வஞ்சிக்கொடியின் வசீகரனே – 6

அத்தியாயம் – 6

“என்னப்பா சடகோபா, மாப்பிள்ளையோட அம்மா நம்ம ஆளு இல்லை போலயே? என்ன தான் இருந்தாலும் நம்ம ஆளுங்களுக்குள்ள கல்யாணம் முடிச்ச ஆளுங்களின் வரனை பார்க்கிறது தானே முறை. நீ எப்படி இந்த மாதிரி சம்பந்தத்தை உன் பொண்ணுக்கு பேசின?” என்று ராகவேந்திரன், சம்பூர்ணாவின் திருமணத்திற்கு முதல் நாள் வந்திருந்த உறவுக்கார பெரியவர் கேட்டார்.

சில உறவினர்களும் கேட்ட கேள்வி தான். சடகோபனும் சலிக்காமல் உறவுகளுக்குப் பதில் சொல்லிக் கொண்டிருந்தார்.

சம்பந்தம் பேசும் போதே இந்த மாதிரியான பேச்சு எல்லாம் வரும் என்று தெரிந்தவர் ஆகிற்றே. அதனால் பொறுமையாகவே தன் பதிலைச் சொன்னார்.

“வேற ஆளுங்க பொண்ணைக் கல்யாணம் பண்ணிக்கிட்ட சம்பந்தம்னா என்ன மாமா? குடும்பம் நல்ல குடும்பமா, நம்ம பொண்ணை நல்லா பார்த்துக்கிறவங்களா இருந்தா போதாதா? அந்த அம்மா ரொம்ப நல்லவங்க மாமா. அது ஒன்னே போதும் நான் இந்தச் சம்பந்தத்தைப் பேசி முடிக்க.

ஒரு தரகர் மூலமா தான் இந்தச் சம்பந்தம் வந்துச்சு மாமா. நானும் பெத்தவங்களைப் பார்த்துட்டு முதலில் தயங்கினேன்.

அப்புறம் விவரம் எல்லாம் விசாரிச்சுப் பார்த்தேன். மாப்பிள்ளையோட அப்பாவும், அம்மாவும் ஒண்ணா வேலை பார்த்த இடத்தில் காதலிச்சுக் கல்யாணம் பண்ணிக்கிட்டவங்க. அதுவும் காதலிச்சுட்டு அவங்க இரண்டு வீட்டு பக்கமும் சம்மதம் வாங்கித் தான் கல்யாணம் பண்ணிருக்காங்க.

மாப்பிள்ளையோட அப்பா திருநெல்வேலிகாரர். அம்மா கொல்கத்தாவை சேர்ந்தவங்க. ஆனா தமிழ்நாட்டில் தான் பலவருஷமா இருந்து, பேங்க் எக்ஸாம் எழுதி வேலைக்குச் சேர்ந்து இப்போ அவங்க காஞ்சிபுரத்தில் இருக்கும் பிரைவேட் பேங்க்ல மேனேஜரா இருக்காங்க.

மாப்பிள்ளையோட அப்பாவும் காஞ்சிபுரத்தில் இருக்கும் கவுர்மென்ட் பேங்க்ல மேனேஜரா இருக்கார்.

மாப்பிள்ளை இங்கே சென்னையில் பெரிய ஐடி கம்பெனியில் டீம் லீடரா இருக்கார். மாப்பிள்ளை பற்றி நல்லா விசாரிச்சேன். நல்ல பழக்கவழக்கமா தான் தெரியுறார். சமீபத்தில் ஒரு டூ பெட்ரூம் பிளாட் ஒன்னு வாங்கியிருக்கார். அதில் தான் இப்போ தனியா இருக்கார். லீவ்ல தான் மாப்பிள்ளையோட அப்பா, அம்மா இங்க வர்றதும், மாப்பிள்ளை காஞ்சிபுரம் போறதும் நடந்துட்டு இருக்கு.

குடும்பத்தில் எல்லாருமே நல்ல மாதிரியா பழகுறாங்க. குணமும் நல்லா இருக்கு. அந்தக் குடும்பத்தில் என் பொண்ணு நல்லா வாழ்வானு நம்பிக்கை வந்த பிறகுதான் சம்பந்தம் பேசி முடிச்சேன்.

