வஞ்சிக்கொடியின் வசீகரனே – 5

Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels

அத்தியாயம் – 5

“ஹேப்பிப் பிரத்டே பொண்டாட்டி…” என்று கிசுகிசுப்பாக ஒலித்த வசிய குரலில் சில நொடிகள் வசியமாகித்தான் போனாள் சம்பூர்ணா.

அந்நேரம் அவனின் மீதிருந்த கோபம், அவனை விட்டு தள்ளி இருக்க வேண்டும் என்று நினைத்திருந்த அவளின் எண்ணம் எதுவுமே ஞாபகத்தில் இருக்கவில்லை.

வசியம் செய்யப்பட்டவள் போல இருந்தாள்.

அவளின் அமைதியை பார்த்து “லைன்ல இருக்கியா பொண்டாட்டி?” மீண்டும் கிசுகிசுப்பாகவே கேட்டான் ராகவ்.

“ம்ம்…” என்று சொல்ல வந்தவளுக்கு லேசாக நடப்பு நினைவு வர, ‘இவன் ஏன் கிணத்துக்குள்ள இருந்து பேசுறது போலப் பேசுறான்? நீ இப்படிப் பேசுறது என்னை என்னவோ செய்துடா. ஒழுங்கா பேசுடா மடையா…’ என்று அவளுக்குச் சொல்ல வேண்டும் போல் இருந்தது.

ஆனால் எங்கே சொன்னால் வேண்டும் என்றே அவன் அப்படியே பேச்சை தொடர்வானோ என்று தோன்ற வாயை இறுக மூடிக்கொண்டாள்.

‘பரவாயில்லையே அவன் மேலே கோபம், பிடிக்கலைனு சொல்லிக்கிட்டே அவனைப் பத்தி அவனிடம் பழகாமலேயே நல்லா புரிஞ்சு வச்சுருக்கயே’ என்று மனம் வேறு அவளுக்குக் கொட்டு வைக்க முணுமுணுத்து அவளை அழைத்தது.

மனதின் முணுமுணுப்பை எல்லாம் கேட்கும் மனநிலையில் அவள் இருக்கவில்லை.

வசியம் இன்னும் அவள் வசமே இருந்தது.

“சம்மூ…” முதல் முதலாகச் சுருக்கப் பெயர் வைத்து அழைத்தவனின் குரல் இப்போது முன்பை விட நலிந்து குழைந்து காதலுடன் ஒலித்தது.

அக்குரலில் குழைந்து தான் போனாள் சம்பூர்ணா.

அப்போது சொல்ல மறந்து போன, “ம்ம்ம்…” இப்போது அழுத்தமாகவே சொன்னாள்.

“ரொம்ப ஹேப்பியா இருக்கு… இந்த ஹேப்பியை தந்த உன்னை இப்போவே பார்க்கணும் போல இருக்கு…” என்றான்.

Copyright©️ezhilanbunovels.com. கதையைத் திருடி PDF போடாதீர்!

“எதுக்கு ஹேப்பி?” என்று கேள்வி எழுந்த அதே நேரத்தில், ‘எப்படிப் பார்ப்பான்? அவன் சொன்னது போல் போர்வைக்குள் வந்தா?’ வெட்கங்கெட்ட மனம் வெட்கமே இல்லாமல் யோசித்தது.

நினைப்பு சென்ற பாதையை உணர்ந்து வெட்கமாய் உதட்டைக் கடித்துக் கொண்டாள்.

“எதுக்கு ஹேப்பினு கேட்க மாட்டியா?” என்று தானே கேட்ட ராகவ் “சரி நானே சொல்றேன்… நான் உனக்கு விஸ் பண்ணினேன். அதுக்கு நீ தேங்க்ஸ் சொல்லாம இருந்ததுக்கு. நீ மட்டும் தேங்க்ஸ் சொல்லியிருந்தா என்னை வேற யாரோ ஒருத்தரா பார்த்திருப்ப. ஆனா தேங்க்ஸ் சொல்லாம இருந்து நானும் நீயும் ஒன்னுனு காட்டிட்ட. ஐயம் வெரி வெரி ஹேப்பிப் பொண்டாட்டி…” என்று காதலுடன் ரசித்துச் சொன்னான் ராகவ்.

