🌊 அலை 11 🌊

கடற்கரை மணலில் எழுதிய

பெயர்களாய் அலை வந்ததும்

அழியக்  கூடியவை அல்ல

கல்வெட்டில் பதிக்கப்பட்ட

எழுத்துக்களாய் காலம்

கடந்தும் நிற்கும் உன் நினைவுகள்

நதியூர்

ரத்தினவேல் பாண்டியனின் வீட்டில் எப்போதும் போல அவரது ஏவலாட்களின் அரவம் கேட்டுக் கொண்டிருந்தது. வீட்டின் இளவரசி காணாமல் போய் வெகுநாட்களாகி விட்டது. இன்னும் அவளைத் தேடிக் கண்டுபிடிக்க இயலாது அவர்கள் திரும்பி வரும் போதெல்லாம் அழகம்மையின் ஏச்சுப்பேச்சையும் வாங்கிக் கட்டிக் கொண்டனர்.

சரவணனும் கார்த்திக்கேயனும் அவ்வபோது அழகம்மைக்குப் பதிலடி கொடுத்தாலும் தன் பேத்தி காணாமல் போனதற்கு வீட்டின் ஆண்கள் தான் காரணம் என்று சொல்வதை மட்டும் அவர் நிறுத்தவில்லை. நாட்கள் கடக்க கடக்க அவரது கோபம் மகன் மீதும் மருமகன் மீதும் பாய்ந்ததே தவிர குறையவில்லை.

இப்போதும் அவரது வேலையாட்களைத் திட்டிக் கொண்டு தான் இருந்தார். காரணம் குலசேகரன் புதியதாக வாங்கவிருக்கும் ரைஸ் மில் பற்றிய தகவல்களைத் தெரிவித்தவர்கள் அதை எப்படியாவது தடுக்க வேண்டுமென கங்கணம் கட்டிக்கொண்டு பேசிக் கொண்டிருக்க அது அழகம்மையின் செவியில் விழுந்துவிட்டது.

இப்போது இதை வாங்க வேண்டிய கட்டாயம் என்ன என்று மகனிடமும் மருமகனிடமும் தீவிரமாக வாதிட்டவர் அவர்களின் கட்டப்பஞ்சாயத்தும் அடிதடியும் பிடிக்காததால் தான் பேத்தி வீட்டை விட்டுச் சென்றுவிட்டாள் என்பதையும் நினைவுறுத்த பெரியவர்கள் இருவருக்கும் மதுரவாணியின் நினைவில் மனம் கலங்கிவிட்டது.

அவருக்குப் பதிலடி கொடுக்க இயலாது நின்று கொண்டிருக்கையில் ஸ்ரீதரும் ரேவதியும் அங்கே காரில் வந்து இறங்கினர். வீட்டின் முற்றத்தில் கூடியிருந்த குற்றேவல் செய்யும் பணியாட்கள் ஸ்ரீதரைக் கண்டதும் பம்மி ஒதுங்க அவன் அவர்களைத் தன் கூரிய பார்வையில் அளவிட்டபடி தாயாருடன் வீட்டை நோக்கி நடைபோட்டான்.

அழகம்மை அவனைக் கண்டதும் முகம் மலர “வாங்கய்யா! வாம்மா ரேவதி!” வாய் நிறைய அழைக்கவும் ஸ்ரீதரின் முகத்திலும் மலர்ச்சி.

ரேவதிக்கு இதன் காரணமாகவே இந்தக் குடும்பத்தினரை மிகவும் பிடிக்கும். வெளிப்பார்வைக்கு முரடாக இருந்தாலும் பாசக்கார மக்கள் என்ற எண்ணம் அவருக்கு.

ஸ்ரீதர் ரத்தினவேல் பாண்டியனிடமும் சங்கரபாண்டியனிடமும் பார்வையாலே அவர்களிடம் பேசவேண்டும் என்று சைகை காட்ட அழகம்மை “வீரய்யா! இவங்களை கூட்டிட்டுப் போய்யா!” என்று சொல்லவும் அவரும் அந்த ஆட்களுடன் இடத்தைக் காலி செய்தார்.

