🌊 அலை 15 🌊
Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels
செவ்விதழ் சிறைக்குள்
முத்துப்பற்கள் அரணாய் காக்க
அடைபட்டுக் கிடக்கும் உன்
ஒற்றைப்புன்னகையைக் காணத்
தவிக்கும் என் விழிகளின்
இறைஞ்சல் உன் செவிகளைத்
தீண்டாதோ என் அழகியே!
சங்கவியும் யாழினியும் யுவஸ்ரீயின் திருமண ஏற்பாட்டின் மலர் அலங்கார பொறுப்பை ஏற்றதிலிருந்து அடிக்கடி அவர்கள் அது தொடர்பாக திருமணம் நடக்கவிருக்கும் ஸ்ரீவத்சனின் பங்களாவுக்குச் செல்ல வேண்டியதாக இருந்தது.
அதனால் பொக்கே ஷாப்பின் பொறுப்பை ஸ்ரீரஞ்சனியும் மதுரவாணியுமே பார்த்துக் கொண்டனர். இடையிடையே ஸ்ரீரஞ்சனியின் தாயார் மகள்கள் இருவரையும் வீட்டுக்கு அழைத்துக் கொள்வார். அவருக்கு இன்னும் மதுரவாணி காணாமல் போன விசயம் எதுவும் தெரியாது. அக்காவின் மருமகளான சங்கவி மீது அப்பெண்மணிக்கு மதிப்பும் மரியாதையும் அதிகம். எனவே தான் மகள்கள் அங்கேயே டேரா போட்ட போதும் ஒன்றும் சொல்லவில்லை.
கூடவே அக்காவும் மாமாவும் மதுரையில் வீடு வாங்கிக் கொண்டு சென்றுவிட்டதால் ஏதேனும் முக்கியமான விசயமென்றால் மதுரைக்கே சென்று விசயத்தைக் கேட்டுவிடுவார் ஸ்ரீரஞ்சனியின் தாயார் பார்வதி. அதனால் தான் லவ்டேலில் நடக்கும் கூத்து எதுவுமே அவருக்குத் தெரியவில்லை. அவரது கணவரோ நகரின் மிகப்பெரிய நூற்பாலையில் மேலதிகாரி.
மகள்கள் இருவரையும் நன்றாகப் படிக்கிறார்களா இல்லையா என்று பார்க்க கூட நேரமில்லாத மனிதர். இதில் அவர் எங்கேயிருந்து அவர்கள் செய்யும் குட்டிக்கலாட்டாக்களை கவனிக்கப் போகிறார்!
இத்தகைய பெற்றோர் கிடைத்ததால் தான் ராகினியும் ஸ்ரீரஞ்சனியும் இஷ்டத்துக்கு லவ்டேலில் தங்கிவிட்டனர்.
ஸ்ரீரஞ்சனிக்கு இப்போதைக்கு இருக்கும் ஒரே எரிச்சல் சில நாட்களுக்கு முன்னர் ஸ்ரீதர் மதுரவாணிக்குப் புத்தி சொல்லி ஊருக்கு அனுப்பி வைக்கும்படி சொன்னது மட்டுமே! அவன் பொக்கே ஷாப்புக்கு அதன் பின்னர் இரு முறை வந்த போதும் அதையே மீண்டும் சொல்ல ஸ்ரீரஞ்சனிக்கு மதில் மேல் பூனை நிலை தான்!
அவன் இங்கே இருப்பது இன்னும் சங்கவிக்கும் யாழினிக்கும் தெரியாது. தெரிந்தால் பூகம்பமே வந்துவிடும்! அன்றைய தினம் ஸ்ரீதர் பொக்கே ஷாப்புக்கு வந்து செல்வதை மதுரவாணியிடம் தெரிவித்தாள் ஸ்ரீரஞ்சனி.
