🌊 அலை 18 🌊

காதல் பார்வைகளை

இலகுவாய் கடப்பவன்

உன் வெட்டும் பார்வையில்

மதிமயங்கி நிற்கிறேன்!

விழிவீச்சில் சிலையாகி

மொழி பேச மறக்கிறேன்!

மதுரவாணி எதிர்பார்த்தாற் போன்று விக்ரமிடம் இருந்து அவளுக்கு மின்னஞ்சல் வந்தது. ஆனால் அது அவளுக்கு ஏமாற்றத்தை மட்டுமே சுமந்து வந்தது.

மதுரவாணி ஊரிலிருந்து கிளம்பிய மறுநாளே அவளது வீட்டினருக்கு அவள் வீட்டை விட்டுச் சென்றதற்கான காரணம் தெரிந்துவிட்டது எனவும் அதற்கு தான் செய்த ஒரே ஒரு போன் கால் தான் காரணம் என்றும் தெரிவித்திருந்த விக்ரம் மதுரவாணிக்குத் தான் உதவுவது தெரிந்தாலோ அல்லது போனில் அழைத்தாலோ அவளது சகோதரர்கள் கண்டுபிடித்துவிடுவர் என்று தீர்மானமாகக் கூறினான்.

எனவே அவளுடன் தொடர்பில் இருப்பது மதுரவாணியைத் தானே காட்டிக் கொடுப்பதற்கு சமம் என்பதால் தான் அவளது தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று தெரிவித்தவன் தன்னை மன்னித்துவிடுமாறு கேட்டிருந்தான்.

தனக்கு என்று இருக்கும் ஒரே ஒரு தோழன்! இன்று தன்னால் அவனுக்குத் தான் சிரமம்! ஆனால் அவன் தன்னிடம் மன்னிப்பு கேட்கிறானே! தன்னால் யாருக்குத் தான் சிரமம் இல்லை, வீட்டினரிலிருந்து விக்ரம் வரை அனைவருமே அவளால் தானே கஷ்டப்படுகின்றனர்!

 தனக்காக சங்கவி கார்த்திகேயனிடம் சொன்ன பொய் அப்படியே தொடர்ந்து ஸ்ரீரஞ்சனி ஸ்ரீதரிடம் சொல்லி, அடுத்து ரேவதி வரை சங்கிலியாய் நீள்வதற்கு தான் ஒருத்தி மட்டும் தானே காரணம்! இது நல்லதற்கல்ல! இந்தப் பொய்கள் அனைத்துக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டே ஆக வேண்டும். அதற்குத் தான் இங்கிருந்து செல்வது ஒன்றே தீர்வு!

சீக்கிரம் அதற்கான ஏற்பாடுகளைக் கவனிக்க வேண்டும் என்று எண்ணியவள் தனது கைப்பையை எடுத்து மிச்சம் வைத்திருந்த தொகையைக் கணக்கிட்டாள். அதில் சென்னையில் ஒரு விடுதி எடுத்துத் தங்கி ஒரு மாதம் வரை நகர்த்தலாம் என்ற நம்பிக்கை வரவும் சென்னை செல்வதற்கான ஆயத்தத்தில் ஈடுபடலானாள் மதுரவாணி.

கீழே கலகலப்பாகப் பேசிக் கொண்டிருந்தவர்களிடம் சென்று விக்ரம் தனக்குச் சென்னையில் வேலைக்கு ஏற்பாடு செய்துவிட்டான் என ஒரு பொய்யைச் சொன்னவள் தான் இன்னும் இரண்டு தினங்களில் சென்னைக்குக் கிளம்ப வேண்டுமென சொல்லவும் குழந்தைகள் அழுகைக்குத் தயாராயினர்.

சங்கவியும் யாழினியும் முகம் சோர்ந்துவிட “கண்டிப்பா போகணுமா மது?” என்று கேட்க ஸ்ரீரஞ்சனியும் ராகினியும் அவளைக் கட்டிக் கொண்டனர்.

வழக்கமாய் பெற்றோருடன் வந்தால் பத்து நாட்களில் கிளம்பிவிடுபவள் இம்முறை மாதக்கணக்கில் இங்கேயே தங்கிவிட்டதால் அவளைப் பிரிவது என்பது அவர்களுக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது.