வேறு எங்கே செல்வார்! குலசேகரன் வாங்கவிருந்த ரைஸ்மில்லின் உரிமையாளரை மிரட்டித் தன் முதலாளிக்கு அதைச் சொந்தமாக்க என்னென்ன வழிகள் உண்டு என்று ஆராயத் தான்!

அவர் நகன்றதும் ஸ்ரீதர் ஆண்கள் இருவருடனும் உள்ளே செல்ல அழகம்மை ரேவதியிடம் பேச்சு கொடுத்தபடி அழைத்துச் சென்றார்.

உள்ளே நுழைந்ததும் ரத்தினவேல் பாண்டியன் “சம்பந்திம்மாவும் மாப்பிள்ளையும் வந்திருக்காங்க விசாலாட்சி… காபி போட்டுக் கொண்டு வா” என்று சிம்மக்குரலில் கட்டளையிட்ட பின்னர் தான் சொன்னது எவ்வளவு அபத்தம் என புரிந்து சங்கடத்தில் தலையைக் கவிழ்ந்து கொண்டார்.

விசாலாட்சி அடுக்களைக்குள் இருந்து வெளியே வந்தவர் களையற்ற முகத்துடன் இருவருக்கும் வணக்கம் சொன்னவர் தயங்கித் தயங்கி நின்று கணவரின் முகத்தைப் பார்க்க அவரால் ஸ்ரீதரையும் ரேவதியையும் ஏறிட்டுப் பார்க்க கூட முடியவில்லை.

சங்கரபாண்டியனும் நிலையும் அதுவே. மனதிற்குள் “இந்த அகம்புடிச்ச கழுதையால எங்க வீட்டு மானம், மரியாதை, கௌரவம் எல்லாமே போச்சு” என்று மைத்துனரின் மகளைச் சாடவும் தவறவில்லை அவர்.

ஆனால் ஸ்ரீதர் அவரது நாவுக்கு அதிகம் வேலை வைக்காதவனாய் வந்த விசயத்தை ஆரம்பித்தான்.

“எனக்கு கோயம்புத்தூருக்கு டிரான்ஸ்பர் கிடைச்சிருக்குனு ரத்தினவேல் சார் கிட்ட ஏற்கெனவே சொல்லிருந்தேன் பாட்டி! இன்னும் ரெண்டு நாள்ல நானும் அம்மாவும் அங்க கிளம்புறதா இருக்கோம்… அதான் இங்க வேண்டியப்பட்டவங்க கிட்ட சொல்லிட்டுப் போகலாம்னு வந்தோம்”

அவன் முடிக்கவும் ரேவதி ஆரம்பித்தார்.

“இவனோட அப்பா தவறுனதுக்கு அப்புறம் எங்களுக்குனு இருந்த சொந்தம் எல்லாரும் விலகிப் போயிட்டாங்கத்த… எங்க நாங்க ஆதரவுக்குனு அவங்க வீட்டுப்பக்கம் வந்துடுவோமோனு பயந்து ஒதுங்கிட்டாங்க… ஆனா அவரு என்னையும் என் பிள்ளையும் அப்பிடி அடுத்தவங்கள அண்டி பிழைக்கிற நிலையில விட்டுட்டுப் போகல… அதனால சொந்தம்ங்கிற வார்த்தையே கசந்து போயிடுச்சு… இங்க எங்களுக்குனு இப்போதைக்கு இருக்கிற சொந்தம் நீங்க மட்டும் தான். மதுராவுக்கும் ஸ்ரீதருக்கும் கல்யாணம் ஆகலனா என்ன? ரத்தினம் அண்ணன் எனக்கு அண்ணன் இல்லாம போயிடுவாரா? இல்ல மதினி தான் என்னை வேத்துமனுசியா நினைச்சிடுவாங்களா?”

அன்னையும் மைந்தனும் பேசியது அக்குடும்பத்தினரை இன்னும் தர்மச்சங்கடத்தில் ஆழ்த்தியது. அழகம்மை ரேவதியின் கரத்தை வருடிக் கொடுத்தவர்

“என் ராசாத்தி! நீ வேணும்னா பாரு, உன் மனம் போல உனக்கு மருமக வருவா! நம்ம ஸ்ரீதரனை கட்டிக்க எங்க வீட்டுக் கழுதைக்குக் குடுத்து வைக்கல… அவனுக்குனு பிறந்தவ சீக்கிரமா அவனைத் தேடி வருவா… ஸ்ரீதரன் கல்யாணம் ஜாம் ஜாம்னு நடக்கும்… நாங்களாம் வந்து நடத்திக் குடுப்போம்” என்று வாஞ்சையுடன் சொல்லி ஸ்ரீதரின் கன்னத்தைக் கிள்ளி முத்தமிட்டுக் கொண்டார்.