அதோட நம்ம பொண்ணும் ஐடில இருக்கா. இதுக்கு முன்னாடி பார்த்த வேலை பிடிக்கலனு விட்டுட்டா. இப்போ வேற தேடிட்டு இருக்கா. அதுவும் கல்யாணத்துக்காகத் தான் நான் கொஞ்சம் பொறுமையா வேலை தேட சொல்லியிருக்கேன். கல்யாணம் முடிஞ்ச பிறகு வேலை கிடைச்சா கூடப் போதும்னு.

மாப்பிள்ளையும் ஐடி, என் பொண்ணும் ஐடி. அதனால் வேலை பற்றி இரண்டு பேருக்கும் ஒரு அண்டர்ஸ்டேன்டிங் இருக்கும். புரிஞ்சு வாழ்க்கை நடத்துவாங்கனு நம்பிக்கை இருக்கு. இதை விட வேற என்ன வேணும்? சொல்லுங்க மாமா…” என்று அந்தப் பெரியவரிடம் விவரம் சொல்லி முடித்தார் சடகோபன்.

“நீ சொல்வதைப் பார்த்தால் நல்ல சம்பந்தமாத்தான் தெரியுது சடகோபா. நம்ம பொண்ணு நல்லா இருந்தா போதும். சரி வா! மண்டபத்துக்குக் கிளம்பணும் நேரமாச்சுனு சொன்னியே கிளம்புவோம்…” என்றார்.

மாலை திருமண நிச்சயம் என முடிவு செய்திருந்ததால் மதிய உணவு முடிந்ததுமே மண்டபத்திற்குக் கிளம்பும் வேலையில் அந்த வீடே கலகலத்துப் போயிருந்தது.

மேலே அவள் அறையில் சம்பூர்ணா உறவு தோழிகளின் உதவியுடன் தயாராகிக் கொண்டிருந்தாள்.

சடகோபன் சொன்ன மாப்பிள்ளை பற்றிய விவரம் அனைத்தும் அவளுக்கும் அவளின் அன்னை சகுந்தலா சொல்லியிருந்தார்.

அதைத் தவிர ‘ராகவ் எப்படிச் சரியாகத் தன்னைத் தேடி வந்து பெண் கேட்டான்?’ என்ற கேள்விக்கு மட்டும் இன்னும் அவளுக்குப் பதில் தெரிந்தப்பாடில்லை தினமும் இரவு பேசியவனும் சொல்லாமல் அடம்பிடிக்க, அதன் பிறகு கேட்காமலேயே விட்டுவிட்டாள்.

இந்த ஒரு மாதத்தில் இன்னும் அவர்களுக்குள் நெருக்கம் கூடியது போல் தான் இருந்தது. ஆனால் அது வெளி பார்வைக்கு மட்டும் தான் என்பது போல் தான் சம்பூர்ணா இருந்தாள்.

அவள் அவனிடம் பேசியதை விட அவன் அவளிடம் பேசியது தான் அதிகம்.

ஏதோ ஒரு ஒட்டாத தன்மை சம்பூர்ணாவிடம் இருந்து கொண்டே இருந்தது. ஒருவித உறுத்தலுடனே திருமணத்திற்குத் தயாராகிக் கொண்டிருந்தாள்.

மண்டபத்திற்குள் உறவினர்கள் சூழ அவள் நுழையும் போதே வாசலின் ஓரத்தில் நின்று அவளை ஆர்வமாகப் பார்த்துக் கொண்டிருந்தான் ராகவேந்திரன்.

அவனைக் கண்டு உறவுக்கார தோழி ஒருத்தி சம்பூர்ணாவிடம் சொல்ல, மெல்ல தன் மைதீட்டிய விழிகளை உயர்த்திப் பார்த்தாள்.

அவள் பார்த்த அடுத்த நொடி அவனின் கண் சிமிட்டியதோ இல்லையோ என்று இனம் காண முடியாத அளவு அதிவேகத்தில் கண்ணடித்திருந்தான்.

அதை யாரும் கண்டு கொள்ளவில்லை என்றாலும் பூர்ணா கண்டு கொண்டாள்.

