விழி அசைவில் மொழி தொலைத்தேனே… 1


அத்தியாயம் – 1


மதுரையை அடுத்துள்ள குட்லாடம்பட்டியில் சிலு சிலுவென வீசும் சிறுமலைக் காற்றில் செழித்து நின்றது அந்த வாழைத்தோட்டம்.

வாழைத்தார்களை பதம் பார்த்து வெட்டும் பணியில் நின்றிருந்தார் சிதம்பரம். அங்கே பணிபுரிபவர்களை சிரித்த முகத்துடன் வேலை வாங்கிக் கொண்டிருந்தார்.

“என்ன ஐயா இன்னைக்கு உங்க முகம் பிரகாசமா இருக்கு…” அவர்கள் காட்டில் எப்பொழுதும் வேலை செய்யும் கதிர் உரிமையாய் கேட்டான்.

“இல்ல கதிர் நம்ம நிலா பொண்ணுக்கு மதுரையிலிருந்து ஒரு வரன் தேடி வந்திருக்கு. மாப்பிள்ளையைப் பற்றி விசாரித்த வரை எல்லோரும் நல்ல தகவல்களையே சொல்லி இருக்கிறார்கள்.
என்ன மாப்பிள்ளைக்கு படிப்பு மட்டும் இல்லை. சொந்தமா மெக்கானிக் ஷாப் வச்சிருக்கார். நல்ல உழைப்பு. நல்ல வருமானம். நிலா பொண்ணு, நான் ஒரு வார்த்தை சொன்னால் மறுப்பு சொல்ல மாட்டா.

மாப்பிள்ளைக்கு உடன்பிறந்த அக்கா, தங்கை என மொத்தம் மூன்று பேர். அனைவருக்கும் திருமணம் முடிந்து விட்டது. நான் மாப்பிள்ளையை பார்க்க அவர்கள் வீட்டிற்குச் சென்ற போது, மகள், மருமகன், பேரன் பேத்தி என்று அந்த வீடே அழகாய் நிறைந்திருந்தது.

தாயில்லாமல் தனியே வளர்ந்த பொண்ணு. இந்த மாதிரி நிறைஞ்ச உறவுகள் இருக்கிற வீட்டில் வாழப்போனால் தாய் இல்லாத குறையே தெரியாமல் காலம் முழுவதும் மகிழ்ச்சியாக இருப்பாள்.

என் வீடு போல் அமைதியாக இல்லாமல் அந்த வீடு, ஆர்ப்பாட்டமாய் சந்தோஷத்தில் பூரித்திருந்தது. நான் அப்பொழுதே நினைத்து விட்டேன் கதிரு, நிலா பொண்ணை இந்த வீட்டில் தான் கொடுக்க வேண்டும் என்று” பெண்ணை கட்டி கொடுக்கப் போகும் பெருமையில் பூரித்து பேசினார் சிதம்பரம்.

“ஐயா… நான் சொல்றேன்னு தப்பா எடுத்துக்காதீங்க. நம்ம பாப்பாவுக்கு நீங்க ஏன் வேறு இடத்தில் வரன் பார்க்கக் கூடாது” என்று தயக்கமாய் இழுத்தான் கதிர்.

“ஏன்?” படபடத்தார் சிதம்பரம்.

“அது ஒன்னும் இல்லைங்க. பாப்பா குறும்புத்தனமும், சிரிப்புமாய் சிறுபிள்ளை போல் சுற்றிக்கொண்டே இருக்கும். அவ்வளவு பெரிய குடும்பத்தில் வாக்கப்பட்டு போகும்போது அனைவரையும் சமாளிக்க வேண்டுமே. நமக்கு வேண்டுமானால் நம் பாப்பாவின் குறும்புத்தனம் ரசிக்கும்படியாய் இருக்கும் ஆனால் போகும் இடத்தில் அப்படி சொல்ல முடியாதே…

குருவித் தலையில் பனங்காயை வைப்பது போல் இவ்வளவு பெரிய பொறுப்பை பாப்பாக்கு கொடுக்க வேண்டுமா? நம் பாப்பா சிறு பெண் தானே. சற்று யோசிக்கலாமே…” தான் பார்க்க வளர்ந்த பெண்ணின் எதிர்காலத்தை நினைத்து தன் மனதில் தோன்றியதை தயக்கத்துடனே எடுத்துரைத்தான் கதிர்.

