🌊 அலை 17 🌊
மலரைச் சுற்றும் தேனியின் ரீங்காரம்
தாயைத் துளைத்தெடுக்கும்
குழந்தையின் கேள்விக்கணை
உறக்கத்தில் நாசியைத் தீண்டும்
காபியின் நறுமணம்
இவை போலத் தான்
நீ எனக்குக் கொடுக்கும்
அன்புத்தொல்லைகள்!
மதுரவாணி தயக்கத்துடன் ரேவதியை ஏறிட்டவள் “உங்களுக்கு என் மேல கோவம் இருக்கும் ஆன்ட்டி… ஆனா எனக்கு வேற வழி தெரியல… அதான் வீட்டை விட்டு வந்துட்டேன்… ப்ளீஸ் ஆன்ட்டி! அப்பா அண்ணா யாருக்கும் நான் இங்க இருக்கிறது தெரிய வேண்டாம்… ப்ளீஸ்” என்று அவரது கையைப் பற்றிக் கொள்ள ரேவதிக்குத் தர்மசங்கடமாய் போய்விட்டது.
பெண்பிள்ளையைக் காணாது அங்கே மதுரவாணியின் வீட்டினர் வருந்துவதை நேரில் பார்த்த பின்னரும் அவரால் எப்படி இந்த விசயத்தை நதியூருக்குச் சொல்லாமல் இருக்க முடியும்!
ஆனால் மதுரவாணியோ “நீங்க சொன்னிங்கனா கார்த்தி அண்ணாவும் சரவணன் அண்ணாவும் வந்து என்னை ஊருக்குக் கூட்டிட்டுப் போயிடுவாங்க… அப்புறம் என்னோட லை…. லவ்வுக்கு என்ட் கார்ட் போட்டுருவாங்க… உங்களுக்குத் தெரியும்ல நான் கார் டிரைவிங் கத்துக்கிறப்போவே அப்பா நம்ம சாதி சனத்துல உள்ளவனோட டிரைவிங் ஸ்கூல்ல தான் கத்துக்கணும்னு அடம் பிடிச்சாரு… வெறும் டிரைவிங்குக்கே அப்பிடினா கல்யாணத்துக்கு எவ்ளோ பிடிவாதமா இருப்பாருனு யோசிச்சுப் பாருங்க ஆன்ட்டி” என்று சொல்லவும் ரேவதிக்கும் ரத்தினவேல் பாண்டியனின் குணம் கண் முன் வந்து சென்றது.
கட்டாயம் மதுரவாணியின் காதலுக்கும் அதே காரணத்தைச் சொல்லி தடுக்கப் பார்க்கும் அபாயம் உள்ளது. அவர்களால் ஜாதி என்ற கட்டுப்பாட்டிலிருந்து அவ்வளவு எளிதாக மீளமுடியாது என்பதுவும் ரேவதிக்குத் தெரியும். இப்போது பார்க்கும் போது மதுரவாணியின் நிலை தான் கவலைக்கிடமாகத் தோன்றியது அவருக்கு.
அவளது சிகையை வருடியவாறு “நான் ரத்தினவேல் அண்ணனுக்கு நீ இங்க இருக்கிற விசயத்தைச் சொல்ல மாட்டேன்மா… ஆனா நீங்க ரெண்டு பேரும் சீக்கிரம் இந்த விசயத்தை வீட்டுல சொல்லித் தான் ஆகணும்… வாழ்க்கை முழுக்க கல்யாணம் பண்ணிக்காம வெறுமெனே காதலிச்சிட்டே இருக்கிறது நம்ம கலாச்சாரத்துக்குச் சரிபடாதுடா!” என்றவரின் பேச்சில் மதுரவாணிக்குக் கண்ணீர் வந்துவிட்டது.