“உன் மேல எவ்ளோ அக்கறைனு பாருடி… பேசாம அந்த ஆளையே நீ மேரேஜ் பண்ணியிருக்கலாம்”
“ஷட்டப் ரஞ்சி! அவருனு இல்ல, வேற யாரையுமே நான் லைப் பார்ட்னாரா ஏத்துக்க மாட்டேன்டி… நீ சொன்ன மாதிரி ஸ்ரீதர் அக்கறையான மனுசனாவே இருக்கட்டும்… அந்த நல்ல மனுசனுக்கு நான் பண்ணுற நல்லதே அவரைக் கல்யாணம் பண்ணிக்காம இருக்கிறது தான்”
“இப்பிடியே வாழ்க்கை முழுக்க இருக்க முடியாது மது… பொண்ணுனா என்னைக்காச்சும் ஒருநாள் கல்யாணம் பண்ணிக் குழந்தை குட்டினு வாழத் தான் செய்யணும்கிறது எழுதப்படாத ரூல்!”
“ரூல்ஸ் ஆர் மேட் டு பி ப்ரோக்கன்… யாராச்சும் ஒருத்தர் அதை உடைக்கணும்ல… அந்த யாரோ ஒருத்தரா நான் இருந்துட்டுப் போறேன்”
சாவகாசமாகச் சொல்பவளைக் கண்டு ஸ்ரீரஞ்சனி தான் அயர்ந்து போனாள். ஸ்ரீதர் அவளிடம் எதுவும் பேசுவதில்லையே. அவனுக்கு வாய்த்த அடிமையாக ஸ்ரீரஞ்சனி தானே அவனது அறிவுரையை கேட்க வேண்டியுள்ளது. எங்கே மதுரவாணிக்கு அறிவுரை சொன்னால் அவள் சொல்லாமல் கொள்ளாமல் இங்கிருந்தும் மாயமாகிவிடுவாளோ என்ற தயக்கம் அவனுக்கு.
அதனால் தான் ஒவ்வொரு முறையும் ஸ்ரீரஞ்சனியிடம் எச்சரிக்கை விடுத்தான் அவன்.
அதே நேரம் சங்கவி இது எதையும் அறியாதவளாய் கந்த சஷ்டிக்கு விரதம் இருக்கட்டுமா என வெளிநாட்டிலிருந்து போன் செய்த கணவனிடம் கேட்டுக் கொண்டிருந்தாள்.
“லாஸ்ட் டைம் நீங்க இந்தியா வந்தப்போ உங்களுக்கு டைபாய்ட் ஃபீவர் வந்துச்சுல்ல, அப்போ வேண்டிக்கிட்டேன் கமல்! வேண்டுதலை நிறைவேத்தலனா தெய்வக்குத்தம் ஆயிடும்பா”
மனைவிக்கு உடலிலும் சரி மனதிலும் சரி அவ்வளவாக பலமில்லை என்பது கமலேஷுக்குத் தெரிந்ததால் தான் அவன் தனது தங்கையையும் பக்கத்திலேயே வீடு கட்டிக்கொண்டு குடியேறச் சொன்னான். இப்போது விரதம் எல்லாம் தேவையற்ற சிரமம் தான்!
ஆனால் சங்கவி இந்த விசயத்தில் கணவனின் பேச்சை அப்படியே ஏற்றுக்கொள்பவள் இல்லை. எனவே அவனும் சரியென சொல்லிவிட்டான்.
இன்னும் ஒரு வாரத்துக்குக் கந்த சஷ்டிக்கு விரதம் இருந்து முருகன் தரிசனத்துக்குக் கோயிலுக்குச் செல்ல வேண்டுமென அவளும் யாழினியும் திட்டமிட மதுரவாணி அவர்களின் பேச்சில் குறுக்கே இடையிட்டு
“இங்க முருகன் கோயில் இருக்குதா என்ன? நம்ம ஊர்ல இருந்திருந்தா கூட திருச்செந்தூருக்குப் போயிட்டு வந்துருக்கலாம்” என்று சொல்ல
“இங்கேயும் மலை மேல முருகன் கோயில் இருக்கு மது… எல்க் மலைனு ஒரு ப்ளேஸ்ல பெரிய முருகன் சிலையோட இருக்கு” என்றாள் சங்கவி பெருமிதமாக.
