🌊 அலை 16 🌊
Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels
கட்டுப்பாடின்றி கரைபுரண்டோடும்
என் பிரியத்திற்குரிய நதியவளே
உனை கரையிட்டுத் தடுக்க விரும்பாது
என் அகண்டக் கரங்களை விரித்து
உனை ஆவலுடன் அணைக்க காத்திருக்கும்
உன் அன்பு சாகரன் நான்!
எல்க் மலை பாலதண்டாயுதபாணி திருக்கோயில்…
குன்று இருக்குமிடமெல்லாம் குமரன் இருக்கும் இடம் என்பதற்கிணங்க எல்க் மலை எனும் குன்றில் குறிஞ்சிக்கடவுளான முருகனின் நாற்பது அடி சிலையுடன் பச்சைப்பசேல் என்ற ரம்மியமான சூழலில் அமைந்திருந்தது அத்திருத்தலம். எல்க் எனும் மான் இனங்கள் மூலம் இம்மலைக்கு இப்பெயர் வந்தது என்று கூறுவர்.
அன்றைய தினம் கந்த சஷ்டி என்பதால் மக்கள் கூட்டம் அலை மோதியது.
அந்தக் கூட்டத்தில் நீந்தி கோயில் பிரகாரத்தை நோக்கி நடை போட்டுக் கொண்டிருந்தனர் மதுசூதனனின் குடும்பத்தினர். கூடவே கௌதமும் திலீபும் சேர்ந்து நடந்து வந்தனர்.
பெரியவர்கள் பக்தி பரவசத்தில் இருக்க திலீப் அவனுடன் நடந்து வந்த வைஷாலியின் காதைக் கடிக்க ஆரம்பித்தான்.
“வீட்டுக்கு வரப் போற மாப்பிள்ளைய இப்பிடி வெயில்ல நடக்க வச்சு பாக்குற குடும்பம்… காதலிக்கிற பையன் வேர்க்க விறுவிறுக்க மூச்சு வாங்க நடந்து வர்றத கண்டுக்காம மேக்கப் கலைஞ்சிடுச்சானு அடிக்கடி போன் செல்பி கேமரால செக் பண்ணிக்குற உட்பி… யாருக்கு இந்தக் கொடுப்பினை கிடைக்கும் சொல்லு”
திலீபின் புஜத்தில் கிள்ளிய வைஷாலி அவனை முறைத்தபடி “சாமிதரிசனம் மட்டும் முடியட்டும்… அதுக்கு அப்புறம் உனக்கு இருக்கு” என்று மிரட்டிவிட்டு அன்னையுடன் போய் சேர்ந்து கொண்டாள்.
கௌதமும் மதுசூதனனும் தங்களைப் பரிதாபமாய் பார்த்த திலீபை கேலியாய் நோக்கியவர்கள் பெருவிரலால் நெற்றியில் கோடிழுத்துக் காட்டிவிட்டு அவன் முதுகில் தட்டிக் கொடுக்க
Copyright©️ezhilanbunovels.com. கதையைத் திருடி PDF போடாதீர்!
“நக்கலு! இருக்கட்டும்டா… உங்களை மிரட்டுறதுக்கும் ஒரு நாள் ஆள்கள் வருவாங்க… அப்போ நானும் இதே மாதிரி ஆணவமா சிரிச்சுக் காட்டுவேன்” என்று அமர்த்தலாய் சொல்லிவிட்டு நெற்றியில் வழிந்த வியர்வையைத் துடைத்தபடி பாதையில் கவனமாய் நடக்க ஆரம்பித்தான்.