நியாயப்படி அவர் அவள் மீது கோபப்பட்டிருக்க வேண்டும். கொஞ்சம் வேறு மாதிரி பெண்மணி என்றால் சாபமே கிடைத்திருக்கும். ஆனால் அப்படி எதுவும் செய்யாமல் தனது எதிர்காலம் குறித்துக் கவலைப்படும் ரேவதி அவளுக்கு விசாலாட்சியை நினைவுபடுத்தினார்.
கண்ணீரைக் கட்டுப்படுத்திக் கொண்டவள் “சீக்கிரமே சொல்லிடுவேன் ஆன்ட்டி! நான் வீட்டை விட்டு வந்ததே அப்பிடியாச்சும் அவங்க மனசு மாறாதானு பாக்கத் தான்” என்று சொல்ல அப்போது தான் மதுசூதனனுக்கு அவள் பெற்றோருக்குத் தெரியாவண்ணம் அக்காவின் வீட்டில் இருக்கிறாள் என்பது புரிந்தது.
இப்போது அவளுக்காக அவன் பரிந்து பேசியே ஆகவேண்டும்! ரேவதியைக் கனிவுடன் நோக்கி
“நாங்க சீக்கிரமாவே எங்க வீடுகள்ல சொல்லிடுவோம்மா… நீங்க எங்களைப் புரிஞ்சுகிட்டு இவ்ளோ தூரம் எங்களுக்காக யோசிக்கிறதை நினைச்சா ரொம்ப சந்தோசமா இருக்கு” என மதுரவாணியின் உண்மைக்காதலன் போலவே அவன் பேச மதுரவாணிக்கும் ஸ்ரீரஞ்சனிக்கும் மயக்கம் வராத குறை தான்!
அப்போது பார்த்து மதுசூதனனின் குடும்பமும் வந்து சேர அவன் மதுரவாணியைச் சங்கவியின் தங்கை என்றளவில் அறிமுகப்படுத்திவிட்டு ஸ்ரீரஞ்சனி, ஸ்ரீதர், ரேவதியை அவளது உறவினர்கள் என அறிமுகப்படுத்தவும் மைதிலியும் ராமமூர்த்தியும் புன்னகையுடன் அவர்களிடம் பேச ஆரம்பித்தனர்.
பெரியவர்கள் அனைவரும் அன்றைய தினம் முருகனது அலங்காரத்தைச் சிலாகிக்க ரேவதி சுவாமி தரிசனம் காண அவர்களுடன் சென்றுவிட இளையவர்கள் மட்டும் தனித்துவிடப்பட்டனர்.
நால்வரும் எதுவுமே பேசிக்கொள்ளாது நேரத்தைக் கடத்த அதே நேரம் முருகனை ஆசை தீர வழிபட்டுவிட்டு யாழினியும் சங்கவியும் ராகினியுடன் திரும்பினர். மூவரும் அங்கே மண்டபத்தில் அமர்ந்திருந்த ஸ்ரீரஞ்சனியையும் மதுரவாணியையும் கண்டுவிட்டு “சாமி கும்பிடாம கன்னத்துல கைவச்சு உக்காந்திருக்கிறத பாரு!” என்று குறைபட்டபடி அவர்களை நெருங்கினர்.
தமக்கையரைக் கண்டதும் இருவரும் எழுந்திருக்க சங்கவி இருவருக்கும் விபூதி பூசிவிட்டவள் “ரெண்டு பேரும் கோயிலுக்கு வந்தது தான் மிச்சம்.. சாமிய கும்பிட்ட மாதிரியே இல்ல” என்று சொல்லிக் கொண்டே திரும்பிய போது பின்னே நின்ற ஸ்ரீதரைப் பார்த்துவிட்டு அதிர்ச்சியில் சிலையானாள்.
யாழினியின் நிலையும் அவ்வாறே! அந்நேரம் ரேவதியும் ராமமூர்த்தி மைதிலி தம்பதியினருடன் திரும்பவே சங்கவிக்கு விரதம் இருந்த சோர்வும் ஸ்ரீதரையும் ரேவதியையும் ஒன்றாய் பார்த்த அதிர்ச்சியுமாய் சேர்ந்து மயக்கம் வந்துவிட்டது.