ரத்தினவேல் பாண்டியன் நினைவு வந்தவராய் “என் பெரிய மகளை ஊட்டில தான் கட்டிக் குடுத்துருக்கோம் தம்பி! என் அண்ணன் பொண்ணு தான்… மாப்பிள்ளை வெளிநாட்டுல இருக்காப்ல… பொண்ணும் பேத்தியும் மட்டும் ஊட்டில இருக்காங்க… எங்க சம்பந்திவீட்டுக்காரங்க ரொம்ப நல்ல மாதிரி! அவ இஷ்டப்பட்ட மாதிரி அவளுக்கு பூக்கடை வச்சுக் குடுத்துட்டாங்க” என்று கர்வமாய் சொல்ல

“மாமா! அது பூக்கடை இல்ல… பொக்கே ஷாப்” என்று திருத்தினாள் அவரது மருமகள் லீலாவதி. கூடவே

“அவங்க ஷாப் லவ்டேல்ல இருக்கு தம்பி… அவங்களும் அவங்க நாத்தனாரும் சேந்து தான் வச்சிருக்காங்க… வச்சு கொஞ்சநாள்ல அவங்களுக்குனு ஒரு பேரையும் வாங்கிட்டாங்க” என்று பெருமிதமாய் உரைத்தாள்.

ஸ்ரீதர் உடனே நெற்றியைச் சுருக்கியவன் “அப்போ மதுரா அவங்க வீட்டுக்குப் போயிருக்காங்களானு விசாரிச்சிங்களா அக்கா?” என்று கேட்க

“அவரு மதினிக்குப் போன் பண்ணிக் கேட்டாரு தம்பி… ஆனா அவ அங்கயும் போகல… வீணா மதினிக்குத் தான் மனவருத்தம்” என்ற லீலாவதி வழக்கத்தை விட இன்று அதிகமாகவே பேசிவிட்டதாய் உணர்ந்தவள் மீண்டும் சமையலறைக்குள் சென்றுவிட்டாள்.

அதன் பின்னர் வழக்கமான அன்பான பேச்சுக்களுக்குப் பின்னர் ஸ்ரீதரும் ரேவதியும் விடைபெறும் நேரம் வர விசாலாட்சி ரேவதியிடம்

“என் பொண்ணு பண்ணுனது பெரிய தப்பு மதினி… அதை மனசுல வச்சுக்காம பேசுற உங்க நல்ல மனசுக்குத் தங்கம் போல மருமக வருவா… நீங்க நல்லா இருக்கணும் தம்பி… ஊரை விட்டுப் போனதும் எங்களை மறந்துடாதிங்க” என்று வாஞ்சையாய் கூற ஸ்ரீதரும் ரேவதியும் அதை ஆமோதித்தவர்கள் அனைவரிடமும் சொல்லிக் கொண்டு கிளம்பினர்.

அவர்கள் சென்ற பின்னர் சங்கரபாண்டியன் சாமியாடத் தொடங்கினார்.

“எவ்ளோ நல்ல சம்பந்தம்! இந்த மாப்பிள்ளை மட்டும் அமைஞ்சிருந்தா நம்ம தொழிலுக்கும் பிரச்சனை இல்லாம இருந்திருக்கும்… எல்லாத்தையும் கொட்டிக் கவுத்திட்டுப் போயிட்டா சின்னக்கழுதை”

அழகம்மைக்குப் பேத்தி மீது வருத்தம் தான். ஆனால் வீட்டை விட்டுக் கிளம்பும் செல்லும் அளவுக்கு அவளுக்குத் தங்கள் மீது நம்பிக்கையற்றுப் போக தாங்கள் தானே காரணம் என்பதை புரிந்து கொண்டதால் அவருடைய கோபம் இப்போது மருமகன் வசம் திரும்பியது.

