🌊 அலை 19 🌊

அதிகாலை குளிர்க்காற்றில் பரவும்

வேப்பம்பூவின் மணமாய் உன் காதல்!

வயலுக்குள் சாய்ந்தாடி வரவேற்கும்

பச்சைநிற நாற்றுகளாய் உன் காதல்!

மூடியிருக்கும் கதவை இரவில்

சுரண்டும் பூனையாய் உன் காதல்!

உள்ளங்கையில் மணம் பரப்பும்

மருதாணிச் சிவப்பாய் உன் காதல்!

லவ்டேல்….

யாழினி முகத்தைத் தூக்கி வைத்தபடி அமர்ந்திருந்த சாய்சரணையும் ஆரத்யாவையும் அதட்டி உருட்டிச் சாப்பாடு ஊட்டிவிட்டவள் சங்கவியிடம் மனதைப் போட்டு அலட்டிக்கொள்ள வேண்டாம் என்று அறிவுறுத்திவிட்டு மகனுடன் ஆரத்யாவையும் அழைத்துக்கொண்டு தனது வீட்டுக்குக் கிளம்பினாள்.

செல்லும் முன்னர் தங்கைகளிடம் அவளைப் பார்த்துக் கொள்ளுமாறு கூறிவிட்டுத் தான் கிளம்பினாள்.

அவள் கிளம்பியதும் சங்கவி சிறிது நேரம் மதுரவாணியை நினைத்துப் புலம்பியவள் பின்னர் நாத்தனார்களின் ஆறுதல் தேறுதல்களைக் கேட்டுவிட்டு மனம் சற்று சாந்தமடைய உறங்கலாம் என்ற முடிவுடன் தனது அறைக்குச் செல்ல எழுந்தவள் கதவு தட்டப்படும் சத்தம் கேட்டு இந்நேரத்தில் யார் என்று புருவம் சுருக்க ராகினி கதவைத் திறக்கச் சென்றாள்.

கதவைத் திறந்தவள் அங்கே நின்றவர்களைக் கண்டு அதிர்ந்தாள்.

மதுரவாணி தலையைக் குனிந்தபடி நிற்க அவளருகில் அவளது சூட்கேசுடன் நின்றிருந்தான் மதுசூதனன்.

இருவரையும் பார்த்து அதிர்ச்சியில் அவள் உறைய ஸ்ரீரஞ்சனி அவளின் முகபாவத்தில் துணுக்குற்றவள் “என்னாச்சு ராகி?” என்று கேட்கும் போதே இருவரும் உள்ளே நுழைய சங்கவியும் ஸ்ரீரஞ்சனியும் இவள் சென்னை போகவில்லையா என்ற கேள்வியுடன் சந்தோசமும் குழப்பமுமாய் விழித்தனர்.

சங்கவி முதலில் சுதாரித்தவள் “மது சார்… மது எப்பிடி உங்க கூட…” என்று திக்கித் திணற மதுசூதனன் தன்னருகில் சிலையாய் நின்றவளை யோசனையுடன் பார்த்துவிட்டு

“இதுக்கு மேலயும் பொய் சொல்லாம அட்லீஸ்ட் இப்போவாச்சும் உண்மைய சொல்லலாமே” என்று அவளிடம் சொல்ல மதுரவாணியோ அவனைச் சட்டை செய்யாமல் ஹாலுக்குள் சென்றவள் சோபாவில் அமர்ந்தாள்.

இவள் சொல்லப் போவதில்லை என்று தெரிந்ததால் தானே சொல்லிவிட வேண்டியது தான் என்று மதுசூதனன் நடந்ததைச் சொல்ல ஆரம்பித்தான்.

“உங்க சிஸ்டருக்குச் சென்னைல இன்னும் ஜாப் கிடைக்கல மேம்… இவங்க உங்க கிட்ட பொய் சொல்லிட்டுச் சென்னைக்குக் கிளம்பியிருக்காங்க… இன்ஃபேக்ட் இவங்க எங்க தங்கணும்னு கூட டிசைட் பண்ணாம தான் கிளம்பியிருக்காங்க”

அவன் சொன்னதும் சங்கவிக்குத் தங்கையை என்ன தான் செய்வது என்று புரியவில்லை. அவளருகே சென்றவள் “என்னடி இதெல்லாம்?” என்று இறுகிப் போன குரலில் கேட்கவும் மதுரவாணி தயக்கத்துடன்

