வெளிச்சப்பூ 3

Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels

‘எம்.கே அட்வர்டைசர்ஸ்’ என்று பெரிய எழுத்துக்களால் பொறிக்கப்பட்டு அந்த பிரம்மாண்ட வளாகத்திற்கு வழிகாட்டியாக இருந்த பலகையை கடந்து அந்த வளாகத்திற்குள் நுழைந்தது அந்த கருநிற ஜாகுவார்.

வாகனம் நின்றதும் பின் இருக்கையிலிருந்து வாசவி இறங்குவதற்கும் முன் இருக்கையிலிருந்து நேத்ரன் இறங்குவதற்கும் சரியாக இருந்தது.

இருவரையும் ஒன்றாக பார்த்த பூரணிக்கோ பல கேள்விகள் தலையை குடைந்தாலும், அங்கிருந்த மற்றவர்களை போல அவளும் சாதாரணமாக நின்று கொண்டாள்.

வாசவி உள்ளே நுழைந்ததும் அனைவரும் அவளிற்கு வணக்கம் சொல்லி நகர, ஒரு மெல்லிய தலையசைப்புடன் அவர்களை கடந்து சென்றாள்.

அவள் பின்னே வந்த பூரணி, “மேம், நீங்க சொன்ன மாதிரி எல்லா மீட்டிங்ஸும் ரீஸ்கெட்யூல் பண்ணியாச்சு. அதோட லிஸ்ட்…” என்று ஆரம்பிக்க, “அதுக்கு டைம் இல்ல பூரணி. இப்போ என்ன மீட்டிங் இருக்கோ அதை மட்டும் சொல்லுங்க.” என்றாள்.

அவள் குரலிலிருந்து எவ்வித மனநிலையில் இருக்கிறாள் என்பதை இத்தனை மாதங்கள் ஆகியிருந்தும் அவளால் கண்டுபிடிக்க முடியவில்லை.

உதவிக்காக நேத்ரனின் முகம் பார்க்க, அவனோ கடமையே நடையென கீழே குனிந்தபடி நடந்து கொண்டிருந்தான்.

‘இதென்ன புது பொண்ணு மாதிரி கீழ குனிஞ்சுட்டு இருக்காரு!’ என்று பூரணி யோசிக்க, அவளின் சிந்தனையை தடுக்கும் விதமாக, “நான் உங்ககிட்ட பதிலை எதிர்பார்த்துட்டு இருக்கேன் பூரணி.” என்று அழுத்தமாக கூறினாள் வாசவி.

மானசீகமாக தலையில் அடித்துக் கொண்ட பூரணியோ, “மேம், இன்னும் டென் மினிட்ஸ்ல நம்ம எம்ப்ளாயிஸ் கூட இன்டர்னல் மீட்டிங் இருக்கு. அது முடிஞ்சதும் ஜி.கே குரூப்ஸோட மீட்டிங் பிளஸ் லஞ்ச்சுக்கான அரேஞ்மெண்ட்ஸ் பண்ணியாச்சு மேம்.” என்றாள்.

“குட்!” என்ற பாராட்டுடன் வாசவி தன்னறைக்கு செல்ல, தன்னையா பாராட்டிவிட்டு சென்றாள் என்ற ஆனந்த அதிர்ச்சியுடன் பூரணி அந்த அறையை மறித்துக் கொண்டு நிற்க, அவளை சற்று நகர்த்திய நேத்ரன், வழக்கத்திற்கு மாறாக எதுவும் பேசாமல் உள்ளே சென்றான்.

‘ஹ்ம்ம், எப்படி இருந்த மனுஷன் இப்படியாகிட்டாரு! இனி என்னென்ன நடக்கப்போகுதோ?’ என்று மனதிற்குள் நினைத்தவள், எங்கே வெளியே நிற்பதை சிசிடிவியில் பார்த்து அதற்கான விளக்கத்தை வாசவி கேட்பாளோ என்று பயந்து தன்னிடத்திற்கு சென்றாள்.