“எய்யா நீரு கொஞ்சம் சும்மா இருக்கிறீரா? இனிமேலயாச்சும் கட்டப்பஞ்சாயத்து அடிதடிய விட்டுட்டு ஒழுங்கா விவசாயத்தைப் பாத்து நம்ம ரைஸ் மில்ல நடத்துனா போன மகராசி திரும்ப வர வாய்ப்பு இருக்கு… இல்லனா உள்ளதும் போச்சுனு வீட்டோட கடைக்குட்டிய மறந்துட்டு உக்காந்துட வேண்டியது தான்… என் புருசன் என்ன குறை வச்சாரு?

நிலம் நீச்சுனு வாங்கிப் போட்டு ஒன்னுக்கு மூனு ரைஸ் மில்லு, தென்னந்தோப்புனு வசதியான வாழ்க்கைய குடுத்துட்டுத் தானே கண்ணை மூடுனாரு… இன்னும் ஏய்யா இப்பிடி அடிதடினு சுத்துறிய? பேரன் எடுத்தாச்சு… இன்னும் மீசைய முறுக்கிட்டுப் பஞ்சாயத்து பண்ணுனா நல்லாவா இருக்கு? என் கூறுக்கு எட்டுனத சொல்லிட்டேன்… இனிமே உங்க இஷ்டம்யா… என்னமோ பண்ணுங்க” என்று கோபமாய் ஆரம்பித்துச் சலிப்பாய் முடித்துவிட்டுத் தளர்ந்த நடையுடன் தனது அறைக்குள் சென்று முடங்கிக் கொண்டார் அவர்.

அவர் சென்ற பிறகு விசாலாட்சியும் லோகநாயகியும் அதே பாட்டைப் பாட வீட்டு ஆண்களுக்கு முதல் முறையாக தாங்கள் செய்வது தவறோ என்ற சந்தேகம் மனதில் துளிர் விட ஆரம்பித்தது.

இது வரை தங்களை எதிர்த்துப் பேசாத வீட்டுப்பெண்மணிகள் ஒரே அணியாக நின்று தங்களுக்கு அறிவுரை சொல்லுவது வினோதமாய் தோன்றினாலும் கொஞ்சம் அவர்கள் அறிவுரையைக் கேட்டுத் தான் பார்ப்போமே என்ற முடிவுக்கு மெல்ல மெல்ல அவர்கள் வந்து கொண்டிருந்தனர்.

அதே நேரம் ஸ்ரீதரும் ரேவதியும் அடுத்து வந்த இரு தினங்களில் கோயம்புத்தூருக்கு தங்கள் ஜாகையை மாற்றிக்கொண்டு கிளம்பிவிட்டனர். ஸ்ரீதர் குற்றப்பிரிவு இணை ஆணையராகப் பொறுப்பெற்றுக் கொண்டான். எதற்கும் இருக்கட்டுமே என்று கார்த்திக்கேயனிடம் இருந்து சங்கவியின் முகவரியை வாங்கிக் கொண்டான்.

ஆனால் பொறுப்பேற்று ஒரு வாரத்துக்கு அவனால் அங்கிங்கு நகர முடியாதபடி வேலைச்சுமை அவனுக்கு. எனவே மதுரவாணியைத் தேடும் வேலையை அப்போதைக்கு ஒத்திவைத்தான்.

அவனது நிலை இவ்வாறு இருக்க அவனை மணக்கப் பிடிக்காது தமக்கை வீட்டில் தஞ்சமடைந்திருந்த மதுரவாணி தனது புதிய வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியையும் அனுபவித்து வாழ்ந்து கொண்டிருந்தாள்.

தினந்தோறும் ஸ்ரீரஞ்சனியுடன் பொக்கே ஷாப்புக்குச் செல்பவள் மாலை வரை அங்கே இருந்து பொறுப்பாய் விற்பனையைக் கவனித்துக் கொண்டாள்.

சங்கவியும் யாழினியும் ஹில்டாப் மூலம் கிடைத்த திருமண ஆர்டரை முடிக்கும் முனைப்போடு இருந்ததால் அவர்கள் அந்த வேலையில் தீவிரமாயினர்.

எனவே மதுரவாணி சந்தோசமாக அந்த பொக்கே ஷாப் எனும் குட்டி உலகத்தில் நாட்களை ஆனந்தத்துடன் கழித்துக் கொண்டிருந்தாள். அங்கே பணிபுரியும் பெண்களுடன் பேசிப் பழகி அவர்களைத் தனது தோழிகளாக்கிக் கொண்டாள்.