“இல்லக்கா! உனக்கு ஏன் சிரமத்தைக் குடுக்கணும்னு தான் நான் கிளம்புனேன்… அதுவுமில்லாம ஸ்ரீதரும் ரேவதி ஆன்ட்டியும் என்னமோ நான் லவ் பண்ணி வீட்டை விட்டு ஓடிவந்துட்டதா நினைக்கிறாங்க.. எனக்கு அவங்களை ஃபேஸ் பண்ண சங்கடமா இருக்கு… அதோட மூனாவது மனுசங்களை என்னோட பிரச்சனைக்குள்ள கொண்டு வர எனக்கு இஷ்டமில்ல” என்று மதுசூதனனைப் பார்த்தபடி சொன்னவளின் விழியில் ‘நீ எனக்கு மூன்றாவது மனிதன் தான்; தள்ளி நில்’ என்ற செய்தி நன்றாகவே புலப்பட்டது.

ஸ்ரீரஞ்சனி மனம் பொறுக்காது “அதுக்குனு அவ்ளோ பெரிய சிட்டில போய் தனியா என்ன பண்ணுவ மது? உலகம் நீ நினைக்கிற மாதிரி இல்லடி… ரொம்ப மோசமானது… பொண்ணுங்க ஒரு லெவலுக்கு மேல தனியா இருக்க முடியாது” என்று சொல்ல சட்டென்று தலையுயர்த்திப் பார்த்தவள்

“இப்போ என்ன சொல்ல வர்ற ரஞ்சி? நான் ஊருக்கே திரும்பிப் போய் அப்பாவும் அண்ணனுங்களும் பாத்து வைக்குற எவனோ ஒருத்தனுக்குக் கழுத்தை நீட்டி அவனுக்குச் சமைச்சு, துணி துவைச்சு, பிள்ளை பெத்துக் குடுத்துட்டு சம்பளம் இல்லாத வேலைக்காரியா இருக்கணுமா? ஏய்! ஏன்டி புரிஞ்சுக்க மாட்ற? எந்த ஆம்பளையையும் லைப் பார்ட்னரா யோசிச்சுப் பாத்தாலும் என் அண்ணனுங்க மதினிங்க கிட்ட நடந்துக்கிற விதம் தான் நினைவுக்கு வருது… ஒரே ஒரு மொபைல் போனுக்கு லீலா மதினிய கார்த்தி அண்ணா வீட்டுல இருக்கிறவளுக்கு போன் எதுக்கு; இது ஒரு தெண்டச்செலவுனு புலம்புனதை நான் பாத்திருக்கேன்…

மதினிய விடு… நம்ம பானு தூத்துக்குடில எக்ஸ்போர்ட் கம்பெனில நல்ல பொசிசன்ல இருக்கா… ஆனா இன்னைக்கு வரைக்கும் ஒரு வாங்குறதுக்குக் கூட மாமா பெர்மிசன் இல்லாம அவளால வாங்க முடியாது… எனக்கு இதெல்லாம் பாத்து வெறுத்துப் போச்சு ரஞ்சி… என்னால இப்பிடிலாம் ஒரு ஆம்பளையோட உதாசீனப்பேச்சை ஈகோவ பொறுத்துட்டுப் போக முடியாது… நான் இப்பிடியே இருக்கிறது தான் எனக்கு நல்லது” என்றாள் தீர்மானக் குரலில்.

அவளது இந்தப் பேச்சு அவள் குடும்பத்துப்பெண்களுக்குப் பழகிப் போனது தான் என்றாலும் மதுசூதனனுக்கு முற்றிலும் புதிது. இப்படியெல்லாம் ஆண்கள் இருப்பார்களா என்று ஆச்சரியத்துடன் அவளை நோக்கினான் அவன்.

அதே நேரம் சங்கவி பெருமூச்சை ஒரு இழுத்துவிட்டவள் “சரிடி! உன் இஷ்டப்படியே நீ இருந்துக்கோ! ஆனா எங்க கண்ணு முன்னாடி இரு மது… என்ன பிரச்சனை வந்தாலும் நம்ம எல்லாரும் சேர்ந்து சமாளிச்சுக்கலாம்… சித்தப்பாவோ கார்த்தியோ வந்தா நான் அவங்களைச் சமாளிக்கிறேன்” என்று வாக்களிக்க ஸ்ரீரஞ்சனி அவசரமாக இடையில் புகுந்து

“அந்த டி.சி.பிய நான் பாத்துக்கிறேன்டி… முடிஞ்சளவுக்கு உன்னையும் மது சாரையும் அவரு எந்தக் கேள்வியும் கேக்காத மாதிரி நான் சமாளிக்கிறேன்” என்றாள்.