தன்முன் இருந்த உணவு வகைகளை பார்த்து நாவில் எச்சில் ஊறியது நேத்ரனிற்கு.

“ப்பா எத்தனை ஐட்டம்ஸ்! ஆனாலும், பாஸை சும்மா சொல்லக்கூடாது. என்னதான் வீட்டுல சாப்பிடவிடாம ஆஃபிஸுக்கு கூட்டிட்டு வந்தாலும், லஞ்சுக்கு விருந்தே வச்சுட்டாங்க.” என்று நேத்ரன் கூற, “ஹலோ சார், இந்த அரேஞ்மெண்ட்ஸ் பண்ணது நானு.” என்றாள் பூரணி.

“அரேஞ்மெண்ட்ஸ் பண்ணது நீதான், காசு கொடுக்குறது அவங்க தான!” என்று அப்போதும் அவளை பார்க்காமல், உணவிலேயே கவனத்தை பதித்து பேசினான் நேத்ரன்.

“கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான் உங்களுக்காக ஃபீல் பண்ணேன்.” என்று பூரணி கூற, “பார்றா, எனக்காக ஃபீல் பண்ணியா? அப்படி என்ன ஃபீல் பண்ணன்னு சொல்லு, சாப்பிட்டுக்கிட்டே கேட்போம்.” என்றான் நேத்ரன்.

“ஹ்ம்ம், இப்படி திடீர்னு ஒரு கல்யாணம். அதுவும் மேம் கூட… அதை ப்ராஸஸ் பண்ண கஷ்டமா தான இருக்கும். அதுக்கும் நேரம் கொடுக்காம, இப்படி உடனே ஆஃபிஸுக்கு கூட்டிட்டு வந்துட்டாங்க. ஆஃபிஸ் நுழையுறப்போ உங்க முகமே டல்லா இருந்துச்சு.” என்று பூரணி அடுக்கிக் கொண்டே போக, “போதும் போதும் மூச்சு வாங்கப் போகுது பூரி. திடீர் கல்யாணம் – ப்ராசஸ் பண்ண கஷ்டம் எல்லாம் உண்மை தான். அதுக்காக அதே இடத்துல நின்னுட முடியுமா என்ன? அப்பறம் டல்லா இருந்ததுக்கான காரணம், காலைல உங்க மேம் என்னை சாப்பிடவே விடாதது தான். அதுவுமில்லாம, அந்த வீட்டுல இருக்குறவங்களுக்கு வேற அட்வைஸ் பண்ணி என்னோட எனர்ஜியை வேஸ்ட் பண்ணிட்டேன். மத்தபடி ஐ’ம் ஆல்ரைட்.” என்று இலகுவாக கூறியவனை ஆச்சரியமாக பார்த்தாள்.

திருமணம் இருவரின் தனிப்பட்ட விஷயம் என்பதால், அதை மேலும் தூண்டி துருவாமல், “எப்படி சார், எல்லாத்தையும் இவ்ளோ ஈஸியா எடுத்துக்குறீங்க?” என்று வியப்பாக பூரணி கேட்க, “அதுவா… மேனுஃபேக்சரிங் டிஃபெக்ட்.” என்று நேத்ரன் கண்ணடித்து சிரிக்க, அது தப்பாமல் எதேச்சையாக திரும்பிய வாசவியின் கண்களிலும் பட்டது.

அதை வாசவி பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்று காட்டிக் கொண்டாலும், அவளின் மனதின் ஓரத்தில் அந்த காட்சி சேமிக்கப்பட்டது.


அன்றைய நாள், எப்போதும் விட வேலைகள் அதிகமாக இருக்க, நேத்ரன் வீடு வந்து சேர்வதற்கு இரவு பத்து மணியானது.