அதே நேரம் தான் மதுரவாணியும் தனது சகோதரிகள் மற்றும் தோழியருடன் கோயில் பிரகாரத்தைச் சுற்றிக் கொண்டிருந்தாள். அங்கே இருந்த நாற்பதடி முருகன் சிலையைக் கண்டதும் வழக்கம் போல
“உங்களுக்கும் எனக்கும் என்ன வாய்க்கா தகறாரா? என்ன நீங்க ரெண்டு ஒய்ப்ஸ் வச்சிருக்கிறதுல எனக்குக் கொஞ்சம் மனவருத்தம்… மத்தபடி உங்களோட அருள் எனக்குக் கட்டாயம் வேணும்” என்று சொல்லிவிட்டுப் பக்தி பரவசத்துடன் கன்னத்தில் போட்டுக் கொண்டவள் கண் மூடி வேண்ட ஆரம்பித்தாள். வேறு என்ன! விக்ரம் என்ற எருமைமாடு சீக்கிரம் தனக்குப் போன் செய்ய வேண்டும் என்பது தான் அவளது வேண்டுதலின் சாராம்சம்!
ஆனால் முருகன் அதை ஏற்றுக்கொண்டாரா இல்லையா என்பது அவருக்கு மட்டுமே வெளிச்சம்!
வேண்டியதற்கு பின்னர் இக்கால இளைஞி என்பதற்கு அடையாளமாய் வழக்கம் போல செல்பி எடுக்க ஆரம்பித்தாள் மதுரவாணி.
இந்த அழகில் ஸ்ரீரஞ்சனியும் மற்றவர்களும் அவளைக் கவனியாது பேச்சுவாக்கில் முன்னேறிச் சென்றுவிட மதுரவாணியோ இன்னும் செல்பிக்களைச் சுட்டு முடிக்கவில்லை. அவளுக்கு இந்தக் கோயிலில் இடம் தெரியாது என்பது வேறு விசயம்!
அப்போது தான் அந்நிகழ்வு நடந்தது.
நண்பர்களுடன் வந்து கொண்டிருந்த மதுசூதனன் தனது மனதில் பதிந்துவிட்ட பச்சை பட்டு தாவணியை முருகன் சிலைக்கு அருகில் கண்டதும் சந்தோசமா அதிர்ச்சியா என்று தெரியாத இனம்புரியாத உணர்வில் ஸ்தம்பித்து நின்றுவிட்டான்.
அதே வண்ணக்கலவையுடன் ஆயிரம் நபர்கள் ஆடை உடுத்தலாம்; ஆனால் அவர்கள் அனைவருமே அந்த இரயில்நிலையப் பெண்ணாக இருக்க முடியாது என மனசாட்சி அவனுக்கு எடுத்துக் கூறினாலும் இத்தனை நாள் அவள் யார், எப்படி இருப்பாள் என்ற குழப்பத்திலேயே இருந்ததால் மதுசூதனன் தனது மனசாட்சியின் பேச்சைக் கண்டுகொள்ளவில்லை.
நண்பர்கள் அவர்கள் பாட்டுக்கு நடந்து சென்றுவிட அவனோ தனக்கு முதுகு காட்டியபடி பெரிய முருகன் சிலையுடன் செல்பி எடுத்துக் கொண்டிருக்கும் அந்தப்பெண்ணின் முகத்தைக் காணும் ஆவலில் உற்சாகமாய் அவளை நெருங்கிய நொடியில் அவன் கையைப் பிடித்து யாரோ இழுக்க யாரடா இது என்று எரிச்சலுடன் திரும்பியவன் குறும்பு பார்வையுடன் நின்று கொண்டிருந்த தங்கையைக் கண்டதும் முகத்தைச் சீராக்கிக் கொண்டான்.
“என்னடா அண்ணா? அந்தச் செல்பிபுள்ளய சைட் அடிச்சிட்டிருக்கப்போ நான் வந்து டிஸ்டர்ப் பண்ணிட்டேனா?” என்று குறும்பாய் கேட்டவளின் காதுமடலைப் பிடித்துத் திருகியபடியே மீண்டும் பச்சை தாவணி தேவதையைத் தேட அவளோ அங்கிருந்து எப்போதோ பறந்து சென்றிருந்தாள்.
