🌊அலை 37(Final)🌊

Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels

செல்பேசியின் தொடுதிரை அறியும்!

உன்னுடன் பேசும் நொடிகள்

எனக்கு விலை மதிப்பற்றவை என்பதை!

எனது தலையணை அறியும்!

எத்தனை நாள் நீயின்றி

நான் வருந்துகிறேன் என்பதை!

என்னுள் உனக்காய் துடிக்கும்

என் இதயம் அறியும்!

அது துடிப்பதே உன்னுடன்

சேரும் நாளுக்காக என்பதை!

மதுசூதனனின் இல்லத்தில் அமைதி நிலவியது. வைஷாலி இருந்தால் அவளும் அவனுமாய் அடிக்கும் லூட்டிகள் அனைத்தும் இப்போது கனவு போல தோன்றவே ராமமூர்த்திக்கும் மைதிலுக்கும் மகளின் பிரிவு மெதுமெதுவாய் மனதை வாட்ட தொடங்கியது.

அதை உணர்ந்தவனாய் மதுசூதனன் திருமணத்துக்காக வேலை செய்து களைத்துப் போயிருந்தாலும் அதை புறம் தள்ளிவிட்டு மண்டபத்திலிருந்து திரும்பியதிலிருந்து அவர்களுடன் நேரம் செலவிட்டவன் மதுரவாணியிடம் அன்றைய இரவு குட்நைட் கூட சொல்லவில்லை.

மறுநாளும் வைஷாலியும் திலீபும் மறுவீட்டுக்கு வருவதால் சகோதரியையும் நண்பனையும் வரவேற்கும் ஆர்வத்தில் சுற்றிக் கொண்டிருந்தவனுக்கு ஸ்ரீரஞ்சனியிடம் இருந்து கால் வரவும் என்னவோ ஏதோ என பதறி எடுத்தவன் மதுரவாணியும் நதியூருக்குப் பயணமாகிறாள் என்ற தகவலைக் கேட்டதும் ஒரு கணம் செய்வதறியாது திகைத்தான்.

பெற்றோரிடம் இதைச் சொல்லவும் “இன்னும் கொஞ்ச நாள்ல கல்யாணம்… அது வரைக்கும் அம்மா அப்பா கூட இருக்கணும்னு ஆசைப்பட்டிருப்பாடா… நீ போய் வழியனுப்பி வச்சிட்டு வா… அதான் போன் இருக்கே… டெய்லியும் வீடியோ கால்ல பேசிக்கோங்க” என்ற அன்னையிடம் இந்தச் சில நாட்களில் அவர்களுக்கிடையே நடந்த கருத்து வேறுபாடுகளை அவன் எப்படி சொல்லுவான்!

ஆனால் ஸ்ரீதரிடம் பகிர்ந்து கொள்ளலாமே! உடனே அவனை அழைத்து விசயத்தைச் சொல்ல அவன் இன்று ஆப் டியூட்டி என்பதால் உடனே கிளம்பியவன் மதுசூதனனை அழைத்துக் கொண்டு கோவை சந்திப்புக்கு வந்து சேர்ந்தான்.

அங்கே மதுரவாணியின் மொத்தக் குடும்பமும் இரயிலுக்காக காத்திருந்தனர். குழந்தைகள் சாய்சரணும், ஆரத்யாவும் அவளிடம் ஏதோ சொல்லி முகத்தை அழுகைக்கு மாற்ற அவள் அவர்களைச் சமாதானம் செய்து சங்கவியிடமும் யாழினியிடமும் ஏதோ சொல்வது தூரத்தில் வரும் போதே தெரிந்தது.

அருகே வந்து நின்றவன் தன்னைப் பிரிந்து செல்லுமளவுக்கு தான் அவள் மனதை வருத்திவிட்டோமோ என எண்ணிக் கலங்கி அவளைப் பிரிந்து தன்னால் இருக்க முடியாது என்று உரைக்க மதுரவாணியோ

“இந்த இருபத்தியேழு வருசம் நீ தனியா தானே இருந்த மது?” என்று கேட்டு அவனுடன் சேர்த்து தங்கள் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்த ஸ்ரீதர் மற்றும் ஸ்ரீரஞ்சனியையும் அதிர வைத்தாள்.

மதுசூதனன் பதில் சொல்ல முடியாமல் திணற உதடு பிரிக்காமல் நகைத்தவள் உண்மைக்காரணத்தைச் சொல்ல ஆரம்பித்தாள்.

“நான் ஏன் வீட்டை விட்டு வந்தேனு உங்க மூனு பேருக்குமே நல்லா தெரியும்…. எனக்குச் சுதந்திரம் வேணும்னு ஆசைப்பட்டேன்… அடிதடி இல்லாத ஒரு அமைதியான வாழ்க்கைய வாழணும்கிறது என்னோட கனவு… இங்க இருந்த இவ்ளோ நாளும் எனக்குக் கிடைச்ச சுதந்திரத்தை அனுபவிச்சு வாழ்ந்துட்டேன் மது… எனக்குப் பிடிச்ச டிரஸ்ஸை போடுறது, பிடிச்ச இடத்துக்குப் போறது, கொஞ்சநாள் இருந்தாலும் என் இஷ்டப்படி நான் வேலைக்குப் போனது, பிடிச்சதை சாப்பிடுறதுனு எல்லாமே என் இஷ்டத்துக்குத் தான் நடந்துச்சு…

அதே மாதிரி எந்த அடிதடி எனக்குப் பிடிக்கலயோ அதை இப்போ என் குடும்பத்து ஆளுங்க கை கழுவிட்டாங்க; என் அண்ணனுங்க அவங்களோட ஒய்பை மரியாதையா நடத்துறாங்க… நான் அவங்களுக்கு எத்தனையோ தடவை சொல்லியும் கேக்காதவங்க என்னோட பிரிவுல மனசு மாறிருக்காங்க மது! இதெல்லாம் பாக்குறப்போ மனசு நிறைஞ்சிடுச்சு!

