டாப்பயலே! நம்ம பொம்பளைப்பிள்ளைய தொலைச்சுட்டு நிக்கிறோம்… இப்போவும் பகை, சண்டை, வெட்டு, குத்துனு பேசுறியே! நீ என் வயித்துல தான் பிறந்தியா?” என்று ஆவேசத்துடன் பேச ரத்தினவேல் பாண்டியன் கோபத்துடன் மனைவியை உறுத்துவிழித்தார்.
எப்போதும் அவரது பார்வையில் விசாலாட்சிக்குச் சர்வமும் அடங்கிப் போகும். ஆனால் இன்று அவர் மகளை தொலைத்திருக்கிறார்! அந்த வேதனையின் முன்னே கணவரின் சினமெல்லாம் தூசியாய் தெரிந்தது.
கலைந்திருந்த கூந்தலைக் கொண்டை போட்டுக்கொண்டவர் “உங்க நாலு பேரையும் கெஞ்சி கேக்கிறேன், உங்க பவுசைக் காட்டுறதுக்கு என் பிள்ளைய பலி குடுத்துடாதிங்க” என்று இரு மகன்களையும் கணவர் மற்றும் தமையனையும் கையெடுத்துக் கும்பிட்டுவிட்டு கதறியழத் தொடங்கினார்.
மொத்தக்குடும்பமும் கவலையிலும் சோகத்திலும் மூழ்கிவிட அப்போது சரவணனின் மகன் விக்னேஷ் மதுரவாணியின் அறையிலிருந்து ஓடி வந்தான். அவன் பின்னே வந்த கணேஷ் “தாத்தா மது அத்த போன்ல ரிங் அடிக்குது” என்று கத்திக் கொண்டே வந்தான்.
அனைவரின் கவனமும் மதுரவாணியின் போன் மீது திரும்ப சரவணன் மகனிடமிருந்து போனை வாங்கிக் கொண்டான்.
போனின் தொடுதிரையில் ‘விக்கி காலிங்’ என்று வரவும் போனை ஸ்பீக்கரில் போட்டவன் ஹலோ சொல்லும் முன்னரே முந்திக் கொண்டு பேச ஆரம்பித்தான் அந்த விக்கி.
“மது ஹெச்.ஆர்கு உன்னோட ரெஸ்யூமை ஃபார்வேட் பண்ணிருந்தேனு சொன்னேன்ல… உன்னோட குவாலிபிகேசன்ல அவங்களுக்கு செம திருப்திடி… நீ இன்னும் டூ டேய்ஸ்ல சென்னைல இருக்கணும்… அடிக்கடி சொல்லுவியே! வீட்டை விட்டு ஓடிடுவேனு… அதை செய்… சீக்கிரமா சென்னை வந்துடு… நீ கண்டிப்பா செலக்ட் ஆயிடுவ மது…. கொஞ்சநாள் தான்.. அப்புறம் ஆன்சைட் போறேனு இந்தியாவுக்குக் குட் பை சொல்லிடலாம்… உன் ஆசைப்படி நீ விரும்புன வாழ்க்கைய சுதந்திரமா வாழலாம்”
மறுமுனையில் மதுரவாணியின் சொந்தங்கள் எல்லாம் போனில் பேசுபவனைக் கொல்லும் வெறியுடன் அவன் பேச்சைக் கேட்டுக் கொண்டிருப்பதை அவன் அறியவில்லை.
அதே நேரம் குடும்பத்தினர் அனைவருக்கும் “இப்பிடியே எனக்குப் பிடிக்காததை பண்ணுனிங்கனா நான் வீட்டை விட்டு ஓடிப் போயிடுவேன்” என்று மிரட்டிய மதுரவாணியின் பேச்சும் நினைவுக்கும் வந்தது. அப்போது விளையாட்டுத்தனமாகத் தெரிந்த அவளது பேச்சு நூறு சதவிகித உண்மை என்பது காலம் கடந்த பின்னர் புரிந்து என்ன இலாபம்!