அவர்களின் பொக்கே ஷாப்புக்கு அருகே சுற்றுலாப்பயணிகளின் வரத்து சற்று அதிகம். எனவே அங்கு சின்ன சின்ன கடைகள் நிறைந்திருக்கும். அதில் அவளுக்குப் பிடித்தமானது ஒரு முதியவரும் அவரது மனைவியும் வைத்திருக்கும் மாலை நேர தேநீர் விடுதி.

அங்கே கிடைக்கும் மசாலா தேநீரின் சுவைக்கு மதுரவாணியின் நாக்கு அடிமையாகி விட்டது என்றே கூறலாம். தினமும் மாலை பொக்கே ஷாப்பை மூடிவிட்டு ஸ்ரீரஞ்சனி புறப்படும் போது அவளை அனுப்பி வைத்துவிட்டு அங்கே ஆஜராகி விடுவாள்.

அந்த முதியவரிடமும் மூதாட்டியிடமும் அரட்டை அடித்தபடியே மசாலா தேநீரோடு இரண்டு கீரை வடையை உள்ளே தள்ளிவிட்டுத் தான் வீட்டுக்குப் புறப்படுவாள். இது அவளது தினசரி பழக்கமாகவே மாறிவிட்டிருந்தது.

வழக்கம் போல லவ்டேலில் பருவமழை ஆரம்பித்துவிட்டது. அந்தச் சில வாரங்களில் வானம் சீக்கிரமே இருளைப் பூசிக்கொண்டது. அன்றைய தினம் இலேசான சாரல் பூமியை முத்தமிட ஆரம்பிக்கும் போதே ஸ்ரீரஞ்சனி பணியாளர்களை வீட்டுக்குச் செல்லுமாறு பணித்தவள் மதுரவாணியுடன் கிளம்பத் தயாரானாள்.

ஆனால் அவளோ தனது வழக்கமான மசாலா தேநீரைச் சுவைக்காது தனக்கு ஜென்மசாபல்யமே இல்லையென்பவள் ஆயிற்றே! அவளது பிடிவாதத்தை மாற்ற இயலாதவளாய் அவளிடம் குடையை நீட்டிய ஸ்ரீரஞ்சனி

“இப்போ டைம் ஃபைவ் தேர்ட்டி… உனக்கு பதினைஞ்சு நிமிசம் தான் டைம்… அதுக்குள்ள டீ குடிச்சிட்டு வீட்டுக்கு வந்துடணும்… இல்லனா அவ்ளோ தான்” என்று மிரட்டிவிட்டு வீட்டுக்குக் கிளம்பினாள்.

அவளிடம் நல்லப் பெண்ணாய் தலையை உருட்டிய மதுரவாணி தேநீர் விடுதியை அடைந்த போதே வானம் இதோ கொட்டித் தீர்க்கப் போகிறேன் என கட்டியம் கூறிவிட்டது.

குளிர்க்காற்று அவள் அணிந்திருந்த ஆரஞ்சு வண்ண லாங் ஸ்கர்ட்டைத் தாண்டி மேனியைத் தீண்டி சில்லிட வைத்தது. குளிருக்கு இதமாய் சூடான மசாலா தேநீர் தொண்டையை நனைத்து உள்ளுக்குள் இளஞ்சூட்டை உண்டாக்கியது.

அதன் சுவையை அனுபவித்தபடி மிடறு மிடறாய் அருந்தியவள் மழை தூர ஆரம்பிக்கவும் வேகமாய் தேநீரை அருந்திவிட்டுக் கட்டணத்தைக் கொடுத்துவிட்டுக் கிளம்ப எத்தனிக்கையில் அந்த முதியவரும் மூதாட்டியும் கூட கடையை மூடிவிட்டுக் கிளம்பினர்.

மழை வேகமாகப் பெய்ய ஆரம்பிக்கவும் அவள் குடையை விரித்து நடக்க ஆரம்பித்தவள் காற்று சற்று பலமாக வீசவும் குடை ஒரு பக்கமாய் சாய்ந்ததில் நனைந்துவிட்டாள். அப்போது தான் அந்த முதியத் தம்பதியினர் குடையின்றி நனைய ஆரம்பித்ததைக் கவனித்தாள்.