தான் யாரென்று தெரியாத போதே கண்ணடித்தான். இப்போது உடையவள் ஆகும் நேரத்தில் சும்மாவா இருப்பான்?

‘ஆனாலும் உனக்குக் கொழுப்பு அதிகம் தான்டா. இத்தனை பேரு சுத்தியிருக்கும் போதே தெனாவட்டா கண்ணடிக்கிற உன்னை எல்லாம் என்ன தான் செய்றதோ?’ என்று யோசித்தபடி தனக்குச் சுற்றிக் கொண்டிருந்த ஆரத்தியை பார்த்துக் கொண்டிருந்தாள்.

ஆரத்தி சுற்றி உள்ளே அழைக்கப்பட்டதும், அவன் நின்ற இடத்தைத் தாண்டி நடந்து கொண்டிருந்தவளின் பார்வை ஓரப் பார்வையாக அவனை வருடி விட்டே நகர்ந்தது.

அந்தப் பார்வை ரசனைப் பார்வையாக இல்லாமல் ஏதோ யோசனையைச் சுமந்திருப்பதைக் கண்ட ராகவ்வின் முகமும் யோசனையுடன் சுருங்கியது.

பூர்ணா மணமகள் அறைக்குச் சென்ற சிறிது நேரத்தில் அவளின் கைபேசிக்கு குறுந்தகவல் வந்த சத்தம் கேட்டது.

தன் கைப்பையை வைத்திருந்த தோழியிடமிருந்து ஏதோ காரணம் சொல்லி அதை வாங்கியவள் யாரின் கவனத்தையும் கவராத வகையில் குறுந்தகவலை திறந்து பார்த்தாள்.

“என் மேலே என்ன கோபமா இருந்தாலும் அதை இரண்டு நாளைக்கு ஒதுக்கி வைடா சம்மூ. இந்த இரண்டு நாளும் நமக்கே நமக்கான பொக்கிஷமான நாட்கள். நாமளே திரும்பக் கேட்டாலும் கிடைக்காத நாட்கள். உனக்கும் என்னைப் பிடிச்சுருக்குனு நான் நினைச்சுட்டு இருக்குறதால் தான் இத்தனை நாளும் விளையாட்டா மட்டும் பேசிட்டு இருந்துட்டேன்.

ஆனா இப்போ உன் முகத்தில் யோசனையைப் பார்க்கும் போது உனக்குப் பிடிக்காம உன்னை இந்தப் பந்தத்தில் இழுத்து விட்டு விட்டோனோனு தோணுது. இனி கடைசி நேரத்தில் பின் வாங்கவும் முடியாது. பின் வாங்கவும் விட மாட்டேன். உனக்கு எப்படியோ? ‘எனக்கு நீ வேணும்! என் வாழ்க்கை முழுக்க வேணும்!’

என் கூடச் சண்டை போடணுமா? போடு! என்னைத் திட்ட நினைக்கிறீயா? திட்டு! டா போட்டு பேசணுமா? பேசு! ஏன் அடிக்கணும்னு தோணினா அடிக்கக் கூடச் செய். ஆனா எதுவா இருந்தாலும் அந்த உரிமையெல்லம் என் மனைவிக்கு மட்டும் தான்! அந்த மனைவியா நீ இருக்கணும்னு நினைச்சா இனி நான் உன்னைச் சிரிச்ச முகமாத்தான் பார்க்கணும். நம்ம நாளை சந்தோஷமா ஆக்க வேண்டிய பொறுப்பு இப்போ உன் கையில் தான் இருக்கு…” என்று நீளமாகத் தகவல் அனுப்பியிருந்தான்.

அதிலேயே தன் சிறு மன சுணக்கத்தைக் கூடக் கண்டிருக்கிறான் என்று புரிந்து கொண்டவளிடம் இப்போது அந்தச் சுணக்கம் போய் மலர்ச்சி வந்திருந்தது.

