வஞ்சிக்கொடியின் வசீகரனே – 4

அத்தியாயம் – 4

அவனை இன்றோடு இரண்டாவது முறையாகப் பார்க்கின்றாள். முதல் முறையாகப் பார்த்தபோது ஏற்பட்ட அதே வியப்பு இப்போதும் ஏற்பட்டது.

‘இவன் எப்படி இப்படி இருக்கான்? ஒருவேளை பொண்ணுங்க மாதிரி ஓவரா மேக்கப் பண்ணுவானோ?’ என்று தான் நின்றிருந்த இடத்தில் இருந்து சிறிது தூரம் தள்ளி நின்று அவனின் நண்பர்களுடன் வசீகரச் சிரிப்புடன் பேசிக் கொண்டிருந்தவனை ஓரக் கண்ணால் பார்த்து நினைத்துக் கொண்டாள்.

தன் துப்பட்டாவை சரி செய்வது போல மீண்டும் ஒரு முறை பார்த்தவள், தலையை மறுப்பாக அசைத்து ‘அவன் எப்படி இருந்தா என்ன? நீ ஏன் அவனையே பார்க்கிற?’ எனத் தன்னையே திட்டிக் கொண்டவள் முகத்தைத் திருப்பி ஜன்னல் வழியே வெளியே வேடிக்கைப் பார்ப்பது போலத் திரும்பிக் கொண்டாள்.

நெருக்கி அடிக்கும் கூட்டம் இல்லை என்றாலும் அந்தப் பேருந்தில் அமர இடம் இல்லை என்பதால் நின்று கொண்டு தான் பயணம் செய்து கொண்டிருந்தாள்.

அவனும் மேல் படியில் நின்று கடைசி இருக்கையில் அமர்ந்திருந்த அவனின் நண்பர்களிடம் பேசிக்கொண்டு வந்தான்.

முதல்முறை அவனைப் பார்த்ததும் இதே பேருந்தில் தான். பேருந்தில் ஏறி இருக்கை பிடித்து அப்போது தான் அமர்ந்தவள் தற்செயலாகப் பேருந்தில் நின்றிருந்தவர்கள் புறம் பார்வையைத் திருப்ப, தான் இருந்த இருக்கைக்கு இரண்டு இருக்கை முன் புறம் நின்று கொண்டு வந்தவனின் நிறம் தான் அவனை வித்தியாசமாகப் பார்க்க தூண்டியது.

மாநிறமாகவும் இல்லாமல், அதிகம் வெள்ளையாகவும் இல்லாமல் சுண்டினால் ரத்தம் வரும் என்பது போல அதீத நிறம் கொண்டு இருந்தான்.

ஒரு வேளை வட மாநிலத்தவனோ என நினைக்கும் வண்ணம் இருந்தவனைப் பார்த்த நொடியில்

“அட(அடி) வெள்ளாவி வச்சுதான் வெளுதான்களா
உன்னை வெயிலுக்குக் காட்டாம வளத்தாய்ங்களா”

என்ற பாட்டை அவளின் சம்மதம் இல்லாமலேயே வாய் முணுமுணுக்க ஆரம்பித்தது.

வெள்ளாவியில் வைத்து வெளுத்தது போலத் தான் இருந்தான். அந்த நிறமே அவனைப் பார்க்க தூண்டியது.

அன்றும் சில, பல தடவைகள் அவளின் கண்கள் அவனின் புறம் படிந்து, படிந்து மீண்டது.

இன்றும் சில நொடிகள் வேடிக்கை பார்ப்பது போலத் தலையைத் திருப்பினாலும், அவளின் கண்கள் அதற்கு மேல் அடங்காமல் மீண்டும் அவனை நோக்கி பாயத் துடித்தது.