அனைவரும் பதறிவிட யாழினியோ “அவளுக்கு விரதம் இருந்த டயர்ட்ல மயக்கம் வந்துடுச்சுனு நினைக்கேன்… கவி எழுந்திருடி” என்று கன்னத்தைத் தட்டிவிட்டு ராகினியிடம் தண்ணீரை வாங்கி முகத்தில் தெளிக்க மயக்கம் கலைந்து எழுந்தாள் சங்கவி.
தன் எதிரே நின்றிருந்த ரேவதியிடமும் ஸ்ரீதரிடமும் முகம் கொடுத்துப் பேச சங்கடப்பட்டவளை மைதிலி வேறு விதமாக எண்ணிக் கொண்டார்.
“பாவம்! உடம்புல விரதம் இருக்கிற அளவுக்கு வலு இல்ல… அதான் மயக்கம் வந்துடுச்சு போல… மெதுவா எழுந்திருடா” என்று சங்கவி எழுந்திருக்க உதவி செய்த மைதிலி யாழினியிடம்
“இந்தக் கூட்டத்துல இருந்தா இன்னும் மயக்கம் தான் வரும்… நீங்க வீட்டுக்குக் கூட்டிட்டுப் போயிடுங்கம்மா… முருகனைத் தான் தரிசனம் பண்ணியாச்சே” என்று சொல்ல அவர்களுக்கும் அதுவே சரியென்று பட மற்றவர்களிடம் சொல்லிக் கொண்டு கிளம்பினர்.
அவர்கள் கிளம்பிச் செல்லும் போது மதுசூதனனுக்கு ஏனோ மதுரவாணி தன்னைக் கண்டுகொள்ளாது போனது மனதுக்கு நெருடலாக இருந்தது. காரணம் தான் புரியவில்லை!
அவன் முகம் வாடுவதைக் கண்ட வைஷாலியோ “அந்த செல்பிபுள்ள உன்னைக் கண்டுக்காம போனதுல வருத்தப்படுறியாடா அண்ணா?” என்று கேட்க
“ப்ச்.. அப்பிடிலாம் எதும் இல்ல… எல்லார் கிட்டவும் போயிட்டு வர்றேனு சொன்னாளே, என்னை மட்டும் கண்டுக்காம போறாளேனு சின்ன எரிச்சல் அவ்ளோ தான்” என்று தோளைக் குலுக்கியவன் ஸ்ரீதரிடமும் அவன் அன்னையிடமும் சொல்லிக் கொண்டு குடும்பத்தினருடன் கிளம்பினான்.
கௌதமும் திலிப்பூம் அவனது முகத்தில் உண்டான மாற்றங்களை மனதில் குறித்துக் கொண்டு அவர்களும் ஸ்ரீதரிடம் சொல்லிக் கொண்டு கிளம்பினர்.
ரேவதி ஸ்ரீதரிடம் “மதுரா காதலிக்கிற பையனோட குடும்பம் நல்ல மாதிரியா தெரியுறாங்க ஸ்ரீ! அந்தப் பையனும் பாக்குறதுக்குக் கண்ணுக்கு லெட்சணமா இருக்கான்… ஆனா என்ன வேலை பண்ணுறானு கேக்க மறந்துட்டேனே” என்று என்னவோ அவர் தான் மதுரவாணியைப் பெற்றவர் போல கவலைப்பட அவரது மகன் அன்னையின் வெகுளித்தனத்தை எண்ணி மனதுக்குள் சிரித்துக் கொண்டான்.
அவரைப் பேசி சமாளித்தபடியே காரை எடுத்தவன் கோயிலில் இருந்து வீட்டுக்குக் கிளம்பினான்.
****************
நதியூர்…
அழகம்மை திருச்செந்தூர் முருகனைத் தரிசித்துவிட்டு சங்கரபாண்டியனின் காரிலேயே வீட்டுக்குத் திரும்பிவிட்டார். வந்தவர் இலை விபூதி பிரசாதத்தை மருமகளுக்கும் பேத்திகளுக்கும் அளித்துவிட்டு சங்கரபாண்டியனிடமும் லோகநாயகிக்குக் கொடுக்கும் படி நீட்டினார்.