இப்போது ராகினியின் முறை.

“நான் உன்னை இனிமே எந்த தர்மசங்கடத்துலயும் மாட்டி விட மாட்டேன்… ஐ ப்ராமிஸ் மதுக்கா” என்று நல்லப்பெண்ணாகச் சொல்ல மதுரவாணியின் தயக்கம் இன்னும் அகலவில்லை.

மெதுவாக “எல்லாம் சரி… ஆனா நான் எவ்ளோ நாளுக்கு ஓசிலயே இங்க தங்கிக்க முடியும்?” என்று இழுக்க

“அறைஞ்சேனா பாரு! இந்த வார்த்தைய மட்டும் நீ கமல் முன்னாடி பேசிருக்கணும்… நானும் சரி அவரும் சரி உன்னை என்னைக்குமே சுமையா நினைக்க மாட்டோம்டி… இனிமே இப்பிடி பேசாத மது” என்றாள் சங்கவி வருத்தத்துடன்.

“அக்கா நானும் படிச்சிருக்கேன்… எனக்கும் மத்தப் பொண்ணுங்கள மாதிரி வேலைக்குப் போகணும்னு ஆசையா இருக்கு… என்னோட உழைப்புல இது வரைக்கும் நான் ஒரு ஹேர்பின் கூட வாங்குனது இல்லக்கா… நல்ல வேலைக்குப் போகணும்.. யாரோட உதவியுமில்லாம வாழ்க்கையை வாழணும்ங்கிறது என்னோட கனவுக்கா” என்றவளின் குரலில் இருந்த ஏக்கம் அவள் எந்தளவுக்குத் தற்சார்பாக இருக்க விரும்புகிறாள் என்பதை மற்றவர்களுக்குப் புரிய வைத்தது.

மதுசூதனன் அதைக் கேட்டவன் “நீ என்ன படிச்சிருக்க?” என்று கேட்க அவளோ தான் தமிழ்நாட்டு இளைஞர், இளைஞிகளின் ஆஸ்தானப் படிப்பான பொறியியல் படித்த பட்டதாரி என்று சொல்லவும் அவன் பெரிதாய் ஒன்றும் யோசிக்கவில்லை.

தனது தங்கை வைஷாலி வேலை செய்யும் இடத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களும், மென்பொருள் நிறுவனங்களும் இருப்பதால் அவளது சுயவிவரத்தைத் தங்கைக்கு அனுப்பினால் நிச்சயம் பலன் கிடைக்கும் என்றான்.

ஒரு கணம் மதுரவாணியின் முகம் ஜொலித்ததைக் கண்டு நிம்மதியுற்றவன் “சரி உன் நம்பர் குடு” என்று கேட்கவும் அவள் முகம் மீண்டும் கூம்பிப் போனது.

“என் நம்பர் உனக்கு எதுக்கு?”

“ப்ச்… ஜாப் ஆபர் வந்தா உனக்குச் சொல்ல வேண்டாமா?”

“அது… அதை நீ அக்கா கிட்ட சொல்லு… ஏன்கா உன் நம்பர் இவன் கிட்ட இருக்குல்ல?” என்று சொல்லிவிட்டுச் சங்கவியை நோக்க

“மேம் ரொம்ப பிசியானவங்க… உன்னோட புடலங்கா வேலை விசயத்துக்குலாம் அவங்கள என்னால தொந்தரவு பண்ண முடியாது.. உன் நம்பரை குடு… வைஷாலி உன்னை கான்டாக்ட் பண்ணுவா… மேம் கொஞ்சம் உங்க தங்கச்சிக்குச் சொல்லிப் புரிய வைங்க” என்று நைச்சியமாகப் பேசவும் சங்கவி தானே முன்வந்து தங்கையின் மொபைல் எண்ணை மதுசூதனனுக்குக் கொடுக்க மதுரவாணி தன் தலையில் அடித்துக் கொண்டாள்.