சரவணன் பல்லை நறநறவென கடித்தவன் “ஏய் விக்ரம் எவ்ளோ திமிரு இருந்தா என் தங்கச்சிய வீட்டை விட்டு ஓடிவரச் சொல்லுவ?” என்று கர்ஜிக்க மறுமுனையில் இருந்தவனுக்குப் பயத்தில் பேச்சு குழறத் தொடங்கியது.
சரவணன் ஒழுங்காக உண்மையைச் சொல்லவில்லை என்றால் அவனது எலும்பை எண்ணிவிடுவேன் என்று மிரட்ட அந்த விக்ரம் “செஞ்சாலும் செய்வான் இந்த போலீஸ்காரன்! ரவுடிக்குடும்பத்து பொண்ணு கூட ஃப்ரெண்ட்ஷிப் வச்சுக்கிட்டதுக்கு உனக்கு இதுவும் வேணும், இன்னமும் வேணும்டா விக்ரம்” என்று தன்னைத் தானே திட்டிக் கொண்டான். கூடவே உயிர்பயமும் வந்துவிட மதுரவாணியின் சமீப கால மனநிலையைப் பற்றி பயத்தில் உளறத் தொடங்கினான்.
“அ..து… வந்து… அண்ணா மதுக்கு இந்தக் கல்யாணத்துல இஷ்டமில்ல… அ… அதனால வீ… வீட்டை விட்டு ஓடிடுவேனு என் கிட்ட அடிக்கடி சொல்லுவா… நான் தான் அது தப்புனு அட்வைஸ் பண்ணி நான் ஒர்க் பண்ணுற கம்பெனில அவளுக்கும் ஜாப் பாத்து சொன்னேன்… நான் அவளை வேலைக்கு வரத் தான் சொன்னேன் அண்ணா… ஓடிவரச் சொல்லலை”
திக்கித் திணறி அவன் பேசி முடிக்கவும் இணைப்பைத் துண்டித்த சரவணனின் முகம் ஜிவுஜிவுவென்று கோபத்தில் சிவந்தது. கையில் இருந்த போனைத் தூக்கி எறிந்தவன்
“இதுக்கு என்ன சொல்லுறிங்கம்மா? நீங்க பெத்த பொண்ணு கல்யாணம் பிடிக்கலனு ஓடிப்போயிட்டா… அவ இவ்ளோ நாளா பேசுனதுலாம் விளையாட்டுக்குனு நினைச்சு சும்மா இருந்தது எவ்ளோ பெரிய முட்டாள்தனம்? அவ எங்க இருந்தாலும் தேடிப் பிடிச்சுக் கூட்டிட்டு வரலனா என் பேரு சரவணன் இல்ல” என்று கடுங்கோபத்தில் கத்த சங்கரபாண்டியனும் ரத்தினவேல் பாண்டியனும் அவனை அமைதியாக்கினர்.
“வெசனப்படாதய்யா! இப்போ மாப்பிள்ளை கிட்டவும் சம்பந்தியம்மா கிட்டவும் என்னய்யா சொல்லுறது?” என்று சோர்ந்த குரலில் கேட்ட ரத்தினவேல் பாண்டியனைப் பார்க்கும் போது சரவணனுக்கு உள்ளுக்குள் வலித்தது.
கம்பீரம் துலங்கும் அவரது முகம் இன்று கவலையில் தோய்ந்திருப்பது தன் உடன் பிறந்தவளின் சிறுபிள்ளைத்தனத்தால் அல்லவா! அத்தோடு அவளை மணமுடிக்க இருப்பவனுக்கும், அவனது தாயாருக்கும் தாங்கள் என்ன பதில் சொல்வது என்ற தர்மசங்கடமான மனநிலை வேறு!