“கதிரு நம்ம மாப்பிள்ளைக்கு ஒரு கெட்ட பழக்கமும் கிடையாது. சிறுவயதில் இருந்தே படிப்பை கூட ஒதுக்கி வைத்து விட்டு தன் குடும்பத்திற்காக உழைத்து முன்னேறியவர். தன் உறவுகளையே உயிராய் மதித்து தாங்குபவர், கட்டிய மனைவியை எப்படி எல்லாம் வைத்துக் கொள்வார்!

மாப்பிள்ளையை நீ நேரில் பார்க்க வேண்டுமே! சட்டையை மடித்து விட்டுக் கொண்டே என்னை பார்த்து வணக்கம் வைத்த அந்த அழகில் நான் சொக்கித்தான் போய் விட்டேன் கதிரு” என்று வரப்போகும் மாப்பிள்ளையின் நினைவில் சிலாகித்தார் சிதம்பரம்.

தயக்கங்கள் மனதில் பல எழுந்தாலும், அவரின் இனிய கற்பனையை கலைக்க விரும்பாத கதிர், “சரித்தான். அப்போ நம்ம வீட்டு வாசலில் வாழைமரம் கட்ட நேரம் வந்துவிட்டது” என்று கூறி சிரித்தான்.

பளிங்கு நீர் போல், குட்லாடம்பட்டி அருவியின் தெளிந்த நீரோடை, நாணல்கள் கையசைத்து வரவேற்க, ஜில்லென்ற நீரை சுமந்து கொண்டு சலசலவென ஓடியது. வெண்ணிற மென்ப்பாதமொன்று, இளம் ரோஜா வண்ண நகச்சாயம் பூசிய தன் ஐவிரல்களை நிலம் நோக்கி குவித்து நீரினுள் மெல்ல மெல்ல செலுத்தியது.

நீரின் குளிர்ச்சியில் சட்டென்று பாதத்தை எடுப்பதும், தயக்கத்துடனே மீண்டும் அமிழ்த்தி பாதங்களில் நீரின் சுக தழுவல்களை அனுபவிப்பதுமாக இருந்தது.

அவளது விளையாட்டில் பொறுமை இழந்த அவளது தோழியர், பாறையின் பின்பக்கம் இருந்து அவளை நீரோடையில் தள்ளி விட பாதக் குளிர்ச்சியைக் கூட தாங்க முடியாத அவளின் பூவுடல், மொத்த தேகக் குளிர்ச்சியில் சிலிர்த்து எழுந்தது.

ஆழம் குறைவான அந்த நீரோடையின் மேற்பரப்பில் தன் முகத்தை மறைத்த நீரை விலக்கி, நீரில் தவறி விழுந்த தாமரை தத்தளித்து எழுவது போல், முகத்தில் வழிந்த நீரை தன் தளிர்க் கரங்களால் துடைத்துக்கொண்டே எழுந்து நின்றாள் மதிநிலா.

பெண்ணவளின் பேரெழிலில் தோழியர் கூட்டம் வாய் பிளந்து நின்றது. “கழுவி வச்ச ஆப்பிள் போல, கடித்து சாப்பிடற மாதிரி இருக்கியே நிலா. உன்னை அப்படியே சாப்பிட போற அந்த அதிர்ஷ்டசாலி யாரோ?” என்று அவளுடைய குறும்புக்கார தோழி நந்தினி கமெண்ட் அடித்தாள்.
தன் கையில் இருந்த தண்ணீரை அவள் மீது தெளித்து ஒரு விரல் நீட்டி பத்திரம் காட்டினாள்.

“அட சும்மா சொல்லுப்பா. உன் ஆளு எப்படி இருக்கணும்னு” பேச்சு கலகலப்பாய் மாறியது.

ஓடையில் நின்றிருந்த நிலா, குனிந்து தன் இரு கைகளிலும் நீரை நிரப்பி, வானோக்கி எறிந்தாள். மேல் நோக்கி சென்ற ஓடை நீர் சென்ற வேகத்தில் கீழிறங்கி, மேல் நோக்கி நிமிர்ந்திருந்த அவள் முகத்தில் பட்டுத்தெறித்தது.

இமை மூடி நின்றிருந்தவள் தன் தலையை குலுக்கி அதன் குளுமையை ரசித்தாள். செவ்விதழ்களில் தெறித்திருந்த நீரை தன் நுனி நாவால் வருடிச் சுவைத்தாள்.