“இன்னும் டூ டேய்சுக்கு கல்யாண வேலை இருக்குதுடி… நீ கிளம்புறேனு சொன்ன தேதி தான் கல்யாணமும் ரிசப்ஷனும் நடக்கப் போகுது… அன்னைக்கு உன்னை வழியனுப்ப கூட எங்களால வர முடியுமானு தெரியலையேடி… மது கொஞ்சம் தள்ளிப் போடக் கூடாதா?” என்று ஆதங்கமாய் கேட்ட சங்கவிக்கு ஒரு புன்னகையை மட்டும் பதிலாக அளித்தவள்

“நான் இங்க இருந்து கிளம்புறது ஸ்ரீதருக்கும் ரேவதி ஆன்ட்டிக்கும் தெரியக்கூடாது… அதை மட்டும் நியாபகம் வச்சுக்கோங்க” என்று சொல்லிவிட்டுத் தனது அறைக்குச் சென்றுவிட்டாள்.

நேரே பால்கனிக்குச் சென்று நின்று கொண்டவளுக்குத் தன் எதிரே இருளில் வரிவடிவமாய் நிற்கும் மலைச்சிகரங்களும் தேயிலைத் தோட்டங்களும் தெரிய

“இதே மாதிரி தான் என் லைஃபும் தெளிவே இல்லாம இருக்கு… அடுத்து என்ன பண்ணணும்னு கூட தெரியல… இலக்கு இல்லாத வாழ்க்கைய வாழுறது கூட கஷ்டம் தான்” என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டாள்.

மதுசூதனனும் கிட்டத்தட்ட அதே மனநிலையில் தான் இருந்தான். இத்தனை நாட்கள் நிழலுருவாய் வந்து குழப்பியவளின் நிஜவுருவைக் கண்டதும் ஒரு கணம் மெய்மறந்தாலும் அடுத்து என்ன என்ற கேள்வி பூதாகரமாய் அவன் முன்னே விஸ்வரூபம் எடுத்து நின்றது.

அன்னை சொல்வது போல திருமணம் குடும்பம் என்று யோசிக்க இப்போதைக்கு அவனால் இயலாது. அப்படி இருக்கையில் தன் கண் முன்னே தெளிவற்று தெரியும் வாழ்வில் அடுத்து என்ன செய்வது என்று புரியாது குழம்பினான் அவன்.

எனவே கையில் இருக்கும் வேலையில் கவனத்தைச் செலுத்துவோம் என்ற முடிவுக்கு வந்தவன் அடுத்த இரு தினங்களில் யுவஸ்ரீயின் திருமண ஏற்பாட்டில் அனைத்தையும் மறந்து வேலையில் ஆழ்ந்தான்.

அவன் மட்டுமல்ல! கௌதம், திலீப் மற்றும் அவனது நிறுவன ஊழியர்கள் அனைவருக்குமே இந்த்த் திருமணம் அவர்களின் நிறுவன வரலாற்றில் ஒரு மைல் கல் என்பதால் அனைவரும் அதில் ஒரு குறையுமில்லாது ஏற்பாட்டில் கவனம் செலுத்தினர்.

சங்கவியும் யாழினியும் கூட அப்படி தான்! அந்த இரு நாட்களிலும் அவர்களுக்கு மூச்சு விட கூட நேரமில்லை. உதவிக்கு ஸ்ரீரஞ்சனியையும் அழைத்துக் கொண்டனர்.

திருமண நிகழ்வுகள் ஆரம்பிக்கும் நேரம் இவர்கள் மூவர் மட்டும் கிளம்ப மதுசூதனனின் விழிகள் மதுரவாணி எங்கே என்று தான் தேடியது. அதை அவர்களிடம் கேட்டவனுக்குக் கிடைத்த பதில் மதுரவாணிக்குச் சென்னையில் வேலை கிடைத்திருப்பதால் அவள் அன்றைய தினம் மாலை சென்னைக்குக் கிளம்ப போகிறாள் என்பதே!

ஒரு நொடி காரணமே இல்லாது இதயத்தில் முணுக்கென்ற வலி உண்டாக யோசனையுடன் புருவம் சுழித்தவன் அடுத்தடுத்த நிகழ்வுகளில் அதை மறக்க முயன்றான்.

ஆனாலும் மாலை வரவேற்பில் கடைசி நேரத்தில் பூ அலங்காரத்தில் ஒரு சின்ன சறுக்கல் ஏற்படவே மூன்று பெண்களும் அதைச் சரி செய்துவிட்டுக் கிளம்பும் சமயம் மதுசூதனன் அவனது ஊழியர்களிடம் கட்டளையிட்டுவிட்டு நண்பர்களுடன் கிளம்பினான்.