சிறிது நேரம் கட்டுப்படுத்திப் பார்த்தவள் முடியாமல் போக, கை மாற்றிக் கம்பியை பிடிப்பது போலத் திரும்பி பார்த்த வேகத்தில் ‘ஆ’வென அவளை அறியாமல் வாயை பிளந்து அதிர்ந்தவள், மாட்டிக் கொண்ட கள்ளி போலத் திருதிருத்து விட்டு, வேகமாக முகத்தைத் திருப்பியவளின் இதயம் படபடவென அதிவேகத்தில் அடித்துக் கொண்டது.

கவுண்டமணி பாணியில் ‘ஐயோ…! பார்த்துட்டான்! பார்த்துட்டான்! பார்த்துட்டான்…!’ என அவளின் மனம் கத்தி கூப்பாடு போட்டது.

‘பார்க்க மட்டுமா செய்தான்? உன்னைப் பார்த்துக் கண்ணும் அடிச்சான் டி’ அவளின் மனம் இடிந்துரைத்தது.

‘கண்ணு அடிச்சானா? கண்ணைச் சிமிட்டினானா? நல்லா சொல்லு!’ மனதிடம் பேச்சு வார்த்தை நடந்த ‘கண்ணுதான் அடிச்சான்’ அழுத்தி சொல்லி உறுதி படுத்தியது அவளின் மனம்.

‘நான் பார்த்ததை அவன் எப்படிக் கண்டு பிடிச்சுருப்பான்?’ எனத் தனக்குத் தானே திரும்பக் கேட்டுக்கொண்டவளின் பார்வை மீண்டும் அவனைப் பார் என உந்தி தள்ள குனிந்த தலையுடன் விழிகளை மட்டும் உயர்த்தி அவனைப் பார்த்தாள்.

அவனோ நண்பர்களுடன் மிகவும் சுவாரஸ்யமாக அரட்டை அடித்துக் கொண்டு வர, தன்னை அவன் பார்த்தது கனவோ எனக் குழம்பிப் போனவள் நன்றாகவே நிமிர்ந்து அவனைப் பார்த்த நிமிடத்தில் நீ கண்டது உண்மை தான் என்பது போல அவளின் புறம் சட்டெனத் திரும்பியவன், கண்ணடித்து வசீகரப் புன்னகை ஒன்றையும் சிந்த,

‘அட வெள்ளாவியில் வெந்தவனே!’ எனச் சத்தமே இல்லாமல் மனதிற்குள் அலறினாள்.

இப்படித்தான் முதலில் ராகவேந்திரனை சந்தித்தாள் சம்பூர்ணா.

இரவில் படுக்கையில் படுத்த பிறகும் தூக்கம் வராமல் திரும்பி திரும்பி படுத்த சம்பூர்ணா அவனை முதலில் சந்தித்த நாட்களை நினைத்துப் பார்த்து விட்டு நிகழ்விற்குத் திரும்பி வந்திருந்தாள்.

அதெப்படி முதல் முறையாகத் தன்னைப் பார்ப்பவன் கண்ணடித்தான்?

தான் ஆர்வமாகப் பார்த்தது அவனைத் தூண்டி விட்டதா?

ஏதோ பார்க்க லட்சணமாகத் தெரிந்தான். அதுவும் அவனின் நிறம் மட்டும் இல்லாமல் அவனின் கட்டுக்கோப்பான உருவமும் அவளைப் பார்க்க தூண்டியது உண்மைதான்.

பெண்களை ஆண்கள் சைட் அடிப்பது இல்லையா? அதே பெண்கள் செய்தால் குற்றமாகி விடுமா?

ஆண்கள் செய்தால் நியாயமாகத் தெரியும் ஒன்று! அதே பெண்கள் செய்தால் தவறான கண்ணோட்டத்துடன் பார்க்கப்படுவது ஏன்?

நான் பார்த்ததாலேயே கண்ணடிக்கும் அளவிற்குச் சென்றவன், எப்படிப்பட்டவனாக இருப்பான்? என்று முதல் நாள் அவனைப் பார்த்த அன்று எழுந்த அதே கேள்வி இன்றும் தோன்றியது.

