விழி அசைவில் மொழி தொலைத்தேனே… 2

Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels


அத்தியாயம் – 2


மாலை ஐந்து மணி அளவில் திருச்செந்தூரான் வீடு களை கட்டியது. பெண் பார்க்கும் வைபவத்திற்கு அனைவரும் தயாராக ஆளுக்கு ஒரு திசையில் பறந்து கொண்டிருந்தனர்.

“அம்மா, பெண் பிடித்திருந்தால் அங்கேயே பூ வைத்து விட்டு வரவேண்டும் தானே” மூத்த மகள் தனலட்சுமி தன் அன்னையிடம் வினவினாள்.

“ஆமாம் தனம். பெண்ணின் போட்டோவை நாங்கள் தரகரின் போனில் பார்த்துவிட்டோம். எனக்கும் அப்பாவுக்கும் முழு திருப்தி. திரு உங்களுக்கு பிடித்திருந்தால் போதும் என்று முடித்து விட்டான். அவர்களும் நமது வீட்டை பார்த்து விட்டார்கள்.

அவர்களுக்கும் பிடித்திருந்ததால் தான் தரகர் மூலம் சொல்லிவிட்டு இருக்கிறார்கள். இத்தனை வருடங்கள் கழித்து திரு சரி என்று சொல்லி நாம் பார்க்கும் முதல் பெண். எல்லாம் நல்லபடியாக அமைய வேண்டும்” என்று கைகள் குவித்து கண்கள் மூடி இறைவனை ஒரு நிமிடம் வேண்டினார்.

“ஏன் பொண்ணை நீங்கள் மட்டும் தான் பார்க்க வேண்டுமா? நாங்கள் எல்லாம் பார்க்க கூடாதா? எல்லாம் முடிவெடுத்த பிறகு சும்மா ஒப்புக்கொன்று எங்களை கூப்பிட்டீர்களா?” என்று காட்டமாக பேச ஆரம்பித்தார் மூத்த மகள் தனலட்சுமி.

தன் சின்ன மக்களைப் பார்த்து “என்னம்மா பெரியவள் இப்படி பேசுகிறாள்?” என்றார் பஞ்சவர்ணம்.

“அக்கா சொல்வதில் என்ன தப்பு இருக்கு? திடீரென்று பொண்ணு பார்க்க போவோம் என்று எங்களை கூப்பிடுவதற்கு முன்கூட்டியே கல்யாணப் பேச்சு வார்த்தையை தொடங்கியது பற்றி, எங்களிடம் ஒரு வார்த்தை கூட சொல்லாதது சுருக்கென்றுதான் இருக்குது” என்று முகத்தை லேசாக சுருக்கினாள் திவ்யலட்சுமி.

“ஆமாம் திவ்யா. அண்ணன் நமக்கெல்லாம் எப்படி மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்து வைத்திருக்கிறார். அவருக்கான பெண்ணை நாம் சரியாக முடிவு செய்ய வேண்டும். இந்த அம்மா எடுத்தோம், கவிழ்த்தோம் என்று முடிவு செய்து இருக்கிறார்கள். வரப்போற மகராசி எப்படி இருப்பாளோ?” என்று பெருமூச்சு விட்டாள் யோகலட்சுமி.

“அடியே! கொஞ்சம் வாயை அடக்கி வையுங்கள். பொண்ணு இப்பதான் காலேஜ் படிப்பை முடிச்சு இருக்கா. சின்னப் பொண்ணு தான். திருவுக்கும் அவளுக்கும் ஒன்பது வயசு வித்தியாசம்.

தாயில்லாமல் தகப்பன் வளர்த்த பொண்ணு. எடுத்துச் சொன்னால் எல்லாத்தையும் புரிஞ்சுக்கவா. மத்ததை நீங்களே நேரில் சென்று அவ கூட பேசி தெரிந்து கொள்ளுங்கள்” என்று மகள்களின் பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் பஞ்சவர்ணம்.

“கண்டிப்பா பேசுவோம். பார்ப்போம்” என்று கூறிய யோகா, தன் அக்காமார்களை அர்த்தம் பொதிந்த பார்வை பார்த்தாள்.

தன் படை பட்டாளங்களுடன், பெண் பார்க்கும் படலத்தை திரு தொடங்கினான். அனைவரும் தாராளமாக அமரும்படி இருந்த சொகுசு வேனில், அவர்களின் பயணம் தொடங்கியது. திருவுக்கு மனதில் எந்த விதமான எதிர்பார்ப்புகளும் இல்லை.