இப்போ எனக்குப் புதுசா ரெண்டு ஆசை வந்திருக்கு… அதுக்குத் தான் ஊருக்குப் போறேன்” என்று சொல்லி நிறுத்தவும் மூவரும் குழம்பி விழித்தனர். அதைப் பார்த்து புன்முறுவல் பூத்தவள் தொடர்ந்தாள்.

“என் குடும்பத்து ஆளுங்க மாறிட்டாங்கள்ல… அவங்களோட கொஞ்சநாள் சந்தோசமா டைம் ஸ்பெண்ட் பண்ணனும்னு ஆசைப்படுறேன்… அப்புறம் உன்னோட லவ்வை திகட்ட திகட்ட அனுபவிக்கணும்னு தோணுது மது… இங்கயே இருந்தா அந்த திரில் வராது… அதான் ஊருக்குப் போறேன்…

டெய்லியும் நீ எனக்குக் கால் பண்ணுற நேரத்துக்காக நான் காத்திருக்கணும்; நைட் யாருக்கும் தெரியாம போர்வைக்குள்ள மொபலை வச்சு உன் கிட்ட பேசணும்; சோஷியல் மீடியால நான் போடுற போஸ்டுக்கு நீயும் நானும் கமெண்ட்ல ரிப்ளை பண்ணி விளையாடணும்னு என்னென்னமோ பைத்தியக்காரத்தனமான சின்ன சின்ன ஆசை இருக்கு மது… அதுல்லாம் நான் இங்க இருந்தா நடக்காதுடா”

“ஏன் நடக்காது? நீ சும்மா ஜால்ஜாப்பு சொல்லுற வாணி” என்று குழந்தை போல் முகம் சுருக்கியவனின் மூக்கைச் செல்லமாக நிமிண்டியவள்

“இங்க உன் கிட்ட நான் பேசணும்னா நீ நேர்ல வந்துடுவ… இல்லனா நடுராத்திரி திருடன் மாதிரி வந்து பயம் காட்டுவ… இதுல்லாம் எனக்கு பழகி போச்சு மது! எனக்கு உன்னை லவ் பண்ணணும்… தூரத்துல இருந்துட்டு உன்னை எப்போடா நேர்ல பாப்போம்னு உனக்காக காத்திருக்கிற ஒவ்வொரு நிமிசத்தையும் அனுபவிச்சு லவ் பண்ணணும்.. ப்ளீஸ் மது! நான் ஊருக்குப் போறேன்டா” என்று தலையைச் சரித்து அவள் கேட்ட விதத்தில் அவனுக்கு மறுக்கத் தோணவில்லை.

“சரி! ஆனா டெய்லி நான் கால் பண்ணி உன்னைத் தொந்தரவு பண்ணுவேன்” என்ற நிபந்தனையுடன் ஒத்துக் கொண்டான் அவன்.

மதுரவாணி அவன் சம்மதம் சொன்னதில் மகிழ்ந்தவள் ஸ்ரீதரையும் ஸ்ரீரஞ்சனியையும் பார்த்து

“ரெண்டு பேரும் கொஞ்சம் நெருங்கி நின்னு எங்களை மறைச்சுக்கோங்க!” என்று கட்டளையிட அவர்கள் ஏனென்று புரியாது சேர்ந்து நிற்க தனது குடும்பத்தினருக்குத் தான் நிற்பது தெரியாது என்பதை உறுதி செய்து கொண்டவள் மதுசூதனனை இறுக்கமாய் அணைத்தவள் அவனது கன்னத்தில் அழுத்தமாய் முத்தமிட்டாள்.

கூடவே “ஐ லவ் யூ சோ மச் மது! நம்ம ஃபர்ஸ்ட் மீட் பண்ணுன இதே இடத்துல வச்சு உன் கிட்ட ஐ லவ் யூ சொல்லிட்டேன்… ஐ ஃபீல் சோ ஹேப்பி” என்று குழந்தையாய் குதூகலித்தவளின் கன்னத்தில் அவனும் அழுத்தமாய் இதழ் பதித்தான்.

இதை வேடிக்கை பார்த்த ஸ்ரீதர் “அட போதும்யா! இது கோயம்புத்தூர் தான்! அமெரிக்கா இல்ல! பட்டப்பகல்ல ஆள்கள் வந்து போற இரயில்வே ஸ்டேசன்ல இப்பிடி பொசுக்குனு மாத்தி மாத்தி கிஸ் பண்ணுனா என்ன அர்த்தம்?” என்று கேலியாக வினவ

“நீ வேற மேன்! நாங்க இன்னும் ரொம்ப நாள் கழிச்சு தானே மீட் பண்ண முடியும்… அது வரைக்கும் என் செல்லத்தோட ஸ்வீட் கிஸ்ஸ நினைச்சிட்டே கல்யாண தேதி வரைக்கும் காலத்தை ஓட்டிருவேன்… அது உனக்குப் பொறுக்கலயா?” என்று பொய்யாய் கோபித்தவன்

“வாணி இன்னும் ஒரே ஒரு தடவை எனக்காக யோசிடி!” என்று கெஞ்ச அவளோ மாட்டேன் என்று தலையாட்ட இரயில் வரும் சத்தம் கேட்டது.