அதற்குள் வைஷாலி “ஆவ்! அண்ணா விடுடா… ஒரு பிள்ளைய சைட் அடிக்க விடலனு உடன்பிறப்போட காதை காவு வாங்குறியே! இது நல்லாவா இருக்கு?” என்று சிணுங்கவும் அவள் காதை விடுவித்தான்.
தாவணிப்பெண்ணைத் தவறவிட்ட ஏமாற்றத்தைத் தங்கையின் கேலியில் சிரித்து மட்டுப்படுத்திக் கொண்டவன் அவளுடன் சேர்ந்து நடக்க ஆரம்பித்தான்.
இவர்களது நிலை இப்படி இருக்க ரேவதியுடன் கோயிலுக்கு வந்து கொண்டிருந்தான் ஸ்ரீதர். ரேவதிக்கு அன்றைய தினம் சோர்வு சற்று அதிகமாக இருக்க கோயிலில் இருந்த பக்தர்கள் கூட்டம் வேறு அவருக்கு அயர்ச்சியை உண்டாக்கியது.
“இவ்ளோ கஷ்டப்பட்டு விரதம் இருந்தே ஆகணுமா? நான் தான் சொன்னேன்ல உங்களுக்குப் பிரஷர் ஃப்ளெக்சுவேட் ஆகும்னு… இப்போ பாருங்க மூச்சு வாங்குது” என்று அக்கறையாய் கடிந்தபடி அவருடன் வந்து கொண்டிருந்த மகனுக்காக அவர் இன்னும் நான்கு நாட்கள் கூட விரதம் இருக்கத் தயார் தான்!
அதைச் சொன்னால் அவரது மைந்தன் ருத்திரமூர்த்தி ஆகிவிடுவான். எனவே அமைதியாய் நடந்தவரிடம் தனக்கு ஒரு போன் கால் வந்திருப்பதால் பேசிவிட்டு வருவதாகச் சொல்லிவிட்டு அவரை ஒரு ஓரமாய் நிற்கச் சொன்னான் ஸ்ரீதர்.
அவருக்கு முதுகு காட்டியபடி போனில் பேசிக்கொண்டிருந்த ஸ்ரீதர் அவர் களைப்பில் மயங்கி சரிவதைக் கவனிக்கவில்லை. ரேவதிக்குக் கண்கள் இருட்டிக்கொண்டு வர காலுக்கு அடியில் பூமி நழுவியது போல மயங்கிச் சரியவிருந்தவரை ஒரு பூங்கரம் வந்து மென்மையாய் தாங்கிக் கொண்டது.
அவரைத் தன் மீது சாய்த்துக் கொண்டு அங்கிருந்த மண்டபத்தில் அமர வைத்துவிட்டு “ஏய் ராகி! போய் யாழிக்கா கிட்ட வாட்டர் பாட்டிலை வாங்கிட்டு வா” என்று ஒரு இளம்பெண் கட்டளையிடும் சத்தம் கேட்க சில நொடிகளில் ஜில்லென்ற தண்ணீர் முகத்தில் படவும் கண் திறந்தார் ரேவதி.
அவரது முகத்தைத் தனது புடவை முந்தானையால் துடைத்துவிட்டு அவரிடம் தண்ணீரை நீட்டினாள் பேரழகுச்சிலையென வீற்றிருந்த ஸ்ரீரஞ்சனி. அவர் தண்ணீரைப் பருகியதும்
“ஆன்ட்டி உங்க கூட யாரும் வரலையா? மயக்கம் வர்ற அளவுக்கு டயர்டா இருக்கிறிங்க, உங்களை தனியாவா விட்டாங்க?” என்று கேட்டவள் பாட்டிலை அவள் அருகில் நின்ற ராகினி வாங்கிக் கொண்டாள்.