சமுதாயத்தில் ஆண் மகனாக முழுமை அடைவதற்கு தனக்கென குடும்பமும், குழந்தையும் அவசியம் என்பதை உணர்ந்து திருமணத்திற்கு தலையசைத்திருந்தான் அவ்வளவே.

பாசம் நிறைய கொட்டி கிடக்கும் அவன் மனதில் காதல் ஆசை துளியேனும் துளிர்விட்டு இருந்ததா? விதி எழுதிய திருவின் விடையறியா வினா இது.

தும்பை நிற வேஷ்டி சட்டையில், மீசையை நுனியை முறுக்கி, காற்றில் அலையும் கேசத்தை விரல்களால் ஒதுக்கி, ஜன்னலில் ஒரு கை முஷ்டியை மடக்கி வைத்த படி, முகத்தில் வீசும் காற்றை அனுபவித்து வந்தான் திருச்செந்தூரன்.

தனது குடும்பத்துடன் வெளியே செல்லும் ஒவ்வொரு நொடியையும் அனுபவித்து மகிழ்ந்தான். அவனுடன் பிறந்தவர்களோ வரப்போகும் சின்ன பெண்ணான, தங்கள் புதிய உறவுக்கு முன், தங்கள் வயதை குறைத்துக் காட்டுவதற்காக, தோற்றத்தில் அதிக அக்கறை எடுத்து அரிதாரம் பூசி இருந்தனர்.

அதிலும் தனலட்சுமியின் கணவன் கார்த்திக் அவளிடம், “மேடம் என்னுடைய வைஃப் தனலட்சுமியை பார்த்தீங்களா? கண்டா வரச் சொல்லுங்க. அவள கையோடு கூட்டி வாருங்க” என்று பாட்டு பாடி நக்கல் அடித்தான்.

அருகில் இருந்த அவளது தங்கைகள் அதனைக் கேட்டு சிரிக்க, “என்னடி சிரிப்பு? அங்க மட்டும் என்ன வாழுதாம்? ஈயத்தை பார்த்து சிரிச்சு தாம் பித்தளை. சரிதான் போங்கடி” என்று கூறி தங்கைகளைப் பார்த்து நொடித்தாள்.

தனம் தன் கையில் வைத்திருந்த ஹேண்ட்பேக்கை கார்த்திக் பக்கம் தவற விட்டாள். ஹேண்ட் பேக் தெரியாமல் விழுந்தது என்று நினைத்துக் கொண்டு, குனிந்து அதனை எடுத்துவிட்டு கார்த்திக் நிமிர்வதற்குள் அவன் தலையில் நங் என்று ஏதோ ஒரு சத்தம் கேட்டு சுதாரிப்பதற்குள், அவனது உச்சந்தலை எரிய ஆரம்பித்தது.

மனைவியை ‘அவ்வளவு பாசமா?’ என்பது போல் ஒரு பார்வை பார்த்துவிட்டு, தூங்குவதுபோல் கண்ணை மூடிக்கொண்டு சீட்டில் பின்பக்கம் சரிந்து அமர்ந்து விட்டான்.

திவ்யலட்சுமி வீசும் காற்றில் தன் தலைமுடி கலைவது கண்டு தன் கணவன் அருணை நோக்கி, “ஏங்க அந்த ஜன்னலை கொஞ்சம் மூடுங்க” என்றாள்.

சற்று முன் தன் சகலை வாங்கிய வெகுமதியைக் கண் கொண்டு கண்ட அந்த இன்ஜினியர், தன் வாழ்க்கை கட்டடத்தை ஒழுங்காக கட்ட, ஜன்னலை விரைந்து அடைத்தான்.

இவர்களின் சம்பாஷனைகளைக் கேட்ட கடைசி மாப்பிள்ளை சிவா தன் மனைவி யோகலட்சுமியிடம், “அட்சயாவை என்னிடம் கொடு. உன் புது சேலையை கசக்குகிறாள். நான் அவளை வைத்துக் கொள்கிறேன்” என்று ஆடு தானாகவே தன் தலையில் மஞ்சள் தண்ணீரை ஊற்றி, தன் கழுத்தில் மாலையை போட்டுக் கொண்டது.

“அது…” என்பது போல் மிதப்பாய் சிவாவை பார்த்தாள் யோகா.