மதுசூதனன் வெற்றிகரமாக அவளது எண்ணைத் தனது மொபைலில் சேமித்துக் கொண்டவன் “ஓகே மேம்! நான் கிளம்புறேன்… குட் நைட்” என்று சொல்லிவிட்டுக் கிளம்ப மதுரவாணியும் அவனுடன் எழும்பவே மற்றவர்கள் அவளைக் கேள்வியாகப் பார்க்க

“எவ்ளோ பெரிய ஆபத்துல இருந்து என்னைக் காப்பாத்திருக்கான்… அதுக்கு நன்றிக்கடனா நானே வழியனுப்பிட்டு வர்றேன்… நீங்க டென்சன் ஆகாம ரூம்ல போய் படுத்துத் தூங்குங்க.. கல்யாண வேலைல உடம்புக்கு அசதியா இருக்கும்ல” என்று அக்கறையாய் மொழிய மூவரும் அவரவர் அறைக்குச் சென்றுவிட்டனர்.

சொன்னபடி அவனை வாசல் வரை வந்து வழியனுப்பியவளைக் குறும்புப்புன்னகையுடன் ஏறிட்டவன்

“என்ன சொல்லணும்னு என் பின்னாடியே வந்துருக்கிங்க மேடம்?” என்று கேட்க

“என் நம்பரை ஏன் வாங்குன?” என கேட்டாள் மதுரவாணி.

“அதான் சொன்னேனே! வைஷு உன்னை காண்டாக்ட் பண்ணுறதுக்காகனு”

“இதை நான் நம்பணுமா?”

அவளது இக்கேள்வியில் பக்கென்று நகைத்தவன் “நீ நினைக்கிற அளவுக்கு நான் பெரிய வில்லன்லாம் இல்லமா! கார்ல வர்றப்போ உன் கிட்ட பேசுனத வச்சு நீயா ஒரு முடிவுக்கு வராத” என்று சொல்ல அவள் மத்திமமாய் தலையாட்டி வைத்தாள்.

“அதுக்குனு என்னை அண்டர் எஸ்டிமேட்டும் பண்ணிடாத… டெய்லி நான் கால் பண்ணுவேன்… அட்டெண்ட் பண்ணி அட்லீஸ்ட் ஒரு குட்மானிங், குட்நைட்டாச்சும் சொல்லு”

“வாட்? நான் அப்பிடிலாம் முன்னப் பின்ன தெரியாதவன் கிட்ட பேச மாட்டேன்”

“நான் ஒன்னும் முன்ன பின்ன தெரியாதவன் இல்லயே! நம்ம லவ் பண்ணுறோம் தானே”

குறும்பாய் கேட்டபடி வாயில் கேட்டின் அருகில் நின்றவனின் பேச்சில் ஒரு கணம் திகைத்தவள் அடுத்த நொடியே முகத்தைச் சுருக்கிக் கொண்டு தலையில் அடித்துக் கொண்டாள். ஒரு பொய்! ஓராயிரம் ரோதனைகள்! எல்லாம் தலை எழுத்து!

மதுசூதனன் அவளது முகபாவத்தை ரசித்தவன் போனை எடுத்து அவளுக்குக் கால் செய்ய பதறிப் போய் எடுத்தவள் அவனது எண்ணைக் கண்டதும் சில அடிகள் இடைவெளியில் நின்றவனை முறைக்க அவனோ காதில் வைத்தபடி இன்னும் அவளையே நோக்கினான்.

“என்னடா இது? கண்ணு முன்னாடி இருந்துட்டே போன் பண்ணுற?”

“இது டிரையலுக்குப் பண்ணுன கால்… அட்டெண்ட் பண்ணிப் பேசு”

“எடுக்க மாட்டேன்”

“அப்போ நானும் இங்க இருந்து போக மாட்டேன் வாணி”

கடுப்புடன் அழைப்பை ஏற்று காதில் வைத்தவள் “இப்போ சந்தோசமா? ஒழுங்கா கிளம்பி வீட்டுக்குப் போ” என்று சொல்ல அவன் மறுப்பாய் தலையசைத்துவிட்டு

“நீ குட் நைட் சொன்னா நான் போவேன்”

“ஓகே! குட் நைட்”

“என்ன பொண்ணுமா நீ? உன்னை எவ்ளோ கஷ்டப்பட்டு வீட்டுக்குக் கூட்டிட்டு வந்திருக்கேன்… ஒரு பேச்சுக்கு குட் நைட் கேட்டா வெறும் குட் நைட் மட்டும் தான் சொல்லுவியா?” என்று கேட்டபடி மீண்டும் வீட்டை நோக்கி அடியெடுத்துவைத்தவன் இப்போது அவளுக்கு எதிரே நிற்க மதுரவாணி அவனது கேள்வியில் விதிர்விதிர்த்துப் போனாள்.