‘மகனே நீயே திட்டு, அடி, சண்டை போடுன்னு சொன்ன பிறகும் உன்னைச் சும்மா விடுவேனா? இது எல்லாத்தையும் செய்து உன்னை ஒரு வழி ஆக்குறேனா, இல்லையானு பார்…’ என்று சந்தோஷமாகப் பூர்ணாவின் நினைப்பு ஓட,

‘அடியேய்! அவன் எவ்வளவு சீரியஸா பேசியிருக்கான். நீ என்னன்னா திட்டு, அடினு சொன்னதை மட்டும் பிடிச்சுக்கிட்டு அவன் கூடச் சண்டை போட தயாராகிட்ட. அவன் உனக்குக் கொடுத்த பல்பு பத்தாதுன்னு நீயே பல்பு கடையைத் தேடி போறீயாக்கும்? போ… போ… உனக்குக் கொடுக்கக் கூடை கூடையா பல்பு ரெடி பண்ணி வச்சிருக்கான். வாங்கி உன் மண்டையைச் சுத்தி எறிய விட்டுகோ…’ மனம் அவளைக் கேலி செய்தது.

‘நீ முதலில் அங்குட்டு போ… இனி உன் கேலியை எல்லாம் கோணிப்பையில் போட்டு வச்சுக்கோ. இனி நானும் என் புருஷனும் நேருக்கு நேர் மோதிக்கிறோம். ஓடி போ…’ கேலி செய்த மனதை விரட்டினாள்.

‘புருஷனா? இது எப்போ இருந்து?’ அவளின் விரட்டலை கண்டு கொள்ளாமல் மனம் கேள்வி கேட்க,

‘இந்த நிமிஷத்தில் இருந்து…’ என்று மயக்கத்துடன் மனதுடன் பேசியவளுக்கு ‘என் வாழ்க்கை முழுக்க நீ வேண்டும்’ என்று தன் மனம் கவர்ந்தவன் சொன்ன வார்த்தை அவளைச் சுற்றி உலா போவது போல உணர்ந்தாள்.

‘ஹக்கும்! முதலில் கிசுகிசுப்பா பேசியே கில்மா பண்ணி வச்சுருந்தான். இப்போ தீவிரமா பேசியே காதல் தீ பிடிக்க வச்சுட்டான்…’ என்று அவளின் மயக்கத்தைக் கண்டு புலம்பிய மனம் ஓரமாக ஒதுங்கி நின்று வேடிக்கை பார்க்க ஆரம்பித்தது.

அவளின் வாழ்வே வண்ணமயமானது போல உணர்ந்து கொண்டிருந்தாள் சம்பூர்ணா.

அந்த வண்ணம் அவளின் முகத்திலும் வண்ணத்தைக் கொண்டு வர, தன் மன குறையை எல்லாம் ஒதுக்கி வைத்து விட்டு முக மலர்ச்சியுடன் நிச்சயதார்த்தத்திற்குத் தயாரானாள்.

சிறிது நேரத்தில் நிச்சயத்திற்கான சடங்குகள் நடக்க ஆரம்பிக்க, அனைத்திலும் சந்தோஷத்துடனே கலந்து கொண்டாள்.

அவளின் மலர்ச்சியான முகத்தைக் கண்ட பிறகு தான் ராகவ்வின் முகமும் மலர்ச்சியுடன் இருந்தது.

திருமணச் சடங்குகள் அனைத்தும் தமிழ்நாட்டின் முறைப்படியே நடந்தது.

மாப்பிள்ளையின் அன்னை வடநாட்டவர் அதனால் இப்படி முறைகள் நடக்கிறது என்று உறவுகளுக்குள் எந்தச் சலசலப்பும் ஏற்படாத வண்ணம் தன் பக்க சடங்குகள் எதுவும் கலக்காமல் பார்த்துக் கொண்டார் நளினா.

மகனின் திருமணத்தில் எந்தப் பிசக்கும் நேர்ந்து விடக் கூடாது என்பதில் அவரின் கவனம் அதிகம் இருந்தது.

மகனின் திருமண வயதை நெருங்கியதும் வரன் பார்க்க ஆரம்பிக்க அவர்களின் திருமணத்தைக் காரணம் காட்டியே வரன்கள் தட்டி போயிருந்தன.

தந்தை தமிழ்நாட்டைச் சேர்ந்தவராக இருந்தாலும் அன்னை வட நாட்டவர் என்னும் போது ஒரே இனத்தில் பெற்றவர்கள் இல்லை என்ற காரணத்தை இன்னும் சமூகத்தில் பார்ப்பவர்கள் இருக்க அதைக் காரணம் காட்டி வரன் அமையாமல் போனது.