மதுரையில் இருந்து குட்லாடம்பட்டி சென்றடைந்தது அவர்களது வேன். சொந்த பந்தங்களுடன் நின்றிருந்த சிதம்பரம், அனைவரையும் “வாங்க வாங்க” என்று வரவேற்று வீட்டினுள் அழைத்துச் சென்றார்.

நவீன வசதிகளுடன் இருந்த அவர்களது வீடு, அவர்களின் செல்வ நிலையை எடுத்துக்காட்டியது. பட்டிக்காடு தானே என்று அலட்சியமாக இருந்தவர்கள், கிராமத்தில் இப்படி ஒரு வீட்டை அவர்கள் எதிர்பார்க்கவில்லை. பெண் வீடு தங்களை விட சற்று வசதியானது என்பதில் முதல் அடி வாங்கினர் திருவின் தமக்கையர்கள்.

பஞ்சவர்ணம் மற்றும் செல்வத்தின் திருப்தி அவர்களின் கண்களில் பிரதிபலித்தது.

தழைந்த வேஷ்டியில், விளைந்த மிடுக்குடன் பனை மரத்தின் பாதி உயரத்துடன், நெடு நெடுவென தன் வீட்டிற்குள் நுழைந்தவனை, இரு அஞ்சன விழிகள், அகல விரிந்து, கதவிடுக்கின் வழியே வெட்கத்துடன் சிமிட்டிப் பார்த்தது.

வெட்கத்தின் உச்சத்தில் மேல் உதட்டின் மேல் அரும்பிய வியர்வைத் துளிகளுடன் “பனை மரத்தான்…” என்று ஓசை இல்லாமல் இரு இதழ்கள் அசைந்தது.

கொட்டிய குங்குமச்சிமிழ் போல், வெட்கம் கொட்டிய அந்த பூ முகம் சிவந்து இருந்தது.

தன் கால் பெருவிரலால் நில மகளை தொட்டுத் தொட்டு தன் வெட்கத்தை கடத்தினாள் மதிநிலா.

அவள் பின்னலை பின்னால் இருந்து இழுத்த நந்தினி அவள் காதில், “ஹேய் நிலா… அதுக்குள்ள என்ன அவசரம்? பொண்ணு பார்க்க தானே வந்திருக்கிறார்.

இதுக்கே இப்படின்னா, தாலி கட்ட வந்தா மடியில ஏறி உட்கார்ந்து கொள்வாய் போலயே…” என்று கிண்டல் அடித்தாள்.

“இல்லை… சும்மா… எப்படி இருக்கிறார் என்று…” என்று திக்கித் திணறி ஆரம்பித்தவள், பின் சுதாரித்துக் கொண்டு, “ஹலோ மேடம், என் வருங்காலத்தை நான் ஒளிந்து கொண்டு பார்ப்பேன். ஓரக் கண்ணால் பார்ப்பேன். அதென்ன மடி மீது ஏறி? அவரின் மனதில் குடியேறப் போகும் நான், அவர் தலையிலும் கூட ஏறி அமருவேன்” என்று நந்தினியிடம் சிலிர்த்துக்கொண்டு சண்டை இட்டாள்.

“மெதுவா பார்த்துடி. அவர் தலையை சிலுப்பினால் பொத்தென்று கீழே விழுந்து விடுவாய்” கலகலவென்று நகைக்க ஆரம்பித்தாள் நந்தினி.

“இல்லை நந்தினி, என் தாயின் பாசத்தையும், தந்தையின் அரவணைப்பையும் எனக்கே எனக்கான என்னவனிடம் எதிர்பார்ப்பதில் என்ன தவறு இருக்கிறது?” விழிகள் கலங்கிட மதிநிலா மெல்ல வினவினாள்.

“ஹேய்… நான் சும்மா விளையாட்டுக்கு சொன்னேன் நிலா. நீ வருந்தம்படி ஒன்றும் நடந்து விடாது. உன் அப்பாவிற்கு பிடித்த இந்த நிலாப் பொண்ணை உன் புகுந்த வீட்டில் எல்லோரும் எப்படி கொண்டாட போகிறார்கள் என்று பார்” என்று தன் தோழியை அரவணைத்து ஆறுதல் சொன்னாள்.