“மதுரா ட்ரெயின் வந்துடுச்சுல… மாப்பிள்ள கிட்ட அப்புறமா போன்ல பேசிக்கலாம்” என்ற தந்தையின் அழைப்பு காதில் விழ அவனிடம் இருந்து விலகியவள் பெற்றோரை நோக்கி நகர்ந்தாள்.

நதியூர் குடும்பத்தார் அனைவரும் முன்பதிவு பெட்டியில் சென்று அமர மதுரவாணி தனது சகோதரியிடமும் யாழினியிடமும் டாட்டா காட்டிவிட்டு ஸ்ரீதரையும் ஸ்ரீரஞ்சனியையும் நோக்கிப் புன்னகைக்க அவர்களும் டாட்டா காட்டினர்.

 மதுசூதனன் சிலையாய் நின்றவன் இரயில் நகரவும் உணர்வு பெற்றவனாய் கையசைக்க காதலனிடம் விடைபெற்றாள் மதுரவாணி! இரயில் மெதுமெதுவாய் நகர்ந்து ஒரு புள்ளியாய் மறைவதைப் பார்த்த பிறகும் அங்கிருந்து செல்ல மதுசூதனனுக்கு மனமில்லை. அவளை முதலில் சந்தித்த இடம் அல்லவா!

ஏக்கத்துடன் இரயில் சென்ற திசையை வெறித்தவனுக்கு திருமணத்துக்கு மிச்சமிருக்கும் நாட்கள் ஒரு யுகமாய் தோன்றி வதைத்தது. ஸ்ரீதரும் ஸ்ரீரஞ்சனியும் அவனுக்கு ஆறுதல் சொல்லி அழைத்துச் செல்ல சங்கவியும் யாழினியும் தத்தம் பிள்ளைகளுடனும் ராகினியுடனும் சேர்ந்து இரயில் நிலையத்தை விட்டு வெளியேறினர்.

************

காதலிப்பவர்களுக்கு நாட்களும் நேரமும் வேகமாக நகராது! இது இயல்பு தானே! மதுசூதனனுக்கும் அவ்வாறே! அதிலும் அவனது காதலியோ பல மைல் தூரத்தில் இருக்கிறாள்! நேரில் வந்து பார்க்கவா என்று கேட்டால்

“ஐயோ! அப்பிடி எதுவும் பண்ணிடாத மது! இங்க அதுல்லாம் பழக்கமில்ல” என்று நிர்தாட்சணியமாக மறுத்துவிடுவாள் மதுரவாணி.

வேலை செய்யும் நேரங்களில் அவளை மறந்திருந்தாலும் ஓய்வு நேரங்களில் அவனது நினைவு முழுவதும் அவளே ஆக்கிரமித்திருப்பாள். உடனே போன் செய்து பேச ஆரம்பிப்பவன் அவள் உறங்கிப் போகும் வரை பேசுவான் பேசுவான் பேசிக் கொண்டே இருப்பான்!

மைதிலியும் ராமமூர்த்தியும் அவ்வபோது மருமகளிடமும் அவளது குடும்பத்தினரிடமும் பிரியமாய் உரையாடி மகிழ்வர்.

அதே நேரம் மதுரவாணி இத்தனை நாட்கள் தன்னைப் பிரிந்து வருந்தியதற்கு கைமாறாய் குடும்பத்தினருடன் நேரம் செலவளிக்க ஆரம்பித்தாள்.

விசாலாட்சியின் முந்தானையைப் பிடித்தபடி சுற்றுபவள் அவர் கற்றுக்கொடுத்த உணவுவகைகளை ஆர்வத்துடன் கற்றுத் தேறினாள். அழகம்மையுடன் அரட்டை அடித்தபடி அவர் வைத்திருக்கும் சிறு உரலில் அவருக்கு வெற்றிலை இடித்துக் கொடுப்பாள்!

ரத்தினவேல் பாண்டியனிடம் செல்லம் கொஞ்சுவாள். மாமாவைக் கண்டால் மட்டும் வழக்கம் போல ஒதுங்கி போவாள்! அதற்கு மாறாய் லோகநாயகியின் வெள்ளந்தி பேச்சை நாள் முழுவதும் கேட்டுத் தலையாட்டுவாள்!

இதற்கு மேலாய் உடன் பிறந்தவர்கள் இப்போதெல்லாம் அண்ணிகளைக் கனிவுடன் நடத்துவதைப் பார்த்து அவர்களைக் கேலி செய்வாள்.

“சிங்கம் சூரியா மாதிரி இருந்த என் அண்ணனுங்க இப்போ சில்லுனு ஒரு காதல் சூரியா மாதிரி லவ்வர் பாயா மாறிட்டாங்களே! என்ன ஒரு ஆச்சரியம்” என்று அவள் செய்யும் கிண்டலில் லீலாவதியும் பிரபாவதியும் நாணத்தை மறைத்தபடி புன்னகைப்பர்;

சரவணனோ “உனக்கு வாய்க்கொழுப்பு கூடிப் போச்சு மதுரா” என்று அதட்டுவது போல அசடு வழிந்துவிட்டு நகருவான்.

கார்த்திக்கேயனோ “இன்னும் சூரியா படம் பாக்குறத நிறுத்தலயா நீ? மாப்பிள்ளை கிட்ட சொல்லி இதுக்கு ஒரு முடிவு கட்டுவோம்” என்று அவளையே கலாய்த்து மகிழ்வான்.