அதுவரையிலுமே, தனக்கு திருமணமானதை தன் பெற்றோருக்கு சொல்லாதது அவன் நினைவிலேயே இல்லை. காலையிலேயே பாட்டியிடம், இப்போது சொல்ல வேண்டாம் என்றும் கூறிவிட்டான்.

அதற்கு காரணம், அவன் தந்தை ஈஸ்வரமூர்த்தி தான். ஏற்கனவே மனிதர், அவரின் தங்கை மகளை நேத்ரன் திருமணம் செய்யவில்லை என்று புலம்பிக் கொண்டிருக்கும் வேளையில், இந்த ‘திடீர் திருமணம்’ பற்றி தெரிய வந்தால், கண்டிப்பாக அது வீட்டில் சலசலப்பை தரும் என்று எண்ணினான்.

அதுமட்டுமில்லாமல், அந்த கோபம் வாசவியை தாக்கும் வாய்ப்பும் அதிகமாகவே இருக்கிறது என்பதையும் யூகித்திருந்தான்.

தன் திருமண வாழ்வும் வருங்காலமும் எப்படி இருக்கும் என்ற நினைவிற்கெல்லாம் அவன் அப்போது செல்லவில்லை என்றாலும், தன் பெற்றோர் – மனைவிக்கிடையே இருக்கும் உறவை கோபத்திலிருந்து துவங்க அவன் விரும்பவில்லை.

இத்தனையும் யோசித்து அவன் எடுத்த முடிவை, ஏற்கனவே ஈஸ்வரி கவிழ்த்து விட்டார் என்பதை நடுகூடத்தில் அவன் வரவை எதிர்பார்த்து காத்திருந்த தந்தையின் முகபாவனையை வைத்தே தெரிந்து கொண்டான் புதல்வன்.

‘அட கெழவியே!’ என்று மானசீகமாக தலையிலடித்துக் கொண்டவன், அவர்களாக கேட்கும் வரை வாய் திறக்க வேண்டாம் என்று எண்ணியவனாக, மெதுவாக தன்னறைக்கு செல்ல பார்த்தான்.

“சாப்பாடெல்லாம் உன் புகுந்த வீட்டுலேயே முடிச்சுட்டியா?” என்ற குரல் வந்தது தாயிடமிருந்து.

“என்ன ம்மா?” என்று புரியாத மாதிரியே அவன் வினவ, “இல்ல, சாப்பாடு வெளியவே சாப்பிட்டுட்டியான்னு கேட்டேன்.” என்று நக்கல் குரலில் வினவினார்.

அவன் அதற்கு பதில் கூறும் முன்பே, “ஏன் மீனாட்சி, காலைல உன் பையன் ஏதோ அவனுக்கு செட்டாகுற பொண்ணை தான் கல்யாணம் பண்ணுவேன்னு சொன்னானே, அதுவும் என் மருமகளை, அவ உம்முன்னு இருக்கான்னு சொல்லி வேண்டாம்னு சொன்னானே, இப்பவும் அதே மனநிலையில தான் இருக்கானா?” என்று வேண்டுமென்றே அவனை குத்திக்காட்டி பேச, அதில் கடுப்பானவனோ, “அப்பா, இப்போ உங்களுக்கு என்ன கேட்கணுமோ அதை நேரடியா கேளுங்க.” என்றான்.

“ஓஹோ, நேரடியா கேட்கணுமா? உன் கல்யாணத்துக்கு பொண்ணு பார்க்குறதை தான் என்கிட்ட விடல. சரி அது உன்னோட விருப்பம்னு விட்டாச்சு. ஆனா, கல்யாணத்தை பார்க்க கூட எங்க ரெண்டு பேரையும் கூப்பிடலல.” என்று ஈஸ்வரமூர்த்தி வினவ, நேத்ரனிற்கு சங்கடமாக இருந்தது.

எப்போதும் தன்னிடம் கோபமாகவோ, நக்கலாகவோ பேசும் தந்தையின் குரல் உடைந்து போயிருப்பது நன்றாவே தெரிந்தது.