“ஏன் இதுக்கு முன்னாடி வந்தப்போ அந்தக் கோயில் பத்தி என் கிட்ட யாருமே சொல்லல?” என்று மதுரவாணி முகத்தைத் தூக்கிக் கொள்ளவும, யாழினி கேலியாக
“உனக்கும் முருகனுக்கும் ஆகாதுனு அத்தை சொன்னாங்க. அதான் எதுக்கு உன் கிட்ட சொல்லணும்னு விட்டுட்டோம்” என்று சொல்லவும் மற்ற பெண்கள் அனைவரும் நகைத்தனர்.
“அதுவும் சரி தான்! எனக்கும் முருகனுக்கும் ஆகாது தான்… பின்ன என்னவாம்? கடவுள் தானே மனுசனுக்கு உதாரணமா இருக்கணும்? அவரே ரெண்டு பொண்டாட்டிக்காரரா இருந்தா மனுசங்களுக்கு தொக்கா போயிடாதா?” என்று கேட்டவண்ணம் நகம் கடித்தாள் மதுரவாணி.
“ஏய்! அதுக்குப் புராணத்துல விளக்கம் இருக்குடி… சும்மா நீ முருகனை வம்புக்கு இழுக்காத” என்று ஸ்ரீரஞ்சனி முருகக்கடவுளுக்குப் பரிந்து பேசினாள். அவளது இஷ்டதெய்வத்தை ஆகாது என்று சொன்னால் அவளால் எப்படி அமைதி காக்க முடியும்!
என்ன தான் வாதப் பிரதிவாதங்கள் நடந்தாலும் முடிவில் அனைவரும் கந்த சஷ்டி அன்று எல்க் மலை முருகன் கோயிலுக்குச் செல்வதாக முடிவு செய்யப்பட்டது. மதுரவாணியும் வேறு வழியின்றி சம்மதித்தாள்.
அதே நேரம் மதுசூதனனின் அன்னையும் அதே கோயிலுக்குச் செல்ல வேண்டுமென மகனிடம் கூறிக் கொண்டிருந்தார். வைஷாலி அன்றைய தினம் விடுப்பு எடுத்துவிடுவதாகச் சொல்லிவிட மதுசூதனன் தான் யோசனையுடன் சாப்பாட்டை அளைந்தான்.
“என்னடா கண்ணா யோசிக்கிற?”
“இல்லம்மா! அன்னைக்கு ஒரு முக்கியமான ஆளை மீட் பண்ண நீலகிரி போலாம்னு இருந்தேன்”
“இன்னொரு நாள் போயேன்… அம்மா வருசாவருசம் கந்த சஷ்டிக்கு விரதம் இருப்பாங்கனு உனக்குத் தெரியும் தானே அண்ணா! குடும்பமா அன்னைக்குக் கோயிலுக்குப் போய் சாமிதரிசனம் பண்ணுறது எப்போவும் நடக்கிறது தானே! நீ மட்டும் வரலனா எப்பிடிண்ணா? ப்ளீஸ்ணா! மீட்டிங்கை போஸ்ட்போன் பண்ணுடா”
அதற்கு மேல் குடும்பத்தினரிடம் வாதிட விரும்பாதவன் கோயிலுக்கே செல்லலாம் என ஒத்துக்கொண்டான்.
கூடவே “மீட்டிங்க போஸ்ட்போன் பண்ணிட்டு உங்களோட கோயிலுக்கு வர ஓகே சொல்லிருக்கேன்… உங்க லார்ட் முருகன் எனக்கு ஸ்பெஷலா எதாவது தந்தே ஆகணும்.. அப்போ தான் அடுத்த வருசம் நான் உங்க கூட வருவேன்” என்று நிபந்தனை வேறு விதித்தான் கிண்டலாக.