கூடவே இவ்வளவு நேரம் மதுரவாணிக்கு என்னவாயிற்றோ என்று அழுது அரற்றிய அழகம்மையையும் விசாலாட்சியையும் முறைத்தவன் தனது மனைவி பிரபாவதியிடம்
“இன்னும் அஞ்சு நிமிசம் தான் டைம்… அதுக்குள்ள ஒப்பாரிய மூட்டை கட்டி வச்சிட்டு அவங்கவங்க வேலைய பாக்கப் போகலனா நான் மனுசனாவே இருக்கமாட்டேன்” என்று இறுகிய குரலில் உரைத்துவிட்டு தாயாரையும் பாட்டியையும் குறிப்பாய் பார்த்து வைத்தான்.
அழகம்மையோ மதுரவாணியின் நண்பனது பேச்சைக் கேட்டதும் கப்சிப்பானவர் தான்! மனதுக்குள் “இந்தக் கூறுகெட்ட கழுதை இவன் கிட்ட என்னைச் சிக்க வச்சிட்டாளே” என்று எண்ணிக் கொண்டவர் மருமகளை எழுப்பிவிட்டு வீட்டின் பின்கட்டை நோக்கிச் சென்றுவிட்டார். தானும் மருமகளும் மதுரவாணியை நினைத்து சற்று அதிகமாகத் தான் பேசிவிட்டோம் என்று யோசித்துச் சாமர்த்தியாமாக நழுவி விட்டார் அம்முதியப்பெண்மணி.
பெண்கள் அங்கே இருந்து சென்றதும் சங்கரபாண்டியன் வெளியே தங்களின் கட்டளைக்காக காத்திருக்கும் ஆட்களின் முன்னே வந்தார்.
“நம்ம வீட்டுப் பொண்ணு காணாம போயிருக்கு… ரயில்வே ஸ்டேசன், பஸ் ஸ்டாண்ட்னு ஒரு இடம் விடாம தேடுங்க… இன்னும் இருபத்து நாலு மணிநேரத்துல என் மருமக மதுரவாணி இங்க வரணும்” என்று ஆணையிட அவர் காலால் இட்ட ஆணையைத் தலையால் செய்து முடிக்கும் அவர்களின் ஆட்கள் அங்கிருந்து கிளம்பத் தொடங்கினர்.
அவர்கள் சென்றதும் மருமகன்களிடம் திரும்பியவர் “நீங்க உங்க டிப்பாட்மெண்டு ஆளுங்களை வச்சு தேடுங்கயா… இது பொம்பளைப்பிள்ளை விவகாரம்… நம்ம மானப்பிரச்சனையும் கூட” என்று சொல்ல இருவரும் தலையாட்டிவைத்தனர்.
இருவரின் மனதிலும் இப்போது தங்கையின் மீது அடக்க முடியாதளவுக்குக் கோபம் மட்டுமே நிறைந்திருந்தது. எல்லாம் நன்றாகப் போய்க் கொண்டிருக்கும் போது இந்தப் பெண் இப்படி குட்டையைக் குழப்பி விட்டாளே என்ற கடுப்புடன் காவல் நிலையத்துக்குச் செல்லத் தயாராயினர்.
ஆனால் உண்மையிலேயே அவள் யாருடைய வாழ்க்கையில் குழப்பத்தை உண்டாக்க வேண்டுமென விதி கணக்கிட்டிருக்கிறதோ அவன் கோயம்புத்தூரின் ஆர்.கே புரம் பகுதியை நோக்கி தனது ரெனால்ட் க்விட் காரில் சென்று கொண்டிருந்தான்.
கார் ஒரு மினி பங்களாவுக்குள் நுழைந்தது. ஹாரன் அடிக்கவும் ஒரு இளம்பெண் ஓடிவந்து கதவைத் திறந்தாள். அவளது முகத்தில் குறும்புத்தனம் கொட்டிக் கிடந்தது. காரை அதற்குரிய இடத்தில் நிறுத்திவிட்டு இறங்கியவன் தனது அடர்ந்த சிகையைக் கோதியபடியே அவளை நோக்கி நடந்துவந்தான்.