அப்போது அன்னையாய் அவரின் மனம் வருந்தியிருக்கின்றது.

அந்த நேரத்தில் ஒருநாள் ராகவ், தான் ஒரு பெண்ணை விரும்புவதாக வந்து சொல்ல, முதலில் அவனின் காதல் கைக்கூடுமா என்று தான் நளினா பயந்தார்.

அதுவும் அவன் பெண் கேட்டு முறைப்படி அனைத்தும் நடக்க வேண்டும் என்று சொல்ல, அப்படி முடித்து வைக்க அகத்தியனும், நளினாவும் தயார் தான். ஆனால் பெண் வீட்டார் தங்கள் திருமணத்தை முன்னிறுத்தி, மறுத்துவிட்டால் மகனின் காதல் என்னாவது? என்று பயந்து கொண்டே தான் சடகோபன் பார்த்துக் கொண்டிருந்த தரகரை பிடித்துச் சம்பந்தம் பேச அனுப்பி வைத்தார்கள்.

அனுப்பி வைத்தபிறகு சில நாட்கள் கிணத்தில் போட்ட கல்லாக எந்தத் தகவலும் இல்லாமல் நாட்கள் நகர்ந்தன.

பின்பு திடீரெனத் தரகரிடம் இருந்து தகவல் வர, ராகவை விட அதிகம் மகிழ்ந்தது நளினா தான்.

சடகோபன் நாட்களைக் கடத்தியது தங்களைப் பற்றி விசாரிக்கத்தான் என்று புரிந்து கொண்டார்கள்.

பெண் பார்த்துச் சம்பந்தம் பேசி முடித்ததும் அளவில்லா ஆனந்தம் கொண்டார் நளினா.

அந்த ஆனந்தம் திருமண நிகழ்வில் சிறிது கூடக் குறைந்து விடக் கூடாது என்று பார்த்துப் பார்த்துச் செய்தார்.

இப்போது நிச்சய மோதிரம் மாற்ற முன் வரிசையில் அமர்ந்திருந்த மகனை அழைக்க அவனின் அருகில் வந்தார் நளினா.

நிச்சயத்திற்கான பிரத்யேக உடையில் இன்னும் அழகு கூடித் தெரிந்த மகனை நெட்டி முறித்தவர் “ஆனாலும் இன்னும் நீ உன் சம்மூகிட்ட எனக்கு வெயிட் குறைக்க டிப்ஸ் கேட்டு சொல்லலைடா மகனே… அதில் உன் மேல் நான் இன்னும் கோபமா இருக்கேன். அதனால் உன் கல்யாணப் பரிசா உன் செலவில் எனக்கு ஒரு ஒட்டியாணம் வாங்கித் தந்திரு. அதான் உனக்குத் தண்டனை…” என்று மகனிடம் ரகசியமாகப் பேசிக் கொண்டே மேடைக்கு அழைத்துப் போனார்.

“மாம், இது தான் நேரம் பார்த்துப் போட்டு வாங்குறதா? உங்களுக்கு ஒட்டியாணம் வாங்கணும்னா நான் ஒன்பது வருஷம் மாடா உழைக்கணும். அதெல்லாம் என்னால் முடியாது. இனி என்ன உங்க வெயிட் குறைக்கணும். அவ்வளவு தானே? இனி சம்மூ நம்ம வீட்டு பொண்ணு. அவளைப் பிடிச்சு வச்சு இனி நேரா உங்க டிப்ஸ் டீலிங்கை வச்சுக்கோங்க. என் பொண்டாட்டி இடுப்பு மாதிரி உங்க இடுப்பும் வந்ததும் உங்க இரண்டு பேருக்கும் சேர்த்தே ஒட்டியாணம் வாங்கிப் போடுறேன்…” என்று அன்னையைப் போல் மெல்லிய குரலில் பேசிக் கொண்டே மேடை ஏறினான்.