ரேவதி களைத்துப் போன முகத்தில் சிறிது புத்துணர்ச்சி தோன்ற “என் பையன் கூட வந்திருக்கான்மா… அவனுக்கு முக்கியமான போன் கால் வந்துச்சுனு பேச போயிருக்கான்” என்று சொல்ல அப்படியா என்று கேட்டபடி திரும்பியவள் அவர்களை நோக்கி வந்த ஸ்ரீதரைக் கண்டதும்
“அடக் கடவுளே! ராமேஸ்வரம் போனாலும் சனீஸ்வரன் விடாது போலயே! இங்கயும் இந்தாளு கிட்ட நான் திட்டு வாங்கணுமா?” என்று புலம்பியவள் அவன் அவர்களிடம் வந்து அவளைக் கேள்வியாய் நோக்கிவிட்டு ரேவதியிடம் பேசவும் அவன் தான் அவரது மகன் என்பது புரிந்துவிட்டது.
“எக்ஸ்யூஸ் மீ டி.சி.பி சார்! அட்வைஸ் எல்லாமே ஊருக்கு மட்டும் தானா? உங்கம்மாவுக்குத் தலை சுத்தி மயக்கம் வரும்னு தெரிஞ்சும் இப்பிடியா தனியா விட்டுட்டுப் போவிங்க? பனைமரத்துக்குப் பாதியும் தென்னை மரத்துக்கு முக்காலும் வளந்தா மட்டும் போதாது… கூட வந்தவங்களை கவனமா பாத்துக்கவும் தெரியணும்” என்று கிடைத்த வாய்ப்பைத் தவறவிடாமல் கூடவே ரேவதி மீதான அக்கறையும் சேர்ந்து கொள்ள பொரிந்து தள்ளினாள்.
ரேவதி அதை வாயைப் பிளந்தபடி கவனிக்க ஸ்ரீதர் பொய்யாய் நகைத்தபடியே
Copyright©️ezhilanbunovels.com. கதையைத் திருடி PDF போடாதீர்!
“தேங்க்ஸ் ஃபார் யுவர் அட்வைஸ்… ஆனா பாருங்க, முதுகுக்குப் பின்னாடி என்ன நடக்குதுங்கிறத பாக்குற அளவுக்கு என் கண்ணுல பவர் இல்ல மேடம்… ஒருவேளை உங்களுக்கு இருக்குதோ?” என்று நக்கலாய் வினவ ஸ்ரீரஞ்சனி முகம் கடுத்தாள்.
ரேவதி இருவரையும் ஆச்சரியமாய் பார்ப்பதைக் கவனித்துவிட்டு ஸ்ரீதர் அன்னையிடம் அவள் யாரென்ற விவரத்தைத் தெரிவித்துவிட்டான்.
“நம்ம மதுராவோட சொந்தக்காரப் பொண்ணா? உனக்கு எப்பிடி ஸ்ரீ தெரியும்? உன் பேரு என்னம்மா? நீ மதுராக்கு என்ன வழில சொந்தம்?” என்று ரேவதி கேள்விக்கணைகளால் அவர்கள் இருவரையும் திக்குமுக்காடச் செய்ய இருவரும் பொய்யும் மெய்யுமாய் சரிநிகர் சமானவிகிதத்தில் கலந்து பதிலளிக்க ஆரம்பித்தனர்.
ஸ்ரீதர் வாழ்வில் தேவையற்று பொய் சொல்லிப் பழகியிராதவன் தடுமாற்றத்துடன் பதிலளிக்க ஸ்ரீரஞ்சனியும் இளித்துச் சமாளித்து வைத்தாள்.
ரேவதி சுவாமி தரிசனம் செய்யலாம் என எழுந்திருக்கவும் இருவரும் அவருடன் எழுந்து நடக்க ஆரம்பித்தனர்.
ரேவதி அவளிடம் “உன் அக்காவும் அண்ணியும் எங்க இருக்காங்கம்மா? ரத்தினவேல் அண்ணன் உன் அண்ணிய பத்தி நிறைய சொன்னாரு… பொக்கே ஷாப் வச்சிருக்காங்க, ஃபேமிலில ரொம்ப சப்போர்ட்னு சொன்னப்போ நம்ப முடியல… ஆனா உன் வாயால எங்க அண்ணினு நீ உரிமையா சொல்லுறப்போவே அவங்க மேல நீ வச்சிருக்கிற அன்பும் அக்கறையும் தெரியுதுடா” என்று பேசிக்கொண்டே வர ஸ்ரீதர் அவர்களின் பேச்சில் இடையிடாமல் அவன் போக்கில் வந்து கொண்டிருந்தான்.