இரயில் நிலையத்தில் தன்னைக் காரில் அமர வைத்ததில் இருந்து அவன் பேசும் முறையே சரியில்லையே என்ற யோசனையுடன்

“சாருக்கு வேற என்ன வேணும்?” என்று முறைக்க முயன்றபடி கேட்டவளை ரசனை சிந்தும் விழிகளால் ஏறிட்டவன்

“ஒன்னும் வேண்டாம்… சொன்னா நீ கோவப்படுவ… இன்னொரு நாள் பொறுமையா கேக்குறேன் வாணி… இப்போ போய் தூங்கு” என்று சொல்லிவிட்டு அவள் சிகையை அலைந்துவிட்டுக் கிளம்பினான்.

மதுரவாணியோ செல்பவனைப் பார்த்தபடியே தான் கோபம் கொள்ளும் வண்ணம் அப்படி என்ன கேட்க நினைத்திருப்பான் என்ற யோசனையுடன் கதவைப் பூட்டிவிட்டு வீட்டுக்குள் நுழைந்தாள்.

இன்றைய தினம் அவன் தன்னுடன் பேசியது, தன்னைத் தூக்கி காருக்குள் வைத்தது எல்லாமே அவளுக்கு வித்தியாசமாய் தோணியது. இனி இப்படி நடக்காது பார்த்துக் கொள்ள வேண்டும் என்று இயற்கையான எச்சரிக்கை உணர்வு எழ தனது உடமைகளை எடுத்துக் கொண்டு முன்பு இருந்த அதே மாடியறையை அடைந்தவள் அன்றைய தினம் அலைச்சலால் உண்டான களைப்பில் படுக்கையில் வீழ்ந்தவள் சில நொடிகளில் நித்திராதேவியின் மடியில் தஞ்சம் புகுந்தாள்.

****************

நேரம் பதினொன்றரையைத் தாண்டியும் ஸ்ரீதர் வீட்டுக்கு வராததால் கவலையுற்றிருந்த ரேவதி மகனுக்காக காத்திருந்தபடியே ஹால் சோபாவில் உறங்கிவிட்டார்.

ஸ்ரீதர் தன்னிடம் இருந்த சாவி கொண்டு திறந்து வீட்டுக்குள் நுழைந்தவன் சோபாவில் அமர்ந்தபடி உறங்கிவிட்ட தாயைக் கண்டதும்

“எத்தனை தடவை சொன்னாலும் கேக்கவே மாட்றாங்களே! நான் என்ன சின்னக்குழந்தையா?” என்று அலுத்துக்கொண்டபடி அன்னையை மெதுவாக எழுப்ப அவர் துயில் களைந்தார்.

வழக்கம் போல ஏன் தனக்காக காத்திருந்து உறக்கத்தைத் தியாகம் செய்கிறீர்கள் என்று ஆரம்பித்த தனயனது கரத்தைப் பற்றியபடி எழுந்தவர்

“அதுக்குத் தான் சீக்கிரம் கல்யாணம் பண்ணி மருமகளை வீட்டுக்குக் கூட்டிட்டு வரலாம்னு பாக்குறேன்… அவ வந்ததுக்கு அப்புறம் எனக்கு இந்தக் கவலை இல்லையே! அதுவுமில்லாம என் பையன் என்ன சாதாரணப்பட்டவனா? அவனுக்கு வேலைல நிறைய கஷ்டம் இருக்கும்… அவன் காலைல கிளம்புனா நைட் வீட்டுக்கு வர்ற வரைக்கும் மனசு கிடந்து அடிக்குதே… அதுவும் இப்போ நீ ஒரு புது கேசை எடுத்திருக்கனு சொன்னியே, அது வேற பெரிய இடத்துச் சமாச்சாரம்… உனக்கு எந்த  நேரம் என்னாகுமோனு கவலையா இருக்குடா ஸ்ரீ! அதுக்கு அப்புறமும் உன் முகத்தைப் பாக்காம எனக்குத் தூக்கம் வருமா?” என்று சொன்னபடியே உணவுமேஜைக்கு அவனுடன் நடந்தார்.