வார இறுதி நாட்களில் தவறாமல் சங்கவியும் யாழினியும் போன் செய்து விடுவர். கமலேஷும் மகேஷும் நிரந்தரமாய் இந்தியாவில் தொழில் தொடங்கும் முடிவுக்கு வந்து விட்டனர் என்பதால் இப்போது இருவருக்கும் சற்று நிம்மதி! அதோடு அவ்வபோது ராகினி அடிக்கும் கூத்தைச் சொல்லி நகைப்பதும் வழக்கமாகி விட்டது.

அதே போல ஸ்ரீரஞ்சனியும் ஸ்ரீதரும் கூட ரேவதியுடன் சேர்ந்து தவறாது போனில் பேசிவிடுவர். ஸ்ரீரஞ்சனிக்கு மதுரவாணி இல்லாமல் ஏதோ ஒன்று குறைவாகத் தோணும் போதெல்லாம் அவளுக்கு வீடியோ காலில் அழைத்துவிடுவாள்.

மற்ற நேரங்களில் காதலனின் கனிவுப்பார்வையும், அவர்களின் வருங்காலம் குறித்த வண்ணக்கனவுகளும் அவளது மனதை ஆக்கிரமித்துக் கொள்ளும்! அதே நேரம் ரேவதிக்கும் பார்வதிக்கும் இடையேயான நட்பு இன்னும் இறுகியது. ஸ்ரீரஞ்சனியின் தந்தை பரமேஸ்வரன் இது குறித்துக் கிண்டல் கூட செய்வார்.

“என்னம்மா தங்கச்சி உனக்கு விவரமே பத்தலயே! நீ மாப்பிள்ளைய பெத்தவ… எங்களை அதட்டி உருட்ட வேண்டாமா? இவ கூட சேர்ந்து நீயும் பொழுதன்னைக்கும் செம்பருத்தி கதைய பேசிட்டிருக்கியே” என்பவரின் கேலி கிண்டலைக் கேட்டு பார்வதி நொடித்துக் கொள்வதும் ரேவதி அதைக் கண்டு நகைப்பதும் ஸ்ரீரஞ்சனிக்கும் ஸ்ரீதருக்கும் காணும் போதே கண்கொள்ளா காட்சியாக இருக்கும்!

அதோடு அவள் கோயம்புத்தூரில் தங்கிவிட்டதால் மதுசூதனனின் ஹில்டாப்பில் கணக்குப்பிரிவில் பணியில் சேர்ந்துவிட்டாள். இதனால் ஸ்ரீரஞ்சனி, ஸ்ரீதர், மதுசூதனன் மற்றும் கௌதமுக்கு இடையேயான நட்பு வலுப்பட்டது.

நால்வரும் சேர்ந்து திலீபையும் வைஷாலியையும் கிண்டலடித்து மகிழ்வர். அது அவர்களின் பிரதான பொழுதுபோக்கு கூட! அதனால் அலுவலகத்தில் கூட இதமான சூழல் நிலவுவதாக கௌதம் அனுபவித்துக் கூறுவான்!

திலீபோ விரைவில் கணவன் எனும் பதவியிலிருந்து தந்தை எனும் பதவிக்கு மாறப் போவதால் இதையெல்லாம் கேட்டு நகைத்துக் கொள்வான்! சூலுற்ற மனைவியை ஒரு நிமிடம் கூட பிரிய இயலாதவனாய் நண்பன் தனது சகோதரியின் மீது காட்டும் அக்கறையில் மதுசூதனன் நெகிழ்ந்தே போவான்! ஏனெனில் அவனுக்கும் தாய்மாமன் பட்டம் காத்திருக்கிறதல்லவா!

இவ்வாறு கடந்து போன நாட்கள் அனைத்தும் அவர்கள் அனைவருக்கும் சந்தோசத்தையும் நிம்மதியையும் மட்டும் பரிசாக அளித்துச் சென்றது.

நாட்கள் மாதங்களாகி, மாதங்களும் இனிதே கடக்க இரு ஜோடிகளின் திருமணநாளும் குறிக்கப்பட்டது. ரத்தினவேல் பாண்டியனின் குடும்பத்தில் திருமணம் எப்போதும் பெண்வீட்டிலேயே முடிப்பது வழக்கம் என்பதால் ஸ்ரீவைகுண்டத்தில் இருக்கும் பெரிய திருமண மண்டபத்தில் இரு திருமணங்களையும் வைத்துக் கொள்ளலாம் என்று முடிவெடுத்தனர் பெரியவர்கள்.

எனவே கோயம்புத்தூரிலிருந்து முகூர்த்தநாளுக்கு இரு தினங்களுக்கு முன்னரே நதியூரை அடைந்த மதுசூதனனின் குடும்பத்தினர் சங்கரபாண்டியனின் இல்லத்தில் தங்கிக் கொள்ள ஸ்ரீரஞ்சனியின் குடும்பத்தினர் ரத்தினவேல் பாண்டியனின் இல்லத்தில் தங்கினர்.

அந்த மண்ணில் கால் வைத்ததும் மதுசூதனனின் கண்கள் மதுரவாணியைத் தேடியது. ஆனால் அவளோ அவன் கண்ணில் தென்படுவேனா என்று அடம்பிடித்தாள். அங்கே திருமணத்துக்கு முன்னர் மணப்பெண்ணை மணமகன் பார்க்கும் வழக்கமும் இல்லை. போதாக்குறைக்கு இருவருக்கும் நிச்சயமும் ஏற்கெனவே முடிந்துவிட்டது. பாதுகாப்பு காரணங்கள் கருதி ஸ்ரீதர் நேரடியாக திருமணம் மட்டும் நடந்தால் போதுமென தீர்மானித்துவிட்டதால் திருமண ஏற்பாடுகள் ஜரூராக நடந்தன.