லோகநாயகியும் சங்கரபாண்டியனும் அவர்களின் வீட்டுக்குச் சென்று அன்றோடு இரு வாரங்களாகிறது! எவ்வளவு நாள் தான் வீட்டைத் தூசி அடையப் போடுவது என்ற அழகம்மையின் அதட்டலால் தான் அது நிகழ்ந்தது.
அப்போது ஜோதிடர் கதிரவன் வரவும் முகம் கொள்ளா புன்னகையுடன் “வாங்கய்யா! இப்போ தான் திருச்செந்தூர் போயிட்டு வந்து நிக்கிறேன்… நீங்களும் வந்திட்டிய… உக்காருங்க… என்ன சாப்பிடுறிய?” என்று விருந்தோம்பலை ஆரம்பித்தார்.
ஜோதிடரை ஏன் அழைத்திருக்கிறார் என்று புரியாத வீட்டுமனிதர்கள் குழப்பமாய் அவரை நோக்க கூடத்தில் சம்மணமிட்டு அமர்ந்தபடி கதிரவனையும் அமரச் சொன்ன அழகம்மை மருமகளிடம்
“நம்ம மதுராவோட ஜாதகத்தை எடுத்துட்டு வாத்தா” என்று ஏவ விசாலாட்சி பூஜையறையை நோக்கிச் செல்லவே பிரபாவதியும் லீலாவதியும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். பின்னர் வந்தவருக்கு குடிக்க ஏதாவது கொண்டு வருகிறேன் என்று சமையலறைக்குச் சென்று திரும்பியவர்கள் மோர் டம்ளர்களுடன் திரும்பினர்.
அந்தப் பகுதியில் கந்த சஷ்டி என்றால் வழக்கமாக வானம் மப்பும் மந்தாரமுமாக இருக்கும். சில நேரங்களில் மழை தாரை தாரையாக ஊற்றும். ஆனால் அன்றைய வருடம் புழுக்கமாக இருக்கவே அனைவருக்கும் ஆச்சரியம்!
“வானமும் நம்மள ஏமாத்துது! சஷ்டி அன்னைக்கு எந்த வருசம் மழை பெய்யாம இருந்துருக்கு? இந்த வருசம் மழை வர்றதுக்கு அறிகுறியே தெரியலயேத்தா!” என்று அங்கலாய்த்தபடி ஜோதிடர் மோர் டம்ளரை வாங்கிக் கொண்டார்.
டம்ளர் காலியானதும் மதுரவாணியின் ஜாதக கட்டங்களை ஆராய்ந்தவர் “இந்தப் பொண்ணுக்கு அவ இஷ்டம் போல தான் வாழ்க்கை அமையும்… அவ மனசுக்குப் பிடிச்சவனைத் தான் அவ கல்யாணம் பண்ணிக்கணும்னு அவ ஜாதக கட்டம் சொல்லுது… இப்போ அவளுக்கு இன்னும் வியாழநோக்கு வரலத்தா! அதுக்கு இன்னும் ஒரு வருசம் இருக்கு… அதனால கல்யாண விசயத்துல அவசரப்படாதிய” என்று சொல்லவே அழகம்மை யோசனையுடன் அவர் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருந்தார்.