அதன் பிறகு அவனைப் பார்த்த சந்தர்ப்பங்களும் அவளுக்கு உவப்பானதாக இருந்தது இல்லை.

அப்படியிருந்தும் எந்தத் தைரியத்தில் அவனுடனான திருமணத்தைத் தடுத்து நிறுத்தாமல் இருக்கின்றேன்.

இன்று நடந்ததை நினைத்துக் கோபமூச்சுகள் அவளின் நாசியிலிருந்து வேகவேகமாக வெளியே வந்தது. தன்னை முந்தி கொண்டு சம்மதம் சொன்னவனை நினைக்கையில் ஆத்திரமாக வந்து தொலைத்தது.

ஆனால் அதை ஏன் தான் தடுக்க முயலவில்லை. தந்தையிடம் சிறு மறுப்பாவது தான் சொல்லியிருக்கலாமே… ஏன் சொல்லாமல் விட்டாள்?

‘ஹக்கும்… இப்போ கேள்வி கேட்டு என்ன பிரயோஜனம்? நான் அப்பவே சொன்னேன். இவன் கண்ணடிச்சே உன்னைக் கவுக்கப் பார்க்கிறான். உஷாரா இருந்துக்கோன்னு. நான் கத்துறதை காதிலேயே போட்டுக்காம அவன்கிட்ட மங்கம்மா சபதம் போட்டுக்கிட்டு இருந்த. அவன் அதை வச்சே மங்காத்தா ஆட பிளான் போட்டுட்டான்’ என்று மனம் அவளுக்குக் கொட்டு வைத்து அவளின் யோசனையைக் கலைக்கப் புலம்பியது.

‘நீ பாட்டுக்குப் புலம்பு. எனக்கும், உன் புலம்பலுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லையே’ என்பது போல மனசாட்சியைப் புறம் தள்ளியவள் நகத்தைக் கோபத்துடன் கடித்துக் கதற வைத்தாள். தன் மீதே கோபம் வந்தது. என் மனமே எனக்கு எதிரியாக இருக்கின்றதே என்று அவள் மனதை குறை சொல்ல,

‘ஏய்…! என்ன என்னையவே குறை சொல்ற? நான் கத்தி கூப்பாடு போட்டதை எல்லாம் காதில் கூட ஏத்திக்காம இருந்துட்டு என்னைக் குறை சொல்ற உன்னை என்ன செய்யலாம்…?’ அவளின் மனமும் காண்டாகியது.

மனதில் புலம்பலை இப்போதும் புறம் தள்ளியவள் ‘ஆனாலும் அவன் வென்று விட்டானே’ என்ற ஆத்திரத்துடன் தலையணையைப் பிடித்துக் கசக்கி தன் தடுமாற்றத்தையும் அவனின் மீதே கோபமாக மாற்றித் தலையணையை ஒருவழியாக்கிக் கொண்டிருந்தவளிடம் இருந்து அதைக் காப்பாற்றப் போவது போல் அவளின் கைபேசி மெல்லிசையாக ரீங்காரமிட்டது.

நேரம் பத்து மணியாகியிருந்தது. இந்த நேரத்தில் யார்? என்ற கேள்வி தோன்ற கைபேசியை எடுத்துப் பார்த்தாள்.

பெயர் எதுவும் இல்லாமல் வெறும் நம்பர் மட்டும் இருக்க, “யார் இந்த அட்ரஸ் இல்லாதவன்?” என்று முனங்கி கொண்டே, அழைப்பை ஏற்றுக் கொள்ளாமல் யோசனையுடன் பார்த்துக் கொண்டிருந்தாள்.

‘ஏன் பெயர் இல்லாம வந்தாலே அட்ரஸ் இல்லாதவனா தான் இருக்கணுமா? அட்ரஸ் இல்லாதவளா இருக்கக் கூடாதா? அதென்ன காரணம் இல்லாமலேயே ஆம்பளைங்களைத் திட்டுறது…’ மனச்சாட்சி ஏனோ கனகாரியமாகப் போர்க்கொடி தூக்கியது.