அவன் கிசுகிசுவெனப் பேசாமல் காதலுடன் பேசினாலும் சாதாரணக் குரலில் பேசியதில் பூர்ணாவின் மயக்கம் தெளிந்தது.

“இல்லை… அப்படியெல்லாம் இல்லை… எனக்குப் பிடிக்காதவங்களுக்கு எல்லாம் நான் தேங்க்ஸ் சொல்ல மாட்டேன்…” என்று தன் மயக்கத்தை மறைக்க வேகமாகச் சொன்னாள்.

“நான் உனக்குப் பிடிக்காதவனா…?” என்று ரகசிய குரலில் கேட்டான்.

அவனின் ரகசிய குரலை ரசித்துத் தான் கேட்டாள்.

‘சரிதான்! காலையில் நேரில் பார்த்தப்ப படபடப் பட்டாசா பொறிஞ்சவளை கண்ணடிச்சே கவுத்தான். கொஞ்ச நேரத்திற்கு முன்னாடி போனையே எடுக்க மாட்டேன்னு அல்சாட்டியம் பண்ணியவளை இப்போ கிசுகிசுப்பா பேசியே கில்மா பண்ணிருவான் போலவே…’ அவளின் மயக்கத்தைக் கண்ட மனம் பொறுக்காமல் இடையிட்டது.

‘இப்படிப் பேசியே நம்மை வசியம் பண்றானே’ என்று நினைத்தாலும் அந்த வசியத்தை அவனிடம் காட்டாமல் இருக்க நினைத்தாள்.

அதனால் வேண்டுமென்றே “ஆமா… உங்களை எனக்குப் பிடிக்காது…” என்றாள் வீம்பாக.

“அப்படியா? அப்போ ஏன் பிடிக்காதவனைக் கல்யாணம் பண்ணிக்க ரெடியாகிட்ட?” ஆச்சரியத்துடன் கேட்டான்.

“நான் எங்க ரெடியானேன்? நீங்க தான் என்னைப் பேசவிடாம செய்து கல்யாணத் தேதி நிச்சயம் பண்ற அளவுக்குக் கொண்டு வந்து விட்டீங்க…” என்றவளின் குரல் மயக்கம் தெளிந்து கோபத்துடன் வந்தது.

“நான் விட்டேன் சரி…! அதை ஏன் நீ தடுக்க முயற்சி பண்ணலை? ஒரு வார்த்தை ஒரே வார்த்தை இந்த மாப்பிள்ளையை எனக்குப் பிடிக்கலைனு நீ ஒரு வார்த்தை சொல்லியிருந்தா உங்க அப்பா அதையும் மீறி நம்ம கல்யாணத்தைப் பேசி முடிச்சுருப்பார்னு நீ நினைக்கிறியா சம்மூ?” விளையாட்டுத்தனத்தை எல்லாம் கைவிட்டு தீவிரமாகவே கேட்டான்.

“அப்பா ரொம்ப ஸ்ட்ரிக்ட்! அப்படியெல்லாம் அவர்கிட்ட சொல்லிட முடியாது…” என்று சொன்னவளின் குரலில் திடம் குறைந்தே வெளியே வந்தது.

அதை உணர்ந்தவன், “நம்பிட்டேன்…பிட்டேன்… டேன்… சம்மூ…” என்று ராகமாக இழுத்தான் ராகவ்.

அவன் நம்பவில்லை என்பதில் உதட்டை கடித்துக் கைபேசியைக் காதில் இருந்து எடுத்த பூர்ணாவின் கண்ணில் அவன் அனுப்பிய குறுஞ்செய்தி திறந்தே இருந்தால் பட, மீண்டும் போனை காதில் வைத்தவள்,

“அதென்ன அப்படி மெசேஜ் அனுப்புறீங்க?” என்று பேச்சை மாற்ற கோபமாகவே கேட்டாள்.

அவள் பேச்சை மாற்ற முயற்சி செய்ததில் இன்னும் சிரித்தவன், “எப்படி? போர்வைக்குள் வந்துடுவேன்னு சொன்னதா? அது சும்மா ஒரு ரைமிங்கில் சொல்லியது. அதுக்குப் போய்ப் பயந்தியாக்கும்?” கேலியாகக் கேட்டான்.