விறுவிறுவென அவர்களிடம் ஓடியவள் தனது குடையை அவரிடம் நீட்ட “வேண்டாம் பாப்பா! வயசுப்பிள்ளை நனைஞ்சுட்டு வீட்டுக்குப் போறது நல்லாவா இருக்கும்? எங்க வீடு பக்கத்துல தான் இருக்கும்மா” என்று அம்முதியவர் சொல்ல

“இப்போ மட்டும் நீங்க குடைய வாங்கலனா நான் நாளைல இருந்து உங்க கிட்ட டீ குடிக்காம எதிர்ல இருக்குற ரெஸ்ட்ராண்டுக்குப் போயிடுவேன்” என்று பொய்யாய் மிரட்ட அம்முதியவரின் மனைவி நமட்டுச்சிரிப்புடன் குடையை வாங்கிக் கொண்டார்.

“டாட்டா! பாத்து பத்திரமா போங்க தாத்தா… பை பாட்டி” என்று கையசைத்துவிட்டு மழையில் நனைந்தபடி கைகளை மார்பின் குறுக்கே கட்டிக்கொண்டு கிட்டத்தட்ட ஓட்டமும் நடையுமாய் வீட்டை நோக்கிச் செல்லும் பாதையில் நடக்கத் தொடங்கினாள்.

அப்போது வழி மறித்தாற் போல வந்து நின்றது ஒரு ரெனால்ட் க்விட். முகத்தில் வழிந்த மழைநீரை வழித்துச் சுண்டிவிட்டவள்

“சரியான முட்டாபய டிரைவர்… கொஞ்சம் விட்டா இந்தச் சின்னவயசுலயே எனக்குப் பரலோகப்பிராப்தி வாங்கித் தந்திருப்பான் இடியட்” என்று வாய்க்குள் முணுமுணுத்தபடி காரைத் தாண்டிச் செல்ல ஒரு அடி எடுத்து வைக்க அவளைத் தடுப்பது போல காரின் முன்பக்க கதவு திறந்தது.

மதுரவாணி எரிச்சலுடன் நிமிர்ந்தவள் ஓட்டுனர் இருக்கையில் இருந்தவனைக் கண்டதும் இயல்பானாள்.

“இப்போ எதுக்கு வழிப்பறிக்கொள்ளைக்காரன் மாதிரி பிஹேவ் பண்ணுற? மழை எப்பிடி கொட்டுது பாத்தேல்ல… நான் வீட்டுக்குப் போகணும்”

“அதுக்குத் தான் காரை நிறுத்துனேன்… வந்து உக்காரு… நான் வீட்டுல டிராப் பண்ணுறேன்” என்று சொன்னபடி காரில் அமர்ந்திருந்தவன் மதுசூதனன் தான்.

மதுரவாணி ஒரு முறை தன்னைப் பார்த்துக் கொண்டவள் ஈர உடையுடன் அவனுடன் செல்ல மனமற்றவளாய் “இல்ல! எனக்கு மழைல நனையுறது ரொம்ப பிடிக்கும்… நான் நனைஞ்சிட்டே வீட்டுக்குப் போயிடுவேன்” என்று சொல்லிச் சமாளித்தாள்.

“இஸிட்? உனக்கு மழைல நனைய ரொம்ப பிடிக்கிற மாதிரியே சில பேருக்கு இப்பிடி நனைஞ்சிட்டுப் போற பொண்ணை வெறிக்கிறது ரொம்ப பிடிக்குமாம்… அப்பிடிப்பட்டவங்க கண்ணு முன்னாடி என்னையும் பாரு என் அழகையும் பாருனு நனைஞ்சிட்டுப் போகப் போறியா? இல்ல என் கூட சேஃபா கார்ல வர்றியா?” என்று கேட்டவனிடம் உன்னை அப்படி எண்ணித் தான் நான் வர மறுத்தேன் என அவளால் சொல்லவா முடியும்!

வேறு வழியின்றி காருக்குள் அமர்ந்தவள் கதவை இழுத்துச் சாத்திக்கொள்ள கார் கிளம்பியது.