அவனது எண்ணமெல்லாம் இப்போது அன்னை மதுரவாணியைச் சந்தித்துவிட்டால் என்னாகும் என்ற கேள்வி மட்டுமே பூதாகரமாய் தோன்றியது. கூடவே அன்னையுடன் ஏதோ நீண்டநாட்கள் பழகியவளைப் போல சிரித்துப் பேசிக் கொண்டு வந்த ஸ்ரீரஞ்சனியின் மீதும் அவன் கவனம் சென்று மீண்டது.
எப்போதும் டாப் போன்ற மாடர்ன் உடைகளிலேயே பார்த்துப் பழக்கப்பட்டவன் இன்று சிவப்புவண்ண காட்டன் சில்கில் ஆர்ப்பாட்டமற்ற அழகு தேவதையாய் இருந்தது அவன் கண்ணிலும் படத் தான் செய்தது. ஆனால் இடையிடையே ஸ்ரீரஞ்சனியின் உஷ்ணப்பார்வைகளைச் சந்திக்க நேரிட்டதும் பார்வையை வேறு புறம் திருப்பிக் கொண்டான். அவன் சிந்தனையில் மீண்டும் மதுரவாணியை தனது அன்னை பார்த்துவிடுவாரோ என்ற கேள்வி ஓட ஆரம்பித்தது.
அவனது எண்ணங்களின் நாயகியோ வழி தெரியாது கோயில் பிரகாரத்தில் சுற்றிக் கொண்டிருந்தாள். போனில் சங்கவி வழி சொன்னாலும் அவளுக்குத் திசை பிடிபடவில்லை. கூட்டத்தில் சுற்றியவள் மீண்டும் மீண்டும் வந்த இடத்துக்கே வந்தாள்.
குத்துமதிப்பாய் சுற்றி வந்தவள் யார் மீதோ இடித்துக் கொள்ளவும் பதறிப் போய் “சாரி சார்… தெரியாம இடிச்சிட்டேன்” என்று சொல்லிவிட்டு இடித்தவனைக் கடந்து போக முயல அதற்குள் ஒரு பக்தர் கூட்டம் வரவும் வேறு வழியின்றி அங்கேயே நின்றாள்.
அதே நேரம் தன்னிடம் சாரி கேட்ட பெண்ணை நோக்கிய நோக்கியவனோ திகைத்துப் போனான்.
“நீயா?” என்ற அவனது குரலில் கவனம் கலைந்தவள் தன்னருகில் நின்றிருந்த மதுசூதனனைக் கண்டதும் உதட்டைச் சுழித்து “ஏன் நான் இங்கலாம் வரக் கூடாதா?” என்று அமர்த்தலாய் கேட்க அவனோ அவளது உடையைத் தான் கவனித்துக் கொண்டிருந்தான்.
முதலில் அதைத் தவறாக எண்ணியவள் தாவணியை இழுத்து இடையை மறைத்துவிட்டு முறைக்க அவனோ அதைக் கண்டுகொள்ளாதவனாய் மீண்டும் கூர்ந்து கவனித்தான். அப்போது தான் அவனது கவனம் அங்கே இல்லை என்பது புரிந்தது மதுரவாணிக்கு.
அவளது விரலில் சிக்கியிருந்த தாவணி நுனியின் மீது தான் அவனது கவனம் முழுவதும் இருந்தது. அந்த நுனி சற்று கிழிந்திருக்க அவனது பார்வையை உணர்ந்த மதுரவாணி கிழிசலை மறைக்க முயன்றாள்.