இது ஸ்ரீவத்சனின் குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே கலந்து கொள்ளும் வரவேற்பு நிகழ்வு. அதற்கு அடுத்து விருந்து பரிமாற எல்லாம் தயாராய் இருக்க ஊழியர்கள் மட்டும் இனி இருந்தால் போதுமென கிளம்பியவனின் காதில்

“மது கோயம்புத்தூர் ஸ்டேசனுக்குப் போயிட்டாளாம்கா… என்னால அவளை சென்ட் ஆஃப் கூட பண்ண முடியல” என்ற ஸ்ரீரஞ்சனியின் விசும்பல் கேட்கவும் மதுசூதனனின் விழிகள் அவனது மொபைலில் நேரத்தைப் பார்த்தது.

சரியாக ஆறு மணியைக் காட்டியது மொபைல். இன்னும் இரண்டு மணி நேரத்தில் சென்னைக்குச் செல்லும் இரயில் புறப்படும் என்பது மூன்று பெண்களின் பேச்சில் தெரிந்துகொண்டவன் விரைந்து தன் காரை எடுத்தான்.

உதகமண்டலத்தின் எல்கை மறைந்து கார் வேகமெடுக்கும் போதே தான் ஏன் இவ்வளவு ஆர்வத்துடன் அவளைச் சந்திக்க செல்லவேண்டுமென தன்னைத் தானே கேட்டுக் கொண்டபடியே கோயம்புத்தூருக்குள் வந்து சேர்ந்தான்.

நேரே இரயில் நிலையத்தை நோக்கிக் காரைச் செலுத்தியவன் காரை அதற்குரிய இடத்தில் நிறுத்திவிட்டு உள்ளே ஓடினான். அவனது நல்லநேரம் சென்னை செல்லும் இரயில் அன்று அரைமணி நேரம் தாமதமாகப் புறப்படும் என்ற அறிவிப்பு ஒலித்தது. நிம்மதி பெருமூச்சு விட்டவன் அந்த இரயில் நிற்கும் நடைமேடையை நோக்கி விரைந்தான்.

கூட்டம் அன்று அதிகம் தான்! அதில் அவளைத் தேடுவது சற்று சிரமமான காரியமும் கூட! இருந்தாலும் ஏதோ ஒன்று அவனுள் இருந்து அவளைத் தேடும்படி பணிக்க கிட்டத்தட்ட பைத்தியக்காரனைப் போல சுற்றும் முற்றும் பார்த்தபடி நடந்தவனின் செவியில் மதுரவாணியின் குரல் விழுந்தது.

இவ்வளவு நேரம் இருந்த பரபரப்பு, பதற்றம் எல்லாம் சட்டென விலகிக் கொள்ள மனதுக்குள் இதமான உணர்வு ஒன்று பரவியது.

“நோ ப்ராப்ளம் விக்கி! ஐ கேன் மேனேஜ்… அவ்ளோ பெரிய சென்னைல எனக்குனு ஒரு வேலை கூடவா இருக்காதுடா? என்னால இதுக்கு மேலயும் கவிக்காவுக்குச் சுமையா இருக்க முடியாது… அதான் வேலை கிடைச்சிடுச்சுனு பொய் சொல்லிட்டுச் சென்னைக்கு வர்றேன்”

சென்னை செல்வதற்கு முன்னர் அவளை ஒரு முறை பார்த்துவிட வேண்டும் என்ற எண்ணத்துடன் வந்தவன் அவளது பேச்சின் அர்த்தம் புரிந்ததும் யோசனையுடன் நின்றான். கையில் வேலையில்லாமல் சென்னையில் ஆண்களின் நிலையே கேள்விக்குறியாகிவிடுமே! இந்தப் பெண் சாதாரணமாக அங்கே சென்ற பின்னர் தேடிக் கொள்கிறேன் என்கிறாளே என்ற ஆச்சரியம் அவனுக்கு.