“ரைமிங்கா?” என்று முகத்தை ஒரு மாதிரியாகச் சுளித்துக் கேட்டாள்.

“பின்ன? நான் எப்படி அங்கே வர முடியும்? உங்க வீட்டில் இருக்குறதே மேல ஒரு ரூம் தான் போல. அதில் பால்கனி கூட இருக்கிற மாதிரி தெரியலை. உங்க வீட்டை சுத்தி ரொம்ப நெருக்கி அடுத்தவங்க வீடு இருக்கு. பைப் பிடிச்சு கூட ஏறி வர முடியாது. உங்க வீட்டு கதவை தட்டியா நான் வர முடியும்? உன் அப்பா என்னை உண்டு இல்லைனு ஆக்கிட மாட்டார். இதைக் கூட யோசிக்க மாட்டியா?” என்று கேட்டுச் சத்தமாகச் சிரித்தான்.

அப்போது தான் அவன் வரவே முடியாது என்று புரிய, ‘இதைக் கூட யோசிக்காம விட்டுட்டேனே? என்று தலையில் கொட்டிக் கொண்டாள்.

‘அப்படியே நீ யோசிச்சுட்டாலும்… அவன்கிட்ட பேச நீயும் எதுடா சாக்கு கிடைக்கும்னு காத்திருப்ப. அதான் அவன் லாஜிக் இல்லாம சொன்னதை வச்சு பயந்தே கவுந்தடுச்சு விழுந்துட்ட. இதுக்குப் பேருதான் லவ் லாஜிக் பார்க்காதுனு சொல்றதோ?’ என்று மனம் அவளின் குமட்டிலேயே குத்தியது.

‘இவன் நமக்குப் பல்பு கொடுக்குறதையே வேலையா வச்சிருக்கான்…’ என்று கடுகடுத்தவள் மீண்டும் பேச்சை மாற்றும் வேலையைக் கச்சிதமாகச் செய்தாள்.

“எப்படி நீங்க மாப்பிள்ளையா வந்தீங்க? எப்படி என்னைப் பற்றிய விவரம் தெரிஞ்சது? இன்னைக்கு என் பிறந்தநாள்னு உங்களுக்கு யார் சொன்னா?” காலையிலிருந்து தலையைக் குடைந்து கொண்டிருந்த கேள்வியுடன், எப்படிச் சரியாக வாழ்த்துச் சொன்னான் என்று தெரிந்து கொள்ளவும் கேட்டாள்.

Copyright©️ezhilanbunovels.com. கதையைத் திருடி PDF போடாதீர்!

“கட்டாயம் தெரிஞ்சுக்கணுமா என்ன?” கிண்டலாகத் திருப்பிக் கேட்டு வைத்தான் ராகவ்.

“தெரிஞ்சுக்கணும்னு தானே கேட்குறது. இதில் கண்டிப்பா தெரிஞ்சுக்கணுமான்னு கேள்வி வேற என்ன கேட்க வேண்டியிருக்கு…” அவனுக்கும் கேட்கும் படியே முணுமுணுத்தாள்.

“பரவாயில்லை பின்னாடி யூஸ் ஆகும்…” என்று சந்தோசமாகச் சொன்னான்.

“என்ன யூஸ் ஆகும்? இப்போ எதுக்குச் சம்பந்தம் இல்லாம உளறுரீங்க?”

“உளறலைடி பொண்டாட்டி… என் பிரண்ட் ஒருத்தன் சொல்லுவான். அவன் வொய்ப் மனதில் நினைக்கிறதை அவன்கிட்ட வெளியே சொல்லாம அவனா அதைக் கண்டு பிடிக்கணும்னு நினைப்பாங்களாம். அதைச் சொல்லி புலம்புவான். இப்போ நீ முணுமுணுத்து சொன்ன இல்லையா? இதையே நம்ம கல்யாணத்துக்கு அப்புறமும் நீ மென்டைன் பண்ணினா, எனக்கு யூஸ் ஆகும் பார்…” என்றான்.

“இனி முணுமுணுக்கவே மாட்டேன் போடா…” என்றாள்.