தன்னுடன் தனியே வர சங்கடமாய் உணர்வதைப் புரிந்துகொண்ட மதுசூதனன் காரை ஓட்டியபடியே அவளிடம் பேச்சு கொடுத்தான்.

“எதுக்கு கர்ணனோட லேடி வெர்சனா மாறி உன் குடைய அந்த ஓல்ட் கபிள்கு குடுக்கணும்? ஏன் இப்பிடி நனையணும்?”

“நான் அவங்களுக்குக் குடை குடுத்தது உனக்கு எப்பிடி தெரியும்?”

“நீ டீ குடிக்க ஆவலா ஓடி வந்தப்போ நான் ஆப்போசிட் ரெஸ்ட்ராண்டுக்குப் போயிட்டிருந்தேன்… அங்க இருந்து பாத்தா வெளியே நடக்கிறது எல்லாம் கண்ணாடி வழியே தெளிவா தெரியுமே! அதை விடு! நீ ஏன் குடைய குடுத்த?”

“அவங்க வயசானவங்கப்பா… அதுவுமில்லாம இப்பிடி தினசரி உழைச்சு அதுல வர்ற வருமானத்துல வாழுறவங்களுக்குக் கடவுள் குடுத்த பெரிய செல்வமே அவங்களோட ஹெல்த் தான்… இப்பிடி கொட்டுற மழைல நனைஞ்சா கண்டிப்பா அவங்க உடம்புக்கு முடியாம போயிடும்… அப்புறம் செலவுக்கு என்ன பண்ணுவாங்க? பாவம்ல”

கண்ணைச் சுருக்கி இரக்கத்தை அவள் காட்டிய விதம் மதுசூதனனுக்குப் பிடித்திருந்தது. அவளது பேச்சுக்குத் தலையாட்டியபடி சாலையில் கண் பதித்தான்.

மதுரவாணி அவனை ஒரு கணம் கூர்ந்து நோக்கியவள் பின்னர் சந்தேகமாய் “உனக்கு ரீசண்டா தானே பிரேக்கப் ஆச்சு? ஆனா உன்னைப் பாத்தா அப்பிடி தெரியலயே?” என்று வினவ அவன் நக்கலாய் அவளை நோக்கவும்

“அது இல்லப்பா! பொதுவா லவ் ஃபெயிலர் ஆனவங்க ஒன்னு வாழ்வே மாயம் கமலஹாசன் மாதிரி ஆயிடுவாங்க… இல்லனா தேவதாஸ் மூவி ஷாரூக்கான் மாதிரி ஆயிடுவாங்க… அதுவும் இல்லனா அர்ஜூன் ரெட்டி வி… நோ நோ! எனக்கு அவனைப் பிடிக்காது! வேற யாரு?…” என்று யோசித்தவள் நினைவு வந்தவளாய்

“ஆங்! வாரணம் ஆயிரம் சூரியா மாதிரி ஆயிடுவாங்க… ஆனா நீ அப்பிடிலாம் ஆகலயே! இப்போவும் பழையபடி ஸ்மார்ட்டா ஹாண்ட்சம்மா தான் இருக்க… அதான் கேட்டேன்” என்று சொல்லித் தோளைக் குலுக்கிக் கொண்டாள்.

மதுசூதனன் அதற்குச் சத்தமாய் நகைத்தவன் “நிறைய சினிமா பாத்து கெட்டுப் போயிருக்க… ஒரு தடவை பிரேக்கப் ஆயிட்டுனா அதுக்கு வாழ்க்கையே முடிஞ்சு போயிட்டுனு என்னை நானே ஏன் ஸ்பாயில் பண்ணிக்கணும்?”

“அதுவும் சரி தான்! ஒருவேளை நீ பூவே உனக்காக விஜய் மாதிரி ஒரு செடில ஒரு தடவை தான் பூ பூக்கும் கேட்டகரியா?” என்று கேட்க மதுசூதனன் மானசீகமாகத் தலையிலடித்துக் கொண்டான்.