“அண்ணா! ட்ரெயின் இன்னைக்கு லேட்னு கேள்விப்பட்டேன்… இந்த திலீப் ஃப்ளைட்ல வரக் கூடாதா?” என்று முகத்தைச் சுருக்கிக் கொண்டவளின் சிகையைக் கலைத்துவிட்டு
“அந்த மடையனுக்கு ட்ரெயின் ஜர்னி மேல ஒரு லவ்… சொன்னா எங்க கேக்குறான்?” என்றபடி அவளுடன் வீட்டினுள் நுழைந்தான்.
காலையில் சமையலறையில் குக்கரின் விசில் சத்தம் கேட்பதைக் கவனித்தவன் வீட்டுக்குள் நுழையும் போதே “டாட்! டெய்லி இந்த குக்கர் உங்க ஒய்பை பாத்து விசிலடிக்குதே! உங்களுக்குக் கோவமே வராதா?” என்று வம்பிழுக்கவும் தனது டேபில் உலகநடப்புகளைப் பார்த்துக் கொண்டிருந்த அவனது தந்தை ராமமூர்த்தி மகனது கேலியில் சிரிக்கத் துடித்த உதடுகளைக் கட்டுப்படுத்திக் கொண்டார்.
வாய் விட்டுச் சிரித்தால் நோய் விட்டுப் போகும் தான்! சில நேரங்களில் நல்லபடியாக மூன்றுவேளையும் கிடைக்கும் சாப்பாடும் கைவிட்டுப் போக வாய்ப்புள்ளது!
முன்யோசனையுடன் சிரிப்பை அடக்கிய ராமமூர்த்தி அரசுப்பணியிலிருந்து விருப்ப ஓய்வு பெற்றவர். அவரது உலகமே மனைவியும் மக்களும் தான்!
மக்கள் இருவருமே பொருளாதாரச் சுதந்திரத்துடன் இருப்பதில் துளி கர்வம் கூட அவருக்குண்டு. மகள் வைஷாலி மென்பொருள் நிறுவனத்தில் வேலை செய்து வந்தாள். அவரது மகன் பொறியியல் முடித்துவிட்டு மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றியவன் பின்னர் சொந்த தொழில் செய்யும் ஆசையில் வேலையை உதறிவிட்டு இப்போது இரு நண்பர்களுடன் சேர்ந்து ஒரு ‘ஈவெண்ட் பிளானிங்’ நிறுவனத்தை நடத்தி வருகிறான்.
இரண்டு வருடங்களில் பெயர் சொல்லுமளவுக்கு வளர்ச்சி என்றாலும் கடின உழைப்பை மட்டும் விட்டுவிடவில்லை அவன். அவன் தான் மதுசூதனன். இருபத்தியேழு வயது வாலிபன். தனக்குக் கீழே பத்து நபர்களை வைத்து வேலை வாங்கும் அளவுக்குப் பக்குவம் உள்ளவன். கூடவே குடும்பத்தினர் மீது பற்றுள்ள இளைஞன்.
எந்த வேலையிலும் முழுமையாகவும் தனித்தன்மையுடனும் செய்து முடிப்பவன். அவனது இக்குணம் தான் நிறைய வாடிக்கையாளர்களை அவனது ‘ஹில் டாப் வெட்டிங் அண்ட் ஈவெண்ட் பிளானிங்’ நிறுவனத்துக்கு ஈட்டித் தந்துள்ளது.
எந்த தந்தைக்கும் தனது மகன் சிறுவயதில் இவ்வளவு பொறுப்பாக இருந்தால் மகிழ்ச்சியும் பெருமிதமுமே உண்டாகும். அப்படி தான் ராமமூர்த்திக்கும்
“விடுடா மகனே! இந்த வயசுல அது மட்டும் தான் உங்கம்மாவை பாத்து விசிலடிக்கும்… அந்தச் சந்தோசத்தை நம்ம கெடுத்துட வேண்டாம்” என்று மகனிடம் தோழமையாகப் பேசியவர் அவன் இன்று ஊட்டிக்குச் செல்லவேண்டிய விசயத்தைப் பற்றிக் கேட்டார்.