“டா வா…?”

“நீங்க டீ சொன்னா நான் டா தான் சொல்வேன்…”

“அப்போ நான் என்ன சொன்னாலும் நீயும் பதிலுக்குப் பதில் சொல்லுவ?”

அவன் அப்படிக் கேட்டதும் வேகமாக ‘ஆமாம்’ என்று சொல்ல போனவள் கடைசி நிமிடத்தில் வாயை இறுக மூடிக் கொண்டான்.

“என்ன பதிலை காணோம்…?”

“இந்த டெக்னீக் எல்லாம் பழசுங்க சாரே… நான் பதிலுக்குப் பதில் சொல்லுவேன்னு சொன்னதும் உடனே ஏடாகூடமா நீங்க ஏதாவது கேட்டு எனக்குப் பல்பு கொடுக்கவா? அதுக்கு நீங்க வேற ஆளைப் பாருங்க…” என்றாள் அலட்சியமாக.

“செம்ம உஷாரு தான் போ! ஆனா வேற ஆளையெல்லாம் தேடுற ஐடியா எனக்கு இல்லை. நீயே கிக்கா தான் இருக்க. நீயே எனக்குப் போதும்…!” என்றான் கிக்கான குரலில்.

‘திரும்ப மயக்குற வேலையை ஆரம்பிச்சுட்டான்’ என்று மனதிற்குள் சலித்துக் கொண்டாலும், ‘நீ மட்டும் போதும்…’ என்று அவன் சொன்னதில் மயக்க மருந்து கொடுக்காமலேயே அவளின் மனம் மயங்கி தான் போனது.

ஆனாலும் விட்டால் இப்படியே பேச்சை மாற்றி விடுவான் என்று நினைத்து மயங்கிய மனதை தட்டி எழுப்பியவள், “நான் கேட்டதுக்கு நீங்க இன்னும் பதில் சொல்லலைனு நினைக்கிறேன்…” என்று தன் இளகலை காட்டிக் கொள்ளாமல் தன் கேள்வியை ஞாபகப்படுத்தினாள்.

“நீ உள்ளே போனதும், நம்ம வீட்டு பெரியவங்க கல்யாணம் விவரம் பேசும் போது தற்செயலா உங்க அம்மா தான் சொன்னாங்க உன் பிறந்தநாள்னு. அப்பயே வாழ்த்து சொல்லணும் போல இருந்தது. ஆனா இப்போ இப்படிப் பேசுற கிக் அதில் வராதே? அதான் தனியா இருக்கும் போது பேசிப்போம்னு இப்போ போட்டேன். இல்லனா நேத்து பன்னிரெண்டு மணிக்கே கால் பண்ணிருப்பேன்…” என்றான்.

“என் நம்பர் எப்படி உங்களுக்குக் கிடைச்சது. கண்டிப்பா என் அப்பா, அம்மா தந்திருக்க மாட்டாங்க…” என்று கேட்டாள்.

“உன் அப்பா, அம்மா கொடுக்கலை தான். ஆனா போன் நம்பர் என்ன உன்னைப் பற்றி இன்னும் நிறைய விவரம் அவங்க சொல்லாமலேயே எனக்குத் தெரியும்…” என்றான்.

“அதான் எப்படி?”

“உன்னைப் பற்றிய விவரம் எப்படித் தெரிஞ்சுக்கிட்டேன்னும், நான் எப்படி மாப்பிள்ளையா வந்தேன்னும் சொல்லணும்னா என் மேல உனக்கு என்ன கோபம்னு நீ சொல்லணும். என்ன சொல்றீயா?” என்று கேள்வியை அவள் பக்கமே திருப்பினான்.

‘கேள்விக்குப் பதில் சொல்லாம கேள்விக்குக் கேள்வி கேட்டு விளையாடுறதை பாரு வினையம் பிடிச்சவன்’ என்று கடுகடுத்தவள், “அதெல்லாம் சொல்ல முடியாது…” என்றாள் வெடுக்கென.