அவர்கள் இருவரும் பேசிக் கொண்டே வருவதைப் பார்த்து “இங்கே பக்கத்தில் வா ராகவ். இந்தா இதை மருமகள் கையில் போட்டு விடு…” என்று அவனை அருகில் அழைத்துத் தன்னிடமிருந்த மோதிரத்தை கொடுத்தார் அகத்தியன்.

தந்தையிடமிருந்து மோதிரத்தை வாங்கியவன் பூர்ணாவை பார்த்தான்.

கொடியாய் இருந்தவளின் மேனியை தங்க நிறத்திலான புடவை பாங்காய்த் தழுவியிருக்க, கழுத்தை சுற்றி தங்க ஆபரணங்கள் அணிவகுத்திருக்க, கல்யாண களையுடன் அவன் கேட்டிருந்த மலர்ச்சியையும் தாங்கியிருந்த முகத்தை வண்டாக மொய்த்தவன் முகத்திலும் அந்த மலர்ச்சி அமர்ந்து கொள்ள, மோதிரத்தை மாட்ட கையை நீட்டினான்.

லேசாகத் தலையைக் குனிந்து இருந்தவள் அவனின் கை தன் முன்னால் நீளவும், தன் கையை மெதுவாக நீட்டி மெல்ல அவனின் முகத்தை நிமிர்ந்து பார்த்தாள்.

அவள் நிமர்ந்ததும் லேசாகக் கண்ணைச் சிமிட்டி வசீகரப் புன்னகை ஒன்றையும் சிந்தியவன், அவளின் கையை மென்மையாக பற்றி மோதிரத்தை மாட்டிவிட்டு அந்த விரலை லேசாக நீவி விட்டு கையை விடுவித்தான்.

அவன் தொட்ட இடம் குறுகுறுக்க, அந்த ஸ்பரிசத்தை அனுபவித்தவள் தன் பின்னால் இருந்து அன்னை கொடுத்த மோதிரத்தை வாங்கி அவனின் கையில் போட கையை நீட்டினாள்.

அவன் உடனே கையை நீட்டாமல் குறுகுறுவெனப் பார்க்க, ‘என்ன பயபுள்ள கையைக் கொடுக்காம பார்க்குது?’ என்று யோசனையுடன் அவனின் முகத்தைப் பார்த்தாள்.

அவள் தன்னைப் பார்த்ததும் புருவத்தைத் தூக்கி காட்டி சிரிக்க, ‘அவனை மாதிரியே கண்ணடிச்சு சிரிச்சுட்டு போட சொல்றானா? அது எப்படி முடியும்?’ என்பது போலப் பார்த்தாள்.

அவளின் மனதை படித்தவன் போல ‘அதே தான்’ என்று கண்ணை மூடி திறந்தான்.

‘அடேய்! உன்னைப் போல எல்லாம் கண்ணடிக்க எனக்கு வராதுடா. என்னைக் கண்ணடிக்கச் சொன்னா அந்நியன் அம்பி மாதிரி தான் அடிப்பேன். அப்புறம் நீ தான் தலையில் அடிச்சுக்க வேண்டியிருக்கும். அப்புறம் இப்பக்குள்ள நம்ம நிச்சயம் நடக்காது. இது புரியாம புருவத்தைத் தூக்கிட்டு நிற்கிறானே…’ என்று மனதிற்குள் புலம்பியவள் அவனைச் சமாளிக்க இதழ் விரித்து அழகாகப் புன்னகை சிந்தினாள் பூர்ணா.

அவளின் சிரிப்பை கண்டவன் முதல் முறையாக அவளின் முன் மயங்கி நின்றான் ராகவ்.

ஆம்! ராகவின் சிரிப்பை விடப் பூர்ணாவின் சிரிப்பு வசீகரமாக இருந்தது.

அதுவும் அவள் சிரிக்கும் போது கன்னத்தில் குழி விழ, அதை முதல் முதலாகக் கண்டவன் அந்தக் கன்னக்குழியில் வீழ்ந்தே போனான்.

அவளின் புன்னகையில் மயங்கியவன் அதே மயக்கத்துடன் அவளின் முன் தன் கையை நீட்ட, தன்னை மயக்கும் மாயக்கண்ணனையே மயங்க வைத்த பெருமையுடன் மோதிரத்தை அணிவித்தாள் அந்த மாயக்காரி.