ஆனால் மதுசூதனன் வேகமாய் அவளது தாவணி நுனியைப் பற்றியவன் அவளிடம் அதைக் காட்டி “இது எப்பிடி கிழிஞ்சது?” என்று கேட்டுவிட்டு கண்கள் படபடக்க நின்றிருக்க
அவளோ “ரயில்வே ஸ்டேசன்ல வச்சு கிழிஞ்சுது… நான் வேகமா நடந்து வந்தேன்.. அப்போ எதிர்ல யாரோ வந்தாங்க… நான் தெரியாம இடிச்சிட்டேன்… அப்போ எப்பிடியோ கிழிஞ்சி போச்சு” என்று ஒப்பித்துவிட்டு அவன் கையிலிருந்த தாவணி நுனியை வெடுக்கென பிடுங்கிக் கொண்டாள்.
மதுசூதனனுக்கு இத்தனை நாட்கள் கனவில் வந்த முகம் தெரியாத தாவணிப்பெண் இவள் தானா என்ற ஆச்சரியமும் சந்தோசமும் ஒரே நேரத்தில் எழ முகம் விகசிக்க நின்றான். ஒவ்வொரு முறை அவளது ஸ்பரிசம் தீண்டும் போதும் தன் மனம் ஏன் ஒப்பிட்டுப் பார்த்தது என்பது இப்போது விளங்கியது அவனுக்கு
ஒரே ஒரு குறை! அன்றைய தினம் இருந்த நீளமான கூந்தல் மட்டும் இப்போது கழுத்தளவில் நின்றிருந்தது. அவளின் குட்டை கூந்தலின் வரலாறு பற்றி சங்கவி வாயால் கேட்டு அறிந்திருந்ததால் மதுரவாணி தான் தனது இரயில் நிலைய தாவணிப்பெண் என்பதைப் புரிந்து கொண்டான்.
புன்னகையுடன் அவளை நோக்கியவன் “நீ தனியாவா வந்த வாணி?” என்று கேட்க அவனது ‘வாணி’ என்ற அழைப்பில் வித்தியாசமாய் உணர்ந்தாள் மதுரவாணி.
இது வரை யாருமே அவளை வாணி என்று அழைத்தது இல்லை. மது அல்லது மதுரா என்ற அளவில் அவளது பெயர் நின்றுவிடும். முதல்முறையாக ஒருவன் அப்படி அழைக்கவும் அவன் குரல் செவியில் உண்டாக்கிய குறுகுறுப்பு மெதுவாய் தலைக்குள் சென்று மூளையின் நியூரான்களில் வயலின் வாசிக்க வைத்தது.
அடுத்த நொடியே தலையில் பலமாய் தட்டிக் கொண்டு “இந்த மாதிரி மியூசிக்லாம் உன்னோட வாழ்க்கை வரலாற்றுல இடம்பெறவே கூடாது மது” என்று தனக்கு தானே சொல்லிக்கொண்டபடி நிமிர்ந்தவள் அவளையே புன்னகை முகமாய் பார்த்தபடி நின்றிருந்த மதுசூதனனைக் கண்டு எரிச்சலுற்றாள்.
அவன் கண் முன்னே சொடக்கிட்டவள் “ஹலோ! இப்போ எதுக்கு பல்லைக் காட்டுற? சிரிச்சது போதும்… வழிய பாத்து நடந்து போ” என்று அதட்டலாய் மொழிந்துவிட்டு விலக முயல அவளது கரம் பற்றி நிறுத்தினான் மதுசூதனன்.
“நானும் கோயில் பிரகாரத்துக்குத் தான் போகணும் வாணி… வா! சேந்தே போவோம்” என்று இலகுவாய் சொல்ல மதுரவாணி அதில் இஷ்டமில்லாதவளாய் மறுத்துப் பேச வாயெடுத்தவள் தங்களுக்கு எதிரே வந்து கொண்டிருந்த ஸ்ரீதரையும் ஸ்ரீரஞ்சனியையும் பார்த்துவிட்டாள்.