மெல்ல விழி உயர்த்திப் பார்த்தவள், “நான் என்னவனிடம் எதிர்பார்ப்பது காதல் காதல் காதல் மட்டுமே! என் உணர்வுகளை, என் மொழி இல்லா பாஷைகளை, என் விழி வழி படிக்க வேண்டும். என்னை அன்பால் ஆள வேண்டும். நானே அவனாக வேண்டும். அவனே நானாக வேண்டும். மொத்தத்தில் நானே அவன் முதல் உறவாக இருக்க வேண்டும்” என்றாள் கண்களில் ஒரு வித மயக்கத்துடன்.

“அம்மாடியோவ்! அப்படி ஒருத்தனை இனிமேதான் செய்யணும். நீ எந்த கடையில ஆர்டர் கொடுக்கிறேன்னு சொல்லு. அப்படியே, எனக்கும் ஒரு பார்சல் சேர்த்து சொல்லு. கேஷ் ஆன் டெலிவரி…” என்றாள் நந்தினி கிண்டலுடன்.

“ஷ்… சும்மா இரு நந்தினி. எதையும் மாற்றும் சக்தி அன்பிற்கு உண்டு. என் கணவன் எப்படி இருந்தாலும் என் அன்பால் நிச்சயம் மாற்றி விடுவேன்” என்றாள் நம்பிக்கையாக.

“நிலா, கனவு வேறு. நிஜம் வேறு. இரண்டிற்கும் இடையில் ஊசல் ஆடாமல் நிலையாக நிற்க பழகிக் கொள். உனக்கு உன் எண்ணப்படியே மணவாளன் அமைய என் வாழ்த்துக்கள்” என்றாள் நந்தினி.

ஓங்கி வீசிய குளிர் காற்றில் உடல் சிலிர்க்க, தேகம் உதறிய உதறலில் தன் இரு கைகளையும் மர்பின் குறுக்கே கட்டிக் கொண்டு, “அடியே வானரங்களா, எனக்கு குளிர் நீர் சேராது என்று தெரிந்தும் இப்படித் தள்ளிவிட்டு வேடிக்கை பார்க்கிறீர்களே? அப்பா எனக்கு அத்தனை தடவை பத்திரம் சொல்லி அனுப்பி வைத்தார். உங்களை எல்லாம்” என்று சொல்லி முடிப்பதற்குள் அச்சு அச்சு என்று தொடர் தும்மல் போட ஆரம்பித்தாள் மதிநிலா.

சிறிது நேரத்தில் முகம் எல்லாம் வீங்கி, கண்கள் சிவந்து அவதியுற ஆரம்பித்தாள். தாங்கள் விளையாட்டாய் செய்தது வினையாய் மாறிப்போனதை உணர்ந்த தோழியர் கூட்டம் அவளிடம் ஆயிரம் மன்னிப்பை கேட்டனர். பின் கதிரவனின் கதிரொளியில் வெம்மையை பெற்றுக் கொண்டவளுக்கு, உடல்நிலை சற்று சமன்பட்டது.

கல்லூரியில் இறுதிப் பரிட்சையை எழுதி முடித்த மதிநிலா, தன் தோழியர்களுடன் குட்லாடம்பட்டி அருவியில் நீராடச் செல்ல தன் தந்தை சிதம்பரத்திடம் கெஞ்சி, கொஞ்சி அனுமதி பெற்று இருந்தாள். தனக்கு ஏதேனும் ஒன்று என்றால் துடிக்கும், தாய் இல்லாத தன்னை தாயாய் தாங்கும், தன் தந்தையின் அன்பில் எப்பொழுதும் கர்வம் கொண்டவள் மதிநிலா.

தன் தந்தைக்காக, தன் தந்தையின் மகிழ்ச்சிக்காக எந்த எல்லைக்கும் செல்லத் தயார் நிலையில் இருப்பவள் இவள்.

அந்த இனிய நாளை தன் தோழியருடன் மகிழ்ச்சிகரமாக செலவழித்துவிட்டு தன் வீடு திரும்பினாள் மதிநிலா.

தன் தாயின் படத்தின் முன் நின்று அவரின் கண்களையே உற்று நோக்கிய தந்தையைக் கண்டதும் மனது ஏனோ பிசைந்தது மதிநிலாவுக்கு.