“இந்தப் பொண்ணுக்கு ஏழரை சனி முடியுற நேரம்… கொஞ்சம் கஷ்டம் குடுக்கும்… ஆனா சனி பகவான் முடிஞ்சு போறப்போ அவளுக்கு நல்லதை அள்ளிக் குடுத்துட்டுப் போவாரு… சனிக்கிழமை தோறும் நம்ம ஸ்ரீவைகுண்டம் சிவன் கோயில்ல சனீஸ்வரனுக்கு எள் தீபம் ஏத்துங்க… எள் தீபம்னா எள்ளை எரிச்சு ஏத்துற தீபம் இல்லத்தா.. எள்ளுல மகாலெட்சுமி வாசம் பண்ணுறதா ஐதீகம்… எள்ளுல இருந்து எடுத்த சுத்த நல்லெண்ணெய்ல சனீஸ்வரனுக்குத் தீபம் ஏத்தணும்… அப்பிடி செஞ்சா ஏழரை சனியால அவளுக்குப் பெருசா எந்தக் கெட்டதும் நடக்காது… மத்தபடி இந்த ஜாதகம் ரொம்ப யோகம் உள்ளது” என்று பரிகாரம் சொல்லிவிட்டு அவரது தட்சணையைப் பெற்றுக் கொண்டு விடை பெற்றார்.
மதுரவாணி காணாமல் போனதை ஊருக்குள் தெரியாமல் பார்த்துக் கொண்ட ரத்தினவேல் பாண்டியன் மகள் ஊட்டியிலுள்ள பெரியமகளின் வீட்டுக்குச் சென்றிருப்பதாகச் சொல்லிவைத்திருந்தார். அவளுக்கும் ஸ்ரீதருக்கும் திருமணம் பேசியது ஊர் முழுவதும் தெரிந்த விசயம் தான்! கூடவே ரத்தினவேல் பாண்டியன் வீட்டுக்கு அடிக்கடி சங்கவியும் யாழினியும் வரப் போக இருந்ததால் பெரிதாக யாரும் வம்பு பேசவில்லை.
சொன்னவர் ஒரு எட்டு அங்கே போய் பார்த்திருந்தால் எல்லா குழப்பமும் தீர்ந்திருக்கும். ஆனால் வீட்டுப்பெண் காணாமல் போனது சம்பந்திவீடு வரைக்கும் தெரிய வந்தால் அண்ணன் மகளின் வாழ்க்கை என்னவாகும் என்ற யோசனையே அவரை அமைதியாக்கி விட்டது.
மற்றபடி அவரது ஏவலாட்கள் அனைவருமே அவரது நிலத்திலும், ரைஸ் மில்லிலும், தோப்புகளிலும் பணிபுரிபவர்கள். ரத்தினவேல் பாண்டியனுக்கு விசுவாசமாய் இருப்பவர்கள் என்பதால் மதுரவாணியைத் தேடும் படலத்தை மிகவும் இரகசியமாகவே வைத்துக் கொண்டனர்.
என்ன தான் ஊராருக்குத் தெரியாவிட்டாலும் வீட்டு மனிதர்களால் அவள் கிடைக்கும் வரை இயல்பாக இருக்க முடியாதல்லவா! அதனால் தான் ஒரு புறம் விரதம், கோயில் வழிபாடு என்று அலைந்த அழகம்மை அவரது நம்பிக்கைக்காக மதுரவாணியின் ஜாதகத்தைப் பார்த்து பரிகாரத்தையும் கேட்டுக் கொண்டார்.
வீட்டுப்பெண்களுக்கும் சங்கரபாண்டியனுக்கும் ஜோதிடர் சொன்ன விசயங்கள் மனதுக்கு ஆறுதலைக் கொடுத்தது. அவர் லோகநாயகி தனியாக இருப்பார் என்றவர் மகள்களிடம் சொல்லிக் கொண்டு கிளம்பினார்.
****************
மதுசூதனன் அவன் நண்பர்களுடன் வீட்டிற்கு வந்துவிட்டான். வந்த நிமிடத்திலிருந்து மற்றவர்களின் பேச்சில் கலந்து கொள்ளாது ஏதோ யோசனையுடன் அமர்ந்திருந்தவனை திலீப் வைஷாலிக்குக் காட்டினான்.
“உன் அண்ணன் அந்தப் பொண்ணு மதுராவ கோயில்ல வச்சு பாத்ததுல இருந்து சரியில்ல… என்னன்னு விசாரிப்போமா?”