“தங்குறதுக்குத் தானே! நான் அங்க வந்ததும் எதாச்சும் ஹாஸ்டல் தேடிப்பேன்டா… இன்னும் எங்க ஸ்டே பண்ணணும்னு டிசைட் பண்ணல”

இப்போது மதுசூதனனுக்கு நிஜமாகவே கோபம் வந்துவிட்டது. கையில் வேலை இல்லை; தங்குமிடமும் இல்லை. இந்நிலையில் இவள் சென்னைக்குச் சென்று என்ன செய்யப் போகிறாள் என்ற கேள்வியோடு இவ்வளவு பொறுப்பின்மையோடு ஒரு பெண்ணா என்ற எரிச்சலும் தோன்றியது.

“இம்பாசிபிள்! ஐ ஹேவ் நோ ஐடியா அபவுட் மை லைஃப்… பட் என் லைஃப்ல எந்த செண்டிமெண்டுக்கும் இடமில்ல விக்கி! நான் இண்டிபெண்டண்டா வாழணும்னு நினைக்கிறேன்… அதே நேரம் யாருக்கும் என்னால தொந்தரவு இருக்க கூடாதுனும் நினைக்கிறேன்… சோ நீ கவலைப்படாத”

போனில் அப்படி யாரைத் தான் தேற்றுகிறாள் என்று எரிச்சலுடன் அவளை நெருங்கியவனுக்கு வாழ்க்கை குறித்த எவ்வித தெளிவும் இல்லாத இந்தப் பெண்ணைத் தனியாகச் சென்னைக்கு அனுப்புவது முட்டாள்தனம் என்பது புரிந்தது.

சகோதரிகளிடம் பொய் சொல்லிக் கொண்டு கிளம்பும் அளவுக்கு என்ன அவசரம் என்ற கேள்வியும் ஒரு சேர எழ வேகமாய் அவளது போனைப் பிடுங்கியவன் அவள் அதிர்வதைக் கண்ணாறக் கண்டபடியே

“ஹலோ சார்! வாணி எங்கயும் வர மாட்டா! அவ திரும்பி அவங்க அக்கா வீட்டுக்கே போகப் போறா.. சோ நீங்க ஒரி பண்ணிக்காதிங்க.. ஆங்! நான் யாருனு தெரியாதுல்ல.. நான் மதுசூதனன்… மிஸ் மதுரவாணியோட லவ்வர்… பை.. குட் நைட்” என்று சொல்லிவிட்டுப் போனைத் தனது பாக்கெட்டுக்குள் போட்டுக் கொண்டான்.

மதுரவாணி போனைப் பிடுங்க முயன்றவள் அவளது கையை இறுக்கமாகப் பற்றிக் கொண்டு நின்றவனது அருகாமையில் விதிர்விதிர்த்துப் போனவள் அவனது செய்கையின் விளைவை உணர்ந்து மெதுமெதுவாய் பத்திரகாளி அவதாரம் எடுக்கத் தயாராகிக் கொண்டிருந்தாள்.

முகம் சிவக்க மூக்கு விடைக்க அவள் கத்த ஆரம்பிக்கும் முன்னர்

 “நீ கத்தி கூப்பாடு போட ரெடியாகுறனு நான் அஸ்யூம் பண்ணிட்டேன்… பட் பப்ளிக்ல எந்த டிராமாவும் பண்ண வேண்டாம்னு நினைக்கிறேன் வாணி! லெட்ஸ் கோ” என்று சொல்லி அவளது கரத்தைப் பற்ற முயல அவளோ அவனை விழியால் எரித்துவிட்டு ரோலர் சூட்கேசையும் லக்கேஜ் பேக்கையும் எடுத்துக்கொண்டு வேண்டாவெறுப்பாக அவனுடன் நடந்தாள்.

எல்லாம் இரயில் நிலையத்தை விட்டு வெளியேறி காரில் அமரும் வரை தான்! காரில் அமர்ந்ததும் கோபத்தில் கத்த வாயெடுத்தவளை அமைதி என்று மதுசூதனன் சைகை காட்ட, அவனை அவள் கண்டுகொண்டால் தானே!

“ஹவ் டேர் யூ மேன்? யாரைக் கேட்டு என் கிட்ட இவ்ளோ அட்….” என்றவளின் பேச்சு பாதியிலேயே தடைப்பட்டது.