மெல்ல தன் தந்தையின் அருகே வந்து, அவரது தோள் வளைவுக்குள் தன் கைகளை கோர்த்துக்கொண்டு, அணைவாய் அவரின் தோள் சாய்ந்தாள். “என்னப்பா அம்மாவிடம் கண்களாலேயே காரசாரமாய் விவாதம் செய்து கொண்டிருக்கிறீர்கள். என்ன விஷயம்?” என்றாள்.

தன் மகளின் தலைமீது தன் கன்னத்து தாடைகளை வைத்து, மென்மையாய் அழுத்தி, “நிலா பொண்ணு! உன் திருமணத்திற்காக அம்மாவிடம் சம்மதம் கேட்டுக் கொண்டிருந்தேன்டா. அவளுக்கு முழு சம்மதமாம். உனக்குடா” என்று மகளின் பதிலுக்காக காத்திருந்தார்.

தன் தந்தையின் கைகளைப் பற்றி இருந்த இடத்தில் மேலும் அழுத்தத்தை கூட்டி, “உங்களுக்கு சம்மதம் என்றால் எனக்கும் முழு சம்மதம் அப்பா” என்றாள்.
தெரிந்த பதில் தான் என்றாலும் தன் மகள் வாயால் கேட்க, மண்ணில் சொர்க்கத்தை உணர்ந்தார் சிதம்பரம்.

தன் மனைவியின் படத்தின் முன்னால் இருந்த கவரை எடுத்து, மகள் கையில் கொடுத்தார். “என் மாப்பிள்ளை திருச்செந்தூரன்” என்று கம்பீரமாக அறிவித்துவிட்டு, மகளின் தலையில் தன் கரத்தை வைத்து ஆசீர்வாதம் செய்துவிட்டு, படபடக்கும் தன் மகளின் விழியை பார்த்துக் கொண்டே மென் சிரிப்புடன் வெளியேறினார்.

கிராம் எடையில் இருந்த அந்தக் கவர் கிலோ கணக்கில் கணத்தது மதிநிலாவுக்கு. தன்னறைக்குள் வந்து கதவைச் சாற்றி கதவில் சாய்ந்து நின்றவளுக்கு, வெட்கமும் தயக்கமும் போட்டி போட்டு முட்டிக்கொண்டது.

முரசு கொட்டிய தன் இதயத்தை, தன் வலது கையால் நீவி விட்டு, மெல்ல கவரை பிரித்து புகைப்படத்தை வெளியில் எடுத்தாள்.

உற்றுப் பார்க்கும் விழிகளுடன், லேசாக சிரிக்க முயன்ற உதடுகளுடன், அலட்டல் ஏதுமின்றி, படிய வாரிய சிகையுடன் நின்று கொண்டிருந்தான் திருச்செந்தூரன்.

பார்த்த நொடியில் திருவின் திருமதியாக திருமகள் உருமாறினாள்.

மதுரையில் தெற்கு கோபுரத்தை எதிர்நோக்கி இருக்கும் அவனியாபுரம் பகுதியில் சிறிய அளவிலும் இல்லாமல், பெரிய அளவிலும் இல்லாமல் நடுத்தரமாக இருந்தது அந்த வீடு. திருச்செந்தூரனின் வீடு. அன்று ஞாயிற்றுக்கிழமை, சற்று தாமதமாக கடை திறக்கலாம் என்பதால் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தான் திரு.

திருவின் பெற்றோர் பஞ்சவர்ணம் மற்றும் செல்வம் ஆவர். அவர்களின் மூத்த மகள் தனலட்சுமி. அவளது கணவன் கார்த்திக். அரசாங்க அதிகாரி. இவர்களுக்கு சந்தோஷ், சரண்யா என்ற இரண்டு மழலைச் செல்வங்கள்.

அவர்களின் அடுத்த மகள் திவ்யலட்சுமி. அவளது கணவன் அருண். இன்ஜினியர். இவர்களுக்கு ஆதித்யா, ஆதிரா என்ற இரண்டு மழலைச் செல்வங்கள்.

இரண்டு மகள்களைத் தொடர்ந்து, அவர்களின் அடுத்த தவப் புதல்வன் திருச்செந்தூரன்.