அவன் இரகசியம் பேசுவதை ராமமூர்த்தி கவனித்து என்னவென்று வினவ திலீப் அவரது காதில் இரகசியம் போல சமாச்சாரத்தைச் சொல்ல அவரும் மகனை உற்றுநோக்கிவிட்டு “நீ சொல்லுறது சரி தான்பா… இன்னைக்கு மது சரியில்லையே” என்று இராகமாய் இழுக்கவும் மகனது கவனம் தந்தையின் பக்கம் திரும்பியது.
மைதிலி குடும்பத்தினரின் பேச்சில் காதைப் பதித்தபடி அங்குமிங்கும் நடமாடியவர் சமையலறையில் இருந்தபடியே “மது இங்க கொஞ்சம் வாடா கண்ணா!” என்று அழைக்கவும் மதுசூதனன் அங்கே சென்றுவிட ஹாலில் மற்ற நால்வரும் இரகசியம் பேச ஆரம்பித்தனர்.
சமையலறைக்கு வந்த மகனை விசாரிக்கத் தொடங்கிவிட்டார் மைதிலி. கோயிலில் வைத்து மகனின் பார்வை அந்தப் பெண் மதுரவாணியை ஆர்வத்துடன் நோக்குவதைக் கவனிக்க அவருக்கு இரண்டு கண்கள் போதுமே!
“அந்தப் பொண்ணு மதுரா பாக்குறதுக்கு லெட்சணமா அழகா இருந்தால்ல மது” என்றவரின் பேச்சுக்கு உம் கொட்டினான் அவரது சீமந்த புத்திரன்.
“பொண்ணு பாக்குறதுக்கு நம்ம ஊர்ப்பக்கம் மாதிரி இல்லயே”
“அவ சவுத் தமிழ்நாடும்மா… திருநெல்வேலி தூத்துக்குடி பக்கம்” என்று படபடத்தவன் அன்னையின் குறுகுறு பார்வையை உணர்ந்தவனாய் “அ…அது வந்து அவங்க ஊர் தூத்துக்குடி பக்கம்னு சங்கவி மேம் சொல்லிருக்காங்க” என்று சமாளித்து வைத்தான்.
“ஓ! இங்க எதுக்கு வந்திருக்காளாம்?” என்று கேட்டவரிடம் திருமணம் பிடிக்காமல் வீட்டை விட்டு ஓடிவந்துவிட்டாள் என்றா சொல்ல முடியும்!
“அவ சும்மா ஹாலிடேக்காக அவங்க அக்கா வீட்டுக்கு வந்திருக்காம்மா… ஏன் கேக்குறிங்க?”
“உன் பெரியம்மா சங்கருக்கு திருநெல்வேலி சைடுல பொண்ணு பாக்கலாம்னு இருக்காடா… நீ சங்கவி நம்பர் சொல்லு.. நான் அவளுக்குப் போன் பண்ணி மதுராவுக்கு இப்போ வரன் பாக்காங்களானு விசாரிச்சுக்கிறேன்… கண்ணுக்கு லெட்சணமா ஒரு பொண்ணு இருக்கப்போ ஏன் மேட்ரிமோனில ரிஜிஸ்டர் பண்ணிக் கஷ்டப்படணும்?” என்று சொல்லி மகனுக்கு அதிர்ச்சியளித்தார் மைதிலி.
மதுசூதனன் தனது அதிர்ச்சியை மறைத்துக்கொண்டு “ஏன்மா இங்க பொண்ணே இல்லனு பெரியம்மா எதுக்கு அவ்ளோ தூரத்துல பொண்ணு பாக்குறாங்க? அந்த மதுரவாணியோட ஃபேமிலி ரொம்ப ஆர்த்தடாக்ஸ்மா… அவங்க கொஞ்சம் ஜாதி பாக்குற ஆளுங்கனு சங்கவி மேம் சொல்லிருக்காங்க…” என்று இழுக்கவும்
“டேய்! இந்தக் காலத்துல யாருடா அதை பாக்குறாங்க? நீ சும்மா உளறாத! சங்கவி நம்பர் மட்டும் குடு” என்று கிடுக்குப்பிடி போட அவன் கொடுத்தால் தானே!