ஏனெனில் அவளது இதழில் விரல் வைத்து அமைதி காக்கும்படி சொல்லிக் கொண்டிருந்தான் மதுசூதனன். அந்த விரலின் ஸ்பரிசத்துக்கு உதடுகள் தற்காலிகமாக வேண்டுமென்றால் கட்டுப்படலாம். ஆனால் நீ விரலை எடுத்ததும் நான் பேசத் தான் செய்வேன் என்று அவளது நயனங்கள் சொல்லாமல் சொல்ல அதைப் புரிந்து கொண்டவன்

“நான் விரலை எடுத்ததும் மறுபடி கத்தலாம்னு ட்ரை பண்ணுனேனு வையேன்! நெக்ஸ்ட் டைம் விரலை வைக்க மாட்டேன்” என்றவனின் விழிகள் குறும்போடு அவளது இதழை ரசிக்கவும் மதுரவாணிக்கு ஏனோ முகம் சிவந்து போனது.

“சை! நான் எதுவும் பேசல… நீ காரை எடு” என்று வார்த்தைகளைக் கடித்துத் துப்பியவளை ஏறிட்டவன்

“குட்கேர்ள்! இதே போல லவ்டேல் போய் சேருற வரைக்கும் சைலண்டா வந்தா நானும் நல்லப்பையனா வருவேன்… சரியா?” என்று வெளிப்பார்வைக்கு இலகுவாய் கேட்டாலும் அவளது பொறுப்பற்ற தன்மையில் எரிச்சலுற்றிருந்தது அவனது அழுத்தமானக் குரலில் தெரிந்தது.

அதை வெளிக்காட்டாமல் காரை எடுத்தான். மதுரவாணியோ இவனால் தனது திட்டம் எல்லாம் பாழாகி விட்டதே என்று மனதிற்குள் பொறுமியபடி வந்தாள்.

மீண்டும் லவ்டேலுக்குச் சென்றால் மீண்டும் பழைய பொய்களைத் தொடர வேண்டும். மீண்டும் ஸ்ரீதரையும் ரேவதியையும் பார்த்தால் சங்கடத்துடன் கடக்க வேண்டும். மீண்டும் தன்னால் தோழியும் சகோதரியும் சிக்கலில் மாட்டிக்கொள்ள வேண்டும். எவ்வளவு பிரச்சனைகள்! இதற்கெல்லாம் ஒரே தீர்வாக தான் அவள் இங்கிருந்து வெகுதூரம் செல்ல முயன்றாள்!

அனைத்திலும் மண்ணள்ளிக் கொட்டிவிட்டு சாவகாசமாய் காரை ஓட்டியவன் மீது அவளுக்குக் கொலைவெறியே பிறந்தது. கார் கோயம்புத்தூரின் எல்லையைக் கடந்ததும் சாலையோர மோட்டல் ஒன்றில் அவன் காரை நிறுத்தி இருவருக்கும் சாப்பிடுவதற்கு உணவு வாங்கி வர மதுரவாணி அதை வாங்காமல் மறுத்தவள் விறுவிறுவென காரிலிருந்து இறங்கி மோட்டலுக்குச் சற்றுத் தள்ளி இருந்த இடத்தில் உணவு உண்பதற்காக போடப்பட்டிருந்த மேஜையில் சென்று அமர்ந்து கொண்டாள்.

மதுசூதனன் தட்டுக்களை எடுத்துக் கொண்டு அவளைத் தொடர்ந்தவன் “உனக்கு வேடிக்கை பாத்துட்டே சாப்பிட பிடிக்கும்னு சொல்லிருந்தா டேரக்டா நம்ம இங்கேயே வந்திருக்கலாமே” என்று சாதாரணமாகச் சொல்லிவிட்டு அவளிடம் தட்டை நீட்ட அவள் கோபத்தில் தட்டைத் தள்ளிவிட அதிலிருந்த தோசையுடன் சட்னி சாம்பார் முழுவதும் தரையில் கொட்டியது.

மதுசூதனன் அதற்கும் அலட்டிக்கொள்ளவில்லை. அவளது கண்ணிலிருந்து பறந்த தீப்பொறிக்கும் பயப்படவில்லை. தனது தட்டிலிருந்த தோசையைப் பிய்த்துச் சாப்பிட ஆரம்பித்தவன் உணவு பரிமாறுபவரை அழைத்து

“அண்ணா! இந்த ப்ளேட்டை எடுத்துட்டுப் போயிடுங்க” என்று சொல்லிவிட்டுச் சாப்பாட்டில் கவனமாக மதுரவாணி சாப்பிடும் போது சண்டையிடுவது அன்னத்தை அவமதிப்பதற்கு சமம் என்பதால் வாயை மூடிக்கொண்டு உள்ளுக்குள் குமுறியபடி அவன் சாப்பிட்டு முடிக்கும் தருணத்துக்காக காத்திருந்தாள்.