திருவிற்கு அடுத்து பிறந்தவள், யோகலட்சுமி. அவளது கணவன் சிவா. சின்ன ஜவுளி கடை ஓனர். இவர்களுக்கு அட்சயா என்ற ஒரே ஒரு பெண் குழந்தை மட்டும் உண்டு.

பெண் மக்களை மதுரைக்குள்ளேயே மணமுடித்து கொடுத்திருந்தனர். திரு தேடித் தேடி கண்டுபிடித்த மாப்பிள்ளைகள் ஆகையால் தங்கள் மனைவிகளை அவர்கள் சந்தோஷமாகவே வைத்திருந்தனர்.

ஞாயிற்றுக்கிழமை மொத்த குடும்பமும் திருவின் வீட்டிற்கு காலை உணவிற்கே வருகை புரியும். அதன்பின் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம், கேளிக்கை தான். அப்படி ஒரு நன்னாளில் தான் சிதம்பரம் திருவைப் பார்த்தது.

அவனது தாய் பஞ்சவர்ணம், அவனுடைய தந்தை செல்வத்தின் கையில் பெரிய லிஸ்ட்டை கொடுத்து சாமான்களை வாங்கி வருமாறு விரட்டிக் கொண்டிருந்தார்.

சமையல் வேலைக்கு ஆட்கள் வைப்பது பஞ்சவர்ணத்திற்கு பிடிக்காத ஒன்று. தன் குடும்பத்திற்கு தன் கையால் விருந்து சமைப்பதை என்றும் எப்பொழுதும் பெருமையாகவே கருதுவார். மகள்கள் வந்தால், சிரித்துக் கொண்டே அவர்களையும் வேலை வாங்கி விடுவார்.

தன் தாய் மற்றும் மாமியார் தனக்கு கற்றுக் கொடுத்ததை இன்றளவும் தன் பிள்ளைகளுக்கு போதித்துக் கொண்டிருக்கும் ஒரு நல்ல குடும்பத் தலைவி பஞ்சவர்ணம்.

தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக செல்வம் முழுவதுமாய் உடைந்த நிலையில் இருந்த போது, சிறுவயதிலேயே படிப்பை துச்சம் என தூக்கி எறிந்து விட்டு, மெக்கானிக் ஷாப்பில் வேலைக்கு சேர்ந்தான் திரு.

அதன் பின் தன் கடின உழைப்பால் தனிக்கடை ஒன்றை ஆரம்பித்து தன் உடன் பிறந்தவர்களுக்கும் திருமணம் முடித்து, இன்றளவும் சீர் செய்து மதிப்புடன் வைத்திருப்பவன்.

தன் மகனால்தான் இந்த குடும்பம் இந்த அளவிற்கு தலைநிமிர்ந்தது என்பதை உணர்ந்து தன் மகனை தனி மரியாதை உடன் நடத்துவார் பஞ்சவர்ணம்.

தன் மகனைப் பற்றி யாரையும் ஒரு சொல் சொல்ல விடமாட்டார். தன் மீது, தன் மகன் வைத்திருக்கும் அன்பை, தன் தேவைக்கு ஏற்றபடி வில்லாய் மாற்றும் வித்தை தெரிந்தவர்.

சமையலறையில் வேலை பார்த்துக் கொண்டிருந்தாலும், பஞ்சவர்ணத்தின் கண்கள் வீட்டு வாசலையே, தான் பெற்ற மக்களை எதிர்பார்த்துக் காத்திருந்தன. இன்று திருவிற்கு பெண் பார்க்கும் படலத்திற்கான ஏற்பாடும் இருப்பதனால், சமையலை தடபுடல் ஆக்கியிருந்தார்.

மாடியறையில் கட்டில், மெத்தை இருந்தாலும் தரையில் கைகளை தலைக்கு அணைவாய் கொடுத்து, பள்ளி கொண்ட திருமால் போல், ஒரு பக்கமாய் சாய்ந்து படுத்திருந்தான் திருச்செந்தூரன்.

மேலே சுழண்டு கொண்டிருந்த மின்விசிறி காற்றை வாரி இறைக்க, அந்தக் காற்றும் கீழிறங்கி வந்து இதமாய் அவன் தலையைக் கோதியது.

உடுத்திருந்த உடைகள் சாதாரணமாய் இருந்தாலும், அவனது முகக்களை அரசனின் கம்பீரத்திற்கு ஈடு கொடுத்தது. அவன் துயில் கொள்ளும் அழகை கலைப்பதற்கு என்று அவனது அலைபேசியில் இருந்து குயில் கூவிக்கொண்டே இருந்தது.