என்ன செய்வது என்று யோசித்துவிட்டு வேறுவழியின்றி மதுரவாணியின் குணநலன்களைப் புட்டு புட்டு வைத்தவன் “அந்தப் பொண்ணு சரியான அடமண்ட்! சொல்லுற பேச்சைக் கேக்கவே மாட்டா” என்று முடிக்கவும் மைதிலி அவன் சொல்வதற்கு ஆமாம் சாமி போட்டுக் கேட்டுக் கொண்டவர்
“அதுவும் சரி தான்! இவ்ளோ திமிரு பிடிச்ச பொண்ணு நம்ம குடும்பத்துக்குச் செட் ஆகாது… ஹூம்… நானும் சங்கருக்குச் செட் ஆகலனா அந்தப் பொண்ணை உனக்குக் கேக்கலாம்னு நினைச்சேன்… சரி விடு… அந்த ராங்கிக்காரி நம்ம குடும்பத்துக்கு வேண்டாம்” என்று ஒன்றும் தெரியாதவரைப் போல சொல்லி விட்டு நகர மதுசூதனன் தன் தலையில் அடித்துக் கொண்டபடி அங்கிருந்து வெளியேறி அவனது அறையை அடைந்தான்.
அங்கே சென்று கம்ப்யூட்டரின் திரையை உயிர்ப்பித்தவனின் மனமெல்லாம் மதுரவாணி வசம் இருந்தது. இது என்ன சிறுபிள்ளைத்தனம் என தன் மனதை அதட்டியவன் ஏதோ ஒரு முறை அவளது முகம் தெரியாததால் உண்டான குறுகுறுப்பு இப்போது அகன்றுவிட்டது.
இனியும் இரயில் நிலையம், பச்சைத்தாவணி என்று பைத்தியக்காரத்தனம் செய்யாது வேலையில் கவனம் செலுத்த வேண்டும் என தனக்குத் தானே சொல்லிக் கொண்டான்.
கூடவே இருந்து உயிருக்கு உயிராய் நேசிப்பதாய் சொன்னவளையே தனது மனதால் சீக்கிரம் மறந்துவிட முடிந்தது என்றால் மதுரவாணியோடு அவனுக்குச் சொல்லிக் கொள்ளும்படி பழக்கம் கூட இல்லையே!
எனவே சீக்கிரம் தனது மதியிலிருந்து மதுரவாணியின் பெயர் மறைந்துவிடும் என்று எண்ணியவன் இன்னும் இரு தினங்களில் நடக்கவிருக்கும் யுவஸ்ரீயின் கல்யாண ஏற்பாடுகளில் தனது மனதைத் திருப்பினான்.
அதே நேரம் மதுரவாணி சங்கவியின் முன்னே தலைகுனிந்தபடி நின்றிருந்தாள். கூடவே ஸ்ரீரஞ்சனியும் நின்றிருக்க ராகினி இருவரையும் குறுகுறுவென பார்த்தபடி படுக்கையில் அமர்ந்திருந்த சங்கவியின் வலது புறத்தில் சாய்ந்திருந்தாள். யாழினி சூடாய் ஹார்லிக்ஸ் கொண்டு வந்தவள் சங்கவியிடம் நீட்ட அவளோ
“ப்ச்! இப்போ ஹார்லிக்ஸ் ஒன்னு தான் குறைச்சல்… இவங்க பண்ணுன திருவிளையாடலைக் கேட்டதுக்கு அப்புறம் எனக்கு இந்த ஜென்மத்துல மயக்கம் தெளியாது போல… ஏன்டி இப்பிடி பண்ணுனிங்க? பொய் மேல பொய்யா சொல்லிவச்சு.. ஐயோ! எனக்கு மறுபடியும் தலை சுத்துதே” என்று தலையைக் கையால் தாங்கிக் கொண்டாள்.