இரு திருமணத்துக்குமான ஏற்பாடுகளை சரவணனும் கார்த்திக்கேயனும் அவர்களின் மனைவியருடன் சேர்ந்து செய்து முடித்துவிட்டனர்.

ஸ்ரீரஞ்சனியும் ஸ்ரீதரும் இத்துணை மாதங்கள் கனிந்த தங்களின் காதல் திருமணத்தில் முடியும் நாளுக்காய் காத்திருந்தனர். முதல் நாள் மாப்பிள்ளைகளை கோயிலுக்கு அழைத்துச் சென்றனர். மணப்பெண்கள் இருவரும் தோழிகள் என்பதால் ஒருவருக்கொருவர் திருமணத்தால் உண்டாகிற பதற்றத்தைக் குறைக்கும் வண்ணம் இலகுவான பேச்சில் நேரத்தைக் கழித்தனர்.

சங்கவியும் யாழினியும் தத்தம் கணவர்களுடன் வந்துவிட மாப்பிள்ளை கவனிப்பு கமலேஷுக்கும் மகேஷுக்கும் சிறப்பாய் நடந்தேறியது.

குழந்தைகள் ஒருவரோடுவர் சேர்ந்து விளையாட ஆரம்பிக்க ராகினி மணப்பெண்களான சகோதரிகளுடன் சேர்ந்து அதை ரசிப்பதில் நேரத்தைச் செலவிட்டாள்.

இருவரையும் அழைத்துக் கொண்டு அழகுநிலையம் சென்று வந்தவள் அவர்களிடம் “இனியாச்சும் அந்தக் கௌதம் என்னைக் கிழவினு சொல்ல மாட்டானானு பாப்போம்” என்று பெருமூச்சுடன் சொன்னதைக் கேட்டு ஸ்ரீரஞ்சனியும் மதுரவாணியும் கலகலவென நகைத்தனர்.

ஸ்ரீரஞ்சனியும் மதுரவாணியும் மருதாணி இட்டுக் கொண்டவர்கள் அழகம்மை உணவூட்ட உண்டு முடித்தனர்.

இரவில் உறங்கும் முன்னர் ஸ்ரீதரும் மதுசூதனனும் போனில் பேசி அவர்களை நாணம் கொள்ள செய்ய மதுரவாணியும் ஸ்ரீரஞ்சனியும் அவர்களின் காதல் பேச்சில் வெட்கிச் சிவந்தவர்களாய் நித்திரையில் ஆழ்ந்தனர்.

*****************

உற்றார் சுற்றார் வாழ்த்த

பெற்றோர் மனம் குளிர

அக்னி சாட்சியாய்

உன் கரம் பற்றிய திருநாளில்

நீயும் நானுமாய் இருந்தவர்கள்

நாமாய் மாறிப் போனோமே!

கவிதா கல்யாண மண்டபம்….

மறுநாள் அதிகாலையில் கதிரவன் பூமிப்பெண்ணை முத்தமிட பறவைகள் கீச்கீச்சென்ற ராகம் பாடி பூபாளத்தை இனிதே வரவேற்க விடியல் புலர்ந்தது.

மதுசூதனன் வெட்ஸ் மதுரவாணி, ஸ்ரீதர் வெட்ஸ் ஸ்ரீரஞ்சனி என்ற பெயர்கள் ஜிகினாவினாலும் மலர்களாலும் அலங்கரிக்கப்பட்ட அலங்காரப் பெயர்ப்பலகைகளில் மின்னியபடி  திருமணத்துக்கு வந்திருந்தவர்களை வரவேற்றுக் கொண்டிருந்தன.

அந்தச் சுற்றுவட்டாரத்தில் அது தான் பெரிய மண்டபம்! இருந்தாலும் நான்கு வீட்டு உறவினர்களும், இளையவர்களின் நண்பர்களும், தொழில்முறை வாடிக்கையாளர்களும் வந்திருந்ததால் ஜனசமுத்திரத்தினூடே அழகாய் திருமண நிகழ்வுகள் நடந்தேறின.

பின்னணியின் வேங்கடவன் பத்மாவதி தாயாரின் திருவுருவம் தெய்வீக அழகுடன் நிற்க மலர்களால் அலங்கரிக்கப்பட்ட அந்த மணமேடையில் பட்டு வேஷ்டி சட்டையில் நெற்றியில் விபூதி துலங்க மனதில் ஆயிரம் கனவுகளுடன் எப்போது தமது வாழ்க்கைத்துணைவியர் வந்து தம் அருகில் அமர்வர் என்ற ஆவல் அலை மோத ஐயர் சொன்ன மந்திரங்களை கர்மசிரத்தையுடன் சொல்லிக் கொண்டிருந்தனர் மதுசூதனனும் ஸ்ரீதரும்.

அவர்களை மனநிறைவுடன் பார்த்துக் கொண்டிருந்தனர் மைதிலியும் ராமமூர்த்தியும். மைதிலிக்கு மகனது வாழ்வில் அவனுக்கேற்ற பெண் அதுவும் இவ்வளவு பாசக்கார குடும்ப பின்னணியில் வளர்ந்த பெண் மனைவியாய் வரப் போகும் பூரிப்பு!

ரேவதிக்கோ கணவனுக்கு பின் ஒரே ஆதரவாய் இருக்கும் மகனுக்கு அவன் விரும்பியவளே மனைவியாய் வந்த சந்தோசம்! அதோடு அவள் அவருக்கும் மகளாய் மாறிவிட்ட ஆனந்தமும் கூட!

அதே நேரம் கமலேஷும் மகேஷும் வீட்டு மருமகனாய் அல்லாது மகன்களாய் மாறி அனைவரையும் வரவேற்று உபசரித்துக் கொண்டிருக்க திலீபும் கௌதமும் அவர்களுக்கு உதவியாய் சுற்றினர்.