அவனின் கடும் உழைப்பு, அவன் உடலை ஓய்வெடுக்கச் சொன்னாலும், உறுதியான அவனது உள்ளம் அவனை எழுப்பியது. விரைந்து எழுந்தவன் தனது காலைக் கடன்களை முடித்துவிட்டு மின்னல் விரைவுடன் கீழே இறங்கி வந்தான்.

“பாட்டி எனக்கு பூரி கொடு. பாட்டி எனக்கு தோசை கொடு” தன் பேரப் பிள்ளைகளின் வேண்டுகோளுக்கிணங்க தன் மகள்களுக்கு ஆளுக்கு ஒரு வேலையை பிரித்துக் கொடுத்து அனைவரின் விருப்பத்தையும் நிறைவேற்றிக் கொண்டிருந்தார் பஞ்சவர்ணம்.

திரு கீழே இறங்கி வந்ததும் “மாமா” என்று அழைத்துக்கொண்டு அனைத்து மழலை பட்டாளங்களும் அவன் மீது ஏறித் தாவி, அவனை ஒரு வழி ஆக்கி விட்டனர்.

தன் உடன் பிறந்தவர்களையும், மாமன்மார்களையும் “வாங்க” என்று மதிப்புடன் அழைத்து வரவேற்றான்.

பின் அனைவரும் உணவு மேசையில் அமர்ந்து காலை உணவை மகிழ்ச்சியுடன் பரிமாறி உண்டனர். திரு கடைக்கு கிளம்பும் முன், தன் தாயை கண்களால் அழைத்து ஜாடை செய்தான்.

தன்னறைக்குள் சென்ற பஞ்சவர்ணம், கை நிறைய பைகளை சுமந்து வந்து திருவிடம் கொடுத்தார். அனைவருக்கும் வாங்கிய புத்தாடைகளை அவர்களின் கைகளில் கொடுத்தான்.

அவனின் தமக்கைகள் தங்களுக்கு வந்த புடவையின் நிறத்தை அலசி ஆராய்ந்தனர். ஒவ்வொருவருக்கும் தங்கள் கையில் உள்ள புடவையின் நிறத்தை விட அடுத்தவரின் கையில் இருந்த புடவையின் நிறமே பிடித்து இருந்தது ‘இக்கரைக்கு அக்கரை பச்சை’ என்பதைப் போல.

அவனின் கடைசி தங்கை யோகலட்சுமி, தனது அக்கா திவ்யலட்சுமியைப் பார்த்து “நாம் கலரை மாற்றிக் கொள்வோமா?” என்று கேட்டாள்.

“ஜவுளிக்கடை ஓனர் அம்மாவுக்கு எத்தனை புடவை! எத்தனை நிறங்கள்! இருந்தும் என் புடவை மீதுதான் கண்” என்று நக்கல் அடித்தாள் திவ்யா.

“ம்… எத்தனை புடவை எனக்கு சொந்தமாக இருந்தாலும் என் அண்ணன் வாங்கித் தருவது போல இருக்குமா? என்ன அண்ணா?” என்று திருவையும் தனக்குத் துணைக்கு அழைத்தாள்.

” எத்தனை ஜென்மங்கள் எடுத்தாலும் உங்கள் மீது நான் கொண்ட அன்பு குறையாது! அழியாது! என் வாழ்க்கையில் நான் பொருள் தேடுவதற்கான முழுப் பொருளே நீங்கள் தான்! உங்களைத் தாண்டி, யாரும் என்னை உள்ளத்தால் நெருங்க முடியாது ” என்று பாசத்தில் தன்னை ஒப்புக் கொடுத்தான் திருச்செந்தூரன்.

உடனே அவனது மூத்த அக்கா தனலட்சுமி, ” டேய் தம்பி! உன் பொண்டாட்டி வந்தாலும் இந்த பதிலை அவள் முன் சொல்வாயா?” என்றார் கண்களில் ஏதோ ஒரு ஆர்வத்தை தேக்கி.

” நிச்சயமாக!” என்று கூறி அனைவர் உள்ளத்திலும் பாலை வார்த்தான் திருச்செந்தூரன்.

விழி பேசும்…