அவர்கள் உடன் வந்து கொண்டிருந்த ரேவதியும் அவள் கண்ணில் பட்டுவிட சட்டென்று மதுசூதனனின் முதுகின் பின்னே சென்று ஒளிந்து கொண்டாள். இல்லை இல்லை ஒட்டிக் கொண்டாள்!
“கொஞ்சநேரம் ஆடாம அசையாம அப்பிடியே நில்லு தெய்வமே! பழைய பகைய மனசுல வச்சு பழி வாங்கிடாதடா” என்று கெஞ்சியவளின் பேச்சை ரசித்தவன் ஸ்ரீதர் அவனைக் கண்டுவிடவும் இவளுடன் சற்று விளையாடினால் என்ற எண்ணம் தோன்றவும் குறும்பாய் கண் சிமிட்டிவிட்டு ஸ்ரீதரிடம் திரும்பினான்.
“ஹாய் பாஸ்! கம் ஹியர்” என்று வேண்டுமென்றே அழைக்க அவனும் தாயார் மற்றும் ஸ்ரீரஞ்சனியுடன் மதுசூதனன் நின்று கொண்டிருந்த இடத்துக்கு வந்துவிட்டான்.
மதுசூதனன் தலையைத் திருப்பி தன் முதுகோடு ஒண்டியிருப்பவளிடம் மெதுவான குரலில்
“எப்போ உன்னைக் கண்டுபிடிச்சேனோ அப்போ பழைய பகைய எல்லாம் மறந்துட்டேன்” என்று முணுமுணுத்தான்.
“அப்புறம் எதுக்கு இவங்க எல்லாரையும் கூப்பிட்ட இடியட்?” என்று பல்லைக் கடித்தவளைப் பார்த்துச் சிரித்தான் அவன்.
தனுஜாவிடம் தன்னை மாட்டிவிட்டவளைத் தானும் கொஞ்சம் மாட்டிவைத்து வேடிக்கை பார்த்தால் என்ன என்ற அசட்டு எண்ணம் அவனுக்கு ஏன் தோன்றியது என்பதை அவன் அறியான்! ஆனால் “உனக்கு மட்டும் தான் வாலுத்தனம் பண்ண வருமா? இப்போ பாரு என் பெர்ஃபார்மன்சை” என்று மனதுக்குள் சூளுரைத்தபடி ஸ்ரீதரைத் தங்களருகில் அழைக்க அவனும் தாயார் மற்றும் ஸ்ரீரஞ்சனியுடன் மதுசூதனன் நிற்குமிடத்தை அடைந்தான்.
அவன் ஸ்ரீதரிடம் “என் கேர்ள் ஃப்ரெண்ட் உங்க கிட்ட ஏதோ பேசணுமாம்” என்று சொல்லி மதுரவாணியின் தலையில் இடியைப் போட்டுவிட்டுத் தன் முதுகில் ஒட்டிக் கொண்டிருப்பவளின் கரம் பற்றி இழுத்து அவர்கள் முன்னே நிறுத்தினான்.
அவளைக் கண்டதும் ரேவதி அதிர ஸ்ரீரஞ்சனியோ அடுத்து என்ன நிகழப் போகிறதோ என்ற பரிதவிப்புடன் மதுரவாணியைப் பார்த்தபடியே நின்றாள். ஸ்ரீதர் முதலில் அதிர்ந்தாலும் பின்னர் என்றைக்கு இருந்தாலும் இந்த விசயம் அன்னைக்குத் தெரிந்து தானே ஆக வேண்டும் என்ற எண்ணத்தில் அன்னையின் கரத்தை ஆதரவாய் பற்றிக் கொண்டான்.
மதுசூதனன் நிதானமாய் மதுரவாணியைப் பார்த்தவன் ரேவதியின் கண்ணில் தெரிந்த அதிர்ச்சியை கிரகித்தபடியே
“வணக்கம்மா! நான் மதுசூதனன்… மதுரவாணியும் நானும் ஒருத்தரை ஒருத்தர் விரும்புறோம்” என்று சொல்ல ரேவதி ஒரு நிமிடம் அதிர்ந்தவர் பின்னே ஸ்ரீதரின் முகத்தை நோக்க அவனோ எனக்கு இது ஏற்கெனவே தெரியும் என்பது போல கண்ணைக் காட்டவும் மதுரவாணியிடம் திரும்பினார்.