கார்த்திக்கேயனும் சரவணனும் மணமேடையில் நின்ற மனைவியரிடம் ஏதோ தீவிரக்குரலில் பேசிக் கொண்டிருக்க அந்த தருணம் அழகாய் நகர்ந்தது.

மணமகளுக்கான அறையில் மதுரவாணியும் ஸ்ரீரஞ்சனியும் ஆரணங்காய் பட்டாடை மின்ன ஆபரணங்கள் ஜொலிக்க தயாராயினர். மருதாணி சிவப்பும் மலர்களின் நறுமணமுமாய் தயாரான மணப்பெண்களின் அழகில் குடும்பத்தினர் மயங்கி விழாத குறை தான்!

அழகம்மை இருவருக்கும் நெட்டி முறித்து திருஷ்டி கழிக்க பார்வதியும் விசாலாட்சியும் தமது பெண்களின் மணக்கோலத்தில் கண்ணாற கண்டு ரசித்தனர். அவர்களின் தந்தைகளோ இத்தனை நாட்கள் சிறுகுழந்தையாய் எண்ணியிருந்த மகள்கள் இன்று திருமணக்கோலத்தில் நிற்பதை நம்பவியலாதவர்களாய் அன்பும் ஆச்சரியமும் சரிபாதி கலவையாய் மின்னும் கண்களுடன் அவர்களை வாஞ்சையுடன் பார்த்துக் கொண்டிருந்தனர்.

சங்கவியும் யாழினியும் உள்ளே வந்தவர்கள் “ஐயர் பொண்ணை கூப்பிடுறாரு… தங்கங்களே எழுந்திருங்க பாப்போம்” என்றவர்கள் அங்கிருந்த தங்கள் குடும்பத்தினருடன் சேர்ந்து செல்பி எடுத்துக் கொண்டார்கள்.

அப்போது அங்கே வந்த சங்கவியின் மாமியார் மகளையும் மருமகளையும் முறைத்தவர் “எப்போ பாரு செல்பி தானா உங்களுக்கு? அங்க பொண்ணுங்களை கூப்பிட்டாச்சு… நீங்க வாங்கடி கண்ணுங்களா! இதுங்களுக்கு வேற வேலை இல்ல” என்று அவர்களை அதட்டிவிட்டு மணப்பெண்களுடன் மணமேடையை நோக்கி நடைபோட இரு மணப்பெண்களின் பெற்றோரும் உடன் சென்றனர்.

மணமேடையில் கம்பீரமாய் அமர்ந்திருந்த மதுசூதனனின் பார்வை கிட்டத்தட்ட பத்து மாதங்களுக்குப் பிறகு தன்னவளை நேரில் சந்தித்த மகிழ்ச்சியில் திக்குமுக்காடியவன் தப்பும் தவறுமாய் மந்திரத்தை உச்சரிக்க ஆரம்பிக்க அவனுக்கு பின்னே நின்றிருந்த வைஷாலி அண்ணனின் மாலையைச் சரி செய்யும் சாக்கில் குனிந்தவள்

“டேய் அண்ணா! இப்போவும் செல்பிபுள்ளய சைட் அடிச்சு மந்திரத்தைக் கோட்டை விடுற! இன்னும் கொஞ்ச நேரத்துல அவ உன் பொண்டாட்டிடா அண்ணா! அப்புறமா ஆசை தீர ரசிக்கலாம்… ஒழுங்கா மந்திரம் சொல்லு பாப்போம்” என்று கேலி செய்ய அவனும் புன்னகைத்தபடியே மந்திரத்தைச் சொல்ல ஆரம்பித்தான்.

ஸ்ரீதரைப் பார்த்த வைஷாலி “கீப் ராக் அண்ணா! இப்பிடி தான் கெத்தா ஸ்டைலா இருக்கணும்” என்று சொல்லி வாயை மூடுவதற்குள் அவனது பார்வை தன்னருகே அமர வந்த ஸ்ரீரஞ்சனியைத் தொட்டுத் தழுவ அவனுமே மந்திரத்தைக் குழப்பியடித்தான்.

ராகினி இதைக் கண்டு நகைத்தவள் “வைஷுக்கா! இப்போ அவங்க ட்ரீம் வேர்ல்ட்ல இருக்காங்க… நம்ம என்ன சொன்னாலும் காதுல ஏறாது” என்று சொல்ல வைஷாலியும் நகைத்தபடி நின்று கொண்டாள்.

அதற்குள் மதுரவாணி மதுசூதனனின் அருகிலும் ஸ்ரீரஞ்சனி ஸ்ரீதரின் அருகிலும் அமர அதன் பின்னர் அவர்களுக்கு வேறு யாரும் கண்ணுக்குத் தெரிவார்களா என்ன?

அதுவும் ஊருக்கு வந்து இருதினங்கள் ஆகியும் மதுரவாணியைக் காண இயலாது தவித்தவனின் விழிகள் தன்னருகே பேரெழிலுடன் அப்சரசாய் அமர்ந்திருந்தவளைக் கண்டதும் மயங்கி அவளைத் தவிர வேறு யாரையும் காண்பேனா என அடம்பிடித்து அவளிடமே நிலைத்தது.

மாங்கல்ய தாரணத்துக்கான நேரம் வந்துவிட ஐயர் தாலி எடுத்துக் கொடுக்க மதுசூதனன் மனதாற ஆண்டவனை வேண்டியபடியே மதுரவாணியின் கழுத்தில் மூன்று முடிச்சிட்டு அவளை முழுவதும் தன்னவளாக்கிக் கொண்டான்.