மகனை அமர வைத்து தட்டில் சப்பாத்தியை வைத்து குருமாவை இட்டவர் ஒரு தம்ளரில் தண்ணீர் நிரப்பி வைத்துவிட்டு அவனருகில் அமர்ந்தார்.

ஸ்ரீதர் சாப்பிட்டபடியே அந்தக் கேசைப் பற்றிய விவரங்களை அன்னைக்குப் புரியும்படி சொல்ல ஆரம்பித்தான்.

“இது போன வருசமே சாட்சி எதும் பெருசா இல்லனு கிடப்புல போட்ட கேஸ்மா… பொண்ணோட அப்பாவும் கொஞ்சம் பெரிய கை… அதான் கேசை ரீ ஓபன் பண்ண வச்சிருக்காரு… இதுல மாட்டுன பையனும் பெரிய இடத்துப் பையன் தான்… எஸ்.வி ஜூவெல்லரினு ஒப்பனக்கார வீதில ஒரு பெரிய ஷோரூம் இருக்குதே! அதோட ஓனர் ஸ்ரீவத்சனோட மகன் தான் இந்தக் கேஸ்ல மெயின் சஸ்பெக்ட்…

அவனுக்கும் செத்துப் போன பொண்ணுக்கும் இடைல லவ்னு பேசிக்கிறாங்க… ஆக்சிடெண்ட் நடந்தப்போ அவனோட கார் வேகமா போய் மரத்துல முட்டுனதுல ஏர்பேக் விரிஞ்சதால அவன் உயிர் பிழைச்சிருக்கான்… ஆனா அந்தப் பொண்ணு கார்க்கதவு சரியா லாக் ஆகாததால வெளியே போய் விழுந்துட்டு ஸ்பாட்லயே அவுட்… அவ கூட அன்னைக்குக் கார்ல இருந்தவன் அஜய்னு பொண்ணோட அப்பா சொல்லுறாரு…

ஆனா அஜய் தரப்புல அன்னைக்கு அவன் தமிழ்நாட்டுலயே இல்லங்கிறதுக்கு சாட்சி ரெடியா வச்சிருக்காங்க… இன்னைக்கு என்கொயரில அவனுக்கு எதிரா எனக்கு ஒரு ஆதாரம் கிடச்சிருக்கு… எங்க டிப்பார்ட்மெண்ட்ல அவங்களுக்கு துப்பு சொல்லுற கருப்பாடுங்க அதிகம்… அதனால எவிடென்ஸ் கிடைச்சுதுங்கிற விசயத்தை மட்டும் தான் சொல்லிருக்கேனே தவிர என்ன எவிடென்ஸ்னு இன்னும் யாரு கிட்டவும் சொல்லல… அநேகமா இந்நேரம் அந்த அஜய்கு இந்த நியூஸ் போயிருக்கும்… இதுக்கு அவன் ரியாக்ட் பண்ணுறத வச்சு மீதி எவிடென்சையும் நான் கலெக்ட் பண்ணிடுவேன்”

ரேவதி அனைத்தையும் பொறுமையாய் கேட்டவர் “கொஞ்சம் கவனமா இருந்துக்கோடா ஸ்ரீ! பெரிய இடம்னு சொல்லுற… எதுவும் பிரச்சனை வராதே?”  என்று கவலை தோய்ந்த முகத்துடன் மகனை ஏறிட

ஸ்ரீதர் “நான் உங்க மகன்! என்னை யாராலயும் எதுவும் செய்ய முடியாதும்மா… இதுக்கு ஏன் இவ்ளோ கவலைப்படுறிங்க? நான் எல்லா விசயத்தையும் சொன்னதுக்குக் காரணம் உங்க கிட்ட எதையும் மறைக்க கூடாதுங்கிறதுக்காக மட்டும் தான்…. மத்தபடி டி.சி.பி ஸ்ரீதர் மேல கை வைக்க எந்தக் கொப்பனுக்குத் தைரியம் இருக்கு?” என்று சொன்னபடி சப்பாத்தி விள்ளலை தாயாருக்கு ஊட்டி விட ஆரம்பித்தான்.

அதே நேரம் அவனது சந்தேகத்துக்கு இலக்கான அஜய்கு ஸ்ரீதர் ஏதோ ஆதாரத்தைக் கைப்பற்றிய தகவல் சில உளவாளிகள் மூலம் கிடைத்தது. அந்த உளவாளி சொன்ன தகவலைத் தெளிவாக கேட்டுக்கொண்டவன்

“அது என்ன எவிடென்ஸ்னு எப்பிடியாச்சும் கண்டுபிடிங்க… எவ்ளோ செலவானாலும் பரவால்ல” என்று போனில் பேசிக் கொண்டிருந்தவனை அழைத்தது தனுஜாவின் குரல்.