அதைக் கேட்ட ராம்மூர்த்தி “உங்கம்மா வீட்டுக்கு ஒரு மருமக வரணும்னு தான் இந்த வருசம் விரதம் இருக்கிற டீலிங்ல அவர் கிட்ட கோரிக்கை வச்சிருக்காடா மகனே! அதனால நீ சொன்னாலும் சொல்லாட்டியும் உனக்கு இந்த வருசம் முருகன் ஸ்பெஷலான ஒருத்தரைக் குடுக்கத் தான் போறாரு” என்று சொல்ல அந்த நேரம் வீட்டின் நிலைப்படியோரம் நின்ற தேவதைகள் ததாஸ்து சொல்லி ஆசிர்வதித்து விட்டன போலும்!
ஸ்ரீதரின் வீட்டிலும் ரேவதி மகனிடம் அதே கோரிக்கையைத் தான் வைத்துக் கொண்டிருந்தார். அவனோ அன்னையின் உடல்நலனைக் காரணம் காட்டி விரதம் இருக்க கூடாதென கண்டிப்பாய் கூறிவிட்டான்.
“என்னடா ஸ்ரீ இப்பிடி சொல்லுற? ஊர்ல இருக்கிறப்போ வருசா வருசம் சஷ்டி விரதம் இருந்து திருச்செந்தூருக்குப் போயிடுவேன்… இந்த வருசம் திருச்செந்தூர் முருகன் தரிசனத்துக்குக் குடுத்து வைக்கல… அதான் இங்க எல்க் மலை வரைக்கும் போயிட்டு வரலாம்டா! என் ராஜால்ல”
நீண்டநேர வாதத்துக்குப் பின்னர் ஸ்ரீதரன் அவருடன் கோயிலுக்கு வர ஒப்புக்கொண்டான். இந்த வருசம் தான் அவர் விரதம் இருப்பது கடைசியாக இருக்கவேண்டுமென்ற அன்புக்கட்டளையுடன் சீருடையை மாட்டிக்கொண்டு கிளம்பியவனை வாஞ்சையுடன் பார்த்த ரேவதி
“முருகன் தான் உனக்கேத்த பொண்ணை என் கண்ணுல காட்டணும் ஸ்ரீ! அவரு தான் மதுராவ எனக்குக் காட்டுனாரு… ஆனா அது தான் தப்புக்கணக்கா போயிடுச்சு… இனிமே நடக்கிறதாச்சும் நல்லதா நடக்கணும்னு தான் நான் விரதம் இருக்கப் போறேன்டா கண்ணா!” என்று தனக்குள் எண்ணியபடி வீட்டுவேலையில் கவனமானார்.
***************
நதியூர்…
சங்கரபாண்டியனும் ரத்தினவேல் பாண்டியனும் முன்பு போல அல்லாது அடிதடியை விட்டுவிட்டு அவர்களின் தொழிலில் கவனம் செலுத்த ஆரம்பித்திருந்தனர்.
இதனால் வீட்டுப்பெண்மணிகளுக்கு மகிழ்ச்சி தான்! ஆனால் முழுவதும் சந்தோசப்பட முடியாத வகையில் மதுரவாணியின் நினைவு அவர்களை வதைத்தது.
இப்போதெல்லாம் வீட்டின் ஆண்கள் தங்களின் திமிர், அகம்பாவத்திலிருந்து மாறியிருந்தனர். சரவணனும் கார்த்திக்கேயனும் கூட மாறியது தான் அவர்களின் வாழ்க்கைத்துணைவியர்களுக்குப் பெருத்த ஆச்சரியம்!
அதற்கு காரணமான சம்பவத்தின் போது விசாலாட்சி கொடுத்த அறிவுரை அப்படி பட்டது.
சரவணனின் மனைவி பிரபாவதிக்கு ஹிந்தி கற்றுக்கொள்ள வேண்டுமென்ற ஆசை எப்போதுமே உண்டு. பள்ளிக்காலத்தில் கேட்ட போது “படிப்புல கவனத்தை வைல, இந்தி என்ன ஓடியா போகுது?” என்ற தந்தையின் அதட்டல் கலந்த பதில் தான் கிடைத்தது.