அவளது கரத்தைப் பற்றியவர் “மதுரா! என்னைப் பாரு… இந்தப் பையனைத் தான் நீ காதலிக்கிறியா?” என்று அழுத்தமாய் கேட்க மதுரவாணி தன்னருகில் நமட்டுச்சிரிப்புடன் நின்றிருந்த மதுசூதனனை மனதுக்குள் கரித்துக் கொட்ட ஆரம்பித்தாள்.
ரேவதிக்கு என்ன பதில் சொல்வது என்று யோசித்தவளுக்குக் கோயிலில் வைத்துப் பொய் சொல்லவேண்டுமா என்ற தயக்கம் இருந்தாலும் ஆபத்துக்குப் பாவமில்லை என்று மனதைத் தேற்றிக் கொண்டாள்.
“ஆமா ஆன்ட்டி! நானும் மதுவும் லவ் பண்ணுறோம்” என்றாள் தயங்கியபடியே ஸ்ரீதரைப் பார்த்தவண்ணமாய்!
மதுசூதனனுக்கு அந்த வார்த்தை விசித்திரமான முறையில் சந்தோசத்தை உண்டாக்கியது. ஆயிரம் முறை தனுஜாவின் வாயில் இருந்து கேட்ட காதல் வார்த்தைகள் எதுவும் தராத ஆனந்தத்தை மதுரவாணியின் ஒரே ஒரு வார்த்தை கொடுக்கவே அவளை ஆர்வமாய் நோக்கினான் அவன்.
அவளது முகம் சிவந்திருக்க அது வெட்கத்தினாலா அல்லது சங்கடத்தினாலா என்பது மட்டும் அப்போதைக்கு அவனுக்கு விளங்கவில்லை.
ஆனால் மதுரவாணியாலோ மதுசூதனனும் தானும் காதலர்கள் என்று சொல்லிவிட்டு யாரையும் தலை நிமிர்ந்து பார்க்க முடியவில்லை. ரேவதியையும் ஸ்ரீதரையும் பார்க்க குற்றவுணர்ச்சியாக இருந்தது.
கூடவே மதுசூதனனை நினைத்தால் கலக்கமாக இருந்தது. ஏற்கெனவே அவன் வாயால் தானும் ஸ்ரீரஞ்சனியும் வாங்கிய சுயநலவாதி பட்டம் வேறு நினைவுக்கு வந்து தொலைக்க அந்நிமிடம் மிகவும் தர்ம சங்கடமாய் உணர்ந்தாள் மதுரவாணி.
அதே நேரம் ஸ்ரீரஞ்சனி இது எல்லாமே தான் சொன்ன ஒரே ஒரு பொய்யால் தானே என்ற கலக்கத்துடன் அனைவரின் முகத்தையும் ஏறிட்டுப் பார்த்துவிட்டுக் கையைப் பிசைந்தபடி நின்றிருந்தாள்.
அவள் சொன்ன ஒரு பொய் வருங்காலத்தில் உண்மை ஆகும் என்பதை அவள் அறியாள்; அதே போல அந்த ஒரு பொய்யால் தனது வாழ்வும் மதுரவாணியின் வாழ்வும் பின்னாட்களில் கேள்விக்குறி ஆகும் என்பதையும் அவள் அறியாள். பொய் என்பது அழகானது தான்; சொல்லும் போது இனிமையாக கூடத் தோன்றும். ஆனால் ஒரே ஒரு பொய் மொத்த உறவுகளையும் கேள்விக்குறியாக்க வல்லது. அது ஏற்படுத்தும் காயங்கள் ஆயிரம் நரகத்துக்குச் சமானம்.
அலை வீசும்🌊🌊🌊