“ஷ்ஷ்… அடங்கு…! நானே யாராயிருக்கும்னு யோசிச்சுக்கிட்டு இருக்கேன். நீ வேற நேரம் கெட்ட நேரத்தில் ஆம்பளைங்களுக்கு ஆதரவா ஆட்சி கொடி பிடிப்ப…” என்று அடக்கியவள், யோசனையுடன் கைபேசியை வெறித்தாள்.

‘அது போர்க்கொடி’ என்று சொல்ல வந்த மனம் அவளின் யோசனையைப் பார்த்து சொல்ல வந்ததை விட்டுவிட்டு ‘வேற யாரு? எல்லாம் உன் வெந்தவனா தான் இருக்கும்…’ என்று மனம் எடுத்துக் கொடுக்க, “இருக்குமோ…?” என்று அவள் நினைத்துக்கொண்டு இருக்கும் போதே, அழைப்பு நின்றிருந்தது.

அடுத்தச் சில நொடிகளில் குறுஞ்செய்தி வந்ததற்கான ஒலி கேட்க, அதைத் திறந்து பார்க்க, “போனை எடுடி பொண்டாட்டி…” என்று அதிகாரமான செய்தியை தாங்கி வந்திருந்தது.

‘நான் தான் சொன்னனே உன் வெந்தவனா தான் இருக்கும்னு…’ என்று மனம் சொல்ல,

சம்பூர்ணாவின் செய்தியை பார்த்ததும் கோபத்தில் முகம் சிவக்க “கொழுப்பை பார்! திமிரை பார்! என்னையவே அதிகாரம் பண்றான். பொண்டாட்டியாம் பொண்டாட்டி! அப்படியே தழைய தழைய தாலியை என் கழுத்தில் கட்டியவன் போலத்தான். போனை எடுக்க முடியாது போடா…” கடுப்பாகக் கைபேசியைப் பார்த்துப் பேசியவள் அதை அப்படியே படுக்கையோரம் தூக்கி போட்டாள்.

‘அவன் அதிகாரமா சொன்னான்னு நீயே ஏன் நினைச்சுக்குற? ஆசையா சொன்னான்னும் எடுத்துக்கலாமே?’

“ஆசையாவா? அவனா? கண்டிப்பா இருக்காது. அவன் சரியான திமிர் பிடிச்சவன்…” என்றவள் விடாமல் போனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

அவள் பார்த்துக் கொண்டிருக்கும் போதே கைபேசி மீண்டும் அதிர்ந்து அவளை அழைக்க ஆரம்பித்தது.

“நான் எடுக்கவே மாட்டேன்…” என்று கைபேசியைப் பார்த்து சொன்னவள் காதுகள் இரண்டரையும் கைகளால் பொத்தி கொண்டு கண்களையும் இறுக மூடி கொண்டாள்.

‘ஹக்கும்… இந்தம்மா காதையும், கண்ணையும் பொத்தினா அடிக்கிற போன்னு நின்னுருமா என்ன? நீ போனை எடுக்காத காண்டில் நேரிலேயே வரப் போறதா சொல்ல போறான்…’ என்று மனச்சாட்சி சொல்லி முடிக்கும் போது குறுந்தகவல் வந்ததாகக் காட்டியது.

சத்தம் குறைந்ததும் காதை மூடியிருந்த கையை எடுத்த பூர்ணா கைபேசியை எடுத்துப் பார்த்தாள்.

மனம் சொல்லியது போல் இல்லாமல் கொஞ்சம் மாற்றி வேறு செய்தியை தாங்கி வந்திருந்தது குறுஞ்செய்தி.

“இப்போ நீ போனை எடுக்கலைனா உன் போர்வைக்குள் வந்துடுவேன்…” என்று செய்தி வந்திருக்க, “என்னது…?” என்று அலறியவள் கையில் இருந்து கைபேசி நழுவி படுக்கையில் விழுந்தது.