ஸ்ரீதர் தன் விழிகளுடன் கலந்த கயல்விழிகளுக்குச் சொந்தக்காரியான ஸ்ரீரஞ்சனிக்கு மங்கலநாண் பூட்டியவன் அவளைத் தன் சரிபாதியாக்கிக் கொண்டான்.

பெற்றோர்களின் ஆனந்தக் கண்ணீருடன், உற்றார் உறவினரின் ஆசியுடன், நண்பர்களின் மகிழ்ச்சியுடன் சேர்ந்து பொன் தூவலாய் விழுந்த அட்சதைப்பூக்களை ஆசிர்வாதமாய் ஏற்றுக்கொண்ட இரு ஜோடிகளும் அக்னியை வலம் வந்து இறைவன் சாட்சியாக தங்களது துணையை தங்கள் வாழ்நாள் முழுவதும் உடன் வரும் உறவாக அங்கீகரித்து கொண்டனர்.

அதன் பின் வழக்கமான ஆசிர்வாதம் வாங்கும் படலம் நிகழ இரு ஜோடிகளும் அழகம்மையிடம் ஆசி பெற்றனர். அதன் பின்னர் பெற்றோரிடமும் மூத்த சகோதரியிடமும் ஆசி வாங்கிக் கொண்டனர்.

பின்னர் புதுமணத்தம்பதிகளுக்கு தேங்காய் உருட்டுதல், மோதிரம் தேடுதல் என்ற சம்பிரதாயங்கள் நடைபெற அனைத்திலும் உற்சாகத்துடன் கலந்து கொண்டனர்.

அதன் பின்னர் மற்ற சம்பிரதாயங்களுடன் மாலை வரவேற்பும் இனிதாய் முடிய அவர்கள் காதலை முழுமையாக்கும் இரவும் வந்து சேர்ந்தது.

மதுரவாணியின் வீட்டில் சடங்குக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்க ஸ்ரீதருக்கும் ஸ்ரீரஞ்சனிக்குமாக சங்கரபாண்டியனின் இல்லத்தில் ஏற்பாடுகள் ஜரூராக நடந்தேறியிருந்தது.

பெரியவர்களிடம் ஆசி பெற்ற பின்னர் நிமிர்ந்த ஸ்ரீரஞ்சனியிடம் ரேவதி “இன்னைல இருந்து எனக்கு ரெண்டு பிள்ளைங்கடா… உனக்கு நான் சொல்ல வேண்டியது எதுவும் இல்ல… நீயும் ஸ்ரீயும் நல்லா இருக்கணும்” என்று வாழ்த்தி அனுப்பினார்.

ஸ்ரீரஞ்சனி இனிய மனநிலையுடன் தங்களுக்கென அலங்கரிக்கப்பட்ட அறைக்குள் நுழைந்தவள் அங்கே இருந்த பெரிய ஜன்னலின் அருகே நின்றபடி வானத்தில் உலா வரும் நிலவை ரசித்தபடி நின்ற கணவனின் அருகில் சென்று நின்று கொண்டாள்

“க்கும்! என்ன யோசனை டி.சி.பி சார்? கொஞ்சம் இந்தப் பக்கம் திரும்புறது”

ஸ்ரீதர் அவள் புறம் திரும்பியவன் வானிலவைத் தோற்கடிக்கும் தன் மனையாளின் சந்திரவதனத்தில் தன்னைத் தொலைத்தவன் அவளது முகத்தை வருடிக் கொடுக்க அவனது விரல்களின் ஸ்பரிசத்தில் மயங்கித் திளைத்தவளின் தேகம் உருகி கணவனது அருகாமையை நாடியது.

“நீ இவ்ளோ அழகுனு இன்னைக்குத் தான் தெரிஞ்சுகிட்டேன் ரஞ்சனி” என்று ரசனை ததும்பும் விழிகளால் அவளை நோக்கியவனின் விழிவீச்சில் வெட்கிச் சிவந்த ஸ்ரீரஞ்சனி அவனை அணைத்துக் கொண்டாள்.

அவளை அணைத்துக் கொண்ட ஸ்ரீதர் அவளின் பிறைநெற்றியில் இதழ் பதித்து “ஐ லவ் யூ ரஞ்சனி… லவ் யூ சோ மச்” என்றவனின் குரலில் காதல் பொங்கி வழிய அதே வார்த்தைகளை உச்சரிக்க வந்தவளின் இதழ் அந்தக் காவலனது இதழால் சிறை செய்யப்பட்டது.

ஸ்ரீரஞ்சனியை தனது காதல் சிறைக்குள் அடைத்தவன் வாழ்நாள் முழுவதும் அவளை அச்சிறையிலிருந்து விடுவிக்கும் எண்ணமில்லாதாவனாய் இறுக அணைத்துக் கொண்டான்.

அவனது அணைப்பில் அடைக்கலமானவள் அவனது எல்லையற்ற காதலில் உருகிக் கரைய ஒரு அழகிய சங்கமம் அங்கே நடந்தேறியது.

**************

மதுரவாணி சற்று பதற்றத்துடனே தனது அறைக்குள் நுழைந்தாள். மதினிகளும் பெற்ற அன்னையும் மாமியாரும் இவ்வளவு நேரம் போதித்த அனைத்தும் அங்கே அலங்கரித்த படுக்கையில் சாவகாசமாய் அமர்ந்து போனை நோண்டிக் கொண்டிருந்தவனைப் பார்த்ததும் மறந்து போனது.