அனைவரும் அமர்ந்திருந்த வரவேற்பு அறைக்கு, மதிநிலாவை அழைத்து வந்தார் சிதம்பரம். தன்னவனை பார்க்கச் சொல்லி விழிகள் கெஞ்சினாலும், பொங்கி வந்த வெட்கமும் நாணமும் அவளின் தலையை நிமிர்த்தச் செய்யவில்லை.

சகோதரிகள் மூவருக்கும் மதி நிலாவின் அழகைப் பார்த்து பிரமிப்பாய் இருந்தது. கொஞ்சம் என்ன நிறையவே பொறாமையாகவும் இருந்தது.

மகள்களைத் தாண்டி எழுந்து சென்ற பஞ்சவர்ணம் “வாம்மா” என்று மதிநிலாவின் கையைப் பிடித்து தன்னருகில் அமர்த்திக் கொண்டார்.

தாய் தங்களுக்குத் தரும் முக்கியத்துவம் திடீரென பறிபோனதைப் போல் மகள்கள் பரிதவிக்க ஆரம்பித்தனர்.

கார்த்திக்கும், அருணும் இணைந்து கொண்டு திருவை பார்த்து, “திரு பொண்ணை நல்லா பாத்துக்கோங்க. அப்புறம் நாங்க செஞ்ச அதே தப்பை நீங்களும் செஞ்சுடாதீங்க” என்று மெதுவான குரலில் கிண்டல் அடித்தனர்.

சிறு சிரிப்புடன், “அக்கா, மாமாமார்கள் ரெண்டு பேரும் உங்களை பொண்ணு பார்க்க வரும்போது ஏதோ தப்பு பண்ணிட்டாங்களாம். என்னன்னு கொஞ்சம் தனியா கூட்டிட்டு போய் கேளுங்க” என்றான் திரு.

திரிசூலம் ஏந்தாத பத்ரகாளியாய் இருவரும் முறைக்க, “மாப்பிள்ளை சும்மா விளையாடுறார். இல்லை மாப்பிள்ளை…” என்று கண்களால் திருவிடம் கெஞ்சினான் கார்த்திக்.

இவர்களின் பாசப்பார்வைகளுக்கு இடையே, தன் சிரத்தை உயர்த்தி ஒரு கூர்ப்பார்வையை மதிநிலாவை நோக்கி வீசினான் திருச்செந்தூரன்.

தன் தாய் கேட்கும் கேள்விகளுக்கு, மெல்லிய குரலில் தலையை அசைத்து பதில் கூறிக் கொண்டிருக்கும் மதிநிலாவை பார்த்ததும் பிடித்துப் போனது திருவிற்கு.

தன் தமக்கைகளைப் பார்த்து, புருவத்தை உயர்த்தி, கண்களால் வினா தொடுத்தான் திரு.

தங்கள் சகோதரன் தங்களின் சம்மதத்தை எதிர்பார்ப்பதைக் கண்டு உள்ளம் குளிர்ந்து மூவரும் தலை அசைத்தனர் ஆனந்தமாய்.

தன் தாயின் சம்மதம் அவர் கண்களில் வழிந்து ஓட, சபையில் தன் கனீர் குரலில், “எங்கள் அனைவருக்கும் பெண்ணை பிடித்திருக்கிறது. உங்களுக்கு சம்மதம் என்றால் மேற்கொண்டு நாம் தாம்பூலத்தை மாற்றிக் கொள்ளலாம்” என்று தன் முடிவை அறிவித்தான் திரு.

அவன் ஆளுமையின் அதிரடியில் தலைக்குப்புற விழுந்த சிதம்பரம், “எங்களுக்கு முழு சம்மதம் மாப்பிள்ளை” என்றார் தன் மகளின் முகத்தை பார்க்காமலேயே.

மதிநிலாவின் மனம் மெல்லமாய் சுருங்கியது உள்ளுக்குள். சபையில் பேசாமல், தன்னிடம் தனியாக பேசிவிட்டு சம்மதத்தை தெரிவிப்பான் என்று அவள் நினைத்திருக்க, அவளின் சம்மதம் யாருக்கும் அங்கே ஒரு பொருட்டாகவே இல்லை.

” பனைமரத்தான்… ” மதிநிலாவின் மனதோடு வசை மழை பொழிந்தது திருவிற்கு.

தாம்பூலம் மாற்றப்பட்டு, மதிநிலாவின் தலைநிறைய பூ வைத்தனர் திருவின் உடன் பிறந்தவர்கள்.