ஆம்! அவனும் தனுஜாவும் நகரின் மிகப்பெரிய பப்பிற்கு நண்பர்கள் புடைசூழ வந்திருந்தனர். அவர்கள் இருவருக்கும் பெரியவர்கள் சம்மதத்துடன் திருமணம் பேசி முடிக்கப்பட்டதைக் கொண்டாட தான் பப்பில் பார்ட்டி நடைப்பெற்றுக் கொண்டிருந்தது.

“இதோ வர்றேன் பேபி” என்று தனுஜாவிடம் திரும்பி முறுவலித்தவன் போனை ஜீன்ஸ் பாக்கெட்டில் போட்டுக் கொண்டபடி அவளை நோக்கி நடந்தான்.

தனுஜா அவனை நோக்கிப் புன்னகைக்க “மை டியர் பிரின்சஸ்! நீ சொன்ன மாதிரியே சிட்டிலயே ஃபேமஸான பப்ல உன் ஃப்ரெண்ட்சுக்குப் பார்ட்டி குடுத்தாச்சு… இப்போ ஹேப்பியா?” என்று அவன் கேட்ட நொடியில் மயக்கும் புன்னகை ஒன்றைச் சிந்தியவள்

“ஐ அம் வெரி வெரி ஹேப்பி அஜய்… ஐ அம் சோ லக்கி டு ஹேவ் யூ அஸ் மை லைஃப் பார்ட்னர்” என்று கொஞ்சல் மொழியில் மிழற்றியபடி அவனது தோளில் சாய்ந்து கொண்டாள் அவளுக்கே உரித்தான கர்வம் தெறிக்கும் முகபாவத்துடன்.

அவன் அவளைத் தங்கத்தட்டில் வைத்துத் தாங்காத குறை ஒன்று தான்! தமிழகத்தின் தலை சிறந்த நகைக்கடை அதிபரின் ஒரே மகள்! அவளை மணந்தால் இரண்டு நகை கடை சாம்ராஜ்ஜியத்துக்கும் தான் மட்டும் தானே ராஜா என்ற எண்ணம் அஜய்யின் மனதுக்குள் மத்தாப்பூ சிதறலை உண்டாக்கியது.

தன்னை சாம்ராஜ்ஜிய ராஜாவாக மாற்றப் போகிறவளைத் தாங்கினால் அவன் ஒன்றும் குறைந்து போக மாட்டான் அல்லவா!

அதே நேரம் தனுஜா சந்தோசத்தின் உச்சியில் இருந்தாள். வார்த்தைக்கு வார்த்தை பேபி என்று கொஞ்சும் அஜய் அவளது கடைக்கண் பார்வைக்காக தவமிருப்பதும், அவளது சின்ன சின்ன ஆசைகளை நிறைவேற்ற துடிப்பதும் அவளது இயல்பான கர்வத்தை இன்னும் தூண்டி விட்டது.

கூடவே சுற்றும் தோழிகளும் அவளின் கர்வத்துக்குத் தூபம் போட அவள் ஒன்பதாவது சொர்க்கத்தில் பொன்னூஞ்சலில் ஆடிக் கொண்டிருந்தாள்.

அஜய் மற்றும் தனுஜா இருவருமே புரிந்து கொள்ளாத ஒரே விசயம் காதல் என்பது கொடுக்கல் வாங்கல் இல்லை; முக்கியமாக நீ எனக்காக இதை செய்தால் நான் மகிழ்ந்து உன்னைக் காதலிப்பேன் என்ற நிபந்தனையோடு ஏற்கப்படுவது காதலே அல்ல;

எவ்வித எதிர்பார்ப்புகளுமின்றி ஒருவர் மற்றொருவருக்காக யோசிப்பதும், அவர்கள் மீது அக்கறை செலுத்துவதும், அவர்கள் நலனில் கவனம் செலுத்துவதும் என காதலுக்கான வரைவிலக்கணம் வேறு மாதிரி கூட இருக்கலாம் என்பதை அவர்கள் அறியப் போவதில்லை.

அலை வீசும்🌊🌊🌊