கல்லூரிப்பருவத்தில் செல்போன் கிடைத்ததால் இணையத்தின் உபயத்தால் அரைகுறையாகக் கற்றுக்கொண்டவளுக்கு மூன்றாவது ஆண்டு முடியும் போது கையில் பட்டம் கிடைப்பதற்குள் கழுத்தில் தாலி ஏறியது. காரணம் கேட்டால் மாமா மகனுக்கு பிரபாவதி என்றால் உயிர் என்ற ஒற்றை வார்த்தை மட்டும் பதிலாக கிடைத்தது.
அது உண்மை என்பது போல சரவணனும் மனைவியை அன்பாகவே நடத்தினான். ஆனால் சராசரி ஆண்மகனாக திருமணம் ஆகிவிட்டால் ஒரு பெண் என்பவளுக்கு வீடும், குடும்பமும் மட்டுமே உலகமாக இருக்கவேண்டும் என்ற எண்ணம் கொண்டவன் அவன்; சமைத்துப் போட்டு வீட்டுவேலைகளைச் செய்துவிட்டு குழந்தை குட்டிகளைப் பொறுப்பாக வளர்ப்பதில் தான் கவனம் செலுத்த வேண்டுமே தவிர அவள் படிக்கிறேன், வேலை செய்கிறேன் என்று கிளம்புவது சரி அல்ல என்று அடிக்கடி இயம்புவான்.
இந்த விசயத்தில் கார்த்திக்கேயனும் மூத்த சகோதரனின் கார்பன் காப்பியே! இந்த ஒரு விசயம் போதும் மதுரவாணிக்கு ஆண்களிடத்தில் கசப்புணர்ச்சி தோன்றுவதற்கு!
அவ்வாறு இருக்கையில் சமீபத்தில் பிரபாவதியின் மைந்தனுக்குப் பள்ளியில் ஹிந்தியும் ஒரு பாடமாக வரவே அவள் இப்போதாவது தான் கற்றுக்கொள்ளட்டுமா என்று ஆசையாக கேட்க அதற்கு சரவணன் அலட்சியமாகப் பேச பதிலுக்குப் பிரபாவதியும் ஏட்டிக்குப் போட்டியாய் பேச அவர்களின் வாதத்தின் முடிவில் சரவணனின் கரம் பிரபாவதியின் கன்னத்தில் வேகமாய் இறங்கியது.
இத்தனை நாட்கள் மகன் மற்றும் மருமகள்களின் வாழ்வில் குறுக்கிட விரும்பாத விசாலாட்சி அன்றைய தினம் சாமியாடி விட்டார் என்றே சொல்லலாம்.
“உங்களுக்குச் சமைச்சு, துணி துவைச்சுப் போட்டு, பணிவிடை செய்ய மட்டும் பொம்பளைங்க வேணும்… ஆனா நாங்க ஆசைப்பட்டு எது கேட்டாலும் ஒன்னு அதை மறந்துடணும், இல்லனா அடி வாங்கிட்டு ஒடுங்கிப் போயிடணும்… அப்பிடித் தானே!
கல்யாணம் ஆகி இத்தனை நாளுல உங்கய்யா என் கிட்ட ஒரு தடவையாச்சும் கை நீட்டிருப்பாரா? வீட்டுக்கு வெளில அவரு அவ்ளோ முரடுனு சொல்லுவாங்க… ஆனா வீட்டுக்குள்ள நல்லபடியா தானே இருக்காரு! உனக்கும் உன் தம்பிக்காரனுக்கும் மட்டும் எங்க இருந்து இப்பிடி பொண்டாட்டி கிட்ட கை நீட்டுற புத்தி வந்துச்சுல?”
‘தம்பி’ என்பதற்கு மேல் மகன்களை மதிப்பு குறைவாய் அழைத்திடாத அப்பெண்மணி அன்றைய தினம் மருமகள் கன்னம் சிவந்திருந்ததை கண்டதும் மரியாதையைத் தூக்கித் தூர வீசிவிட்டு ஏகவசனத்தில் பேசத் தொடங்கிவிட்டார்.