“அப்போ நானும் சொல்ல முடியாது போடி…”

“நீ சொல்லவே வேணாம் போடா…”

“இப்படி நீ பதிலுக்குப் பதில் பேசுறது ரொம்பச் சுவாரசியமா இருக்குடி பொண்டாட்டி…”

“எனக்கு உன் கூடப் பேசவே எரிச்சலா இருக்குடா…”

“எரிச்சலா இருந்தா தணிச்சுட வேண்டியது தான். எப்படித் தணிக்கட்டும்? நீயே ஒரு ஐடியா சொல்லேன்…” என்று பதிலுக்குப் பதில் அவன் சுவாரசியமாகப் பேச, அவன் கேட்ட கேள்வியில் அமைதியானாள்.

“என்ன பதிலை காணோம்? சரி நானே எப்படி உன் எரிச்சலை தணிப்பேன்னு சொல்லட்டா?” என்று கேட்டு அவளின் சம்மதத்திற்காகக் காத்திருந்தான்.

‘என்ன செய்வான்?’ என்ற யோசனையுடன் அவளின் மௌனம் நீண்டது.

“சரி நானே சொல்றேன். அப்படியே உன் பக்கத்தில் வந்து… இன்னும் நெருங்கி நின்னு, அப்படியே என் கையை நீட்டி…” என்று அவன் ரகசியம் போல மெல்ல மெல்ல சொல்ல…

“போதும் நிறுத்துங்க. நீங்க இப்படிப் பேசுறது எனக்குப் பிடிக்கலை…” என்று வேகமாக இடையிட்டாள்.

“இப்போ எதுக்கு இவ்வளவு வேகமா என்னைச் சொல்ல விடாம தடுக்குற சம்மூ?”

“பின்ன வரம்பு மீறி பேசினா தடுக்காம கேட்டுடா இருப்பாங்க…?” என்றாள் எரிச்சலுடன்.

“என்ன வரம்பு மீறியா? வரம்பு மீறி நான் எங்க பேசினேன்?”

‘பேசுறது எல்லாம் பேசிட்டு என்ன பேசுனேன்னு என்கிட்டயே கேட்குறதை பார். ஒன்னும் தெரியாத மாதிரி பேசி என் வாயாலேயே அதைச் சொல்ல வைக்க நினைக்கிறானா?’ என்று கடுப்புடன் பல்லைக் கடித்தாள்.

அவளின் அமைதியில் “ஹா… ஹா…!” எனத் திடீரென்று சிரித்தான் ராகவ்.

“இப்போ எதுக்கு இந்த இளிப்பு?” எனக் கேட்டவளுக்கு இன்னும் கடுப்புக் கூடித்தான் போனது.

அவளின் கேள்வியில் இன்னும் சிரித்தவன், “அப்படியே பக்கத்தில் வந்து, உன்னைக் கட்டிப்புடிச்சி கிஸ் பண்ணிடுவேனோனு நினைச்சீயோ? ஹா…ஹா…!” என்று கேட்டு இன்னும் சிரித்தான்.

“அப்படியெல்லாம் பண்ணிருக்க மாட்டேன். என்கூடப் பேச எரிச்சலா இருந்தா அப்படியே பக்கத்தில் வந்து என் மேல எப்படி எரிச்சல் வரலாம்னு உன் உச்சந்தலையிலேயே நங்குன்னு ஒரு கொட்டு வச்சுருப்பேன்னு சொல்ல வந்தேன். ஹா…ஹா…!” என்று சொல்லிவிட்டு மீண்டும் சிரிக்க ஆரம்பித்தான்.

‘அடேய்! நெட்ட கொக்கு… கொட்டு வைக்கிறதை தான் இந்த லட்சணத்தில் சொன்னீயா? சொல்லிட்டுச் சிரிப்பு வேற… ரொம்பச் சிரிக்காதடா பக்கி… இவன் கொட்டு வைக்கிறதையே இந்த வள்ளலில் சொன்னா, ரொமான்ஸ் பண்றதை எப்படிச் சொல்வான்?’ என்று தீவிரமாகப் பூர்ணாவின் எண்ணம் போனது.