தனம் ஒரு வரிசை வைக்க, போட்டிக்கின்றே திவ்யா இன்னொரு சுற்றை அவள் தலையில் வைக்க, யோகலட்சுமி ‘விட்டேனா பார்’ என்று மூன்றாவது வரிசையை கஷ்டப்பட்டு அவள் தலையில் திணித்துச் சுற்ற, மதிநிலா முகம் சுருக்காமல் இருக்க மிகவும் சிரமப்பட்டாள்.

மெதுவாக எழுந்த பஞ்சவர்ணம், தன் சார்பாக மற்றொரு சுற்றை அவள் முடிகளுக்கிடையே திணித்தார். மலரைப் போன்றவளின் முகம், மலரின் சுமை தாங்காமல் தரை நோக்கி கவிழ்ந்தது.

” அண்ணி எங்க அண்ணனை நீங்க பாத்தீங்களா? இல்லையா?” யோகலட்சுமி அவளை வம்புக்கு இழுத்தாள்.

மெல்ல தலை நிமிர்த்த துவங்கிய மதிநிலாவின் தலை, பாரம் தாங்காமல் ஒரு பக்கமாய் சரிந்தது.

” என்ன மதி, பூவின் பாரமே தாங்க முடியவில்லையா? அப்போது குடும்ப பாரத்தை எப்படி தாங்குவாய்? ” என்றாள் தனம் தன் குரலைச் செருமி விட்டு.

சுற்றம் சூழ ஆரவாரம் மிகுந்து இருக்க, மதிநிலாவால் திருவை ஏறெடுத்து பார்க்க முடியவில்லை.

அவர்களின் வீட்டு கடைசி மாப்பிள்ளை சிவா, ” மச்சான் நீங்க பொண்ணு கூட தனியா பேசி விட்டு வரலாமே. அவங்களுக்கு உங்க கூட பேசணும்னு ஆசையா இருக்கும் இல்லையா? ” என்றான் எதார்த்தமாக.

திரு தங்கள் வீட்டு மாப்பிள்ளையின் பேச்சுக்கு மதிப்பு கொடுத்து, மதிநிலாவுடன் பேச எழுந்து நின்றான்.

தலைகுனிந்து அமர்ந்திருந்த மதிநிலாவின் பார்வை வட்டத்தில், கம்பீரமான கால்களுடன் திரு எழுந்து நிற்பதைக் கண்டாள்.

நந்தினி அருகில் வந்து மதிநிலாவை அழைத்துக் கொண்டு, அவளது அறையில் விட்டுவிட்டு வந்தாள்.

அறைக்குள் நுழைந்த திரு நாற்காலியில் அமர்ந்து கொண்டான்.

மதிநிலாவின் ரத்த நாளங்கள் ஒன்றோடு ஒன்று பிணைந்து கொண்டு சூடேற்ற, அவளது முகம் செம்பவளமாய் மிளிர்ந்தது.

பாவையவளின் முகம் காட்டும் வர்ணஜாலத்தில் அசந்தே போனான் திரு. கட்டிய சேலையில், வெட்டி வைத்த சிற்பமாய் அழகுடன் ஜொலித்தவளைக் கண்டு, பேச வந்த மொழியும் மறந்தே போனான்.

தன்னவன் தன்னிடம் பேசும் முதல் வார்த்தையை கவனிக்க அவனின் கரும் மீசைக்கு அடியில் இருக்கும், தடித்த உதடுகள் உதிர்க்கப் போகும் முத்துக்களை கோர்த்து வைக்க, செவியை தீட்டி விட்டு, பார்வையை அவனில் நிலைக்க விட்டாள் மதிநிலா.

ஆண் என்ற கர்வத்தில் தன் தலையை சிலிர்த்துக்கொண்டு, “உன் பெயர் என்ன? ” என்றான் உயர் குரலில்.

அவளின் எண்ணம் சுமந்திருந்த வண்ணக் கனவுகளை தண்ணீர் தெளித்து அழித்தது போல் இருந்தது மதிநிலாவுக்கு. ‘தன் பெயர் கூட தெரியாமல் பெண் பார்க்க வந்தானா?’ ஊமையாய் உள்ளம் அரற்றியது.

பொங்கிய ஆசைகள் வடிந்து போன வேளையிலும், “நான்… மதிநிலா” என்றாள் உள்ளடங்கிய குரலில்.

அவளின் பெயர் பிடித்திருந்த போதிலும், “ம்…” என்று மீசையைத் திருக்கி மௌனச் சிரிப்பு சிரித்தான்.