“நல்லா நியாபகம் வச்சுக்கோ சரவணா! உடம்புல இதே வலு என்னைக்கும் இருக்காது! ஒரு நாள் ரத்தம் சுண்டி தோல் சுருங்கும்… வயசுக்காலத்துல தள்ளாமை வரும்! அப்போ உன் அய்யாவோ அம்மையோ உன் கூட இருக்க மாட்டோம்… உன் வீட்டுக்காரி தான் உனக்குத் துணையா இருப்பா! இப்போ அறைஞ்சியே அவ கிட்ட தான் சாப்பாட்டுக்குக் கை ஏந்தணும்! நீ படுக்கைல விழுந்து கிடந்தாலும் உன் கூட உன் பொண்டாட்டி தான் இருப்பாலே! இந்த ஆம்பளைங்கிற திமிரு அப்போ ஓடி போயிடும்… இதை மனசுல வச்சு நடந்துக்க! இனிமே என் கண் முன்னாடி என் மருமகளை கை நீட்டுனா அது என்னை அடிக்கிறதுக்குச் சமம்” என்று முடிவாய்ச் சொல்லிவிட்டு அன்றைய தினத்தோடு இரு மகன்களிடமும் பேச்சை நிறுத்திக் கொண்டார்.
ஏற்கெனவே மகள் காணாமல் போன தினத்திலிருந்து கணவனிடமும் பேச்சைச் சுருக்கிக் கொண்டவர் மகன்களையும் தவிர்த்துவிட்டு மருமகள்களின் மகிழ்ச்சியில் ஆறுதல் தேடிக்கொண்டார்.
அச்சம்பவத்துக்குப் பின்னர் சரவணனும் சரி; கார்த்திக்கேயனும் சரி வெகுவாக தம் இயல்பிலிருந்து மாறிவிட்டனர். மனைவியரை மதிக்கவும் ஆரம்பித்திருந்தனர்.
அவ்வாறிருக்க அழகம்மை மருமகளிடம் கந்த சஷ்டிக்கு விரதம் இருக்கப் போவதாகச் சொல்லிக் கொண்டிருந்தார்.
“இந்தக் கிழவி மேல இரக்கப்பட்டாவது அந்த முருகன் என் பேத்திய திருப்பி அனுப்பிட மாட்டானா?” என்று ஆதங்கத்துடன் கேட்டவரை மருமகள் விசாலாட்சியும் தடுக்கவில்லை. மகன் ரத்தினவேல் பாண்டியனும் தடுக்கவில்லை.
சங்கரபாண்டியன் தான் “வயசான காலத்துல ஏன் இந்த வேண்டாத வேலை? உங்களுக்குப் பதிலா நான் வேணும்னா விரதம் இருக்கேன் அத்த” என்று சொல்ல
“இல்லய்யா! நீரு வெளிவேலையா அலையுற ஆளு… விரதம் இருந்தா ஒரு வேளை தான் சாப்பிடணும்யா.. உமக்கு அது சரிப்படாது… நான் வீட்டுல கிடக்குறவ தானே! நான் இருந்துக்கிறேன்” என்று பாசமுள்ள அத்தையாக மறுத்துவிட்டார்.
அதற்கு பிறகு அவரும் சரி ரத்தினவேல் பாண்டியனும் சரி, அழகம்மையை வற்புறுத்தவில்லை. வயதான காலத்தில் அவர் இருக்கும் இந்த விரதத்தில் மனம் இரங்கியாவது சண்முக கடவுள் எங்கேயோ இருக்கும் மதுரவாணியைத் தங்கள் வசம் கொண்டு வந்து சேர்த்திட மாட்டாரா என்ற நப்பாசை அவர்களுக்கு.
இவர்கள் அனைவரின் வேண்டுதலையும் செவிமடுக்கும் முருகப்பெருமானுக்கு உகந்த கந்த சஷ்டி தினமும் வந்தது. அன்றைய தினம் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பிவிட்டு சங்கவியும் யாழினியும் குளித்துக் கோயிலுக்குச் செல்லத் தயாராயினர்.