“வாட் ரப்பிஷ்? செடியும் மனுசனும் ஒன்னா? லைப்ல லவ், பிரேக்கப் இதுலாம் பாஸிங் கிளவுட்ஸ் மாதிரி… அதுலயே தேங்கி நின்னுட்டோம்னா வாழ்க்கை நாசமா போயிடும்… பீ பிராக்டிக்கல்” என்றவனை ஆச்சரியமாகப் பார்த்தவள்

“ம்ம்… நீ ரொம்பத் தெளிவா தான் இருக்க… ஆனா நான் தான் நீ ஒரு தாடி வைக்காத தேவதாஸ் மாதிரி நான் அப்பிடி காதலிச்சேன், இப்பிடி காதலிச்சேனு உளறுவ… மீசையில்லாத பாரதி மாதிரி கவிஞன் அவதாரம் எடுத்து பாரதிக்கு ஒரு கண்ணாம்மானா எனக்கு என்னோட தனு பேபினு சொல்லுவனு என்னென்னமோ நினைச்சேன்… ப்ச்.. விடு… இதே மாதிரி தெளிவு காதல் முறிஞ்சு போன எல்லாருக்கும் இருந்தா லவ் ஃபெயிலர் ஆயிட்டுனு தற்கொலை பண்ணிக்கிறவங்க எண்ணிக்கையாச்சும் குறையும்” என்று சொல்ல அவளது நக்கலும் நையாண்டியுமான பேச்சில் சிரித்தபடியே காரை ஓட்டியவன் டெய்சி ரெசிடென்சியல் கம்யூனிட்டிக்கு வந்துவிட்டான்.

மதுரவாணி காரிலிருந்து இறங்கியவள் அவனை வீட்டுக்கு வரும்படி அழைக்க மதுசூதனன் ஒரு நிமிடம் யோசித்தவன் பின்னர் சரியென ஒத்துக் கொண்டு காரை கம்யூனிட்டியின் விசிட்டர்ஸ் பார்க்கிங் ஏரியா உள்ள மேட்டுப்பகுதியில் நிறுத்திவிட்டு அவளுடன் தேயிலைத்தோட்டங்களினூடே செல்லும் சரிவில் உள்ள படிகளில் இறங்க ஆரம்பித்தான்.

மழை சுத்தமாக நின்று போயிருக்க தேயிலைச்செடியின் இலைகளில் நீர்முத்துக்கள் கோர்த்திருந்த அழகை ரசித்தபடி நடந்த இருவரின் தோள்களும் உரசிக்கொள்ள மதுரவாணிக்கு ஒன்றும் வித்தியாசம் தெரியவில்லை.

ஆனால் மதுசூதனன் தான் மின்சாரம் தாக்கியது போல நின்று விட்டான். மீண்டும் இரயில் நிலையம், பச்சைநிற தாவணி என நினைவு அந்த முகமறியாப்பெண்ணிடம் சென்று விட்டு தனக்கு முன்னே சென்று கொண்டிருக்கும் மதுரவாணியிடம் வந்து நின்றது.

இவள் அவளாக இருக்க வாய்ப்பே இல்லை. முகம் தெரியாதவளின் தெளிவற்ற பிம்பம் அவனுள் வழக்கம் போல எழுந்து அவனிடம் “சாரி சார்” என்று கேட்க அவன் முன்னே சென்று கொண்டிருந்தவள் “ஹலோ என்னாச்சு? அதான் உனக்கு பிரேக்கப் ஆயிட்டுல்ல… இனிமே ட்ரீம் வேர்ல்ட்ல உனக்கு நோ எண்ட்ரி தான்… ஒழுங்கா பாதைல கவனம் வச்சு நடந்து வாப்பா… எசகு பிசகா விழுந்து வச்சா உன்னைத் தூக்கிட்டுப் போக என் உடம்புல பலம் இல்ல” என்று அமர்த்தலாய் மொழிய தலையை உலுக்கிக் கொண்ட மதுசூதனன் அவளை நோக்கிச் சென்றான்.

இருவரும் சேர்ந்து நடந்து செல்ல ஆரம்பித்தனர்.

முகம் மறந்த சிலரின் நியாபகங்கள் நெஞ்சில் பதிந்து சில நேரங்களில் கனவாய், பல நேரங்களில் தெளிவற்ற பிம்பமாய் தோன்றுவதுண்டு. ஆனால் நம்மால் அவர்களை ஏனோ தெளிவாய் நினைவுப்படுத்திக் கொள்ள முடிவதில்லை.

அலை வீசும்🌊🌊🌊