மதுரவாணி சும்மா இராமல் “என்ன கவிக்கா நீ பொன்னியின் செல்வன் வானதியை விட மோசமா இருக்க! எதுக்கெடுத்தாலும் பொசுக் பொசுக்குனு மயங்கி விழுற! வாழ்க்கைல என்ன நடந்தாலும் தில்லா இருக்கணும்கா” என்று தமக்கைக்குத் தைரியம் சொன்னவள், நான்கு பெண்களும் முறைக்க ஆரம்பிக்கவும்
“இப்போ எதுக்கு முறைக்கிறிங்க? நானும் மதுவும் லவ்வர்ஸ்னு நம்ம வீட்டுல தெரிஞ்சா தானே பிரச்சனை! ஸ்ரீதரும் ரேவதி ஆன்ட்டியும் அப்பிடி நினைச்சா நமக்கு எந்தப் பிரச்சனையும் கிடையாதுல்ல… அவங்க ரெண்டு பேருமே நான் சொன்ன காரணத்தை மனசுல வச்சுட்டு கண்டிப்பா இந்த லவ் மேட்டரை நம்ம வீட்டுல ஓப்பன் பண்ண மாட்டாங்க… நானும் எவ்ளோ சீக்கிரம் முடியுதோ அவ்ளோ சீக்கிரம் இந்த விக்ரம் எருமை மாட்டை கான்டாக்ட் பண்ணி சென்னைக்குப் போயிருவேன்…
அவனுக்கு நேத்து நைட் மெயில் அனுப்பிருக்கேன்… அதுக்கு மட்டும் அவன் பதில் சொல்லலனா டேரக்டா சென்னைக்கு வந்து அவனை ரவுண்ட் கட்டிருவேனு சொல்லிருக்கேன்.. பையன் அதுக்கே பயந்துருப்பான்… இன்னைக்கு நைட் அவன் கிட்ட இருந்து மெயில் வரும்… அவனோட கம்பெனில வேகன்சி இல்லனாலும் வேற கம்பெனில ட்ரை பண்ணிப் பாருனு சொல்லணும்… வேலை கிடைச்சதும் லவ்டேலுக்கு ஒரு பெரிய டாட்டா போட்டுட்டு நான் சென்னைக்குக் கிளம்பிடுவேன்” என்று நம்பிக்கையாய் உரைத்தாள் அவள்.
அவள் சொல்வதும் சரி தான் என பெண்கள் நால்வரும் அப்போதைக்குச் சமாதானமாக ஆரம்பித்தனர்.
அவர்களைச் சமாதானம் செய்தவளுக்குத் தான் தனது எதிர்காலம் என்னவென்பது சுத்தமாகப் புரியவில்லை. குருட்டுத்தைரியத்துடன் பெட்டியைத் தூக்கிக் கொண்டு இங்கே வந்துவிட்டாள். அவளது கையிருப்பு கரைவதற்குள் அவள் சென்னைக்குச் சென்று ஒரு வேலையைத் தேடியே ஆகவேண்டும். அனைத்துக்கும் விக்ரமிடம் இருந்து வரும் மின்னஞ்சலில் தான் விடை தெரியும் என அவனது மின்னஞ்சலுக்காக காத்திருக்க ஆரம்பித்தாள் மதுரவாணி. வாழ்க்கையில் சில தருணங்களில் அடுத்து என்ன என்பது புரியாத சூனியமாக இருக்கும். எதிர்காலம் என்ற ஒன்றே இல்லாதது போல காண்பதெல்லாம் இருளாகத் தெரியும். அப்போது வாழ்க்கை குறித்த எந்த முடிவும் எடுக்காமல் இருப்பதே சிறந்தது. ஏனெனில் பெரும்பாலான தவறான முடிவுகள் அக்காலக் கட்டத்தில் தான் எடுக்கப்படும்.
அலை வீசும்🌊🌊🌊