அதில் உண்டான குற்றவுணர்வை தனக்குள் மறைத்துக் கொண்டு, “அப்பா, அங்க இருந்த சிசுவேஷன் அப்படி.” என்று நேத்ரன் விளக்க ஆரம்பிக்க, “அதெல்லாம் அந்த பொண்ணோட பாட்டி ஏற்கனவே சொல்லிட்டாங்க.” என்று கூறி திரும்பிக் கொண்டார் மீனாட்சி.

“அப்பறம் என்ன ம்மா…” என்று கேட்டுக் கொண்டே அருகில் சென்றவனை தடுத்த மீனாட்சியோ, “தாலி கட்டுறப்போ சொல்லல சரி, அதுக்கப்பறம் இவ்ளோ நேரம் இருந்துச்சே, அப்போ கூட எங்களுக்கு சொல்லணும்னு உனக்கு தோணலைல?” என்று வினவினார்.

இப்போது வெளிப்படையாகவே தலையில் கைவைத்து நீண்ட பெருமூச்சை வெளியிட்டவன், “ம்மா, சொல்லக் கூடாதுன்னு எல்லாம் இல்லம்மா. ஃபோன்ல சொன்னா சரிவராது, நேர்ல சொல்லணும்னு நினைச்சேன். அது தப்பா?” என்று அவன் கேட்க, அவரோ நம்பாத பார்வை பார்த்தார்.

“ம்மா, அது திடீர்னு சொன்னா, உங்களுக்கு அதிர்ச்சியா இருக்கும். அதனால வர கோபம் அவங்க மேல திரும்பும்… இதெல்லாம் யோசிச்சு தான்…” என்று அவன் இழுக்க, “ஓஹ், அப்போ டெயிலி பிட்டு பிட்டா சொல்ல நினைச்சியா?” என்று கேட்டார் மீனாட்சி.

‘கடவுளே, எந்த பக்கம் போனாலும் கேட் போடுதே இந்த மம்மி!’ என்று புலம்பியவன், “நான் பண்ணது தப்பு தான் ம்மா. இனி என்ன பண்ணனும்னு நீயே சொல்லு.” என்று உடனடியாக சரண்டரானான்.

“என்னதான் கோவில்ல கல்யாணமானாலும், எங்க மனதிருப்திக்கு இன்னொரு முறை, எல்லாரையும் அழைச்சு முறையா கல்யாணம் செய்யணும்னு விருப்பப்படுறோம். அதைப் பத்தி பேச, நாளைக்கு ஈஸ்வரி அம்மா வீட்டுக்கு வராங்க. அதுவரை ஏதாவது கிறுக்குத்தனம் பண்ணி, அந்த பொண்ணுகிட்ட வாங்கி கட்டிக்காம, ஒழுங்கா இரு.” என்றார் மீனாட்சி.

“எதே! கிறுக்குத்தனமா? அம்மோவ், என்னை என்னன்னு நினைச்சுட்டு இருக்க நீ?” என்று நேத்ரன் வினவ, “அந்த பொண்ணுகிட்ட வாங்கி கட்டிக்காதன்னு சொன்னது பெருசா தெரியலையாக்கும். பேச வந்துட்டான். போ டா அங்குட்டு.” என்று அவனை தள்ளிவிட்டு மீனாட்சி அறைக்குள் நுழைய, மகனும் பின்னோடு சென்றான்.