இருந்தும் தைரியமாய் காட்டிக் கொண்டபடி கதவைத் தாழிட்டவள் மெதுவாய் அவனருகே செல்ல மதுசூதனன் தலை நிமிர்ந்து அவளைப் பார்த்தான்.

புன்னகையுடன் எழுந்தவன் அவளைக் கூரிய விழிகளால் நோக்க மதுரவாணி கண்களைச் சுழற்றி அவனது பார்வையைத் தவிர்க்க முயன்றவாறு

“ம்ம்… அப்புறம் தனுஜாவோட கல்யாணம் சிறப்பா முடிஞ்சுதா? எப்பிடி இருக்கா அவ?” என்று எங்கோ நோக்கியபடி கேட்க

“அவளுக்கென்ன? மகாராணி மாதிரி இருக்கா… இப்போ ஆறு மாசம்!” என்று சொன்னவன் இனி ஒரு நிமிடம் கூட அவளை விலகியிருக்க இயலாதவனாய் இழுத்து அணைத்துக் கொண்டான்.

மதுரவாணி திகைத்தவளாய் விழிக்க “ஃபர்ஸ்ட் நைட் அன்னைக்கு வில்லிய ஏன்டி நியாபகப்படுத்துற?” என்று கேலியாய் கேட்டான் மதுசூதனன்.

அவனது மனைவியோ “போதும்டா! அவளுக்குத் தான் இப்போ கல்யாணம் ஆகிடுச்சே… இன்னும் ஏன் அவளை வில்லினு சொல்லுற? இந்த உலகத்துல வாழுற யாருமே நல்லவங்க இல்ல… நம்ம எல்லாருமே சராசரியான மனுசங்க தான்! உனக்கு நான் ஹீரோயினா தெரியலாம்… ஆனா யாரோ ஒருத்தருக்கு நான் வில்லியா தான் தெரிவேன்… இது மனுசங்களோட இயல்பு தான்” என்று வரிந்து கட்டிக்கொண்டு நியாயம் பேசினாள்

மதுசூதனன் அவளது மூக்கைச் செல்லமாக நிமிண்டியவன் “சரிடி! இது தத்துவம் பேசுறதுக்கான நேரம் இல்ல… ஒன் மினிட்… உன்னோட முடி எப்போ இவ்ளோ நீளமா வளந்துச்சு?” என்று சந்தேகமாய் கேட்க

மதுரவாணியோ தனது நீண்ட ஜடையை முன்னே எடுத்துப் போட்டுக் கொண்டவள் “எல்லாம் எங்க ஊரு தண்ணியோட மாயம்! இந்த தாமிரபரணி தண்ணிக்கே முடி நீளமா வளருமாம்… அழகி அடிக்கடி சொல்லும்” என்று ஊரில் ஓடும் ஆறின் பெருமையை எடுத்துவிட அவளது கணவன் பத்து மாதங்கள் கழித்து அவளது அழகை கண்ணால் பருகிக் கொண்டிருந்தான்!

பல மாதங்களுக்கு முன்னர் அவனை உரசிச் சென்ற அதே ஸ்பரிசம்! இன்று மிக மிக அருகில்… அன்றைய தினம் அறியாத அன்னிய ஆடவனாய் இருந்தவன் இன்று உரிமைக்காரனாய் அவளருகில்… நினைத்தால் இவை அனைத்துமே கனவு போல தோன்றினாலும் நடப்பது யாவும் உண்மை என்பதை மதுசூதனனுக்குப் புரிய வைக்க தன்னருகில் நின்று முட்டைக்கண்களை உருட்டிப் பார்க்கும் இவள் ஒருத்தி போதும்!

அவளது அழகிய வதனத்தைக் கைகளில் ஏந்தியவாறு “உன்னைப் பாக்காம இருந்த இந்த பத்து மாசத்துல நான் உன் மேல பைத்தியம் ஆயிட்டேன் வாணி! என்னைப் பைத்தியக்காரன் ஆக்குனதுக்கு உனக்கு பனிஷ்மெண்ட் குடுத்தே ஆகணும்னு என்னோட ஹார்ட் எனக்கு ஆர்டர் போடுது” என்று குறும்பாய் உரைத்தபடி அவளின் செவ்விதழில் பார்வையைப் பதித்தவன் அவள் திருதிருவென விழிக்கையில் அவளது இதழில் முத்தமெனும் கவிதையை எழுத ஆரம்பித்தான்.

முதலில் ஹைகூவாய் ஆரம்பித்து பின்னர் பெரிய கவிதையாய் நீண்ட அந்த இதழணைப்பில் இருவரும் ஒருவரையொருவர் இழந்து நிற்க மதுசூதனன் அவளைத் தனது கரங்களில் ஏந்திக் கொண்டவன் தனது காதலெனும் கவிதையை அவள் மேனியில் எழுத ஆரம்பித்தான்.

மதுசூதனனின் காதலில் கசிந்துருகிய மதுரவாணி அவனுக்குள் புதைந்து கொண்டாள். அந்த வண்ணமயிலானவள் வானமழையாய் மாறித் தன்னவன் பொழிந்த காதலில் மருகி கரையத் தொடங்கினாள்.

எங்கோ பிறந்து யாருக்கோ உரிமையானவர்களாய் வாழ வேண்டியவர்களை ஒன்றிணைத்து விதி விளையாடிய காதல் விளையாட்டில் இன்று இறுதி வெற்றியை எட்டிய மதுவும் அவனது வாணியும் ஈருடல் ஓருயிராக கலந்து தங்களின் இனிய இல்லற வாழ்க்கையின் அழகிய அத்தியாயத்தை எழுத ஆரம்பித்தனர்.

அலை வீசும்🌊🌊🌊