இது வரை யாரும் அவளைக் கட்டுப்படுத்தியதோ அவளுக்குப் பிடிக்காததைச் செய்யும்படி கட்டாயப்படுத்தியதோ இல்லை. ஆனால் இவன் யாரோ ஒரு மூன்றாவது மனிதன் எப்படி தனக்குக் கட்டளையிடலாம் என கொந்தளித்தவள் அதை வெளிக்காட்ட முடியாத தனது இயலாமையை எண்ணி எரிச்சலுற்றாள்.

மதுசூதனன் தோசையை ரசித்து ருசித்துச் சாப்பிட்டவன் கை கழுவி விட்டு வரவும் வெடிக்க ஆரம்பித்தாள் அவள்.

“நான் சென்னைக்குப் போகணுமா இல்லயானு டிசைட் பண்ண நீ யாருடா? எவ்ளோ தைரியம் இருந்தா கார்ல என் கிட்ட அப்பிடி சொல்லிருப்ப? என் கால் போன போக்குல போவேனே தவிர நான் லவ்டேலுக்கு உன் கூட வரமாட்டேன்… உன்னால முடிஞ்சத பாத்துக்கோ” என்று சொல்லிவிட்டு உண்மையாகவே அவள் விறுவிறுவென நடக்க ஆரம்பிக்க மதுசூதனனுக்கு இவ்வளவு நேரம் இருந்த பொறுமை காற்றில் பறந்துவிட்டது.

அவள் முன்னே சென்று வழி மறிப்பது போல நின்றவன் “ஒழுங்கா போய் கார்ல ஏறு! இல்லனா நானே தூக்கிட்டுப் போய் கார்ல உக்கார வச்சிடுவேன்” என்று சொல்ல அவள் ஏளனமாய் உதட்டை வளைத்துவிட்டு அவன் கையைத் தட்டிவிட்டு முன்னேறிச் செல்ல ஆரம்பித்தாள்.

“சொல்லிக்கிட்டே இருக்கேன்… உன் இஷ்டத்துக்குப் போனா என்ன அர்த்தம்?” என்றபடி அவள் பின்னே ஓடி வந்தவன் சொன்னபடி அவளைக் கைகளில் தூக்கிக் கொள்ள மதுரவாணி திடுக்கிட்டுப் போனாள்.

“மரியாதையா இறக்கிவிடு… இல்லனா நீ என்னை கிட்னாப் பண்ணுறேனு நான் கத்துவேன்”

“உன்னால எவ்ளோ கத்த முடியுமோ கத்து! எவன் என்னைக் கேள்வி கேக்குறான்னு நானும் பாக்குறேன்”

அவனது அலட்சியமான பேச்சு அவளுக்குச் சினமூட்ட “யாராவது வாங்களேன்! இவன் என்னை கிட்னாப் பண்ணிட்டுப் போறான்” என்று அவள் நிஜமாகவே கத்த ஆரம்பிக்க மதுசூதனனின் நல்லநேரம் மோட்டலில் அவ்வளவாக கூட்டம் இல்லை.

மீதமிருந்தவர்களும் இது ஏதோ காதலர்களின் சண்டை என எண்ணி கண்டுகொள்ளாது போய்விட மீண்டும் அவளைக் காரில் அமரவைத்துக் கதவை அடைத்தவன் ஓட்டுனர் இருக்கையில் வந்து அமர்ந்து “கிட்னாப்பிங்காம்ல… ஆளையும் மூஞ்சியையும் பாரு” என்று கேலி செய்தவண்ணம் காரை ஸ்டார்ட் செய்தான்.

மதுரவாணி மீண்டும் தொடங்கிய இடத்துக்கே வந்துவிட்டதை உணர்ந்து அதற்கு காரணமானவனைப் பார்க்க விருப்பமற்று வெளியே வெறிக்க ஆரம்பித்தாள். மதுசூதனன் அவளது கோபத்தை ரசித்தபடியே சாலையில் கண் பதித்து காரை லவ்டேலை நோக்கிச் செலுத்தினான். சிலரது பிடிவாதங்களும் கோபங்களும் கூட கொள்ளை அழகு தான்! நமக்குப் பிடித்தவர்களாக மனதுக்கு நெருங்கியவர்களாக அவர்கள் இருக்கும் பட்சத்தில்!

அலை வீசும்🌊🌊🌊