தன் தைரியத்தை எல்லாம் ஒன்று திரட்டிய மதிநிலா, “என்னை உங்களுக்கு பிடித்திருக்கிறதா? ” என்று கேட்டே விட்டாள்.

தன் வீட்டுப் பெண்களைப் போல் இல்லாமல், புதியவனிடம் தைரியமாக பேசும் அவளை, ஒரு புரியாத பார்வை பார்த்தான் திரு.

தலையில் சூட்டிய மலரின் பாரத்தை தாங்கிக் கொண்டு, விழிகளை உயர்த்தி, அவனைப் பார்த்தாள் அவனின் பதிலுக்காக.

“பிடிக்கவில்லை என்றால் என்ன செய்வாய்? ” என்றான் அவளது விழிகளை நேராகப் பார்த்துக் கொண்டு.

அவனின் இடக்கு மடக்கான கேள்வியில் நெஞ்சம் அடைத்துக் கொண்டு வந்தது மதிநிலாவிற்கு. கரிக்கத் தொடங்கிய கண்ணை கட்டுப்படுத்திக் கொண்டு, “அது…” என்று திணறினாள்.

தன் அழகை ஆராதிப்பான், காதலோடு நோக்குவான் என்று முதல் சந்திப்பை தித்திப்பாய் உள்ளத்தில் பூட்டி வைக்க நினைத்தவளுக்கு, ‘அவன் அறையை விட்டு எப்பொழுது வெளியே செல்லுவான்’ என்ற எண்ணமே தோன்றியது.

அவளின் பரிதவிப்பை கண்டு கொண்டவன், ” எங்கள் வீட்டில் அனைவருக்கும் உன்னை பிடித்திருக்கிறது. எனக்கும் பிடித்திருக்கிறது. வேறு ஏதாவது கேட்க வேண்டுமா? ” என்றான்.

‘எல்லோருக்கும் பிடித்ததால் தான் தன்னை பிடித்திருக்கிறதா?’ மதிநிலாவின் மனம் முட்டி மோதிக் கொண்டு முரண்டியது.

அவனுடன் பேசுவதற்காக எண்ணமெனும் ஏட்டில் எழுதி வைத்து எழுத்துக்கள் எல்லாம் காற்றில் அடித்து பிடித்துக் கொண்டு பறந்து செல்ல, வெறுமையாய் அவனை பார்த்தாள்.

மௌனமாய் நின்றவளின் நிலையை வெட்கம் என்று நினைத்துக் கொண்டு, “வருகிறேன்…” என்று கூறிவிட்டு விடைபெற்றுச் சென்றான் திரு.

அனைவரும் சென்ற பிறகு, தன் அறையில், தன் கட்டிலில், தன் தலையை இரு கைகளாலும் தாங்கிக் கொண்டு குனிந்து அமர்ந்திருந்தாள் மதிநிலா.

அருகில் அமர்ந்த நந்தினி, “என்னடா பூ ரொம்ப பாரமா இருக்கா? ” என்று மென்மையாக கேட்டாள்.

அவளின் தோள் சாய்ந்த மதிநிலா, “எனக்கு ரொம்ப பயமா இருக்குடி” என்றாள்.

“ஹேய்… என்னடா எங்க நிலா பொண்ணுக்கு பயம் எல்லாம் புதுசா வருது. உன் ஆளை பார்த்தால், உன் ஒரு பார்வைக்கு மயங்கி விடுவார் போல இருக்கே ” என்று கிண்டல் அடித்தாள்.

மதிநிலா பேசுவதற்கு வாய் திறக்கும் முன் சிதம்பரம் உள்ளே நுழைந்தார். “அப்பாவுக்கு ரொம்ப சந்தோஷம்டா! என் நிலா பொண்ணு!” என்று மகள் அமர்ந்த நிலையிலேயே அணைத்துக் கொண்டு தன் ஆனந்தத்தை பகிர்ந்தார்.

தன் உணர்வுகளை உள்ளே அடக்கிக் கொண்டு, வார்த்தைகளை விழுங்கிக் கொண்டு, ” எனக்கும்தான் அப்பா… ” என்றாள் பொய்யாக சிரித்தபடி.

‘அவளின் மனக்கண்ணாடி மாளிகையில் கல் எறிய கைகள் தயாராக உள்ளனவே!’ விதி உச்சுக் கொட்டியது.

விழி பேசும்…