“ம்மா சாரி மா. உனக்கும் அப்பாக்கும் வருத்தமா இருக்கும்னு எனக்கு புரியுது. ஆனா, அந்த சூழ்நிலைல, பாட்டி ரொம்ப கெஞ்சி கேட்டதுல, எனக்கு என்ன பண்றதுனே புரியல. அப்போ உங்ககிட்ட கேட்கணும்னு கூட தோணல. நான் ஒரு விஷயம் செஞ்சு முடிச்சதுக்கு அப்பறம், அதை நினைச்சு ஃபீல் பண்ண மாட்டேன்னு உனக்கே தெரியும்ல. ஆனா, இந்த விஷயத்தை நினைச்சு, நான் தப்பு பண்ணிட்டேனோன்னு ரொம்ப ஃபீல் பண்ணேன். ப்ச், அவங்களுக்கும் எனக்கும் என்ன பொருத்தம்? அவங்க வேற மாதிரி பார்ட்னரை எதிர்பார்த்துருப்பாங்கல. அவங்க வாழ்க்கைக்குள்ள தப்பா நுழைஞ்சுட்டேனோன்னு குற்றவுணர்வு இருக்கு ம்மா.” என்று நேத்ரன் அவன் மனதில் உள்ளவற்றை எல்லாம் கொட்டினான்.

அவன் தலையை ஆதரவாக தடவிய மீனாட்சி, “எங்களுக்கு வருத்தம் தான் நேத்ரா. இல்லன்னு பொய் சொல்ல மாட்டேன். ஆனா, ஈஸ்வரி அம்மா சொன்னதுல இருந்து, நீ எப்படிப்பட்ட சூழ்நிலைல இருந்தன்னு எங்களால புரிஞ்சுக்க முடிஞ்சுது. அதைக் கூட புரிஞ்சுக்கலைன்னா நாங்க என்ன பெத்தவங்க.” என்று இடைவெளி விட்டவர், “உன்னோட குற்றவுணர்வு தேவையில்லாதது நேத்ரா. நீ இதுவரை சொன்னதுலயிருந்து அந்த பொண்ணோட குணம் என்னன்னு ஓரளவு என்னால புரிஞ்சுக்க முடியுது. அந்த பொண்ணுக்கு பிடிக்காததை யாராலும் செய்ய வைக்க முடியாது, சரிதான? உங்க கல்யாணத்தை அந்த பொண்ணு நினைச்சுருந்தா அதை தடுத்துருக்க முடியும். ஆனா, அமைதியா உன் கையால தாலி வாங்கிக்கிச்சு. அதனால, உனக்கு எந்த குற்றவுணர்வும் வேண்டாம் நேத்ரா. அதே மாதிரி, உங்க ரெண்டு பேருக்கும் வேற்றுமைகள் நிறைய இருக்கலாம். கல்யாணங்கிறது ஒரே மாதிரி, ஒரே ஸ்டேட்டஸ்ல இருக்கவங்க இணையுறது இல்ல. எந்தவித வேறுபாடுகள் இருந்தாலும், ஒருத்தருக்கொருத்தர் மனம் விட்டு பேசி, ஒத்த மனமுடைய தம்பதியரா வாழ்றது.” என்று அவன் கேள்விகளுக்கு எல்லாம் பதில் கூறினார் மீனாட்சி.

தாய் கூறியதைக் கேட்டு பெருமூச்சு விட்டவன், “நீ சொல்றதெல்லாம் கேட்குறதுக்கு நல்லா தான் இருக்கு. ஆனா, இம்ப்ளிமெண்ட் பண்றதுக்குள்ள, எத்தனை அடிகள் வாங்க வேண்டியதிருக்குமோ?” என்றான் நேத்ரன்.

அவன் குரலே தெளிந்து விட்டதைக் கூற, “வாழ்க்கைன்னா பல அடிகள் விழத்தான் செய்யும். அது உன்பாடு, உன் பொண்டாட்டி பாடு டா மகனே!” என்று மீனாட்சி சிரிக்க, “ஹ்ம்ம், என் பொழப்பு சிரிப்பா இருக்குல உனக்கு!” என்று புலம்பினான் நேத்ரன்.

அப்போது தான் நினைவு வந்தவராக, “டேய் நேத்ரா, காலைல நான் சொன்னது ஞாபகம் இருக்கா?” என்று மீனாட்சி வினவ, என்னவென்று தெரியாமல் அவரைப் பார்த்தான் நேத்ரன்.