அவளின் யோசனையைக் கைபேசி வழியாகவே கண்டு கொண்டவன் போல், “ஹோய்! என்ன சைலன்ட் ஆகிட்ட? இதையே இப்படி ரொமான்டிக்கா சொன்னா, அப்போ ரொமான்ஸ் பண்றதை எப்படிச் சொல்லுவான்னு யோசிக்கிறீயா? தப்புமா ரொம்பத் தப்பு! ரொமான்ஸ் பத்தியெல்லம் இப்போ யோசிக்கக் கூடாது.

இன்னும் கல்யாணத்துக்கு ஒரு மாசம் தான் இருக்கு. கல்யாணம் மட்டும் முடியட்டும். ரொமான்ஸ் எப்படிப் பண்ணுவேன்னு செயல் முறை விளக்கமே காட்டுவேன். அது வரை இப்படி ரொமான்ஸ் பத்தி நினைக்காம நல்ல பிள்ளையா இருக்கணும். என்ன சரியா?” என்று அவள் தான் இப்போது ரொமான்ஸ் கேட்டுத் தவிப்பது போலச் சொன்னான்.

அவனின் பேச்சை கேட்டு, “அடப்பாவி…!” என்று வாய் விட்டே சொன்னாள் பூர்ணா.

“நோ… நோ… ஐயாம் அப்பாவி! கல்யாணத்துக்கு முன்னாடி கசமுசா சமாச்சாரம் பற்றி எல்லாம் பேச்சுக்கு கூட மூச்சு விடக் கூடாது. கல்யாணத்துக்கு அப்புறம் பிராக்டிகலா தெரிஞ்சுக்கலாம். அது பற்றிப் பேசுறதை விடச் செயல்முறை விளக்கம் தான் கிக்கா இருக்கும்…” என்று கிசுகிசுப்பாகச் சொன்னான்.

‘அடேய்! நீயாடா அப்பாவி? அதைப் பற்றிப் பேசக்கூடாது பேசக்கூடாதுனு சொல்லிட்டு நீ தான்டா அதைப் பற்றியே பேசிட்டு இருக்க. இதில் என்னமோ நான் தான் பேச சொன்னது போல அப்படியே பிளேட்டை திருப்பிப் போடுறான் பார்…’ என்று எரிச்சலுடன் நினைத்தவள் பட்டென அழைப்பை துண்டித்தாள்.

“என்ன பேசிட்டு இருக்கும் போதே போனை கட் பண்ற? இதுக்குப் பனிஷ்மென்ட் கொடுக்கணுமே? என்ன பனிஷ்மென்ட் தெரியுமா? இனி தினமும் இந்த நேரம் போன் போடுவேன். நீ போனை எடுக்கணும். இல்லைனா நான் உன் போர்வைக்குள் வந்துடுவேன். என்ன நேரில் வர முடியாதுனு யோசிக்கிறீயா? நேரில் தான் வர முடியாது. ஆனா கனவில் வர முடியும்…” என்று அவள் போனை வைத்த மறு நிமிடம் வரிசையாகக் குறுந்தகவல் அனுப்பி வைத்தான்.

அனைத்தையும் படித்தவள் முகம் இப்போது கோபம் இல்லாமல் சிரிப்பில் மலர்ந்திருந்தது.

தொடர்ந்த நாட்களிலும் ரொமான்ஸ் பற்றிப் பேசவில்லை பேசக்கூடாது என்று சொல்லிக் கொண்டே ரொமான்டிக்காகப் பேசி வைத்தான் ராகவ்.

அதற்காக வரம்பு மீறியும் அவனின் வார்த்தைகள் இருந்ததில்லை.

கட்டிப்பிடிப்பதும், முத்தம் கொடுப்பதும் மட்டுமா ரொமான்ஸ்? அதைப் பற்றியே குறிப்பிட்டு கூடப் பேசாமல், கேலி பேச்சாலும், கிசுகிசுப்பான காதல் வார்த்தையாலும், மனதை மயிலிறகு வருடுவது போல் வருடி மனம் கவர்வதின் பெயரும் ரொமான்ஸ் தான் என்று பூர்ணாவை அனுதினமும் உணர வைத்தான் ராகவ்.

வெளியே கோபம் போல் அவனிடம் பேசினாலும் அவனின் மனம் வருடும் வார்த்தைகளில் மயங்கித்தான் போயிருந்தாள் சம்பூர்ணா.