“இன்னும் ஒன் ஹவர்ல நான் கிளம்பணும் டாட்! திலீப் டேரக்டா அவன் கார்ல வந்துடுறேனு சொன்னான்… நான் பிரேக்ஃபாஸ்ட் முடிச்சிட்டுக் கிளம்பணும்” என்று சொல்ல சமையலறையிலிருந்து வெளியே வந்தார் அவனை ஈன்றவரும் ராமமூர்த்தியின் சகதர்மிணியுமான மைதிலி.
வைஷாலி அம்மாவைச் சுட்டிக்காட்டிவிட்டு “இப்போ அட்வைஸ் மழை அண்ட் அன்புமழை ரெண்டும் சேர்ந்து பெய்யப் போகுது… முடிஞ்சா தப்பிச்சுக்கோ… நான் கிளம்புறேன்பா” என்று அண்ணனின் காதைக் கடித்தவள் அவளது அலுவலகத்துக்குச் செல்லத் தயாராக வேண்டும் என நழுவி விட்டாள்.
மைதிலி மெல்ல நழுவும் மகளை நோக்கியபடியே மகனிடம் வந்தவர் “நேத்து நீ வீட்டுக்கு வந்தப்போ டைம் ட்வெல்வ் ஓ கிளாக்… நான் அதுக்கு எதும் சொல்லல… காலைல ஜாக்கிங் போறெனு சொன்னவன் அவசர அவசரமா ரயில்வே ஸ்டேசனுக்குக் கிளம்பிப் போனியே! அப்போவும் ஒன்னும் சொல்லல! ஆனா பிரேக்ஃபாஸ்டை மட்டும் அரைகுறையா சாப்பிடலாம்னு பிளான் பண்ணிருந்தேனா கண்டிப்பா நான் அவ கூட சண்டை போடுவேன் மது… அப்புறம் நீ என் மேல கோவப்படக் கூடாது” என்றார் மகனது பரபரப்புக்குக் காரணமானவளைப் பற்றி குறிப்பு காட்டியபடி.
மதுசூதனனுக்கு அவர் குறிப்பிடும் ஆள் யாரென்று புரியாமல் இல்லை. அவனுக்கு அன்னை என்றால் கொள்ளைப்பிரியம். ஆனால் தனக்குப் பிடித்தவளை ஏன் அவருக்குப் பிடிக்காது போனது என்பது தான் மதுசூதனனுக்குப் புரியாத புதிர்.
அவனது வாழ்க்கைக்காக அவன் போட்டு வைத்திருந்த வருங்கால திட்டங்களுக்கு அவளைப் போல அவன் மனதைப் புரிந்து வைத்திருக்கும் ஒருத்தி, அவனது தொழிலார்வத்தைக் குறை சொல்லாத ஒருத்தி வாழ்க்கைத்துணையாக வந்தால் தான் சரியாக வரும் என்பது அவனது கணக்கு. அதனால்அவளுக்காக அன்னையையோ, அன்னைக்காக அவளையோ இழக்க அவன் தயாராக இல்லை.
ஆனால் வாழ்க்கைத்துணையாக வருபவர்களுக்கு முதலில் நம்மிடம் நம்பிக்கை இருக்கவேண்டும். எடுத்த முடிவில் நிலையாக இருக்கும் அலைபாயாத மனநிலையும் இருக்க வேண்டும். இதெல்லாம் மதுசூதனன் தேர்ந்தெடுத்தவளிடம் இல்லையென்பது அவன் அன்னையின் எண்ணம்.
யார் அவள்? தனது அன்னைக்குப் பிடித்தமில்லை என தெரிந்தும் மதுசூதனன் அவளை இழக்க விரும்பாதது ஏன்? அவளுடனான உறவு மதுசூதனனுக்கு நிரந்தரமா? என எல்லா கேள்விகளும் விடை தெரிந்த விதி அவன் இஷ்டத்துக்கு அவனது வாழ்க்கையை வாழ அனுமதிக்க மாட்டேன் என கங்கணம் கட்டிக் கொண்டு காத்திருந்ததை மதுசூதனன் இப்போது வரைக்கும் அறிந்திருக்கவில்லை.
அலை வீசும்🌊🌊🌊