“தெரியாத தேவதையை விட தெரிஞ்ச பேயை கல்யாணம் பண்ணிக்கோன்னு சொன்னேனே, அப்படியே நடந்துருக்கு போல.” என்று அவர் நக்கலாக வினவ, “எந்த நேரத்துல சொன்னியோ? உன் வாய்க்கு எதை அள்ளி போடன்னே தெரியல ம்மா!” என்று கூறிய நேத்ரன், “அது சரி, இன்னைக்கு நடந்ததுக்கு உன் புருஷர் பெரிய விசாரணை கமிஷன் வைப்பாருன்னு நினைச்சேன். அவ்ளோ பெரிய பாதிப்பு இல்லயே.” என்றான்.

“உனக்கு அவரை உரண்டை இழுக்கலைன்னா தூக்கமே வராதே! நானாச்சும் விஷயம் கேள்விப்பட்டதுல இருந்து உன்னை திட்டிட்டு இருந்தேன் டா. அவரு தான், நீ வந்ததும் எதுவும் திட்டக்கூடாது, நீயே டென்ஷனா வருவன்னு அப்போயிருந்து வாசலையே பார்த்துட்டு உட்கார்ந்திருந்தாரு.” என்று மீனாட்சி கூற, தந்தையின் அன்பு அவனை நெகிழ்த்தியது உண்மையே.

அதை அப்படியே வெளிக்காட்டாமல், “ஒரு ஆணோட மனசு இன்னொரு ஆணுக்கு தான் தெரியும்.” என்று கூறி அன்னையின் மடியில் படுத்துக் கொண்டு மற்ற கதைகளை பேச ஆரம்பித்தான்.

சில நொடிகள் கழிந்ததும், “சரி சரி, இதுக்கு மேல இங்க இருந்தா உன் புருஷர் முறைச்சே தள்ளிடுவாரு. நான் என் ரூமுக்கு போறேன்.” என்று அப்போது தான் உள்ளே நுழைந்த தந்தையை வம்பிழுத்து விட்டே அங்கிருந்து வெளியேறினான்.


வீட்டிற்கு வந்த வாசவியோ, ஈஸ்வரியின் வற்புறுத்தலால் உண்டுவிட்டு, தன்னறைக்குள் அடைந்து கொண்டாள்.

எப்போதும் போல தன்னறையில் இருக்கும் பால்கனியில் நின்றவள், கருமேகம் சூழ்ந்து, இருள் நிறைந்த வானத்தை வெறித்துக் கொண்டிருந்தாள்.

மனதில் காலையில் கோவிலில் பார்த்த காட்சியே ஓடிக் கொண்டிருந்தது.

பதின்வயதிலிருந்த பெண்ணும், அவளிற்கு சற்று குறைந்த வயதிலிருந்த ஆணும் தங்களின் தந்தை மற்றும் தாயுடன் சிரித்து பேசியபடி கோவிலிற்குள் நுழைந்த காட்சி தான் அது.

அதை அனுபவித்து மகிழாதவளிற்கு சாதாரணமாகவே தோன்றும் ஏக்கம், அங்கிருப்பவர் தான் தன் பிறப்புக்கும் காரணமானவர் என்பதை எண்ணும்போது பலமடங்காகி அவளையே சுருட்டிக் கொள்வது இயல்பு தானே.

அந்த வேதனையைக் கூட வெளிப்படுத்தி விடாமல் தடுத்தது, அவள் இத்தனை காலமாக போட்டுக் கொண்டிருக்கும் இரும்பு முகமூடி.

ஆம், முகமூடியே தான்!

அதை அவிழ்த்து, அவளை இயல்பு வாழ்க்கைக்கு வழி நடத்திச் செல்லும் வெளிச்சப்பூவை அவளுடன் சேர்த்துவிட்ட மகிழ்வில், நிம்மதியாக உறங்கச் சென்றார் ஈஸ்வரி.

பூ பூக்கும்…