மதுரவாணியும் ஸ்ரீரஞ்சனியும் ராகினியுடன் ஹாலில் அமர்ந்திருக்க யாழினி மதுரவாணியிடம்
“இன்னைக்கும் ஆம்பளைப்பையன் ட்ரஸ்சா? ஒழுங்கா போய் ஷேரி கட்டிட்டு வா” என்று மிரட்ட
“நான் சொல்லிப் பாத்து டயர்ட் ஆயிட்டேன்கா.. இவ கேக்கவே மாட்றா… அட்லீஸ்ட் ராகி மாதிரி தாவணியாச்சும் கட்டிக்கலாம்ல” என்று குறைபட்டாள் ஸ்ரீரஞ்சனி.
அப்போது தயாராகி ஹாலுக்கு வந்த சங்கவி அவளை முறைத்தவள் “ஒழுங்கா ட்ரஸ் சேஞ்ச் பண்ணிட்டு வா மது.. இல்லனா நடக்குறதே வேற” என்று ஆட்காட்டிவிரலை நீட்டி தனது கண்களை உருட்டி மிரட்ட மதுரவாணி உதட்டைப் பிதுக்கிக் கொண்டு தட்தட்டென்ற காலடிகளுடன் மாடிப்படிகளில் ஏறினாள்.
திரும்பி வந்த போது அவள் எந்த உடையோடு வீட்டை விட்டு வந்தாளோ அதே வெந்தய வண்ணப்பாவாடை அடர்பச்சை நிற பட்டுத்தாவணி அணிந்து இவ்வளவு நேரம் போனிடெயிலாகப் போட்டிருந்த கூந்தலை கேட்ச் கிளிப்பில் அடக்கி மீதமுள்ள கூந்தலை விரித்து விட்டிருந்தாள்.
அவள் ஹாலுக்கு வந்த போது சங்கவி அவளுக்கு நெட்டி முறித்து திருஷ்டி கழித்துவிட்டு “அழகிடி! என்ன அந்த நீளமான முடிய தான் நான் மிஸ் பண்ணுறேன்” என்று சொல்லவும்
“இன்னும் கொஞ்சநாள்ல வளந்துடும்கா… நான் அத மறந்தாலும் நீ மறக்க மாட்ட போல” என்று மதுரவாணி சிரிக்க
“நம்ம ஊரு தண்ணிக்கே முடி நீளமா வளரும்டி… ஆனா இங்க அப்பிடி இல்லையே” என்று குறைபட்டாலும் தங்கையை அணைத்துக் கொண்டாள்.
“வேற தாவணி போட்டிருக்கலாம்லா மதுக்கா! இதோட நுனி கிழிஞ்சிருக்கு பாரு” என்ற ராகினியிடம்
“என் கிட்ட வேற தாவணி இல்ல ராகி! அதுவுமில்லாம இது என்னோட ஃபேவரைட் தாவணி… ரயில்வே ஸ்டேசன்ல வேகமா ஓடி வர்றப்போ எதுலயோ சிக்கி கிழிஞ்சிடுச்சு… இந்தச் சின்னக் குறைக்காக எனக்குப் பிடிச்ச தாவணிய வேண்டாம்னு தூக்கிப் போட மனசு இல்லடி” என்று பதிலளித்தபடியே மற்ற பெண்களுடன் சேர்ந்து கோயிலுக்குக் கிளம்பத் தயாரானாள் மதுரவாணி.
எப்போதுமே சின்னச் சின்ன குறைகளுக்காக நமக்குப் பிடித்தவற்றையும் பிடித்தவர்களையும் வேண்டாமென உதறித் தள்ளுவது சரியல்ல. ஏனெனில் மனிதர்கள் அனைவரும் குறையும் நிறையும் கலந்தே கடவுளால் படைக்கப்படுகின்றனர்.
அலை வீசும்🌊🌊🌊