“என்ன சொல்றான் இவன்?” என்று அரண்டு கைபேசி திரையைப் பூர்ணா வெறிக்க…

‘ஹா…ஹா… இவன் ரொம்பவே அட்வான்ஸா இருக்கான்டி. கேடிக்கும் கில்லாடியா இருக்கான். இனி நீ உன் வாலை சுருட்டி வச்சுக்க ரெடி ஆகிக்கோ…’ என மனம் கெக்கொலி கொட்டி சிரித்தது.

“நீ முதலில் வாலை சுருட்டி வச்சுக்கிட்டு கிட. என் வாலை நான் சுருட்டணுமா? அதான் நடக்காது. நான் அவன் வாலை ஒட்டா நறுக்குறேன்…” என்று சூளுரைத்தவள் கைபேசியை அணைத்துப் போட போனாள்.

ஆனால் அதற்குள் மற்றுமொரு செய்தி வந்தது.

“என்ன இவன் எப்படிப் போர்வைக்குள் வருவான். அதையும் நான் பார்த்துறேன்னு எனக்குச் சவால் விட்டுப் போனை ஆப் பண்ணி வைக்கப் போறீயோ? உண்மையைச் சொல்லு… நான் வரணும்னு ஆசையில் தானே போனை ஆப் பண்ண போற?” என்று கேட்டுப் பெண் சிங்கத்தைச் சீண்டி பார்த்தான்.

அவன் சீண்டியதில் கைபேசியை அணைத்து வைக்கும் முடிவை அவள் மாற்றிக் கொள்ள, ‘நோ… நோ… பூர்ணா. நீ செய்ய நினைச்சதை செய்துடு. உன்னைச் சீண்டி விட்டு சீட்டி அடிக்கப் பார்க்கிறான் அவன். அவனை நம்பாதே…’ என்று மனம் அலறியது.

மனதின் அலறலை கண்டு கொள்ளாமல் அதை டீலில் விட்டவள் இப்போது கைபேசியை எதிர்பார்ப்புடன் பார்த்தாள்.

‘அவன் அப்படி என்ன தான் பேசுவான்?’ என்று அறிந்து கொள்ளும் குறுகுறுப்பு அவளுக்கு ஆர்வத்தை வர வைத்திருந்தது.

அவளின் ஆர்வத்தைப் பார்த்து ‘அவன் வாலை இவ சுருட்ட போறாளாம். இப்போ யார் வாலை யார் சுருட்டி விட்டதுனு கூட யோசிக்க விடாம இந்தப் பெண் சிங்கத்தைச் சொரண்டி விட்டு சொக்க வச்சுட்டானே…’ என்று மனம் புலம்பிய புலம்பல் எல்லாம் புகையாய்ப் போனது.

மீண்டும் அழைப்பு வர, ஆர்வம் குறையாமல் அழைப்பை ஏற்று அலைப்பேசியைக் காதில் வைத்து அவனின் குரலை கேட்கக் காத்திருந்தாள்.

அவளின் ஆர்வத்தை ஆச்சரியமாகக் குறித்துக் கொண்டது அவளின் மனம். ‘இவளா கொஞ்ச நேரத்திற்கு முன்னாடி அவன் மேல அப்படிக் கோபப்பட்டா?’ என்று வாயை பிளந்து பார்த்தது.

‘அம்னீசியா வந்தவ மாதிரியே நடந்துக்கிறாளே ஆண்டவா…’ என்ற மனதின் எந்தக் கதறலும் காதில் விழாத தூரத்தில் இருந்தாள் அவள்.

அவள் அழைப்பை ஏற்ற அடுத்த நொடி “ஹேப்பிப் பிரத்டே பொண்டாட்டி…” என்று வசியக் குரலில் வாழ்த்துச் சொன்னவனிடம் வசியமாகியிருந்தாள் அவனின் வஞ்சிக்கொடி.